திருக்குறளுக்குத்தான் எத்தனை எத்தனை ஆய்வுகள்! தமிழில் வெளிவந்துள்ள ஆய்வு நூல்களில் திருக்குறள் அளவுக்கு ஆய்வு செய்யப்பட்ட வேறு நூல் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை!
ஆனாலும், ‘அறிதோறும்’ ஆய்வாளரின் ‘அறியாமை’யைக் காட்டிக் கொண்டே இருப்பதும் இன்று வரை இந்தத் திருக்குறள் தான்!
அண்மையில், திருச்சியில் பிறந்து இப்போது அமெரிக்க வாசியாக உள்ள முனைவர் தேமொழி அவர்களின் நூல் தனிச்சிறப்பானது! இதற்கோர் அணிந்துரை எழுதக் கேட்ட முனைவர் தேமொழிக்கு நன்றி!
-----------------------------------------
முன்னுரையைப் படித்த கையோடு, முனைவர் தேமொழியின் நூல்களை மட்டுமின்றி தமிழ்மரபு அறக்கட்டளைப் பதிப்பகத்தினர் வெளியிட்டுள்ள நூல்களையும் வாங்கிப் படிக்கும்படி புதுப்புதிய சிந்தனைகளை வரவேற்கும் உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
-----------------------------------------------
தேமொழி உரைத்தது, செவ்வை நன்மொழி!
அணிந்துரை – நா.முத்துநிலவன்
முனைவர் பட்ட ஆய்வுகள், பல்கலைக் கழக ஆய்வு நூல்கள் பலவும் –தரவுகளின் திரட்டுகள் என்பதைத் தாண்டி, புதிய சிந்தனைகளுக்கான ஆய்வு நூல்களாக
இருப்பதில்லை.
தரவுகளைத் திரட்ட, இப்போதுள்ள கூகுள் உள்ளிட்ட தேடுபொறிகள், செய்யறிவு (ஏ.ஐ.) உள்ளிட்ட தொழில் நுட்பங்கள் வரும் முன்பே, தமக்குத் திரட்டக் கிடைத்த உதவிகளை
பதிப்பின் பின் இணைப்புகளில் தந்துசென்ற பேரறிஞர் பலருக்கும் தமிழ்கூறும்
நல்லுலகம் என்றும் கடன்பட்டுள்ளது.
ஓலைச் சுவடிகள் பலவற்றைச்
சேகரித்து, ஒப்பிட்டு, அச்சேற்றும் கடுமையான பணியில் தம் வாழ் நாளைக்
கரைத்துக் கொண்ட ஆறுமுக நாவலர், சி.வை.தாமோதரனார், உ.வே.சாமிநாதர், மறைமலை அடிகள், எஸ்.வையாபுரியார், சைவ சித்தாந்த நூற்பதிப்புக்
கழகத் திருவரங்கனார் மற்றும் தமிழ் இலக்கிய ஆய்வுகளுக்குப் பேருதவியாக, ‘சொல்லடைவு’ (https://tamilconcordance.in/) கண்டு தந்த பேரா. முனைவர் ப.பாண்டியராஜா போலும் பெருந்தமிழறிஞர்களை நாம்
மறக்கவோ மறைக்கவோ கூடாது. ஆயினும் சிலர், அந்தத் திரட்டை, ‘தமது’ ஆய்வு போலவே காட்டிக் கொள்ளும் ‘திருட்டு’ வேலையும் நடந்திருக்கிறது. அவர்கள், இந்தத் தகவல்களை வெறும் ‘வியாக்யானங்களாக’
– விளக்கங்களாகவே – தந்தனர்.
உலகத்தைப் பற்றிய விளக்கங்களைப் பலரும் தந்துள்ளனர், ஆனால், இவ்வுலகை மாற்றுவது எப்படி? என்பதே கேள்வி -
மார்க்ஸ்
அரிய மாற்றுச் சிந்தனைகளைக் கொண்ட எழுத்தாளர் தேமொழி. ஆய்வுகளுக்கு உதவிய நூல்
பட்டியலையும் தவறாமல் தருவது, இவர் எழுத்துகளின் மீதான மரியாதையை, நம்பிக்கையை அதிகரிக்கிறது.
ஏற்கெனவே சிறுகதைகள், அறிவியல் - சமூக இலக்கிய ஆய்வுகள் என 23 நூல்களை எழுதி, தமிழ் கூறும் நல்லுலகில்
தமக்கென ஓர் இடம் பிடித்திருக்கும் தோழர் தேமொழி, தமுஎகச விருது உள்ளிட்ட, கவுரவமான விருதுகளையும்
பெற்றிருக்கிறார். இந்நூல், விருதுகளைத் தாண்டிய சமூக உணர்வு மிக்கவர்
இவர் என்பதையும் உணர்த்துகிறது,
“குறளுக்கு உரிமை கோரல்” எனும் கவனம் ஈர்க்கும் தலைப்பைக் கொண்ட இந்நூல், 17 தலைப்புகளில் ‘ஒரு பொருள் குறித்த பலகோண ஆய்வு” எனும்படி, வியப்பும் மகிழ்ச்சியும் தருகிறது! குறள் குறித்த பொதுவான பற்பல செய்திகளுடன், பலர் அறியாத, அறிந்தால் வியக்கத்தக்க பல அரிய செய்திகளைத் தாங்கி, ஆய்வாளர்க்கு நிறைவு தரும் நூலாக வந்திருக்கிறது. இதற்காகத் தோழர் தேமொழி அவர்களுக்கு எனது இனிய பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
‘தேமொழி உரைத்தது செவ்வை நன்மொழி’ – நன்றி : சிலம்பு
தமிழ் நூல்களில் திரு என்னும் அடைமொழியோடு வருகின்ற முதல் நூல்திருக்குறள் என்னும் செய்தியை முதல் கட்டுரையிலேயே தருகிறார் தேமொழி. இது, எனக்கு வேறுபல சிந்தனைகளைத் தருகிறது!
மணமாகி யிருந்தாலும்
இல்லாவிட்டாலும் ஆண்களுக்குத் ‘திரு’ என அடைமொழி தருகிறோம். ஆனால், மணமான பெண்ணுக்கு ‘திருமதி’ என்றும் மணமாகாத பெண்ணுக்கு ‘செல்வி’ என்றும் அடைமொழி தந்து ஆண்-பெண் பேதத்தை
வளர்க்கிறோம். இதைப் பொதுமைப்படுத்த, ‘திருமிகு’ என்னும் சொல்லைப்
பயன்படுத்துவது வரவேற்கத்தக்கதே. எனினும், திரு என்னும் சொல்லே ‘இந்துமதப்
படுத்தும்’ சொல்லாக இருப்பதை - நூல்கள் மட்டுமின்றி பெயர், ஊர், நிகழ்வுகள், செயல்கள் அனைத்திலும் இருப்பதை - நுட்பமாகக் கவனிக்கத்
தவறிவிட்டோமே!
தமிழில் திரு எனும் அடைமொழி கொண்ட திருவாசகம் போலும் நூல்கள், திருநாவுக்கரசர் போலும்
பெயர்கள், திருவையாறு போலும்
ஊர்ப்பெயர்கள் என அனைத்தும் “இந்துமயமாக்க”ப் பட்டவை தானே?
இனி, ‘திரு’ என்னும் சொல்லுக்கு மாற்றாக - அதற்கு நிகராக - மதச்சார்பற்ற வேறு
ஒரு சொல்லை நாம் கண்டுபிடிக்க வேண்டும்!
இதன் பண்பாட்டுத் தாக்கமாகவே தமிழகக் கிறித்துவர்
பயன் படுத்தும்திருத்தந்தை(Father/Fr.) அருட்திரு(Reverend/Rev.) பேரருட்திரு(VeryReverend/VeryRev)முதலான சொற்களைக் கவனிக்க வேண்டும்.
