மழையே மழையே போ!போ!

'மழை-

வந்தும் கெடுக்கும்,

சிலநேரம்

வராமலும் கெடுக்கும்-

ஊருக்குப் போன

மனைவியைப்போல“

என்று கிண்டலாக எழுதுவார் எங்கள் தங்கம் மூர்த்தி

 அப்படித்தான் ஆகிவிட்டது இப்போது பெய்த பெருமழையால்....

தொலைக்காட்சியில் பார்க்கும்போதே பகீர் என்கிறதே! நேரில்

பார்த்த, அனுபவித்தவர்களுக்கு எப்படி இருக்கும்....?!!? நம்ம முதல்வரம்மா விஜயம்செய்து, ஆர்கே நகரில் கால் பாவாமலே சொன்னதில் - மூன்றுமாதம் பெய்ய வேண்டியதை மூன்றே நாளில் கொட்டித் தீர்த்திருக்கிறதுஎன்பது மட்டும் உண்மை.

 

பள்ளிப் பிள்ளைகள் எல்லாரும் விரும்பிப் பார்க்கும் நம்ம ரமணன் அண்ணாச்சி கூட இப்பல்லாம் வழவழ கொழகொழன்னு சொல்றாப்ல.. பலமானது முதல் மிதமானது வரை.. வடக்கு முதல் தெற்குவரை..

 

ஆனால் ஒன்று நிச்சயமய்யா..

மூன்றுநாள் மழையில் வருடக்கணக்கில் உழைத்துச் சேர்த்த பண்ட பாத்திரம் குடிசை, தளவாடச் சாமான்களை யெல்லாம் வாரிஎடுத்துக் கொண்டு போய்விட்டது மழை என்பது மட்டும் உண்மை!

 

பலநாள் வெய்யிலைக் கூடப் பொறுத்துக்கொள்ளலாம். இரண்டுநாள் மழையில் எல்லாவற்றையும் பறிகொடுத்த மக்களின் கூக்குரல் இரவு முழுவதும் காதுகளில் கேட்டுக்கொண்டே இருக்கிறது!

 

“மழையே மழையே போ போ“ (Rain Rain Go Away) என்று பாடிய நர்சரி மழலைப்பாடல் ஒன்றை நான் தமிழ்நாடு முழுவதும் மேடைகளில் திட்டித் தீர்த்திருக்கிறேன். “எங்கோ மழைவிடாத குளிர் நாட்டில் அந்தநாட்டுச் சிறுவர்க்காக அந்தநாட்டுக் கவிஞன் எழுதியதை நம் ஊரில் அதுவும் மழையே பெய்யாத ராமநாத புரம் வங்காட்டில் குழந்தைகளைப் பாடச் சொல்கிறோமே நியாயமாரே?“ என்று கேட்டு, “நம் நாட்டுக் குழந்தைகளுக்காக நமது பாரதிதாசன் எழுதிய –

“மழையே மழையே வா வா - நல்ல

வானத் தமுதே வா வா – இந்த

வையத் திருவே வா வா!

தகரப் பந்தல் தணதணவென்ன

தாழும் கூரை மொணமொணவென்ன

நகரப் பெண்கள் செப்புக் குடங்கள்

நன்றெங்கும்கண கண கணவென்ன... 

மழையே மழையே வா வா“ என்று பாடிய பாட்டையல்லவா பாடம் வைத்திருக்க வேண்டும் என்று சுமாராக 20ஆண்டுகளாக நான் கேட்டுக் கொண்டே இருந்தேன்.

 

நல்ல வாய்ப்பாக 6ஆம் வகுப்புத் தமிழ்ப்பாட நூல் தயாரிப்புக் குழுவில் பணியாற்ற எனக்கு அழைப்பு வந்தபோது, மகிழ்ச்சியோடு சென்று உதவி செய்து, முதல்பாடமாக “தமிழ்த்தாத்தா உ.வே.சா“ எழுத முதற் காரணமாக இருந்து, இந்தப் பாடலையும் சேர்த்தேன்.. இந்தப் பாடல் இப்போதும் 6ஆம் வகுப்புத் தமிழ்ப்பாட நூலில் உள்ளது. (இந்த உண்மைக் கதையை நான் விடும் கதை என்று நினைப்பவர்கள் எனது “முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே!நூலைப் பணமனுப்பி வாங்கி, எனது முன்னுரையைப் படிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். அப்படியே ஒரு விளம்பரம்!)

 

சரி இப்ப மீண்டும் சென்னை மழைக்கு வருவோம்..

அளவோடு பெய்தால்தான் மழை அழகு மட்டுமல்ல பயனும் ஆகும்.

அளவுக்கு மீறினால் அதுவே ஆபத்து என்பதை அறிந்த தருணமிது.

 

ஆதவன் தீட்சண்யாவின் கவிதை நினைவில் வந்து அறைகிறது - “மழைக்காலமும் பனிக்காலமும்

சுகமானதோ? மயிரானே!

மழை உனக்கு சன்னலுக்கு

வெளியிலதான் பெய்யிது,

எங்களுக்கு? எங்க பொழப்பு மேலயே!

இதற்கு மேல் என்ன சொல்ல?

இனி மழையைத் தொடர்ந்து வரும் தொற்றுநோய்கள் பரவாமலிருக்க மக்களும் கவனமாக இருக்க வேண்டும். அரசும் உண்மையிலேயே போர்க்கால அடிப்படையில் பணிகளை முடுக்கிவிட வேண்டும்.

 

இல்லையானால், மழையால் வந்த சேதத்தைவிட அடுத்துத் தொற்றித் தொடரும் நோய்களினால் ஆபத்துகள் காத்திருக்கிறன்றன.

 

ஏதோ மனசு கேக்கல..

சத்திரத்துல பொட்டையன் பொலம்புற மாதிரி

பொலம்பிக்கிட்டு இருக்கேன்.

வெள்ள நிவாரணம் கோரிக்கை வரும்.

இதோ செய்திகளில் வந்துகொண்டிருக்கிறது...

 

நண்பர்களே! தாராளமாக வழங்குங்கள்.

நானும் அனுப்புவேன்.

ஏதோ நம் மக்களுக்கு நம்மால் ஆன

உதவிகளைச் செய்வோம். நன்றி.

பி.கு.-
நிலா நிலா வா வா மாதிரி,
இப்ப ஒரு கவிஞர் யாரென்று பேர் தெரியவில்லை-
அவர் எழுதிய கவிதையின் சூட்டில் தகித்திருக்கிறீர்களா?
“நிலா நிலா போ போ
நில்லாதே போ போ
ஃபிளாட்பாரத்தில் குடும்பம் நடக்கிறது“

நடைமேடைவாசிகளைப் பற்றிய 

இக்கவிதை படித்து மிரண்டு போனேன்..

கவிதை சின்ன மழை மாதிரி வெறும் சுகமானதா? சொல்லுங்கள்..! 
சிலநேரம் பெருமழைபோல...நெருப்பா ல்ல எரிக்கிது?! 
இப்படி சும்மா பத்திக்கிற மாதிரியில்ல கவிதை இருக்கணும்?
ஆனாலும் மழை 
இப்படி பத்தி எரியிறமாதிரி 
பெய்யக்கூடாதுய்யா..!

--------------------------------------- 

பிகு-2 தொடர்ந்து இதை நேரில் அனுபவித்த நம் பதிவர் மீரா.செல்வக்குமாரின் மகள் சக்தியின் இந்த நேரடிக் குரலைக் கேளுங்கள்... உறைந்து போவீர்கள் அல்லது உலர்ந்துபோவீர்கள்!
--http://sakthiinnisai.blogspot.in/2015/11/blog-post_16.html
அதிலிருந்து இரண்டு படங்கள் - 17வயது சக்திக்கு நன்றியுடன்...26 கருத்துகள்:

 1. மழை மழை
  தலைநகர் புரட்டிய மாமழை.
  யார் பிழை? இன்னும் உங்களிடமிருந்து எதிர்பார்த்தேன்...
  சூடாக....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இங்க அடிக்கிற குளிருல சூடா எங்க? கவிதைதான் எழுதணும்... ஆனா இந்த நிலைமையில கவிதை வரலயே! கண்ணீர்தான்..

   நீக்கு
 2. பதில்கள்
  1. என் கவிதை எதுவும் இதில் இல்லயே!
   அதான் தகிக்கிறதாயிருக்கும்... நான் நிலவு ல்ல..?

   நீக்கு
 3. வணக்கம்
  ஐயா
  ஒவ்வொரு தகவலையும் பார்க்கும் போது மனதுக்கு வேதனைதான்... என்னசெய்வது இயற்கை...
  ரமணன் ஐயாதான் சொல்ல வேண்டும் முடிவு...நாங்களும் மக்கள் தொலைக்காட்சி ஜெயா தொலைக்காட்சி .சன் தொலைக்காட்சி. ராஜ் தொலைக்காடசி எல்லாம் பார்த்தோம் மக்கள் படும் துன்பத்தை..அறிகிறோம்... பகிர்வுக்கு நன்றி ஐயா.

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. புதிய தலைமுறையில் பெரும்பாலும் உடனுக்குடன் சொல்லிவிடுகிறார்கள்..அங்கே வருவதில்லையோ ரூபன்?

   நீக்கு
 4. கவலைக்குரிய விசயம் தான்..அதென்ன அண்ணா பொட்டையன்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நினைத்தேன்.. உ ங்களிடமிருந்து இப்படி ஒரு கேள்வி வருமென்று.
   பாரதியையே “பெட்டைப் புலம்பல் பிறர்க்குத் துணையாமோ?” என பாஞ்சாலி சபதத்தில் பாடியதையும் கேட்டோம்ல..?
   இது பெட்டை (பெண்) இல்லம்மா.. பொட்டை (குருடு) எனினும் இதுபோலும் உறுப்புக் குறையைக் குறிப்பிட்டிருக்க வேண்டாம்ல? அவசரத்தில் கவனப் பிசகில் சொல்லிட்டேன் மா.. இனிமேல்.. இப்படி நேராமல் பார்த்துக் கொள்கிறேன். (ஆத்தாடி.. என்னமா கவனிக்கிறாங்கப்பா.. எழுத்தில் முதிர்ச்சி வரணும் பா!) நன்றிம்மா

   நீக்கு
 5. இப்போது தான் ஓரளவுக்கு மழைநீர் வடிந்திருக்கிறது. ஆனால் இன்னும் பெய்யும் எனும்போது கொஞ்சம் பயமாகத்தான் இருக்கிறது....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இனிமேல் குறையும் என்று ரமணன் சொல்கிறார்...நம்புவோம். (நமக்கும் வேற வழி ?)

   நீக்கு
 6. ///“நிலா நிலா போ போ
  நில்லாதே போ போ
  ஃபிளாட்பாரத்தில் குடும்பம் நடக்கிறது“///
  வேதனை
  ஆயினும் உண்மையல்லவா

  பதிலளிநீக்கு
 7. செல்வா அண்ணா சொல்வது போல சூடாக இல்லைதான். ஆனால் எழுத்தில் நடுங்குகிற பேனா தெரிகிறது அண்ணா. அத்தனை தழுதழுப்பு:(((
  இது மழையின் பிழை மட்டும் அல்ல. வேறென்ன சொல்ல:((

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நடுக்கம் என்னன்னா? சுகமாக வாழ்ந்துகொண்டு விளிம்புநிலை மக்களைப் பற்றிக் கவிதை கட்டுரை எழுதிக்கொண்டே இருக்கிறோமே என்னும் ஆற்றாமைதான் பா.

   நீக்கு
 8. மழை கொட்டித் தீர்த்துவிட்டது...
  தண்ணியை மட்டுமல்ல
  பலரின் வாழ்க்கையை...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் நண்பரே.
   மழை வடிந்தும் இவர்களின் வாழ்க்கை விடியப்போவதில்லை

   நீக்கு
 9. மழையின் பாதிப்பும் மக்களின் நிலையும் எப்போதும் கீழ்தேசங்களில் ஒரு சாபம் போல ஐயா! கவிதை அருமை பிளாட்பார நிலை பற்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அவர்கள் அழுது தீர்க்கிறார்கள்.
   நான் எழுதித் தீர்க்கிறேன். அவர்களின் வாழ்க்கை விடிய ஒரு வெளிச்சம் வராதா என்னும் எதிர்பார்ப்பில்...

   நீக்கு
 10. அண்ணா , இத்தனை நடந்த பிறகும் சமூகப் பொறுப்பில்லாமல் பேசும் பேச்சுகளைக் கேட்டுச் சூடாகிப்போனேன்.

  முன்பு அட்லாண்டாவில் மழை பலமாக இருந்தபொழுது நம் ஊரை நினைவில் வைத்துத் தேவைப்படும் இடத்திற்குப் போ என்று சாடி ஆங்கிலத்தில் கவிதை எழுதினேன். இன்று அந்த மழை என்னைச் சாடுவதுபோல் இருக்கிறது .. எனக்கான இடமேதும் இன்றி போகச்சொன்னாயா என்று!!!

  பாவம் அண்ணா மழை ...

  இடம் அழித்த மனிதனால்
  இடியும் வாங்குகிறது இடிமழை

  கவிதைகள் அருமை அண்ணா .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. “எனக்கான இடமேதும் இன்றி போகச்சொன்னாயா என்று” மழை கேட்பதாகச் சொன்னாயே? இதுதான் மா உண்மை.

   நீக்கு
 11. அப்பா உங்க பின்னூட்டங்களையே ஒரு கட்டுரையாகப் போடலாம்ங்க அப்பா.....நானும் கத்துக்கோணும்ங்க அப்பா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அட பின்னூட்டம் எழதிட்டியே! எப்படா கவிதை, கட்டுரை படைப்பு எழுதப்போறே? உன் தளம் சும்மாவே இருக்கு?

   நீக்கு
 12. மழை வெள்ளம் இந்த முறை சென்னையை அதிகம் பாதித்துவிட்டது! பல இடங்களில் தண்ணீர் வடிய இன்னும் நாளாகும் போல!

  பதிலளிநீக்கு
 13. வணக்கம் ஐயா,
  இந்நிலைக்கு நாம் தான் காரணம், தாங்கள் அப்பாடலை திட்டித்திர்த்ததில் தவறு இல்லையே, உண்மைதானே அது,
  நீர் வடிகால் இடங்களை எல்லாம் நாம் பிளாட் போட்டு தின்னா இயற்கை என்ன செய்யும்,,,,
  இவைகளை நாம் எதிர்க்கொண்டு தான் ஆகனும்,
  நன்றி ஐயா,

  பதிலளிநீக்கு
 14. அண்ணா மழையின் பிழை இல்லை. இது. இயற்கைச் சீற்றம் நமது தானைத் தலைவர்களைப் பார்த்துச் சீறியிறுக்கின்றது. நீங்கள் இன்னும் ஊழல் செய்தால் நான் இன்னும் சீறுவேன் என்று பயமுறுத்திச் சென்றுள்ளதாகத்தான் தெரிகின்றது. ஆனால் இந்தப் பயமுறுத்தலால் எல்லாம் நம் தலைவர்கள் திருந்தப் போவதில்லை.ஏனென்றால் அவர்களுக்குப் பாதிப்பில்லை. பாமரமக்கள்தானே. மக்கள் இனி விழிப்படைய வேண்டும்.....எப்படி? இதற்குப் பதில் இன்றைய மதுரைத் தமிழனின் பதிவு! சரியாகச் சொல்லியிருக்கின்றார்...அண்ணா...

  கீதா

  பதிலளிநீக்கு
 15. மழையின் பிழையன்று மக்களின் பிழை.....

  பதிலளிநீக்கு