கமலின் விஸ்வரூபம்!


கமலின் விஸ்வரூபம்!
முதல் பார்வை யாருக்கு?
அமெரிக்காவிலும் கேரளாவிலும் அடியெடுத்து வைத்த விஸ்வரூப தரிசனத்திற்கு, தமிழ்நாட்டில் மட்டும் என்ன தடை? மத அரசியலா? பொருளாதார அரசியலா? ஈகோ அரசியலா?
கமல் படங்களின் முதல்காட்சியைக் காண முண்டியடிக்கும் ரசிகர்களை ஏமாற்றிவிட்டு,  தமிழ்நாட்டில் முதல்காட்சியை இப்போது நீதிபதியல்லவா பார்த்தார்!?
திருத்தம் சொல்வதற்கோ
வருத்தம் சொல்வதற்கோ
தலைவர்கள் பார்த்தால் போதுமா?
மக்கள் பார்க்க வேண்டாமா?
முதலில் பார்த்தது இருக்கட்டும்,
முதல் பார்த்தது யார்?
கமல் உறாசனும், சும்மா கில்லி, சுள்ளான், பில்லா மாதிரி பணத்தை அள்ளும் உத்தரவாதத்துடன் சகலகலா வல்லவன் போலும் பல படங்களை எடுத்தவர்தான். ஆனால், சமீப காலமாக “தேவர்மகன்“, “மகாநதி“, “அன்பே சிவம்“, “ஏ ராம்“ - எனத் தனது படங்களைச் சமகால எரியும் பிரச்சினைகளில் முக்கி எடுத்து, சிலவற்றில் கையைச் சுட்டுக் கொண்டாலும் தொடர்ந்து அதில் பின்வாங்காமல் தொடர்பவர் எனும் ஒரு நம்பிக்கைதான் இப்படி என்னை எழுதத் தூண்டுகிறது.
எப்படி இருந்தாலும், நாடகமோ, திரைப்படமோ மக்களிடம் செல்வதற்கு முன் நீதிமன்றமும், காவல் நிலையமும்தான் அதைத் தீர்மானிக்கும் என்பதை என்னால் ஏற்க முடியவில்லை. காசுமட்டுமே பார்த்து சவுரியமாக இருக்கும் பல திரைப்படக் காரர்களின் மத்தியில் கமல்உறாசன் “சீரியஸ்“ விஷயங்களை எடுத்தபோது அதனால் மட்டுமே திருந்திவிடாத  தமிழ்த் திரைஉலகமும் தமிழ்ச் சமூகமும் – தவறாகவே இருந்தாலும்- இந்த ஒருபடத்தால் ஒன்றும் குடிமுழுகி விடாது என்பதே என் கருத்து.
பாகிஸ்தான் வீரர்கள் இந்திய வீர்ர்களின் தலையைத் தனியே வெட்டி எடுத்த போது இந்த இஸ்லாமிய அமைப்புகள் எங்கே போயிருந்தன? அதற்கும் ஓர் ஆர்ப்பாட்டமோ எதிர்ப்போ தெரிவித்திருந்தால், இந்த எதிர்ப்பிற்கு அர்த்தம் இருக்கும்.
பெயர்க் குழப்பத்தால் மட்டுமே அமெரிக்க விமான நிலையத்தில் அவமானப் பட்டவர் கமல்உறாசன் என்பது பலருக்கும் மறந்திருக்கலாம். (உறாசன் என்பது இஸ்லாமியப் பெயர் “உறசன்“ என்பதுபோல இருப்பதாலாம்...! )  அந்தக் கோணத்தில் மட்டுமல்ல வேறு எந்தக் கோணத்தில் பார்த்தாலும், அந்தக் கலைமனசைக் காயப்படுத்துவது எதிர் விளைவுகளைத்தான் தரும். நம்பிக்கை தரும் மாபெரும் கலைஞானி கமலின் நல்ல முயற்சிகள் வெற்றிபெறட்டும்
ஆனால், எதையும் வணிகப் படுத்தத் தயங்காத ரஜினி முதன்முதலாக வாய்திறந்து, “கமல் இஸ்லாமியச் சகோதர்ர்கள் வருத்தப் படும்படியாக எதுவும் செய்யமாட்டார்என்று நற்சான்று தந்திருப்பதும் கொஞ்சம்  சந்தேகத்தைக் கிளப்புகிறது. போதாக் குறைக்கு –இஸ்லாமியர்கள் சிலர் எதிர்க்கிறார்களே என்பதற்காகவோ என்னவோ- படத்தைப்பார்க்காமலே எச்.ராஜா வேறு வரவேற்கிறார்!
வீடு, பேராண்மை, அழகி, வழக்கு எண் முதலான “சிறிய“ படங்கள் கூடப் பெரிய பெயரைப் பெற்ற வரலாறு தமிழ்த்திரை உலகிற்கு உண்டு.
கலைஞனின் கருத்து வெளியீட்டுச் சுதந்திரம் வழக்குமன்றத்திலோ காவல் நிலையத்திலோ தீர்மானிக்கப் படுவதை நான் எதிர்க்கிறேன் என்று கமல் வெளியில் வந்தால் அது சரியான முடிவாக இருக்கும்... அதைவிட்டுவிட்டு... 100 கோடியைப் போட்டுவிட்டேன்... கடன்காரன் விரட்டுகிறான், படம் வெளியாகாமல் போனால் மீடியா நண்பர்களை என்வீட்டில் சந்திப்பது இதுவே கடைசி முறையாகவும் இருக்கலாம் என்றெல்லாம் பேசி தன்மீது இரக்கத்தை எதிர்பார்ப்பதும் கமல் மாதிரியான சுயகௌரவமுள்ள கலைஞனுக்குச் சரியானதல்லவே!
“நல்லவன் வாழ்வான்“ என்றொரு பழைய திரைப்படத்தில் இந்தப் பக்கம் எம்.ஜி.ஆர். ஜெயித்து விட்டதாக அறிவிப்பார்கள், அந்தப்பக்கம் எம்.ஆர்.ராதா ஜெயித்து விட்டதாக அவரது தொண்டர்கள் தோளில் தூக்கி வருவார்கள். அப்போது தனக்கே உரிய கரகரத்த குரலில் ராதா சொல்வார் – “அவனையும் தூக்குறீங்க என்னையும் தூக்குறீங்க யார்ரா ஜெயிச்சது? அதுதான் இப்போது நினைவுக்கு வருகிறது. 

8 கருத்துகள்:

 1. “நல்லவன் வாழ்வான்“ என்றொரு பழைய திரைப்படத்தில் இந்தப் பக்கம் எம்.ஜி.ஆர். ஜெயித்து விட்டதாக அறிவிப்பார்கள், அந்தப்பக்கம் எம்.ஆர்.ராதா ஜெயித்து விட்டதாக அவரது தொண்டர்கள் தோளில் தூக்கி வருவார்கள். அப்போது தனக்கே உரிய கரகரத்த குரலில் ராதா சொல்வார் – “அவனையும் தூக்குறீங்க என்னையும் தூக்குறீங்க யார்ரா ஜெயிச்சது?” அதுதான் இப்போது நினைவுக்கு வருகிறது.//


  அருமையாகச் சொன்னீர்கள்
  இன்றைய சூழலில் நிலையை அருமையாக
  விளக்கிப் போகும் பதிவு அருமை
  தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு

 2. பக்குவமான பதிவு

  மேலும் சில தகவல்கள்
  பெரிய பிரச்சனைகளுக்கு காரணம் ஆள்வோரின் கால் சுற்றும் நாய்குட்டிகள் ....

  ஒரு நாய்க்குட்டியின் பெயர் சுனில் இது ஆடிய தப்பாட்டம் தான் இன்றைய விஸ்வரூபம் பிரச்சனை

  பதிலளிநீக்கு
 3. வணக்கம், நன்றி நண்பர்களே!
  அது என்ன சுனில் விட்ட சுற்று? எனக்குத் தெரியவில்லையே நண்பா!
  நான் ஏதோ எதார்த்தமாக என் மனத்தில் பட்டதை எழுதியிருக்கிறேன். உள்விவரங்கள் வேறு உண்டா?
  -அன்புடன், நா.மு.

  பதிலளிநீக்கு
 4. கருத்துச் சுதந்திரம் இன்று கருப்புத்திரைக்குள் மூழ்கிக் கிடக்கிறது. திரைப்படத் தணிக்கைக் குழு தணிக்கை செய்ததற்குப் பிறகு, ஒரு நீதிபதி தடை நீக்கியதற்குப் பிறகும் நள்ளிரவில் மற்றொரு நீதிபதியை உசுப்பி, ஒரு திரைப்படம் அரசுதரப்பில் மேல்முறையீட்டால் தடை செய்யப் படுகிறது என்றால்... அதற்கு சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு என்று சமாதானம் சொல்லப் பட்டாலும், பல காலம் காத்திருந்த வாய்ப்பில் வஞ்சம் தீர்க்க முயலும் சாணக்கியத் தனமே இது என்பது சாமான்யனுக்கும் விளங்கும்.

  பதிலளிநீக்கு
 5. நன்றி பொன்.க. அய்யா,
  ஒருவன் என்ன செய்யலாம் என்பது அவனுக்குத்தான் தெரியும்.
  அவன் என்ன செய்திருக்கிறான் என்பதை வைத்தே அவன் என்ன செய்யலாம் என்பது உலகுக்குத் தெரியும்.
  கமல் இதுவரை செய்திருப்பதில் ஆபத்தானதாக எதுவும் இல்லை என்பதே என் கருத்து...
  செய்ய விடாமல் தடுக்கும் கைகள் யார் யாருடையது என்பதுதான் கேள்வி... பார்க்கலாம்... குட்டி வெளியே வந்துகொண்டே இருக்கிறது...

  பதிலளிநீக்கு
 6. ஒரு கலைஞன் பெற்றுள்ள கருத்து வெளியீட்டுச் சுதந்திரத்தைச் சமயப்ப் பூச்சு பூசுவது இயல்பாகி வருகிறது. வெளி வரும் திரைப்படங்களில் இந்தக் காட்சி இப்படி இந்தக் காட்சி இப்படி என ஒவ்வொருவரும் கிளம்பி விட்டால் இனிமேல் திரைப்படங்களில் காட்டு விலங்குகளைப் பற்றித் தான் காட்ட வேண்டியிருக்கும். ஐயோ ஒரு வேலை வாயில்லா ஜீவன்களை வதைக்கிறார்கள் என்று வேறு வழக்கு போடுவார்களோ< என்ன உலகமடா ?

  பதிலளிநீக்கு
 7. ஆமாம் கோபி!
  அப்படித்தான் தெரிகிறது!
  கலைஞனின் கருத்துச் சுதந்திரத்தை நீதிமன்றமும், சிலபல குழுக்களும் நிர்ணயிக்கத் தலைப்பட்டால் கலையாவது கத்தரிக்காயாவது!
  விஸ்வரூபம் இன்று(07-02-2013) தமிழகத்தில் திரைக்கு வருகிறது.
  சரக்கிருந்தால் ஓடும்.
  இல்லாவிட்டால் திரையரங்கை விட்டு ஓடப்போகிறது! இதற்குள் என்ன ஆர்ப்பாரட்டம்... நாளை என்ன நடக்கிறது என்று பார்ப்போம். பிறகு பேசுவோம். படம் ஒரு சார்பாக இருந்தால் நாம் மட்டும் கமலை விட்டு வைப்போமா என்ன? அவரது 100கோடி யை விடவும் நமது மக்கள் 120கோடி பெரிதல்லவா? படத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்...
  படம் கலையா? களையா? என்று.
  கருத்துக்கு நன்றி கோபி.

  பதிலளிநீக்கு
 8. வணக்கம் அய்யா.நல்லவற்றையும் ஆத்ரிக்கும் கெட்டவற்றையும் [புரியாமலேயெ}ஆதரிக்கும் மக்கள் தான். நாம் கூட சிலரிடம் பேச விரும்பாமலேயே பேசினோம் அல்லவா? அப்படித்தான். நீங்கள் பேசியது உங்களுக்கு கூட வருத்தம் அளித்து இருக்காது. ஆனால் நான் தான் பல நேரங்களில் வருத்தப்படுவேன்.”அந்த” அவர்கள் பின்னாலும் சிலர் இருக்கிறார்களே. என்ன செய்வது? அப்படித்தான் இதுவும்.

  பதிலளிநீக்கு