அய்யோ! அய்யய்யோ!

அய்யோ! அய்யய்யோ! (இது தலைப்புங்க)

    உடனடியாக இந்தத் தலைப்பில் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்து புதுக்கோட்டை நகர்மன்றத்தில் ஒருமணிநேரம் பேசத் தோன்றுகிறது.
                அருமையாக நடந்து முடிந்த எனது நண்பர் கவிஞர் தங்கம் மூர்த்தியின் கவிதைத் தொகுப்புகள் வெளியீட்டு விழாவில் தொடக்கவுரையாக நான் பேசியது 10நிமிடம்தான். ஆனால் அதையே ஏன் இவ்வளவு சீக்கிரம் பேசி முடித்து விட்டீர்கள் என்று கேட்டார்கள். எனக்கு நிறைவாகவே  இருந்தது.
     எழுத்தாளர் எஸ்.ரா.வரவிலலை. உடல்நிலை சரியில்லை என்று சொன்னதாகத் தங்கம் மூர்த்தி சொன்னார்.பேராசிரியர் கு.ஞா.அவர்பாணியில்  சிரிப்புச் சரத்தைக் கொளுத்திப் போட்டுக் கொண்டே இருந்தார். ஆக மொத்தத்தில் நிகழ்ச்சி சிறப்பாக நடந்து முடிந்தது - ஒரே ஒரு பேச்சைத்தவிர அப்படி இழுவையாக 20நிமிடத்திற்கும் மேல் வாழ்த்துரையாற்றியவர் கடைசியில், -அப்பாடா என்று சொல்லும்படி- முடிப்பதற்கு முன்னதாக எனக்கு கண்டன பாணியில் ஒரு கருத்துச் சொன்னார். அதாவது-
                 ”அன்பு கலந்த கொடியினிலே ஒரு 
                               அகந்தைக் குரங்கு தாவும் - அதன்
                               அழகைக் குலைக்க மேவும்
                  கொம்பும் ஒடிந்து கொடியும் குலைந்து
                                குரங்கும் விழுந்து சாகும் - சிலர்
                   குணமும் இதுபோல் தினமும் புரளும் 
                                 குருட்டு உலகமடா... தம்பி 
                  தெரிந்து நடந்து கொள்ளடா - உலகம்
                                 திருந்த மருந்து சொல்லடா” என்ற பட்டுக்கோட்டையின் பாடல் வரி அருமையானது தானாம், ஆனால் தொடக்கவுரையில் இப்படிக் ”குரங்கு விழுந்து சாகும்” என்றா அமங்கலமாகப் பேசுவது? இதை முத்து நிலவன் மாற்றிக் கொள்ள வேண்டும்” என்று பேசி, அடுத்தநாள் புதுக்கோட்டையின் இலக்கிய வாதிகள் அனைவரும் இதைப்பற்றியே பேசி என்னிடமும் -அவர் அப்படிப் பேசியதற்கு- வருத்தப்பட்டுக்கொண்டார்கள்.
                  அவர் பாணியிலேயே சொன்னாலும் நான் “அன்பு” என்னும் “மங்கல“ வார்த்தையில்தானே தொடங்கியிருக்கிறேன்.? அது வல்ல அவரது கோபம்.. முன்னர் ஒரு கூட்டத்தில்  நாத்திகர்கள் ஒரு சதவீதம்தான் இருப்பார்கள் என்று பேசினார்  அவருக்குப் பின் பேசிய நான் அவருக்கு மாறாக ஒருசதவீதம் என்பதும் தவறு, அப்படியே வாதத்துக்கு வைத்துக்கொண்டாலும் அந்த ஒரு சதவீதம்தான் இந்த உலகத்தை மாற்றிக்கொண்டு வருகிறது நான் நூறு சதவீதம் நாத்திகன் “ என்று பேசிக் கைதட்டலையும் வாங்கிவிட்டேன் என்பது காரணமாக இருக்கலாம். தொழிற்பேச்சாளர்களுக்கு இதையெல்லாம் சகித்துக் கொள்ள முடியாதுதானே? நமக்குத் தொழில் பேச்சல்லவே! நமது கருத்தைச் சொல்வதற்குப் பேச்சும் ஒரு வழி அவ்வளவுதானே?
                   தலித் இலக்கியம் பற்றிய ஒரு விவாதத்தில் இப்படித்தான் வந்தது. சென்னைக் கவிஞர் ஜெயபாஸ்கரன் கவிதைகள் வெளியீட்டு விழாவில், எனக்குப் பின் பேசிய திருப்பு’ர் கிருஷ்ணன், அவரது கவிதைகளில் இருக்கும் “கெட்ட” வார்த்தைகளைத் தவிர்த்திருக்கலாம் என்று பேசினார். அங்கு இதற்கு விளக்கம் தர இயலாததால், அடுத்த வாரம் வெளிவந்த “நந்தன் வழி” இதழில் “அடிபட்டுக் கத்துகிறவன் இலக்கணம் பார்த்து அழமுடியாது, அந்த வார்த்தை தான் அந்தச் சூழலில் சரியானது. இதில் அசிங்கம் அழகு மங்கலம் எல்லாம் பார்த்துக்கொண்டிருக்க முடியாது” என்று ஒரு பக்கக் கட்டுரை எழுதினேன்.
                  எனவேதான் அமங்கலமான “அய்யோ... ஐயய்யோ” என்று தலைப்புத் தந்து உலக அவலங்களையெல்லாம் பட்டியலிட்டுப் பேச வேண்டும் என்று தோன்றுகிறது. வாழ்க்கை நாறிக் கிடக்கும் போது வாசவார்த்தைகளை மட்டும் நான் வீசிக்கொண்டிருக்க முடியாது என்பதை அவர் புரிந்து கொள்ள மாட்டார்.  நம்மைப் புரிந்தவர்க்குப் புரிநதிருக்கிறது போதும்தானே? 
                  ம்... இன்னும் நமக்கு வேலை நிறையக் கிடக்கிறதடா நிலவா!
(கவிஞர் தங்கம் மூர்த்தியின் அய்க்கூ மொழிபெயர்ப்பு அழகான படங்களுடன் அருமையாக வந்திருக்கிறது அதுபற்றி நாளை எழுதுகிறேன்)
---------------------------------------------------------------------------------------------
                  
                 
                  

3 கருத்துகள்:

 1. நீங்கள் பாடிய பட்டுக்கோட்டையாரின் வரிகளில் வரும் “அழகைக் குலைக்க வரும் அகந்தைக் குரங்கு“ என்பது தன்னைத்தான் குறித்ததாக எடுத்துக் கொண்டாரோ என்னவோ? குற்றமுள்ள நெஞ்சு அப்படிக் குறுகுறுக்கத்தான் செய்யும். தன்வாயால் கெடும் தவளைகள் பற்றிக் கவலை எதற்கு? விட்டுத்தள்ளுங்கள் . வேலை நமக்கு நிறையக் கிடக்கிறது. அழகிய அகரத்தில் (அய்யோ) தொடங்கிய சாட்டையை னகரம் வரை சொடுக்குங்கள்.

  பதிலளிநீக்கு
 2. ஒரு தன்னிலை விளக்கம் நல்லாகீது

  உங்கள் வலைப்பூவில் வரும் அளவுக்கு அந்த சம்பவம் பெரிதல்ல என்பதே என்கருத்து

  சில விசயங்களை மறந்தாலே அவை அழிந்துபடும்.

  தலிவா புத்தகம் அருனனின் என்னை புல்லரிக்க வைக்கிறது இதை படிசீங்களா

  பதிலளிநீக்கு