
பாரதிதாசன் வைய விரி அவை
எனும் இணையம் வழியாக
பொ.ஆ.2002இல் நடத்தப்பட்ட
உலகளாவிய
கவிதைப்போட்டியில்
பரிசுபெற்றோர்
விவரத்தை
முதலில்
சொல்லிவிடுகிறேன் -
முதற்பரிசு -
நா.முத்துநிலவன், தமிழ்நாடு இந்தியா
இரண்டாம் பரிசு - புகாரிஅசன், கனடா.
மூன்றாம் பரிசு - ஜோசப் சேவியர், அமெரிக்கா.
-----------------------------
நடத்தியவர் போலும் விவரங்களை,
இணைந்துள்ள
செய்திகளில் காண்க
நன்றி - இணையச் சான்றோர்க்கு
------------------------------
பொ.ஆ.2000 நான் மேசைக்கணினி (டெஸ்க்டாப்) வாங்கிய ஆண்டு (அதாகப்பட்டது
25ஆண்டுக்கு முன்! அப்படின்னா எனது கணினிஅறிவு(?)க்கு வெள்ளி விழா!) அப்போது, இணைய இணைப்பை அவ்வப்போது குறுவட்டு (சிடி)களில்தான்
வாங்கிப் போட்டுக் கொள்ள வேண்டும். விலையும் அதிகம். எனவே தொடர்ந்து இணையத் தொடர்புகளில்
எழுதுவதில்லை. பேனா நட்பு போல இணைய மடற்குழுக்கள் அப்போது இருந்தன. அதில் நண்பர்களைத் தேடித் தேடிச் சென்று இணைந்து
பேசி, எழுதுவதே வழக்கமாக இருந்தது.
அப்போதைய
எழுத்துரு மலேசிய இணையத் தமிழறிஞர் முரசு நெடுமாறன் அவர்கள் கண்டு தந்த ‘டிஸ்கி”தான்.
அதை ‘முரசு அஞ்சல்” எனும் செயலியில் இலவசமாகப் பதிவிறக்கம்
செய்து கொள்வோம்! ஆனால், செய்தித் தாள் ஒவ்வொன்றும்
ஒவ்வொரு எழுத்துருவில் எழுதின! எனவே, பதிவிறக்கம் செய்வதும் பதிவைக்
காப்பதும் குழப்பம்தான்.
2010ஆம்
ஆண்டின் பின் தமிழ்நாடு அரசு ‘ஒருங்குறி” என்னும் (யுனிகோடு) எழுத்துருவை
ஏற்றபின்தான் எல்லாம் எளிதானது! (இதற்குத் தமது குழு பட்ட சிரமங்களை அய்யா த.உதயசந்திரன்
எழுதியதைப் படித்த பிறகே இதெல்லாம் புரிந்தது)
இதன் பின் 2011ஆம் ஆண்டில் நமது
வலைப்பக்கம் தொடங்கப்பட்டது. அப்போது, புதுக்கோட்டைக்கு முதன்மைக் கல்வி அலுவலராக
வந்த அய்யா முனைவர் நா.அருள்முருகன் அவர்களின் தொடர் தூண்டுதலால், கணினித் தமிழ்ச்சங்கம், வீதி கலை-இலக்கியக் களம் தொடங்கியதும்
கவிஞர்கள் மு.கீதா, இரா.ஜெயலட்சுமி, மைதிலி
கஸ்தூரிரங்கன், கும.திருப்பதி, மகா.சுந்தர்
மணப்பாறை அ.பாண்டியன், சுவாதி, செல்வா என
ஏராளமான ஆசிரியப் படைப்பாளிகள்
வலைப்பக்கம் தொடங்க அதையே ஒரு பெரும் இயக்கமாக செய்தோம். (கஸ்தூரிரங்கனும் ரேவதியும்
முன்னரே வலைப்பக்கம் வைத்திருந்தனர்) இதில் பலரும் தொடரவில்லை என்பது பெரிய சோகம்! தங்கை மு.கீதா தொடர்கிறார் என்பதறிந்து மகிழ்கிறேன்.
அப்போதைய
எனது இணைய மடற்குழு நண்பர்களில் ஒருவர் - எனக்கு வலைப்பக்கம் அமைத்துத் தந்த மேலைச்சிவபுரி
முனைவர் மு.பழனியப்பன் என்பதை என்றும் மறவேன்! இவரோடு புதுச்சேரி முனைவர் மு.இளங்கோவன், கவிஞர்
திலகபாமா, கவிஞர் புதியமாதவி இப்போதும் தொடர்பில் இருக்கின்றனர்
என்பதும் மகிழ்ச்சி.
புதுக்கோட்டை
மன்னர் கல்லூரியில் புகுமுக வகுப்புப் படித்த போது (1973-74)வடக்கு ராச
வீதியிலிருந்த ‘வாசவி தட்டெழுத்துப் பயிலகத்தில்’ தட்டச்சுப்
படித்திருந்த நினைவில், வாங்கிய கணினியில் தட்டிப்பார்த்தேன். என்ன
வியப்பு! ‘தட்டச்சு நினைவிருக்காது புதிதாகத்தான் பயில
வேண்டும்’ என்று நினைத்ததற்கு மாறாக,
ஒரே வாரத்தில் தட்டச்சுவதில் தேவையான வேகம் வந்துவிட்டது. மூளைதான் நினைவகம்
என்றாலும், விரல்களுக்கும் நினைவாற்றல் சக்தி உண்டு போல!! என்று மகிழ்ந்து
போனேன். இது நடந்து 25ஆண்டுகள் ஆகிறது! வாழ்க விரல்நுட்ப
அறிவு!
அதிலிருந்து
கையெழுத்துக் குறைந்து தட்டச்சே வழக்கமானது.
அப்போது
இணைய மடற் குழுக்களில் கவிதை, தமிழிலக்கியம் பற்றிய உரையாடலும் காரசாரமாக நடக்கும். உலகளவில்
தொடர்பிலிருந்த தமிழறிஞர்கள் கலந்து கொண்டு விவாதிப்பார்கள். அப்போது கிடைத்த
செய்தி – ‘பாரதிதாசன் வைய விரி அவை” எனும் மடற்குழுவினர்
நடத்திய கவிதைப் போட்டி! அதில் நானும் கலந்து கொண்டு முதற்பரிசு பெற்றேன்!
இணையம்
அதிகமில்லாத காரணத்தாலும், முகநூல், வலைப்பக்கம்
ஏதும் அப்போது இல்லாத காரணத்தாலும்,
எனது கவனக் குறைவாலும் இந்தக் கவிதையையே தொலைத்துவிட்டேன் –
நம்வீட்டுப் புத்தகக் குவியல் இடையே எங்கோ சிக்கிவிட்டது என்று நானும் இதை
மறந்துவிட்டேன்! என் ‘புதியமரபுகள்’ நூலின்
இரண்டாம் பதிப்பில் சேர்த்துவிட எவ்வளவோ தேடிப் பார்த்தும் கிடைக்காத புதையல்
இன்று கிடைத்தது!
எதையோ தேட
எதையோ கண்டுபிடிப்போம் அல்லவா?
அப்படிக் கிடைத்த மகிழ்ச்சியை
உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்-
இதோ
அந்தக் கவிதை:
(கவிதையின் சரியான வடிவத்தைக் காண, செல்பேசியைக் கிடை மட்டத்தில் வைத்துப் பார்க்க வேண்டும். இல்லையெனில் கவிதை உடைந்து உடைந்து வடிவம் சிதைந்தே காணப்படும்!)
திசைகளைத் தின்போம்!
(பாரதிதாசன்
நினைவுக் கவிதைப்போட்டி)
பிறந்ததும்
சிறந்ததும் ஒருமாதம் –உன்
பேச்சிலும் எழுத்திலும் ஒருமொழிதான்
சிறந்ததும்
இறந்ததும் ஒருநாடே –இன்று
சிங்கைமுதல் தமிழுலகமெலாம்
நிறைந்ததும்
சிறந்ததும் தமிழாலே –உன்
நினைவினில் இணையத் தமிழ்வளரும்
இறந்ததும்
பொய்!உனக்(கு) இறப்பில்லை –
நிரந்தரம், சரித்திர
வரம்தருமே! ----------------(1)
“தணிப்பரிதாம் துன்பமிது
தமிழகத்தின் தமிழ்த்தெருவில்
தமிழ்தான் இல்லை”
எனப்பெரிதாய்க் கவலையுற்ற
எம்கவிஞ! பார்த்தாயா,
எந்நா டெல்லாம்
மணித்தமிழர் வாழ்கின்றார்,
அங்கெல்லாம் நல்லதமிழ்
மணப்ப தைப்பார்!
இனித்தமிழர் நாட்டினிலும்
இந்தநிலை வந்துவிடும்
‘இணைய’ச் செய்வோம்! ----------------(2)
‘பாடம்
படித்து நிமிர்ந்த விழி – தனில்
பட்டுத் தெறித்தது ஆணின் விழி
ஆடை
திருத்தி நின்றாள் அவள்தான் –இவன்
ஆயிரம் ஏடு புரட்டுகின்றான்’ –எனப்
பாடிய உன்கவிக்
காதல்மொழி – என்றும்
பைந்தமிழர் நெஞ்சில் வாழும்மொழி- கவி
சூடிய கவிஞ!நீ
மறைந்து விட்டாய் – தமிழ்க்
காதலர் நெஞ்சில் நிறைந்து விட்டாய்! ----------------(3)
‘இருட்டறையில்
உள்ளதடா உலகம், சாதி
இருக்கின்ற தென்பானும் இருக்கின் றானே?
மருட்டுகின்ற
மதத்தலைவர் வாழ்கின் றாரே?
வாயடியும் கையடியும்’
மறையும் என்றே
விரட்டிய
நீ ‘போய்விட்டாய்’ எனும்
நினைப்பால்
விரைந்துவந்தார் நாட்டைக்கா(டு) ஆக்கப்
பார்ப்பார்!
உரக்கஉன்றன்
தமிழ்ப்பாட்டைப் பாடிப் பாடி
உலகம்ஒரே சாதிஎன்போம், திசையைத் தின்போம்! –(4)
-------------------------------------------------
இதற்கெனத்
தரப்பட்ட சான்றிதழ் :
இந்தச் செய்தி வந்த அப்போதைய செய்தித்தாள்கள்-

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக