கடம்பவனம் அழைக்கிறது!


தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கமாக 1975இல் மதுரை திடீர் நகரில் தொழிலாளி வர்க்கத்தின் பாசறையில் பிறந்த தமுஎகச தனது நாற்பதாண்டுகாலப் பயணத்தை நிறைவு செய்து, முன்னிலும் இளமையுடனும் துடிப்புடனும் படைப்புமன எழுச்சியுடனும் தனது அடுத்த அடியை எடுத்து வைக்கிறது.

இந்தியாவில் இருள் சூழ்ந்திருந்த அந்தக் காலத்தில் அந்த இருட்டைப்பற்றியே பேசிட ஒளியாக வந்த இந்த இயக்கம், வெள்ளம் சூழந்த இந்த நாட்களில் இந்த வெள்ளத்தையும் அழிவையும் அழிவைக்கொண்டு வந்த அரசியலையும் சேர்த்தே பேசும் வெயிலாக வருகிறது. 32 படைப்பாளிகளும் சமூகப் போராளிகளும் அன்று விதைத்த  கனவின் விதை இன்று தமிழகத்தின் பட்டி தொட்டி யெங்கும் அசைந்தாடும் மாபெரும் விருட்சமாகக் கிளை பரப்பி இன்னும் வளர்ந்து கொண்டிருக்கிறது. தமுஎகச இசைக்கும் பாடலுக்கு தமிழகத்தின் தெருக்களும் ஊர்களும் தாளமிசைத்துத் தலை ஆட்டும் வரலாறே அதன் கடந்த காலமாகவும் நிகழ்காலமாகவும் இருக்கிறது.
1975இல் தமுஎச பிறந்தபோதே எழுத்திலே முற்போக்கு பிற்போக்கு என்று இனம் பிரிக்க முடியுமா? முற்போக்கு என்பதற்கு வரையறை வழங்க முடியுமா? தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் என ஏன் பெயர் சூட்ட வேண்டும்? எழுத்தாளர் சங்கம் என்றால் போதாதா? இப்படிப்பல கேள்விகளை அடுக்கியவர்கள் உண்டு. தீக்கதிரில் செய்தியாக வருவதை செம்மலரில் கதையாக எழுதுகிற கூட்டம் இது என ஏகடியம் பேசியவர்கள் உண்டு. எல்லாவற்றுக்கும் பொறுப்பாகப் பதில் சொல்லியும் அவதூறுகளை உறுதியுடன் நிராகரித்தும் தன் கொள்கைவழி நின்றுநிதானித்து நடந்த நடையே தமுஎசவின்பாதை.


தமுஎசவின் முதல் மாநில மாநாடு1975 ஜூலை 12,13 தேதிகளில் மதுரையில் நடைபெற்ற போது இதுபோன்ற கேள்விகளை எழுப்பி மாநாடே இவற்றுக்கு உரிய விளக்கமும் அளித்தது. தனது கொள்கை அறிக்கையையும் அப்போதே வெளியிட்டது. 

இலக்கியம் என்றால் இலக்கியம்தான். அதில் முற்போக்கு பிற்போக்கு என்றெல்லாம் பார்க்கக்கூடாது என்கிற வாதம் வடிவத்தில் மட்டும் ஒரு படைப்பு சிறந்திருந்தால் போதும் என்கிற குறுக்கிய பார்வை வெளிப்பாடாகும். வடிவமும் படைப்பின் அழகியலும் மிகமிக ஆதாரமானவை என்பதில் தமுஎசவுக்கு மாற்றுக் கருத்தில்லை. ஆனால் சிறந்த வடிவ நேர்த்தியோடு மட்டும் இருந்தாலே அது சிறந்த படைப்பாகி விடாது. அது சொல்லும் சேதியால் அப்படைப்பு முற்போக்கா பிற்போக்கா என அடையாளம் காண முடியும்தான்.

இப்பாகுபாட்டில் நாம் முற்போக்கின் பக்கம் நிற்கிறோம் எனப் பிரகடனப்படுத்துவது அவ்வகை இலக்கியத்தை வளர்ப்பதற்கான முன் நிபந்தனையாகும் என முதல் மாநாடு அறிவித்தது.முற்போக்கு எனும் சொல் நம்மிடம் வரவேண்டிய படைப்பாளிகளை வாசலி லேயே நிறுத்தி விடாதா? பரந்து விரிந்த மேடையாக தமுஎச வளர இச்சொல் ஒரு தடைக்கலாக மாறிவிடாதா? என்கிற கேள்வியும் அன்று எழுந்தது. தமுஎச அமைப்பு ஒரு திறந்த புத்தகம்.எதையும் அவர்கள் மறைக்கவில்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இலக்கிய ஏடாகிய செம்மலரில்எழுதி வந்த எழுத்தாளர்கள் கூடித்தான் தமுஎசவை உருவாக்கினார்கள். ஆனால்ஒரு எழுத்தாளர் அமைப்பு என்றமுறையில் அது சுயேச்சையாக இயங்குகிறது.அதில் எந்த அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களும் இருக்கலாம். ஒரே ஒரு நிபந்தனைதான்.அவர்கள் தமுஎசவின் இலக்கியக் கோட்பாட்டை ஏற்றுக்கொண்டிருக்க வேண்டும்.

அந்தக் கோட்பாடு இலக்கியத்தில் முற்போக்குச் சிந்தனையை முன்னெடுத்துச்செல்வது. மனிதாபிமான எழுத்திலிருந்து சோசலிச யதார்த்தவாத எழுத்துக்கள் வரை என்கிற அகன்று பரந்த ஓர் திரைச  சீலையை விரித்தது தமுஎச.
இது ஒரு திசை காட்டிதான். இந்த வழியில் பயணிக்கும் அனைத்துமே முற்போக்கு இலக்கியம்தான். முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் இருப்பதாலேயே ஒருவர் எழுதுவதெல்லாம் முற்போக்கா? என்கிற கேள்வியையும் முதல் மாநாடு எழுப்பி விளக்கம் அளித்தது.
ஒரு எழுத்தாளரின் ஒரு படைப்பு முற்போக்கானதாகவும் இன்னொரு படைப்பு பிற்போக்கானதாகவும் இன்னுமொரு படைப்பு சட்டென இனம்பிரிக்க முடியாதபடியும்கூட இருக்கலாம். சங்கத்தில் உறுப்பினராக இல்லாதவரிடமிருந்தும் முற்போக்கான படைப்புகள் நிச்சயமாக வரும். அவற்றையும் கொண்டாடுவோம். முற்போக்கு எழுத்துக்களின் சங்கம் எனப் பெயர் வைக்கமுடியாததாலேயே இப்படிப் பெயர் சூட்டி யிருக்கிறோம் என மாநாடு பிரகடனம் செய்தது. இந்த விரிவான ஜனநாயகப்பார்வை யும், கொள்கை அறிக்கையின் மீது உறுதியுடன் நின்றதும் சங்கத்துக்குள் முழுமையான ஜனநாயகத்தைக் கடைப் பிடித்ததாலும் எல்லா விமர்சனங்களையும் கேலி கிண்டல்களையும் புறந்தள்ளி இயக்கம் வளர்ந்தது.

அனைத்து மாவட்டங்களிலும் வேர்பிடித்து வளர்ந்தது. அமைப்பின் பலமும் படைப்பின் நுட்பமும் இரண்டறக்கலந்ததாலேயே 32 பேராகத் துவங்கிய ஒரு குழுவின் பயணம் இன்று 20 ஆயிரம் பேர் கொண்ட பேரணியாக மாறி நடை போடுகிறது. பயணத்தின் போக்கில் பாரதி, பாரதிதாசன், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் ஆகிய முப்பெரும் கவிஞர்களைத் தன் முன்னோடிகளாக அடையாளம் கண்டு உயர்த்திப்பிடித்தது தமுஎச. மூன்று கவிஞர்களை முன்னிறுத்தியதன் மூலம் தமிழகப் பண்பாட்டு வரலாற்றில் அழுத்தமான தடம் பதித்த விடுதலைப் போராட்ட இயக்கம், பொதுவுடைமை இயக்கம்,  திராவிட இயக்கம் ஆகிய முப்பெரும் இயக்கங்களின் தொடர்ச்சி தான் தமுஎகச என்றானது.

1980இல் மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் பொன்விழாவும் 1982இல் பாரதியின் நூற்றாண்டுவிழாவும் 1990 இல் மக்கள் கவிஞரின் மணிவிழாவும் 1990 ஏப்ரலில் பாவேந்தரின் நூற்றாண்டு விழாவும் என தமுஎச இம்முப்பெரும் கவிஞர்களின் விழாக்களைத் தமிழகமெங்கும் பொதுவுடைமைச் சிந்தனைகளையும் பகுத்தறிவுச் சிந்தனைகளையும் ஏகாதிபத்திய எதிர்ப்புச் சிந்தனைகளையும் எடுத்துச் செல்லும் விழாக்களாக மாற்றியது.

கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக பட்டுக் கோட்டை நகரில் மக்கள் கவிஞர்பிறந்த நாள் விழா இடைவிடாது ஆண்டுதோறும் ஏப்ரலில் நடத்தப்பட்டு வருகிறது. தமுஎசவின் நான்காவது மாநில மாநாடு 1984இல் திருச்சியில் நடைபெற்ற போது அமைப்புச்சட்டத்திலும் கொள்கை அறிக்கையிலும் இலக்கியஎன்று வரும் இடத்திலெல்லாம் கலை-இலக்கியஎன்றும் எழுத்தாளர்என்று வரும்இடத்திலெல்லாம் எழுத்தாளர்-கலைஞர்என்று திருத்தம் கொண்டுவரும் அளவுக்கு அமைப்புக்குள் கலைஞர்களின் வருகை பெருகியது. 

பின்னர் 2008 டிசம்பரில் தென்சென்னையில் நடைபெற்ற மாநில மாநாட்டில் தமுஎச, ”தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்- கலைஞர்கள் சங்கம்எனப் பெயர் மாற்றமும் பெற்றது. இன்று தமுஎகச,கலை இலக்கியப் படைப்பாளி களையும் வாசகர்கள், ரசிகர்களையும் உள்ளடக்கிய அமைப்பாக, ஒரே குடையின் கீழ் கவிஞர்களையும், சிறுகதை எழுத்தாளர்களையும், நாவலாசிரியர்களையும், கதையல்லா எழுத்துக்காரர் களையும், நாடகக்கலைஞர்களையும், திரைப்பட இயக்குநர்கள், திரைப்பட நடிகர்களையும், குறும்பட ஆவணப்பட இயக்குநர்- ஓவியர்களையும் கொண்ட ஒரே அமைப்பாகத் திகழ்கிறது.

இந்தியாவிலேயே இப்படியான கட்டமைப்புடன் இயங்கும் ஒரே அமைப்பு தமுஎகச மட்டும்தான் என்கிற பெருமையும் நமக்குண்டு. இதன் மூலம் படைப்பாளிகளுக்கும் வாசகர்-ரசிகர்களுக்குமிடையிலான ஊடாட்டம் உடனுக்குடனும் உயிர்ப்புடனும் நடக்கிறது.

வாசகன் எழுத்தாளனாவதும் ரசிகன் கலைஞனாவதும் நடக்கிறது. கலை- இலக்கிய இரவு என்கிற வடிவத்தின் மூலம் பல்லாயிரக் கணக்கான மக்களை நேரடியாகச் சந்திக்கிற இயக்கம்.ஆண்டுதோறும் சர்வதேச திரைப்பட விழாவும் ஃபிலிம் டிவிஷனுடனும் புதுச் சேரி மத்தியப் பல்கலைக்கழகத்தின் ஊடகவியல்துறையுடனும் இணைந்து சர்வதேசக் குறும்பட ஆவணப்பட விழாக்கள்நடத்தும் இயக்கம். கலை இலக்கியப் படைப்புகளுக்கு ஆண்டு தோறும் விருதுகள் வழங்கிப் பாராட்டும் இயக்கம். கருத்துச்சுதந்திரத்துக்கு ஆபத்து எனும்போது களத்திலும் வழக்கு மன்றங்களிலும் இறங்கிப்போராடும் இயக்கம். தமிழ்வளர்ச்சிக்கான அனைத்து இயக்கங்களையும் முன்னெடுக்கும் இயக்கம். 

காலத்தின் குரலாக தலித் மக்களின் விடுதலைக்கும், பெண் விடுதலைக்கும், திருநங்கையர் விடுதலைக்கும் பண்பாட்டுத்தளத்தில் முற்போக்கான தமிழ் மரபை முன் னெடுத்துப் போராடும் இயக்கம் என இன்றுமக்கள் அறிந்த தமுஎகசவின் முகங்கள் பல. பரிமாணங்கள் பல. மூன்று சாகித்ய அகாடமி விருது பெற்ற படைப்பாளிகள்,  எண்ணற்ற தமிழக அரசுவிருதுகளும் பிற கலை -இலக்கிய அமைப்புகளின் விருதுகளும் பெற்ற காத்திரமான படைப்பாளிகளைக் கொண்ட பேரியக்க மாக பீடுநடை போடுகின்ற 

இந்த அமைப்பின் நாற்பதாவது ஆண்டு நிறைவு மாநாடு 2015 நவம்பர் 29 அன்று மதுரையில் நடைபெறுகிறது. அன்று காலை 8 மணிக்கு செம்மலர் அலுவலகத்திலிருந்து இயக்கத்தின் முதல் பொதுச்செயலாளர் தோழர் கே.முத்தையா நினைவுச்சுடர் ஏந்தி நிகழ்வுகள் துவங்குகின்றன. தமுக்கம் கலை அரங்கில் முன்னோடிகளைப் பாராட்டுதல்,நாம் கடந்து வந்த பாதையை பெருமையுடனும் சுய விமர்சனத்துடனும் திரும்பிப்பார்த்து நம் முன் நிற்கும்சவால்களை எதிர்கொள்ளக் கூடிக்கனவுகாண்போம்.கூடிக்கரம் இணைப்போம்.கொண்ட லட்சியத்தின் பால் இன்னும்ஆயிரமாயிரம் படைப்பாளிகளையும் ஆர்வலர்களையும் ஒருங்கிணைப்போம். 
தமிழகத்தின் சக்திமிக்க பண்பாட்டுப் படையாக பயணம் தொடர்வோம்.
அழைக்கிறது மதுரை!ஆர்ப்பரித்து வாரீர்!!
கட்டுரையாளர்: தலைவர்தமுஎகச
---------------------------------------------- 
-----------------------------

அப்படியே,

 வரும் 07-12-2015 அன்று மாலை, மதுரையில் நடைபெறவுள்ள அம்பேத்கார் பிறந்தநாள் கருத்தரங்கிற்கும் வரவேற்கிறேன்-
நானும் கலந்து கொள்வதால்,
இவ்விரண்டு நிகழ்வுகளுக்கும் 
உரிமையுடன் மதுரை நண்பர்களை அழைக்கிறேன்

மதுரையில் சந்திக்கும் ஆவலுடன் 
நா.முத்துநிலவன் 
புதுக்கோட்டை

செல்பேசி – 94431 93293

அப்படியே....

நாளை மறுநாள்,

28-11-2015 
சனிக்கிழமை மாலை

புதுக்கோட்டையில் நடைபெறவுள்ள
இந்த நிகழ்வுக்கும் அன்புடன் அழைக்கிறேன்-

-இப்போதைக்கு -
இவ்ளோ தாங்க..

நன்றி, நா.மு.

10 கருத்துகள்:

 1. மண்ணின் புகழ்பாடும் ஒரு மாபெரும் இயக்கத்திற்கு 40 வயது...சீரிளமை தமிழ் வளர்க்கும் அமைப்புக்கு திருவிழா...எழுத்தாளர்,கவிஞர்,கலைஞர். என கூடப்போகும் கூடல் மாநகர் விழா சிறக்க....தமிழ்நாடு கலை இலக்கியப்பெருமன்றம்...புதுக்கோட்டையின் புரட்சி வாழ்த்துகள்....

  பதிலளிநீக்கு
 2. தமிழ் வளர்க்கும் மதுரை என்பது இதுதானோ... இருப்பினும் இங்கு தமிழகமே தமிழ் வளர்ப்பது மகிழ்ச்சி அய்யா...

  பதிலளிநீக்கு
 3. மதுரை என்பதால் தாங்கள் அழைக்க..மறந்தாலும் தவறாமல் கலந்து கொள்வேன் அய்யா.............

  பதிலளிநீக்கு
 4. அனைத்து விழாக்களும் சிறக்க வாழ்த்துக்கள் ஐயா...

  பதிலளிநீக்கு
 5. வாழ்த்துகள்..அப்படின்னா...வீதிக்கு?

  பதிலளிநீக்கு
 6. விழாக்கள் சிறப்பாக நடக்க வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு