இந்து தமிழ் - நாளிதழ் தொடர் - தமிழ் இனிது 5 மற்றும் 4

தமிழ் இனிது –(5) 

பெண் ஆசிரியரா?  ஆசிரியையா? 

 

             (நன்றி - இந்து தமிழ் நாளிதழ்  (04-7-2023 செவ்வாய்) 

      த்தாம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளை உயர்நிலைப் பள்ளி என்று சரியாகச் சொல்லி விடுகிறோம். அதற்குமேல் 11,12 வகுப்புகள் உள்ள பள்ளியை, மேநிலைப் பள்ளி என்று எழுதுவதா? மேனிலைப் பள்ளி என்று எழுதுவதா? என்று சிலருக்குச் சந்தேகம் வந்துவிடுகிறது.

      இதை முதலில் தெளிவு படுத்திக் கொள்ளலாம் -

 மேல்நிலைப் பள்ளி என்று எழுதுவதே எல்லார்க்கும் புரியக்கூடியது. இலக்கண வழியில்சேர்த்து- எழுத வேண்டுமானால் மேனிலைப் பள்ளி என்று எழுதலாம். மேல் + நிலை = மேல்நிலை = மேனிலை என்பதே இலக்கண மரபு.  மேநிலை என்பது தவறான வழக்கு. இப்படியே முதல் + நிலைக் காவலர் என்பதை, முதனிலைக் காவலர் என்பதே சரியானது. அல்லது, முதல்நிலைக் காவலர் என்பதே எளிதும் தெளிவானதும் ஆகும்

      சிரியர் - ஆண் பெண் இருவர்க்கும் பொதுவான பலர்பால் சொல். அதுவும், மாதா பிதா குரு எனும் வரிசையில் மரியாதைக்குரிய சொல். ஒன்றாம் வகுப்பிலிருந்து பன்னிரண்டாம் வகுப்பு வரை பாடம் நடத்தும் அனைவருக்கும் பொதுவான சொல். (கல்லூரி ஆசிரியரைப் பிரித்து அறிவதற்காகவே பேராசிரியர் என்கிறோம்) இதற்குரிய ஆங்கிலச் சொல் Teacher என்பதும் ஆண்,பெண் இருவர்க்கும் பொதுவான- பலர்பால் சொல்தான். ஆனால், பெண் ஆசிரியர் சிலர், ஆசிரியர் என்பதை ஆண்பாலாக நினைத்துக் கொண்டு, தம்மை ஆசிரியை” / “தலைமை ஆசிரியைஎன்று சொல்லிக் கொள்கிறார்கள், எழுதுகிறார்கள், முத்திரையும் (ரப்பர் ஸ்டாம்ப்) செய்து பயன்படுத்துகிறார்கள்! இது தவறு. ஆண் ஆசிரியரை ஆசிரியன்என்று யாரும் சொல்வதில்லை. அப்படிச் சொன்னால், ஒருவேளை அதற்குரிய பெண்பால் சொல்லாகஆசிரியைஎன்பதைச் சொல்லலாம். ஆசிரியர் எனும் சொல்லே மரியாதைக்குரிய பலர்பாலாக இருக்கும் போது, ஆசிரியை என்று எழுதுவது தம்மைத் தாமே தாழ்த்துவதே ஆகும். நல்ல வேளையாக, அரசு ஊழியரில் பெண் ஊழியர் யாரும் தம்மைஊழியைஎன்பதில்லை!

      ஆண்கள் மட்டுமே தலைவர்களாக இருந்த காலத்தில், “தலைவன்எனும் சொல் பெருவழக்காக இருந்தது. பெண்கள் தலைமைப் பொறுப்பில்  அமர்ந்த போது, “தலைவர்என்பது பொதுவான மரியாதைக்குரிய பலர்பால் சொல்லானது. இதே காலத்தில் ChairMan எனும் ஆங்கிலச் சொல், பெண்கள் தலைமைப் பொறுப்புக்கு வந்த போது, ChairWoman என்றாகி, பிறகு அதுவும் மாறி, ChairPerson என பலர்பாலானது!!

      பதவிகளே தமக்குரிய காலமாற்றத்தை உணர்ந்து, தமது மரியாதைச் சொல்லைத் தேர்வு செய்து கொள்ளும் போது, பெண்கள் தமது பெருமை உணர்ந்து, உரிய சொற்களை எடுத்துக் கொள்ள வேண்டும் அல்லவா? 

---------------------------------------------------------------------  

இனி,

கடந்த வாரம் (27-6-2023 அன்று) வந்த கட்டுரையைப் 

படிக்காத நண்பர்களுக்காக : 

தமிழ் இனிது (4) 

60வது, 60ஆவது - எது சரி? (60ம்?, 60ஆம்?) 

     அறுபதாம் கலியாணம்” தமிழ்ப் பண்பாட்டில் பெருமைக்குரிய நிகழ்வாக மதிக்கப்படுகிறதுசரிஅதை “60ம் கல்யாணம்” “60தாம் கல்யாணம்” என்று போடும்போதுதான் மகன்மகள்,  பேரப்பிள்ளை, உறவுகளால்   வராத சிக்கல்,   இந்தத்   தொடரால்  வந்துவிடுகிறது

“60ம் கல்யாணம்”, “60தாம் கல்யாணம்”   என்பன   தவறான  தொடர்கள்.  படித்துப் பாருங்களேன்நமது பழக்கத்தால்“60ம்” என்பதை “அறுபதாம்” என்று நாமாக ஆ சேர்த்து - படித்து விடுகிறோம்அதை, 60+ம்- “அறுபதும்”  என்று  தானே படிக்க முடியும்?  இப்படியே “60தாம் கல்யாணம்”   என்பதை எழுத்தில் எழுதினால் “அறுபதுதாம் கல்யாணம்” என்று தானே படிக்க வேண்டும்எழுத்தில் ஒன்றும் ஒலிப்பில் ஒன்றுமாக வருவதுநமது பழக்கத்தில் வந்த பழம் பிழைதிருத்திக் கொள்ள வேண்டியது நம் தலைமுறைக் கடன். 

