ஜெயகாந்தன் படைப்புகள் - ஒரு முழு விமர்சனம் - நா.முத்து நிலவன்


மறக்க 
முடியாத
எழுத்தாளனின்
பிறந்த நாளில்

வணக்கம்
செலுத்தி,
ஒரு
மறு 
விமர்சனம்!


---------------------------------          

ஒரு ஜெயகாந்தனும்
சில  ஜெயகாந்தன்களும் - 
-- நா.முத்து நிலவன்
----------------------------------------------------------------------------
 மணிவிழாக் கருத்தரங்கம் முடிந்தது.
 கார்களின் நெரிசலுக்கிடையே நடந்து போய்க்கொண்டிருந்த முனியம்மா, இரண்டு சக்கர வாகனத்தில் கிளம்பிய கங்காவை கவனித்துவிட்டாள்.
 “இன்னாம்மே ! கண்டுக்காத போய்க்கினேகீறியே!” ஹக்கா…ங்”
 “அட ! நம்ம முனிம்மா!” வண்டியை நிறுத்தி இறங்கிவிட்டாள் கங்கா.
 “சேச்சே ! என்ன முனியம்மா ? நா பாக்கல.. ஹவ் ஆர்யூ? செமினார்க்கு வந்திருந்தியா?
 “வந்திருந்தி…யாவா? மீட்டங்கி நடக்கச்சொல்ல அம்மாநேரமும் ஒரு மூலையில குந்திக்கினு அல்லாத்தியும் பாத்துகினுதான் இர்ந்தோம்…”
 “அட்ட! உன்னோட வேற யாரெல்லாம் வந்திருந்தாங்க” கங்கா கேட்டு முடியவில்லை நொடித்துக்காட்டினாள் முனியம்மா.
 “அடடே! அல்லாரும் வரமாட்டமாங்காட்டியும்? இந்த மினிம்மா மட்டுமா வந்திருந்தான்னு நென்ச்சிக்கினே ? அக்கட சூடு! நம்ப ‘சித்தாளு’கம்சல, ‘ஒருபுடி சோத்துக்க நாயா அலைஞ்சி லோல்படுற ராசாத்தி, மாரியம்மா, அந்தா ‘ஓவர் டைமு’ ஏலுமல, ‘ டிரெடிலு வினாயகம், இந்தா ‘பாசஞ்சர் வண்டியில’ வந்து ‘பெரளயத்துல மாட்டிக்கின அம்மாசிக் கெயவன், நம்ம பாடகரு பொணத்தக் கட்டிகினு அயுதான? ரிக்சாக்கார கவாலி, அம்மாந் தூரம் ஏன்? நேத்தக்கி வந்தவ… அந்த ‘ரிசிபத்தினி’ பொன்னம்மா அல்லாந்தா வந்துர்ந்தோம்…”
 கொஞ்சம் தள்ளித்தள்ளி, மரத்தடிகளில் நின்று பேசிக் கொண்டிருந்த எல்லோரையும் சுட்டிக் காட்டினாள் முனியம்மா. அவர்களோடு, முனியம்மா சொல்லாவிட்டாலும் - ‘நூறு பேர்’களில் இருவராக நின்றிருந்த பரந்தாமன், ஆனந்தனையும் பார்த்தாள் கங்கா. ஆச்சரியமாகவும் இருந்தது.
அந்த தெருவோர தேசியவாதிளைப் பார்க்க சங்கடமாகவு மிருந்தது.
 ‘தே ஆர் ஆல் செய்லிங் இன்த சேம் போட்..ஈவன் டுடே…’ என்று நினைத்துக்கொண்டவள் ‘ சே ! திங்க் பண்ணுவது கூட இங்கிலீஷில்தானா வரவேண்டும்’, என்று தனக்குள் விவாதித்துக்கொண்டே முனியம்மாவி;டம் கேட்டாள்..
“ரியலி? எல்லாருமா வந்திருந்தீங்க? நா பாக்கலியே. ‘லாஸ்ட் ரோ’ல ஐ வாஸ் சிட்டிங் வித் பிரபு, கௌதம் அன் மாலா ரெண்டு மூணு சீட் தள்ளி கல்யாணியும், ரெங்காவும் கூட இருந்தாங்க. அப்பால…மகுடேசம்பிள்ளை, முத்துவேலர், கணபதி சாஸ்திரிகள், சீதா, சங்கர சர்மா, சாரதா மாமி, தங்கம், ஆதி யெல்லாம் கூட வந்திருந்தாளே ! டோன்ட் யூ நோ தெம்?...”
 “ந்தா இந்த டஸ்ஸ_ புஸ்ஸி_ இங்கிலீசெல்லாம் நம்ம கைல வாணாம் தாயீ! நீங்கள்ளாம் வெள்ளையும் சொள்ளையுமா சோபால குந்திகினு இர்ந்தீங்க…நாங்க எப்பவும்போல அப்டி ஓரஞ்சாரத்துல ஒண்டிக்கினு எட்டி எட்டி பாத்துகிணு இர்ந்தோம்…இன்னா பண்றது? பாயாப்போன மன்சு கேக்லியே?
 அது செரீ…அல்லாரும் பேசவுட்டு கடசீல அவுரு வந்து…அது இன்னாதது?  ஏற்புரையா? ஆங்…அதான்…சிங்க மாட்டமா சொம்மா வெளாசித் தள்ளிகினாரே? ஆமா…அது இன்னாத்துக்கும்மே இப்பப்போயி அல்லாரும் தெகிரியமா இந்தி பட்ச்சிக்கணும்ன்றாரு? ..என்னிய மாரி மினியம்மால்லாம் இன்னிமேல இந்திபட்சி இன்னா ஆவப்போவுது ன்றாரூ…!
 “ஸீ!முனிம்மா, அட்லீஸ்ட் நெக்ஸ்ட்செஞ்சுரியிலாவது…ஸீ…வாட் ஐம் கோயிங் டு சே ஈஸ்…” முனியம்மாவிடமும்  தன் இயல்பில் ஆங்கிலத்திலேயே பேசிவிட்டதை உணர்ந்து, தனது நாகரிகமற்ற செயலுக்கு உண்மையிலேயே வருந்தி, நாக்கைக் கடித்துக் கொண்டு நிறுத்திவிட்டாள் கங்கா.
-----------------------------------------------------------------
 போதும்,
 கங்காவும், மற்ற உயிருள்ள பாத்திரங்கள் யாவும், சற்றுநேரம் அப்படியே உறைந்து நிற்கட்டும். நாம், அவர்களைப் படைத்தளித்த நமது அற்புதப் படைப்பாளியோடு சிறிது நேரம்-உரிமையோடு-பேசிவருவோம்.
 மணிவிழா என்ன? பவள விழாவும், அதைத் தாண்டி நூற்றாண்டு விழாக்களும் காணவேண்டிய அபூர்வ எழுத்து அவருடையது. கட்சி-பிரதேச எல்லை தாண்டி வித்தியாசம் மறந்து மனம்திறந்து பாராட்டலாம்.

* ஜெயகாந்தன் --
 நூற்றுக்கணக்கான தமிழ் எழுத்தாளர்களுக்கும், லட்சக்கணக்கான வாசகர்களுக்கும் கடந்த 40 ஆண்டுகளாகப் பிடித்துப்போன ஒரு பெயர். (கட்டுரை எழுதிய ஆண்டு 1995)
 137 கதைகளைக் கொண்ட 15 சிறுகதைத் தொகுதிகள், 35 குறு நாவல்கள், 14 நாவல்கள், 20க்கு மேல் கட்டுரைத் தொகுப்புகள், சில மொழி பெயர்ப்புகள், ஒரு நாடகம்-இவை தமிழுக்கு அவர் தந்த-அவரே சொல்லிக் கொள்வதுபோல-‘மாஸ்டர் பீஸ்’ படைப்புகள்.

ஒரு ஜெயகாந்தனின் உயரம்!
ü இந்த நூற்றாண்டின், சிறுகதை நாவலில் மிக அதிக அளவில் வாசகர்களைக் கவர்ந்த எழுத்துக்களைத் தந்தவர்.
ü புதுமைப்பித்தனுக்கும் மேலாக, எதிர்த்தும் - ஆதரித்தும் பெரிய விவாதங்களைக் கிளப்பியவரும் ஜெயகாந்தன்தான்.
ü புதுமைப்பித்தன் தொட்டார், விந்தன் தொடந்தார் எனினும், சேரி ஜனங்களையும், அன்றாடங்காய்ச்சிகளையும் ‘காவிய நாயகர் களைப் பார்ப்பது போல’  நம்மைப் பார்க்க வைத்தவர் அவர்தான்.
ü படித்து முடித்து சில நாட்களாவது ‘அந்தச் சிந்தனையிலிருந்து மீளமுடியவில்லை’ என்று கூறுமளவுக்குத் தமிழ் வாசகர்களைப் பெரிய அளவில் பாதித்தவை ஜெயகாந்தனின் படைப்புகள். ‘நேற்று ஒரு ஜெயகாந்தன் நாவல் படித்தேன்… ராத்திரியெல்லாம் தூக்கமில்லை’ என்பவர்களை இன்றும் காணமுடியும்.
ü அவர் ‘படித்தது’ ஐந்தாம் வகுப்பு வரை தானாம். ஆனால், தமிழகத்தில் தனி ஒரு படைப்பாளியாக அதிக அளவு எம்.ஃபில், பி.எச்.டி. பட்டங்களை ஆய்வாளர்களுக்குக் ‘கொடுத்திருப்பவர்’ – ஜெயகாந்தன்தான்.
ü 1966-இல் ஒரு சிறுகதை, 1969-இல் அதுவே தொடர்கதை, நடுவிலேயே தலைப்பு மாறியது, 1979-இல் மீண்டும் இன்னொரு பத்திரிக்கையில் அதன் தொடர்ச்சி.
ü ஒரே கருவில் 5 வருடத்தில் அவ்வப்போது வந்த ஏழு குறு நாவல்கள் ! இதெல்லாம் ஜெயகாந்தன் மட்டுமே செய்த தமிழ் இலக்கிய ‘சித்து விளையாட்டுக்கள்!’

ü தமிழில் கொலைக்கதைகள் எழுதிச் சம்பாதித்தவர்கள் உண்டு. சினிமா கதாசிரியர் கவிஞர்கள் சம்பாதித்ததும் உண்டு. ஆனால், தனது கதை இலக்கியப் புத்தக விற்பனைமூலமே அதிக சம்பாத்தியம் கண்டு, செலவு பிடிக்கும் சென்னையில் வசதியாக வாழும் முழுநேர இலக்கியவாதி இவராகத்தானிருப்பார்.

  ஆனால்-
  இவரை ‘முரண்பாடுகளின் மூட்டை’ என்பவரும் இருக்கிறார்கள்!
  தன்னைப் போன்ற சாயலில் இவரே (முதலில் ‘சிலநேரங்களில் சில மனிதர்கள்’- பிறகு ‘கங்கா எங்கே போகிறாள்’ நாவல்களில்) படைத்திருக்கும் ஆர்.கே.எனும் ‘எழுத்தாளர் ஆர்.கே.வி. (விஸ்வநாத சர்மா)’ பற்றி அவரது தாயார் கூறுவதாக ஜெயகாந்தனே எழுதியுள்ள வரிகளைப் பாருங்கள்:
 “இவன் எழுதற கதைகளைப் பத்தியா பேசிண்டிருக்கேள் ? உன்னை மாதிரி இருக்கறவாதான் ஒரேயடியாப் புகழறேள். இவன் என்ன எழுதறான்? எல்லாத்துக்கும் ஒரு கோணக்கட்சி பேசுவான். நேக்கு ஒண்ணும் பிடிக்கறதில்லேடிம்மா. ஆனா, அவனோட பேசி யாரும் ஜெயிச்சுட முடியாது. நியாயத்தை அநியாயம்மான். அநியாயத்தை நியாயம்பான் (கங்கா எங்கே போகிறாள்-பக்:117)

 ஜெயகாந்தனின் இந்த ‘சுய விமர்சனத்தில்’ எந்த அளவுக்கு உண்மை உள்ளது? இந்த கேள்விக்கு விடைகாண்பதே மணிவிழாக் காணும் அந்த மகத்தான எழுத்தாளனுக்கு நாம் செய்யும் இலக்கிய மரியாதையாகும்.
---------------------------------------------------------------------------
‘நடுத்தெரு வர்க்கத்து நண்பன்’ ஜெயகாந்தன்:
 ஜெயகாந்தனின் முதல் சிறுகதை 1950-இல் (அவரது பதினாறாவது வயதில்) – ‘சௌபாக்கியம்’ எனும் இதழில் ‘பிச்சைக்காரன்’ – எனும் தலைப்பில் ‘கடலூர் காந்தன்’ எனும்’ புனை பெயரில் வெளிவந்தது.
 1954 ஏப்ரலில் முதல் சிறுகதைத் தொகுதி’ ஆணும் பெண்ணும்’ (கிட்டுப் பதிப்பகம் மதுரை) வெளிவந்தபோது, அவர் சென்னை பவானி அச்சகத்தில் ஒரு தொழிலாளியாக (கம்பாசிடர் ஆகவும், ‘டிரெடில் மெஷினைக் காலால்மிதித்து ஓட்டி அச்சுப் பதித்த டிரெடில் மேன்’ ஆகவும்) – வேலை செய்த அனுபவத்தை அவரே, பின்னால் கல்பனா-ஜனவரி 1981-இதழில் எழுதுகிறார்.
 அதுமுதல், பத்தாண்டுகளுக்குள்ளான அவரது படைப்புகளே அவருக்கு ‘சிறுகதை மன்னன்’ எனும் பெயரோடு பெரும் புகழைப் பெற்றுத்தந்துவிட்டன.
 1965 டிசம்பர் முடிய அவர் எழுதிய 104 சிறுகதைகள் எட்டுக் குறுநாவல்கள், 2 நாவல்களிலேயே, ஜெயகாந்தனின் முழு வீச்சும் வெளிப்பட்டுவிட்டது.
 அந்த 30-வயதுக்கு அது ‘அசகாய சூரத்தனமான’ இலக்கிய சாதனை என்பது மிகையல்ல.
 1950-களில் அவரது வாழ்க்கை அனுபவங்கள், சந்தித்த வீதியோரத்து மனிதர்களின் பிரச்சினைகளே கலைவடிவம் பொங்கும் தமிழின் சிகரச் சிறுகதைகளாயின.

 பரம்பரை செல்வப் பெருமை தந்தையோடுபோக, ‘பாழ்மிடி’ சூழ, ஐந்தாம் வகுப்புக்குமேல் படிக்கப் பிடிக்காமல் சென்னைக்கு ‘ஓடி’ வந்துவிட்ட ஜெயகாந்தன்.

 ரயில்வே ஸ்டேஷனில் மூட்டைதூக்குவது,
 குதிரை வண்டியில் கூலிவேலை,
 சினிமாக்கொட்டகையில் பாட்டுப்புத்தகம் விற்பது,
 மளிகைக் கடையில் எடுபிடிப் பையன்,
---------------------------------------------------------------------------------------------
ஜெயகாந்தன் பற்றி கண்ணதாசன் (கண்ணதாசன் இதழில்)                 “நான், 1944 எழுதத் தொடங்கினேன்.இன்றுவரை நூற்று க்கணக்கான கதாசிரியர்களைப் பார்த்திருக்கிறேன்.பெரும்பாலோர் சம்வக் கதைகளிலே பெயர் விளங்கியவர்களே தவிரப் பாத்திர சிருஷ்டியை அறிந்தவராகக் கூட இல்லை.  (Kanna photo)             
தமிழ்நாட்டில் அப்படிச்சில பாத்திரங்களை நினைவு கூரத் தொடங்கினால்,  அண்மைக் காலங்களில் ஜெயகாந்தனின்     கதாபாத்திரங்கள் மட்டுமே நினைவுக்குவரும் என்பது அவருக்குள்ள தனிச்சிறப்பாகும். (ஏப்’76.ஜெ.கா.சிறப்பிதழ் கட்டுரை)
-----------------------------------------------------------------------------------------------
                                                                                                                                       
  ஒரு டாக்டரிடம் பை தூக்கும் உத்யோகம்,
 மாவு மிஷினில் வேலை,
 ‘சோப்பு’த் தொழிற்சாலையில் வேலை’ –
 ‘இங்க்’ தொழிற்சாலையில் வேலை,
 கம்யூனிஸ்டுக் கட்சி அலுவலகத்தில் இருந்து புத்தகம்-பத்திரிகை-விற்பது, பத்திரிக்கையில் ‘உதவி ஆசிரியர்’ எனும் பெயரில் ப்ரூப்ரீடர்- என பலதரப்பட்ட அனுபவ உழைப்பாளி யாகவும் இருந்து, பெற்ற பட்டறிவே, அவரது ‘எழுத்தறிவோடு’ சேர்ந்து, 1965 வரை அவரது படைப்புகளில் தெறித்துவந்தது.

 1948-இல் புதுமைப்பித்தன் மறைவுக்குப் பிறகு, ரகுநாதனின் ‘பஞ்சும் பசியும்’ வரையிலான இடைக்காலத்தில் முற்போக்கு இலக்கியத்திற்கான வெற்றிடத்தை விந்தன் சிறிது நிரப்பினார். அதன் வீச்சை வெற்றிரமாக்கியவர் ஜெயகாந்தனே.
---------------------------------------------------------------------------
என்ன சொன்னால் எவர்க்கு உவப்பாக இருக்கும் என்று அவர் கவலைப்படுவதே இல்லை.                                    
சொல்லித்தீர வேண்டியதைச் சொல்வதில் அவர் நிறைவு காண்கிறார். தமிழக ஆளுநர் - கே.கே.ஷா. (‘சில நேரங்களில் சில மனிதர்கள்’– மக்கள் பதிப்பை வெளியிட்டு பேசியது)
----------------------------------------------------------------------------
 இலக்கியத்தரம் எனும் வகையில் பார்த்தால், 1950-களுக்கு முன்னிருந்தே எழுதிக்கொண்ருந்த லா.ச.ரா., தி.ஜானகிராமனுடன், சிறிது இடைவெளிக்குப்பிறகு தொடர்ந்து எழுதிய சி.சு. செல்லப்பா, க.நா.சுப்ரமணியம், ந.பிச்சைமூர்த்தி ஆகியோர் மீண்டும் எழுதவந்தனர்.
 ஆயினும் இவர்கள் எழுத்தில் சமகாலப் பிரச்னைகள் பெரும்பாலும் பிரதிபலிக்கவில்லை. மாறாக இலக்கிய விமர்சகர் எழில் முதல்வன் குறிப்பிடுவதுபோல-
 “மிராசுதாரர்களும், வக்கீல்களும், ஐ.சி.எஸ்- தாசில்தார் வர்க்கத்தார்களுமே கதை மாந்தர்களாக இடம்பெற்றிருந்த சிறுகதை உலகில், நடைபாதை வாசிகள், பிச்சைக்காரிகள், ரிக்ஷாக்காரர்கள், விபச்சாரிகள், தொழிலாளிகள், குஷ்டரோகிகள், உளநோயாளிகள் ஆகியோரைக் குடியேற்றிப் புதிய மாற்றத்தை உண்டாக்கியவர் ஜெயகாந்தனே.” (இருபதாம் நூற்றாண்டுத் தமிழிலக்கியம் - 1973, பக்:136) என்பதில் சந்தேகமில்லை.

 அதேபோல- 
 தமிழின் தலைசிறந்த இலக்கிய விமர்சகரான கா.சிவத்தம்பி அவர்கள் 1965-66 காலத்திலேயே – சமகால ஜெயகாந்தனை – சரியாகக் கணித்து, “தமிழ்ச் சிறுகதையுலகில், இன்றுள்ள காலப்பிரிவை ‘ஜெயகாந்தன் காலம்’ என்று குறிப்பிடவேண்டிய அளவுக்கு, ஜெயகாந்தன் கதைகள் இலக்கியத் தரமும், வாசக ரஞ்சகமும் உடையனவாகத் திகழ்கின்றன.” என்று குறிப்பிட்டதோடு 1966இல் ‘அக்கினிப்பிரவேசம்’ வெளிவந்தவுடனே ஜெயகாந்தனில் நிகழ்ந்து வரும் ‘மாற்றம்’பற்றியும் உடனடியாக சரியாக-எழுதினார்.

 எனவேதான்- வாசக ரஞ்சகமும், இலக்கியதரமும் உடைய, சமகால மக்கள் பிரச்சினைகளைப் படைப்பாக்கிய ஜெயகாந்தனை எல்லாரும் உச்சியில் வைத்துப் போற்றினர். இதை அவரே “ஜாக்கிரதை உணர்Nவுhடும், கலைப்பிரக்ஞைபோடும் எழுதிய கதைகள்” என்று சொல்வதும் பொருத்தமாக உள்ளது. (1962-‘மாலையக்கம்’-முன்னுரை)

 “எனக்குத் தெரிந்த வாழ்க்கைகளை வைத்து மட்டுமே நான் எழுத முடியும். அந்த வாழ்க்கையின்மீது எனக்கிருக்கும் பிடிப்பு-பரிவின் காரணமாகவே நான் எழுதுகிறேன்” (‘சுயதரிசனம்’ சிறுகதைத் தொகுதி 1967-ஜெயகாந்தன் முன்னுரை) என்று கூறிக்கொள்ளும் ஜெயகாந்தனின் வார்த்தைகளை, மிக அண்மையில் அவர் எழுதியிருக்கும் ‘இப்படித்தான் நடக்கிறது’ (புகை நடுவினிலே –தொகுப்பு – 1990, மகுடம் மாத இதழ்-டிசம்பர்’92) கதை வரையிலும் பொருத்திப் பார்க்கலாம்.
----------------------------------------------------------------------
சுற்றுச்சூழல், ஓசோன் போன்ற இயற்கை அச்சுறுத்தல்கள்
குறித்து என்ன கருதுகிறீர்கள்? – எதற்கும் அஞ்சாதீர்கள் ! அதுவும் 2000ஆண்டுகளுக்குப் பின்னால் ஏற்படப்போகும்
அழிவைக் குறித்து நாம் அஞ்சி என்ன பிரயோஜனம் கடவுளை நம்புங்கள்! காப்பாற்றுவார்! (கணையாழி நவ.’95-ஜெ.கா.)
-----------------------------------------------------------------------------

ஒரு ஜெயகாந்தனுக்குள் –
இரண்டாவது மூன்றாவது ஜெயகாந்தன்கள்:
 13 வயதிலேயே, கம்யூனிஸ்டுக் கட்சியின் முழுநேர ஊழியராக இருந்த அவரது மாமாவுடன் கிடைத்த ‘கம்யூன் வாழ்க்கை’ கற்றுத்தந்த தத்துவ-நடைமுறை அனுபவங்கள், ‘தேசவிடுதலை’ எனும் ஒரு நோக்கில் அப்போதைய காங்கிரஸ் கட்சியும்-கம்யூனிஸடுக் கட்சியும் கைகோத்து நின்று எழுப்பிய உத்வேகம், 14வயது ஜெயகாந்தனுக்கு ‘தேசவிடுதலை’ உணர்வை ஊட்டியது.’
 கம்யூனிஸ்டுக் கட்சியின் ஒரு கடிதத்தைக் கொண்டு கொடுப்பதற்காகவே முதன் முதலில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்துக்குப் போனார் ஜெயகாந்தன்.

 சுதந்திரம் வந்தது.
 சூழ்நிலை மாறியது.
 ஜெயகாந்தன் கூறுகிறார்:
 “நான் மதித்த காங்கிரஸ் கட்சி அதிகாரவர்க்கக் கட்சியாகவும், எனது சொந்த வீடாகிய கம்யூனிஸ்டுக் கட்சி தடைசெய்யப்பட்ட கட்சியாகவும் ஆகியிருந்த ஒரு சோதனையான சூழ்நிலையில்-(1949)- தோன்றிய தி.மு.கழகம் எனக்கு ஒரு பெரும் சவாலாகவே தோன்றியது” (குமுதம் 28.4.94).

வளர்ந்து வந்த தி.மு.க. தலைவர்கள் காந்தியத்தையும், கம்யூனிஸத்தையும் ஏற்பது போலப் பேசியும், எழுதியும் வந்தனர். அண்ணாவை ‘தென்னாட்டு காந்தி’ என்றதும், தமிழகத்தில் ‘திராவிடப் பொதுவுடமைப் பூங்கா’ அமைப்பதே லட்சியம்’ என்று கூறியதும் ஜெயகாந்தனுக்கு போலியாகப்பட்டது. அவர்களின் வறட்டு நாத்திகமும், பிராமண எதிர்ப்பும், பழமை போற்றலும், தமிழினவாதமும் ஜெயகாந்தனைப் பெரிதும் எரிச்சலுறச் செய்தன.

