அணிந்துரை –
காதலும் சமூகக் கோபமும்
சரிவிகிதத்தில் கலந்திருக்கும்
ஐக்கூ நிறைந்த அழகான தொகுப்பு!
--நா.முத்துநிலவன்--
செய்தித்தாளுக்குள் மறைந்தே
வீடுவர வேண்டியுள்ளது அணையாடை(நாப்கின்) – என்னும் கவிதையில்
சிக்கிக் கொண்டேன்! காரணம், அதன் சமூக விமர்சனமும், அதில் கிடந்த ஒரு புதிய சொல்லும்! புதியவை காணும் முயற்சிதான் சிலரை விஞ்ஞானி ஆக்குகிறது. வேறு சிலரைக் கவிஞராக்குகிறது. பாஸ்கர் கோபால் இதில் இரண்டாவது ரகம்!
‘அணையாடை’ என ஒரு புதுச்சொல்லை எழுதிப்
பார்த்திருக்கிறார். சரிதான். பாரதி
‘மெம்பர்’ என்னும் ஆங்கிலச் சொல்லுக்கு
‘அவையவி’ ‘அங்கத்தான்’, ‘உறுப்பாளி’ என்ற சொற்களை முயற்சி செய்தாராம்!
அவர் கண்டு சொன்னதுதான் புரட்சி, பொதுவுடைமை என்னும்
புதிய தமிழ்ச் சொற்கள்! (“ஆகா என்று எழுந்தது பார் யுகப் புரட்சி”,
“முப்பது கோடி ஜனங்களின் சங்கம் முழுமைக்கும் பொதுவுடைமை” - பாரதி)
ஊடகம், திரைப்படம்,
நடைமுறை வாழ்வில் பெரும்பாலும் ஆங்கிலத்தில் முழுகி மூச்சுத் திணறிக்
கிடக்கும் இன்றைய தமிழ்ச் சூழலில் இன்றைய கவிகள் பலரும் தயங்காமல் ஆங்கிலத்தைக் கலந்து
எழுதிவர, பாஸ்கர் கோபாலின் இந்த முயற்சியை நான் பாராட்டுகிறேன்.
நல்ல கவிதைக்குள் நல்ல கருவும் நல்ல சொல்லும் பிரிக்க முடியாமல் கலந்து
கிடக்கும். “மாத விலக்கு” என்னும் சொல்லுக்குள் சமூக ஒதுக்கம்
இருக்கிறது! ‘விலக்கு’ எனும் சொல், ஆண்டாண்டுக் காலமாக நம் அம்மாக்களை,
சகோதரியரை, இணையரை, மகள்களை
அவர்கள் அடிமைப் பட்டுக்கிடந்த சமையற் கட்டுக்குள் கூட வர விடாமல் ‘ஒதுக்கி’ வைத்த சொல்! எவ்வளவு கற்றாலும்
ஆண் மையச் சமூகத்தில் பாலினப் பாகுபாடு தொடர்வதைக் காட்டும் சொல் தானே இது?
கேட்டால், “சாதி, மாதவிலக்கு மற்றும் அசைவம் எல்லாம் சுத்தம் சுகாதாரம் சம்பந்தப் பட்டது,
தீண்டாமையல்ல” என்று சமாளிப்பார்கள்! ஆனால் இது ஒரு சாமர்த்தியமான மற்றும் தவறான பதில்தான்!
இந்தியாவின் முதல் குடிமகனும், செயற்கைக் காலைக் கண்டு தந்த அறிவியல் அறிஞருமான அ.ப.ஜெ.அப்துல் கலாம் அவர்களையே, வெறுந் தரையில் உட்கார வைத்துத்தான் ‘ஆசி’ வழங்கினார், சிம்மாசனத்தில் அமர்ந்திருந்த சங்கராச்சாரி! அந்த இருவரில் அசுத்தமானவர் யார்?
‘"குளித்து விட்டுக் கோவிலுக்குள் வரச்சொன்னார்கள்...
நான் குளித்துவிட்டுத்தான்
வந்தேன்...
ஆனால்,
அவர்கள்
குளத்தில் அல்லவா தீண்டாமை கலந்திருந்தது!" என்று
நா.காமராசன் கேட்டது, திரவுபதி முர்மு காலத்திலும் பொருந்துகிறதே!
‘கரித்துணி’களில் இருந்து நம் பெண்களைக்
காப்பாற்றிய ஒரு சொல்- ‘நாப்கின்’ என்பது.
