விஜய் டிவிக்கு ஏன் இந்த வெட்கங்கெட்ட வேலை?



விஜய் டிவி “சிவ.கார்த்திகேயன்-எங்கவீட்டுப் பிள்ளை”        14-01-2014 பொங்கல் சிறப்பு நிகழ்ச்சி பார்த்தீர்களா?

அவர்தான் விஜய் டிவியில்-விஜய் டிவியால்-விஜய் டிவிக்காக “அது-இது-எது?”நிகழ்ச்சியில் வளர்ந்தவராயிற்றே?

பிறகு சூர்யாவின் கோடீஸ்வரன் நிகழ்ச்சியிலும் தனி முக்கியத்துவம் தரப்பட்டு, அண்மையில் நடந்த “நீயா-நானா விஜய் அவார்ட்ஸ்” நிகழ்ச்சியிலும் அவரது வ.ப.வா.ச.குழுவோடு வந்து, “சிறந்த எண்டர்டெயினர்-2013” விருதுடன் பெரிய பாராட்டையும் பெற்றவராயிற்றே?

முன்னர் நடந்த இவை எல்லாமே ஒரு “செட்-அப்”போ என்னும் சந்தேகம் இப்போது வருகிறது. 
ஒருவரை ஒருவர் வளர்ப்பதாக நினைத்து அசிங்கப்பட்டு, அசிங்கப்படுத்தியும் விட்டார்கள்...


எத்தனையோ நல்ல நல்ல நிகழ்ச்சிகளைத் தந்த விஜய்டிவி எத்தனையோ நல்ல நல்ல மகிழ்ச்சிகளைத் தந்த சிவ.கா. எனும் பின்னணியில் இதைப்பார்த்தபோது...

இந்த நிகழ்ச்சியில் சில ரசிகைகள் (?) சிவகார்த்தியிடம்
நடந்து கொண்டவிதம்... ச்சீ என்றாக்கிவிட்டது.

நிகழ்ச்சியின் தலைப்பு - 
“எங்க வீட்டுப் பிள்ளை சிவ.கார்த்திகேயன்”
ஒளிபரப்பான நேரம் 14-01-2014 பிற்பகல்...
இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய திவ்யா(?) ஒரு பெண்ணாக இருந்தும், இந்த அசிங்கங்களை சிரிப்போடு அனுமதித்ததோடு, தன் மனம்-மொழி-மெய்ப்பாடுகளால் ஊக்குவிக்கவும் செய்தது, மேலும் அதிர்ச்சியளித்தது!

போட்டி-பேட்டி என்னென்னவோ காரணம் சொல்லி 
ஒருபெண் நீண்டநாள் ஆசையென்று சிவகார்த்தியின் இரண்டு கன்னங்களையும் கிள்ளியிழுக்கிறாள்...
ஒருபெண் சிவகார்த்திகேயனுக்கு பொங்கல் ஊட்டுகிறாள், தனக்கும் ஊட்டிவிடச்சொல்லி ஊட்டிக்கொள்கிறாள்... 
ஒருபெண் தான்கொண்டுவந்த மீசையை ஒட்டிவிடுகிறாள்..
ஒருபெண் தன்னைத் தூக்கிக்கொண்டு போகச்சொல்லி சிவகார்த்தியைக் கெஞ்சி,கொஞ்சுகிறாள்...அவர் சமர்த்தாக மறுக்க, தான் முத்தமிட்ட பனியனையாவது சிவகார்த்தி போட்டுக்கொள்ளவேண்ட அவரும் போட்டுக்கொள்ள... 

அய்யய்யோ...!

அச்சம் நாணம் மடம் பயிர்ப்பு எனும் நான்கு குணமும் பெண்களின் அடிமைச்சின்னம் என்று
மேடைதோறும் பேசியவன்தான் நான்.

ஆனால், இதில் அவர்களின் வெட்கங்கெட்ட தன்மை எல்லாரையும் வெட்கப்பட, வேதனைப்பட வைத்துவிட்டது.
இதை மறுத்து நடந்துகொண்ட சிவ.கார்த்திகேயன் இதையெல்லாம் விரும்பவில்லை போலவே தோன்றியது, 
ஆனால் இவர்கள் விடவேண்டுமே?


அதனால்,
தன்னை வளர்த்த விஜய் டிவிக்காக சிவ.கார்த்திகேயன் 
இந்த அசிங்கத்தை ஏற்றுக்கொண்டாரா?
அலலது -
தன்னால் வளர்க்கப்பட்டவர்தானே என்று
சிவ.கார்த்திகேயனை விஜய் டிவி அசிங்கப்படுத்தியதா?
தெரியவில்லை...

விஜய் டிவி இதை எடிட் செய்திருக்க வேண்டும்
அல்லது அந்தப் பகுதிகளை நீக்கியிருக்க வேண்டும்.

இரண்டையுமே செய்யாததால்தான் 
நமக்குக் இவ்வளவு கோபம் வருகிறது....

இந்தச் சின்ன வயசிலேயே சிவ.கார்த்தியும் விவரமாகத்தான் இருக்கிறார். 
என்றாலும் நாம் சொல்லவேண்டியதைச் 
சொல்லி வைப்போம் -

“விளம்பரத்தாலே உயர்ந்தவர் வாழ்வு
                              நிரந்தரமாகாது , 
விளக்கிருந்தாலும் எண்ணெயில்லாமல்
                             வெளிச்சம் கிடைக்காது” - கண்ணதாசன்.

இன்னொன்று -
அந்த ரசிகைகளின் பெற்றோர்கள் இதை  
அவமானமாக உணர்வார்களா? அல்லது அவர்கள் தம் பெண்களின் துணிச்சலைப் பாராட்டியிருப்பார்களா?

 
நாடும்
இந்த நாட்டு மக்களும் 
நாசமாய்ப் போகட்டும் 
என்ற வீரப்பாவின் வசனம்தான் நினைவுக்கு வருகிறது.




நிகழ்ச்சியைப் பார்த்தவர்கள்தான் என் கோபம் சரிதானா என்பதைச் சொல்லவேண்டும்... இணைப்பில் (இந்தப் பகுதியைமட்டுமாவது) பார்த்துவிட்டுச் சொல்லுங்கள்


இணைப்பிற்கு -
http://www.dailymotion.com/video/x19n58l_engaveettu-4_shortfilms
------------  =============  -----------

63 கருத்துகள்:

  1. நாங்களும் பார்த்தோம். மிகவும் கேவலமாக இருந்தது. வெட்கம் கெட்ட

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உடல் நிலை சரியில்லை என்பதை ஒத்துக்கொள்வதுதான் மருத்துவத்தின் முதல்படி... நன்றி நாரதரே(?)

      நீக்கு
  2. நிகழ்ச்சியைப் பார்க்கவில்லை ஐயா.
    ஆனால் அசிங்கம் அரங்கேறியிருக்கிறது என்பது புரிகிறது.
    வணிகநோக்கமாகி விட்டது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணிகத்திலும் ஒரு சமூக நியாயம் இருக்கவேண்டும் என்பதுதான் நம் எதிர்பார்ப்பு.நன்றி கரந்தையாரே!

      நீக்கு
  3. வணக்கம் ஐயா
    தங்களின் கோபம் மிக சரியானது. விஜய் டிவி மற்ற தொலைக்காட்சிகளிருந்து மாறுபட்டு இருப்பதைப் பார்த்து மகிழ்ந்தவர்கள் நாம் தான். அதே சமயம் இது போன்று வெட்கங்கெட்ட நிகழ்ச்சிகள் முகம் சுழிக்க வைக்கிறது. எனது நண்பர் ஒருவர் அந்த நிகழ்வைப் பார்த்ததுமே என்னை அலைபேசியில் அழைத்து ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். கடைசி வரை கவனித்திருந்தால் அந்த குறிப்பிட்ட நான்கு பெண்கள் தெரியும் அடங்கவேயில்லை. சிவகார்த்திகேயன் விருப்பம் இல்லை தான் போலும் அவர் வீட்டுக்கு போக முடியாது என்று கூட சொல்லிப் பார்த்தார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கும் தணிக்கை வர வேண்டியது அவசியம் என்றே தோன்றுகிறது. ஏனெனில் அவர்களாக திருந்தி நல்ல நிகழ்ச்சிகளை ஒளிப்பரப்ப முன் வருவார்கள் எனும் நம்பிக்கை எனக்கில்லை. விஜய் ஸ்டார் நிகழ்ச்சியில் கூட ஆறு கரும்பை ஒன்றாக காலில் வைத்து உடைத்ததற்கு மகேஸ்வரி முத்தம் கொடுக்கும் (கையில்) ஒரு காட்சி அசிங்கமாயில்லையா! தனதை தந்தையே தொட்டு தூக்க இயலாத பருவம் வந்த பெண்கள் என்னைத் தூக்கிட்டு போங்கனு சிவகார்த்திகேயனிடம் கூறியது தமிழ்நாட்டு கலாச்சாரம் எங்கே போயிட்டு இருக்குனு சற்று ஆழமாகவே யோசிக்க வைத்தது. ஊடகத்துறைகள் தங்கள் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டுமென்பது பெரும்பான்மை மக்களின் கருத்து. கவனித்தில் கொண்டு செயல்படுமா! என்பதே நமது கேள்வியும்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. “சீரிய நற் கொள்கைகளை எடுத்துக் காட்ட
      .........சினிமாக்கள் நாடகங்கள் நடத்த வேண்டும்,
      கோரிக்கை பணம்ஒன்றே என்று கொண்டால்
      .........கொடுமையிதை விடவேறே என்ன வேண்டும்” - ................................................................. பாரதிதாசன்

      நீக்கு
    2. நிகழ்சிகளை யாரும் சரியாக பார்பதில்லை அதனால் தான் வெக்கங்கெட்ட வேலை என்கிறார்கள்

      நீக்கு
  4. சரிதான் ஐயா/ சுதந்திரத்தை அனுபவிப்பது வேறு,அதற்கு தன் அறிவை இழப்பது வேறு.இன்றைய இளம் தலைமுறையில் ஒருபகுதி அதை செய்து கொண்டிருப்பதை இந் நிகழ்ச்சி நினைவு படுத்தியது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தன் சுதந்திரத்தை இழப்பதன் மூலம், சமூகத்தையே அடிமையாக்கத் தான் துணைபோகிறோம் என்றறியாத இளைய தலைமுறையை நாம் அவர்போக்கிலேயே விட்டுவிட முடியாது

      நீக்கு
  5. விஜய் டி.வி + சிவ.கா.விற்கும் தலைகால் புரியவில்லை என்பது மட்டும் தெரிகிறது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதனால்தான் அந்தப் பிள்ளைகள் சிவ.கார்ததிகேயனின் தலை, கை, கால், முகத்தையெல்லாம் தொட்டுத் தொட்டுப் பார்த்து மகிழ்கிறார்கள்... நன்றி வலைச்சித்தரே!

      நீக்கு
  6. ஐயா ,
    நேற்று நான் நிகழ்ச்சியை பார்க்கவில்லை... இப்போது தான் பார்த்தேன்.. விஜய் டி .வி-ன் கேவலமான, வெட்கப்படும் ஒரு செயல்... ச்ச்சீய்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. “ஆயிரங்களான நீதி அவை உணர்ந்த தருமன்... சீச்சீ சிறியர் செய்கை செய்தான்” - பாரதியின் பாஞ்சாலி சபதம். நன்றி விமல்

      நீக்கு
  7. "நான் உங்களுக்குப் பொங்கல் ஊட்டி விடறேன்" என்று சொல்லி ஊட்டிவிட்டுப் பின் - "நீங்க எனக்கு ஊட்டிவிடமாட்டீங்களா?" என்று அந்தப் பெண் கேட்பதுவரைப் பார்த்தேன். அதற்குமேல் பார்க்கப் பொறுமை இல்லை. இன்னும் என்னென்ன அசிங்கங்கள் அரங்கேறினவோ தெரியாது.
    இவையெல்லாம் ஒன்றும் லைவ்வாக நடைபெறும் விஷயங்கள் இல்லை. எல்லாமே முன்கூட்டியே பேசிவைத்து, இந்திந்த நேரத்தில் இன்னின்னது செய்யவேண்டும் என்றெல்லாம் முடிவு செய்து நடத்தப்படும்- நடத்தப்பட்ட நிகழ்ச்சிகள்தாம்.
    அப்படியே திடீரென்று இம்மாதிரியான சங்கதிகள் நடைபெற்றுவிட்டாலும் அதனை எடிட் செய்து வெளியிடும் வசதிகளும் இருக்கின்றன.
    அப்படியெல்லாம் எதுவும் எடிட் செய்யாமல் அவர்கள் இந்த நிகழ்ச்சியை முழுவதும் ஒளிபரப்பியிருக்கிறார்கள் என்றால் அது எல்லாமே முன்கூட்டியே திட்டமிட்டுச் செய்யப்பட்ட ஒரு நிகழ்ச்சி என்றுதான் அர்த்தம். ஆகவே ஒட்டுமொத்தமான எதிர்ப்பை அந்தச் சேனல் மீதும் சம்பந்தப்பட்டவர்கள் மீதும் தெரிவிக்க வேண்டியவர்களாகத்தான் இருக்கிறோம்.
    அன்று காலை லியோனி பட்டிமன்றத்தில் உங்கள் பேச்சு மிகவும் நன்றாகவே இருந்தது. குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால் அன்றைக்கு எல்லாருடைய பேச்சுமே மிகவும் நன்றாகவே இருந்தது. நீங்கள் பெருஞ்சித்திரனாரிலிருந்து கண்ணதாசன்வரை குறிப்பிட்டுப் பேசியது கவர்ந்தது.
    அடுத்து சன்டிவியில் ஒளிபரப்பான சாலமன் பாப்பையா பட்டிமன்றத்திலும் இதை ஒட்டிய தலைப்பே வைக்கப்பட்டிருந்ததே, இது என்ன தற்செயலாக அமைந்ததா? அல்லது ஒருவரேதான் இரண்டு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்கிறாரா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. “எதுவும் எடிட் செய்யாமல் அவர்கள் இந்த நிகழ்ச்சியை முழுவதும் ஒளிபரப்பியிருக்கிறார்கள் என்றால் அது எல்லாமே முன்கூட்டியே திட்டமிட்டுச் செய்யப்பட்ட ஒரு நிகழ்ச்சி என்றுதான் அர்த்தம். ஆகவே ஒட்டுமொத்தமான எதிர்ப்பை அந்தச் சேனல் மீதும் சம்பந்தப்பட்டவர்கள் மீதும் தெரிவிக்க வேண்டியவர்களாகத்தான் இருக்கிறோம்” - இதுதான் எனது கருத்தும் நண்பரே, சரியாகச் சொல்லிவிட்டீர்கள். நன்றி

      நீக்கு
    2. பட்டிமன்றப் பேச்சு பற்றிய உங்கள் பாராட்டுக்கு நன்றி. சன் டி.வி.யில் என்ன தலைப்பென்று பொங்கல்வரை எங்களுக்குத் தெரியாது. இது தற்செயலான ஒன்றாகவே நினைக்கிறேன். (இரண்டு நிகழ்வுக்கும் ஒருவர் ஏற்பாடா? உங்களுக்கு “சேனல் அரசியல்“ தெரியவில்லையே?)

      நீக்கு
  8. பெரிய துறையான சினிமா பெரிய அளவில் காசு பிடிங்கிக்கொண்டு சமுதாயத்தை சீரழிக்கையில் சின்னத்திரை தொலைக்காட்சிகள் இலவசமாக இந்த நாசவேலை செய்கின்றது
    இன்றைய நிறைய எழுத்தாளர்கள் சினிமா-தொலைகாட்சி வாய்ப்புகளுக்காக பிழைப்பு நடத்த வேண்டியுள்ளதால் யாரும் இதை எதிர்பதில்லை ஆனால் தங்கள் போன்றவர்களின் உண்மை முகம் உலகுக்கு தேவை ...தொடரட்டும் தங்கள் நற்பணி அய்யா........

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லாருக்குள்ளும் இதுபோலும் அசிங்கங்களை எதிர்க்கும், மறுக்கும் பண்பு இருக்கத்தான் செய்கிறது. எப்படி வெளிப்படுத்துவது என்பதறியாமலே, அது மறந்து -மறத்து- விடுகிறது என்றே நான் நினைக்கிறேன். சிட்டுக்குருவிகள் ஒன்று சேர்ந்தால் விடுதலை மட்டுமல்ல, வேடனின் வலை எனும் கருவியும் வசப்பட்டுவிடும் என்பது புரியவேண்டும்.

      நீக்கு
  9. டி.வி மோகம் பெண்களை எங்கோ கொண்டு செல்கிறது! நிகழ்ச்சியை முழுவதுமாக பார்க்க வில்லை! நல்ல வேளை தப்பித்தேன்! இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாம் காசு போட்டுவாங்கிய டி.வி., நமக்குத் தெரியாமலே நம் குழந்தைகளை நமக்கு எதிராக வளர்க்கப் பார்க்கின்றது. நாம்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டியுள்ளது வாழ்த்துக்கும், கருத்துப் பகிர்வுக்கும் நன்றி சுரேஷ்

      நீக்கு
  10. வணக்கம்
    ஐயா.

    நானும் பார்த்தேன்... என்னசெய்வது.. சகிக்கமுடியாமல் இருந்தேன்..... தங்களைப் போல.இன்னும் பல பதிவுகள் வெளிவருமாக இருந்தால்... எதிர்ப்பலைகள் எழுவது நிச்சயம்.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது தனிப்பட்ட நபருக்குத் தரப்படும் டம்ளர் நஞ்சல்ல, ஊர்க்கிணற்றில் ஊற்றப்படும் நஞ்சு எனவேதான் கோபம் சற்றுக் கூடுதலாகவே வந்துவிட்டது ரூபன். கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  11. விஜய் டிவி இதை எடிட் செய்திருக்க வேண்டும்
    அல்லது அந்தப் பகுதிகளை நீக்கியிருக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தூங்கினால் எழுப்பலாம், தூங்குவது போல நடிப்பவரை? அதுதான் சகோதரி என் ஆதங்கமும், ஆத்திரமும். நன்றி

      நீக்கு
  12. நானும் பார்த்தேன்.நீங்கள் சொல்வது சரிதான்

    பதிலளிநீக்கு
  13. தமிழ்நாட்டு கலாச்சாரம் எங்கே போயிட்டு இருக்குனு சற்று ஆழமாகவே யோசிக்க வைத்தது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. “கண்ணில்லாதவர்கள்
      கையேந்துகிறபோது
      நாமெல்லாம் குருடர்கள்” - கவிஞர் தங்கம் மூர்த்தி.
      தங்கள் கருத்துக்கு நன்றி மகேந்திரன்.

      நீக்கு
  14. பதில்கள்
    1. இவர்களைக் கோமாளிகள் என்றால்... நாம் ஏமாளிகளாகி விடுவோம் அலெக்ஸ்! நம்மைக் கோமாளிகளாக்கப் பார்க்கிறார்கள்... நாம்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

      நீக்கு
  15. வெ.ரங்கநாதன்,உடுமலை.புதன், ஜனவரி 15, 2014

    சின்னபெட்டியின் சின்னத்தனம்...எல்லைமீறல்..வன்மையாக கண்டிப்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தீக்குச்சிகள் ஒன்று சேர்ந்தால், தீப்பந்தங்கள் உருவாகும். அதுதரும் வெளிச்சத்தில் இருட்டு விலகும். நன்றி நண்பரே.

      நீக்கு
  16. பல விஷயங்களை பார்க்காததால் தப்பித்துக் கொண்டிருக்கிறேன் போல. நிறைய வேலை இருக்கிறது என்பது மட்டும் புரிகிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. “ஜாதி மதங்களைப் பாரோம்” என்றது பாரதியின் காலம்.
      “நாங்கள் பார்ப்போம்,
      ஒரு கை பார்ப்போம்” என்பதே இன்றைய இளைஞரின் குரல். அதைத்தான் நான் எதிரொலித்தேன். நன்றி எட்வின்.

      நீக்கு
  17. வாழ்த்துக்கள் அய்யா, தாங்கலாவது இதை சுட்டி காண்பித்து உள்ளீர்,சினிமா காரர்கள் என்றால் எப்படிவேண்டும்மனாலும் நடந்து கொள்ளலாம் என்று ஆகிவிட்டது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி அய்யா. திரைப்படத் துறையில் இதுமாதிரியான செயல்கள் விளம்பர நோக்கில் இயல்புதான். ஆனால், எல்லாருமே இப்படித்தான் என்று சொல்லிவிட முடியாது. இப்படியான விளம்பரத்தால் வரும் “புகழ்“ நிலைக்காது என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வில்லை அவ்வளவே!

      நீக்கு
  18. தங்கள் இணைப்பின் மூலம்தான் பார்த்தேன்
    தங்கள் கோபம் நியாயமானதே
    இந்தப் பதிவும் மிக அவசியமானதே
    பகிர்வுக்கும் தொடரவும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பகிர்வுக்கும் தொடர்புக்கும் மனமார்ந்த நன்றி ரமணி அய்யா

      நீக்கு
  19. அடக் கடவுளே!!! நான் பார்க்கவில்லை ஐயா..நீங்கள் சொல்லியிருக்கும் நிகழ்வுகளே மிகுந்த வருத்தத்தை உண்டாக்குகின்றன :(
    ஜோடி நம்.1, சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகளில் கூட இம்மாதிரியான சில அசிங்கங்கள் பார்த்திருக்கிறேன் (தொடர்ந்து பார்ப்பதில்லை, பார்த்த சில நாட்களிலேயே நொந்ததுண்டு)..எப்படி இவற்றை நாட்டின் ஒவ்வொரு மூலையும் சென்று சேரும் பொறுப்பு மிகுந்த ஊடகத்தில் அனுமதிக்கின்றனர் என்று தெரியவில்லை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பார்க்க வேண்டாம் சகோதரி. இதுபோலும் நிகழ்ச்சிகளைப் பார்க்க மறுக்கும் உறுதியை மக்கள் எடுத்துக்கொண்டாலே தானாக இவற்றை அவர்களே நிறுத்திவிடுவார்கள். ஆனால் அதற்கு நம்மைப் போன்றவர்கள் தொடர்ந்து இதை ஒரு கருத்துப் பிரச்சாரமாகவே நடத்த வேண்டும். நல்லவற்றை எடுத்துச் சொ்ல்லவும் வேண்டும் என்பதே என் கருத்து. தங்கள் கருத்தூட்டத்திற்கு நன்றி சகோதரி.

      நீக்கு
  20. இந்த நிகழ்ச்சியை பார்த்த போது எனக்கும் இதே கோபம்தான் வந்தது. பெண் உடையணிவதிலிருந்து ஆண், பெண் பழகுவது வரை எப்படி வேணா இருக்கலாம் எதுவும் தப்பில்ல.. ங்கிற மாதிரிதான் நிறைய டி.வி ஷோக்கள் இளைய தலைமுறைக்கு கத்து கொடுத்திட்டிருக்கு.....! வருத்தப்படாத வாலிபர் சங்கம் இப்ப ஆறாம் வகுப்பிலயே ஆரம்பிச்சிடுச்சி... ஒரு நாள் அலுவலகம் சென்று கொண்டிருந்த போது பக்கத்திலிருந்த அரசு பள்ளியின் வகுப்பில் கோரசாக மாணவர்களின் " "நாங்க வருத்தப்படாத வாலிபர் சங்கம்...." ன்னு பாட்டு மேசையை உடைத்து கொண்டிருந்தது..........

    பொங்கல் அன்று தங்களுடைய பட்டிமன்ற பேச்சினை பார்த்தேன்... சிறப்பாக இருந்தது. தீர்ப்பு வேறுவிதமாயிருந்தாலும்... உறவுகள் நட்பை விட ஒரு படி மேல்தான்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பகத்சிங் வாலிபர் சங்கம் வைக்கவேண்டியவர்கள் இப்போது வவாச வைக்கிறார்கள்... என்ன செய்ய? என்று கையைப் பிசைந்து நிற்பதில் பயனில்லை அல்லவா? “தானா எல்லாம் மாறும் என்பது பழைய பொய் அல்லவா?” அதனால்தான் கோபத்துடன் எழுதநேர்ந்தது. தங்கள் கருத்திற்கும், பட்டிமன்றப் பேச்சுப்பற்றிய பாராட்டுக்கும் நன்றி சகோதரி. உங்கள் கதையை இன்னும் படிக்கவில்லை. படித்துவிட்டு அவசியம் எழுதுவேன். தொடர்ந்து எழுதுங்கள்.வணக்கம்.

      நீக்கு
  21. வணக்கம்
    டிஆர்ப்பி ரேட்டிங்கை உயர்த்த சானலுக்கு ஒரு வாய்ப்பு
    செய்திகளில் இருக்க சிவாவுக்கு ஒரு வாய்ப்பு என்பது மட்டுமே உண்மை

    அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா...

    அனேகமாக பெண்களை செட் செய்து ஒத்திகைப் பார்த்து நடந்திருந்தாலும் ஆச்சர்யப் பட ஒன்றுமே இல்லை..

    நிகழ்சிக் குழுவை மட்டற்ற மகிழ்ச்சியில் தள்ளியிருக்கும் இந்த பரபரப்பு...

    கொஞ்சநாள் கழித்து பம்முவாங்க பாருங்க. நாங்க இப்படி நினைக்கல அப்படி செய்யல இத்யாதி இத்யாதி ...
    பணம் படுத்தும்பாடு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. டிஆர்பி ரேட்டிங் என்பதற்காகத் தரம் தாழ்ந்த உத்திகளை நாம் கண்டுகொள்ளாமல் இருக்கக் கூடாதில்லையா? அதனால்தான் எழுதினேன். கருத்திற்கு நன்றி மது.

      நீக்கு
  22. ithanal thaano yennavo antha kaalathil pengalai romba kattupadudan valarkka pattargalo?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது தவறு என்பதற்காக அடிமைத்தனமான “அச்சம்-நாணம்-மடம்-பயி்ர்ப்பு”எனும் சிமிழுக்குள் பெண்இனத்தையே அடக்கிவிடுவதைச் சரியென்று ஏற்க முடியாது. இதையே ஒரு பெண் நடிகரிடம் ஆண்கள் நடந்துகொண்டிருந்தாலும் அது தவறுதானே? கட்டுப்பாடு அதிகமாகும்போதுதான் இதுபோன்ற அத்துமீறலும் நடக்கும். இயல்பான பழகுமுறைதான் ஆண்பெண் இருவருக்குமே பயனுடையதாகும் என்பதுதான் சரியான பார்வை. நன்றி நண்பரே

      நீக்கு
  23. அண்ணா பொங்கல் விடுமுறையில் நாய்க்கு வேலையில்லை உட்காரநேரமில்லை என என் அம்மா சொல்வதுபோல் நான் அவ்வளவு busy.இது மாதிரி நிகழ்வுகள் சின்னத்திரையில் எப்போ ஏற்படும் என்றே எதிர்பார்க்கமுடியாது அண்ணா.அதனால் அவ்வவ்வபோது DTH போட்டுக்கொள்வதோடு சரி.கார்டூன்கள் கூட வன்முறை எதிர்பால் கவர்ச்சி பற்றியே பேசுகின்றன.எது பெண் விடுதலை என்ற தப்பான புரிதல் ஏற்பட இது போலும் நிகழ்வுகள் காரணமாகின்றன.மடத்தனமான hero worship.விஜய் டி.வி தன் ஸ்டார் காலச்சாரத்தை இத்தோடு நிறுத்திக்கொண்டால் சரி .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விஜய் டிவி தன் ஸ்டார் கலாச்சாரத்தை இத்தோடு நிறுத்திக்கொண்டால் சரி“யா!!!! நீ எந்த உலகத்துல இருக்கேப்பா?
      நம் வலைப்பக்கத்தில் எழுதியதைப் படித்து(??????)விட்டு அவங்க நிறுத்திடுவாங்களாக்கும்... படிக்கமாட்டாங்க என்பதிருக்க, ஒரு வேளை படிச்சாலும் நம்மள “லூசு என்னமோ உளறியிருக்கு” னுதான் நினைப்பாங்களே அன்றி பெருத்த திமிங்கலங்களுக்கு அயிரை மீன் குஞ்செல்லாம் ஒரு மேட்டரா? அட போப்பா...

      நீக்கு
  24. நிஜம் தான் அண்ணா இதுபோன்ற நிகழ்வுகளால் தாங்கள் வளர்ந்த கலாச்சாரத்தை சேர்ந்தவர்கள் இன்ற மாய பிம்பத்தை இளம் மனங்களில் தோன்ற செய்யும் இவர்கள் சில நம் ஆதனகோட்டையில் சில கடைகளில் பெரிய முந்திரியை வெளிகாட்டி சொத்தை உள்ளே நிரப்பிவிடுவார்களே அது போல் கோபியை ,தமிழ் பேச்சை போன்ற சில நிகழ்ச்சிகளை காட்டி உள்ளே ஜோடி போன்ற நிகழ்சிகளை கொட்டி நம் சமுதாயத்தில் விற்று விடுகிறார்கள் .இவர்கள் தான் என்றில்லை
    விளம்பர அரசியல் பற்றி நீங்களே குறிப்பிட்டுளீர்களே!அது எல்லா சேனலையும் ஆட்டி படைக்குது !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உன் பாணியில் சொன்னால், நொட்டோரியஸ் வேறு, ஃபேமஸ் வேறு என்பதை இவர்களுக்கு யார் சொல்வது? அட இவர்கள் போகட்டும் நம் இளைஞர்களுக்காவது இரண்டுக்குமான வித்தியாசத்தை நாம சொல்லித்தானே ஆகவேண்டும் சொல்லுறத சொல்லி வைப்போம்.... நன்றிப்பா..

      நீக்கு
  25. வேலைகளுக்கும், பிள்ளைகளின் சேனல் மாற்றங்களுக்கும் நடுவில் சில காட்சிகள் பார்க்க நேர்ந்தது... கிள்ளல் சீன்... பார்த்துக்கொண்டிருந்த என் அண்ணா (அவருக்கு கல்லூரி படிக்கும் பெண்) ...பதற்றத்துடன் இதை எந்த பெற்றோர் அங்கீகரிப்பர் எனக் கேட்டார். அப்போது அருகிலிருந்த அவர் நண்பர் சிலர் அந்த சினிமா எனும் கனவு உலகத்துள் வாழும் சிலர் இதை ஏற்றுக்கொள்வர். ஆனால் அதைப் பார்க்கும் எத்தனையோ பேர் இப்படி ஆடை அணிவதும் , இப்படிப் பேசுவதும் தான் சரி என்னும் எண்ணச் சிறைக்குள் விழுவதை யார் தடுப்பது? இவர்களுக்கு யார் மணி கட்டுவது? என்றார். உண்மைதானே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாம்தான் கட்டிப்பார்ப்போமே?
      “போற்றுவோர் போற்றட்டும் புழுதி வாரித்
      தூற்றுவோர் தூற்றட்டும் தொடர்ந்து சொல்வோம்,
      ஏற்றதொரு கருத்தை எனதுள்ளம் என்றால்
      எவர்வரினும் நில்லேன் அஞ்சேன்” - கண்ணதாசன்.
      தங்களின் வருகைக்கும் கருத்தி்ட்டமைக்கும் நன்றி சகோதரி.

      நீக்கு
  26. நானும் அந்த கண்றாவி நிகழ்ச்சியைப் பார்த்தேன். கோபத்தைக் கட்டுப்படுத்தமுடாயாமல் வேறு சானலுக்கு மாற்றிவிட்டேன். இதையெல்லாம் தெரிந்தே முன்கூட்டி ஒத்திகை பார்க்கப்பட்ட பிறகே இப்படி மக்கள் மத்தியில் அரங்கேற்றுகிறார்கள். வெட்கக்கேட்டை என்னவென்று சொல்ல?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் 4மணிக்குப் பார்த்தது, அன்று மாலை நிகழ்ச்சி வேறு! நிகழ்ச்சியின்போதெல்லாம் இதே நினைவு. இரவு 10மணிக்கு வீட்டுக்கு வந்ததும் உட்கார்ந்து, கிடுகிடுவென்று அடித்து இரவு 11மணிக்குமேல் பதிவை வெளியிட்டுவிட்டுத்தான் படுத்தேன். தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோதரா!

      நீக்கு
  27. நல்ல காலம் அந்த நிகழ்ச்சியை பார்க்கவில்லை. கண்டிக்கப் படவேண்டிய நிகழ்ச்சி.விஜய் டிவிபெண்களை இந்த அளவுக்கு இழிவுபடுத்த தேவை இல்லை.மகளிர் அமைப்புகள் கட்டாயம் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் முரளி அய்யா. என்னாச்சு? வலைப்பக்கம் வந்து 15நாளாகிறது! நீங்கள் இவ்வளவு நாள் இடைவெளிவிட மாட்டீர்களே? உடம்புக்கு ஒன்றுமில்லையே? நலமறிய விழைவு. மாதர்சங்கத்தினரிடம் நானும் சொல்லியிருக்கிறேன். பார்க்கலாம் குறைந்தபட்சம் இதுபோலும் நிகழ்ச்சிகளைக் கண்டிக்கும் கூட்டம் இருப்பதையாவது பதிவு செய்யவேண்டும்

      நீக்கு
  28. வளரும் தலைமுறையின் பண்பாட்டைப் பாழ்படுத்தும் இத்தகு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு வருத்தப்படும் வாலிபர் சங்கம் அமைத்து எதிர்ப்புக் குரல் கொடுக்காதவரை தொலைக்காட்சிகள் தங்கள் சாக்கடை வீச்சுச் சண்டித் தனத்தைத் தொடரத்தான் செய்யும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடுத்தநாள் நான் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட மேடையில் சிறுமியர் சிலர் வருத்தப்படாத வாலிபர்சங்கம் பாடலை அடுத்தடுத்துப் பாடியபின் என்னைப் பேச அழைத்தனர். நான் முதலில் சிரிக்கப் பேசிவிட்டு இறுதியில், நம் இளைஞர்களின் இன்றைய தேவை பகத்சிங்கின் வாலிபர் சங்கமே அல்லாமல், வபவாச அல்ல என்று பேசிவிட்டுவந்தேன் (வடக்கு-2 இளைஞர் பொங்கல்விழா) நம்மால் முடிந்த பணிகளைத் தொடர்ந்து செய்வோம் பாவலரே

      நீக்கு
  29. அய்யா அந்த நிகழ்ச்சியை நானும் பார்த்தேன். ஆரம்பத்தில் பாட்டும் கூத்தும் நன்றாகத்தான் இருந்தது.போகப்போகத்தான் நெருடலாக இருந்தது . அந்த நிகழ்சியைபார்தஇளம்பெண்களின் பெற்றோர்கள் மனநிலை எப்படி இருந்திருக்கும்????? ஒரு வேளை சினிமா இதெல்லாம்தவறல்ல என்ற எண்ணத்தை சமூகத்தில் ஏற்படுத்தி விட்டதோ??!!! என்ற கவலை ஏற்பட்டுவிட்டது!!!!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. “ ஒரு வேளை சினிமா இதெல்லாம்தவறல்ல என்ற எண்ணத்தை சமூகத்தில் ஏற்படுத்தி விட்டதோ??!!! என்ற கவலை ஏற்பட்டுவிட்டது!” - ஆமாம் அய்யா அந்தப் பட்டியலில் சின்னத் திரையும் சேர்ந்துகொண்டதுதான் பெரிய கவலை! நன்றி

      நீக்கு
  30. அய்யா வணக்கம்
    அருமை, இந்த விஷயம் குறித்துநானும் என் மகளும் பகிர்ந்து கொண்டோம் ,அப்பொழுது இவங்க அப்பா, அம்மால்லாம் இதை பார்ப்பார்களா? இது ஒரு செட்டப்பாகஇருக்குமாம்மா என்றாள்
    இதெல்லாம் மீடியக்கலாச்சாரமாகிப்போச்சு என்றேன்.

    பதிலளிநீக்கு
  31. செட்டப்பாக இருக்கவும் வாய்ப்பு உண்டு, ஆனால் அது இன்னும் அசிங்கமிலல...? திட்டமிட்ட அசிங்கம்! இதை நம் குழந்தைகளுடன் விவாதிப்பதுதான் நல்லது. நன்றி சகோதரி.

    பதிலளிநீக்கு
  32. அய்யா முத்துநிலவரே.....
    நானும் அதை பார்தேன். சகிக்கலை. பொதுவாகவே விஜய் டிவி தமிழ்பண்பாட்டு சீர் அழிவை மறைமுகமாக ஊக்கு விக்கிறதோ என்ற சந்தேகம் பலருக்கும் உண்டு. ஆனால் பல புதிய திறமையாலார்களை வெளியே கொண்டுவந்ததும் இந்த டிவி தான். அதனால் தான் பொறுமை காக்கிறோம்.
    அன்புடன்
    ஜெயராமச்சந்திரன்., முதல்வர் சா.மி.மேல்நிலை பள்ளி ,பீகார்
    smabariyahi@gmail.com

    பதிலளிநீக்கு