வந்தே மாதரம் என்னும் பாரதியார் பாடல்
தமிழ்நாட்டில் மிகவும் புகழ்பெற்ற பாடல்
இந்தப் பாடலுக்கும் பங்கிம் சந்திரரின் வந்தேமாதரம் பாடலுக்கும் சில ஒற்றுமை – வேற்றுமைகள் உண்டு!
இவ்வாறான இரண்டு பாடல்களை
பாரதி எழுதியிருக்கிறார் என்பது சுவையான செய்தி
“வந்தே மாதரம் என்போம் எங்கள் மாநிலத் தாயை வணங்குதும் என்போம்"
என்று தொடங்கும் பாடல், பங்கிம் சந்திரரின்
"வந்தே மாதரம்" என்ற முழக்கத்தை மையமாகக்
கொண்டு பாரதியார் தனது சொந்தக் கற்பனையில் தமிழ் மண்ணின் சூழலுக்கு ஏற்ப எழுதியதாகும்.
இப்பாடலில் இந்தியாவில் உள்ள ஜாதி, மதப் பிரிவினைகளைக்
கடந்து அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்ற சமூகக் கருத்துகளையும் அவர் வலியுறுத்தியுள்ளார்
ராகம் - நாதநாமக்கிரியை
தாளம் – ஆதி
பல்லவி
வந்தே மாதரம் என்போம் - எங்கள்
மாநிலத் தாயை வணங்குதும் என்போம். (வந்தே)
சரணங்கள்
ஜாதி
மதங்களைப் பாரோம் - உயர்
ஜன்மம்இத் தேசத்தில் எய்தின ராயின்
வேதிய ராயினும் ஒன்றே - அன்றி
வேறு குலத்தின ராயினும் ஒன்றே (வந்தே)
ஈனப் பறையர்க ளேனும் அவர்
எம்முடன் வாழ்ந்திங் கிருப்பவர் அன்றோ?
சீனத் தராய்விடு வாரோ? - பிற
தேசத்தர் போற்பல தீங்கிழைப் பாரோ? (வந்தே)
ஆயிரம் உண்டிங்கு ஜாதி - எனில்
அன்னியர் வந்து புகல்என்ன நீதி? - ஓர்
தாயின் வயிற்றில் பிறந்தோர் - தம்முள்
சண்டைசெய் தாலும் சகோதரர் அன்றோ? (வந்தே)
ஒன்று பட்டால் உண்டு வாழ்வே - நம்மில்
ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே
நன்றிது தேர்ந்திடல் வேண்டும் - இந்த
ஞானம் வந்தாற்பின் நமக்கெது வேண்டும்? (வந்தே)
எப்பதம் வாய்த்திடு மேனும் - நம்மில்
யாவர்க்கும் அந்த நிலைபொது வாகும்
முப்பது கோடியும் வாழ்வோம் - வீழில்
முப்பது கோடி முழுமையும் வீழ்வோம் (வந்தே)
புல்லடி மைத்தொழில் பேணிப் - பண்டு
போயின நாட்களுக் கினிமனம் நாணித்
தொல்லை இகழ்ச்சிகள் தீர - இந்தத்
தொண்டு நிலைமையைத் தூவென்று தள்ளி (வந்தே)
(சிவப்பு மை வரிகள் புகழ்பெற்ற வரிகள்)
-----------------------------------------------
இனி பங்கிம் சந்திரரின் பாடலின் நேரடி மொழிபெயர்ப்பாக பாரதியார்
கவிதைகள் தொகுப்பில் உள்ள இரண்டு பாடல்:
ஜாதீய கீதம்-1 - பாரதியார்
(பங்கிம் சந்திர சட்டோ பாத்தியாயர் எழுதிய
வந்தே மாதரம் கீதத்தின் மொழிபெயர்ப்பு என்னும் இக்குறிப்பு,
பாரதியார் எழுதியது என்பது குறிப்பிடத் தக்கது)
இனிய நீர்ப் பெருக்கினை! இன்கனி வளத்தினை
தனிநறு மலயத் தண்காற் சிறப்பினை!
பைந்நிறப் பழனம் பரவிய வடிவினை! (வந்தே)
வெண்ணிலாக் கதிர்மகிழ் விரித்திடும் இரவினை!
மலர்மணிப் பூத்திகழ் மரன்பல செறிந்தனை!
குறுநகை யின்சொலார் குலவிய மாண்பினை!
நல்குவை இன்பம், வரம்பல நல்குவை!
முப்பதுகோடி வாய் (நின்னிசை)
முழங்கவும்
அறுபது கோடிதோள் உயர்ந்துனக் காற்றவும்
திறனிலாள் என்றுனை யாவனே செப்புவன்?
அருந்திறல் உடையாய்! அருளினைப் போற்றி!
பொருந்தலர் படைபுறத் தொழித்திடும் பொற்பினை! (வந்தே)
நீயே வித்தை நீயே தருமம்!
நீயே இதயம் நீயே மருமம்!
உடலகத் திருக்கும் உயிருமன் நீயே! (வந்தே)
தடந்தோள் அகலாச் சக்திநீ அம்மே!
சித்தம் நீங்காதுறு பக்தியும் நீயே!
ஆலயந் தோறும் அணிபெற விளங்கும
தெய்விக வடிவமும் தேவியிங் குனதே! (வந்தே)
ஒருபது படைகொளும் உமையவள் நீயே!
கமலமெல் லிதழ்களிற் களித்திடுங் கமலைநீ!
வித்தை நன் கருளும் வெண்மலர்த் தேவிநீ! (வந்தே)
போற்றி வான்செல்வி! புரையிலை நிகரிலை!
இனிய நீர்ப்ப் பெருக்கினை, இன்கனி வளத்தினை
சாமள நிறத்தினை சரளமாந் தகையினை!
இனியபுன் முறுவலாய்! இலங்குநல் லணியினை!
தரித்தெமைக் காப்பாய், தாயே போற்றி!
(வந்தே)
--------------------------------------------------------------------------------
ஜாதீய கீதம்-2
(புதிய மொழிபெயர்ப்பு)
நளிர்மணி நீரும் நயம்படு கனிகளும்
குளிர்பூந் தென்றலும் கொழும்பொழிற் பசுமையும்
வாய்ந்துநன் கிலகுவை வாழிய அன்னை! (வந்தே)
தெண்ணில வதனிற் சிலிர்த்திடும் இரவும்
தண்ணியல் விரிமலர் தாங்கிய தருக்களும்
புன்னகை ஒளியும் தேமொழிப் பொலிவும்
வாய்ந்தனை இன்பமும் வரங்களும் நல்குவை. (வந்தே)
கோடி கோடி குரல்கள் ஒலிக்கவும்
கோடி கோடி புயத்துணை கொற்றமார்
நீடு பல்படை தாங்கிமுன் னிற்கவும்,
கூடு திண்மை குறைந்தனை எஎன்பதென்?
ஆற்றலின் மிகுந்தனை, அரும்பதங் கூட்டுவை,
மாற்றலர் கொணர்ந்த வன்படை யோட்டுவை. (வந்தே)
அறிவும் நீ தருமம் நீ, உள்ளம் நீ, அதனிடை
மருமம் நீ உடற்கண் வாழ்ந்திடும் உயிர் நீ
தோளிடை வன்புநீ, நெஞ்சகத்து அன்புநீ.
ஆலயந் தோறும் அணிபெற விளங்கும்
தெய்வச் சிலையெலாம், தேவி, இங்குனதே. (வந்தே)
பத்துப் படைகொளும் பார்வதி தேவியும்
கமலத் திகழ்களிற் களித்திடும் கமலையும்
அறிவினை யருளும் வாணியும் அன்னைநீ! (வந்தே)
திருநி றைந்தனை, தன்னிக ரொன்றிலை!
தீது தீர்ந்தனை, நீர்வளஞ் சார்ந்தனை
மருவு செய்களின் நற்பயன் மல்குவை
வளனின் வந்ததோர் பைந்நிறம் வாய்ந்தனை
பெருகு மின்ப முடையை குறுநகை
பெற்றொ ளிர்ந்தனை பல்பணி பூண்டணை.
இருநி லத்துவந் தெம்முயிர் தாங்குவை,
எங்கள் தாய்நின் பாதங்கள் இறைஞ்சுவாம்! (வந்தே)
-----------------------------------------------------------------------------------------------
இனி இந்த விவாதம் தொடர்பான
சன் தொலைக்காட்சியின் விவாதத்தில்,
தமுஎகச மாநிலத் தலைவர்களில் ஒருவரான
எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யாவின்
தொலைக்காட்சி
உரை இதோ:
----------------------------------------------------------------------
சன் நியூஸ் தொலைக்காட்சி விவாதத்தின்
இணைய இணைப்பு கீழுள்ளது
https://youtu.be/DQ7OE_8agYo?
-----------------------------------------------------------------------------------------
இந்திய நாடாளுமன்றத்தில், ஆளும் கட்சிக்கும்
எதிர்க்கட்சிக்கும் இடையே 'வந்தே மாதரம்' பாடல்
விவாதம் தொடர்ந்து வருகிறது.
பாஜக தலைவர்கள் பலரும் இப்பாடலை கல்வி நிறுவனங்களில் பாடுவது கட்டாயமாக்கப்பட
வேண்டும் என வலியுறுத்துகின்றனர். ஆனால் பல எதிர்க்கட்சிகள், வந்தே
மாதரம் பாடலை கட்டாயப் படுத்தி திணிக்கக் கூடாது என எதிர்க்கின்றனர்.
வந்தே மாதரம் பாடலை 1875ஆம் ஆண்டில் பங்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதினார்.
இது, வங்க மொழி மற்றும் வட மொழிகளில் உள்ளது.
பின்னர்
பங்கிம் எழுதிய புகழ்பெற்ற,
ஆனால் சர்ச்சைக்குரிய 'ஆனந்தமடம்'
(Anandamath' -1885) என்ற நாவலில் இடம்பெற்றது.
பின்னர், ரவீந்திரநாத் தாகூர் இப்பாடலுக்கு இசையமைத்தார்.
'வந்தே மாதரம்' பாடலின் 150ஆவது
ஆண்டுடன் தொடர்புடைய நிகழ்ச்சிகளை நவம்பர் 7, 2025 அன்று தொடங்கி
வைத்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ‘1937ஆம் ஆண்டில் ஃபைசாபாத்தில்
நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்துக்கு முன்பாக 'அப்பாடலின் முக்கிய
பகுதிகளை காங்கிரஸ் நீக்கிவிட்டதாக' குற்றம் சாட்டியிருந்தார்.
அவர், "1937ஆம் ஆண்டில் வந்தே மாதரத்தின்
சில பகுதிகள், நீக்கப்பட்டன. வந்தே மாதரம்
பிளக்கப்பட்டது. இந்த அநீதி இழைக்கப்பட்டது ஏன்? இதுதான் பிரிவினைக்கான விதைகளை விதைத்தது," என்றார்.
பாஜக
செய்தித் தொடர்பாளர் சம்பிட் பத்ராவும்
'வந்தே மாதரம்' பாடல் தொடர்பாக நேரு 'இயல்பாக இல்லை'என குற்றம் சாட்டினார்.
இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் விதமாக, காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ், வந்தே மாதரம் தொடர்பாக சப்யாசாச்சி பட்டாச்சார்யா எழுதிய புத்தகத்தை மேற்கோளிட்டு எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
அதில், "1937ஆம் ஆண்டு காங்கிரஸ் செயற்குழு கூட்டத்திற்கு மூன்று நாட்களுக்கு முன்பு, ரவீந்திரநாத் தாகூர் இதுகுறித்து நேருவுக்கு எழுதியிருந்தார். வந்தே மாதரத்துடன் தனிப்பட்ட முறையில் தொடர்பு கொண்டிருந்தார், பாடலின் முதல் இரு சரணங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் பரிந்துரைத்தார்.
மேலும், ரவீந்திரநாத் தாகூரின் கடிதத்தால் ஏற்பட்ட
தாக்கத்தால் காங்கிரஸ் கூட்டத்தில் அத்தகைய முடிவு எடுக்கப்பட்டது. ஆனால், தாகூர் பிரிவினைவாத கொள்கையுடன் இருந்ததாக பிரதமர்
குற்றம் சாட்டுகிறார்." என தெரிவித்துள்ளார்.
உ.பி.யில் யோகி ஆதித்யநாத்
இதுதவிர, உத்தர பிரதேச முதலமைச்சர்
யோகி ஆதித்யநாத், 2025 நவம்பர் 10ஆம் தேதி
அன்று மாநிலத்தின் கல்வி நிறுவனங்களில் 'வந்தே மாதரம்'
பாடல் கட்டாயமாக்கப்படும் என அறிவித்தார்.
அம்மாநிலத்தில்
நவம்பர் 11ஆம்
தேதி, வந்தே மாதரம் பாடலின் 150ஆம் ஆண்டையொட்டி
நடந்த நிகழ்ச்சியில், "வந்தே மாதரத்தை எதிர்ப்பவர்கள் பாரத
மாதாவை எதிர்க்கின்றனர்." என்றார் யோகி.
மேலும், "இன்றைக்கும் இந்தியாவில்
வாழும், உண்ணும் சிலர், வந்தே மாதரம் பாடலை
பாடாமல் இருக்கின்றனர்." என்றார்.
அதற்கு பதிலாக சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் "முதலமைச்சர் நாற்காலி ஆட்டம் காணும்போது, அவர் வகுப்பு வாதியாகி விடுகிறார்." என தெரிவித்தார். மேலும் அவர், "இன்றைக்கு நாம் வந்தே மாதரம் குறித்து விவாதிக்கும் நிலையில், அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் அந்த சமயத்தில் இதுபற்றி விவாதித்திருக்க மாட்டார்களா?
அதனால்தான்
தேசிய கீதம் மற்றும் தேசிய பாடல் வழங்கப்பட்டிருக்கின்றன. வந்தே
மாதரத்தை பாடுவது அவசியம் என்றால், அது ஏன் கட்டாயமாக்கப்படவில்லை?
அதை மக்களின் விருப்பத்திற்கு விட்டுள்ளனர்," என்றார்.
பள்ளிகளில் வந்தே மாதரம் கட்டாயமாகப் பாடும் அறிவிப்புக்கு முஸ்லிம் தலைவர்களும்
எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
சமாஜ்வாதி
கட்சி எம்பி ஸியாவுர் ரஹ்மான் பர்க் ஊடகங்களிடம் கூறுகையில், ''வந்தே மாதரம் பாடலை பாடுவதற்கு
யாரும் கட்டாயப் படுத்தக் கூடாது, ஏனெனில் ஒவ்வொருவருக்கும் அது
குறித்து முடிவெடுப்பதற்கான சுதந்திரத்தை அரசியலமைப்பு வழங்கியுள்ளது'' என்றார்.
-----------------------------------------------------------------------------------
'வந்தே மாதரம்' பாடலின்
வரலாறு என்ன?
பங்கிம் யார்?
இந்திய காலனிகளை கைப்பற்றிய பிறகு 1858ம் ஆண்டு பிரிட்டன் ராணியால் துணை ஆட்சியராக நியமிக்கப்பட்ட முதல் இந்தியர்
பங்கிம் சந்திர சாட்டர்ஜி (1838-1894) ஆவார்.
அவர் 1891ம் ஆண்டு
ஓய்வு பெற்றார். அவருக்கு 'ராய் பகதூர்'
உள்ளிட்ட சில பட்டங்கள் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் வழங்கப்பட்டன.
வந்தே மாதரம் பாடலை 1875ம் ஆண்டு
வங்கமொழி மற்றும் சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் எழுதினார். பின்னர்,
அவர் தன்னுடைய பிரபல நாவலான ‘ஆனந்தமடம்’
எனும் நாவலில் அப்பாடலை சேர்த்தார்.
அந்த பாடலில் வரும்
அனைத்து சின்னங்கள் மற்றும் காட்சிகளும் வங்க நிலத்துடன் தொடர்புடையவை என்பது ஒரு சுவாரஸ்யமான
தகவல்.
அப்பாடலில் பங்கிம் 7 கோடி மக்கள்
குறித்து குறிப்பிட்டிருப்பார், அது அச்சமயத்தில் வங்க மாகாணத்தின்
(ஒடிஷா மற்றும் பிகாரை உள்ளடக்கியது) மொத்த மக்கள்தொகை.
அரவிந்த கோஷ் அதை மொழிபெயர்த்தபோது
"வங்கத்தின் தேசிய கீதம்' என அதற்கு பெயரிட்டார்.
வங்கப் பிரிவினை இப்பாடலை
உண்மையிலேயே வங்கத்தின் தேசிய கீதமாக்கியது. 1905ம் ஆண்டில் பிரிட்டிஷ் அரசின் வங்கப் பிரிவினைக்கு
எதிரான மக்கள் சீற்றம் கொண்ட போது, இப்பாடல் குறிப்பாக அதன்
'கோரஸ்' பிரிட்டிஷாருக்கு எதிரான ஆயுதமாக மாறியது.
சுதந்திர போராட்டத்தில்
பங்கேற்ற இந்துக்கள், முஸ்லிம்கள் உள்ளிட்டோர் இந்த பாடலை பிரிட்டிஷ் ஆட்சிக்கு
எதிரான போராட்டங்களில் பரவலாக பயன்படுத்தினர்.
பரிசாலில் (தற்போது வங்கதேசத்தில்
உள்ளது) விவசாய தலைவர் எம். ரசூலின் தலைமையில்
நடைபெற்ற வங்க காங்கிரஸின் மாகாண மாநாட்டில் "வந்தே மாதரம்"
பாடியதற்காக பிரிட்டிஷ் ராணுவம் தாக்கியபோது, "வந்தே மாதரம்" எனும் முழக்கம் காட்டுத்தீயாக பரவியது.
ஒரே இரவில் அப்பாடல் வங்கம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் எதிரொலித்தது.
20ஆம் நூற்றாண்டின்
இரண்டாம் தசாப்தத்தில், பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான தேசிய இயக்கம்
நாடு முழுவதும் உருவானது.
சுதந்திர இயக்கத்தை
வழிநடத்திய காங்கிரஸ், 1937ஆம் ஆண்டில் காந்தி, நேரு,
அபுல் கலாம் ஆசாத் மற்றும் சுபாஷ் சந்திர போஸ் ஆகியோரை உள்ளடக்கிய குழுவை
உருவாக்கி, பிரிவினையைத் தவிர்க்கும் நோக்கில் வந்தே மாதரம் பாடலுக்கு
ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்க அழைத்தது.
இந்த பாடலுக்கு எழுந்த
மிகப்பெரிய எதிர்ப்பு, அப்பாடல் இந்திய தேசியத்தை குறிப்பிட்ட மதத்தின் பார்வையில்
வரையறுப்பதாக கூறப்பட்டது. முஸ்லிம் அமைப்புகள் மட்டுமல்லாமல்,
சீக்கியம், சமணம், கிறிஸ்துவம்,
புத்த அமைப்புகளும் கேள்வி எழுப்பின.
எந்தவொரு மத ரீதியிலான
பார்வையும் இல்லாத முதல் இரண்டு சரணங்களை மட்டும் பாடுவதே தீர்வாக அமைந்தது.
எனினும், ஆர்எஸ்எஸ்
மற்றும் இந்து மகாசபை போன்ற அமைப்புகள் முழு பாடலும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என
கூறின,முஸ்லிம் லீக் முழு பாடலுக்கும் எதிர்ப்பு தெரிவித்தது.
-இது,
பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
நன்றி
– பிபிசி
இணையம்:
https://www.bbc.com/tamil/articles/cedx593xznxo
----------------------------------------------------------------------------
இனி,
இன்றைய சூழலில்
பாடலின் 150ஆவது ஆண்டை முன்னிட்டு
நமது தேசிய கீதம் பாடலுக்கு முன்,
நாடுமுழுவதும் பாட வேண்டும் என்று
இந்திய நாடாளுமன்றத்தில் நடக்கும் விவாதங்கள்
முக்கியத்துவம் பெறுகின்றன
கவனித்துக் கொண்டே வாருங்கள்
நண்பர்களே!
தொடர்ந்து உங்கள் கருத்துகளைப் பார்த்து
நானும் தொடர்வேன். நன்றி
--------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக