ஆனந்த விகடனின் - என் விகடன் இதழில் நமது வலைப்பக்க அறிமுகம்


என் விகடன் இதழில் நமது வலைப்பக்க அறிமுகம்

கடந்த இரண்டு ஆண்டுகளாக வந்து கொண்டிருக்கும் நமது வலைப்பக்கத்தை  ஆனந்த விகடன் இதழின்இணைப்பாக வரும் “என்விகடன்” இதழின் திருச்சி மண்டல இதழ் எடுத்து அறிமுகம் செய்துள்ளது.

எடுதது வெளியிட்ட என் விகடன் இதழ் ஆசிரியர் குழு நண்பர்களுக்கு நம் நன்றியைத் தெரிவித்து மகிழ்கிறோம். விகடனின் இந்தப் பணி தொடரட்டும்.

நன்றி - இணைப்புக்கு -  http://en.vikatan.com/article.php?aid=26135&sid=766&mid=33
--------------------------------------------------------------------------------------
“என் விகடன்” இதழ் வெளியிட்டிருக்கும் நமது சில படைப்புகள் - இங்கே!
(நம் படைப்புகளின் தலைப்புகள் சில விகடனால் மாற்றப்பட்டுள்ளன இவற்றுக்குரிய படங்கள் விகடன் வெளியிட்டவை) - நன்றியுடன், நா.மு.
--------------------------------------------------------------------------------------
இந்த இணைப்பிதழ் இப்போது -கடந்த டிசம்பருடன்- நின்று விட்டதாமே!
நண்பர்களிடம் தான் கேட்டு அச்சிதழைப் பார்க்க வேண்டும்போல... (நான் அவ்வப்போது வாங்குவேன் அந்த இதழ் பார்த்து வாங்கலயே!
-------------------------------------------------------------------------------------

புதுக்கோட்டையைச் சேர்ந்த கவிஞர் நா.முத்துநிலவன் http://valarumkavithai.blogspot.in என்ற வலைப்பூவில் எழுதிவருகிறார். ஆய்வுக் கட்டுரைகள், மாணவர்கள்,  ஆசிரியர் உறவு முறை தொடர்பான பதிவுகள் அதிக அளவில் இடம் பெற்றுள்ள இவருடைய வலைப்பூவில் இருந்து...


 ஏன் இந்தக் கொலைவெறி?
 ஏனிந்தக் கொலவெறி கொலவெறி கொலவெறிய்யா?  திருக்
குறள்நெறி தமிழில் இருப்பதும் தெரியலயா?
இனிக்கும் தமிழ் வகை மூணு! மூணு!  இப்பக்
கணினி சேர்ந்தா நாலு!
பெருந் தொகைய நீ நெனச்சு, நெனச்சு  சங்கக்
குறுந்தொகைய நீ மறந்தே!
ஏனிந்தக் கொலவெறி கொலவெறி

பத்துப் பாட்டுக் கேட்ட மண்ணெ  நீ
குத்துப் பாட்டுல கொன்னே!
ஆங்கிலத்தை வாந்தியெடுக்க
அன்னைத் தமிழை ஏன் தின்னே?
ஏனிந்தக் கொலவெறி கொலவெறி!

 தலைகீழ் மாற்றங்கள்!
 எதிரிகளை வணங்கி
கிருஷ்ணனைக் குறிபார்க்கும்
அர்ச்சுனர்கள்!

துச்சாதனன் பதற
பாஞ்சாலியை உரிக்கும்
பாண்டவர்கள்!

கோவலனை எதிர்த்து
பாண்டியனிடம் நீதிகேட்கும்
கண்ணகியர்!

விஸ்கி பாட்டிலுக்காய்
தேச ரகசியத்தை விற்கும்
அதிகாரிகள்!
தியாகிகள் பதற
துரோகிகள் செலுத்தும்
அரசியல்!
தந்தைக்கு சாராயம் தந்து
பிள்ளைக்கு சத்துணவு போடும் 
திட்டங்கள்!

'அன்பே தெய்வ’ மென
அடுத்தவனை இடிக்கும்
மதங்கள்!

கம்ப்யூட்டரை ஜெயித்து
ஜோதிடத்திடம் தோற்கும்
வாழ்க்கை!

சலுகைகளில் ஏமாந்து
உரிமைகளை இழக்கும்
ஜனங்கள்!

ஜெயஹே! ஜெயஹே!
ஜெய ஜெய ஜெய ஜெயஹே!

எண்சீர் வருத்தம்!
காபித்தூள் கடைமாற்றி வாங்க, வழியில்
காய்கறிக்காரன் பார்க்க, பல்லைக் காட்ட
''சாப்பாடு இல்லை, 'கேஸ்’ இல்லை மதியம்
சமாளியுங்கள்'' என மனைவி முகத்தைப் பார்க்க,
'மொபெட்டில்’ ரிசர்வு வர, பிள்ளை முணுமுணுக்க,
மூன்றாம் தவணை டீ.வி-க்காரன் திட்ட,
நாய்ப்பாடு பட்டு வரும் நடுத்தர வர்க்கம்
நாளரு பொழுதாகி வரும் நடுத்தெரு வர்க்கம்.

சீருடை!
பட்டன் போடவும்
தெரியாத பருவத்தில்
சீருடையா அவை..?
கட்டம் போடாத
கைதிச் சட்டைகள்!

 தீர்வு!
கடலில் மூழ்கியவன்
தீவு தேடி
திமிங்கலத்தில் விழுந்தான்

கடனில் மூழ்கியவன்
தீர்வு தேடி
'பைனான்ஸில்’ நுழைந்தான்!

நாடு, நல்ல நாடு!
பண்டைப் புகழும் பாரம்பரியப்
பண்புகள் மிக்கதும் இந்நாடே அற்பச்
சண்டையில் எங்கள் அண்டை வீட்டவர்
மண்டை உடைவதும் இந்நாடே!

எல்லா வகையிலும் வல்லோர் எங்களை
ஏளனம் செய்வதும் இந்நாடே! வெறும்
செல்லாக் காசென மனிதப் பண்புகள்
சிரிப்பாய்ச் சிரிப்பதும் இந்நாடே!

வற்றா நதிகளும் வண்டல் பூமியும்
வளம் கொழிப்பதும் இந்நாடே! தினம்
பற்றாக் குறைகளும் பட்டினிச் சாவும்
பரம்பரை யாவதும் இந்நாடே!

வேலைப் பளுவால் மாதச் சம்பளர்
வெந்து கிடப்பதும் இந்நாடே!  சிலர்
வேலை கிடைத்ததும் ஏழை எளியவரை
விரட்டிப் பிடுங்குவதும் இந்நாடே!

அங்கே வெள்ளமும் இங்கே வறட்சியும்
அவதிப் படுவதும் இந்நாடே! தினம்
கங்கா காவிரித் திட்டம் பற்றிய
காலட்சேபமும் இந்நாடே!

விடுதலைப் போரில் வேற்றுமைக் கெதிராய்
வீரம் தெறித்ததும் இந்நாடே! இன்று
அடுதலும் கெடுதலும் 'ஆண்டவ’ராலே
ஆல்போல் தழைப்பதும் இந்நாடே!

புத்தன் ஏசு காந்திய வழியார்
போதனை செய்வதும் இந்நாடே! மத
ரத்தக் களறியும் சாதிக் கொடுமையும்
நித்தம் நடப்பதும் இந்நாடே!

இகம்பர சுகம்பெற எண்ணற்ற முனிவோர்
எழுந்தருள் செய்ததும் இந்நாடே! தினம்
திகம்பர முனிபோல் எங்கள் குழந்தைகள்
தெருவில் அலைவதும் இந்நாடே!

சீற்றம் கொண்டவர் அவசரமாகச்
சிதறிப் போவதும் இந்நாடே! ஒருகை
சோற்றுக் காகவே ஓட்டும் போடுகிற
சுதந்திர நாடும் இந்நாடே!

சுதந்திரம் வந்ததும் சொர்க்கம் வருமென
சொல்லித் திரிந்ததும் இந்நாடே! அட்டத்
தரித்திரம் எங்கள் சரித்திர வாழ்வில்
நரித்தனம் செய்வதும் இந்நாடே!

தலைவர்கள் எளிமையைக் கட்டிக் காக்கவே
செலவுகள் செய்ததும் இந்நாடே இந்த
நிலைமை உணர்ந்தே கூனர் நிமிர்ந்தே
நெருப்பு விழிப்பதும் இந்நாடே!

எந்தையும் தாயும் வறுமையில் வாடி
இறந்து கிடந்ததும் இந்நாடே! அவர்
சந்ததி இன்று சங்கம் அமைத்தொரு
சமர் தொடங்குவதும் இந்நாடே!

குழந்தையின் அரசியல் கேள்வி!
திருச்சியைச் சேர்ந்த என் நண்பரும் பத்திரிகையாளருமான வில்வம் தன்னுடைய ஐந்து வயது மகள் கியூபாவுடன், திருச்சி பகுதியில் இரு சக்கர வாகனத்தில் போய்க் கொண்டிருந்தபோது கியூபா கேட்டாராம். ''ஏம்ப்பா, நிறைய சுவரில் 'அம்மா அம்மா’னு எழுதி இருக்காங்க?''
இதுபோல குழந்தைகள் அப்பா அம்மாவைக் கேட்கும்போது பெரும்பாலான பெற்றோர்கள் அவசரத்துக்குத் தப்பும் தவறுமாகக் குழந்தைதானே என்று எதையாவது சொல்லும் வழக்கத்தை மீறி, இவர் தடுமாறி இருக்கிறார். மீண்டும் கியூபா, ''ஆடு, இலை, ஈ இதெல்லாம் எப்பப்பா எழுதுவாங்க?'' எனக் கேட்டாராம். அப்போதும் பதில் சொல்லவில்லை.
ஐந்து வயது குழந்தையின் அட்டகாச அரசியல் நகைச்சுவையோ? 

4 கருத்துகள்:

 1. சலுகைகளில் ஏமாந்து
  உரிமைகளை இழக்கும்
  ஜனங்கள்!

  wow lines

  lines like this will withstand time

  poetry should be like this portraying the current affairs and pains of the society

  kasthuri rengan
  www.malartharu.org
  www.malartahru.com

  பதிலளிநீக்கு
 2. உங்களின் வலைப்பூ இணைய வானில் சிறகடித்துப் பறந்து உலகை உலா வந்து தமிழை மெருகேற்ற வாழ்த்துகள். நன்றியுடன் கோபிநாத் காரையூர்.

  பதிலளிநீக்கு
 3. நகைச்சுவையின் உள்ளே எவ்வளவு சாடல், காரம், சாரம்,விவேகம்! வக்கிரத்தை விரட்டும் சிந்தனைகள், ஆங்கில வாந்தி எடுப்போர் மேல் நிந்தனைகள்!
  பணி தொடர வாழ்த்துகிறேன்.

  பதிலளிநீக்கு