“தமிழ் இனிது” - இரு குறுங்கட்டுரைகள் -7,8.

 தமிழ்இனிது -(8)- 25-7-2023 

அக நக முக நகபாடல் உச்சரிப்பு சரியா

( நன்றி : இந்து தமிழ் நாளிதழ் - 25-7-2023 செவ்வாய்) 

--------------------------------------
---------------------------------------

      பொன்னியின் செல்வன்-2 பாடல் இது. குடை பிடித்திடும் நெடுமரச் செறிவே, பனி உதிர்த்திடும் சிறுமலர்த் துளியேஇளங்கோ கிருஷ்ணன் பாடல் அழகு! ஆனால், எழுத்தை, பாடல் முழுவதும் ga என்றே பாடுகிறார் சக்திஸ்ரீ கோபாலன். mugil, magal, punnagai இவ்வாறு!  “இப்பாடலின் க உச்சரிப்பு சரியா” என்று  பலரும் கேட்கிறார்கள்..

புகழ்பெற்ற,முகத்தில் முகம் பார்க்கலாம்” (படம்-தங்கப்பதுமை-1959), “நறுமுகையே” (படம்-இருவர்-1997) போன்றவற்றில் இல்லாத (ga) ஒலி, இதில் எப்படி வந்தது? (‘தமிங்கில’ மொழி பெயர்ப்பை விட்டு விடுவோம்!)

இந்தியில் Khanaஉணவு, Ghanaபாடல்!  தெலுங்கில் Mugguகோலம் Mukkuமூக்கு! என ஒலி மாறினால் பொருள் மாறுவதே அதிகம். தமிழ்ச்சொல், உச்சரிப்பு வேறுபட்டும் பொருள் மாறுவதில்லை. அதனால், “அகநக முகநக” உச்சரிப்பு மாறினாலும் பொருள் மாறவில்லை. எனினும் கலை சொல்லித் தரும் ஆசாரம்தானே கலாசாரமாகும்?  (பாவம், பாவம் போலும் சில சொற்களில் வடமொழி, ஆங்கிலத் தாக்கமே இங்கு தமிழ் உச்சரிப்பைத் தாக்குகிறது! இதில்தான் கவனம் தேவை)

எழுத்து -

gha என ஒலிப்பதுங்கம், (ங்க-இன எழுத்தை அடுத்து),

ha என ஒலிப்பதுகாகம், (நெடிலை அடுத்து)

kha என ஒலிப்பதுக்கம் (அதே ஒற்றை அடுத்து)

ka என ஒலிப்பதுகலை, காலை, அகம், முகம் (சொல்லின் முதலில் வரும்போது அழுத்தமாகவும், இடையில் வரும்போது நெகிழ்வோடும்முகத்தில் முகம் பார்க்கலாம் பாடல் போல)  

அடுத்த எழுத்தால் ஒலி மாறுவது சரியா எனில், தாய்க்கு மகனாக இருப்பவனே, தன் மகளுக்குத் தந்தை, மாப்பிள்ளைக்கு மாமா, இணையருக்கு கணவர் எனில், ஒருவருக்கே இத்தனை பெயரா? என்று கேட்பதில்லையே! இதுதான் வாழ்வியல் முறை!

தியாகம், ரட்சகன் போல வடசொல்லைத் தமிழில் சொல்லும் போது, எழுத்தை Ga என்று ஒலிப்பதே தவறான வழக்கு. அந்த பாதிப்பில் தமிழ்ச் சொல்லையும் க (ga) என்பது தமிழ்மரபு அல்லவே! கிரந்த எழுத்து உச்சரிப்புப் பற்றித் தனியாக விரிவாகப் பேச வேண்டும்.    

சிறப்பு-அழுத்தம் தந்து, ஷிரப்பாக” சொல்வது சிரிப்பாகிவிடும்!

உடல்சூட்டை, காய்ச்சல் சுரம் (சுர்-வெப்பம்) என்று சரியாகச் சொல்வர் படிக்காதவர்! அதை ஜூரம் என்றும், சீன நாட்டிலிருந்து வந்த சீனியைக் கூட ஜீனி என்றும் படித்தவர்கள் சொல்கிறோம்!

 (ka) எழுத்து, அடி நா, அடி அண்ணத்தைப் பொருந்தஉருவாகும் என்கிறது தொல்காப்பியம் (எழுத்து-பிறப்பியல்-89) சரியான உச்சரிப்பை, பள்ளி ஆசிரியரை அடுத்து, காட்சி ஊடகமே கற்றுத்தர முடியும்! இன்றைய காட்சி ஊடகர், இதில் கவனமாக இருந்தால் நல்லது.

வாருங்கள், “அகநக முகநக” அழகாகப் பாடுவோம்! தமிழ் இனிது!


( நன்றி : இந்து தமிழ் நாளிதழ் - 18-7-2023 செவ்வாய்)

தமிழ் இனிது –(7)–

தமிழில் எழுதிப் பழகுவோம்!

தொலைக்காட்சி விளம்பரங்களின் கீழே, ‘சித்தரிக்கப்பட்டதுஎன்று ஒரு வரியைப் பார்க்கலாம். சித்திரம்சித்திரிக்கப்படும்என்பதே சரியானது.  ‘கத்திரிக்கோல்’ வேறு, ‘கத்தரிக்காய்’ வேறு தானே? அகராதிகள் இவ்விரண்டு சொற்களையும் இரண்டு மாதிரியும் சொல்கின்றன! ஒருவேளை, இந்தக் குழப்பத்தில்தான்  அந்தச் சொல் சித்தரிக்க’ப் பட்டிருக்குமோ!?

     ‘வணக்கத்தை முதற்கண்தெரிவிக்க வேண்டியவர், ‘முதற்கண் வணக்கம்’ ‘இரண்டாம்கண் வணக்கம்’(?) என்றால், மூன்றாம் கண் திறக்குமா? ‘முயல்கிறேன்என்பதைமுயற்சிக்கிறேன்என்று பிழையில் சிக்’குவது ஏன்?!  

முக்காலமும் நடக்காது என்பதைச்சொல்ல வருபவர், ‘ஒருகால்என்பதை, ‘ஒருக்காலும் நடக்காதுஎன்கிறார்! மறு கால் மட்டும் நடக்குமோ?

பிழை திருத்தம்செய்பவரே, ‘பிழைத் திருத்தம்என்று பிழை செய்தால் அவரைத்தான் திருத்த வேண்டும். இது ஒரு சிறுகுறைதான், ஆனால், திருத்தாமல் விட்டால் அதுவேகுற்றம்ஆகிவிடும்! ஏனெனில், தெரியாமல் செய்வதுதவறு’, தெரிந்தே செய்வதுதான்தப்பு’!

சிகப்பா? சிவப்பா?வறுமையின் நிறம் சிவப்பு’(1980), ‘சிவப்பு மல்லி’(1981) திரைப்படங்கள் வந்த பின்னும், ‘நான் சிகப்பு மனிதன்’(1985) என்றொரு படம் வந்து, அதிக கவனம் பெற்றது! ‘கறுப்பும் சிவப்பும் வெகுளிப் பொருள, நிறத்துரு உணர்த்தற்கும் உரிய என்ப’’ என்னும் (தொல்காப்பியம்-855) இலக்கணத்தை விடவும், கல்வித் துறையை விடவும், ஊடகங்களுக்கே பரவு திறன் அதிகம் என்பதால் ஊடகங்களின் பொறுப்புக் கூடுகிறது அல்லவா?

பத்திரிகை’ ‘பத்திரிகையாளர்களை,பத்திரிக்கை’ ‘பத்திரிக்கையாளர்’ என்றே எழுதுகிறார்கள்! நல்ல தமிழில்செய்தித்தாள்’, ‘செய்தியாளர்என்பது இன்னும் சிறப்பல்லவா? ‘கல்யாணப் பத்திரிக்கைஎன்றால், ‘திருமண அழைப்பிதழ்என்பது இன்னும் அழகல்லவா!

பாராளுமன்றமா?  நாடாளுமன்றமா?

பாராளுமன்றம்பழைய வழக்கு! ‘உலகை ஆள்வதுஎன்று பொருள்! நாடாள்வது நாடாளுமன்றம்தானே? சொல்லின் பொருள் அறிவதும், அது சரியெனில் ஏற்பதும் தானே சரி? ‘ப்ளாட்ஃபாம்’ ‘நடைமேடைஆனதும், ‘சீரியல்’ ‘நெடுந்தொடர்ஆனதும் அப்படி வந்த அழகு தமிழ்தான்!

நம்மைச் சுழற்றியடிக்கும் காற்று, நம் தலையில் குப்பையைக் கொட்டி விட்டுப் போவது இயல்பு! பிறகு நம்மை நாமே தூய்மை செய்து கொள்கிறோம் அல்லவா? அதுபோல, அரசியல், பொருளியல் பண்பாட்டு, வாழ்க்கை மாற்றம் காரணமாக நம் கண், காதுகளில் தானே வந்து விழும் தவறான தமிழ்ச் சொற்களைத் திருத்திக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.

தவறாகவே எழுதினாலும் தவறில்லை! ‘Tq’, ‘Nandri’ Gd-n8  என்று தமிங்கில’ எழுத்தில் எழுதுவதை விடவும், தமிழில் முயன்று, தவறாக எழுதி,  திருத்திக் கொள்வது நல்லது! புரிந்து எழுதினால் தவறு நேர வாய்ப்பில்லை! தீர்ப்புகளே திருத்தப் படும் போது, தவறுகளைத் திருத்த முடியாதா என்ன?

கணினித் தமிழ்ப் பிழைகளைத் திருத்த, தமிழ்நாடு அரசு விருது பெற்ற நீச்சல்காரனின் இணையத்தளம் (http://www.neechalkaran.com/) பேருதவி செய்கிறது.

எதையுமேபதட்டத்துடன் செய்வது தவறு! பதறுதல்-‘பதற்றம்என்பதே சரி! அதற்காகப் பதற்றமாகவே இருக்கவும் தேவையில்லை! ஏனெனில் தமிழ், படிக்கப் படிக்க எளிது! பருகப் பருக இனிது!  

--------------------------------------------------------------------------------------------- 


 

30 கருத்துகள்:

  1. காட்சி ஊடக உச்சரிப்புகளே இன்றைய இளைஞர்களை வெகுவாய் கவர்கின்றன.
    காட்சி ஊடகங்களின் கவனமாகத்தான் இருக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நா.முத்துநிலவன்செவ்வாய், ஜூலை 25, 2023

      திரை ஊடகர் பலரும் சரியாகவே இருக்கிறார்கள். சௌராட்டிர மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட டி.எம்.எஸ்.அய்யா, தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட பி.சுசிலாம்மா போலும் பலர்தான் தமிழ்நாட்டில் இரண்டு தலைமுறைக்கு நல்ல தமிழ் உச்சரிப்பைக் கற்றுத் தந்தனர் என்பதை மறக்கமுடியாது, மறக்கவும் கூடாது.

      நீக்கு
  2. கிராமத்தில் பல் இல்லாத முதியவர்கள் கூட குழம்பில் இருக்கும் முருங்கைக்காயை திங்க வேண்டுமென்றால் பல் ஈறுகளில் அதக்கி மென்று உண்ணுகிறார்கள். ஆனால் நாகரீகம் என்ற பெயரில் சிலர் முருங்கைக்காயை சப்பி தின்பதையும் பற்களில் கீறி தின்பதையும் நம்மால் பார்க்க முடியும். முருங்கைக்காயை மென்று தின்பதில்தான் சுவையும் முழுமையான சத்தும் உடலுக்கு கிடைக்கிறது.
    அதுபோலத்தான் சொற்களை உச்சரிக்கும் போதும் அதன் சிறப்பு மாறாமல் நாம் உச்சரிக்க வேண்டும். நவ நாகரிக உலகில் சிலர் ஷ ,ஹ, ஸ போன்ற வடமொழிச் சொற்களின் உச்சரிப்பை அனைத்து சொற்களிலுமே கலந்து உச்சரிப்பதை நாகரீகமாக கருதுகிறார்கள். அதன் தாக்கம்தான் பொன்னியின் செல்வன் - 2 படத்தில் உச்சரிக்கப்பட்ட அந்த சொல்லாடல்.
    ஐயா அவர்களின் தமிழ் இனிது கட்டுரை நல்லதொரு மாற்றத்தை தமிழின் மரபினை வலுப்படுத்தும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நா.முத்துநிலவன்செவ்வாய், ஜூலை 25, 2023

      நன்றி கவிஞர் சோலச்சி நன்றி

      நீக்கு
  3. பதில்கள்
    1. நா.முத்துநிலவன்செவ்வாய், ஜூலை 25, 2023

      நன்றி கவிஞரே. உங்கள் முகநூலில் பகிர்ந்துள்ளதைப் பார்த்தேன். மிகவும் மகிழ்ச்சி, நன்றி

      நீக்கு
  4. இனியாவது பாடல்களைப் பாடும் இசைக்கலைஞர்கள் கவனிப்பார்கள் என்று நம்புவோம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நா.முத்துநிலவன்புதன், ஆகஸ்ட் 02, 2023

      நம்புவோம். (இன்னுமா ?) எனும் மனக்குரல் கேட்பது உங்களுக்குக் கேட்கிறதா பு.மா.?

      நீக்கு
  5. மிகச்சிறப்பு ஐயா..காலம் கருதிய வலியுறுத்தல்..வழிகாட்டல்..!!சற்றே கவனக்குறைவாக இருந்தாலும் தமிழைத் தடம்புரள வைத்து விடுவார்கள்.

    பதிலளிநீக்கு
  6. சரியாக சொன்னீங்க ஐயா.. காட்சி ஊடகம் தற்போது தமிழ் பேசுவதில்லை! முழுவதும் ஆங்கிலம் இல்லையெனில் தமிங்கலம்.. அது போக பாடகியும் இது போன்தொரு மொழி பேசுபவர்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நா.முத்துநிலவன்புதன், ஆகஸ்ட் 02, 2023

      பாடலை ஆங்கில வரிகளிலேயே இணையத்தில் ஏற்றும் பழக்கமும் இதற்கு ஒரு காரணம் Aga Naga Muga Naga என்றுதான் அனைத்து வரிகளும் எழுதப்பட்டுள்ளன. இதை மாற்றினால் அடுத்த மாற்றம் நிகழ வாய்ப்புண்டு

      நீக்கு
  7. பெயரில்லாபுதன், ஜூலை 26, 2023

    நல்ல கருத்தை தந்தமைக்கு நன்றி ஐயா. வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  8. நெ.இரா.சந்திரன்,பொன்னமராவதிபுதன், ஜூலை 26, 2023

    மிகச்சிறப்பான ,ஆழமான கருத்துடைய ஆய்வுக்கட்டுரையை தந்திருக்கிறீர்கள் காட்சி ஊடகங்களில் தமிழ் எழுத்து உச்சரிப்புகள் தடம்மாறிப்பயணிக்கும் இந்த நேரத்தில் சரியான கட்டுரையை தந்துள்ளீர்கள் ,இதை தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர்கள் ,மற்றும் திரைப்பட பின்னணி குரல் கொடுப்போர் எல்லாம் வாசிக்க வேண்டும் தங்களின் இந்த சீரிய முயற்சிக்கு வாழ்த்துகள் ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நா.முத்துநிலவன்புதன், ஆகஸ்ட் 02, 2023

      அவர்கள் எல்லாரும் கவனிப்பார்கள் என்ற கவனத்தில் நான் எழுதவில்லை. எழுத வேண்டிய கவலை இருந்தது. எழுதினேன் தங்கள் கருத்துக்கு எனது நன்றி தோழரே.வணக்கம்

      நீக்கு
  9. நன்றி அய்யா ... நிச்சயமாக கவனம் கொள்வோம் ❤🙏

    பதிலளிநீக்கு
  10. வாசிக்கும் போது நீங்கள் என்னிடம் பேசுவது போலவே இருந்தது...

    பதிலளிநீக்கு
  11. மருத்துவர். ம. மணிமலர்புதன், ஜூலை 26, 2023

    மிகச்சிறப்பு. தமிழ் உச்சரிப்பே தனி அழகு. ஆனால் இவ்வாறு பிறமொழி பாடகர்கள் தமிங்கிலத்தில் பாடும் பொழுது அந்த வார்த்தையும் சில நேரங்களில் பொரூளும் மாறுபடுகிறது. தாங்கள் சொல்லியிருப்பது போல இந்த பாடலில் கவனித்து மறுமுறையும் கேட்டேன். நல்லதொரு உதாரணம். அருமையான விளக்கம். இனியாவது சரியான உச்சரிப்பில் பாடுவார்கள் என நம்புவோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நா.முத்துநிலவன்புதன், ஆகஸ்ட் 02, 2023

      தமிழ்த்திரை உலகில் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டிராத டிஎம்எஸ், சுசிலாம்மா, எஸ்பிபி.,முதலானவர்களால் மிகவும் சிறப்பான பாடல்கள் மிகவும் சரியான உச்சரிப்புடன் வந்திருக்கின்றன. இதில் தாய்மொழிப் பற்றைவிட, பாடும் மொழி சரியாக இருக்க வேண்டும் என்று அவர்கள் எடுத்துக்கொள்ளும் ”தொழில் சிறப்பு”தான் கவனம் பெறுவதாக நான் நினைக்கிறேன். நன்றி சகோதரி

      நீக்கு
  12. மணிகண்டன்புதன், ஜூலை 26, 2023

    வணக்கம், மிகவும் அருமையாக இருந்தது விளக்கம், திரையுலகில் தமிழ் வார்த்தைகளின் அர்த்தம் வேறு கோணத்தில் சென்று கொண்டுள்ளது. தமிழ் வாழ்க

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நா.முத்துநிலவன்புதன், ஆகஸ்ட் 02, 2023

      திரையுலகில் தமிழ்ப்பயிற்சியும் முயற்சியும் உள்ளவர்கள் இருக்கிறார்கள். அதனால்தான் இன்னும் சரியான உச்சரிப்புடன் பாடல்கள் வந்துகொண்டு இருக்கின்றன. சிலநேரம் கவனக் குறை என்றே நினைக்கிறேன். அதைச் சுட்டிக்காட்ட வேண்டியது நம் கடமை அல்லவா?

      நீக்கு
  13. நன்று தோழர்.மகிழ்ச்சி.தொடரட்டு தொடர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நா.முத்துநிலவன்புதன், ஆகஸ்ட் 02, 2023

      நன்றி தோழரே. நீங்களும் தொடருங்கள்

      நீக்கு
  14. சிறப்பு. தமிழ் பேச்சு எங்கள் மூச்சு என்று சொல்லிக்கொண்டே தமிழில் உச்சரிப்பில் பிழைகளை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. சிறந்த பதிவு. வாசிக்க வேண்டுமே......

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நா.முத்துநிலவன்புதன், ஆகஸ்ட் 02, 2023

      நன்றி. தொடருங்கள், தொடர்வோம்

      நீக்கு
  15. அருமையான கருத்துகள்.. எளிதில் புரியவைக்கும் தெள்ளிய தீந்தமிழ் நடை.. தொடருங்கள் ஐயா..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நா.முத்துநிலவன்புதன், ஆகஸ்ட் 02, 2023

      நன்றியும் வணக்கமும் அய்யா

      நீக்கு
  16. தன்னிகரில்லாத் தமிழின் ஆழமும், அடர்த்தியும் தான் எத்தனை வியக்கத்தக்கது என்று இன்னும் ஆச்சர்யப்பட வைக்கிறது தங்களின் இந்தப் பயனுள்ள பதிவு அய்யா. நாள்தோறும் வாசித்தும், எழுதியும் கூட எத்தனைப் பிழைகளை செய்திருக்கிறோம் என்று தற்போது வருந்துவதோடு , இந்தப் பின்னூட்டம் கூடப் பிழையுடன் எழுதி விடுவோமோ என்னும் சிறு அச்சமும் வருகிறது . தங்களின் பணி மிகச் சிறப்பு அய்யா. நான் கிலோனா மணிமொழி, பட்டிமன்றப் பேச்சாளர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நா.முத்துநிலவன்புதன், ஆகஸ்ட் 02, 2023

      இந்த அச்சம் எனக்கும் உண்டு சகோதரி. இயலும்வரை பிழையின்றி எழுதவும் பேசவும் வேண்டும் எனும் கவனமின்றியே பலரும் எழுதுகிறார்கள், பேசுகிறார்கள்! இந்த அச்சம் இருக்கும் நம்மைப்போலும் வெகுசிலர்தான் தமிழை மட்டுமல்ல நம்மையும் வளர்க்க முயல்கிறார்கள் எனும் நம்பிக்கையோடு தொடர்வோம். நன்றி

      நீக்கு
  17. "சென்னை" என்பதை "ச்சென்னை" என்றுதானே பெரும்பாலோர் கூறுகிறார்கள். முதற்கண் வணக்கம்...அதிகம் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு