பதிவர் விழா செய்தித் தொகுப்பு -நன்றி தீக்கதிர் நாளிதழ்

எழுத்தாளர் மயிலை பாலு
பொறுப்பாசிரியர், தீக்கதிர்  நாளிதழ் சென்னை 
இணையம், வலைப்பூ, முகநூல் என்ற சொற்கள் தகவல் தொழில்நுட்பம் தமிழுக்கு உருவாக்கித் தந்துள்ள சொற்கள். தமிழின் சீரிளமைத்திறன் கண்டுவியக்கவைக்கும் இணைய எழுத்தாளர்கள் இணைந்துகொண்டாடிய வலைப்பதிவர்கள் திருவிழா அண்மையில் புதுக்கோட்டையில் நடைபெற்றது.


கவிஞர் முத்துநிலவனோடு கைகோர்த்து புதுகைஎழுத்தாளர்கள் ஏற்பாடு செய்திருந்த இந்த விழாவில்வலைப்பூவில் அன்றலர்ந்த இளைஞர்களும் அது பூத்தபோதே எழுதத் துவங்கிய மூத்த படைப்பாளிகளும் சங்கமித்திருந்தனர். வயதின் தள்ளாமையையும் தள்ளிவைத்துவிட்டு விழாவுக்கு வந்திருந்த மூத்த படைப் பாளிகளை கைத்தாங்கலாக இருவர் மேடைக்கு அழைத்துவர அவர்கள் கவுரவிக்கப்பட்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. 

மறுபக்கம் தஞ்சாவூரில் நடைபெற்ற உலகத்தமிழ் மாநாட்டுக்கான போட்டிகளில் புதுக்கவிதை மரபுக்கவிதை இரண்டுபிரிவிலும் பரிசுபெற்ற புதுக்கோட்டைக் கவிஞர் இரா. தனிக்கொடிக்கான பாராட்டு அசத்தலாக இருந்தது. (இவர் சமீபத்தில் வெளிவந்த “கொம்பன்“ திரைப்படத்தில் நான்கு பாடல்களை எழுதியவர் என்பதும் ஒரு தகவல்)

வலைப்பதிவர் திருவிழா என்ற செய்தியைப் பார்த்ததும் தன்னையும் அதில் இணைத்துக் கொண்டது தமிழ் இணைய கல்விக்கழகம். வலைப்பூக்களில் சிறந்தபடைப்புகளைப் பதிவோருக்குப் பரிசுகளையும் அறிவித்தது. அந்தப் பதிவுகள் குறித்து சிறந்த விமர்சனங்கள் எழுதுவோருக்கும் பரிசு என்பது பின்னூட்டமாக அமைந்தது. இதனால் பரிசுகள் பெறுவதும் வழங்குவதுமே உற்சாகப் பெருநிகழ்வாக இருந்தது.

இணையதளம் என்ற வலைவீச்சில் சிக்காத மீன்களே இல்லை என்பதே நிதர்சனம். இந்தப் புதுயுகத்தில் என்னென்ன வாய்ப்புகளை இணையம் வழங்குகிறது என்பதை உரையாளர்கள் குறிப்பிட்டுச் சொன்னபோது அகலத்திறந்த விழியினராய் பங்கேற்பாளர்கள் ஆச்சரியமடைந்தனர். 

வலைப்பூவின் அடிநாதம் கருத்துச் சுதந்திரம் என்பதாக தனது உரையைத் தொடங்கினார் தமிழ் இணைய கல்விக்கழக உதவி இயக்குநர் தமிழ்ப்பரிதி. கருத்துச் சுதந்திரத்தின் மீது தாக்குதல்கள் தொட ரும் தருணத்தில் தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகள் மீது இந்தி மொழியின் வல்லாண்மை மேகம் கவிந்திருக்கும் காலகட்டத்தில் இணைய வழியான சமூக வலைத்தளங்களில் தமிழ் மொழியின் பயன்பாட்டை கூடுதலாக்க வேண்டியதன் அவசியத்தை அவர்ஆழப்பதிவு செய்தார். எங்கெல்லாம் தமிழைப் பயன்படுத்த இயலுமோ அங்கெல்லாம் பயன்படுத்துவதன் மூலமே அதன் இருப்பை நிலை நிறுத்த முடியும் என்பதை நினைவு படுத்தினார்.

இணையதளத்தில் இன்னும் ஓராண்டில் தமிழில் 5லட்சம் கட்டுரைகளை இடம் பெறச் செய்வது - டிக்ஷனரியில் தற்போதுள்ள 3 லட்சத்து 14 ஆயிரம் தமிழ் சொற்களை ஒரு கோடி அளவுக்கு உயர்த்துவது - வரும் பொங்கல் திருநாளுக்குள் ஒரு லட்சம் தமிழ் நூல்களை இணையத்தில் பதிவேற்றம் செய்வது போன்ற இணைய கல்விக் கழகத்தின் இலக்குகளை தமிழ்ப்பரிதி முன்வைத்தார். தமிழின் ஒளி மிக்க எதிர்காலம் இணையத்திலும் பரவும் என்ற நம்பிக்கையை இது ஏற்படுத்தியது.இணையத் தமிழை மேம்படுத்த பல துறை பொருண்மை சார்ந்த ஆழமான கட்டுரைகளைப் பதிவிடுங்கள் என்ற அவரின் கோரிக்கையும் பொருள் நிறைந்ததாகவே இருந்தது.

எந்தத் தகவல் வேண்டுமென்றாலும் சுட்டி வழிதேடுவது விக்கிப்பீடியாவில்தான். ஆங்கில வழியிலான அந்தத் தகவல் களஞ்சியத்திற்கு இணையாகத் தமிழில் தகவல்களை வழங்க உருவாக்கப்பட்டிருப்பது விக்கிமீடியா. இதன் திட்ட ஒருங்கிணைப்பாளர் ரவிசங்கரும் இவ்விழாவில் பங்கேற்றார்.தானியங்கி பணப்பட்டு வாடா மையம் தொடங்கி எந்த இடமானாலும் தமிழையே பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் எங்கும் தமிழ் என்பதற்கான தேவை யை ஆட்சியாளர்களுக்கும் மற்றவர்களுக்கும் புரிய வைக்க முடியும் என்பதை வலியுறுத்திச் சொன்னார்.

ஓலா என்ற தனியார் நிறுவனத்தில் மகிழுந்து பதிவு செய்வதற்கு ஒருவர் தொடர்ந்து தமிழை மட்டுமே பயன்படுத்தியதால் அந்நிறுவனம் மொழிபெயர்ப்பாளர் ஒருவரைப் பணியில் அமர்த்தியதைக் குறிப்பிட்டு தமிழ்சோறு போடுமா என்கிறார்களே இத்தகைய முயற்சிகள் தொடர்ந்தால் தமிழ் பலருக்கு சோறு போடும் என்று எடுத்துக்காட்டோடு பேசியது புதிய சிந்தனையை ஏற்படுத்தியது.வலைப்பூவிலிருந்து மின்நூலுக்குச் செல்லுமாறு வேண்டுகோள் விடுத்ததோடு துறை சார்ந்த கட்டுரைகளுக்கு நல்ல வரவேற்பு இருப்பதால் அவற்றைப் பதிவிட முயற்சி செய்யுங்கள் என்றும் கேட்டுக் கொண்டார். இந்திய மொழிகளின் இணையப் பயன்பாட்டில் தமிழ் இரண்டாவது இடத்தில் இருப்பதை நினைவு கூர்ந்தார். பலருக்கும் பயன்படுவதாகப் பலரும் பயன்படுத்துவதாக தமிழில் எழுதி விக்கிமீடியாவில் பதிவிட நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. கணினியில் தமிழ் வழி எழுத கற்றுக் கொடுக்க வேண்டும். இதுதான் அடுத்த தலைமுறைக்கு உதவும் என்ற அவரின் கருத்து பார்வையாளர்களிடம் பரவலான வரவேற்பைப் பெற்றது. புரிதலை உண்டாக்கியது.

இவரது கருத்துக்கு வலுசேர்ப்பதாக அமைந்ததுஅழகப்பா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சோ. சுப்பையாவின் பேச்சு. இந்தப் பல்கலைக்கழகத்தில் கணிப் பேரவை தொடங்கி ஒவ்வொரு கல்லூரியிலிருந்தும் 2 பேராசிரியர்களை அழைத்துப் பயிற்றுவித்து மாணவர்களுக்குப் பயிற்சி கொடுக்கிறோம் என்றார் 

நந்தலாலா. காம் என்ற இணைய இதழ் மீண்டும் தொடக்கம் இடையிடையே இனிய குரலில் சுபா என்ற மாணவியின் பாரதியார், பாரதிதாசனின் பாடல்கள் என்றுசென்ற நிகழ்வுகளை மாலைப் பொழுதில் நிறைவு செய்துஉரையாற்றினார் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன்.

தமிழில் மென்பொருள்களை உருவாக்கியவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று தொடங்கி முரசு அஞ்சல்தான் தமிழின் முதல் எழுத்துரு என்பதைநினைவுபடுத்தி அதை உருவாக்கியவர் பெயர் தெரியாவிட்டாலும் நன்றி சொல்ல வேண்டும் என்றார். ஆங்கிலம் போலவே தமிழிலும் நாவி என்ற பிழை திருத்தி உருவாக்கப்பட்டிருப்பதற்கும் பாராட்டு தெரிவித்தார். 

வலைப்பூவை உருவாக்கி அளித்தவர் பா.ராகவன்என்பதையும் பதிவு செய்தார். கிராமங்களின் பிரச்சனைகளை அறிந்து கொள்ள கியூபாவில் இணையம் பயன்படுத்தப்படுகிறது. மக்களுக்கும் அரசுக்கும் உண்மையான இணைப்பை ஏற்படுத்துவதாக இணையம் அங்கே இருக்கிறது என்பதை சுட்டிக் காட்டினார்.வலைப் பதிவர்கள் ஆளுக்கொரு நூலினை அறிமுகம் செய்வது என்ற பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்; அப்போது வாசிப்புப் பழக்கமும் அதிகரிக்கும்; நூல்கள் பற்றி மேலும் பலரறிய வாய்ப்பும் ஏற்படும்.

நம் ஊரில் ஓவியர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்களின் படைப்புக்கான வலைப்புதிவுகள் இல்லை. ஆங்கிலத்தில ஆர்ட்பிளாக் (artblog) என ஏராளமானவலைப்பக்கங்கள் இருக்கின்றன என்றதோடு அருகி அழிந்து வரும் நமது பாரம்பரிய பண்பாடுகள் பொருள்கள் வாழ்க்கை முறைகள் போன்றவற்றைப் பாதுகாத்துவைக்க நமக்குக் கிடைத்துள்ள அரிய வாய்ப்பு இணையதளம். இவற்றில் தகவல்களைப் பதிவிட்டு பாதுகாக்கலாம். அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லலாம் என்று யோசனை கூறினார்.

சிறியதோ பெரியதோ சொந்தமாக எழுதுங்கள் என்றவர் பூக்களில் சிறிய வேப்பம்பூவுக்கும் தனித்தன்மை உண்டு. அதேபோல் தகவல் சிறியதாயினும் அரியதகவலாக இருந்தால் அதற்கும் வரவேற்பு இருக்கும் என்ற கருத்தோடு இணையத்தில் தமக்கு ஏற்பட்ட ஏற்படும் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார்.

வலைப்பதிவர் திருவிழா இணையதளம் வழி நேரலை ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்தியாவில் பகல்; அமெரிக்காவில் இரவு என்ற போதும் அங்கிருந்தும் வலைப்பதிவர்கள் அக்கறையோடு பார்த்து இட்டபதிவுகளும் பார்வையாளர்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டன.

இதனைக் கண்டபோது கல்விகுறித்து வள்ளுவர் சொன்ன குறள் நினைவுக்குவந்தது.
யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன் 
சாந்துணையும் கல்லாத வாறு” - கற்றவர்களுக்கு எல்லா ஊரும், எல்லா நாடும் சொந்தமாகும். அப்படியிருந்தும் சாகும்வரையும் சிலர்ஏன் கல்விகற்காமல் இருக்கிறார்கள் என்றுகவலைப்பட்டார் வள்ளுவர். 

இந்தக் குறளின் கருத்தை இந்த நூற்றாண்டு இணையத்தோடு பொருத்திப்பார்த்தால்,
'யாதானும் நாடாமால் ஊராமால் எற்றுக்கு
இணையத்தோ டிணையாத வாறு?" என்று சொல்லத் தோன்றுகிறது.
                                    --- தொகுப்பு: மயிலைபாலு 
  (நன்றி -“இலக்கியச் சோலை“ -தீக்கதிர் நாளிதழ்
 02-11-2015 நாளிட்ட இணைப்பு)
---------------------------------------------
வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் வாழும் தமிழ்ப்பதிவர் நண்பர்களுக்கு ஒர் அன்பு வேண்டுகோள் - 
அந்தந்தப் பகுதியில் வெளிவரும் தமிழ் நாளிதழ் வாரஇதழ் அச்சிதழ்களில் நமது பதிவர்திருவிழாப் பற்றிய செய்தித் தொகுப்புகளை எழுதி வெளியிட முயற்சிசெய்யுங்கள்.
செய்தி வெளிவந்தவுடன் அதனை இணைப்போடு அனுப்புங்கள்
எடுத்து, நமது தளத்தில் நன்றியோடு வெளியிடுவோம்.)
------------------------------------------------- 


10 கருத்துகள்:

 1. அன்புள்ள அய்யா,

  ‘வலைப்பதிவர் விழா’ செய்திகளைத் தொகுத்திட்ட திருமிகு.மயிலைபாலு அவர்களுக்கும் அதை வெளியிட்ட தீக்கதிர் நாளிதழுக்கும் வலைப்பதிவர் சார்பில் மிக்க நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

  த.ம.2

  பதிலளிநீக்கு
 2. அருமையான தொகுப்பை தந்ததற்கு நன்றி!
  த ம 3

  பதிலளிநீக்கு
 3. விரிவான பதிவு!!!

  தீக்கதிர் + மயிலை பாலு...
  நன்றிகள்!

  பதிலளிநீக்கு
 4. அருமையான தொகுப்பு...
  வெளியிட்ட தீக்கதிருக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 5. வணக்கம் அங்கிள்...நலமா????தொடர்பு கொள்ளவே இல்லை....சரி இப்படியாவது பேசுங்கள்...நானும் தொடர்கிறேன்...http://sakthiinnisai.blogspot.in/2015/11/blog-post.html

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் மருமகளே! நீ பதிவர் விழாவுக்கு வராததால் உன் பேச்சு கா! அதான் பேசல..அப்புறம்...நீ இரண்டாவது முறையாகக் கேட்டு்ட்ட.. மனசு கேக்கல..சரி இனிமேல் பழம்! என்ன?
   பதிவர் விழாவால் தள்ளிப்போடப்பட்ட எனது தனிஎழுத்து வேலைகள் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டே இருக்கின்றன. இரண்டு நூல்களுக்கான முன்னுரைகள், ஒரு பெரிய கட்டுரை, அப்புறம் வழக்கம்போல என் துணைவியார் வெளியூர் சென்றதால் என்மேல் விழுந்த சில வீட்டுவேலைகள்.. வர்ரேன் வர்ரேன்..
   கொஞ்சம் பொறுத்துக் கோடா... நீ நல்ல பிள்ளல்ல?..

   நீக்கு
 6. அருமையான கட்டுரை. இங்கே பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

  பதிலளிநீக்கு