(புதுக்கவிதை)
தொல்சங்கப் பலகையில்
இருந்து,
பில்‘சன்னல்’# பலகையில்
வருவது
தமிழின் வரலாறு!
ஐந்நிலம், ‘ஆறுதிணை’யாகி,
‘எழுகண்டம்’ காண்பது
தமிழின் புவியியல்!
ஓலை, தாளில்
நடந்து,
அச்சில், கணினியில் ஓடுவது
தமிழின் மின்னியல்!
கிழக்கும் மேற்கும்
வடக்கும் கூட
நிமிர்ந்து பார்த்து
நெட்டுயிர்ப்பது
தமிழின் பண்பியல்!
மரபிலே காலூன்றி,
புதுமையாய்ச் சிறகுவிரிப்பது
தமிழின் அழகியல்!
மடமையது போக்கி
உடமை பொதுவாக்கும்
தமிழின் அரசியல்!
விளிம்புத் தமிழர் யாம்,
உலகத் தொழிலனைத்தும்
உவந்துசெய,
தங்கத் தமிழனைத்தும்
தனித்தனியே தரவேண்டாம்—
‘துங்கக் கணினியே! தூமணியே நீஎமக்கு
சங்கத் தமிழ் அனைத்தும் தா!
----------------------------------
#‘சன்னல்’- பில்கேட்ஸின் ‘விண்டோஸ்’
==================================================
சங்கத் தமிழனைத்தும் தா! (மரபுக் கவிதைகள்)
(எண்சீர் விருத்தம்)
வாழ்ந்தாரைப் போற்றுவதே
மேற்க ணக்கு,
வாழவழி காட்டுவதே கீழ்க்க ணக்கு,
வீழ்ந்தாரைக் கைதூக்கும்
காப்பி யங்கள்,
வேற்றுமைக்குள் ஒற்றுமையே பிரபந் தங்கள்,
தாழ்ந்தாரைச் சமப்படுத்தும்
சமயத் தேடல்,
தமிழ்மக்கள் வரலாறே நாட்டார் பாடல்!
ஆழ்ந்தாரைத் தெருட்டுவதே
சித்தர் பாட்டு,
அனைத்துக்கும் இலக்கணமே அடிக்கல் லாகும்!
------------------------------------------------------
(அறுசீர் விருத்தம்)
அறிவியல் திணை வகுப்பு!
அழகியல் இறைச்சி நுட்பம்!
பொறியியல் பெரிய கோவில்!
புலவரே பண்பின் காவல்!
அறவியல் தேர்க்கால் பிள்ளை!
அன்பியல் தேர்கொள் முல்லை!
துறவியல் மக்கள் சேவை!
தொடர்வதே இன்று தேவை!
----------------------------------------------
(கட்டளைக் கலித்துறை)
கெஞ்சுவ தில்லை கிளர்ச்சியு
மில்லை,எம் கேளிரையும்
அஞ்சுவ தில்லை, அழிவதும் இல்லையெம் ஐந்தமிழே!
துஞ்சுவ தில்லை துயரமும்
இல்லை!நாள் தூரமிலை!
விஞ்சுவ தில்லை விளையும்
தமிழ்க்கினி வெற்றிகளே!
-----------------------------------------------
(நேரிசை வெண்பா)
பயிற்றுமொழி யாகி,எம்
பாமரனும் வாழ
வயிற்றுமொழி யாகி வளர -
உயர்த்து(ம்)வழி,
எங்கள் தமிழரசே! இந்தியப்
பேரரசே!
சங்கத் தமிழனைத்தும் தா!
-------------------------------------------------------------------
(கோவை -2011- உலகத் தமிழ்ச்செம்மொழி மாநாட்டை ஒட்டி அறிவிக்கப் பட்ட “சங்கத் தமிழனைத்தும்தா” எனும் ஒரு தலைப்பிற்கு, மரபிலும் புதுக்கவிதையிலும் நான் எழுதிய இரண்டு கவிதைகள் இவை. பரிசு அறிவிப்பில் எனக்குப் பரிசு இல்லை என்பதை விடவும், பரிசுபெற்றவர்களின் கவிதைகளும் வெளியிடப் பட்டதாகத் தெரியவில்லையே! அதுதான் வருத்தமெனக்கு!தமிழ்வாழ்க!)
வணக்கம் ஐயா
பதிலளிநீக்குமரபுக் கவிதை மற்றும் புதுக்கவிதை என அசத்தி விட்டீர்கள். பொதுவாக மரபுக்கவிதை எழுதுபவர்களுக்கு புதுக்கவிதை வாடையே பிடிக்காது ஆனால் நீங்கள் இரண்டிலும் கவி புனைந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. குறிப்பாக பாரதியிம் என்ன ஓட்டத்தினை ஒத்திருக்கிறது. உங்களின் பன்முகத்திறன் வலைப்பக்கம் மூலமாக வெளிவருவது கண்டு வலைப்பூவிற்கு நன்றியே சொல்லிய முரளிதரன் ஐயாவின் வரிகளே எனதும். நல்லதொரு பகிர்வு ஐயா நன்றிகள் தங்களுக்கே..
தாங்கள் என்மீது கொண்ட அன்பின் மிகைவரிகள். நான் இன்னும் சிறப்பாகச் செய்ய உங்களின் சொற்கள் என்னைத் தூண்டுகின்றன. நன்றி பாண்டியன்.
நீக்குஎங்களின் வாழ்த்துக்கள் என்றும் உண்டு... வாழ்த்துக்கள் ஐயா...
பதிலளிநீக்குஇது போதும் என்று சொல்லிவிடத்தான் நினைத்தேன்... ஆனால் எதார்த்தத்தில் இன்னும் இன்னும் என்னும் எண்ணம் ஓடுகிறது. “மூச்சு நிற்பதல்ல, முயற்சி நிற்பதே மரணம்.“ அப்துல் கலாம்
நீக்குமிகசிறப்பான கவிதைகள் ஐயா! உண்மையான பற்றோடு தமிழை பாடி இருக்கிறீர்கள் .கலைஞரையும் பாட்டில் சேர்த்திருந்தால் பரிசு கிடைத்திருக்கக் கூடும்.
பதிலளிநீக்குகவிதை இலக்கணம் தெரிந்த நமக்கு, அந்த இலக்கணம்தான் தெரியாதே! அது தெரியாததே நல்லது, உங்கள் வரிகளில் கலைஞர் எனும் சொல்லைவிட ஆட்சியாளர் என்றிருந்தால் என்றும் சரி. தங்கள் வரவிற்கும் அன்பின் வார்த்தைகளுக்கும் நன்றி முரளி!
நீக்குMuthamile...eththikkum pukal vilangum en thalaiva.. thamilakaththin thalaimakakane...thamilthayin thanthaiye.. endrellam elithiyirunthal kantipoay parisu kitaiththirukkum... theriyatha ungalukku
பதிலளிநீக்குநன்றி திரு பழனிசாமி அவர்களே, அன்பு கூர்ந்து இதைப் படிக்க வேண்டுகிறேன் - http://valarumkavithai.blogspot.in/2013/10/blog-post_15.html
நீக்குகவிஞர் முத்துநிலவன் அவர்களுக்கு, வணக்கம். உலகத்தமிழ் மாநாட்டுக்காக தாங்கள் எழுதிய புதுக்கவிதை, எண்சீர் விருத்தம், அறுசீர் விருத்தம், கட்டளைக்கலித்துறை, நேரிசைவெண்பா கவிதைகள் பரிசு பெறவில்லை என்றாலும் தங்கள் வலைத்தளத்தில் படிக்கக்கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால், பரிசு பெற்ற கவிதைகள் எதிலும் வெளியிடப்படவில்லை என்பது கவலை தருகிறது.
பதிலளிநீக்குஅது, வியப்பாகவும் வேதனையாகவும்தான் இருக்கிறது. இதற்கெல்லாம் “தகவல் அறியும் உரிமைச் சட்டத்”தில் இடமிருக்கிறதா என்று தெரியவிலலையே.தெரிந்தால் கேட்கலாம்.
நீக்குஅதான் முன்னோர்கள் சொல்லிட்டாங்களே ! நல்லதுக்கு காலம் இல்லை ஐயா.
பதிலளிநீக்கு'இது' நல்லது அதான் காரணம்.
ஐயா, தங்களின் வலையில் சூப்பர் சிங்கர் பற்றிய கட்டுரை படித்தேன். இறுதி நிகழ்ச்சியைப் பார்க்கவில்லை என்ற என் ஏக்கம் தீர்ந்தது. ஜானகி அம்மாள் கொடுத்த அந்த அன்பின் முத்தம் ஆஸ்காரை விட உயர்ந்தது. தங்களின் கட்டுரை நெகிழ வைத்தது. மரபும் புதுமையும் கைகோர்ப்பது தங்கள் கட்டுரைகளின் சிறப்பு. மீண்டும் மஹா.............
பதிலளிநீக்கு