இளைய கவிஞர்கள் கவனிக்க - கிரேஸி மோகனின் வெண்பாக்களை முன்வைத்து...

       
பிரபல நாடக, திரைப்பட வசன ஆசிரியர் கிரேசி மோகன் அவர்களை நான் அறிமுகப்படுத்த வேண்டியதில்லை. அவர் அழகான-தமிழ்ச் செய்யுள் மரபு மாறாத வெண்பாக்களையும் எழுதுவார் என்பதை நான் மகிழ்ச்சியோடு அறிமுகம் செய்யலாம்தானே?
     
 எழுபதுகளில் எழுதவந்த வர்களின் வேடந்தாங்கலான “தீபம்“ இலக்கிய இதழின் ஆசிரியராக இருந்தவர் முந்திய தலைமுறையின் பிரபல எழுத்தாளர் நா.பா.அவர்கள். அவரது மாணவரும் இன்றைய பிரபல எழுத்தாளருமான “அமுதசுரபி“ ஆசிரியர் திரு. திருப்பூர் கிருஷ்ணன். தனது குருநாதர் நா.பா. அவர்களைப் போலவே மரபில் காலூன்றி புதுமையோடு கைகுலுக்குபவர் என்பது, 2014-அமுதசுரபி தீபாவளி மலரைப் பார்க்கும்போது தெரிகிறது. (ஆலங்குடி ஜெயராமன் அவர்களுக்கு நன்றி)
    வழக்கமான தீபாவளி பற்றிய புராண இதிகாச விளக்க்க் கட்டுரைகள், வண்ண ஓவியங்களிடையே வித்தியாசமான எட்டு வெண்பாக்கள்!
     யாரென்று பார்த்தால் எழுதியவர் கிரேசி மோகன்!!
நீங்களே படித்துப பாருங்கள் – (எட்டு வெண்பாக்களில் இரண்டரை மட்டும்)
(1)நாக்கில் நரம்பின்றி நாளும் வசைபாடி,
  தீக்குள் குளிர்காயா தே,நெஞ்சே! – வாக்கில்
  கலைவாணி வந்து குடியேறும் வண்ணம்
  அலைபாய்ந் திடா(து) அடங்கு
   
(4)நவையூறும் நாவில் சுவையூறச் செய்து
  அவையேறும் வாழ்வை அளிப்பாய்! -

(8)கண்ணன் குழலில் கணபதி மோதகத்தில்
  வண்ண மயிலூர்வோன் வேல்முனையில்–மின்னும்
  திருவில் மகேசன் தவத்தில் திகழ்வாள்
  உருவிலிவள் பாயும் ஒளி.
இவற்றிலும் கூட குற்றியலுகரத்தால் வரும் ஓசைக்குறை, வெண்பா இடையில் வரக்கூடாத ஓரசைச் சீர் முதலான, செய்யுள் மரபில் பிழைபடும் இடங்கள் உள. இருந்தாலும் (சுஜாதா வெண்பாக்களிலும் இவைபோலும் பிழைகளைக் காணலாம்) கிட்டத்தட்ட மறைந்து வரும் தமிழின் மூத்த கவிதை வடிவத்தை, இவர் இந்தளவுக்குப் படித்திருக்கிறாரே என்னும் வியப்பு “கிரேசி மீதான கிரேசை“ மிகுவித்தது. (கற்பூர வாசனை தெரிஞ்ச கழுதைதான் என்று அபூர்வ ராகங்கள் படத்தில் கமல் சொல்லும் வசனம் நினைவில் வருகிறதா?)
Tamil Poet Puthiya Maadhavi
கவிதையை மட்டுமே முழுநேரமாக எழுதிவரும் இளைய நம் கவிஞர்கள் இன்னும் எவ்வ்வ்வ்வவளவு படிக்க வேண்டும் என்னும் கருத்தே என் நெஞ்சில் அலைமோதியது. அதற்காக நமது மரபுப் பாவகைகள் எல்லாவற்றையும் கரைத்துக்  குடித்து, அதன் பிறகுதான் எழுதவேண்டும் என்று சொல்ல மாட்டேன். ஆனால்...
     “காரிகை கற்றுக் கவிபாடுவதிலும்
   பேரிகை கொட்டிப் பிழைப்பது மேலேஎன்று அலட்சியமாக எதையும் நினைக்க வேணடாம்
     கொட்டிக் கிடக்கும் குவியலான பாவகைத் தங்க வைரக் கட்டிகளை எடுத்து, அதில் வகைவகையான புதுக்கவிதை ஆபரணங்களைச் செய்து தமிழ்த்தாய்க்குச் சூட்டுங்கள் என்றுதான் உரிமையோடு வேண்டுகிறேன்.
      ஆழமாக வேரோடாமல்,
     அழகான கிளைகள் ஏது?
Tamil Poet Thaaraa bharathi 
இன்றைய  பிரபல கவிஞர்கள் பலரும் நம் தமிழ்மரபுச் செல்வங்களின் மாறாத மதிப்பறிந்து பயன்படுத்தினர்! அவர்களிடம் பாடம் கற்றுக்கொள்ளாமல் இலக்கிய உலகில் சாதிப்பதெப்படி?
  இளைய கவிஞர்கள் படிக்க வேணடிய தொகுப்புகளாக நான் சிபாரிசு செய்யும் -தமிழின் மரபை உள்வாங்கிய- புதுக்கவிஞர்களின் தொகுப்புகள் –
(1)    வெளிச்சங்கள் – வானம்பாடிகளின் தொகுப்பு
(2)    மீரா கவிதைகள்
Tamil Poet Jayabaskaran
(3)    சிற்பி கவிதைகள்
(4)    அப்துல் ரகுமான் கவிதைகள்
(5)    ஈரோடு தமிழன்பன் கவிதைகள்
(6 தணிகைச்செல்வன் கவிதைகள் 
(7)    காசிஆனந்தன் கவிதைகள்
(8)    வைரமுத்து கவிதைகள்
(9)    மு.மேத்தா கவிதைகள்
(10)தாராபாரதி கவிதைகள்

கடந்த 25ஆண்டுக்குள் எழுதத் தொடங்கி இப்போது வெற்றிபெற்ற கவிஞர்களாக வலம் வருவோர் கவிதைகளைச் சொல்லச்சொன்னால் – 
(1)    ஆதவன் தீட்சண்யா
(2)    ஜெயபாஸ்கரன்
(3)    புதியமாதவி
(4)    நா.முத்துக்குமார்
(5)    யுகபாரதி
(6)    அ.வெண்ணிலா
(7)    இளம்பிறை
(8)    தங்கம் மூர்த்தி
(9)    ஆர்.நீலா
(10)இன்னும் ஒரு தொகுப்பும் போடாமலே அருமையாக எழுதிவரும் இரா.தனிக்கொடி, மைதிலிகஸ்தூரி 
(இந்தப்பட்டியலில் கடைசியில் இருக்கும் 4பேர் எங்கள் ஊர்க்காரர்கள் என்பதால் பட்டியலில் இடம்பெற்று விட்டார்கள் என்று நினைக்காதீர்கள்.எழுதுபவன் நான்
Tamil Poet Thangam Moorthy
என்பதால் இவர்கள் கடைசியில் இடம்பெற்றிருக்கிறார்கள். மற்றவர் பட்டியலில் இன்னும் முன்னே வருவார்கள். எதிர்காலம் என்னை வழிமொழியும், காத்திருங்கள்.)
இன்னும் நிறையப் பேரைச் சொல்லலாம். சட்டென்று நினைவு வந்தோர்தான் இது எனது பார்வைக் குறைவாகவும் இருக்கலாம். ஆனால், தற்காலக் கவிதைகளை ஆய்வு செய்வோர் மறுக்கவியலாப் பட்டியல் இது. மரபுக் கவிதை, சந்தக் கவிதைகளை அற்புதமாக எழுதிவரும் “ஊமைக்கனவுகள்“ திருச்சி விஜூ அவர்களின் தளத்தைப் பார்க்க வேண்டும். 
குறைந்த பட்சம் இவையிரண்டிலும் சேர்த்துப் பத்துப்பேர் கவிதைகளையாவது முழுவதும் படிக்காமல் எழுதப்படும் கவிதைகள் .காலத்தை வென்று நிற்பதரிது.  (அய்க்கூ, இசைப்பாடல் பட்டியல் தனி.)
இவர்களின் கவிதைகளிலும் எடுத்துக் காட்டான தொகுப்புகள் எனச் சிலவற்றைத்தான் குறிப்பிடலாம். ஆனால் அதையும் நானே சொல்வதைவிடப் படித்துத் தெரிந்து கொள்வதுதான் அவரவர் சுவைக்கும் நோக்கிற்கும் ஏற்றதாக இருக்கும். “நூறு பூக்கள் மலரட்டும்” -மாஓ.
எனவே,
என்இனிய இளைய கவிகளே!
நிறையப் படியுங்கள் 
குறைவாகவும் 
நிறைவாகவும் 
எழுதுங்கள். 
வாழ்த்துகள்.
---------------------------------------

56 கருத்துகள்:

  1. அய்யா,நல்ல பதிவு,கிரேசி மோகனின் வெண்பா ஞானம் வியக்கவைக்கிறது.!
    மேத்தா,வைரமுத்து,மீரா இவர்களின் கவிதைகளில் மிளிர்கின்ற 'எளிமை' ,'யதார்த்தம்' இன்றைய கவிஞர்கள் பார்க்கவேண்டியவை.
    தங்கள் அடிக்கடி சொல்வதைப்போல வார்த்தைகள் குறையக்குறைய,கவிதை ஆழப்படும்! அர்த்தப்படும்.!.பிறராலும் எடுத்து ஆளப்படும்.!
    தாங்கள் குறிப்பிட்டுள்ள பின்வரும் பட்டியலில் 'வளர்ந்துவரும் நம் கவிதை நண்பர்களின் பெயரும் இடம்பெற வேண்டும்', என்பதே நம் ஆசை.!
    இன்றைய கவிஞர்களின் பாடுபொருள் வித்தியாசமாக இருக்கிறது..!.சொல்லும்விதம்,எளிமை,வார்த்தை சிக்கனம் இவையும் சேர்ந்தால்,தமிழ் இலக்கிய வரலாறு இவர்களின்றி எழுதப்படமுடியாது.! வரிகளைக் குறைப்பது என்பது,அரசுக்கு மட்டுமல்ல,கவிஞர்களுக்கும் நல்லது.
    "poetry is not in words;it is in between the words"என்ற மில்டனின் வரிகள் நினைவுக்கு வருகிறது. நான் கவிஞனல்ல..! சுவைஞனாக இதைச் சொல்கிறேன். தங்கை மைதிலி,நண்பர் தனிக்கொடி இனியாவது கவிதைத் தொகுப்புகள் போடவேண்டும்.!உங்கள் இரண்டு பட்டியலிலும் சொல்லப்பட்ட நூல்களில்,சில நூல்கள் என்னிடம் இல்லை. வங்கிப் படிக்கிறேன்..நன்றி..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 'தங்கள் அடிக்கடி சொல்வதைப்போல வார்த்தைகள் குறையக்குறைய,கவிதை ஆழப்படும்! அர்த்தப்படும்.!.பிறராலும் எடுத்து ஆளப்படும்.!' -உண்மைதான் அய்யா.சுவையறிந்தோர் “கம்பசூத்திரம்“ என்றதும், வைரமுத்து அதையே “சொல்லுக்குள் வாக்கியத்தைச் சுருக்கிவச்ச கவிப்புலவா!” என்று சொக்கியதும் பொய்யல்லவே? சுண்டக் காய்ச்சிய பாலுக்குச் சுவை அதிகம்தானே? இன்றைய பால்கார வியாபாரிகளை விடவும் பக்குவப்படாத கவிஞர்களல்லவா நீர்த்தன்மையை மிகுவிக்கிறார்கள் என்பதே கவலை! நன்றி

      நீக்கு
  2. புதுக்கோட்டைக் கவிஞர்கள் நால்வரும் இன்னும்
    முன்னே முன்னே வருவது உறுதி ஐயா
    காலம் அவர்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்து நிச்சயம் காட்டும்.
    கல்லூரிக் காலங்களில்
    மு.மேத்தாவைத் தேடி அலைந்த எண்ணங்கள் நினைவில் மோதுகின்றன ஐயா
    // ஆழமாக வேரோடாமல்,
    அழகான கிளைகள் ஏது?//
    நிறையப் படிப்போம்
    குறைவாகவும்
    நிறைவாகவும்
    எழுதுவோம்
    நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நட்பு வேறு நல்ல இலக்கியம் வேறு என்பதில் கவனமாயிருப்பவன் நான், நண்பர்கள் என்பதற்காகப் புகழும் பழக்கமில்லை. இன்னும் சொன்னால் நீலாவை நேருக்கு நேராக விமர்சித்தவன் என்னும் கெட்டபெயரும் எனக்கு உண்டு. அறிந்தவர் அறிவாராக நன்றி.

      நீக்கு
  3. கிரேசி மோகனின் புலமை வாவ்.
    உங்களின் ஆழமான வாசிப்பும் இலக்கிய விமர்சனப் பாணியும் புரிந்த எனக்கு உங்கள் பட்டியல் முக்கியமானது...

    மேலும் பட்டியலில் ஒரு பெயர் எனக்கு மகிழ்வு..
    தங்கை வீட்டின் அருகே கண் நோய் பரவுவதால் இப்போது என் வீட்டில் அடைக்கலம் தங்கை.
    குழந்தை குடுத்த சவுண்டில் அம்ம்விர்க்கு குளிர் ஜுரம்...
    எனவே கவிஞர் தற்காலிகமாக வீட்டுக்குள் புயலாக வீசிக் கொண்டிருக்கிறார்...

    தங்கையின் குழந்தையைப் பார்த்தால் எல்லாமே மகிழ்வாகத் இருக்கிறது...
    குட்டீஸ் அத்தையை விட மாட்டேன் என்கிறாள்...
    ரொம்ப ஹாப்பி எல்லோரும்
    பதினைந்துக்கு மேல் அடுத்த ரவுண்ட் தொடங்கலாம் என்று நினைக்கிறன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பட்டியலில் உள்ள நூல்களில் எவையெவை உங்களிடம் இல்லை என்பதை அன்புகூர்ந்து எனக்குத் தெரிவியுங்கள். உருவாகிவரும் நல்லகவிஞர்க்குத் துணைவராக நீங்களும் அண்ணனாக நானும் அவர்க்குத் தேவையான நூல்களைப் பெற்றுத்தரும் கடமை நமக்குண்டு.(எல்லாம் சுயநலம்தான் நாளை என்பெயரையும் சேர்தது என்தங்கை சொல்வாரே?)

      நீக்கு
  4. கவிஞர்களை ஊக்கப் படுத்தும் பதிவு. சிறந்த முன்னுதாரணங்கள். "வெறுங்கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம்" என்ற நிகரில்லா எழுச்சி வருகளுக்கு சொந்தக் காரரான கவிஞர் தாராபாரதி. அவர்களை இலக்கிய வீதி மூலம் அறிந்திருந்தேன். கவிஞர் இளம்பிறை என்னுடன் பணியாற்றியவர்.