இதைச் சொல்லவும், கடைகளில் போய் வாங்கவும் வெட்கப்பட
வேண்டியதில்லை. ஆனாலும் அர்த்தம் கெட்ட தனமாக இதை, ‘ரகசியமாக’ கேட்கவும் வாங்கியதை மறைத்து எடுத்துக் கொண்டு
வரவும் செய்திருக்கிறது நம் சமூகம். இதைச் சொல்லாலும் பொருளாலும்
இரண்டு முனைகளில் தாக்கி உடைக்கிறார் கவிஞர்!
பால் வேற்றுமை பாராட்டும் சொற்களில் இன்னும் பெண்ணடிமைத் தனம் வளர்ந்து
கொண்டிருப்பதை அரசியலாகவும் பார்க்க வேண்டும். கவிதை,
கதை படைப்புகளாகவும் எடுத்துக் காட்ட வேண்டும்! கன்னி, விதவை (கைம்மனையாட்டி
-கம்மனாட்டி), பத்தினி, பரத்தை,
கற்புக்கரசி, தேவ(ர்)அடியாள், கற்பின் கனலி முதலான தமிழ்ச் சொற்கள் பெண்ணடிமைத்
தனத்தைப் காலம் காலமாகக் காப்பாற்றி வரும் கழிசடைச் சொற்கள்! இவை பற்றிய புராணங்கள் வரலாறல்ல, புனைவுகள்.
சமூகம் மாறியும் பழமையைப் பிடித்துக் கொண்டு விடாமல் பின் பற்றும் சில
பழக்கவழக்கங்களை இடித்துரைக்கும் புரட்சிக் கவிஞர் –
வழக்கம் என்பதில்
ஒழுக்கம் இல்லையேல்
கழுத்துப் போயினும்
கைக்கொள வேண்டா என்பார்.
இதை நமது கவிஞர்,
இன்னும்
மாறவில்லை
சிறுமிகளுக்கான பரிசுகள்
சமையல் சாமான்கள் –என்பது
மிகச் சரியான பார்வை! பெண்களைப் பற்றிய பார்வையைச் சரியாக
முன்வைக்கிறார். பொதுவாக ஒருவர் சரியானவரா இல்லையா என்பதை பெண்களைப்
பற்றிய அவரது பார்வையைக் கொண்டே அறிந்து கொள்ளலாம்! பாஸ்கர் சரியானவர்தான்!
சமூக அக்கறையுள்ள கவிதைகளே புதிய சமூகம் எழுச்சி பெற உதவும் என்று நம்புகிறவன்
நான். சமூகக் கவலைகளை, அழகும் அர்த்தமுமாய்ச் செதுக்கிய சொற்களில், இளமைக்கே
உரிய காதல் துள்ளலுடன் பாஸ்கர் கோபால் எழுதியிருப்பது மகிழ்ச்சி தருகிறது.
குளத்தில் இசைக்குறிப்பு
வரைகிறது
காற்று
இது போலும் அழகான கவிதைகள் தொகுப்பு
முழுவதும் உள்ளன.
“ஒரு கட்டுரையைக் கொஞ்சம் சுருக்கித் தர முடியுமா?”
என்றால், அதைக் கவிதையாக்கித் தந்து விடலாம்!
என்பதே சரியான பதில்
இதோ பாருங்கள் ஒரு கவிதை:
கடிதம் கேட்கிறது
நிரந்தர முகவரி,
மூன்றாம் பாலினம் -
இந்தக்
கவிதையின் கரு, புரிந்தவர்களைத் தூங்க விடாது!
யுகம் யுகமாகப் பிறர் உணர முடியாத வலி! பலபக்க
விளக்கம் கோரும் ஒரு சிறு கவிதை. மகாபாரதப் புராணப் புனைகதையில்
‘சிகண்டி’ என்றொரு பாத்திரம் வரும். இருந்தும் என்னென்னவோ பெயர்களால்
சொல்லப்படும் வலிகளின் வரலாற்றை சின்னஞ்சிறு கவிதையில் சொல்ல முடியும் என்றால் அதுதானே
சிறந்த கவிதை!
ஒரு கவிதையிலிருந்து எடுத்த தலைப்பு என்பதோடு, இந்தக்
கவிதைத் தொகுப்பு முழுவதுமே விளக்கிவிட முடியாத வலியைப் படிப்பவர்க்குக் கடத்துகிறது. இது எந்திரப் பொறியியல் (B.E. Mechanical Engineering) படித்த ஒரு
கவிஞனின் படைப்பு என்பதை நினைத்து நான் வியந்து போகிறேன்! மகிழ்ந்து
போகிறேன்! வாழ்த்தி மகிழ்கிறேன்.
தமிழின் ஆரம்ப கால ஐக்கூக்கள் –ஜப்பானிய ஐக்கூ இலக்கணப்படி– அரசியலே இல்லாமல்தான் இருந்தன!
ஆனால் தமிழில் இவை பரவலாக அறியப் படும்போது அரசியல் பேசத் தொடங்கி விட்டன!
இப்போது தமிழ் இலக்கிய உலகம் நன்கறிந்த கவிஞர் மு.முருகேஷ் அவர்களின் முதல் ஐக்கூ தொகுப்பு ‘விரல் நுனியில்
வானம்”. எனும் நூல். ‘ஐக்கூ’ போலவே கையடக்க அளவில் 1993இல் வந்த அதற்கு நான் ஒரு முன்னுரை
எழுதியிருந்தேன். அதில் இந்த விவரங்கள் சற்றுக் கூடுதலாக இருக்கும்
அதனால்தானோ என்னவோ மதுரைப் பல்கலைக் கழகப் பாடத்திட்டத்தில் இந்த முன்னுரையும் பாடமாக
இருந்தது! நன்றி: முனைவர் இரா.மோகன்)
இப்போது பெரும்பாலான ஐக்கூக்கள் அரசியலை அழகியலோடு பேசி வருகின்றன என்பதோடு, தமிழின் மரபுக்கவிதை புதுக்கவிதையை அடுத்து ஏற்கப்பட்ட
கவிதை வடிவமாக ஐக்கூ கவிதை நிலை நின்றுவிட்டது!
அரசியலை அது அரசியல் என்றுகூடப் பலரும் அறியாதபடி அழகியலோடு எழுதி வெற்றிபெறும்
கவிதை பலவற்றை பாஸ்கர் கோபால் எழுதியிருக்கிறார் இந்தத் தொகுப்பில்.
இதோ பாருங்கள், விவசாயிகளின் வேதனையையும்
நமது அரசுகளின் அலட்சியத்தையும் மூன்று வரிகளில் முடிந்து விட்டார்-
நாற்று நடாமலே
முளைக்கிறது நெல்-
அரசுக் கிடங்கில்.
ஒரு வகையில் ஐக்கூவின் வேலையே
அதுதானே? முதல் அடியில் ஒரு முடிச்சுப் போடுவது. இரண்டாவது அடியில் அதை இறுக்கி விடுவது, மூன்றாவது அடியில்
அந்த முடிச்சு அவிழ்க்கப் படும் போது, அப்படி அவிழ்ந்த முடிச்சு,
கண்ணகியின் அவிழ்ந்த கூந்தலாகவும், எரிதவழும் வரிகளாகவும்
எழுவதுண்டு! எவன் தலையிலாவது வைத்த நெருப்பாகவும் விழுவதுண்டு!.
அடுத்த கவிதை அப்படி ஒரு கொடுமைக்குத் திதி கொடுக்கும் கவிதையாக வந்து
விழுகிறது பாருங்கள் -
ஆறுகளுக்கு
திதி கொடுக்கிறது
மணல் லாரி.
நூறுபேர் செய்யும் வேலையை ஒற்றையாகச்
செய்ய முடிந்த யானையை நாம் பிச்சையெடுக்கத் தானே பெரும்பாலும் வைத்திருக்கிறோம் – அது கோவிலில் ஆசீர் வாதம் செய்யவும் கூட, காசு கேட்க வைத்த புனிதர் நம் மனிதர் அல்லவோ?! அந்த ஈனத்தனத்தை
இப்படி எழுதுகிறார் கவிஞர் -
சில்லறை தராதவனை
ஆசீர்வதிக்க மறுக்கிறது
கோவில் யானை -
ஆசி பெற
முடியாத இந்தப் பாவம் யாருக்கு? ஏழைக்கா? யானைக்கா?
இல்லை யானை ‘ஓன’ருக்கா?
என்னமோ போடா கணேசா! இதை எந்தப் பிள்ளையாரிடம் போய்ச்
சொல்ல? என்னும் பற்பல கேள்விகளைப் படிப்பவர் மனத்தில் அலைஅலையாக
எழுப்புகிறது கவிதை!
வள்ளுவர்
ஒரு வியப்பான தீயைச் சொல்லுவார். பொதுவாக “கிட்டப்
போனா சுடும், எட்டிப் போனா குளிரும்”
என்பது தானே தீயின் இயல்பு? ஆனால் வள்ளுவர் சொல்லும் காதல் தீ,
‘உல்டா’வாக இருக்கிறது! ஆம்!
எட்டிப் போனா சுடுமாம், கிட்ட இருந்தா குளுகுளுனு
இருக்குமாம் – இதோ
நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்என்னும் தீயாண்டுப் பெற்றாள் இவள்? -என்பார் நம் வள்ளுவத் தாத்தன்! இதை நம் சிந்துவெளி ஆய்வாளரும் நல்ல கவிஞருமான ஆர்.பாலகிருஷ்ணன் ‘இப்படி ஒரு தீயா? என ஒரு கவிதை நூலாக எழுத அதை நம் கவிஞர் மைதிலி கஸ்தூரி ரெங்கன் முகநூலில் தொடர்ந்ருது ஓவியமாகப் பதிவிட்டு வருவது தனி அழகு!
பாஸ்கர் கோபால் சொல்லும் இந்தத்
தீ, உலகின் மிகப் பழைய தீ! ஆனால் பலரும்
இனம் காணாத கோணம்! இதைப் படித்த பிறகு, நம்மில் பலர் பள்ளிப் பருவத்தில் – இன்றைய காலை மதிய
உணவு வழங்கப்படாத காலத்தில் படித்தவர்கள் – அனுபவபூர்வமாக அறிந்திருப்பர்.
எனினும் இந்த ‘தீயால் வாடும் பூக்கள்’ இன்றும் இருக்கிறார்கள் என்னும் உண்மையை நாம் மறந்துவிடக் கூடாது என்பதை நினைவூட்டுவதாகக்
கவிதை உள்ளது
நீர் கொண்டு அணைத்தும்
அணையவில்லை
பசித்தீ.
இது, மணிமேகலையின் அமுதசுரபிகளுக்கு மசியாது!
காரல் மார்க்சின் வள்ளுவரின் ‘கொடிறு உடைக்கும்
கூர்ங்கையர் அல்லார்க்கு ஈர்ங்கை விதிரார் கயவர்’ எனும் வழி ஒன்றுதான்
தீர்வு என்பதை நினைவூட்டுகிறது.
இதுபோலவே, ‘அரசியல் சரியாகாமல் சமூகம் சரியாகாது’
என்பதை தொடர்ந்து சொல்லும் கவிதைகளால் நிறைந்திருக்கிறது இத் தொகுப்பு.
சின்னத்தில்
மறைகிறது
குற்றப் பின்னணி.
காலியாகவே இருக்கிறது
முதல் வகுப்பு
சிறையில்
தள்ளினேன் திறந்தது
கோப்புகளின் கதவு
சிரிக்கிறார் காந்தி –
போலும் நெற்றிப் பொட்டில் அடிக்கும் நல்ல கவிதைகளை விளக்கிச் சொல்ல வேண்டாம் என்று விடுகிறேன்.
கிழிந்த ரூபாய் நோட்டாய்
பெண்கள்
இலவசப் பேருந்தில் –
இன்னும் யோசித்தால் இலவசத்தைக் காயப்
படுத்தாமலே பெண்களுக்காகப் பேச முடியும் என்று நினைக்கிறேன்.
பொதுவாக, இலைமறை காயாகக் கிடந்து, இளமையில் புரிந்து கொள்ள முடியாத
பெற்றோரின் பாசத்தைத் தானும் ஒரு தாய் தந்தையாக வரும்போதுதான் பிள்ளைகள் புரிந்து கொள்வார்கள்
என்பார்கள். என்றாலும் தொகுப்பில் இவர் காட்டும் தந்தைப் பாசம்
மகிழ்ச்சியளிக்கிறது. இவர் தாய் தந்தையர் உண்மையிலேயே மகிழ்ச்சியும்
நெகிழ்ச்சியும் அடையலாம்! அவர்களைப் பெருமைப் படுத்தும் பல கவிதைகள்
தொகுப்பில் உள்ளன.
மாதாமாதமும் மாறியசெருப்பு
வருடக்கணக்கிலும் மாறவில்லை
அப்பாவானவுடன் -
ஆசையை விட்டுவிட ஆசைப் படுவோர்தான் துறவியாம்! ஆனால் புத்தர் அப்படிப் பட்ட துறவி அல்ல என்பதால் அவரை
வெற்றிகொள்ள முடியாத வைதீகம் அவரைத் தின்று செரிக்க, அவரையே கடவுளாக்கி
விட்டது! இதை -
பலரின் ஆசைக்கு
பரிசுப் பொருளானார்-
புத்தர் –
கவிதையில் வரலாற்றையே
சொல்லி விடுகிறார்!
பிறகு, வழக்கம் போலக் காதல் கவிதைகள் ஆங்காங்கே உள்ளன!
காதலைப் பாடாத கவிஞர் உண்டா என்ன? அதை கவிஞர் மீராவைப்
போல் வித்தியாசமாகச் சொல்லி நம் மனதிலும் இடம்பிடிக்கிறார் கவிஞர்: இதில் சிறப்பு என்னவென்றால், ஆணாக மட்டுமல்ல,
பெண்ணாகவும் ஒரு கவிஞனால் மாறி அவள் சார்பாக யோசிக்க முடியும் என்பதுதான்!
ஆழமாகத் தேடிப்
பார்க்கிறேன்.
எல்லோரின் அவன்களும் இருக்கிறார்கள்
என்னவனைத் தவிர
வானவில்லாய் மிளிர்ந்தது!
கருப்பு மையில் எழுதிய
உன் பெயர்.
தள்ளுவதா? இழுப்பதா?
திறக்கத் தெரியவில்லை
அவளின் கண்ணாடி கதவை.
நிறைவாக வந்திருக்கும் இத்தொகுப்பின்
ஒரே குறை – கவிதைகளின் எண்ணிக்கைக் குறைதான். ஆயினும் குறளின் சீர் குறைவாகவே இருந்தாலும் நிறைவான கருத்துகள் இருப்பதால்
குறளின் பெருமை ஒன்றும் குறைந்து விட வில்லையே!
எனது அணிந்துரையின் நிறைவாக ,
மேலத்தெருவும் கீழத்தெருவும்
ஒன்றாகிறது
தெருவிளக்கில் –
என்று கவிஞர் எதார்த்தமாகச் சொல்லியிருப்பது உண்மை என்றாலும், அகவெளிச்சம் கிடைக்க “அம்பேத்கர் என்னும் தெருவிளக்கு” என்பதை நாம் சேர்த்துக் கொள்ளலாம். ஏனென்றால் நமது தமிழ்ச் சமூகத்தின் உயர்வை, இழுத்துக்
கீழே தள்ளி மிதித்துக் கொண்டே இருப்பது இங்கே புரையோடிப் போயிருக்கும் சாதி தான்!
அதனால்தான் –
“சாதி ஒழித்திடல் ஒன்று – நல்ல தமிழ் வளர்த்தல் மற்றொன்று
பாதியை நாடு மறந்தால் – மற்ற பாதி துலங்குதல் இல்லை” என பாரதி தன்னிடம் சொன்னதாகப் பாரதிதாசன்
சொல்வார்.
நாமும் இதைத் தொடர்ந்து சொல்வதோடு செயல்பாட்டுக்கும் வரச் செய்ய வேண்டும். அந்த வகையில் அழகாகவும் அர்த்த நிறைவோடும் நறுக்கென்று
சொல்லத் தெரிந்த பாஸ்கர் கோபால், நல்ல கவிஞராகப் பெயரும புகழும்
பெற்றுத் திகழ்வார் என்று நான் திடமாக நம்புகிறேன்.
இருகரம் பற்றி இதயம் நிறைய வாழ்த்தி மகிழ்கிறேன்.
அன்புடன்,
நா.முத்துநிலவன்,
மாநிலத் துணைத் தலைவர் –
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்,
புதுக்கோட்டை – 622 004
10-8-2026 திங்கள்
----------------------------------------------------------------------------------------------------------------
நன்றி : கவிஞர் தங்கம் மூர்த்தி,
புலவர் கும.திருப்பதி
அன்புத் தங்கையர்
இரா.ஜெயா, மைதிலி,
தோழர் சோலச்சி
'வீதி' கலை-இலக்கியக் களம்
ஒருங்கிணைப்பாளர் தங்கை மு.கீதா,
"விதைக்கலாம்" ஸ்ரீமலையப்பன் உள்ளிட்ட
நம்பிக்கை நட்சத்திர நண்பர்கள் ,
சிறப்பு நன்றி :
பாஸ்கரின் தந்தை
திரு கோபால் அவர்களுக்கும்
தாயார்க்கும், பாஸ்கர் கோபாலின் இணையர்
அன்பு மகள் சீத்தாவுக்கும்,
அன்புக் குழந்தைகள்
ரிஷிகேசவ், ஆதிரன் இருவர்க்கும்
எப்போதும் போல நிகழ்வுக்கு வந்திருந்த புதுக்கோட்டை நண்பர்கள் அனைவர்க்கும்
-----------------------------------------------------------------------------------
.jpg)
.jpg)






கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக