- நா.முத்து நிலவன்-
கல்கியின் பொன்னியின் செல்வன் நாவல் முன்னுரையில் ராஜாஜி எழுதுவார் : 'பொன்னியின் செல்வன் நாவலுக்கு எனது முன்னுரை எதற்காக? சூரியனின் வெளிச்சத்திற்கு எண்ணெயும் திரியும் எதற்காக?'-என்று. அதேபோலத்தான், திருக்குறளின் பெருமையைச் சொல்ல இனியும் ஒரு கட்டுரை தேவையில்லைதான். எனினும், கடந்த தலைமுறையைப்போல இலக்கியங்களைப் ‘படிக்கும்’ ஆர்வம் குறைந்து, இன்றைய தலைமுறையிடம் வெறும் தொ.கா. ‘பார்க்கும்’ ஆர்வமே வளர்ந்துவரும் சூழலில், பண்பாட்டுத் தேவைக்கு 'நம் கையிருப்பை'க் காட்ட, திருக்குறள்தான் சரியான கருவூலம்.
அதிலும், வள்ளுவர் வெளிப்படையாகச் சொல்லியவற்றைக் காட்டிலும் சொல்லாமல் உணர்த்தியிருக்கும் உண்மைகள் சிந்தனையைத் தூண்டுவதாகப் படுகிறது.
அதுதான் இந்தக் கட்டுரை.
தமிழில் திருக்குறள் அளவிற்கு வேறெந்தநூலுக்கும் பழங்கால உரையாசிரியர் பதின்மர் முதலாக இன்றைய கலைஞர், சுஜாதா எழுதியதுவரை இவ்வளவு உரைகளும் இல்லை, உரைவேறு பாடுகளும் இல்லை!
இவற்றில், 'வழுக்கு நிலத்தில் நடப்போர்க்கு ஊன்றுகோல் போல' உதவும் உரைகளும் உண்டு, உறுதியாக நடப்போரை, தடுமாறவைக்கும் உரைகளும் உண்டு!
எனவேதான், வள்ளுவரை வள்ளுவராகவே பார்த்து, -அவரதுகாலப் பின்புலத்தில்- ஆய்வு செய்வது, அவரே சொன்னதுபோல, 'மெய்ப்பொருள் காணும்' அறிவுக்கு உகந்ததாயிருக்கும்.
அதிலும் முக்கியமாக, அவர் சொல்லிச்சென்ற முறை மிகவும் வித்தியாசமானது. 'இதை ஏன் இப்படிச் சொன்னார்?', 'இதைஏன் சொல்லாமல்விட்டார்?' எனும் சிந்தனைகள் வள்ளுவரை மேலும்அறிந்து கொள்ள உதவும். வள்ளுவர் ஏன் இதை இப்படிச்சொன்னார்? ஏன் இதை இப்படிச் சொல்லாமல் விட்டார் என்பது போலும் சிலகருத்துக்களை நாம்பகிர்ந்து கொள்வோம்.
இரண்டடிக் குறள் வடிவம் ஏன்?
திருக்குறளைப் பார்த்தவுடன் முதலில் வியப்பையும் ஈர்ப்பையும் ஏற்படுத்துவது, அந்த 'துக்கினியூண்டு' 2 வரிச் செய்யுள் வடிவம்தான்! இப்படி ஒரு வடிவத்தை எப்படித் தேர்ந்தெடுத்தார் வள்ளுவர்?!? நால்வகைப் பாக்களோடு, ஒவ்வொன்றிலும் ஐந்தாறுபிரிவுகளும் வழக்கில் இருந்தபோதே, வள்ளுவர் அவற்றிலிருந்து வேறு பட்ட இந்தச் சிறிய வடிவத்தைத் தேர்வுசெய்து, நூலைப் படைக்கக் காரணம் இருக்க வேண்டுமல்லவா?
தனக்கென்று சிலகட்டுப்பாடுகளை விதித்துக்கொண்டு செயல்படுபவன்தானே, மற்றவர்க்குச் சொல்லத் தகுதிவாய்ந்தவன்? கட்டுப்பாடுகளைப்பற்றிப் பேசவந்த வள்ளுவர், முதலில் தனக்குச்சில கட்டுப்பாடுகளை -இலக்கணத் தளைகளை- தானே போட்டுக்கொள்கிறார். அதற்கான செய்யுள் வடிவம்தான் வெண்பா! மற்ற பாவகைகளைக் காட்டிலும் கட்டுப்பாடுகள் மிக்கது வெண்பா. இதில் வெண்டளையன்றி, வேற்றுத் தளை எதுவும் வர முடியாது, வரவும் கூடாது! ‘புலவர்க்கு வெண்பாப் புலி’ என்பது இதன் காரணமாகத்தான். மற்ற பாவகைகளில் இவ்வளவு கட்டுப்பாடு இல்லை. வெண்பாவிலும் கட்டளைக் கலித்துறை மேலும் சிக்கலானது - நேரசையில் தொடங்கினால் 16 எழுத்தும், நிரையசையில் தொடங்கினால் 17 எழுத்தும் வரவேண்Lk;, ஆனால் அந்த வகைப் பா வடிவம் 4 அடிகளில் – அடிக்கு ஐந்து சீர் வீதம் - மொத்தம் 20 சீர்களுக்கு நீளும்! (உ-ம்:அபிராமி அந்தாதி).எனவே, நீளமானதை விட்டு, ஏழே சீர்களில் எளிமையும் அதேநேரம் கட்டுப்பாடும் மிகுந்த குறள் வெண்பாவையே எடுத்துக்கொண்டிருக்கிறார் நம் வள்ளுவப் பெருந்தகை எனில் எவ்வளவு அக்கறையாக சொல்ல வந்ததைப் போலவே சொல்லும் முறையையும் சிந்தித்திருக்க வேண்டும்!
இரண்டடியேகொண்ட குறள்வெண்பாவே போதும் என்பது வள்ளுவ எளிமையின் அடையாளம். 'கருத்தாழம் இல்லாதவர்தாம் கணக்கின்றிப் பேசி/ எழுதி, அடுத்தவர் காலத்தை அநியாயமாக விரயம்செய்வர்' என்பதை அறிந்தே, சுண்டிய பால்போலும் சுருக்க வடிவத்தை, அவர் எடுத்துக்கொண்டிருக்க வேண்டும்.
எனவேதான், அன்றைய சமூகத்திற்குத் தேவையென்று அவர் கருதிய கட்டுப்பாடுகளை, கட்டுப்பாடு மிக்க வெண்பாவில், எளிய 2 அடிகளில் சொல்லிவிட முடிவுசெய்து, அதன்படியே தம் நூலைப் படைத்தார் வள்ளுவர். அவர், 'சொல்லாமலே செய்யும் பெரியர்' அல்லவா?
'முப்பால்' ஏன்? வீடு பேற்றை விட்டது ஏன்?
வள்ளுவர் பெண்ணிய வாதியா, ஆணாதிக்கக் காரரா? இன்றையபொருளில் வள்ளுவர் பெண்ணுரிமைவாதியல்லர், எனவே அவர் பெண்ணிய வாதியா? எனும் கேள்வியே எழவில்லை. ஆண்,பெண் இருபாலாருக்கும் உரிய சிலவற்றைக் கூறுமிடத்திலும், ஆண் உதாரணங்களே வள்ளுவரிடமிருந்து வருகின்றன. அவரே சிறப்பித்துச் சொன்ன இல்வாழ்க்கை ஆணுக்குரியதுதான். அதிலும், ‘மனைவி சொல்லைக் கணவன் கேட்கக் கூடாது' என்பதும் அவரது அழுத்தமானகருத்து.
‘பெண்ணேவல் செய்தொழுகும் ஆண்மையின், நாணுடைப்
பெண்ணே பெருமை உடைத்து' -(907)- என்பது உள்ளிட்ட பத்துக் குறள்கள் அடங்கிய 'பெண்வழிச்சேரல்' எனும் அதிகாரம் வள்ளுவருக்குப் பெருமை தருவதன்று! அன்றைய தொல். இலக்கண மற்றும் 'சங்க'இலக்கியங்களில் போல இல்லற உறவில் -இரவில்- மட்டுமே ஆணின் 'வீழ்ச்சி'யை அவர் ஏற்கிறார்.(குறள்-1088,1327) ஆனால், இதனாலெல்லாம், 'வள்ளுவர் ஆணாதிக்கக் காரர்' என்றோ பெண்ணுரிமைக்கு எதிரானவர் என்றோ எந்த முடிவிற்கும் வந்துவிட முடியாது! அன்றைய சமூக நிலையோடு ஒப்பிடுகையில், அவரது குரலே பெண்களுக்கான முதல் உரிமைக் குரலாக இருந்ததையும் யாரும் மறுக்கமுடியாது. இதற்கு அவர்தம் குறளின் குரலே சரியான சான்று!
வள்ளுவர் வாழ்ந்தகாலம், ஆண்களுக்கென்று பலசலுகைகளை வாரி வழங்கியிருந்தது! திருமணத்திற்கு முன்னும்பின்னும் ஆண்கள் பிறபெண்களுடன் உறவுகொள்ள சமூகமே சம்மதம் தந்திருந்தது! காதற்பரத்தை, காமப்பரத்தை, இற்பரத்தை, சேரிப்பரத்தை என அவ்வகைப் பெண்களைத் தொல்காப்பியம் வகைப்படுத்தும்! சங்கஇலக்கியம் சான்று கூறும்! சட்டப்படி மட்டுமல்ல, சமுதாயப்படியும் அது ஆண்மகனுக்கான அடையாளமாக கருதப்பட்டது. இதற்கு, கலித்தொகை போலும் அகஇலக்கியங்களில் ஏராளமான சான்றுகள் உண்டு!
வள்ளுவருக்கும் பிந்திய சிலப்பதிகாரம் உள்ளிட்ட காவிய நாயகர்கள் அவ்வாறே ஒன்றுக்கும் மேற்பட்ட பெண் உறவுகளில் பெருமை கொண்டவர்கள்தான். இதனை ஒரு சமுதாயக் கேடாக -- ஒருவனுக்கு ஒருத்;தி என -- அப்போதே எழுந்த முதல்குரல் வள்ளுவரின் குரலே! 'பிறனில் விழையாமை' எனும் வள்ளுவரின் அதிகாரக் குரல் (எண்:15), பக்தரிடம் மனைவியைக்கேட்ட சிவபெருமானுக்கும், ரிஷிபத்தினியை நாசம் செய்த இந்திரனுக்கும் கூட சாட்டை அடியாக விழுந்திருக்கும் என்பதில் சந்தேகமென்ன?
வரையற்ற பெண்ணுறவு மட்டுமல்ல, கள்ளும் கூட கடியப்படாத காலம்தான் அது! 'கொஞ்சம் கள் கிடைத்தால் எனக்குக் கொடுத்துவிடுவான்; நிரம்பக் கிடைத்தால், எனக்கும் கொடுத்து தானும் குடிப்பான்' என்பது இனக்குழுத் தலைவன் அதியமானைப் பற்றி, அவ்வை தரும் புறநானூறு (235). அதுதான் அன்றைய சமூக நிலை! நாம், அந்தச்சமூக நிலைபற்றிய ஆய்வுக்குள் போகவில்லை, அந்தச்சமூகத்திலேயே வாழ்ந்து கொண்டு, சமூக அவலங்களுக் கெதிராக 'கள்ளுண்ணாமை' என்றோர் அதிகாரக் குரலெழுப்பிய வள்ளுவரின் கருத்தோட்டத்தைத் தான் ஆய்வு செய்கிறோம். இதனோடு சூதாட்டத்தையும் கண்டிக்கிறார் வள்ளுவர் (920)
இன்றுவரையும் யாரும் சொல்லாத வார்த்தையில், தன் காதலனைத் திட்டுகிறாள் வள்ளுவனின் இலக்கிய நாயகி அது, 'பரத்தன்' எனும் சொல்! தமிழில் பரத்தை, கன்னி, கைம்மனையாட்டி (விதவை) முதலான சிலசொற்களுக்கு ஆண்பாற்சொற்கள் -இன்றுவரை- இல்லை! அது சொல்லின் வரலாறு சொல்லும் தனிவரலாறு!