 இதனால்-
 தி.மு.க. தொடங்கிய காலத்திலேயே அதன் பகிரங்க எதிர்பாளராகத் தன்னைப் பிரகடனம் செய்து கொண்ட ஜெயகாந்தன், தமிழின வாதத்துக்கு எதிரானவராகவும், வேதாந்த பிராமண ஆதரவாளராகவும் தன்னை வளர்த்துக்கொண்டார். தன்படைப்புகளையும் அவ்வாறே-அப்போது-எழுதினார்.
 பின்னர் தி.மு.க.வை எதிர்த்து வெளியேறிய ஈ.வெ.கி.சம்பத், கண்ணதாசன் ஆகியோருடன் சேர்த்து, தி.மு.க.வை எதிர்த்துப் பிரச்சாரமும் செய்தார்.  1949ல் வெளிவந்த அண்ணாவின் ‘வேலைக்காரி’ படம், ‘ஒன்றே குலம்’-ஒருவனே தேவன் என்றது. ;கடவுள் இல்லை’ என்ற பெரியாருக்கு மாறாக ‘ஒரு கடவுள் உண்டு’ என்று ‘சமரசம்’ செய்தது. ‘சீருடைய நாடு – தம்பி – திராவிட நன்னாடு, ஓர் கடவுள் உண்டு-தம்பி-உண்மைகண்ட நாட்டில்’ என்றார் பாரதிதாசன்(ஏற்றப்பாட்டு – 54)  

தி.மு.க. தொடங்கிய காலத்திலேயே அதன் பகிரங்க எதிர்ப்பாளராகத் தன்னைப் பிரகடனம் செய்து கொண்ட ஜெயகாந்தன், தமிழின வாதத்துக்கு எதிரானவராகவும்,   வேதாந்த பிராமண ஆதரவாளராகவும் தன்னை வளர்த்துக்கொண்டார். தன்படைப்புகளையும் அவ்வாறே அப்போது-எழுதினார்.
 1952இல் வெளிவந்த கலைஞரின் ‘பராசக்தியில்’, கோயிலிலே குழப்பம் விளைவித்தேன், கோயில் கூடாது என்பதற்காக அல்ல, கோயில் கொடியவர்களின் கூடாரம் ஆகிவிடக்கூடாது என்பதற்காக’ என்று தீந்தமிழ் வசனம் தெறித்து வந்தது.
 இவற்றுக்கு மாறாக,  1955இல் ஜெயகாந்தன் எழுதிய ‘தமிழச்சி’ சிறுகதை அன்றைய தி.மு.க. எதிர்ப்பை அப்பட்டமாகக் காட்டியது. தேவலோகத்திலிருந்து, மதுரைக்கு வந்தனர் கண்ணகியும் இளங்கோவடிகளும்.
 “அதோ ஒரு தமிழச்சி, எச்சிலையிலிருக்கும் சோற்றை வழித்துப் புசிக்கிறான். அவளருகே ஒரு தமிழ் நாயும் நிற்கிறது. வற்றிப் போன அவள் மார்புச் சக்கையைச் சுவைத்தவாறு ஒரு, ‘தமிழ் சிசு’. சற்று தூரத்தில், “சிலப்பதிகாரமும், திருக்குறளும் படைத்த நமது தமிழர்கள் -மூடரல்ல, நம்நாடு நமக்கு வேண்டும் என்று பேசிக்கொண்டிருக்கிறார். மதுரை நகராட்சிக் கவுன்சிலர் சுதர்சனப் பிள்ளை”. அவரே இரவில் தன் வீட்டில் அடைக்கலம் புகுந்த கண்ணகியை-ஆம் சிலப்பதிகார கண்ணகியைத்தான் - பெண்டாள நினைத்த சண்டாளத்தனத்தை, ஆவேசம் குமுற எழுதுகிறார் ஜெயகாந்தன்.

 1967இல் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகுகூட இந்த ‘தி.மு.க. எதிர்ப்பு’ ஜெயகாந்தன், முனை மழுங்கிப் போய்விடவில்லை. தி.மு.க.வின் ;வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றிய சினிமாக் கவர்ச்சியை எதிர் பொருளாக வைத்து, ‘கண்ணதாசன்’ இதழில் ஒரு தொடர் எழுதினார் (அதைவெளியிட்ட கண்ணதாசனே பிறகு ‘அரங்கமும் - அந்தரங்கமும்’ தொடர் எழுதி, பாதியில் நிறுத்தி, எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் ‘அரசவைக் கவிஞர்’ ஆனார் என்பதும் தனி இலக்கிய வி(வ)காரம்) அந்த ‘சினிமாவுக்குப்போன சித்தாளு’ எம்.ஜி.ஆரைத் தாக்குவதாகப் பலரும் பதறினர். ஆனால், நமது கலாச்சாரத்தின் சீரழிவில் தமிழ்ச்சினிமாவின் பங்கு பற்றிப் பார்த்தால் இன்றைக்கும் அது பொருந்தும்.

 இவை நல்ல விஷயங்கள்தான் எனினும், கலாச்சார- அரசியல் சீரிழிவின் எதிர்ப்பாளராக,  தமிழினவாத-பிராமண எதிர்ப்பு இயக்கத்தின் எதிராளியாக, தன்னை அடையாளம் காட்டிய ஜெயகாந்தன், பிராமண ஆதரவின் வேதாந்தியாக,வறட்டு நாத்திகத்தை எதிர்த்த-வறட்டு வேதாந்தியாகவோ மாறுவது!? ‘பாவம் பக்தர் தானே?’ என்றொரு சிறுகதை எழுதினார்.
 கோவிலில் சிலையாகி நிற்கும் ‘பாலகிருஷ்ணனுக்கு ஒரு ஊமைக்கிழவி தினமும் சோறு ‘ஊட்டி’ வருகிறாள். இந்த அனாசாரத்தைக் கண்டுவிட்ட பூசாரி, கிழவியை வெளியேற்றி, கோயிலைப் பூட்டிவிடுகிறார். ஒருசில நாள் கழிந்ததும் பாலகிருஷ்ணன் ‘இளைத்துப்’ போகிறான். ஜெயகாந்தன் எழுதுகிறார்:  “ஆமாம். பாலகிருஷ்ணன் இளைத்தே தான் போய்விட்டான். இதைப் போய் யாரிடம் சொல்வது? பகுத்தறிவு வாதம் என்கிற பெயரில் நாஸ்திகவாதம் பெருத்துப்போன இக்காலத்தில், என்னைப் பைத்தியக்காரன் என்றல்லவா சிரிப்பார்கள்!”

 இதுபற்றி-    
 “இதற்கு நாம் எந்தவிதமான விளக்கமும் தரவேண்டியதில்லை, ஏழைகளின் பக்கம்தான் கடவுள் இருக்கிறார் என இட்டுக்கட்டிச் சொல்லும் இந்த ஏமாற்றுவித்தையைத்தான் புராணிகர்கள் காலகாலமாய்ச் செய்து வருகிறார்களே! அந்தப் படையில் ஜெயகாந்தனும் எதற்குச் சேருகிறார்?” எனும், இலக்கிய விமர்சகர்; அருணனின் கேள்வியே சரியானது (‘அருணன் கட்டுரைகள்’ 1991-அன்னம், சிவகங்கை, பக்:89).
--------------------------------------------------------------------------------

எதிர்ப்பில் பரிணமித்த 
இன்னும் ஒரு ஜெயகாந்தன்:
 ‘தீ பரவட்டும்’, ‘ஆரியமாயை’ எனும் திராவிட இயக்கப் பிரச்சாரத்துக்கு எதிராகவோ, காந்தியத்தில் ஊறிய ‘ராமராஜ்ய’ ஆதரவாகவோ, பொங்கி எழுந்த ஜெயகாந்தன்: ‘சில பிராமணர்கள் கெட்டிருக்கலாம்: சங்கர சர்மா போன்ற பிராமணோத்தமர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்’ என்னும் கருத்தோடு ‘பிரம்மோபதேசம்’ கதையை எழுதுகிறார்-1962இல்.

 “காலாகாலம் சந்தியா வந்தனம் செய்வதில் தவறாமலும், பிதுர்க்கடன் நிறைவேற்ற மறவாமலும், ஆகமநெறி வழுவாத ஒரு பெரியாராய், ஒன்பது சுற்று யக்ஞோபவீதத்துடன், ‘பத்தாறு’ தரித்து பிராமண குலத்திற்கோர் பிரதிநிதியாகவே வாழ்ந்தார் சங்கர சர்மா?”

 இப்படியான இவரிடம் வேலைதேடி வந்த இளைஞன் சேஷாத்திரி, பிறப்பால் பிராமணனே எனினும், ‘அவன் கம்யூனிஸ்ட்’ என்பதால் அவனிடம் ‘பிராமணத் தன்மை’ இல்லை என்று கூறி, தனது மகள் காயத்ரியைத் திருமணம் செய்துதர மறுத்துவிடும் சங்கரசர்மா, பிறப்பால் பிராமணர் அல்லாத ஒருவர்-சதானந்த ஓதுவார்-வேதநம்பிக்கையுள்ள நடைமுறையால், பிராமணனாகத் தகுதி பெறுகிறார். மகளைத் தலைமுழுகிவிட்டு, சதானந்தனை மகனாகத் தத்தெடுத்துக்கொள்கிறார்.

 இப்படியான இவரது ‘வேதம் புதுமை செய்யும்’ கருத்துக்களால், கோவை ஞானிபோன்றவர்கள்.” மார்க்சிய வாதிகள் கூறும் புராதன பொதுவுடமை சமுதாயம், வேதகாலச் சமுதாயமே” என, மனிதகுல வரலாற்றையே குழப்பும் அளவுக்கு, பலமான தாக்கம் விளைந்தது.

 பின்னர் “பாவம் இவள் ஒரு பாப்பாத்தி” (1979) தொடங்கி, ‘ஜயஜயசங்கர’ (1984) முடிய எழுதிய ஏழு குறுநாவல்களிலும், இந்துமத வழியில் இந்திய சமூகத்தில் மாற்றம் கண்டுவிடலாம் எனும் கருத்துக்களையே எழுதினார்.  “நமது ஹிந்து தர்மத்தின் பேராலேயே, இந்த தேசத்தை சோசலிசப் பாதையில் அழைத்துச்செல்ல முடியும் என்று நான் மார்தட்டிச் சொல்லுகிறேன்” என்றகருத்தில் உறுதியாக இருக்கிறார்.

 “இந்த தேசம், உலகத்துக்கே நல்லவழிகாட்டிய பெருமைக்கு உயரும். ஆம், நமது துப்பாக்கிகளின்  முழக்கம், வெற்றிக் கொண்டாட்ட முழக்கமாக, மக்களின் உற்சாக ஆரவாரங்களோடுதான் ஒலிக்கும். இதில், உடலங்களின் சிதைவும், உயிர்களின் ஓலங்களும் கலந்து ஒருபோதும் ஓலிக்காது. இது, உலகுக்கே ஒரு புதுமை!” என ஊருக்கு நூறுபேர்’ இயக்க முன்னோடி எழுத்தாளர் ஆனந்தன் பேசுவது ஜெயகாந்தனின் குரல்தானே? (‘எங்கெங்கு காணினும்’-மீனாட்சி-1981.பக்:103).
இதன் இறுதியாக-
‘ஜயஜயசங்கர’ – ஆதி தோற்றுவிக்க நினைக்கும் ‘காந்தி இல்லமும்’, கோயில்கள்-ஆசிரமங்கள்-துப்பாக்கி வைத்துக்கொண்டே அதைப் பயன்படுத்த அவசியமில்லாத ‘புரட்சிக்கவுன்சிலைச் சேர்ந்தவர்கள் பற்றிய செய்திகளுடன்…என ஜெயகாந்தன் சொல்லவருவது என்ன? இதன் முத்தாய்ப்பாக-

 “யுத்தமும், சுரண்டலும் இல்லாத, சமத்துவமான, சாந்திமயமான ஓர் உலகைப் படைக்கப் பாடுபடும் மனிதாபிமானிகளான கம்யூனிஸ்டுகள், பலாத்கார வழியை எப்படி மேற்கொள்ள முடியும்?  அதுவும் இந்தியாவில்?” என்று வெளிப்படையாகவே கேட்கின்ற 16.12.92 (ஒரு சொல்கேளீர்’-மீனாட்சி புத்தக நிலைய முன்னுரை) ஜெயகாந்தனும், ஆரம்பத்தில் நாம் போற்றிப் புகழ்ந்த ஒரு ஜெயகாந்தனும் ஒருவர்தானா?  அல்ல! இவர், ‘அந்த ஒரு ஜெயகாந்தனுக்குள் உள்ள சில ஜெயகாந்தன்களில் ஒருவர்’ என்பதுதானே சரி?
--------------------------------------------------------------------------------
நாவல்களில் முகம்காட்டும் 
ஐந்தாவது, ஆறாவது ஜெயகாந்தன்கள்:
 ‘அளவு மாற்றம்-குணமாற்றத்தை நிகழ்த்தும் என்பது, ஜெயகாந்தன் பெரிதும் மதிக்கும் மார்க்சின் வாசகங்களில் ஒன்று.

 1964க்குப் பிறகு பெரிய பெரிய பத்திரிகைகளில் எழுதுவதும், சினிமா எடுத்துப் பரிசு பெற்றதும் -எனப் புகழின் சிகரம் தொட்டபிறகு, இவரது தனிப்பட்ட வாழ்க்கைத் தரத்தின் அளவு மாற்றம், எழுத்துக்களிலும் குணமாற்றத்தை நிகழ்த்தியது.

 என்ன குணமாற்றம்?
 அடிப்படையான ஒன்றை மட்டும் பார்ப்போம்.
 முனியம்மாவும், ராசாத்தியும், அம்மாசியுமாக இருந்த அவரது நாயகநாயகியர்: கங்காவும், சாரதா மாமியும், கௌதம-சித்தார்த்தனுமாக மாறிப்போயினர்.
  அவ்வளவுதான். விகடனில் எழுதத் தொடங்கியவர்-விகடனுக்காகவே எழுத ஆரம்பித்துவிட்டார். பிராமண சாஸ்திர-சம்பிரதாய நுணுக்கங்களை எழுதத் தொடங்கியவர் -
“அதனால இப்ப என்ன குடிமுழுகிடுத்தூன்ட்டு வெங்கு மாமாவாட்டம் கிடந்து குதிக்கிறேள். நடுத்துர வர்க்கத்துக் கதைகளே எழுதப்படாதா என்ன?” என்று சாரதா மாமி மாதிரிக் கேட்பவர்களுக்கு, கணபதி சாஸ்திரிகள் மாதிரி “நன்னா எழுதட்டும், பேஷா எழுதட்டும், இங்க வேணான்ட்டு யாரு அவர் கையப் புடுச்சுண்டுஅழுதா? ஆனா, உலகியல் பிரச்னைகளிலிருந்து உளவியல் பிரச்னைக்குக் கண்ணு பாவிடுத்தே! அதக் கவனிக்க வேண்டாமோ?”   என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது! குறிப்பாக அவற்றால் பெரிதும் மன உளைச்சலுக்கு ஆளான இளந்தலைமுறைப் பெண்களின் பிரச்சினைகளை எழுதத்தொடங்கியவர்– ‘ஜயஜயசங்கர’ என பிரம்மோபதேசம் செய்யத் தலைப்பட்டுவிட்டார்.

 இந்த நிலையில் அவரது வாக்குமூலத்தைப் பாருங்கள்:
 “திராவிட அரசியல் மாயையிலிருந்து, தமிழ் மக்களை விடுவிக்க, தேசிய இயக்கமான காங்கிரசுடன் ஒன்றுபட வேண்டும் என்ற லட்சியத்திலிருந்து கம்யூனிஸ்டுகள் விலகிப்போனது மட்டுமல்ல: தி.மு.கழகத்தோடு சேர்ந்து காங்கிரசை எதிர்க்கும் விபரீதநிலை உருவானபின் காமராஜ் தலைமையில் காங்கிரஸ் உறுப்பினர் ஆனேன்,” (குமுதல் 28-4-94). அனேகமாக இந்தக் காலம் 1966 ஆகவே இருக்கும். (அப்பொழுதுதானே அளவு மாற்றமும் குணமாற்றமும் பொருந்தி வருகிறது!).  
-------------------------------------------------------------------------
 அவரே குறிப்பிடும் அவரது மனநிலை மாற்றமும்: அவரது கதாபாத்திரங்கள். நடுத்தெரு வர்க்கத்திலிருந்து நடுத்தரவர்க்கத்துக்கு மாறியதும் ஒரே நேரத்தில் மெதுவாக-ஆனால் உறுதியாக-நடந்ததை மறந்துவிடலாகாது.
 மிகச் சரியாகச் சொன்னால், நாவல்களைப் பொறுத்தவரையில் அவரது முதலிரண்டு நாவல்களில் (1965 வரை) வந்த நடுத்தர வர்க்கம் அதன்பிறகு அவருக்கு மறந்தே விட்டதைக் கவனிக்க வேண்டும்.  1966 இல் ‘பாரிசுக்குப் போ’வதாக அதன் நாயகன் சாரங்கன் கிளம்பியதில் இருந்து, ஜெயகாந்தன்-ஜெ.கே.யாகி நடுத்தரவர்க்கக் கதைகளுக்கு போய்விட்டார்.

 1965 ஜனவரியில் ஆனந்தவிகடனில் எழுதிய ‘ஒரு பகல்நேரப் பாசஞ்சர் வண்டியில’- சிறுகதையின் தொடர்ச்சிதான் ‘பிரளயம்’ குறுநாவல். சென்னைப்புறநகரின் சேரி ஒன்றில் புயல் வெள்ளம் வர, அந்தப் பாவப்பட்ட ஜனங்கள் பட்டபாடுதான் மிகச்சிறந்த குறுநாவலாகக் கலைவடிவம் கொண்டது.

 1966-ஆனந்தவிகடன் தீபாவளி மலரில் இவர்‘அக்கினிப்பிரவேசம்’ செய்தது தமிழர்க்கு வரம்தரவா? சாபம் தரவா? என்பதைத்தான் இந்தக் கதைக்குப்பின் நேர்ந்த விளைவுகளிலிருந்து காணவேண்டும்.

 இதன்பிறகு, 1967 இல் ‘சமூகம் என்பது நாலுபேர்’ 1969இல் ‘ரிஷி மூலம்’ இவற்றின் கரு, 1965க்கு முந்திய ஜெயகாந்தனிலிருந்து பிந்திய ஜெயகாந்தன் மாறிவிட்டதை தொடர்ந்து கவனிக்கலாம்.

தி.ஜ.ர.பொய் சொன்னாரா?
ஜெயகாந்தன், சாந்தி, சரஸ்வதி, தாமரை, இதழ்களில் (1954-56) எழுதிவந்தபோது அவரது மூன்றாவது சிறுகதைத் தொகுதி ‘ஒரு பிடிசோறு’ (1956) அச்சானது. அவரே அச்சுக் கோத்த கதைகள் அவை. தி.ஜ.ரங்கநாதன் முன்னுரை எழுதியிருந்தார். இருவரும் ஒரே வீட்டின் ஒண்டுக்குடித்தன வாசிகளாம். அது ஒன்றுதான் ஜெயகாந்தனின் புத்தகம் ஒன்றுக்கு வேறு ஒருவர் எழுதிய முன்னுரை. அதில் தி.ஜ.ர. எழுதுகிறார்:-
 “மேலுக்குத் தளுக்கான, நடுத்தர வாழ்க்கை பொம்மை மானிடர்களையோ உலக இன்பங்களை ஏகபோகமாக அனுபவிக்கும் மாளிகை மனிதர்களையோ ஜெயகாந்தன் கதைகளிலே காண முடியாது. அப்படி யாராவது ஒருவர் தோன்றினாலும் உபபாத்திரங்களாகவே இருப்பார்கள்.” ஆனால், வரப்போகும் ஏழெட்டு வருடங்களிலேயே இது ‘பொய்யாய்-பழங்கதையாய்’ போய்விடும் என்றறியாத தி.ஜ.ர. முன்னுரையைத் தொடர்கிறார்.  “கோடிக் கணக்கான மக்களின் வாழ்வை விட்டு, பொறுக்கிய சில மனிதர்களின் வாழ்வைத் சித்தரித்தால் அது மனித வர்க்கத்தின் சித்திர மாகுமா?
 நல்ல-அருமையான கேள்வி! இதற்கு-
 “ஆகாது! ஆகவே ஆகாது!” என்பதுதான் நமது திருத்தமும், ‘ஆகவில்லையே’ என்பதுதான் 1965க்குப் பிந்திய ஜெயகாந்தன் மீதான நம் வருத்தமும்.
------------------------------------------------------------------------------
* இசைக்கலைஞன் சாரங்கனை ‘உயிருக்குயிராக’ காதலிப்பதால், தான் ‘தெய்வமாக மதிக்கும்’ தன் கணவர் மகாலிங்கத்திடம் விவாகரத்துக்கோரி, விவகாரம் பண்ணும் கதாநாயகி ‘லலிதா’ (பாரிசுக்குப் போ-1966).
* ஏற்கனவே உள்ள இரண்டு மனைவிகளைவிட்டு இளம்பெண் சுகுணாவை மணக்கத்துணிந்து, அவள் மறுத்துவிடவே தற்கொலை புரிந்துகொள்ளும் கதாநாயகர் ‘முத்துவேலர்’ (‘சமூகம் என்பது நாலுபேர்’-1967).
* பெற்ற தாயை நிர்வாண கோலத்தில் கண்டு, வக்கிரக் கனவுகளோடு தாயின் சாயலில் உள்ள ‘சாரதா மாமி’யுடன் உடல் உறவு கொண்டு, மனம் பேதலித்துப் புலம்பும், ‘ராஜாராமன்’ (ரிஷிமூலம்’-1969).
* பாலுணர்வின் மீதுள்ள வெறுப்பால், வளர்ந்த தன் பிள்ளைகளை வீட்டுக்குள்ளேயே வைத்துப் பூட்டிவிட்டுப் போகும்’ அலங்கார வல்லியம்மாள்’ (ஆடும் நாற்காலிகள் ஆடுகின்றன’-1969).
* கல்லூரியில் படிக்கும் மகளும், நல்ல மனைவியும் உள்ள ‘பிரபு’வை தனது அறியாப் பருவத்தில் உறவு கொண்டவன் என்பதைக் காரணமாக்கிக் கொண்டு, விரட்டி விரட்டி காதலிக்கும் ‘கங்கா’ (சில நேரங்களில் சில மனிதர்கள்-1970).
* இவர்கள் எல்லாருமே தி.ஜ.ர. சொல்வதுபோல் ‘பொறுக்கிய சில மனிதர்கள்தாமே? இவர்களுக்குப் பாலுணர்வுப் பிரச்னை தவிர உலகில் வேறு பிரச்சினைகளே பெரிதாக இல்லையே!

 இது பற்றியும் ஜெயகாந்தன் தெளிவாக எழுதுகிறார்.
 “பாலுறவுப் பிரச்சினை என்பது வெறும் படுக்கை அறைப் பிரச்சினையல்ல, அதுவும் ஒரு சமுதாயப் பிரச்சினைதான்” (ரிஷிமூலம்-1969-முன்னுரை) இன்னும் ஒருபடி மேலே போய், அடுத்தவரியிலேயே- “பசியையும்விட அது ஓர் அடிப்படைப் பிரச்சினை” என்றும் கூறிவிடுகிறார்.
 சரிதானே?
 இலக்கிய விமர்சகர் பா.கிருஷ்ணகுமார் கூறுவதுபோல, “ஒரு காதலனை பத்துநாள் பட்டினி போடுங்க. அப்புறம் அவன் காதலிய அவன் முன்னாடி கொண்டுபோய் நிறுத்தினா, அவளை அறைஞ்சு தள்ளிவிட்டு, கஞ்சிப்பானையைத் தேடுவான்” என்பதைவிட வேறு என்ன கூறமுடியும்?

அடிப்படைப் பிரச்னை எது என்பதில், அவரவர் நோக்கும்-போக்கும்தானே அடிப்படையாகும்?
1965 முதலாக-பலலட்சம் பேரின் பசியிலிருந்து, ஒரு சிலரின் பாலுறவுப் பிரச்சினைக்கு வந்த இந்த மாற்றம் மட்டுமல்ல, 1970,80,90களில் வந்த ஜெயகாந்தனது கதைத் தலைவர்-தலைவியரில் பெரும்பான்மையோர் பெரும் பணக்காரரே! நுனி நாக்கில் ஆங்கிலம், உதடுகளி;ல் பைப்-மதுக்கிண்ணம் என்றிருப்போர்.
 “அரவிந்…டோன்ட் டிரிங்க் இன் த டே டைம்…”
 “நோ மம்மி, ஜஸ்ட் என்ஜாயிங் மியூசிக் ஒன்லி…”
- இது ‘ஓ அமெரிக்கா! (1989).
“அடிக்கடி அந்த வீட்டின் சாப்பாட்டு மேஜையைச் சுற்றி அமர்ந்துகொண்டும் வரவேற்பரையில் கையில் மதுக்கிண்ணம் ஏந்தியும் அறிவார்ந்த விவாதங்கள் நிகழும் எல்லாம் ஆங்கிலத்தில்தான்”- இது ‘புகை நடுவினிலே’ (1990).

 இந்த 70,80,90களில் ஜெயகாந்தனின் தனிவாழ்வும் நல்ல நிலைக்கு உயர்ந்ததில் நமக்கும் மகிழ்ச்சியே!
 புதுமைப்பித்தனைப்போல, நல்ல எழுத்தாளர் செத்ததற்குப் பின்னால் நிதிகள் திரட்டாதீர்! என்பதுதான் நம் கருத்தும்.

 அதற்காக நம் எழுத்தாளர், வாழ்க்கை வசதிகள் வந்த பின்னும் டால்ஸ்டாய் போல, தாகூர் போல ‘பிரபுத்துவ வாழ்வை மீறி’ மக்களோடு மனதார வாழ்ந்து’ எண்ணி-எழுதுவதன்றோ அந்த மகத்தான எழுத்தாளனிடம் நம் மனசார்ந்த எதிர்பார்ப்பு? தி.ஜ.ர. கூறியதும் இதுபோல பொய்த்துவிட்டதே!
------------------------------------------------------------------------------------
ஏழாவது எட்டாவது ஜெயகாந்தன்கள்:
 1990 நடுவில் என்று நினைக்கிறேன். குமுதத்தில் ஒரு சிறுபேட்டியில், ஜெயகாந்தன்- ‘கஞ்சா குடிப்பதில் தவறில்லை, நான் புகைக்கிறேன்!’ என்று கூறியிருந்தார். அவரது அன்பான வாசகர்கள் அதிர்ந்து போனார்கள். ‘நமது ஆசான் பாரதி’ என
வாய் ஓயாமல் முழங்கும் ஜெயகாந்தன், அவன் அபின் சாப்பிட்டான் என்பதற்காக அதையும் ஏற்க முடியுமா என்ன?
 தொடர்ந்து அதே ஆண்டில், அவர் ‘புகை நடுவினிலே’ என்றொரு சிறுகதை எழுதி, ‘குடிக்காதே என்று வற்புறுத்தும் போதுதான் இளைஞர்கள் கெட்டுப் போகிறார்கள். கஞ்சா ஒரு மூலிகைதான்’ என்றும் விளக்கினார்! அதுவும் போதாதென்று அதன் தொடர்ச்சியாக-“இப்படித்தான் நடக்கிறது” என்றொரு குறுநாவலும் எழுதினார்.

 “ஆனந்தமூலி, கற்ப மூவி,  கோரக்கர் மூலி, சிவமூலி, பங்கி, மதமத்தகம், மூதண்டம், சித்த பத்தி – அதன் தாவர சாஸ்திரப் பெயர்”. “என்றெல்லாம் இருந்ததே தவிர அது நஞ்சு என்றோ, ஒழிக்கப்பட வேண்டிய தாவரமென்றோ ஓரிடத்திலும் இல்லை” (மகுடம் மாத இதழ்-டிச’92,பக்:27)

 இது என்ன இது?
 இதற்கு எதற்கு ஜெயகாந்தன்?

 நாலையும் ஐந்தையும் ஏழென்று கூற 
நாலாவது பரம்பரை ரோபோவா?
 இதே போலத்தான், மிக அண்மைக்காலமாக அவர் கொண்டிருக்கும் ஹிந்தி பற்றிய கருத்தும் 24.4.94 மணிவிழாவில் கருத்தரங்க இறுதியில் அவரது ஏற்புரையில் பேசியது என்ன?

 “ஹிந்தி மொழி பற்றி சிலர் பயப்படலாம். மந்திரிகள்-அதுவும் மத்திய மந்திரிகள் பயப்படலாமா? நீங்கள் படியுங்கள் நான்கூடப் படிக்கிறேன்” (தினமணி 26.4.94 மதுரைப்பதிப்பு) அழுக்கில் கிடக்கும் சோப்புப்பெட்டி போலிருக்கும் டி.வி.பெட்டியின் வேலையை ஜெயகாந்தனா செய்வது?
                                                                                                                                 கடைசியாக வரும் கட்டுரை ஜெயகாந்தன்:
அவரது குருநாதர்போல ‘மந்திரம் போல் சொல்’ ஆட்சிகொண்ட ஜெயகாந்தனின் கட்டுரைகளும், கதைகளுக்கு அவரே எழுதிய முன்னுரைகளும் பெரும் புகழ் பெற்றவை. 
கதைப் பாத்திரங்களைப் பற்றிய தர்க்க நியாயங்கள் தடாலடியாக வரும்! ஆராய்ச்சிப் பண்டிதர் போல ‘அளவுகோள்’ இலக்கணம் பார்த்து ஜெயகாந்தனை விமர்சிக்க முடியாது.
 36 பக்கமுள்ள அக்கினிப் பிரவேசம் சிறுகதைதான்.
 42 பக்கமுள்ள ‘இப்படித்தான் நடக்கிறது’ குறுநாவல்தான்.

ü அந்தச் சிறு விதைக்குள்ளிருந்து ஆலமரமும் விரியும்!
ü கடலின் பெரும் பரப்பே ஒரு கட்டுமரத்தாலும் சுருங்கும்!

 எல்லாம் அவரது சொல்லாற்றலின் சொரூபம்! கதைத்தலைப்பும் அவர் போல அவ்வளவு பொருத்தமாக , கவர்ச்சியாக பிறரால் வைக்க முடிவதில்லை. கட்டுரைத்தன்மையும் கதைத்தன்மையுடன் சேர்ந்தது.

 1970 நடுவிலிருந்து ‘துக்ளக்கில்’ ஒரு இலக்கிய வாதியின் அரசியல் அனுபவங்கள்’ தொடர் மூன்றாண்டுகள் வெளிவந்து, புத்தகமானது.
 ஆனந்தவிகடன், கதிர் இதழ்களிலும் தொடர்ந்து பலப்பல விஷயங்களை கட்டுரைகளாக எழுதினார்.
 1979ல் சோவியத்திற்கு ‘நேரு விருது’ பெற சென்றுவந்த அனுபவங்களை ‘குங்குமம்’ இதழில் தொடர்ந்து எழுதினார்.

 இப்படி 1970 முதல் 1992 முடிய அவர் எழுதிய இருபதுக்கு மேற்பட்ட கட்டுரைத் தொகுதிகள் வெளிவந்துள்ளன. கடைசியாக தினமணி கதிரின் ‘சபை நடுவே’ வரை இது தொடர்ந்தது. ஆனால் ஓர் இலக்கிய வாதியின் கட்டுரைகள் எனும் நோக்கில் ஆரம்பகால ஜெயகாந்தனை எந்த அளவுக்கு நாம் புகழ்கிறோமோ, அதைவிடவும் அதிகமாக ‘முரண்பாடுகள்’ அவரது கட்டுரைகளிலேயே உண்டு!
 விமர்சகர்களுக்கு பதில் சொல்வதற்கு தனது முன்னுரைகளைப் பயன்படுத்திக் கொண்டார். அதிலும் அவரது பிடிவாதமும், தடி வாதமுமே முன்னுக்கு நிற்கும்!
 “நான் எப்போதும் என்னை ஒரு முழுநேர கம்யூனிஸ்டு ஊழியனாகத்தான் மனத்துள் பாவிக்கிறேன்” (‘ஓர் இலக்கிய வாதியின் அரசியல்’…முன்னுரை) எனும் ஜெயகாந்தன்;.

 “கம்யூனிசம்தான் ஹிந்து மதம்போல, தனிமனித நலன்களை உள்ளடக்கிய சமூகம் சார்ந்த ஒரு வாழ்க்கை நெறியாகும்” என்கிறார். (சுதந்திரச்சிந்தனை’74:பக்157)  
ஒரு மகோன்னத தத்துவத்தை உருவாக்கித் தந்த மனிதகுலமேதை கார்ல் மார்க்சை ‘கிருஷ்ணாவதாரம்’ என்கிறார்!

அந்தத் தத்துவத்தை நடைமுறையாக்கி, உலகின் முதலாவது சமத்துவ சமூகத்தை நிர்மானித்த லெனினை ‘மகாத்மா’ என்கிறார், (போனதும் வந்ததும் - 83 பக்:42) ‘நாத்திகர் தெய்வம்’ என்கிறார்.

 உலக மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கி ஒளி வீசிய சோவியத் யூனியன் சிதறிப் போவதில் ‘சிறந்த பணி’யாற்றிய கோர்பச்வேவை. ‘மனித சமூகத்தின் ஆன்மீக சொரூபம்’ எனப் புகழ்கிறார்! (கம்யூனிசம் தோற்குமா பக்:68)

 நேருஜியும், இந்திராஜியும் வளர்த்த காங்கிரசின் ‘ஆவடி சோசலிசம்’ பற்றி அறியாதவர்போல, பாரதத்தையே பதற வைத்த ‘அவசரநிலைக்கு’ சற்று முன்னரே நடந்த இந்திய ரயில்வேத் தொழிலாளர்களின் வீரஞ்செறிந்த வேலை நிறுத்தப் போராட்டம் ‘சமூக விரோதிகளால் நடந்தது’ என்றார்.

அவருக்கு நெருக்கமான சி.பி.ஐ. தலைவர்களில் ஒருவராக இருந்த கல்யாணசுந்தரம்கூட, இதனால் ‘பிற்போக்கு அரசியல்வாதி’யானார்! (ஒரு பிரஜையின் குரல்’75,பக்:51)

 கட்சி தோன்றிய 1920 முதற்கொண்டு, இந்திய வரலாற்றோடு தமது வரலாற்றைப் பிணைத்துக்கொண்டு கொள்கை-நடைமுறைப் போராட்டங்களைப் பல்வேறு சோதனைகளுக்கும் நடுவே தொடர்ந்து வரும் மார்க்சிய கம்யூனிஸ்டுத் தலைவர்களை, ஒரு நாலாந்தர எழுத்தாளர்களைப் போல-சிறு பிள்ளைத்தனமாக, ‘இடதுசாரிக் கிழவர்கள்’ என எழுதினார் (“தாய்”இதழ்ஜன-’92).

 எல்லாம் போகட்டும்.
 இன்றைய நிலையில்கூட, இந்திரா-ராஜீவுக்குப் பிறகு இந்தியாவுக்குத் தலைமை ஏற்கத் தகுதியானவராக ‘பிரியங்கா’வுக்கு அழைப்பு விடுக்கிறார்! (ஒரு சொல் கேளீர்’-மீனாட்சி-டிச’92-பக்:124) 

 சரி, தமிழகத்தின் விடி மோட்சத்துக்கு?
 “என்ன காரணம் கொண்டும், எவர் விரும்பாதபோதிலும், ஜெயலலிதாவின் தலைமையில் உள்ள அ.இ.அ.தி.மு.க.வும், ராஜீவ் காந்தி தலைமையில் இருந்த காங்கிரசும் தமிழகத்தில் ஒன்றினைய வேண்டுமென்பது தமிழக மக்களின் ஏகோபித்த விருப்பமாயிற்று”(ஒருசொல் கேளீர்-பக்:43) அவ்வளவுதான்!

 முடிந்ததா?

 1966-இல், திராவிட இயக்கங்களை எதிர்த்தழிக்க வேண்டும் என்பதற்காகவே(?), கம்யூனிஸ்டுகளைப் பிரிந்து காங்கிரசுக்குப் போன ஜெயகாந்தனின், 1992-93 நிலையைப் பார்த்தீர்களா?

 இனி-கதையாவது! இலக்கியமாவது!
 கடைசியாக எழுதியிருக்கும் -குறுநாவலின் கடைசி வாசகங்கள் தான். நமது விமர்சன முடிவும்.
 “எல்லாரும் இன்புற்றிருக்கிறார்கள்!
 வேறென்ன வேண்டும்?
 பராபரமே! ஜெய்குரு மகராஜ்!

ஏன் நிறுத்தி விட்டீர்கள்? எழுதுங்கள் ஜே.கே.!
இதோ! இந்தக் கட்டுரையின் ஆரம்பத்திலேயே உறைந்து நின்றுவிட்ட முனியம்மாவும் கங்காவும் உயிர்பெற்று, மீண்டும் பேசுவதைக்கேட்டு, நாம் ஒதுங்கிக் கொள்வது சரிதானே?

 “சரி அதவிடு முனியம்மா, இந்தி படிக்கிறது ஒண்ணுதான் இப்ப பிரச்சினையா? அவுரு சொல்றாரு, உனக்கு இஷ்டம்னா படி அதர்வைஸ் லீவ் இட்…”

நானுந்தான் நென்ச்சேன்,  ‘ஞானபீடமா’ அது இன்னா அவார்டு? அத தமில்ல வாங்குனவருக்கும்,   மத்த மத்த பாஷைங்கள்ள வாங்குனவுங்களுக்கும், இவுரு இன்னாத்துல கொறஞ்சு பூட்டாரு” அத அல்லாம் இவுருக்கு குடுக்க இந்த கெவுர்மெண்டுங்களுக்கு துப்பு இல்ல.
                                                                                                                          “ஆனாலும் கங்காம்மா…அந்தப் பாயாப்போன டீ.வி.மாதிரி”
 “இந்தா…நான்தான் சொல்றன்ல்ல, உன்னையும் என்னையும் உருவாக்கி ஜனங்க மத்தியில கௌரவமா நடமாட விட்டவருக்கு…”

 “அதுனாலதாம்மா கண்ணு, நான் இம்மா நேரம் உங்கூட நின்னு பேசிகினுகிறேன். அப்பக்கட வச்சிகினு, மர்த்தடியில குந்திகினு ஏதோ என் ஜென்மத்த ஓட்டிட்ட எனுக்கு, ஒரு புள்ள வந்து வாய்ச்சான் பாரு! அவுன-சினிமா பாத்துகினு, சிகிரெட் புடுச்சிகினு, ஊர்வம்பவெலைக்கு வாங்கினு திரிஞ்சவுன-இஸ்த்து, “தூ! துப்புக்கெட்டவனே! இப்டி பொறுப்பில்லாம சுத்திகினுர்ந்தா ஙொம்மாவ எவன்டா காப்பாத்துவான். ஒங்க ஏமாளித்தனத்த ‘ஊஸ்’ பண்ணிகினு ஓட்டு வாங்கறதுக்கும் உங்களாண்ட வர்றவங்கள எப்டிடா மாத்தப் போறீங்கன்”னு நல்லாகேட்டு ஒறைக்க வச்சவுரும் அவுருதான்.
என்ன மாரி எத்தன பேருக்கு அவுரு கெவரத குட்த்தாரு? அந்த நன்னியில தாங்கண்ணு இப்டி கெடந்து பொலம்பிகினுக்கீறேன்”.

 “அத யாரு இல்லங்கறா முனியம்மா! ஒரு மனிஷன், சுயபுத்தியும் சொரணையும் உள்ளவன், எல்லாம் ஒரே மாதிரித்தான் ‘திங்க்’ பண்ணனுண்டு ஏதும் ரூல் இல்லியே! 1950-கள்ல உன்னைப்பத்திக் கவலைப்பட்டவுரு, 1966 முதலா என்னை மாதிரியானவுங்களப்பத்திக் கவலைப்பட்டுட்டாரு. என்னைப்பத்தி எழுதினதாலயே, உன்னைப் பத்தி இனிமே எழுத மாட்டாருன்னு எப்படி முடிவுக்கு வரலாம்? இப்பப்பாரு-தினமணிக்கதிர்ல(23.4.94) சொல்லியிருக்காரு, “சமீப காலமா, புயலைக் கிளப்புற மாதிரியான உங்க கதைகளைப் பார்க்க முடியலியே”ங்கற கேள்விக்கு “புயல் எந்த நேரமும் வந்து தாக்கும்? எச்சரிக்கiயாயிருங்கள்”ன்னு சொல்லியிருக்காரு.

 “ஆமாம் கண்ணு! அதான் எனுக்கும் சந்தோசமாயிருக்கு”.
 “அதுனாலதான் சொல்றேன். தமிழ் இலக்கிய விமர்சகர்கள் எல்லாருக்கும் டூ ஆல் த கரிட்டிக்ஸ் ஆப் டமில் லிட்ரேச்சர் சொல்லுவேன் –

 அவர, லேசுல எடை போட வேண்டாம்!
ஐம்பதுகளில் முனியம்மாக்களைப் படைத்த 
ஒரு ஜெயகாந்தனில் இருந்துதான்
ü திராவிட எதிர்ப்பில் திடமாகத் தொடங்கி, மதவழி அமைதிப்புரட்சியில் அவநம்பிக்கையூட்டும் ஜெயகாந்தன்களும்,
ü கஞ்சாப்புகை நடுவே, இந்திப் பிரச்சாரம் செய்துவரும் இன்றைய ஜெயகாந்தனும்,
ü காந்தியத்தில் தொடங்கி, கட்டுரைகளில் முரண்படும் கட்சிக்கார ஜெயகாந்தனும், வந்தாங்க!
ü நா இதையெல்லாம் இல்லேங்கல! அதுனாலயே, அந்த ஒரு முழு ஜெயகாந்தனின் வீச்சு முனைமுறிஞ்சி போயிடல அவரைவிட மேலான ஜெயகாந்தன்களையும் அவரால் உள்ளும் புறமும் உருவாக்கமுடியும்!
ஆமா, நா கேக்குறேன். ஏதோ என்னைப் படைச்சதுக்காக ஒரு சாகித்ய அகாடமி விருதும், ஒரு தமிழ்நாடு அரசுப் பரிசும், ஒரு ராஜராஜன் விருதும் மட்டும்தான் அவுரு தகுதிக்குக் குடுக்க முடிந்ததா?
 “ஆமாங்கிறேன், நானுந்தான் நென்ச்சேன், ‘ஞானபீடமா” அது இன்னா அவார்டு? அத தமில்ல வாங்குனவருக்கும், மத்த மத்த பாஷைங்கள்ள வாங்குனவுங்களுக்கும், இவுரு இன்னாத்துல கொறஞ்சு பூட்டாரு” அத அல்லாம் இவுருக்கு குடுக்க இந்த கெவுர்மெண்டுங்களுக்கு துப்பு இல்ல. அந்தக் கடுப்புகூட அவுருக்கு இருக்கதாயின்ன? இன்னான்ற நீயி?
 “சீச்சி! அதுனால எல்லாம் அவரு இப்படி மாறிட்டார்னு சொல்றது தப்பு முனியம்மா!”
 “அது சரி, ஆனா, ஒட்டுமொத்தமா சமுதாயமும்-அரசியலும் கெவுர்மெண்டும் இருக்கற லட்சணம் அவுரையும் பாதிக்காதான்ன?
 “அந்தப் பாதிப்புகளுக்கு அப்பாற்பட்டு இருக்கணும்னுதானே நாம எதிர்பார்க்கிறோம்!”
 இப்பக்கூட சாத்தூர்ல நடந்த த.மு.எ.ச. கலை இலக்கிய இரவுல, “மிகப்பெரிய அதிகாரியா இருக்கும் ஒருவர், என்னிடம் முன்னுரைகேட்டு வந்தார். அவரிடம் ‘அந்தப் பாமர எழுத்தாளன் மேலாண்மை பொன்னுச்சாமியின் கதைகளைப் படித்துவிட்டுப் பிறகு எழுதி வாருங்கள் என்று சொன்னேன்”னு பேசுனார்ல்ல? அந்தக் ‘கமிட்மெண்ட்’ வேற யாருக்கு வரும்.”
 “அதுனாலதான் நானும் அவர்ட்ட ‘ஏன் நிறுத்திட்டீங்க? அம்பதுங்கள்ல எயுதுன மாரி-அதைவிடவும் ஒறைக்க எயுதவேண்டிய மேட்டருங்க நெறயக்கிடக்கு. எயுதுங்கனு கேக்கலாம்னுருக்கேன்.”
 “ஆமா, ஒரு தடைவ ‘குமுதம்’ அரசு கேள்வி பதில்ல சொன்ன மாதிரி, ‘ஜெயகாந்தனின் பழைய ஜொலிப்பு ஏற்பட்டா தமிழுக்கு அதிர்ஷ்டம்தானே!ங்கற நப்பாசைதான்.”
 “சரீ! தலைக்கு மேல வேல கெடக்கு, அப்ப நா வர்ட்டா.
 “ம்…பாப்பம்.”
-------------------------------------------------------------------------------

 ஜே.கே. மணி விழா முடிந்த போது 
1994இல் எழுதியது -நா.முத்துநிலவன்.
ஏப்ரல்-24 அவரது பிறந்தநாள் என்பதால் மீள்பதிவாக இடப்படுகிறது
--------------------------------------------------------------------------------------------------------

மறைமலை அடிகள் பிள்ளைத்தமிழ்


மறைமலை அடிகள் பிள்ளைத்தமிழ்
-நா.முத்துநிலவன்-
--------------------------------------------
செங்கீரைப்பருவம் – பாடல் -1

மரைகள் தம்ஒளியில் மயில்கள் ஆட,முகில்
                 முழவின் ஏங்க, விழியா
        மலரும் குவளையிதழ் மயங்கி நோக்க,முரல்
                 மதுக ரங்க ளிசையா
திரைகள் மாற்றியலை புரளும் கோமருதன்
                 திகழும் எழிலை அருகே
        திரைக்கை வீசிஅரு கழைக்க ஏங்குமனத்
                 தெளிவி லாக்கடல் மகள்
கரைகள் வேலியெனக் காத்து மறிக்க,மிகுங்
                 காதல் துயரமுழவாக்
        கரைகலா மனமும் கரையவான் குரலில்
                 கதறி ஓலமிட நீர்
சொரியும் நாகைநகர் உரிய அடிகள் செங்
                 கீரை யாடியருளே!
        சூழ்கலப் பொலியை வீழ்த்தும் அடிகள்!செங்
                 கீரை யாடியருளே!
------(எழுதிய ஆண்டு 1976. பிற குறிப்புகளுக்கு “மறைமலையடிகள் பிள்ளைத் தமிழ்”முன்னுரை பார்க்க. 
ஒரு முக்கியக் குறிப்பு- இன்றைய முத்துநிலவனை இதில் தேடாதீர்கள்! இது நமது “பழைய பனையோலைகள்”) ----

அய்யோ! அய்யய்யோ!

அய்யோ! அய்யய்யோ! (இது தலைப்புங்க)

    உடனடியாக இந்தத் தலைப்பில் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்து புதுக்கோட்டை நகர்மன்றத்தில் ஒருமணிநேரம் பேசத் தோன்றுகிறது.
                அருமையாக நடந்து முடிந்த எனது நண்பர் கவிஞர் தங்கம் மூர்த்தியின் கவிதைத் தொகுப்புகள் வெளியீட்டு விழாவில் தொடக்கவுரையாக நான் பேசியது 10நிமிடம்தான். ஆனால் அதையே ஏன் இவ்வளவு சீக்கிரம் பேசி முடித்து விட்டீர்கள் என்று கேட்டார்கள். எனக்கு நிறைவாகவே  இருந்தது.
     எழுத்தாளர் எஸ்.ரா.வரவிலலை. உடல்நிலை சரியில்லை என்று சொன்னதாகத் தங்கம் மூர்த்தி சொன்னார்.பேராசிரியர் கு.ஞா.அவர்பாணியில்  சிரிப்புச் சரத்தைக் கொளுத்திப் போட்டுக் கொண்டே இருந்தார். ஆக மொத்தத்தில் நிகழ்ச்சி சிறப்பாக நடந்து முடிந்தது - ஒரே ஒரு பேச்சைத்தவிர அப்படி இழுவையாக 20நிமிடத்திற்கும் மேல் வாழ்த்துரையாற்றியவர் கடைசியில், -அப்பாடா என்று சொல்லும்படி- முடிப்பதற்கு முன்னதாக எனக்கு கண்டன பாணியில் ஒரு கருத்துச் சொன்னார். அதாவது-
                 ”அன்பு கலந்த கொடியினிலே ஒரு 
                               அகந்தைக் குரங்கு தாவும் - அதன்
                               அழகைக் குலைக்க மேவும்
                  கொம்பும் ஒடிந்து கொடியும் குலைந்து
                                குரங்கும் விழுந்து சாகும் - சிலர்
                   குணமும் இதுபோல் தினமும் புரளும் 
                                 குருட்டு உலகமடா... தம்பி 
                  தெரிந்து நடந்து கொள்ளடா - உலகம்
                                 திருந்த மருந்து சொல்லடா” என்ற பட்டுக்கோட்டையின் பாடல் வரி அருமையானது தானாம், ஆனால் தொடக்கவுரையில் இப்படிக் ”குரங்கு விழுந்து சாகும்” என்றா அமங்கலமாகப் பேசுவது? இதை முத்து நிலவன் மாற்றிக் கொள்ள வேண்டும்” என்று பேசி, அடுத்தநாள் புதுக்கோட்டையின் இலக்கிய வாதிகள் அனைவரும் இதைப்பற்றியே பேசி என்னிடமும் -அவர் அப்படிப் பேசியதற்கு- வருத்தப்பட்டுக்கொண்டார்கள்.
                  அவர் பாணியிலேயே சொன்னாலும் நான் “அன்பு” என்னும் “மங்கல“ வார்த்தையில்தானே தொடங்கியிருக்கிறேன்.? அது வல்ல அவரது கோபம்.. முன்னர் ஒரு கூட்டத்தில்  நாத்திகர்கள் ஒரு சதவீதம்தான் இருப்பார்கள் என்று பேசினார்  அவருக்குப் பின் பேசிய நான் அவருக்கு மாறாக ஒருசதவீதம் என்பதும் தவறு, அப்படியே வாதத்துக்கு வைத்துக்கொண்டாலும் அந்த ஒரு சதவீதம்தான் இந்த உலகத்தை மாற்றிக்கொண்டு வருகிறது நான் நூறு சதவீதம் நாத்திகன் “ என்று பேசிக் கைதட்டலையும் வாங்கிவிட்டேன் என்பது காரணமாக இருக்கலாம். தொழிற்பேச்சாளர்களுக்கு இதையெல்லாம் சகித்துக் கொள்ள முடியாதுதானே? நமக்குத் தொழில் பேச்சல்லவே! நமது கருத்தைச் சொல்வதற்குப் பேச்சும் ஒரு வழி அவ்வளவுதானே?
                   தலித் இலக்கியம் பற்றிய ஒரு விவாதத்தில் இப்படித்தான் வந்தது. சென்னைக் கவிஞர் ஜெயபாஸ்கரன் கவிதைகள் வெளியீட்டு விழாவில், எனக்குப் பின் பேசிய திருப்பு’ர் கிருஷ்ணன், அவரது கவிதைகளில் இருக்கும் “கெட்ட” வார்த்தைகளைத் தவிர்த்திருக்கலாம் என்று பேசினார். அங்கு இதற்கு விளக்கம் தர இயலாததால், அடுத்த வாரம் வெளிவந்த “நந்தன் வழி” இதழில் “அடிபட்டுக் கத்துகிறவன் இலக்கணம் பார்த்து அழமுடியாது, அந்த வார்த்தை தான் அந்தச் சூழலில் சரியானது. இதில் அசிங்கம் அழகு மங்கலம் எல்லாம் பார்த்துக்கொண்டிருக்க முடியாது” என்று ஒரு பக்கக் கட்டுரை எழுதினேன்.
                  எனவேதான் அமங்கலமான “அய்யோ... ஐயய்யோ” என்று தலைப்புத் தந்து உலக அவலங்களையெல்லாம் பட்டியலிட்டுப் பேச வேண்டும் என்று தோன்றுகிறது. வாழ்க்கை நாறிக் கிடக்கும் போது வாசவார்த்தைகளை மட்டும் நான் வீசிக்கொண்டிருக்க முடியாது என்பதை அவர் புரிந்து கொள்ள மாட்டார்.  நம்மைப் புரிந்தவர்க்குப் புரிநதிருக்கிறது போதும்தானே? 
                  ம்... இன்னும் நமக்கு வேலை நிறையக் கிடக்கிறதடா நிலவா!
(கவிஞர் தங்கம் மூர்த்தியின் அய்க்கூ மொழிபெயர்ப்பு அழகான படங்களுடன் அருமையாக வந்திருக்கிறது அதுபற்றி நாளை எழுதுகிறேன்)
---------------------------------------------------------------------------------------------
                  
                 
                  

எதை எழுத?

                 “கற்பும் கற்பழிப்பும்“ எனும் தலைப்பில் ஒரு கட்டுரை எழுத உட்கார்ந்தேன். தகவல்களுக்கான தரவுகளைப் புரட்டியபோது, மனம் கனத்துப் போனது. இந்தியாவில், தமிழகத்தில் உலகளவில் பெண்களுக்கு நாம் (ஆண்கள்) இழைத்து வரும் கொடுமைக்கு அளவோ வகைதொகையோ இல்லை. “மங்கையாராகப் பிறப்பதற்கே மாது-அவம்(பாவம்) செய்ய வேண்டுமம்மா” என்று இதைத்தான் பாடினாரோ கவிஞர்?
                   10ஆண்டுகளுக்கு முன், பொதிகைத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வாசுகி எடுத்த குறும்படம்தான் நினைவிலாடுகிறது. அதில் மனைவியின் அன்றாட வேலைப்பளுவைத் தெரியாத கணவன் ஒருவன் எலியாக மாறி அவன் வீட்டிலேயே கிடந்து தன் மனைவி படும் ஒருநாள் வேலைப்பளுவைப் பார்த்து மனம் நொந்து போவான்.... இதைப் பின்னர் நாங்கள் அறிவொளி இயக்கத்திற்காகத் தயாரித்த “கண்ணுக்குத் தெரியாத உழைப்பு” (Un Seen Toil) எனும் நாடகத்தில் பிரதிபலித்தோம். அப்போது நான் எழுதிய பாடல்தான் -
                   மனித ஜாதியில் பாதியானவள் மகாசக்தி பெண்ணே
                   விடியும் காலமிது அடிமையாக இனி வீழ்ந்து கிடப்பதென்னே” எனும் பாடல் இதில் வரும் இரண்டு வரிகள் எனக்கே மிகவும் பிடிக்கும் -
                    “புயல்காற்றினை மணல் வீட்டிலே பு’ட்டிவைத்ததாரு?
                     வானம் பெண்ணே பு’மி பெண்ணே வலிமையானவள் பெண்ணே”
                   இந்தப் பாவிகள் - அடுத்த பிறவியில்- (கட்டாயமாக) அந்தப் பெண்களாகப் பிறந்து அந்தக் கொடுமைகளை அனுபவிப்பதுதான் அதற்கான தண்டனை என்று எந்தக் கடவுளாவது, நீதிபதியாவது தண்டித்தால் அவர்களை நான் -கடவுளைக் கும்பிடாத நான்- கும்பிடுவேன்
                    சரி, கட்டுரை எழுதிய பாடுமில்லை. நாளை -29-12-2012-காலை அரசுஊழியர் சங்கப் பெண்கள் மாநாட்டில் “நீங்கள் யார்?” என்று தலைப்பில் கருத்தரங்கச் சிறப்புரை, மாலையில் தங்கம் மூர்த்தி கவிதைத் தொகுப்பு விழாவில் தொடக்கவுரை... பார்க்கலாம் ஏற்கெனவே எழுத வேண்டிய சில கட்டுரைக் குறிப்புகள் என்னை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருக்கும்போது, முன்னுரை கேட்டுவந்த இரண்டு நூல்கள் வெறித்துப் பார்க்கின்றன...
                    பார்க்கலாம் எதை எழுதுவதென்று அந்தந்தச் செய்திகள் தானே முக்கியத்துவம் தந்து நமக்கு உணர்த்துகின்றன... நாம் என்ன செய்ய?
                    ---------------------------------------- 

பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவை
புதுக்கோட்டை

தங்கம் மூர்த்தியின் கவிதைநூல்கள் வெளியீட்டுவிழா

நாள் 29-12-2012 சனிக்கிழமை ------ மாலை 6-00மணி
புதுக்கோட்டை    வர்த்தகர்கழக சில்வர் அரங்கம்


தலைமை
பேரா.முனைவர் சொ.சுப்பையா
ஆங்கிலத் துறைத் தலைவர்
அழகப்பா பல்கலைக்கழகம் காரைக்குடி

வரவேற்புரை
முனைவர் சி.அய்யாவு

தொடக்கவுரை
நா.முத்துநிலவன்

அறிமுகவுரை
திரைப்பட இயக்குநர்
ஜி.முரளிஅப்பாஸ்

பாராட்டுரை
சொல்லின் செல்வர்
ரா.சம்பத்குமார்

பாராட்டிக் கௌரவிக்கப் படுவோர்
இரா.கதிர்
அகரம் பதிப்பகம்-தஞ்சாவு’ர்
அழ.நாராயணன்
வள்ளல் அழகப்பர் பதிப்பகம் – காரைக்குடி
பேரா.எஸ்.நவநீதன்
எஸ்.ஸ்டீபன் சேகர்

“மழையின் கையெழுத்து”
(அய்க்கூ கவிதைகள் ஆங்கில மொழிபெயர்ப்புடன்)
வெளியிட்டு இலக்கியச் சிறப்புரையாற்றுபவர்
எழுத்தாளர்
எஸ்.ராமகிருஷ்ணன்

முதல்படி பெறுபவர்
அறமனச் செம்மல் சீனு.சின்னப்பா

“கவிதையில் நனைந்த காற்று”
(தங்கம் மூர்த்தியின் கவியரங்கக் கவிதைகள்)
வெளியிட்டு இலக்கியச் சிறப்புரையாற்றுபவர்
கலைமாமணி பேராசிரியர் 
முனைவர் கு.ஞானசம்பந்தன்
முதல்படி பெறுபவர்
“தாஜ்மஉறால்“ உறாஜி எம்.உபயதுல்லா

ஏற்புரை
தங்கம் மூர்த்தி

நன்றியுரை
பேரா.எஸ்.காசிநாதன்
தொகுப்புரை
பேரா.எம்.கருப்பையா
விழா ஒருங்கிணைப்பு
ஆர்.முத்துச்சாமி, எம்.எஸ்.ரவி, “மகாத்மா”ரவிச்சந்திரன்

அனைவரும் வருக! வருக! என 
அன்புடன் அழைக்கிறோம்.
------------------------------------ 

தொலைக்காட்சியில் எனது பட்டிமன்றப் பேச்சு - வீடியோ இணைப்பு.



அன்பினிய அனைவருக்கும் வணக்கம்.
                     கணினி வாங்கி நானே கற்றுக்கொண்டு, தட்டெழுதப் பழகி, இணைய வலைப் பக்கம் வந்து, படம் செருகப் பத்தாண்டுகள் ஆயின.      இதோ இப்போது அடுத்த கட்டம் 
                     என்னைச் சந்திக்கும்போது  “உங்கள் பட்டிமன்றக் குறுந்தட்டு“ இருக்கிறதா என்பதில்தான் பெரும்பாலும் முடியும்... எனது பதிலும், “இப்போதெல்லாம் யார் குறுந்தட்டு வாங்குகிறார்கள்? எல்லாம்தான் இணைய வலையில் “யு டியுபில் கிடைக்கிறதே“ என்பதாகவே இருக்கும்.
                    ஆனால், அதைப் பதிவிறக்கி எனது வலையில் இட இவ்வளவு நாள் பிடித்ததற்குக் காரணம் அந்தத் தொழில் நுட்பம் எனக்குப பிடிபடாததுதான்!
                    இதோ பிடிபட்டுவிட்டது... 14-12-2012 பொங்கலன்று, கலைஞர் தொலைக்காட்சியில் வெளியான, மதிப்பிற்குரிய நகைச்சுவைத் தென்றல் திண்டுக்கல் ஐ.லியோனி அவர்களின் பட்டிமன்றத்தில் அணித்தலைவராக நான் பேசிய பேச்சு... 


ஆசிரியர் தகுதித் தேர்வின் சமூகச் சிக்கல்

                     இன்று தமிழ்நாடு முழுவதும் நடந்துகொண்டிருக்கும் பள்ளி மாணவர்க்கான அரையாண்டுத் தேர்வுப் பணிகளை எனது பள்ளியின் துணை முதல்வர் எனும் பொறுப்பில் நான்  பார்த்துக் கொண்டிருக்கும் போது, பயிற்சிப் பணிக்கு -ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகளிலிருந்து -வந்திருக்கும் ”மாணவ ஆசிரியர்”களிடம் பேசிக்கொண்டிருந்தேன்.
                    இன்று பயிற்சி முடித்து விடை பெறும் ஆசிரிய-மாணவி ஒருவர், ஆசிரியர்கள் எல்லாருக்கும் இனிப்பு-காரம் கொடுத்துக் கொண்டு வந்தவர் எங்கள் முதல்வரிடம் கொடுத்துக்கொண்டே, “அப்படியே கையெழுத்தும் போட்டுவிடுங்க சார்” என்று சொல்லவும், வழக்கமாக இதற்கெல்லாம் கோபப் படும் அவர் இப்போது என்னவோ சிரித்துவிட்டு, “ஓ! அதுக்குத்தான் இந்த இனிப்பா?” என்று சிரித்துக் கொண்டே கேட்கவும்தான் அந்தப பெண்ணிற்குப் புரிந்தது போல... “சாரிசார் தெரியாம கேட்டுட்டேன்“ என்றார்.
                  “இப்படி அப்பாவியா இருக்கியேம்மா..” .என்று எனது கவலையைப் பகிர்நது கொண்டேன். நான் அவருக்கு வழிகாட்டி ஆசிரியர் என்பதால், ஒரு “அன்பளிப்பு“ பொட்டலத்தை நீட்டினார்.“கிப்ட்”ஆம்!
                    நான் சிரித்துக்கொண்டே “நன்றிம்மா“ நா இதெல்லாம் வாங்கிறதில்ல..” என மறுக்கவும் அவர் நம்புவதாகத் தெரியவில்லை...
“அட நிஜந்தாம்மா...”  என்று சொல்லி அவரை உட்காரச் சொல்லி அண்மையில் வந்திருக்கும் “டெட்” (ட்டி.இ.ட்டி) தேர்வு பற்றிச் சொல்லி இதன் சாராம்சம் என்னன்னு தெரியுமா எனக் கேட்க, அப்பாவியாய் அவர், தெரியலியே சார்... என்றார். உடன் அவருடன் பயிற்சிக்கு வந்திருக்கும் 7.8பேர் சேர்ந்து என் முகத்தைப் பார்க்கவும் எல்லாரிடமும் பேசினேன்.
                 பாவம் அவர்களுக்கு விஷயமே தெரியவில்லை என்று தெரிந்து கொண்டேன். அண்மையில் தமிழ்நாடு அரசு கொண்டுவந்திருக்கும் “ஆசிரியர் தகுதித் தேர்வு” வழியாக, பணியமர்த்தும் முறை மற்றும் “அக்ரிகேட் மார்க்” முறையில் தற்போது தனியார் ஆசிரியப் பயிற்சிக் கல்லூரிகளில் -பி.எட். மற்றும் “இடைநிலை ஆசிரியர் பயிற்சி“ படித்துக் கொண்டிருக்கும் யாருக்கும் இன்னும் பத்தாண்டு ஆனாலும் வேலை கிடைக்கப் போவதில்லை எனும் செய்தி,அவர்களுக்கே தெரியவில்லை என்பது எனக்கு அப்போதுதான் தெரிந்தது!
              அதிர்ந்து போனதுபோல அவர்கள் நிற்கவும் நிலையை விளக்கிச் சொன்னேன். “நல்ல மதிப்பெண் எடுத்திருந்தால் அரசு ஆசிரியப் பயிற்சி நிறுவனத்தில் சேர்நதிருப்பீர்கள், அது இல்லாததால், 50ஆயிரம் முதல் ஒருலட்சம் ரூபாய் வரை நன்கொடை கொடுத்துத் தனியார் நிறுவனங்களில் ப டிக்கிறீர்கள். ஆனால், தற்போது அரசு அறிவிப்பால், 12ஆம் வகுப்பு, இளநிலைப் பட்டப்படிப்பு மற்றும் ஆசிரியப்பயிற்சிக்கான மதிப்பெண்களையும் சேர்த்துத்தான் டி.இ.டி தேர்வுக்குப் பின் (அக்ரிகேட்) மதிப்பெண் போடுகிறார்கள் எனவே நீங்கள் என்ன செய்வதாக இருக்கிறீர்கள்?“ என்று கேட்ட போது உண்மையிலேயே அதிர்ச்சியடைந்தவர்களாக நின்றுவிட்டார்கள்...
            மிகச் சிறந்த மதிப்பெண் எடுத்த - மிகச்சிறந்த அறிவுக்கூர்மையுள்ள ஆசிரியர்கள் தமிழ்நாட்டு மாணவர்ககுக் கிடைப்பது நல்லதுதான். ஆனால், இவர்களைப் போல மதிப்பெண் இல்லாமல் (1200க்கு 500, 600மதிப்பெண் எடுத்து)  அதனாலேயே தனியாரிடம் பணம் கொட்டித் தற்போது -2012-2013 கல்வியாண்டில் ஆசிரியப் பயிற்சியைப் படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களின் எதிர்காலம் என்னவாகும்?  இவர்கள் “டெட்” தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்தாலும் “அக்ரிகேட்” மதிப்பெண் கிடைக்காது!  இதேபோல, 10-15ஆண்டுகளுக்கு  முன் கல்லூரிகளில் படித்து நல்ல மதிப்பெண் எடுத்தவர்களுக்கும் “டெட்” தேர்வில் இளைஞர்களோடு போட்டி போட முடியாமல் தேர்வாக முடியாது!  அவர்களின் நிகழ்காலமே கேள்விக்குறியாக இருக்கும்போது எதிர்காலம் என்னவாகும்?
           தகுதி திறமை இளமை எல்லாம் சரிதான், லட்சக்கணக்கானவர்களின் வாழ்க்கை, கனவு என்னவாகும் என்னும் கேள்வியை அவ்வளவு எளிதாக ஒதுக்கிவிட முடியாது என்றே தோன்றுகிறது. இது ஒரு சமூகப் பிரச்சினை என்பதை ஏன் யாரும் ?புரிந்துகொள்ள மறுக்கிறார்கள்? இவர்களின் இந்த நியாயத்தைப் புரிந்து கொண்டு வழக்கு மன்றம் செல்ல வாய்ப்பிருப்பதாகவும், வழக்கு மன்றம் நியாயமாக சிந்தித்தால் இவர்களுக்கான “அக்ரிகேட்” மதிப்பெண் மாற வாய்ப்பிருப்பதாகவும்தான் எனக்குத் தோன்றுகிறது.
          தகுதி திறமை என சமூகப் பிரச்சினைகளைச் சரியாகப் புரிந்துகொள்ளாத தலைவர்களைத்தான் தந்தை பெரியார் சிந்தனைச் சாட்டை கொண்டு சொடுக்கி எடுத்து அண்ணல் அம்பேத்கர் கொண்டுவந்த அரசியல் சட்டத்தை முதன் முதலாகத் திருத்தம் செய்ய வைத்த வரலாறு எல்லாருக்குமே மறந்துவிட்டதா? இப்போது “புதிய ரிசர்வேஷன்“ மறைமுகமாக நடைமுறையாகிக் கொண்டிருக்கிறதா?  கொஞ்சம் யோசியுங்கள் புரியும்!
          மாணவர்கள் நன்றாக இருக்க ஆசிரியர்களும் நன்றாக இருக்க வேண்டுமல்லவா? இதில் அவசரப் படுவது இருவருக்குமே கேடாக முடிந்துவிடக் கூடாதுஅல்லவா?  என்ன நாஞ்சொல்றது சரிதானுங்களா?
----------------------------------------------------------------------------------------------------

மானா மதுரை - பாரதிவிழாக் கருத்தரங்கில் நா.மு.சிறப்புரை

                     சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் 15-12-2012 அன்று  நடந்த பாரதிவிழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டேன். (இது இந்த ஆண்டு பாரதி பிறந்தநாள்  11-12-12 தொடங்கி நான் தொடர்ந்து கலந்து கொள்ளும் ஐந்தாவது நாள் விழா).
                      நாம் சும்மா இருக்க நினைத்தாலும் பாரதி நம்மை விடமாட்டேன் என்கிறானே! (நன்றி- “மரம் சும்மா இருக்க நினைத்தாலும் காற்று அதை விடுவதில்லை” -சீனப புரட்சியின் நாயகன் மாஓ-சேதுங்.)
                       விழா மேடையில் திரைப்பட-குறும்பட இயக்குநரும, சென்னை இலயோலா கல்லூரியின் மதிப்புமிகு பேராசிரியரும் நாடக இயக்குநருமான பேரா.காளீஸ்வரன், (பாரதியும் பெரியாரும் என்றொரு அருமையான உரையை வழங்கினார்). தமுஎகச சிவகங்கை மாவட்டச் செயலாளர் எழுத்தாளர் ஜீவசிந்தன், மானாமதுரைக் கிளைச் செயலாளர் பாரதி சத்யா.

கீரமங்கலம் JC விழாவில் நா.மு. சிறப்புரை

                      கடந்த 14-12-2012 அன்று, புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் “இளைய வணிகர் சங்கம்” (ஜே.சி.) புதிய நிர்வாகிகள் பதவியேற்பு மற்றும் அங்குள்ள அரசுப் பள்ளிகளில் கடந்த கல்வியாண்டில் 10,12ஆம் வகுப்புகளில் முதலிடம் பெற்ற மாணவர்க்குப் பரிசளிப்பு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றியபோது எடுத்த படம். அருகில் மண்டலத் தலைவர் திரு அருண், மண்டல நிர்வாகிகள் திரு நல்லதம்பி, திரு ரெங்கராஜ், தலைவராகப் பொறுப்பேற்ற திரு வீரையா, முன்னாள் தலைவர் திரு ஜோதிராஜன், பேரூராட்சித் தலைவர் மற்றும் திருமதி மாலதி வீரையா முதலானோர்...(படம் உதவி-கீரமங்கலம் ஜே.சி.நண்பர்கள்) 

மாணவர் படிக்க நூல்பட்டியலும், பார்க்க தமிழ்ப்படப் பட்டியலும் தயாரிப்போம் வாருங்கள்...!

இன்று மோக முள் -   படம் பார்த்தீர்களா? 
                             இன்று (17-12-2012) காலையிலேயே “கே.டிவி.” யில் “மோகமுள்” படம் போட்டிருந்தார்கள்... மீண்டும் பார்க்க வேண்டும் என்று நினைத்த படம், இருந்து ரசித்துப்  பார்க்க முடியாத நேரத்தில்.... கிளம்பிக் கொண்டே குளிக்கவும், உடைமாற்றவுமான இடைநேரத்தில், (கணினி ப்பொறியியல் படித்துக்கொண்டு, விடுமுறைக்கு வந்திருந்த) என் மகளிடம் அந்தக் கதைபற்றிச் சொல்லிக் கொண்டே வந்தேன்.. அவளும் கேட்டுக்கொண்டே, பார்த்துக்கொண்டே...  விளம்பர நேரத்தில் மற்ற அலைவரிசையில் என்ன நடக்கிறது என்பதிலும் கவனமாக இருந்தாள்...
                            என்ன வலிமையான எழுத்து!... தி.ஜா.வின் எழுத்து! அசந்தால் நம்மை எங்கேயோ கொண்டுபோய் விட்டுவிடும் ஆபத்தான எழுத்து!
                            புதுமைப் பித்தனை - சமூக அங்கத எழுத்தாளன் எனலாம்,
                            கு.ப.ரா.வை - பெண்மனச் சித்தன் எனலாம்,
                            ஜெயகாந்தனை - அடித்துப் பெய்த கதைமழை எனலாம்,                          
                            கந்தர்வனை - அழகான கதைசொல்லி எனலாம்,
                            மேலாண்மையை - கிராமத்து நிழல் எனலாம், -- எனில்,
தி.ஜா.வை “ஆபத்தான கதைசொல்லி“ எனலாம் என்பதே எனது கருத்து.

              பள்ளியில் படித்த போது, பொன்னியின் செல்வனையும், யவனராணியையும் ஒளித்து வைத்துப் படித்ததும், கல்லூரிக்கு வந்தபின் மு.வ.,நா.பா.,வுக்குப் பிறகு தி.ஜா.வை ரசித்ததும் பின்னர் ராகுல்ஜி வந்து எல்லாவற்றையும் புரட்டிப் போட, புது்மைப் பித்தனோடும் பாரதி-பாரதிதாசன்-பிறகு புதுக்கவிதைகள் என வந்ததும் நினைவுக்கு வந்தது. வெறிபிடித்துப் படித்துத் திரிந்து நூலகம் நூலகமாக அலைந்து படித்தும், ஊர்ஊராக அலைந்து இலக்கியக் கூட்டம் கேட்டும் திரிந்த  காலம்... நம்மை இப்போதும் ஏங்க வைக்கும் கல்லூரிக்காலம்!
                          இப்போதெல்லாம் பள்ளி கல்லூரிகளில் படிக்கும் பிள்ளைகளை நாமே மற்ற புத்தகங்களைப படிக்க விடுவதில்லையே! மதிப்பெண் போய்விடும் என்று பெற்றோர்களைப் போலவே ஆசிரியர்களும் கவலைப் பட வேண்டியிருக்கிறதே! ( தப்பித் தவறிப் படிப்பவர்களை வேலைக்குப் போகும் படலமும், வீட்டு-நாட்டுச் சூழலும்  “சரி“பண்ணி விடுகிறதே!)
                         பள்ளி-கல்லூரி மாணவர்கள் படிக்கவேண்டிய சிறுகதைகள், கவிதை-கட்டுரைத் தொகுப்புகளுடன், பார்க்க வேண்டிய திரைப்படங்கள் என்று ஒரு பட்டியல் தயாரித்தால் என்ன? 
                 மேல்நிலைப் பள்ளி மாணவர் பார்க்கவேண்டிய தமிழ்ப்படப்பட்டியல் -
                            1.பராசக்தி,
                            2.நாடோடி மன்னன்
                            3.அவள் ஒரு தொடர்கதை
                            4.வேதம் புதிது
                            5.வீடு
                            6.சில நேரங்களில் சில மனிதர்கள்.
                            6.மகாநதி
                            7.பம்பாய்
                            8.மொழி
                            9.பேராண்மை
                            10..வழக்கு எண்18/9 - இது எனது பட்டியல்
 இதே போல பள்ளி மாணவர்க்குத் தனியாகவும் கல்லூரி மாணவர்க்குத் தனியாகவும் படிக்கவேண்டிய புத்தகப் பட்டியலையும் பார்க்க வேண்டிய குறும்படங்களின் பட்டியலையும் தயாரிக்கலாமா? வாருங்கள்.. தயாரிப்போம்.
இது பற்றிய நண்பர்களின் கருத்தறிய ஆவலாக இருக்கிறேன்.
க.நா.சு.மட்டும்தான் பட்டியல் போடவேண்டுமா?  நாமும் போடலாம்தானே?
                ----------------------------------------------------------------------------