எனவே, 60ம் என்பதும் 60வது, 60தாவது என்பனவும் தவறான தொடர்களாகும்இவற்றை 60ஆம் 60ஆவதுஎன்று   எழுதுவதே   சரியான  தமிழாகும்

இப்படியே “100க்கு 100” என்பதை விட, “நூற்றுக்கு நூறு”   என்றோ    நூறு   விழுக்காடு  (100%)  என்றோ எழுதுவதுதான் சரி 

இனி “60ஆம் கலியாணம்” நடத்துவோம்அல்லது “அறுபதாம் கலியாணம்என விரிவாக எழுதுவோம்கல்யாணம் என்பதையும் கலியாணம் என நல்ல தமிழிலோதிருமணம் என தனித்தமிழிலோ எழுதுவோம்.  சரியா

          (நன்றி - இந்து தமிழ் நாளிதழ்  (27-6-2023 செவ்வாய்)

            -------------------------------------------------------------------------------------    

6 கருத்துகள்:

  1. கல்யாணம் என்று இத்தனை நாட்கள் தவறாக நினைத்துக் கொண்டிருந்தேன். கலியாணம் என்பது தான் சரி என்று இன்று தெரிந்து கொண்டேன்.மிக்க நன்றி அண்ணா.

    பதிலளிநீக்கு
  2. அனைவரும் அறியவேண்டிய, பின்பற்ற வேண்டிய பிழையற்ற சொற்களை அறிந்தேன்
    நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
  3. அருமையாகச் சொன்னீர்கள் ஐயா! ஆசிரியர் எனும் சொல்லுக்கு மட்டுமில்லை விளையாட்டு வீரர், தொகுப்பாளர், கவிஞர் எனப் பல சொற்களுக்கு முறையே விளையாட்டு வீராங்கனை, தொகுப்பாளினி, கவிதாயினி எனப் பலரும் பயன்படுத்துகிறார்கள். குறிப்பிடப்படுபவர் பெண் என்பதைச் சொல்ல வேண்டியிருக்கும் இடங்களில் இவை சரியே! ஆனால் எல்லா இடங்களிலும் இப்படிப் பயன்படுத்துவது தமிழைப் படுத்துவதே ஆகும். தவிர நீங்கள் கூறியுள்ளபடி அது பெண்களைத் தாழ்த்துவதும் கூட! அதிலும் கவிஞரைக் கவிஞை என எளிதாகக் குறிப்பிடுவதை விட்டுவிட்டு ‘கவிதாயினி’ என்றெல்லாம் விகுதியில் ஒரு சொற்தொகுதியையே சேர்த்து விடுவதை என்ன சொல்ல!:-)

    பதிலளிநீக்கு
  4. நா.முத்துநிலவன்வெள்ளி, ஜூலை 07, 2023

    சொல்லின் வரலாறு சொல்லும் வரலாறு கொஞ்சமல்ல ! இதை எனது “ஒரு காதல் கடிதம்” நெடுங்கவிதையின் கடைசியில் எழுதயிருப்பேன். ஆண்களே ஆக்கிரமித்திருந்த பற்பல வேலைகளில் இப்போது பெண்களும் எழுந்து வருவதால் இந்தப் பிரச்சினை சொற்களின் வழியே வெளித்தெரிகிறது. இன்னும் சொன்னால் அந்த அடைமொழிகளையும் பெண்பாலுக்கு ஏற்ப கௌரவமானதாகக் கண்டடைய வேண்டுமென்பதும் என் ஆவல். இதுபற்றிய புரிதல் இன்னும் தேவை என்பதால் இதைச் சுருக்கமாகக் கொளுத்திப் போட்டேன்.

    பதிலளிநீக்கு
  5. நா.முத்துநிலவன்வெள்ளி, ஜூலை 07, 2023

    மேலே நான் குறிப்பிட்ட எனது “ஒரு தோழனின் காதல் கடிதம்” (100X4 வரி) கவிதைகள் நான்கு பகுதிகளாக இதே வலைப்பக்கத்தின் இந்த இணைப்பில் கிடைக்கும் (தொடர்ச்சியாக இன்றி சில இடைவெளிகளில்) விரும்புவோர் சென்று படிக்க வேண்டுகிறேன் - ஒரு குறிப்பு இந்த நீள்கவிதை ஓராண்டுக்காலம் எனது கல்லூரிக் காலத்தில் (1976?) புதுதில்லியிலிருந்து வெளிவந்த அண்ணன் சாலை இளந்திரையன் அவர்களின் “அறிவியக்கம்” இதழில் வெளிவந்தது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்- அந்த இணைப்பு - https://valarumkavithai.blogspot.com/2014/04/blog-post_26.html#more

    பதிலளிநீக்கு
  6. 60ஆம் அல்லது 60ஆவது என்றே எழுதுகிறேன்...பதிவைப் படித்தபோது சிலவற்றை நாம்கூட ஓரளவு சரியாகச் செய்கிறோம் என்ற மன நிறைவு....கவிஞர் (ஆண்) கவிதாயினி? (பெண்) என்று எழுதுகின்றார்களே? கவிஞர்..கவிஞர்தானே ஆண், பெண் இருபாலாருக்கும்.

    பதிலளிநீக்கு