ஏன் 'பரத்தன்'என்று தன் துணைவனைக் கோபிக்கிறாள் துணைவி? (குறள்-1311) எனில், முறைகேடான வாழ்க்கைபற்றிய அவரது கோபமன்றி வேறென்ன? ஆண்களின் கட்டற்ற 'உரிமை'களைக் கடிந்து, சொல்லாமலே உணர்த்தியவரா ஆணாதிக்கவாதி?
வள்ளுவர் எந்த மதம்?
வள்ளுவர் சைவரா? வைணவரா? சமணரா? எனும் வாதம் இன்றும் நடக்கிறது. இடையில் அவர் கிறித்தவரே என்றொரு ஆய்வும் நடந்தது! இஸ்லாமியரே என்றொரு கருத்தும் உண்டு! எல்லாம் யானையைப்பார்த்த குருடர்கள் கதைதான். ஆனால், இவற்றிற்கெல்லாம் மாறாக, 'கடவுள்இல்லை'என்ற நாத்திகர் தந்தைபெரியாரும் தமதுபிரச்சாரத்தின்போது குறள் கருத்துக்களை எடுத்தெடுத்துப் பேசிமகிழ்ந்தாரே, அப்படியானால், வள்ளுவரின் கடவுள்கொள்கை தான் என்ன?
பழுத்த ஆத்திகரான வள்ளுவர், இந்துமதத் தெய்வங்களைக் கொண்டு உலகியல் கருத்துக்களைக் கூறியிருக்கிறாரே தவிர அவர் தன்னை ஒரு இந்துவாகக் காட்டிக்கொள்ள வில்லை. அப்படியானால், வேதவேள்விக்கு எதிரான பிரச்சாரம்செய்த சமணராகவோ பவுத்தராகவோ இருந்திருக்கலாம் என்னும் கருத்து வலுப்படுகிறது. அவர்கள்தாம் இந்தியா முழுவதும் (புத்த சமண) பள்ளிகளை ஏற்படுத்தி, படிக்கச்சொல்லி, வேள்வியில் உயிர்க்கொலை செய்வதைத் தடுத்து, பெரிய பிரச்சாரம் செய்தவர்கள்.
இன்றும் ஆய்வறிஞர் பலரும் அவரை ஒரு சமணர் என்றே மதிப்பிடுகிறார்கள். அப்படியானால், வள்ளுவர் சமணர் என்றே தம்மை அடையாளப்படுத்திக் கொண்டாரா? சமணக் கருத்துப் பிரச்சாரமாகத் தம் நூலைப் படைத்தாரா? என்பது ஆய்வுக்குரியது. தாம்வாழ்ந்த காலத்தில், மேலோங்கியிருந்த கருத்துகளை முன்வைத்துச்சென்ற வள்ளுவர், சில இடங்களில் சமணக் கருத்துகளை மீறியும், பல இடங்களில் பெளத்தக் கருத்துக்களையும் கையாண்டிருப்பதைப் பார்த்தால் அவர் தனது நூலை 'சமண நூல்' என்று முத்திரை குத்தவிடாமல் செய்திருப்பதாகவே படுகின்றது.
வள்ளுவரை மதத்துக்குள் இழுக்கும் மதவாதியல்ல நான். எனவே, 'வள்ளுவர் கிறித்துவரே' என்றொரு நூல் எழுதியவரைப் போலவோ, அல்லது 'அவர் ஒரு சைவ சமயத்தவரே' எனும் திருவாவடுதுறை சைவப் பேராசிரியர்களைப் போலவோ, நான் வள்ளுவரை எந்தச் சமயச் சிமிழுக்குள்ளும் இழுத்தடைக்க விரும்பவில்லை. வள்ளுவரின் மதம் எதுவாயினும், அவர் குறளில் சமணக் கருத்துக்களை மட்டுமே வலியுறுத்தி எழுதவில்லை என்பதே எனது கருத்து.
அன்றைய சமூக நிலைக்கேற்ப, அவருக்குக் கடவுள் நம்பிக்கை உண்டு, ஆனால் அதற்குப் பெயர்தந்து, உருவம் தந்து வணங்கும் மதவழி வழிபாட்டை அவர் வற்புறுத்தவில்லை. அவர்காலத்திய வேத வைதீக தெய்வங்களான இந்திரன், பிரமன் முதலான தேவர்களைப் பல இடங்களில் சுட்டும் அவர், பெயர் சுட்ட வாய்ப்புள்ள கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் அந்தத் தேவர்களைக் 'கண்டுகொள்ளவில்லையே' ஏன்?