    வெண்பாவில் எனக்கும் ஆர்வம் உண்டு.அதன் இலக்கணம் முழுவதையும் முழுவதும் அறியவில்லை என்றாலும் ஒன்பதாவது பத்தாம் வகுப்பில் படித்தபோது அரைகுரையாக எழுதியதுதான்

    நிலா

    நற்றமிழ்(ப்) பாவலர்கள் போற்றியுனைப் பாடியதால்
    பெற்றிட்ட நல்லொளியை இப்புவிக்கே நீயளித்தாய்
    பாடி மகிழ்விப்பேன் சொல்வாய்-ஒருநாள்நீ
    ஓடி மறையும் இடம்

    இதை குறை சொல்லாமல் பாராட்டினார் என் தமிழாசிரியர் கோ.பெரியண்ணன் அவர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெரியண்ணன்கள் வாழ்க! ஒன்பதாம் வகுப்பில் பாடியதா? அய்யா என்ன அழகான கற்பனை?!!? ஒளிபெற்றதற்கு ஒரு காரணக் கற்பனை எனில் ஒருநாள் விடுமுறைக்கு மற்றொரு கற்பனை! அழகொழுக அப்போதே எழுதிய நீஙக்ள் அதை இன்றும் உரைநடையில் வெளிப்படுத்துகிறீர்கள் அய்யா! நன்றி

      நீக்கு
  5. ஐயா வணக்கம்.ஞாயிறு மதியம் பொதிகையில் திரு ரமணனுடன்சிலரது கவிதைகள் வாசிக்கக் கேட்டுள்ளேன். ஒரு முறை கிரேசி மோகனும் பங்கேற்று வெண்பா படித்தது கண்டிருக்கிறேன்.
    நீங்கள் அவரது பாடல்களில் இரண்டரை வெண்பாக்கள் கொடுத்தது ஏன் என்று புரியவில்லை
    மரபு கவிதை எழுதுவதில் மொழி ஆளுமை நிறைய வேண்டும் இலக்கணத்துக்காக வார்த்தைகளைத் தேடி எழுதுவதில் தேவை இல்லாத வார்த்தைகள் இடம் பிடித்துக் கவிதையின் அழகு கெடுவதைப் பார்க்கிறேன் .
    நம் வலைப் பூக்களிலேயே அட்டகாசமாக மரபுக் கவிதைகள் எழுதி வருபவர்களில் என்னைக் கவர்ந்தவர் சிவகுமாரன் மற்றும் இளமதி/
    நான் ஒரு சுட்டி தருகிறேன். நான் மரபுக் கவிதை கற்க முயன்றது பற்றியது.gmbat1649.blogspot.in/2011/08/blog-post_29.html

    எதுதான் கவிதை எனநான் எழுதினேன்
    ஏதும் சரியே எனவே இயம்பினர்
    ஏற்காத உள்ளம் உணர்ந்தது யாப்பியல்
    கற்றுத் தெளிதல் சிறப்பு.


    மரபியலில் பாட்டெழுதக் கற்க அலகிட்டு
    சீர்பிரித்தால் மாமுன் நிரையும் விளமுன்நேர்
    சீராய் வருதல் தளைதட்டா திருத்தல்
    வேண்டும் புரிந்து கொள்

    நான் சில முயற்சிகளுக்குப் பின் தெரிந்து கொண்டது. கவிதை என்பதை ரசிக்க மரபு மட்டும் போதாது. என்பதே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவிதை கரையில கவிஞர்கள் நாள்சில! முயற்சி தொடர்வோம் அய்யா. தங்களின் இரண்டாவது வெண்பாவின் ஈற்றடியில் வெண்டளை தட்டுகிறதே அ்யயா. முயற்சி தொடர்வோம். அன்பான பின்னூட்டம் மகிழ்வளிக்கிறது. தொடர்ந்து கற்போம்.

      நீக்கு
  6. ஐயா!
    தங்கள் அனுமதியின்றி தங்கள் வலைப் பக்கத்தில் தமிழ் மண ஓட்டுப் பட்டையை இணைத்து ஓட்டும் போட்டு விட்டேன். மன்னிப்பீர்கள் என்று நம்புகிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அய்யோ.. அய்யா இது பேருதவி அல்லவா? (எனக்குத் தெரியாத தொழில் நுட்பத்தைக் கற்றுத்தர எதற்கய்யா அனுமதி? கட்டை விரலைக் கேட்டாலும் தரமாட்டேனா -நீங்க கேக்க மாட்டீங்கல்ல?)
      இன்னும் என்னென்ன செய்யலாமோ செய்க அதுதான் மன்னிப்பு.

      நீக்கு
    2. calmஆக என் தளத்தை comக்கு மாற்றிவிட்டீர்கள் போல...
      இதற்காகவே நான் இன்னும் சிறப்பாக எழுதவேண்டும் என்னும் பொறுப்பை உணர்த்திவிட்டீர்கள் அய்யா.. இன்று மதியம் வேறொரு வேலை கையைப் பிடித்து இழுக்கிறது அவசரமாக இந்தப் பதில். பொறுமையாக இரவு வந்து அனைத்துப் பின்னூட்டங்களுக்கும் பதிலிடுவேன். அதுவரை பொறுத்தருள்வீர். நன்றி வணக்கம்.

      நீக்கு
  7. வணக்கம் ஐயா!

    மிக மிக அருமையான அவசியமான பதிவு! மிக்க மகிழ்ச்சி!
    கிரேஸி மோகனுக்குள் இருக்கும் திறமைகளில் கவியாக்கமும்
    என்னைத் திகைக்க வைத்தது. அருமை!

    நீங்கள் கூறுவது போல நல்ல படைப்புகளைத் தேடி, நாடி நானும்
    படிப்பது உண்டு. அதிலும் இங்கு நான் வாழும் நாட்டில் நீங்கள்
    குறிப்பிட்டவர்களின் கவிதை நூல்கள் காசி ஆனந்தன் ஐயாவின்
    சிறிய தொகுப்பு ஒன்றைத்தவிர கைவசம் ஏதும் கிட்டாதவள்.

    ஆன்லைனில் புத்தகங்கள் கிடைத்தாலோ இல்லை
    மின்நூல் புத்தகமாகவோ இருந்தாலும் பெற்றிடுவேன்.
    நல்ல வழிகாட்டினீர்கள். கிடைக்கும் நேரத்தில் இன்னும் ஊன்றிக்
    கற்கின்றேன் நான்.
    ஊக்கம் தரும் நல்லபதிவு ஐயா! நன்றியுடன் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இயன்றவரை மின்னூலாகக் கிடைப்பனவற்றைத் தெரிவிப்பேன் சகோதரி. நீங்களே அற்புதமான மரபுக் கவிஞர்தான். இன்னும் கற்பேன் என்று சொல்வதால் நீங்கள் இன்னும் உயர்கிறீர்கள். தங்கள் நண்பர்கள் யாரும் இங்கிருந்து வருவதாகத் தெரிந்தால் தயங்காமல் தெரிவியுங்கள் எனது நூல்கள் உள்ளிட்ட நீங்கள் விரும்பும் நூல்களைத் தந்தனுப்புவேன். இதைவிட வேறென்ன மகிழ்ச்சியான உதவி தங்கையே? தயங்காமல் சொல்லலாம்.

      நீக்கு
    2. மீண்டும் வணக்கம் ஐயா!

      என்னப் போன்றோரை ஊக்குவிக்கும் தங்கள் கருத்து என்னை நெகிழ்த்தியது ஐயா!.

      தெரிந்தவர்கள் வரும்போது தெரிந்தாற் கூறுகிறேன்.

      ஐயோ!... நான் இன்னும் கற்றுக்குட்டிதான் ஐயா!
      கற்கவேண்டியவற்றில் ஒரு புள்ளியைக்கூட இன்னும் முழுமையாகக் கற்கவில்லை... காலமும் நேரமும் கைகொடுக்குதில்லை... முயல்கின்றேன்.!
      என்னைப் பற்றிய தங்கள் மதிப்பிற்கு உளமார்ந்த நன்றி ஐயா!

      தமிழ் மணம் 3
      தமிழ் ம

      நீக்கு
  8. அன்புள்ள அய்யா,

    கிரேஸி மோகனின் வெண்பாக்களை முன்வைத்து... இவற்றிலும் கூட குற்றியலுகரத்தால் வரும் ஓசைக்குறை, வெண்பா இடையில் வரக்கூடாத ஓரசைச் சீர் முதலான, செய்யுள் மரபில் பிழைபடும் இடங்கள் இருப்பதை ..‘நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே ’ நாகரிக நக்கீராக ... புலவர் நா.மு.நிலவுகிறார்.

    ‘கவிதை எழுதுவதே முழுநேரமாக எழுதிவரும் இளைய நம் கவிஞர்கள் இன்னும் எவ்வளவு படிக்க வேண்டும் என்னும் கருத்தே என் நெஞ்சில் அலைமோதியது. அதற்காக நமது மரபுப் பாவகைகள் எல்லாவற்றையும் கரைத்துக் குடித்து, அதன் பிறகுதான் எழுதவேண்டும் என்று சொல்ல மாட்டேன்.’

    இங்குதான் கவிஞர் நா.முத்துநிலவன் நிற்கிறார். இளங்கவிஞர்களை ஊக்குவிக்கத் தவறவில்லை. இளைய கவிஞர்கள் படிக்க வேணடிய தொகுப்புகளாக நான் சிபாரிசு செய்யும் -தமிழின் மரபை உள்வாங்கிய- புதுக்கவிஞர்களின் தொகுப்புகளைப் படிக்க வேண்டும் என வழிகாட்டியது அருமை அய்யா. நிறைய படித்து...குறைவாக... பிழையின்றி எழுத வேண்டியதென...தமிழின் மீதுள்ள அக்கறையும்...இளம்கவிஞர்களை வளர்க்கும் ஆர்வமும் கட்டுரையில் பளிச்சிடுகின்றன.

    வளரும் கவிதைகளாயிற்றே...
    வளர்க்கமால் இருப்பீரோ...?
    வளர்ப்பதும் வளம் செழிக்கச் செய்வதும்
    வாழ்த்துவதும் கவிஞர் நீ தானே!
    -மாறாத அன்புடன்,
    மணவை ஜேம்ஸ்.
    manavaijamestamilpandit.blogspot.in



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆனாலும் நண்பரே, எனக்கொரு கவலை வந்துகொண்டெ இருக்கும் புகழ்ச்சியாகவே இருக்கும் விமர்சன பாணியில் நமது நேர்படப் பேசும் விமர்சனம் -அவர்கள் நன்மைக்கே என்றாலும்- தவறாகவே புரிந்துகொள்ளப் படுகிறது. நட்பின் அடையாளம் இதைச் சரியாகச் சொல்வதுதானே? சொல்வோம் எடுத்துக் கொள்வதும், தடுத்துச் செல்வதும் அவரவர் விருப்பம். மற்றபடி கொழுந்துகளைக் கிள்ளிவிடாமல், பழுத்த இலையைக் கிள்ளி அந்தச் செடிக்கே உரமாக இடுவதே நம் கடமை!

      நீக்கு
  9. இளைய கவிஞர்களுக்கு சிறப்பான அறிவுரை! நிறைய படித்தால் நிறைவாக எழுதலாம் என்பது உண்மைதான்! கிரேசி மோகன் அவர்கள் வெண்பா எழுதுவார் என்பதை இந்து நாளிதழில் அவரது தொடரில் படித்து அறிந்து கொண்டேன்! நானும் ஐக்கூ கவிதைகள் எழுதிப் பழகுகிறேன்! நீங்கள் பரிந்துரைத்த கவிஞர்களின் நூல்கள் சில படித்து இருக்கிறேன்! இன்னும் படித்துப்பார்க்கிறேன்! சிறப்பான பகிர்வு! நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அய்யா வணக்கம். இந்தப் பட்டியல் ச்சும்மா விறுவிறுவென்று நினைவிலிருந்து எழுதியது. அமர்ந்து பட்டியலிட்டால் இன்றைய தமிழில் நன்றாக எழுதும் கவிஞர்கள் இன்னும் குறைந்தது ஐம்பதின்மர் இருப்பார்கள் அவர்களையெல்லாம் தொடர்வதுதான் “வளரும்கவிதை“யின் வேலை! இதுபற்றி நான் பத்தாண்டுகளுக்கும் மேலாக ஆய்வு செய்து “கவிதையின் கதை“ என்றொரு நூல் எழுதிவருகிறேன். முடிக்க அச்சமாக இருக்கிறது...அவ்வளவு தகவல்கள்! அடுத்த ஆண்டு வெளியிட எண்ணம். தொடர்ந்து பயில்வோம் நன்றி அய்யா.

      நீக்கு
  10. வணக்கம் ஐயா...
    நல்லதொரு உற்சாகப் பதிவு என்போல் இளம்களுக்கு நன்றி...

    அடியேன் என்னுடைய எழுத்துக்களையும் கொண்டு என் தலையில் கொட்டிவிட்டு போகவேண்டும் எழுத்தறிவு அதிகம் இலாது இயற்றும் கருவியாய் பணிகிறேன் தங்களை....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. “பள்ளிக்கூடம் இல்லா ஊரில் படித்தவன்“ பட்டுக்கோட்டைக் கல்யாண சுந்தரம்தான் தமிழில் சொல்லவேண்டிய கருத்துகளைச் சொக்கவைக்கும் அழகோடு பாடியவன். கல்வி என்பது எழுத்தறிவு மட்டும் சார்ந்ததல்ல. கம்பன் ஓர் உழவனின் ஒற்றைவரியில் மயங்கி இரவெல்லாம் தூங்காமல் அடுத்தநாள் விடிகாலையில் ஓடி அந்த இரண்டாம் வரியைக் கேட்டதாக நீங்கள் கேள்விப்பட்டதில்லையா? அவன்தான் கல்வியிற் சிறந்த கம்பன், உழவனிடம் பாடம் படித்தவன்! பெரியவர்கள் எப்போதுமே யாரிடமாவது படித்துக்கொண்டே இருப்பார்கள்.

      நீக்கு
  11. நல்ல பதிவு! இளைய ககவிஞர்களை ஊக்குவிக்கும் ஒரு நல்ல பதிவு! கிரேசி மோஹன் வெண்பா எழுதுவார் என்பது தொலைக்காட்சியில் அவர் வாசிக்கக் கேட்டிருக்கின்றோம்.

    வலைப்பூக்களில், நம் ஜோசஃப் விஜு ஆசான் (நாங்கள் அவரை ஆசான் என்றுதான் குறிப்பிடுவோம். ) கொடி கட்டிப் பறக்கின்றார். எல்லோரியும் மொழி ஆளுமையால் கட்டிப் போட்டு வைத்திருப்பவர். பட்டொளி வீசி! சகோதரி மைதிலி பற்றிச் சொலல்த் தேவையில்லை. நாங்கள் ரசித்து வாசிப்போம்! இன்னும் நிறைய வாசிக்க வேண்டும்! ஐயா தங்கள் சிறப்பான பகிர்வுக்கு மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி அய்யா. ஜோசப் விஜூ மரபிலும் புதுக்கவிதையிலும் செறிவாக எழுதக்கூடியவர். நடையில் இன்னும் சற்றே எளிமை இருந்தால் இன்னும் ஏராளமானோர் பயன்பெறுவர். (எளிமைதான் தேவை, எளிமைக்கும் மலிவுக்கும் வேறுபாடு உண்டு. ஆசிரியர் திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரனார் கடுநடை. மாணவர் உ.வே.சா.நடை எளியநடை. இன்றைய கதையாடிகள் -நாவல் வியாபாரிகளின்- நடை மலிவான நடை.! தங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி அய்யா, வணக்கம்.

      நீக்கு
  12. நல்லதொரு அலசல் இன்றைய இளைய கவிஞர்களுக்கு தங்களைப் போன்றவர்களின் விமர்சனம் நல்லதொரு உற்சாகத்தை கொடுக்கும் என்பதில் ஐயமில்லை நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல விமர்சனம் நல்ல விளைச்சலைக் கொடுக்கவேண்டும். நல்லவிளைச்சல் நல்ல விமர்சனங்களைத் தூண்டும். அதுதான் நம் எதிர்பார்ப்பும் நன்றி நண்பரே!

      நீக்கு
  13. பாவலர் நா.முத்துநிலவன் வழிகாட்டுகின்றார்!
    http://paapunaya.blogspot.com/2014/11/blog-post.html

    ஐயா!
    மேற்படி எனது தளத்தில்
    தங்கள் பயனுள்ள பதிவைப் பகிர்ந்துள்ளேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அய்யா பார்த்தேன். அங்கேயும் பின்னூட்டமிட்டிருக்கிறேன். அன்பின் மிகையால் என்னைப் பற்றிக் கூடுதலாகவே எழுதியிருக்கிறீர்கள். எனினும் தங்கள் அன்பிற்கு நன்றி.

      நீக்கு
  14. அண்ணா தக்க சமயத்தில் தகுந்த பகிர்வு. எனக்கு என்று தான் சொல்ல வேண்டும். உற்சாகப்படுத்துவதோடு இல்லாமல்.. ஊக்கப்படுத்தும் விதமாக கற்றுத் தெளிக என்று சொன்ன விதம் சிறப்பு. இந்த தங்கையை குட்டியும் மரபைக் கற்க வைக்க உங்களுக்கு உரிமை உண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கையின் பதில் மகிழ்வளிக்கிறது. உனது முத்தான வெண்பாக்கள் பற்றி அங்கேயே நீண்ட கருத்திட்டிருந்தேனே? பெண்கள் மரபு எழுதுவது மிகவும் குறைவும்மா. தொடர்ந்து எழுது. படித்துக்கொண்டே எழுதிக்கொண்டே படித்துக்கொண்டே...

      நீக்கு
  15. ஐயா...
    கவி சுவை அறிந்தோருக்கு பேருவகை தரும் கவிமாமணிகளின் தொகுப்பு!

    கிரேசி மோகன் அவர்களுக்கு நன்றி! (அவர்தானே இப்பதிவிற்கு காரணி?!)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் அய்யா... நான் நம் நண்பர் பலர் தெரிவித்திருப்பது போல நான் அவரது வெண்பாத்திறனை முன்னர் அறிந்ததில்லை. (அவ்வளவுதான் நம்ம ஞானம்) அறிந்து வியந்ததைத்தான் எழுதினேன். அப்படியே நம்ம இளைய கவிகள் நினைவில் வந்து எழுதத் தூண்டினர் எழுதிவிட்டேன். நன்றி சகோதரரே!

      நீக்கு
  16. ஓ...
    இவ்வளவு நாட்கள் தமிழ் மணம் வாக்குப் பட்டை இல்லதிருந்ததோ?
    வாக்கு எண் 2.

    டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று அவர்களுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றியோ நன்றி. (நமக்கு அந்தத் தொழில்நுட்பம்தான் வரமாட்டுதே! என்றாலும் கற்றுக்கொள்ள ஆசை. கொள்வேன்)

      நீக்கு

  17. வணக்கம்!

    மின்னிவரும் ஒற்றுணா்ந்தும் விட்டுவிடும் சொல்லறிந்தும்
    பின்னிவரும் சொற்புணர்ச்சி பீடறிந்தும் - என்..அன்பா
    குற்றியலை முற்றியலைக் கூர்ந்து நெறியுணா்ந்தும்
    பற்றுடன் பாடுவதே பாட்டு!

    கவிஞர் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அ்யயா வணக்கம். தங்களின் மரபைப் பின்பற்றிக் கற்பவன் நான். எனது திருக்குறள் ஐயத்தைத் தீர்த்துவைத்ததை மறவேன். பதின் மூன்றாம் ஆண்டுக் கம்பன் விழாச் சிறப்பைத் தங்கள் தளத்தின் வழி அறிந்தேன். மகளிர்அணிச் சீருடையும், மயில்நடனமும், குழந்தைகளின் மேடைமகிழ்ச்சியுடன் தங்கள் தலைமையிலான கவியரங்கும் காணக் கண்கோடி வேண்டும். தங்கள் பணி மேலும் சிறக்கவும், இன்னும் வரும் தலைமுறைக் கவிஞர்களும் மரபில் காலூன்றி புதுமைவானில் சிறகடிக்கவும் தங்களைப் போன்றோரின் வழிகாட்டுதல் அவசியம். தங்களின் பக்திப் பக்கம் மட்டும் நான் செல்வதில்லை. அதில் நாட்டமில்லை ஆனால் ரசிப்பேன் “சான்ற இறைமாண்பில் தமிழ்“ என்றுதானே ஓர்அழகான வெண்பா உரைக்கிறது! எனினும் இன்றைய தேவைக்கேற்ற புதிய புதிய நடையில் மரபு வளர வேண்டும, தங்களைப் போன்றோர் அந்தநோக்கிலும் சிந்தித்தால் தமிழுக்கும் நல்லது, இளைஞர்க்கும் நல்லது.

      நீக்கு
  18. இந்தப் பதிவை படித்ததும் என்னுள் தோன்றும் முதல் எண்ணம் தமிழ் இலக்கணத்த மொதல்ல ஒழுங்கா படிக்கணும் என்பது தான் - சீக்கிரம் படிக்க ஆரம்பிக்கோணும் :-)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அய்யா, படிக்கவேண்டும் என்று நினைத்தாலே நீங்கள் படிக்கத் தொடங்கிவிட்டீர்கள் என்று அர்த்தம்.மனிதகுல வரலாறே செயல்வழிக்கற்றல் தானே? LEARNING BY DOING! என்ன? அது கல்வித்துறைக்கானது என்று பலரும் நினைத்துவிட்டார்கள்!

      நீக்கு
  19. ஐயா,
    மிக அருமையான பகிர்வு...
    கிரேசி மோகன் அவர்களின் வெண்பா நன்று...
    படிக்க வேண்டிய கவிஞர்கள் பட்டியலில் இட்டோர் அனைவரும் சிறப்ப்பானவர்கள்தான்...
    பழனி பாரதியையும் படிக்கலாம்... முகநூலில் அவரின் கவிதைகள் தனித்தன்மையுடன் இருக்கின்றன....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆகா...அவருக்கென்ன அருமையான கவிஞர்தான். கபிலன், நா.முத்துக்குமார் இன்னும் நல்ல கவிஞர்கள்தான். திரைப்படமே இவர்களது பலமாகவும் பலவீனமாகவும் இருக்கிறது.
      அறிவுமதி இதில் தனித்து நிற்பது பாராட்டுக்குரியது.

      நீக்கு
  20. ஐயா!
    என்னைப் போன்றவர்களும் எளிமையாக புரிந்து கொள்ளும் வண்ணம் யாப்பிலக்கண நூல் ஒன்றை பரிந்துரைக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படித்தான் ஒன்று -எளிமையாகப் புரிந்துகொள்ளும் வண்ணம் வரவில்லை. இலக்கணம் எளிமையானால் கவிதைகளும் பெருகும். நானே ஒன்று எழுத வெகுநாளாக எண்ணிக்கொண்டே இருக்கிறேன். முதலில் “எளிய கவிதை இலக்கணம்“ எழுதவேண்டும். பார்க்கலாம்..

      நீக்கு
  21. வணக்கம் சகோதரரே ! தங்கள் பதிவு கண்டு மகிழ்ந்தேன். நீங்கள் தந்த விபரம் யாவும் எனக்கு புதிதே. வாசிப்பு எனக்கு வசப்படாத ஒன்றாகி விட்டது எனக்கு. பள்ளிக்கூடக் காலங்களில் வாசித்ததோடு சரி. பின்னர் நான் வாழ்ந்த இடத்தில் இவை கிட்டவில்லை. இலக்கியம் பற்றி அப்போ கொஞ்சம் படித்திருக்கிறேன். அவை தான் இப்போது எனக்கு கை கொடுக்கிறது. மற்றபடி கவிதை பற்றி எனக்கு எதுவும் தெரியாது ஆனால் கற்றுகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் நிறைய இருக்கிறது.அதை வளர்க்கும்படியாய் தங்கள் பதிவும் அமைந்துள்ளது. ஆனால் எப்படி என்று தான் தெரியவில்லை. அதுவும் இல்லாமல் புஸ்தகங்களும் கிடைப்பதில்லை இங்கு. மேலும். வீட்டு வேலைகளையும் பார்த்துக் கொண்டு வேலைக்கு போய் வந்து வாசிப்பதும் மிகவும் கஷ்டம் தான். ஆர்வம் மிக்க காரணத்தினால் பதிவுகளை வாசித்து கருத்து இடுவதும் மிகுந்த சிரமத்தின் மத்தியிலேயே. இன் நிலையில் எப்படி கற்றுக் கொள்ளப் போகிறேன் என்று நிறைந்த ஆதங்கமாக இருக்கிறது. நான் இன்னும் வெகுதூரம் போக வேண்டும் என்பது மட்டும் புரிகிறது. வழி தான் தெரியவில்லை. அண்ணாவே இத் தங்கைக்கும் வழி கட்டுவீர்கள் என்று நம்புகிறேன். இது சாத்தியமா என்றும் புரியவில்லை.
    பட்டியலில் உள்ளவர்கள் பற்றியும் அறியேன் உங்க தங்கை மைதிலியை தவிர ஹா ஹா ...என் அம்முவும் பட்டியலில் மிக்க மகிழ்ச்சியாய் உள்ளதண்ணா. தமிழ் மீது தாங்கள் கொண்ட பற்றும் அதை வளர்க்கவேண்டும் என்ற தவிப்பபும் கண்டு நெகிழ்கிறேன். தங்கள் விருப்பங்கள் நிறைவேற வாழ்த்துக்கள் ....! மிக்க நன்றி ....!

    பதிலளிநீக்கு
  22. 'தமிழ் மீது தாங்கள் கொண்ட பற்றும் அதை வளர்க்கவேண்டும் என்ற தவிப்பபும்' - சரியாகச் சொல்லிவிட்டீர்கள் தங்கையே! தங்களின் தவிப்பும் புரிகிறது. இயன்றவரை உங்களைப் போல வெளிநாட்டில் இருந்துகொண்டு படிக்க விரும்பும் தமிழார்வலர்களுக்காகவே நிறைய நூல்கள் இணையமேறி வருகின்றன. அவற்றின் சுட்டிகளைத் துழாவிப பார்த்து முடிந்தவரை தரப்பார்க்கிறேன். ஆர்வம் ஆற்றலை வளர்க்கும் நீங்கள் தங்கை மு.கீதாவிற்குத் தந்த முன்னுரை அருமையாக இருந்தது. தங்களின் வாழ்த்துக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றிம்மா.

    பதிலளிநீக்கு
  23. அய்யா,
    வணக்கம். முதலிலேயே நான் இந்தப் பதிவைப்படித்து விட்டாலும், வெளியூரில் இருந்ததால் தற்பொழுதுதான் பின்னூட்டமிட முடிகிறது.
    முதலில் பதிவைவிட, “கவிதைக் கரையில, கவிஞர்கள் நாள் சில “ என்ற தங்களின் பின்னூட்டத்தில்தான் நான் விழுந்து விட்டேன். மரபில் கவிதைகள் எனக்காட்டப்படும் பலவற்றையும் “ மெல்ல நினைக்கின் பிணிபல “ என்பதை நேரடியாகச் சொல்லாமல் வாசிப்பவனின் போக்கிற்கே விட்டுவைத்தீர்கள் போலும்.“ மெல்லப் “ பல்லுடைந்து போகும் பிணியும் அதிலொன்றுதான். மரபில் மட்டுமன்று புதுக்கவிதைகளிலும் பெரும்பாலானவை நினைக்கின் பிணி பலதான்.
    என்னை நீங்கள் இங்குக் குறிப்பிட்டுச் செல்வது சந்தப்பாடல்கள் குறித்தென்பதால் நான் அதை மறுக்கப்போவதில்லை. ஏனெனில் சந்தம் வடிவம் சார்ந்தது. அந்த வடிவத்தை நல்ல ஆசிரியர் ஒருவரிடத்தில் அரைமணிநேரம் செலவிடத் தயாராயிருக்கும் ஆர்வமுள்ள எவரும் கற்றுத் தேர்ச்சியடைய முடியும்.அதற்கும் கவிதைக்கும் வித்தியாசம் இருக்கிறது.
    வீட்டிற்கும் இல்லத்திற்கும் ஆங்கிலத்தில் வேறுபாடுள்ளதைப்போலத்தான்.
    வீடு வெறும் கட்டடம். அதில் ஒரு குடும்பம் வசித்தால் மட்டுமே அது இல்லம் எனப்படும். யாப்பு வீடு மாதிரி தான். கட்டத்தெரிந்த யார் வேண்டுமானாலும் கட்டமைத்துவிடலாம்.
    ஆனால் அதில் உயிர்ப்புடையதாக மாற்றும் அற்புதத்தைக் கற்றவனே மரபுக் கவிஞர் என முடியும். அசை, தளை, குற்றியலுகரப்புணர்ச்சி இவற்றின் குறைபாடுகள் கூட அந்தக் கவிதை உயிர் பெறுந்தருணம் கவிதைப் பெருவெள்ளத்தில் அடித்துக் கொண்டு போய்விடும். இதற்குத் திருவாசகத்தில் உதாரணம் உண்டு. வெண்பாவில் நாலசைசீர் வரலாகாது என்ற இலக்கண மீறல் திருவாசகத்தில் நிகழ்ந்திருக்கிறது. அதன்பின் வேறு சில பேசப்படும் இலக்கியங்களிலும். மாணிக்க வாசகர் வெண்பா இலக்கணம் அறியாதவரல்லர். ஆனால் அந்த உணர்ச்சிப் பிரவாகத்தில் அடித்துக் கொண்டு மதிமயங்கிப் போகும் எவரும் அதை ஊன்றிக் கவனித்துக் கொண்டிருப்பதில்லை. கவனித்தாலும் என்ன அவரது அந்தப்புலமைச் செருக்கிற்கு முன்னால் அந்தச் சிறுபிழையை யாரும் பெரிது படுத்துவதில்லை. பின்வரும் இலக்கணங்களும் முன்னோர் மொழிபொருளைப் பொன்னே போல் போற்றி இதற்கும் இலக்கண அமைதி கூறித்தான் செல்கின்றன.
    எனவே உயிர்ப்புடைய கவிதையே மரபானாலும் நவீனமானலும் வேண்டப்பெறுவது. இது முதலாவது.
    கிரேஸி மோகனோ சுஜாதாவுக்கோ ஒரு பின்னணி உண்டு. பரவலாக அறியப்படுகின்றவர்கள் அவர்கள். பிரபலங்கள் குப்பைகளை எழுதினாலும் அதைக் கோபுரத்தில் தூக்கி வைத்துக் கொண்டாட ஒரு கூட்டம் இருந்து கொண்டுதான் இருக்கும். அதற்காக சுஜாதா எழுதியதையோ, கிரேஸி மோகன் எழுதியதையோ நான் குப்பை என்று கூறவரவில்லை. படைப்புகள்தான் படைப்பாளியை இனங்காட்டவேண்டும். வெண்பாவில் புதிய சாத்தியங்களை ஏற்படுத்திய ஆகாசம்பட்டு சேஷாசலம் அவர்களைப் போல! விமர்சனங்களைப் பொறுத்தவரை, அந்தக் காலம் முதலே மூலநூலாசிரியர்கள் செய்யும் தவறைச் சப்பைக்கட்டு கட்டியே வந்தவர்கள்தான் நாம். அவர்களை விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்களாகக் கருதிக் கொண்டிருக்கிறோம்.அல்லது அவர்களின் மனம் நோகச்செய்தலாகாது எனக் கருதுகிறோம். அவர்கள் செல்வாக்கைக் கண்டு அஞ்சுகிறோம். தொல்காப்பிய மரபியலில் நான்கறிவுயிர்களைக் குறித்த சூத்திரத்தில் தொல்காப்பியர் நண்டிற்கு முகரும் புலன் இருப்பதாகக் குறிப்பிடுகிறார். பேராசிரியர் காலத்தில் நண்டிற்கு நுகர் புலன் இல்லை என்ற கருத்தே நிலவுகிறது. ஆனால் தொல்காப்பியர் உண்டென்கிறார். பேராசிரியரால் தொல்காப்பிரை விட்டுக் கொடுக்க முடியவில்லை. ஏனெனில் அது வினையின் நீங்கிய அறிவு. அதை ஐயுறலாகுமா? பேராசிரியன் சொல்கிறான் “ நண்டிற்கு மூக்குண்டோ எனின் அஃது ஆசிரியன் கூறுதலான் உண்டென்பது பெற்றாம்“ இதைத்தான் பல நூல்களின் சாற்றுகவிகளும் அணிந்துரைகளும் பெரும்பாலும் செய்கின்றன. உங்களின் உற்சாக மூட்டுதலையும் அதே நேரம் தவறு கண்டால் கடிதோச்சி மெல்ல அறிதலையும் நான் அறிவேன்.
    நீங்கள் கூறுவதுபோல நானுட்பட நமது படைப்பாளிகள் பலரும்
    “தம்மின் மெலியாரை நோக்கித் தமதுடைமை
    அம்மா பெரிதென்றே அகமகிழ்பவர்“களாகத்தான் இருக்கிறார்கள்.
    இப்பாடலின் அடுத்த இரண்டு வரிகள் பற்றியும் நாம் சிந்திக்க வேண்டும்.
    தம்மினும் கற்றாரை நோக்கிக் கருத்தழிக,
    கற்றதெலாம்
    எற்றே இவர்க்குமுன் என்று?
    நானும் கற்றதெலாம் எற்றே என்று கருத்தழிந்த பலரும் இணையத்திருக்கிறார்கள்,
    வெளித்தெரியாத மரபுக்கவிஞர்களைச் சொல்ல வேண்டுமேல், சிவகுமாரன் அண்ணா மற்றும் சீராளன் அவர்களைக் குறிப்பிடுவேன்,
    நெஞ்சில் கைவைத்துச் சொல்வேன்,
    “நான் கற்றதெலாம் எற்றே இவர்க்கு முன் என்று“
    யாப்பறிய நினைப்பவர்களுக்கென கட்டுரை யொன்று இட்டிருக்கிறேன்.
    கண்டு கருத்திடவும் ஏற்புடைத்தாயின் பகிரவும் வேண்டுகிறேன்.
    http://oomaikkanavugal.blogspot.com/2014/11/blog-post.html
    நன்றி

    பதிலளிநீக்கு
  24. அன்பு நண்ப, வணக்கம்.
    எங்கே தங்களின் கருத்தைக் காணவில்லை்யே என்றபோது தங்கள் தொலைபேசி வந்தது. இப்போது ஆழ்ந்த கருத்துகள் அடங்கிய பின்னூட்டம் இதுதான் விஜூ!
    “வீடு வெறும் கட்டடம். அதில் ஒரு குடும்பம் வசித்தால் மட்டுமே அது இல்லம் எனப்படும்'” - ஆகா! என்ன அருமை மற்றும் எளிமையான விளக்கம்! நெஞ்சில் நிற்கும் விளக்கம்.
    நீங்கள் சொன்ன விதிவிலக்குகளை நான் ஏற்கிறேன். ஏனெனில்,
    “பெரியவர்கள் சொன்னால் பெருமாள் சொன்ன மாதிரி!” அல்லது பேராசிரியர் உதாரணம் “ஆசிரியன் கூறுதலான் உண்டென்று” நானும் ஒப்புக்கொள்கிறேன். எனினும்....
    கருநாடக இசைமேதை எம்.எஸ.அம்மா பிழைபடப் பாடினாலும், அதையும் ஓர் இலக்கணமாக்கிவிடுவார்களாம்! விமர்சகர் சுப்புடு எழுதியதாக நினைவு!
    “இலக்கியம் கண்டதற்கு இலக்கணம்“ என்பதே அப்படித்தானே?
    எனினும் இலக்கண விதி வேறு, விதிவிலக்கு வேறு, விதிமீறல் வேறு என்பதைத் தனித்தனியாக்கிப் புரிந்துகொள்ள வேண்டுமல்லவா?
    இதோ என்றன் தெய்வம் என்பது இலக்கணம்,
    இதோ எந்தன் தெய்வம் என்பது விதிமீறல் (கண்ணதாசன்)
    எந்தன் என்பது முன்னர் விதிவிலக்காக ஏற்கப்பட்டு இப்போது பிழைவழக்கே பெருவழக்காய் வந்துவிட்டது! இதுபோல ஏராளமாகச் சொல்லலாம்!
    ஏற்றுக்கொள்வது அந்தந்தச் சூழல் கருதியே! (சொற்களின் பொருளே சூழல் கருதியவை அல்லவா? அகரமுதலியை வைத்துக்கொண்டு பொருள் சொல்வது கவிதைக்குப் பொருந்தாது அல்லவா?) எனவே, குற்றியலுகர ஓசைப் பிழையை மணிவாசகர் விதிவிலக்காகக் கொண்டால் நாமும் கொள்ளவேண்டும் என்பதில்லை. எல்லாம் மாறும் சரி, அம்மாவை மொழிமாற்றி அழைக்கலாமே தவிர முறைமாறி அழைக்க இயலாதல்லவா? எனவே, மரபுமீறல் என்பது அறிந்து மீறலே அன்றி அறியாமல் மீறுவதல்ல. என்பதால் இதனை வலியுறுத்த வேண்டியுள்ளது. விதிவிலக்குகளே பின்னர் விதியாகக் கூடும்தான். (1985ஆசிரியர் போராட்டத்தில் முதல்நாள் நாங்கள் 18பேர் கைதானோம், நாடுமுழுவதும் பல்லாயிரம் பேர் கைதானபின் 10நாள் கழித்து அதே (அரசாணையைக் கொளுத்திய) போராளிகளை நமது அரசு கைதுசெயயவில்லை! விதிவிலக்கே விதியாகிவிட்டது! அல்ல்து மார்க்ஸ் சொன்னதுபோல Quantity Changes lead to Quality Changes) எம்ஜிஆருக்கு முன் மிதிவண்டியில் இரண்டுபேர் போனால் அது குற்றம்! பின்னர் அதுவே அரசாணையுடன் அனுமதிபெற்று வந்தது! எனினும் பொதுவான மரபுகளைக் காக்கும்போது விதிவிலக்குகளை அதற்கு உதாரணமாக்குவதை ஏற்க இயலவில்லை. விதிவிலக்கு விதியாக வரும் இடம், தேவை கருதவேண்டுமே அன்றி நம் விருப்பத்திற்கு அல்ல.
    ஆகுபெயரை நாம் உருவாக்க இயலாது. உதாரணங்களை உருவாக்கலாம். ஆனால், உவம உருபுகளைப் புதிது புதிதாக மக்கள உருவாக்கிப் பயன் படுத்தும்போது இலக்கணிகள் அவற்றைப் புறக்கணிக்க இயலாது. காட்டாக,
    “போல புரைய ஒப்ப உறழ
    மான கடுப்ப இயைய ஏய்ப்ப
    நேர நிகர அன்ன இன்ன
    என்பவும் பிறவும் உவமத்து உருபே“ என்பது உவம உருபுகளைக் கூறும் இலக்கணம்தான். ஆனால் இவற்றில் போல எனும் சொல் ஒன்று மட்டுமே –இலக்கணத் தமிழில அல்லது இலக்கிய உரைநடையில் மட்டுமே- இதுவரை புழக்கத்தில் இருந்தது. மற்றவை கிட்டத்தட்ட வழக்கிழந்தன. இன்று புதிதாக, “மாதரி, ஆட்டம், கணக்கு, மாட்டம்“ முதலான சொற்களே “நவீன உவம உருபுகளாக“ வழக்கில் வருகின்றன. “வழக்கும் செய்யுளும் ஆயிரு முதலின் எழுத்தும் சொல்லும் பொருளும்“ பாடிய தொல்காப்பியன் வழியில் புதிய உவமஉருபுகளை இலக்கணம் புறக்கணித்தாலும் வழக்கில் உள்ளனவே!
    அது வழக்கில் இல்லை– மதிப்பெண்ணுக்காக மனப்பாடம் செய்கிறோம்.
    இது வழக்கில் உள்ளது– எழுதினால் ஆசிரியர் மதிப்பெண் தருவதில்லை.
    இந்த இடத்தில் தான், இன்றை யவழக்கு – மரபு இரண்டையும் பொதுப்பட யோசிக்காமல் இடம்கருதி ஏற்பதும் ஏலாததும் நடக்கிறது எனது கருத்து. விதிவிலக்குகளை அறிவது விதிகளை அர்த்தமின்றி மீற அல்ல என்பதால் இவ்வளவையும் சொல்ல நேர்ந்தது. பெருவாரியான வெற்றிபெற்றவர்கள் செய்யும் சிறு பிழைகளை மீறல் என்று (வழுவமைதி?) ஏற்கிறோம். அதனால் அதனையே விதியாக ஏற்க முடியாதல்லவா? அதைச் சொல்கிறேன்.
    குற்றியலுகர, வல்லொற்றுப் பிழைகளை கண்டுகொள்ளாமல் விடுவது போல ஓரசைச் சீரை வெண்பாவின் இடையில் வைத்த கிரேசி மோகனை ஏற்க முடியுமா என்ன?
    எனினும் தங்கள் பரந்த படிப்பும், நுட்மான சிந்தனைகளும் பலசெய்திகளை எனக்குக் கற்பித்தன. தொடர்ந்து விவாதிப்போம். தொடர்ந்து கற்போம். புதியன படைப்போம், புதிய சிந்தனைகளோடு புதியவர்களை வரவேற்போம். நன்றி.
    ---------------------------------------------------------------------------------

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அய்யா,
      தாங்கள் கூறுவதை ஏற்கிறேன்.
      வினையின் நீங்கி விளங்கிய அறிவுடையரானதால் அப்படியே ஆராயாமல் ஏற்றுக் கொண்டது பேராசிரியருடைய அறிவு.
      பேராசிரியருடைய அறிவை அப்படியே ஏற்றுக் கொள்ள நமக்கேன் அறிவு?
      அதையும் ஆய்வுக்குட்படுத்தியும், சிந்தித்தும் மெய்ப்பொருள் காண்பதுதான் நம் அறிவின் வேலை! நான் கூற நினைந்தது இதைத்தான்.
      மரபினை மீறல் தனியொருவரால் நிகழ்வதன்று.
      அது பொதுமைப்பாடும் பரவலாக்கமும் ஏற்புடைமையும் சார்ந்த விடயங்களே. அதனைக் காலத்தின் கையில் விடுவோம்.
      விதி விலக்குகளை விதிகளாக ஏற்கவேண்டுமென்பதோ நிச்சயமாய்ப் பிழைகளைக் கருத்தில் கொள்ளக் கூடாதென்பதோ என் கருத்தில்லை.
      தங்கள் கருத்தோடு உடன்படுகிறேன்.
      நன்றி!

      நீக்கு
  25. ****கிரேஸி மோகனோ சுஜாதாவுக்கோ ஒரு பின்னணி உண்டு. பரவலாக அறியப்படுகின்றவர்கள் அவர்கள். பிரபலங்கள் குப்பைகளை எழுதினாலும் அதைக் கோபுரத்தில் தூக்கி வைத்துக் கொண்டாட ஒரு கூட்டம் இருந்து கொண்டுதான் இருக்கும். அதற்காக சுஜாதா எழுதியதையோ, கிரேஸி மோகன் எழுதியதையோ நான் குப்பை என்று கூறவரவில்லை. படைப்புகள்தான் படைப்பாளியை இனங்காட்டவேண்டும்.வெண்பாவில் புதிய சாத்தியங்களை ஏற்படுத்திய ஆகாசம்பட்டு சேஷாசலம் அவர்களைப் போல! விமர்சனங்களைப் பொறுத்தவரை, அந்தக் காலம் முதலே மூலநூலாசிரியர்கள் செய்யும் தவறைச் சப்பைக்கட்டு கட்டியே வந்தவர்கள்தான் நாம். அவர்களை விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்களாகக் கருதிக் கொண்டிருக்கிறோம்.அல்லது அவர்களின் மனம் நோகச்செய்தலாகாது எனக் கருதுகிறோம். அவர்கள் செல்வாக்கைக் கண்டு அஞ்சுகிறோம்.***

    Unfortunately, this is what we are. I am really surprised to see a criticism like this!! We usually ignore doing such because ..we are afraid..

    "May be I will end up offending the critic whom I respect a lot!"

    "Let me just give Tamilmanam +1 and maintain my "standards"

    "Why do I need to "burn the bridges" with a good friend by crossing the line of what we define/believe as "politeness"?

    இதே வெண்பாக்களை கிரேசி மோஹன் இல்லாமல் "குப்பன் அல்லது சுப்பன்" எழுதி இருந்தால்.இதே பாடல் வரிகளுக்குப் பலரிடம் இருந்து பலவிதமான அறிவுரைகள் வந்து இருக்கும்.

    எப்படி?

    கொஞ்சம் வெண்பா இலக்கணத்தோட எழுத முயலுங்கள்.. :))))

    Now the question is.. Varun! Are you not one of them who label the "tag" in it? I am also one of us. Certainly not an exception. But I look at the "ugly part"of mine and wondering why I am like this? May be I should change myself before I die!

    Take it easy, folks!

    பதிலளிநீக்கு
  26. I am also one of us. Certainly not an exception.- இதுமட்டும்தான் நம்ம சிற்றறிவுக்கு எட்டியது. நல்லாத்தானே எழுதிக்கிட்டே வந்தீங்க வருண்? அப்பறம் ஏன் திடீர்னு இங்கிலீஷூக்குத் தாவிட்டீங்க?
    “புகழ்பெற்றவர்கள் எல்லாம் இலக்கணம் தெரிஞ்சு வச்சிருக்காங்கப்பா நீங்க ளும் தெரிஞ்சுக்கலாம்ல!”
    இதான் சாமி விசியம்.. வேற ஒன்னுமில்லிங்க. சுஜாதா எழுதினாலும் குத்தம் இருந்தா திட்டுவோம் சுப்பன் எழுதினாலும் சுத்தம் இருந்தா “குட்”டுவோம் அவ்ளோதாங்க நன்றிங்க வருண்.

    பதிலளிநீக்கு
  27. அருமையான பதிவு. கிரேசி மோகனின் வெண்பாக்கள் படித்து வியந்திருக்கிறேன்.சேஷாசலம் என்பவரின் வெண்பாக்களை 90களில் நூலகத்தில் தேடிப் பிடித்து படித்து நானும் எழுத முன்றிருக்கிறேன் . என்னுடைய இந்த வெண்பாக்களையும் பாருங்கள் http://sivakumarankavithaikal.blogspot.in/2010/12/blog-post_05.html
    நீங்கள் குறிப்பிட்டுள்ள புதுகைக் கவிஞர்களை அறிந்தவன் என்ற முறையிலும் , நானும் புதுக்கோட்டைக்காரன் என்பதிலும் பெருமைப்படுகிறேன்.
    தங்கள் மூலம் விஜு அவர்களின் அறிமுகம் கிடைத்து, இன்னும் வியப்பிலிருந்து மீள முடியாமல் இருக்கிறேன்.
    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பார்த்துவிட்டு அங்கே பதிலும் பதிவுசெய்து
      சேர்த்துவிட்டு வந்தேன சிரித்து.

      நீக்கு
    2. அரியா சனமிட்டே ஆண்டகதை வேண்டாம்!
      “வரியா“ எனக்கேட்ட வாக்கும் - புரிந்து
      சிரிப்போம்நாம்! நெஞ்சம் சிவந்ததே அண்ணன்
      வரிக்குவால் ஆட்டும் வெண் பா!


      அந்தணப் பாவென்றார்! அச்சேரிப் பேச்சடைக்க
      நொந்தகதை வெண்பா சொலும்

      நன்றி அய்யா!

      நீக்கு
    3. நன்றி விஜூ .
      நன்றி அய்யா- நானும் பதில் அளித்திருக்கிறேன்.

      நீக்கு
  28. அரியா சனமிட்டே ஆண்டகதை வேண்டாம்!
    “வரியா“ எனக்கேட்ட வாக்கும் - புரிந்து
    சிரிப்போம்நாம்! நெஞ்சம் சிவந்ததே அண்ணன்
    வரிக்குவால் ஆட்டும்வெண் பா!


    அந்தணப் பாவென்றார்! அச்சேரிப் பேச்சடைக்க
    நொந்தகதை வெண்பா சொலும்

    நன்றி அய்யா!

    பதிலளிநீக்கு