இருமுனைத் தவறுகள்
மொழிபெயர்ப்பு இலக்கியவாதி பிரேமா நந்தகுமாரின் தினமணிக் கட்டுரையைப் படித்ததோடு
நின்றுவிடாமல் அதுபற்றி நேர்மையாகவும் கூர்மையாகவும் அதே பத்திரிகையில்
விவாதிக்கும் அளவுக்கு செயல்படும் அமைச்சர் தமிழ்க்குடிமகனின் கட்டுரை அவர் மீது மரியாதையை மிகுவித்தது.
பிரேமா நந்தகுமார் கட்டுரையின் சாரமாக நான் கருதுவது தலைப்பை ஒட்டிய
இரண்டு வரிகள் தாம் “உயர்கல்வி கற்கும்போது மொழிப்பற்றை அறிவார்ந்த நோக்குடன்
அணுகவேண்டும்”.
இதுதான் பெரியார் சொன்னதும்
செய்ததும்.
‘தாய்ப்பால் பைத்தியம்’ என 1962-ல் கிண்டல் செய்ததும் 1972-ல் பட்டப்படிப்பைத்
தமிழ்வழியிற் கற்க கலைஞர் ஆணையிட்டதை வரவேற்றதும். முரண்பாடாகத் தோன்றவில்லை.
பாரதியார் காலத்திலிருந்து திராவிட
இயக்கங்கள் வேரூன்றும் வரையிலும் நீடித்த கலப்பு
- மணிப்பிரவாள தமிழ் நடையை நல்ல தமிழுக்கு மாற்றியதில் திராவிட
அரசியல் பெரிதும் உதவியது உண்மைதான்.
இவ்வியக்கத் தொடர்பில்லாமலே மறைமலையடிகளும்
சோமசுந்தர பாரதியும் மு.வ.வும் நல்ல தமிழில் எழுதி பேசி வந்தனர். தமிழக
சட்டசபையின் எதிர்கட்சியிலிருந்து கொண்டு பட்ஜெட் உரை மீதான விவாதத்தின் போது
பொருளாதாரத்தை முதன்முதலாகத் தமிழில் பேசிய பி.ராமமூர்த்தி, ஜீவானந்தம் அதைப் பாராட்டிய அன்றைய முதல்வர் ராஜாஜி, முதன்முதலாக தமிழ் ஆட்சி மொழி பற்றிய முன்மொழிவை சென்னை மாகாண சட்டசபையில் வைத்த (1956)அமைச்சர் சி.சுப்பிரமணியம், அதை நடைமுறைப்படுத்தும் உயர் அலுவலராயிருந்த கீ.இராமலிங்கனார், நல்ல தமிழ்க் கவிதைகளை வீறார்ந்த நடையில் எழுதிப் பேச்சாளர்ககுக்
கைதட்டல் பெற்றுத்தந்த பாரதிதாசன், பன்மொழி அறிவோடு தமிழாய்வு செய்துவந்த தேவநேயப் பாவாணர் என நல்ல தமிழ் வளர்ச்சிக்கு உதவியவர்களின் பட்டியல்கள் நீளும் நீள வேண்டும் .
ஆனால் திராவிட இயக்கத்தவரே, பெரியாருக்கும் முரண்பாடாகத் தமிழை ஒருதெய்வ நிலைக்கு உயர்த்தி ‘தமிழ்த்தாய’ என்று ஏற்றியதும் இந்தியைப் பேய்
என்று தூற்றி அரசியல் தேவைக்கேற்ப மொழியைப் பயன்படுத்தியதும்தான்; தமிழகத்தின் மொழிக்
கொள்கையில் முதல் பெரும் சிக்கல் எழுந்தது. மொழியில் தாயும்;கிடையாது பேயும் கிடையாது.
இந்திக்கு மாற்றாக தனித்தமிழில்
மேடையில் முழங்கிக் கொண்டே ஆங்கில மேற்கோள்களை அள்ளிவிட்டு ஆங்கிலத்தின் மீதான
மயக்கத்தை தமிழக மயமாக்கியதில் அந்த பேச்சாளர்களுக்கு பெரும் பங்கு இல்லை என்று மறுக்கமுடியுமா?
தமிழின் பெருமையை வாயாரா நெஞ்சார
எடுத்தெடுத்துப் பேசிய நாம் அதன் துறைசார் வளர்ச்சிக்கு அறிவியல் பண்பாட்டு முறைகளில்
செய்ய வேண்டியதைவிட்டு “செயல் மறந்து“ வாழ்த்திக்கொண்டிருந்தால் தமிழ் வளர்ந்து விடுமா?
சீரிளமைத் திறம் வியந்து ‘செயல் மறந்து’ வாழ்த்திய நாம், செயல்புரிந்து வாழ்த்தியிருந்தால் இன்றைய இரட்டை நிலை
உருவாகியிருக்குமா?
உலகில் வேறெங்கிலும் ‘இங்கிலீஷ் தாய்’ வாழ்த்தோ இந்தித்தாய் வாழ்த்தோ பாடுவதாகத் தெரிய வில்லை. “தெலுங்குச் செல்வி“ “குஜராத் குதலை“ “வங்க அழகன்“ “இங்லீஷ் குவின்“ என்று மொழிப்பெருமையோடு
பேரிட்டிருப்பதாகவும் தெரியவில்லை.
தமிழரசி செந்தமிழ்ச் செல்வன்
என்றெல்லாம் மொழியோடு சேர்த்துப் பெயர் வைத்து கொண்ட அளவுக்கு -மொழிப்பற்றுள்ள
தமிழர் அளவுக்கு- ஆங்கில மோகிகளும் வேறு யாருமில்லை!
சேரனின்பேரன் ‘சோழனின் தோழன்’ என்று பழம்பெருமை வெறும் தமிழ்;ப் பெருமையிலேயே ஓரு சுகம்! சுய
திருப்தி! இப்போது நடைமுறை வாழ்க்கைப் போட்டி நெருக்கும் போது ‘குய்யோ முறையோ’ என்று கூப்பாடு
போடுகிறோம்.
இப்போதாவது தமிழை “செயல் மறந்து“ வாழ்த்திக் கொண்டிருக்காமல் “செயல் புரிந்து“ வாழ்த்தினால் நிச்சயம் உருப்படலாம்.
இந்த வறட்டு மொழிவெறி எங்கே
போய்விட்டது தெரியுமா?
பேனாவால்கூட எழுதக்கூடாது என்கிறது!
ஆம்! ‘பென்னா’ எனும் லத்தீன் மொழிக்கு ‘இறகு’ என்று பொருள். தமிழிலும் ‘மயிலிறகு’ கொண்டு எழுதும்
வழக்கம் இருந்தது. எனவே இறகு - தூவி எனும்
வேர்ச்சொல்லைக் கொண்டு “தூவல் என்று சொல்! பேனா அயல்மொழி என்று சொன்னது.
இப்படியே தொலைபேசி என்பது கூட
வேண்டாம் சங்க இலக்கியத்தில் ‘முண்டக்கூவி’ என்றே இருக்கிறது. அப்படியே இருக்கட்டும் தொலைபேசி வேண்டாம் என்றது.
பேனட்ஸ் ஜீன்ஸ் சூரிதார் இனி வேண்டாம்
என்று சொல்ல முடியுமானால் இந்த வார்த்தைகளையும் வேண்டாம் என்று சொல்லாம்.
இனி இதைத் தமிழ்ப்படுத்துவதும் தேவையிi;லை தானே?
தொலைக்காட்சியின் தமிழ்க்கொலையைத்
தினசரியும் பார்த்துக் கொண்டு பன்னாட்டு நுகர்பொருள்களை தினசரியும் பயன்படுத்திகொண்டு சமூக ஞானமில்லாத
சுயநல அரசியல் - மொழி பற்றிய பாதிப்புகளோடு வளரும்
இளைஞர்களுக்கு தாய் மொழி என்பது பயிற்று மொழியே
ஆனாலும் அது வயிற்று மொழியாக வந்தால்தான் உண்டு. அதுவும் கல்லூரி மாணவர் இளைஞர்க்குத்
தமிழ்ப்பற்று வெறியாக இல்லாமல் இருப்பதைப் பயன் படுத்தியே தமிழை ஆக்கப’ர்வமாகக் கொண்டு செல்ல முடியும். அதற்கான தெளிவான செயல்திட்டம் தான் தேவை. அதற்கு மொழி வெறி எனும் முனையும் பயன்தாரது. இன்னொரு முனையான மொழி பற்றிய
அலட்சியமும் கூடாது.
நடைமுறைப்படுத்தியாக வேண்டிய யோசனைகள் பற்றி ஆய்ந்து விவாதித்து திட்டமிட வேண்டும். துறையறியவும் தமிழறிவும் இணைந்தவர்களிடம்
இதுபற்றித் தனியாகவும் பத்திரிகைகள் வழியாகவும் விவாதிக்க வேண்டும்.
தமிழ் உள்ளிட்ட அனைத்துத் தேசிய
மொழிகளையும் மத்தியில் ஆட்சிமொழியாக்க அனைத்துக் கட்சிகளும் முயற்சி எடுப்பது
2000ஐ தமிழ் ஆண்டாக அறிவிக்கச் செய்வது ...போல பலவாறு யோசிக்கலாம்
உயர்கல்வி கற்போர் 98 சதவீதம் பேர் தமிழ்நாட்டில்தான் இருக்கப்போகிறார்கள் எனும்
தெளிவோடு ஏற்கெனவே வா.செ.குழந்தைச்சாமி முஸ்தபா போன்றோரும் தமிழ்ப் பல்கலையும்
செய்த முயற்சிகளோடு நூல்களை உருவாக்குவது.
வெளிமாநில வெளிநாட்டுத் தொடர்பு
மொழியாக ஆங்கிலம் ஒரு பாடமாக நீடிக்கச் செய்வது.
எல்லாவற்றுக்கும் மேலாகத் தமிழ்வழிக்
கற்போர்க்கு வேலைவாய்ப்பில் 20 சதவீதம் முன்னுரிமை தந்தாலே தானாக எல்லாம் நடக்கும்.
தெளிவான செயல்திட்டம், அனைத்துத் தரப்பினரின் ஆதரவுதிரட்டும் முயற்சிகள், தயங்காத ஊக்குவிப்புகள், மத்திய அரசையும் இதில் பங்கேற்கச் செய்யும் அரசியல் அணி சேர்க்கை, வேலைவாய்ப்புக்கான தீர்மானம் . இவை தான் தமிழை வளர்க்குமேயன்றி இருமுனைத் தவறுகளும்
எக்காலத்திலும் தமிழுக்கு ஆகா!
-----------------------------------------------------------------------------------
இந்தக் கட்டுரையை எழுதி 14 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால் இதன் தேவை இன்றும் இருக்கிறது. தமழக முதல்வராகக் கலைஞர் இருந்த போது கோவையில் நடத்திய “உலகத் தமிழ்ச்செம்மொழி மாநா”ட்டில் வெளியிட்ட “தமிழ்வழியில் கல்விகற்றோருக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை” எனும் அறிவிப்புக்கான தேவையை அதற்கு 12ஆண்டுகளுக்கு முன்பே நான் எழுதி, தினமணியும் வெளியிட்டிருந்தது என்பது ஒரு மகிழ்வான செய்திதான்! நல்லது நடக்கத்தானே எழுதுகிறோம்? )
------------------------------------------------
நன்றி - தினமணி மார்ச்-27-2000 தலையங்கப்பக்கக் கட்டுரை
-------------------------------------------------
தகவலுக்கு - எழுத்தாளர் பிரேமா நந்தகுமாரின் தினமணிக் கட்டுரை-28.02.2000.
அமைச்சர் தமிழ்க்குடிமகனின் தினமணிக் கட்டுரை-9.3.2000
------------------------------------------------
// அது வயிற்று மொழியாக வந்தால்தான் உண்டு. //
பதிலளிநீக்குசிறப்பான கட்டுரை ஐயா...
வாழ்த்துக்கள்...
அதற்கும் முன்பே ரொம்பக்காலம் மேடையில் பேசும்போது. தமிழ் நம் பயிற்று மொழியாக வரவேண்டும் என்று கேட்பதன் காரணமே அது நம் வயிற்றுமொழியாக வரவேண்டும என்பதுதான் என்பது வழக்கம். அதை அப்படியே கட்டுரையில் கொண்டுவந்துவிட்டேன்
நீக்குகட்டுரையின் கருத்துக்கள் இன்றும் பொருந்துவனவாக உள்ளன.
பதிலளிநீக்குசிறந்த ஆலோசனைகள் ஐயா!
“சொல்லுறத சொல்லி வைப்போம் - செய்யுறத செஞ்சிடட்டும்” எனும் பட்டுக்கோட்டையார் பாணிதான். நன்றி முரளி.
நீக்குநீங்கள் இதை எழுதிய நேரத்தில் அறிவிக்கப் பட்ட ,உலகத் தமிழ் ஆராய்ச்சி சங்கம் என்பது இன்றும் கனவாகத்தான் இருக்கிறது .செயல் புரிய கழக அரசுகள் முயற்சிஎடுக்கவில்லை .இதற்காக மதுரையில் காந்தி அருங்காட்சியகம் அருகே ஒதுக்கப் பட்ட இடம் மண் மேடாகவே காட்சி அளிக்கிறது !
பதிலளிநீக்கு+1
நல்ல கருத்தாழமுள்ள கட்டுரை.
பதிலளிநீக்குமதிப்புடன்,
நா. கணேசன்
நீங்கள் சொல்லியிருப்பது அனைத்தும் சரியே..தமிழ் வயிற்று மொழியாகவும் வேண்டும்..நாம் செயல் புரிந்து வாழ்த்தவும் வேண்டும்...அமெரிக்காவில் இருந்த[பொழுது என்னுடைய ரோமானியத் தோழியின் மகனின் பிறந்தவிழாவுக்குச் சென்று இருந்தபொழுது அவர்கள் மொழியிலேயே பிறந்த நாள் வாழ்த்துப் பாடல் பாடினர்..எங்களுக்கு பெயர் மட்டும் தான் புரிந்தது..அவர்களால் அப்படிச் செய்ய முடியும்பொழுது நம்மால் ஏன் முடியாது?
பதிலளிநீக்குஇனிமேலாவது அறிவியல் தொழிநுட்ப முன்னேற்றத்திற்குத் தக்கவாறு முதலிலேயே ஆங்கிலச் சொற்களுக்கு நிகரான தமிழ்ச் சொற்களை அறிமுகப்படுத்த வேண்டும்.
பல ஆண்டுகளுக்கு முன்பே அருமையான கருத்துகளை முன்வைத்துக் கட்டுரை எழுதியிருக்கிறீர்கள்..பகிர்ந்ததற்கு நன்றிபல ஐயா!