இந்த இடத்தில், தமது மதப் பண்பாட்டைக் கலப்பின்றிக் காத்துவரும்
இஸ்லாமியர்கள், திரு என்னும் அடைமொழியைத் தவிர்த்து வருவதைக்
கவனிக்கலாம். ‘ஹஜ்’ சென்று வந்த இஸ்லாமியப்
பெரியவரை ‘ஹாஜி’ என்றும், பிற இஸ்லாமியரைக் குறிக்கும்
போது -- திரு என்னும் இந்துமதச்
சார்புச் சொல்லைத் தவிர்த்து –- உருது, பாரசீக மொழியிலிருந்து வந்த ‘ஜனாப்’ என்னும் சொல்லைப்
பயன்படுத்துவதையும் கவனிக்க!
குறளின் பழைய உரையாசிரியர்
பதின்மர் பெயர்களைக் குறிப்பிடும் தேமொழி, அவர்தம் உரை வேறு பாடுகளை மட்டுமின்றி குறள் எண்களை
மாற்றி யிருப்பதையும் குறிப்பிடுவது முக்கியமான குறிப்பு. “இன்றைய தமிழ் உலகம் பயன்படுத்தி வரும் குறள் வரிசை எண், இயல் பிரிவுகள்
அனைத்தும், பரிமேலழகர் தந்தவை தான்”” என்னும் செய்தியே
பலரறியாத செய்தி தான்! மணக்குடவர் முதல், தமிழறிஞர் சாலமன் பாப்பையா வரை குறளின் பால் வரிசை
மாறுபாடுகளை எடுத்துச் சொல்லியிருந்தும் பொதுச் சமூகம் வரை இச்செய்தி போய்ச்
சேரவில்லை!
வரிசை எண்களும் இயல் பிரிவுகளும் வள்ளுவர் தந்ததாகவே
நினைக்கும் அளவுக்கு, பரிமேலழகரின் உரை பரவலாக்கப் பட்டதும் கூட இந்துத்துவ
மேலாதிக்கம் என்றுதான் சொல்ல வேண்டும்! பரிமேலழகர் தான் அறத்துப்பால் உரைப் பாயிரத்தின்
தொடக்கத்திலேயே, “அறமாவது மநு முதலிய நூல்களில் விதித்தன
செய்தலும், விலக்கியன ஒழித்தலும் ஆம்” எனத் தனது இந்துமதத் திணிப்பைத் தெளிவாகத்
தொடங்குகிறார்!
அவர் உரையின் இடையிடையே வேத - வைதீக, மநு, கீதை நூல்களின் விளக்கங்களை
எடுத்துச் சொல்லி, குறளை ‘இந்துமயப் படுத்தியது மட்டுமின்றி, அதன் மதப் பொதுமைக்
கருத்துகளைப் பின் தள்ளி ‘அனைத்து மதத்தவர்க்கும் உரிய -இந்துமத- நூல்’ என குறளைப் ‘பொதுமைப்படுத்திய’ பெருமை(?)யும்
பரிமேலழகரையே சாரும்! இதுபற்றித் தனியாகவும் விரிவாகவும் ஆய்வு செய்ய
வேண்டிய அவசியம் உள்ளது!
இந்த இடத்தில், “உலகப் பொதுமறை என்பது
தவறான அடைமொழி! பொது என்பதும் மறை
என்பதும் ஒன்றுக்கொன்று எதிரான சொற்கள், பொதுவான எதுவும்
மறைவாக இருக்க முடியாது, மறைவான எதுவும்
பொதுவாக இருக்க முடியாது, எனவே குறளை “உலகப் பொது முறை” என்று சொல்வதே
சரியானது” என்னும் சிந்துவெளி ஆய்வாளர்
ஆர்.பாலகிருஷ்ணன் அவர்களின் கூற்றே சரியாகத் தோன்றுகிறது.
“பிற அறநூல்களைப் போல் அல்லாமல் பொது அறம் பேணும் திருக்குறளைப் புலவர் பலர் போற்றிப் பாடிய பாடல்களின் தொகுப்பு நூலே திருவள்ளுவ மாலை என்ற நூலாகும்” எனும் கருத்து சரியல்ல! ‘திருவள்ளுவ மாலை’ பற்றி நான் எழுதிய -- தோழர் தேமொழியே எடுத்து வெளியிட்ட - கட்டுரை இது பற்றிய கூடுதல் சிந்தனைகளைத் தரும் என்றுநம்புகிறேன். விரும்புவோர் பார்க்க வேண்டிய இணைப்பு: https://mymintamil.blogspot.com/2022/01/blog-post_29.html
குறள் குறித்தும் வள்ளுவர் குறித்தும் பல சிறப்புச் செய்திகளைத் தொகுத்துத்
தருகிறார் தேமொழி. இதில் வள்ளுவர் வழியில் திருமணம் என்பதும் ஒன்று! என் மகள் உட்பட - ஏராளமான வேத வைதீகச் சடங்குகளை மறுத்து நடத்தப்படும் பகுத்தறிவுத் திருமணங்கள், வள்ளுவர் சாட்சியாகவே தமிழ்நாட்டில் நடந்து வருகின்றன.
“வள்ளுவரின் மேல்
புகுத்தப்பட்ட புனைவுகள்” என்னும் ஒரு பத்தி தனி ஒரு நூல் போலவே ஆழமாக உள்ளது “எல்லீஸ்
முயற்சியில் வெளியிடப்பட்ட திருக்குறள் நூலில் திருவள்ளுவர் வரலாறு குறித்த
புனைவுகள் எதுவும் தமிழிலோ ஆங்கிலத்திலோ இடம்பெறவில்லை. அச்சுக்குச் சென்ற
திருவள்ளுவமாலை நூலில் சில பாடல்கள் இடைச் செருகலாக நுழைக்கப்பட்டிருப்பதைச் சுவடி
தந்து உதவிய கந்தப்பனார் கண்டறிந்து அதை ஜார்ஜ் ஆரிங்டனிடம் முறையிட்டார் என்று
பத்திரிகை ஒன்றில் வெளியான செய்தி ஒன்று அயோத்தி தாசரால் சுட்டிக் காட்டப்படுகிறது” என்று, (காலந்தோறும்
வள்ளுவர் வரலாறு - கட்டுரை) தமிழ்மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் தலைவர்
தோழர் க.சுபாஷிணி அவர்களின் மேற்கோளைக் காட்டியிருப்பதும் சிறப்பானது.
திருக்குறள் “மொழிபெயர்ப்பு” பற்றிய தகவல்களைத் திரட்டித் தேமொழி, இந்தியமொழிகளில் அவாதி, அஸ்ஸாமி, இந்தி, உருது, ஒரியா, கரோ, கன்னடம், காஷ்மீரி, குஜராத்தி, கொங்கணி, கொடவா, கொரகா, சந்தாலி, சமஸ்கிருதம், சௌராஷ்ட்ரா, டோக்ரி, துளு, தெலுங்கு, நேப்பாளி, பஞ்சாபி, படுகா, பிராஹுவி, போடா, போஜ்பூரி, மணிப்பூரி, மராத்தி, மலையாளம், மைத்திலி, வக்ரிபோலி, வங்காளம் ஆகிய 30 மொழிகளில் வந்திருப்பதைக்
குறிப்பிடுகிறார்!
‘வக்ரிபோலி’ என்பது நரிக்குறவர் பேச்சுமொழி! அவர்கள் இடம் பெயரும் மாநில
மொழிகளின் கலப்பு மொழியாகவே உள்ள இம்மொழிக்கு எழுத்துகள் இல்லாததால், ஆய்வாளர்கள் இம்மொழியை ஆவணப்படுத்த தமிழ், ஆங்கில எழுத்துக்களை (ஒலிபெயர்ப்பு முறையில்) பயன்படுத்தி வருகின்றனர்! அந்த வக்ரிபோலியிலும் வெளிவந்திருப்பது, வள்ளுவரின் வாழ்வியல் கருத்துகளின் வலிமை என்பதன்றி வேறென்ன?!
ஒரு கருத்தை ஆய்வு செய்யும் போது, பலவழிகளிலும் அதன் உண்மைத்
தன்மையை ஒப்பிட்டுப் பார்த்து உறுதி செய்ய வேண்டும் என்று வள்ளுவர் இரண்டு
குறள்களில் கூறுகிறார். அதை எப்படிப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கு
தேமொழி மூன்று தளங்களை விளக்குவது அருமை!
“தரவுகளின் உண்மை அறிய வள்ளுவர்
காட்டும் வழிமுறைகள் ... அரசர் ஒற்றர் மூலம் அறியும்
உளவுச் செய்தியை எவ்வாறு ஆராய வேண்டும் என்று அறிவுறுத்த விரும்பும் வள்ளுவர்,
ஒற்று ஒற்றித் தந்த பொருளையும்
மற்றுமோர்
ஒற்றினால் ஒற்றிக் கொளல் (குறள்-588) என்கிறார். என்று ‘காரண
காரியத்தோடு’ தேமொழி காட்டும் சான்றுகள் ஆய்வு என்பது எப்படி
இருக்க வேண்டும் என்பதற்கான எடுத்துக் காட்டாகவே இருக்கிறது.
அறவியல் நோக்கில் வள்ளுவமும் மேகலையும் - என்னும் 7ஆவது
கட்டுரையில் ‘இந்திய மண்ணில் தோன்றிய சமயங்களை யும், அயலகத்தில் தோன்றிய
சமயங்களையும் தமிழ் மக்கள் ஏற்றுக் கொண்டார்கள் என்பதால் பலசமய நெறிகளுக்கு
ஆற்றுப்படுத்தும் இலக்கிய நூல்கள் தமிழில் உண்டு என்ற சிறப்பிற்கு உரியது நம்
தமிழ்மொழி” என்பது தமிழின் உண்மையான பெருமைகளில் ஒன்று!
சமணத்திற்குச் சிந்தாமணி,
பவுத்தத்திற்கு மேகலை,
சைவத்திற்குப் பெரியபுராணம்,
வைணவத்திற்குக் கம்பராமாயணம்,
இஸ்லாத்திற்கு சீறாப்புராணம்,
இருகிறித்துவத்திற்கும் தேம்பாவணி,
ரட்சணிய யாத்திரிகம்,
பகுத்தறிவாளர்க்கு இராவண காவியம் என –
நம் தமிழ்தான், உலக மொழிகளிலேயே, ‘ஜனநாயக
மொழி’!
என்பது எனது கருத்து! சரிதானே?
தொடர்ந்து, “அறம் என்பது
வெறும் நீதி அல்லது சட்ட விதிகளை மட்டும் குறிக்காமல், அடிப்படை வாழ்வியல் கொள்கையாகப்
பார்க்கப் படுகிறது” என்பது முக்கியமான கருத்து. அறம், தர்மம், சட்டம், நீதி என்பன தனித்தனிப் பொருள்
தரும் சொற்கள் என்பது பற்றி அறிஞர் ராஜ் கௌதமன், பேராசிரியர் சுப.வீரபாண்டியன்
கருத்துகளும் முக்கியமானவை.
இந்தப் பொருளில் ”நாலடி இரண்டடி கற்றவரிடத்தே வாயடி கையடி
ஆகாது” போல குறளோடு ஒப்ப வைத்துப் போற்றப்படும் நாலடியார் கூட குறளுக்குச்
சமமானதல்ல! நாலடியாரில் முதலில் வருவதும், அதிக எண்ணிக்கையிலான 120 பாக்களைக் கொண்டதும்
துறவற வியல்தான்! அடுத்து வரும் இல்லறவியலில் 10வெண் பாக்கள்! ஆனால் குறளில் முதலில் வரும்
இல்லற வியலில் 200பாக்களும், அடுத்த துறவறவியலில் 130பாக்களும்
உள்ளன எனும்போது, நாலடியார் துறவுக்கே முக்கியத்துவம் கொடுத்திருப்பதை
அறிந்து, நாலடிக்கும் குறளுக்குமாக ‘பொதுப்
புத்தியில்’ ஏற்றப்பட்டுள்ள ஒப்பீடுகள் சரியல்ல என்று
தெளிவடையலாம்.
பெண்ணியப் பார்வையில் கலைஞரின் திருக்குறள் உரை எனும் கட்டுரையில் வாழ்க்கைத் துணைநலம், பெண்வழிச் சேறல் அதிகாரங்கள் -இக்காலத்திற்குப் பொருந்தாது என்றால் அந்த உண்மையை நாம் ஏற்க வேண்டும்
என்னும் கலைஞரின் உரை ஏற்கத் தக்கதுதான்! இந்த அதிகாரங்களுக்குக் கலைஞர்
உரையே காலத்திற் கேற்பப் பொருந்துபவை என்பதைப் பின்வரும் குறளுக்கு மற்ற அனைவரின்
உரையிலிருந்து மாறுபட்ட உரையைத் தந்த கலைஞரின் உரையோடு ஒப்பிட்டது சிறப்பு
“ஒருமைக்கண் தான்கற்ற
கல்வி ஒருவற்கு எழுமையும் ஏமாப்பு உடைத்து” என்னும் குறளுக்கு கலைஞர் மு.கருணாநிதி
அவர்களின் உரையே சிறப்பு என்பதை இதைப் படிப்பவர்கள் அந்த உரையை எடுத்துப்
படித்துப் பார்த்தால்தான் புரியும். இதே தலைப்பில், ‘ஈன்ற பொழுதில்’ எனும் குறளில் வரும் ‘கேட்ட தாய்’ என்பதற்குப் பரிமேலழகர் தரும் ‘மநு’வழி உரையை ஒப்பிட்டுப் பார்த்தால், கலைஞரின் உரைச் சிறப்பும்
புரியும்.
சிவிகைப் பயணமும் அறவழியும் கட்டுரையில்... குன்றக்குடி அடிகளார் உரையை மேற்கோள் காட்டி “பல்லக்கில்
பட்டினப் பிரவேசம் செய்ய விரும்பும் ஆதீனங்கள் உள்ள இக்காலத்தில், “அறவோர் என்று தம்மைக் கூறிக் கொள்பவர் பல்லக்கில் பயணிப்பது அறம் பிழைபட்ட
செயல்” என்று மறுத்துக் கூறியவர் ஓர் ஆதீனத் தலைவர் என்பது
சிறப்பு!
திருக்குறள்
வைப்பு முறை- கட்டுரை சிறப்பானது! இந்துச் சமயங்கள் மனிதர் அறிய வேண்டிய மெய்ப்
பொருள்கள் (புருஷார்த்தம்-தருமம்/ அறம், அருத்தம்/பொருள், காமம்/இன்பம், மோட்சம்/ வீடு) என்று நான்கு வகைப் பட்டாலும்
வள்ளுவரின் குறளை இதுவரை யாரும் வீடு என்ற பிரிவுக்குள் வகைப்படுத்த வில்லை
என்னும் தேமொழியின் ஆய்வு சரியானதே. பின் வந்த -- “அறம்பொருள் இன்பம் வீடடைதல் நூற்பயனே” என்ற -- நன்னூல்தான் இவ்வாறு பிறழ்உரை
கூறுவோர்க்கான அடிப்படை என்பதையும் புரிந்து கொள்க!
திருப்பனந்தாள் ஸ்ரீகாசி மடம்
வெளியீடாக முப்பாலுக்குமான “திருக்குறள் உரைக்கொத்து” சிறப்பாக வந்துள்ளது. இந்நூல்பரிமேலழகர், மணக்குடவர், பரிப்பெருமாள், பரிதி, காலிங்கர் உரைகளின் தொகுப்பாக
உள்ளது. மற்றும், ‘அறியப்படாத
தமிழ்மொழி’ எனும் அரிய நூல் ஒன்றை வெளியிட்டுள்ள பேராசிரியர்திருகண்ணபிரான்ரவிசங்கர் (‘கரச’) இந்த ‘வைப்புமுறை’ பற்றிச் சிறப்பாக ஆய்வு
செய்திருக்கிறார்.
நமது கல்வி முறை கட்டுரையில் “...தமிழகத்தில்
தொடங்கிய போராட்டத்தால்... என்பதன் முன்ஒட்டாக, ‘தந்தை
பெரியார்’ என்னும் இரண்டு சொற்களைச் சேர்த்திருக்க வேண்டும்
என்பது எனது கருத்து.
வள்ளுவம் என்ற
எடுத்துக்காட்டுக் களஞ்சியம்- இயற்கையில் இருந்தும் விலங்குகள், பறவைகள், தாவரங்கள், கருவிகள் பற்பலவும் வள்ளுவரால் எடுத்துக்
காட்டுகளாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன என்று ஒரு பெரும் பட்டியலையே தருகிறார்! அப்பப்பா! சற்றொப்ப 350 எடுத்துக் காட்டுகளை தமிழறிஞர்
ஒருவர் சொல்வதாகச் சொல்லியிருப்பது தேமொழியின் ஆய்வு நேர்மை
பள்ளிப் பாடங்களில் திருக்குறள் - இது பற்றி எனக்கே வேதனையான சில
அனுபவங்கள் உண்டு! ‘மாதானு பங்கி’ போலும் அடைமொழிகள் தேவையற்றவை
என்றும் ”காந்தியைத்
தமிழ் படிக்க வைத்து, தமிழில் மோ.க.காந்தி என்று கையொப்பம் இட வைத்தது திருக்குறள் என்று போட வேண்டும்
என்றும் பாடத்திட்டக் குழுவில் போராடியும் முடியாததால் நான் வெளியேறிய அனுபவங்கள்
எனக்குண்டு!
"திருக்குறளை
தேசிய நூலாக அறிவிக்க வேண்டும்" கட்டுரையில் கோரிக்கை பற்றி மட்டும் சொல்லாமல், சங்கர மடத்தின் 108குறள் என்னும் உரைநூலுக்கு “அதுஎன்ன 108” என்பது பற்றியும் ஆய்வு
செய்கிறார் இதெல்லாம் பலரும் பேசாப்பொருள்! பேசியிருக்கிறார் தேமொழி!
இறுதியாக நூலின் தலைப்புக் கட்டுரை மிகச் சிறப்பு! இது பற்றியே 5,6 பக்கங்களுக்கு எழுதலாம்! ஆனால் “தோட்டத்தில்
பாதி கிணறு” கதையாகி விடக் கூடாது என்றே நிறுத்துகிறேன். ஒரு நல்ல, விருப்பு வெறுப்பற்ற, தரவுகள் நிரம்பிய, குறள் பற்றிய பலநூறு
ஆய்வுகளிடையே, தனித்துவமான பார்வை கொண்ட ஆய்வு நூல் இது என்னும்
வகையில் தோழர் தேமொழிக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும்.
தோழமையுடன்,
நா.முத்துநிலவன்,
---------------------------------------------------------------------------
நீங்களும் இந்த நூல்களைப் பெற
இணைய வழி இணைய -
-----------------------------------------------------------