புத்தனுக்குரிய 'பகவன்' எனும் சொல்லை முதல் குறளிலேயே வழங்கியிருக்கும் திருக்குறள் சமண நூலாகுமா? 'பகவான்' என்பது, பின்னர் வைணவம் வளர்ந்த பிறகு 'உட்கவரப்பட்ட' ஒரு சொல். 'அறிவன்'- எனும் நேரடித் தமிழாக்கமும் புத்தருக்கே உரியது. 'மலர்மிசை ஏகினான்' - என்பதுகூட அப்பட்டமாக புத்தரையே குறிப்பதாகத் தெரிகிறது. புத்தரின் பாதங்களில் தாமரை மலர் போலும் சக்கரச் சின்னம் இருந்ததான பழங்கதைகள் பலவுண்டு. புத்தரின் பட்டப்பெயரான 'ததாகதா' என்பதற்கு 'இவ்விதம் சென்றவன்'-ஏகியவன்- என்பது பொருள்
அடிப்படையில் எனது கேள்விகள் இவைதாம்:
(1) துறவறத்தை வற்புறுத்திய சமணத்துக்கு மாறாக, இல்லறத்தைப் பாடிய திருக்குறள் சமண நூலாகுமா? குறளில், சமணம் போன்ற 'கெடுபிடி' நடைமுறை இல்லை. புத்தம் போன்ற 'ஜனநாயக' மரபே அதிகம். ஆடுமாடுகளைப் பலிகொடுக்கும் வைதீக வேள்விக்கு எதிராக 'தன்னைக்கட்டும்தவம்' வலியுறுத்தப் பட்டது சமணத்தில். அதைக்காட்டிலும், குடும்பவாழ்க்கையே பெரிதென்று கூறிய குறள் எப்படி சமணநூலாக முடியும்? (காதலுக்கென்று மூன்றில் ஒருபகுதி நூலையே ஒதுக்கிப்பாடுவது சமணக் கொள்கையா என்ன?)
(2)”உழவே செய்யக்கூடாது - செய்தால் அது தொடர்பான உயிர்களை அழிக்கவேண்டி வரும்” என்பது சமணக் கோட்பாடு. எனில், “உழவே தலை” என்ற குறள் எப்படிச் சமண நூலாக முடியும்? அன்றைய மன்னராட்சிக் காலத்திலேயே, மன்னராட்சிக்கெதிரான சில கருத்துக்களோடு - வேத வைதீக வர்ணாஸ்ரமக் கருத்துக்களை எதிர்த்த குரல்தான் வள்ளுவத்தில் அதிகமே அன்றி, சமணக் கருத்துகள் இருப்பதால் அது சமண நூலென்றோ, பெளத்தக் கருத்துக்கள் இருப்பதால் அது பெளத்த நூலென்றோ, சைவக் கருத்துக்கள் இருப்பதால் அது சைவ நூலென்றோ முடிவுக்கு வருவது எந்த விதத்திலும் சரியாகாது.
வள்ளுவர் தன் மதச்சார்பைப்பற்றி, வெளிப்படையாகச் சல்லாமலே உணர்த்தியிருப்பது என்ன?அடுத்த இரண்டு சிறுதலைப்புக் குறிப்புகளையும் பார்த்துவிட்டு ஒரு முடிவுக்கு வருவோமே?
வள்ளுவர் ஏன் அறிவைப் பெரிதும் வலியுறுத்துகிறார்?உலகில்உள்ள மதங்கள் அனைத்திலும், தன் மதத்தைச்சார்ந்த சாதாரண மக்களையே படிக்கவிடாமல் 'தடா'போட்ட மதம், இந்துமதம் தவிர வேறேதும் இருப்பதாகத் தெரியவில்லை. மக்களை நால்வகைப்படுத்தி, அதிலும் பெரும்பான்மையான உழைக்கும் மக்களை ‘கீழ்மக்கள்’ என்று சொல்லி அவர்கள் உழைப்பைமட்டும் 'தானமாக'ப்பெற்றுக் கொண்டு ஒரு சிறுகூட்டம் நாட்டாமை செய்துவந்ததை நியாயப் படுத்தித்தான் எத்தனை எத்தனை புராணங்கள், காவியங்கள், கதைகள்! இலக்கியங்கள்! 'அற'நூல்கள்! - ஒருபக்கச் சார்பிற்கு உலகப்புகழ் பெற்ற 'மநு'வின் கருத்துக்கள் 'மநு நீதி' என்றுதானே இன்றும் சொல்லப்படுகிறது?
ஆனால், ஒரு சிலர் மட்டுமே படிக்கலாம் ('ஓதலும் தூதும் உயர்ந்தோர் மேன'-தொல்காப்பியம்) என்று இருந்த அக்காலத்தில், ஒருசமூகமே உயரத் தேவையானவற்றை சிந்தித்து, வரிசையாக வைக்கிறார் வள்ளுவர். 'படிச்சியின்னா உன் கண்ணுரெண்டையும் கண்ணுன்னு சொல்லலாம், இல்லயின்னா உன்முகத்துல இருக்கறது ரெண்டும் புண்ணுதான் போ!' (குறள்393) எனும் வள்ளுவர், 'விலங்குக்கும் மனிதருக்கும் என்ன வேறுபாடோ, அதே வேறுபாடுதான் படிக்காதவனுக்கும் படிச்சவருக்கும்' (410) என்று கல்லாமையின் இழிவையும் அடுத்த அதிகாரத்திலேயே சுட்டுகிறார். இன்னும் புரியாதவர்க்கு, 'அட படிக்கத்தான் முடியல. சரி! நாலு விஷயங்களைக் கேட்டாவது தெரிஞ்சி வச்சிக்கணும்ப்பா' எனும்கருத்தில், "கற்றிலன் ஆயினும் கேட்க" (414) என்று தொடர்ந்து வலியுறுத்துவது வியப்பானஒன்று!
கற்று அறிவது கல்வியறிவு, கேட்டு அறிவது கேள்வியறிவு. எப்படியோ 'அறிவு' என்பதே ‘அற்றம் காக்கும் கருவி’ என்பதை அடுத்தடுத்துப் பலப்பல அதிகாரங்களில் சொல்லிக்கொண்டே இருக்கிறார் வள்ளுவர். கல்வி(அதிகாரஎண்:40), கல்லாமை(41), கேள்வி(42), அறிவுடைமை(43) எனும் அதிகார வரிசைகளின் அர்த்தம் ஆழமானதாகும்.
கல்வி-அறிவு என்பதே வேதத்திற்கு எதிரானது! 'உயர்சாதியினர்கற்கவேண்டும், மற்றவர் சாதிக்குரிய தொழிலைத்தான் செய்யவேண்டும் (கல்வியின் பக்கம் வந்துவிடக்கூடாது!) என்றே எச்சரிக்கிறது கீதை.
"சாதுர் வர்ண்யம் மயா சிருஷ்டம் குண கர்ம விபாஸக
தஸ்ய கர்த்தா ரபிமாம் வித்ய கர்த்தார மவ்யம்" ( நான்கு வர்ணங்களையும் நான்தான் படைத்தேன், அந்தந்த சாதிக்குரிய குணங்களையும் கடமைகளையும் மாற்றிக்கொள்ள என்னால்கூட முடியாது) என்கிறது பகவத்கீதை.(அத்தி--4,சுலோகம்-13)
வள்ளுவரோ சாதி வித்தியாசம் படிப்படியாய் நீங்கவேண்டுமானால், 'படிபடி' என்கிறார்! எவ்வளவோ கருத்து முரண்பாடுகள் இருப்பினும் தந்தைபெரியாரும் பிற சமூகசீர்திருத்தத் தலைவர்களும் குறளை வரவேற்றுப் போற்றிய காரணங்களுள் முக்கியமானது இந்தக் கல்வி!
'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ (972) -எனும் குறள், பாராளுமன்றத்தில் பகத்சிங் வீசிய குண்டுக்கு நிகரானது! யாரையும் அது அழிக்கவில்லை, ஆனால் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது! சாதிப்பிரிவுகளாலேயே அறியப்பட்ட சமூகத்தில், வேலைப்பிரிவையே சாதிப்பிரிவாக வைத்திருக்கும் சமூகத்தில் 'எல்லாச்சாதியும் ஒண்ணுதாம்லே, அவனவன் பாக்குறவேலையில தான் வித்தியாசம்லாம், மத்தபடி எல்லாருமே ஒரு சாதிதேன்!' என்று சொல்வது அதிர்ச்சியாக இருக்காதா? இன்னும்தான் உத்தபுரம் சுவர் ‘இடியாத சாட்சியாய்’ இருக்கிறதே!
அதுமட்டுமல்ல, யாகத்திற்காகவும் வேதம் ஓதவும், இறைவழிபாடு எனும் பெயரிலும் தரப்படுவதுதான் தானம்-தருமம்-புண்ணியம் என்ற கருத்தே வலியுறுத்தப் பட்டிருந்தகாலத்தில், "எதுவுமற்ற ஏழைக்குத் தருவதுதான் ஈகை, மற்றவையெல்லாம் -மேலுலக- எதிர்பார்ப்புடன் செய்வதேயாகும்" எனும் வித்தியாசமான பொருளில்- "வறியார்க்கொன் றீவதே ஈகை,மற் றெல்லாம் குறியெதிர்ப்பை நீர துடைத்து" (221) என்றதும்கூட, ஆழ்ந்துபார்த்தால் வேதமறுப்புக்குரலே!
எனவேதான், 'மனோன்மணீயம்' எழுதிய பெ.சுந்தரனார், சாதிப்பிரிவினையை வலியுறுத்திய கீதையையும், அதற்கு எதிராக உழைப்பை-கல்வியை வலியுறுத்திய குறளையும் ஒப்பிட்டு,
'வள்ளுவர்செய் திருக்குறளை மறுவறநன் குணர்ந்தோர்கள்
உள்ளுவரோ மனுவாதி ஒருகுலத்துக் கொருநீதி?' என்னும் நியாயமான கேள்வியை வீசுகிறார்.
கல்வியை வலியுறுத்துவதன் மூலம் அவர் 'எந்த மதம்?' என்று புரிகிறதா? அல்லது எதற்கு எதிரியாக நின்றார் என்பதாவது புரிகிறதா? இதையும்தான் சொல்லாமலே சென்று விட்டாரே?
காலத்தை வென்ற கவியின் குரல்!
வள்ளுவர்ஒன்றும் பொதுவுடைமைவாதியல்லர்.ஆனால், எந்தப் பொதுவுடைமைவாதியும் ஏற்கக் கூடிய சில முன்னோடிக் கருத்துக்களை முன் வைத்தவர்.
அன்றைய நிலையில் -'ஜனநாயக' உணர்வோடு எந்த அரசனுமே இருந்திருக்கமுடியாத சூழலில்- அரச ஆதிக்கத்தை மக்கள் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் என்று பாடியவர்தான்(740). ஆனால், அந்த அரசனும் -அன்றைய 'ஷட்பாகின்' (ஆறில் ஒருபங்கு விளைச்சலை வரியாகப் பெறும் அரசன்) என்பதற்கும் அதிகமாக ‘மக்களைக் கசக்கிப் பிழிந்து, வரிவசூலிப்பானாயின், அவனும் கொள்ளைக்காரனே’ என்று கூறியவர்! "வேலொடு நின்றான் இடுஎன் றதுபோலும்
கோலொடு நின்றான் இரவு"–(552)என்பது, அன்றைய மாற்றுக் ‘குரல்’தான்!
அதே நேரத்தில், சாதாரணமான - மனிதபலவீனங்களின் உச்சமான, மலிவான பண்புகளின் எச்சமான - சில மன்னரையும் 'மகா அவதாரம்' என்று உருவகித்துக் கவிதையும் காவியமும் படைத்த பக்தி இலக்கியக் காலத்தைப் போலவும் வள்ளுவர் சில இடங்களில் பாடியிருக்கிறார் என்பதையும் மறைக்கவேண்டியதில்லை.
காளிதாசனின் 'குமார சம்பவம் எனும் காவியம், விக்கிரமாதித்தன் எனும் அரசனை முருகனின் அவதாரம் என்றுகூறி மக்களின் ஏற்பை அரசனுக்கு வழங்கப் பரிந்துரைத்தது என்பதை இங்கே ஒப்பிட்டுக் கொள்ளலாம்.
'திருவுடை மன்னனைக் காணின் திருமாலைக் கண்டேன்' எனும் பக்திக் குரலுக்கும்,
'முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப் படும்'-(388) என்பதற்கும் காலவேறுபாடிருக்கலாம், கருத்துவேறுபாடுஇல்லை.
ஆயினும், வள்ளுவரின் தனித்த குரல் கேட்கும் இடம் இதுவன்று! -
"இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான்" (1062)-என, வறுமைக்குக் காரணமான 'உலகியற்றியான்' ஆண்டவனாயினும் ஆள்பவனாயினும் அவனுக்கெதிராக வரிந்துகட்டும் வள்ளுவர்தான், 'தனிஒருவனுக்கு உணவில்லை யெனில், ஜெகத்தினைஅழித்திடுவோம்' என்ற பாரதியின் முன்னோடியாக இன்றும் வாழ்கிறார். எனவே, அவர் எந்த ஆதிக்கத்துக்கும் எதிர்ப்புக் குரல் எழுப்பியவர் எனும் வகையில் ஒரு முற்போக்காளரே என்பதை எங்கும் எப்போதும் சொல்லலாம்.
தமிழும் , தமிழ் நாடும் குறளில் இல்லையே ஏன்?
இந்திய அளவிலும், உலக அளவிலும் அதிகமான மொழிகளில் பெயர்க்கப் பட்டிருக்கும் தமிழ் நூல் எது?
இரண்டாயிரம் ஆண்டுக்கும் மேலாக வாழ்ந்த தமிழ்ப்பேரறிஞர்கள் எல்லாரும் இந்த நூலின் பாதிப்பின்றி எழுதியதில்லை எனும் பெருமைக்குரிய நூல் எது?
இன்றுவரை கோடிக் கணக்கில் விற்றுக்கொண்டேயிருக்கும் தமிழ் நூல் எது? (உலகஅளவில் இதுவரை வந்த நூல்களில் 20கோடி விற்ற சார்லஸ் டிக்கன்சின் புத்தகம் தான் என்று சொல்கிறார்கள், அனைத்துப் பதிப்புகளையும் சேர்த்தால் அதைவிடவும் குறள்விற்பனை அதிகமிருக்கும். மு.வ.அவர்களின் உரைநூல்மட்டுமே இதுவரை 100பதிப்புக்கு மேல் விற்றுக்கொண்டிருக்கிறது...மற்ற பலநூறு பதிப்புகள்?)
இன்றும் மூன்றாம் வகுப்பு தொடங்கி, முனைவர் பட்ட ஆய்வுக்கும் பாடமில்லாத வகுப்பே இல்லை எனும் பெருமைக்குரிய தமிழ்நூல் எது?
சந்தேகமில்லாமல் திருக்குறள்தான். ஆனால், அந்தநூலில் 'தமிழ்' எனும் சொல்லோ, 'தமிழ்நாடு' பற்றிய குறிப்போ இல்லாமல் போனது ஏன்? வள்ளுவர் இந்த விஷயத்திலும் சொல்லாமலே உணர்த்தும் பொருள்தான் என்ன?
"தமிழ் வாழ்க' என்று சொன்னால் மட்டும் வாழ்ந்துவிடாது. தமிழர்களின் வாழ்வியல் செம்மையானால் தமிழ் தானே வாழும்" என்பதோடு, "உலக மனிதர் அனைவர்க்கும்உள்ள வாழ்க்கைப் பிரச்சினைகள்தான் தமிழனுக்கும், இதைப்புரிந்துகொண்டால், உலகமே உன்னை ஏற்றுக் கொண்டாடும்" என்பதன்றி வேறென்னவாக இருக்க முடியும்?
எனவே, வள்ளுவர் சொல்லாமலே உணர்த்திய கருத்துகள் மிகவும் அழுத்தமானவை என்றே படுகிறது.
வள்ளுவருக்கு, மனிதனைவிடவும் மதமோ, ஆண்டவனோ, ஆள்பவனோ, மொழியோ, இனமோ, நாடோ முக்கியமில்லை. எல்லாவற்றையும் விட 'மனிதம்'தான் முக்கியமானது!
அதைக் காக்க அன்புவழியே சிறந்தது. எனினும்,. சில நேரம் அன்பு வழியைக் காட்டிலும் அறத்திற்காக வம்பு செய்வதும் தேவை என்று உறுதியானால் அதுவும் தவறல்ல (குறள்கள்:76, 1077) என்பதே அவர் சொல்லாமலும் உணர்த்தும் கருத்து
'சொல்லுதல் யார்க்கும் எளிய, அரியவாம் சொல்லிய வண்ணம் செயல்' - (664) வள்ளுவர் முதல் குறளை 'அ' எனும் எழுத்தில் தொடங்கி, 'ன்'எனும் கடைசி எழுத்தில் முடித்தது போல, கிட்டத்தட்ட நூலின் நடுவாந்திரமாக மேற்காணும் குறளை வைத்தது ஏன்? -
இதிலும் அவர் எதையோ சொல்லாமல் சொல்வதாகப் படுகிறது. ஆய்வுகள் தொடரட்டும்.
-----------------------------------------------------------------------------------
கட்டுரையை வெளியிட்ட ''ஜனசக்தி'' – நாளிதழுக்கு நன்றி.
"கற்றிலன் ஆயினும் கேட்க" (414) தல தலதான்..
பதிலளிநீக்குநீங்க பேசுங்க நாங்க கேட்கிறோம்..
“பணியுமாம் என்றும் பெருமை“ (978) னு காட்டிட்டீங்களே மது!
பதிலளிநீக்குநீங்கள் சொல்லியிருந்த தகவல் பிழையைத்திருத்திவிட்டேன். சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. நான் (ஆங்கிலம்) கற்றிலன் ஆயினும் (சொன்னால்) கேட்கத் தயாராகவே இருக்கிறேன்.சரியா?
'பெண்வழிச்சேரல்' எனும் அதிகாரத்தில் எனக்கும் கூட பிணக்கு தான்.ஆனால் கற்பென்று வருகையில் அதை இருவர்க்கும் பொதுவில் (ஆணுக்கும்)வைத்திருக்கிறார் என்பதை கருத்தில் கொள்ளத்தான் வேண்டும்,கடவுள் வாழ்த்தில் இத்தனை விசயங்களா?
பதிலளிநீக்குதமிழ் என்ற சொல்லை அவர் பயன்படுத்தாததற்கு அப்போ போட்டிக்கு நிறைய மொழிகள் இல்லையோ எனவும் சிந்திக்க வேண்டி இருக்கிறது .
சரி என் சொந்த அனுபவத்தை சொல்கிறேன் .துயர் வரும்போதெல்லாம் கடவுளின் காலில் பாரம் இரக்கும் புத்திசாலித்தனம் கைவராத நான் ஒரு காரியம் செய்வேன் திருக்குறளை எடுத்து மனம்போன பக்கம் திறந்தால், பிரச்சனையை அணுக துணிவோ,வழியோ,தூக்கி போட்டுட்டு வேலைய பரு எனும் ஆறுதலோ எனக்கு கிடைக்கும்(ஆய்ந்து ஆய்ந்து ,எண்ணித்துணிக ,யாதனின் யாதனின்,பெரும் பயனாயினும்).இப்டி கண்ட பக்கமா படிக்காம அதிகாரப்படி படிக்கலாமில்ல என நண்பர்கள் கேட்பதுண்டு.நான் என் அர்த்தமில்ல தேர்வுமுறைக்க படிக்கிறேன்.என் ஆன்மாவிற்காக படிக்கிறேன்.என் அரைகுறை திருக்குறள் அறிவை வைத்துக்கொண்டு இவ்வளவு பேசியதே டூ மச் .அப்பீட்டி ஆகுறேன் நன்றி அண்ணா!!
திருக்குறள் எல்லாவற்றையும் படித்தால்தான் அறிவாளி என்று யார்சொன்னது? தேர்வுக்குப் படிப்பவர்களை விட தேவைக்குப் படித்து, அவற்றைப் புரிந்து, வாழ்ந்தால் அதுதான் சரியான திருக்குறள் உரை(கல்) என்று நான் நினைக்கிறேன். (சரி...நீ என்ன பைபிள் ரேஞ்சுக்கு கொண்டுபோயிட்ட? அது சரியில்ல..)
நீக்குஅண்ணா ஒரு கருத்தை நான் தெளிவாகசொல்லவில்லை என நினைக்கிறேன். என் அப்பா என்னோடு பக்கத்திலேயே இருந்து வழிகாட்ட முடியாதசூழலில்,எனக்கு தெரிந்து நான் நாலாம் வகுப்பு படிக்கையில் இருந்து புத்தகங்களை தான் எனக்கு துணைக்கு வைத்தார்.திருக்குறளும் ஒரு புத்தகம்,துயர் வரும் போது நண்பர்களை நாடுவதைபோலவே புத்தகங்களை குறிப்பாக திருக்குறளை நாடுகிறேன்.வள்ளுவருக்கு வேண்டுதல் செய்யும் மனோபாவம் இல்லை என்பதை தற்போது தெளிவுபடுத்திவிட்டேன் என நினைக்கிறேன்.தவறாக கூறியிருப்பின் மன்னிக்கவும்.
நீக்குஉங்களின் ஆய்வும் மிகவும் அருமை... சிந்திக்க வைத்தது... அங்கங்கே பிடித்த ரசித்த பல குறள்கள் சொன்னதும், குறள்களின் எண்களை குறிப்பிட்டதும் சிறப்பு...
பதிலளிநீக்குகுழந்தைகளுக்கு முழுதாக கணிதம் சொல்லித் தரக் கூடாது (என்னைப் பொருத்தவரை) அப்படி சொல்லித் தந்தால் நாம் முட்டாள்கள் ஆகலாம்... குழந்தைகளும் கணிதத்தில் அறிவாளிகள் ஆக மாட்டார்கள்... அது போல "அய்யன் சிந்தித்து இருப்பாரோ...? பலவற்றை மக்களே அவர்களுக்கு தேவையான சிறந்த வகையில் பொருள் கொள்ளட்டும் என்று நினைத்து இருப்பாரோ...?" என்று நினைப்பதுண்டு...
நல்லதொரு அலசலுக்கு பாராட்டுக்கள் ஐயா... வாழ்த்துக்கள்... நன்றி...
நன்றி நண்பரே, நீங்கள் எழுதிய உரைகளைத் தொகுத்து (சுஜாதா பாணியில்) ஒரு நூலாக வெளியிடலாமே? (எல்லாக் குறளு்ககும் எழுத வேண்டும் என்று அவசியமிலல) தங்களின் அரிதான - நீண்ட- பகிர்வுக்கு நன்றி
நீக்குஆகா! ஆகா!! ஆகா!!! எப்பேர்ப்பட்ட ஆய்வு ஐயா இது! நானும் சிறு பையனாயிருந்தபொழுதிலிருந்து திருக்குறள் பற்றி எத்தனையோ கட்டுரைகள் படித்திருக்கிறேன். இந்தக் கட்டுரையிலுள்ள பல கருத்துக்களே கூட முன்பு சில கட்டுரைகளில் படித்துதான். ஆனால் இது திருக்குறளை அத்தனை கோணங்களிலிருந்தும் படமெடுத்தாற்போல் அப்படி ஓர் ஆய்வாக இருக்கிறது! வள்ளுவர் மீதான பெண்ணியக் குற்றச்சாட்டுகள், சமயக் கருத்துச் சுமத்தல்கள் போன்றவற்றுக்கு விளக்கம் அளித்ததோடல்லாமல் உரிய இடங்களில் வள்ளுவத்தின் குறைகளையும் ஒப்புக் கொண்ட வகையில் இது குறள் பற்றிய ஆய்வுக் கட்டுரைகளிலேயே உச்சக்கட்ட நடுநிலைச் சிறப்புடையதாக விளங்குகிறது. பொதுவாகக் குறள் பற்றி எழுதும் அனைவரும் அதை இந்து சமய - பார்ப்பனியக் கருத்துக்களுக்கு எதிராக மட்டும்தாம் இதுவரை பயன்படுத்திப் பார்த்திருக்கிறேன். மிஞ்சிப் போனால் தமிழர் வாழ்வில் கள் பற்றி அன்றே மறுத்துரைத்தவர் என்பார்கள். ஆனால் சங்க இலக்கியங்களிலிருந்தே அன்றைய தமிழர் வாழ்க்கை முறையை எடுத்துக்காட்டி, அதற்கு எதிராகவும்தான் குரல் எழுப்பினார் வள்ளுவர் என்று நீங்கள் எழுதியிருப்பது நடுநிலைமையின் உச்சத்துக்கும் சிகரம். எல்லாரும் வள்ளுவரைச் சமணர் என்றுதான் குறிப்பிடுவார்கள். ஆனால் உரிய காரணங்களுடன் தாங்கள் அதை மறுத்துரைத்தது சாலவும் துணிவான செயல்! மனோன்மணீயம், குமார சம்பவம், இறையியல் இலக்கியம், பாரதியார் படல் என இந்தச் சிறு கட்டுரையிலேயேதான் திருக்குறளை எத்தனை எத்தனை படைப்புகளோடு ஒப்பிட்டுக் காட்டியிருக்கிறீர்கள்!! முடிவில் 664ஆம் குறளை எடுத்துக்காட்டித் தொடர் ஆய்வுகளுக்குக் குறிப்பெடுத்துக் கொடுத்தது ஆங்கிலப் படங்களின் முடிவு போல் இருந்தது! ஆனால் இவ்வளவும் சொன்ன நீங்கள் குறள் வலியுறுத்தும் புலால் மறுத்தல் பற்றிப் பேசாதது ஏன் என்பது எனக்குப் புரியவில்லை. ஒருவேளை ஐயனைப் போலவே தாங்களும் சொல்லாமல் சொல்லும் விதமாக இப்படிச் செய்திருக்கிறீர்களோ! எனில் இதன் மூலம் தாங்கள் எங்களுக்கு உணர்த்த விழைவது என்ன எனச் சிந்திக்கிறேன். மொத்தத்தில் அற்புதமான படைப்பு ஐயா இது! திருக்குறள் குறித்து ஏதாவது எழுத வேண்டுமானால் உசாத்துணைக்கு உடனே இதை எடுத்துப் பார்க்கலாம். மிக்க நன்றி ஐயா!
பதிலளிநீக்குநன்றி நண்பரே.
பதிலளிநீக்குபுலால் மறுத்தல் குறித்து வள்ளுவர் சொன்னது, ஒருவகையில் அன்றைய வேள்வி எதிர்ப்பு முறை என்றும் நான் நினைக்கிறேன். ஆனால், புலால் உண்ணாமல் மனிதனின் இன்றைய வளர்ச்சியும், வலிமையம் இல்லை என்பதை நினைக்க வேண்டுகிறேன். சைவம் (சிவம்?) என்பது, வேதியர்களின் “அதைச்செய்யாதே, இதைச் செய்யாதே” எனும் கட்டுப்பாட்டு நோக்கில் வந்தது என்பதோடு, மதம் சார்ந்ததும் கூட என்பதையும் சேர்த்தே யோசிக்க வேண்டும். இன்றைய “சைவ”இளைஞர் பலரும் அசைவராகி வருவதைக்கவனித்தால் வள்ளுவர் இதை மறுபரிசீலனை செய்வார் என்றே நினைக்கிறேன். அனாவசியமாக வேறு உயிர்களைக் கொல்லாமை என்பதில் யாரும் உடன்பட முடியும். இதை மதக்கோட்பாடாக்கினால் வள்ளுவருக்கும் “பெண்வழிச் சேரல்” போல ஒருபடி இறக்கம்தான் என்பதில் எனக்கும வருத்தம்தான். நன்றி தோழர்.
சிறப்பான பதிவு ,வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குஐயா வணக்கம்.
பதிலளிநீக்கு*திருவள்ளுவர் சொல்லாமல் சொன்னதென்ன?*
கட்டுரை படித்தேன் திருவள்ளுவரையும் திருக்குறளையும் நோக்கிய ஒரு பயணமாக இருந்தது தங்களது கட்டுரை.
"வள்ளுவர் ஏன் அறிவைப் பெரிதும் வலியுறுத்துகிறார்?" என்ற கேள்விக்கு பதிலளித்த விதமும்,
"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ (972) -எனும் குறள், பாராளுமன்றத்தில் பகத்சிங் வீசிய குண்டுக்கு நிகரானது!" என்ற சொல்லாடலும் மிகவும் புரட்சிகரமான வரிகள்.
"தமிழ் வாழ்க' என்று சொன்னால் மட்டும் வாழ்ந்துவிடாது."
இதை இன்றைய அரசியல் தலைவர்களுக்கு கொடுத்த சாட்டையடியாகவே நினைக்கிறேன்.
"வள்ளுவர் சொல்லாமலே உணர்த்திய கருத்துகள் மிகவும் அழுத்தமானவை என்றே படுகிறது.
"வள்ளுவருக்கு, மனிதனைவிடவும் மதமோ, ஆண்டவனோ, ஆள்பவனோ, மொழியோ, இனமோ, நாடோ முக்கியமில்லை. எல்லாவற்றையும் விட 'மனிதம்'தான் முக்கியமானது!" என்ற வரிகள் வாழ்வின் இலக்கணத்தை உணர்த்தும் வகையில் உள்ளன.
மிக்க மகிழ்ச்சி ஐயா. சிறப்பாக உள்ளது தங்களது இந்த கட்டுரை. இன்றைய மாணவர்களுக்கு நல்ல படிப்பினை.