கம்பனும் காரல்மார்க்சும் - நா.முத்துநிலவன்காரல் மார்க்ஸ் – 
உலக அரசியல் வரலாற்றில் மறுக்க முடியாத மாமேதை! 
கம்பன் – 
தமிழ் இலக்கிய வரலாற்றில் மறைக்க முடியாத மாகவி!

உலகூட்டும் ஒரு மாகடலும்
உள்ளங் குளிர்விக்கும் ஒரு மகாநதியும் 
சந்திக்கும்  முகத்துவாரத்தில் 
முளைத் திருக்கும் சிறுநாணல்
இரண்டையும் ஒப்பிட்டுப் பார்க்கச் 
சிந்திக்கும் முயற்சிதான் இந்தச் சிறு கட்டுரை.


 தொன்மையவாம் எனும்எவையும் நன்றாகா இன்று
   தோன்றியநூல் எனும் எவையும் தீதாகா -  என்ப உமாபதியார்

தமிழின் பெருமையும் இதுதான்.
”முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே
பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியனே!” - என்று மணிவாசகர் போற்றிய தமிழின் அரிய நூல்கள் மிகச் சிலவே! அவற்றை, அவை தோன்றிய காலத்துச சூழலையும், இன்றைய பயன்பாட்டையும் வைத்துத்தான் ஆய்வுசெய்ய வேண்டுமே அன்றி இன்றைய சூழலை வைத்துக்கொண்டு, “இது தீது, இது நன்றுஎன்று முடிவுக்கு வருவது சரியாக இருக்க முடியாது. கலை-இலக்கியத்துக்கு  மட்டுமல்ல, அரசியல் கோட்பாடுகளுக்கும், தத்துவங்களுக்கும் கூட இது பொருந்தும்.
    தாய் மொழியாம் நம் இனிய தமிழ் மொழியின் பயன்பாடும் இதற்கு விதிவிலக்கல்ல.
   மூவாயிரம் வருடத்துத் தொன்மை மட்டுமல்ல தமிழின் பெருமை, இன்றும் மனித முன்னேற்றத்திற்குச் சரியான பங்களிப்பைச் செய்துவரும் மூத்தமொழி என்பதே உயர்பெருமை!
இதைத்தான் வயது ஏறஏற வனப்பேறும் அதிசயமே”    என்பார் அப்துல் ரகுமான்.
ஐந்து நிலங்களில் கிடந்த தமிழ், இன்று ஆறு கண்டங் களையும் கடந்து, ஆறாம்திணை இணையத் திணையிலும் ஏறிவரும் பெருமையல்லவோ உண்மைப் பெருமை!
புலவர்களின் சங்கப் பலகையில் கிடந்த” தமிழ், இன்றைய பில்கேட்ஸின் (விண்டோஸ்) சன்னல் பலகையிலும்அட்டியின்றி அமர்ந்து வருவதல்லவோ அருமைப் பெருமை!
ந்தப் பெருமைகளுடன், சுமார் ஆயிரமாண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட கம்பனின் இராம காவியத்தை, சுமார் நூறாண்டுகளுக்கு முன் நடைமுறைக்கு வந்த காரல் மார்க்சின் சிந்தனைகளோடு ஒப்பிட்டுப் பார்ப்பது எளிய செயலன்று, என்றாலும் முடியாததும் அன்று, ஏனெனில் இந்தத் துணிவை நமக்குத் தந்ததே கம்பனும் காரல்மார்க்சும் தந்த சிந்தனைகள்தாமே?!
சமத்துவ உலகைக் கனவு கண்டவன் கம்பன், அதைச் சமூகஅறிவியலாகச் சிந்தித்தவன் மார்க்ஸ். உலகின் சிறந்த உறவும்-நட்பும் கம்பனின் இராம-இலக்குவ-பரத-அனுமருடையது, எனில் உலகின் சிறந்த தோழமை காரல்மார்க்ஸ்-பிரடெரிக் ஏங்கெல்சுடையது. உலகின் சிறந்த காதல் சீதா-ராமனுடையதெனில் ஜென்னி-மார்க்சும் அப்படியே வாழ்ந்தனர். எனவே ஒப்பிட்டுப் பார்க்க இருவருக்கிடையே இருக்கும் ஒப்புமைகளைச் சுருக்கமாகப் பார்ப்போம்.
கம்பனும் காரல் மார்க்சும் எதிர்ப்பில் விளைந்தவர்கள்
வாழ்வின் சூழல்தான் மனித உணர்வுகளைத் தீர்மானிக்கிறதே அன்றி, உணர்வுகள் அவரது வாழ்வைத் தீர்மானிப்பதில்லை” என்பது மார்க்சின் திருவாசகங்களில் ஒரு வாசகம்.
கம்பனும் காரல்மார்க்சும் அரச எதிர்ப்பாளர்களே.
மார்க்ஸ் பிறந்த அன்றைய ஜெர்மனியின் ஒருபகுதியாக இருந்தபிரஷ்ய நாட்டிலிருந்து, பெல்ஜியத்திற்கும் பிரான்சிற்கும் இங்கிலாந்திற்குமாக ஓடிக்கொண்டே இருந்தான். அந்தந்த நாடுகளின் அரசுகள் அவனை நாடுகடத்திக் கொண்டே இருந்தன. இறுதியாக இங்கிலாந்தில் தனது இறுதி இருபதாண்டுகளைக் கழித்து, “காலமான” மார்க்சின் கல்லறையும் அங்குதான் உள்ளது.  
அன்றைய சோழமன்னர்களை சமகாலப் புலவர் பிறர் புகழ்ந்ததுபோல- புகழ்ந்துபாடக் கம்பனுக்கு விருப்பமில்லை. எனவே, திருவெழுந்தூரில் பிறந்த கம்பன், தொண்டை மண்டலம் சென்று, பிறகு சோழ-பாண்டிய நாடுகளின் எல்லைக்கு (இன்றைய சிவகங்கை மாவட்டம்) வந்து,  தனது இறுதி நாள்களைக் கழித்திருக்க வேண்டும் கம்பனின் கல்லறை நாட்டரசன் கோட்டையில்தான் உள்ளது என்பது குறிப்பிடத் தக்கது!
இந்த இடத்தில், “கம்பராமாயணம் ஓர் அரசஎதிர்ப்புக் காப்பியம்” எனும் இலங்கைப் பேராசிரியர் சி.மௌனகுருவின் கட்டுரைக் கருத்தும் கருதத்தக்கது.(1)
 மன்னவனும் நீயோ வளநாடும் உன்னதோ
உன்னையறிந் தோ தமிழை ஓதினேன்?  புகழ்பெற்ற தனிப்பாடலுடன், புகழ்பெறாத-
காதம் இருபத்து நான்கொழியக் காசினியை
ஓதக் கடல்கொண் டொளித்ததோ? –மேதினியில்
கொல்லிமலைத் தேன்சொரியும் கொற்றவா! நீமுனிந்தால 
இல்லையோ எங்கட் கிடம்? எனும் தனி வெண்பாட்டையும் சேர்த்தே சிந்திக்கலாம்.
       அன்றைய மன்னர்களைப் புகழ்நது பாடாத கம்பன், தனது இராமாவதாரத்தில் -ஆயிரம் பாடல்களுக்கு ஒருபாடல் வீதம்- பத்து இடங்களில் சடையனைப் புகழ்வதன் காரணமென்ன? இந்தக் கேளவிக்கு விடை தேடும்போதே கம்பனோடு சற்றேறக்குறைய சமகாலத்தவராக அறியப்படும் ஒட்டக்கூத்தர், செயங்கொண்டார் முதலியோரின் பாடல்களில் வரும் அரசப்புகழ்ச்சி கம்பன் பாடல்களில் காணாதது ஏன்? எனும் கேள்வியும் எழுந்து, இரண்டு கேள்விகளுக்கும் ஒரே விடை வருவதைப் புரிந்துகொள்ளமுடியும்.
 கம்பன் எந்த அரசனையும் சார்ந்திருக்க விரும்பவில்லை என்பதுதான் அந்த விடை.
ராகுல்ஜியின் வால்காவிலிருந்து கங்கை வரைநூலில், இதைஒத்த விவாதம் ஒன்று நடக்கும். இரண்டாம் சந்திரகுப்தன் எனும் விக்கிரமாதித்த மாமன்னனை, ஆண்டவனின் அவதாரமாக உருவகித்துக் குமார சம்பவம்பாடிய காளிதாசனைப் பார்த்து, “சாதாரண மனிதனை -சகல பலவீனங்களும் உள்ள மன்னனை- ஆண்டவனின் அவதாரமாக்கி எழுதுவது நியாயம்தானா?” என்பது போலக் கேட்பான் பிரகஸ்பதி. அதற்குக் காளிதாசன் சொல்வான்- அவன்தானே எனக்கு மது, மங்கை, மாளிகைகளைத் தருகிறான்? அவனைப் புகழந்துபாடுவதால் தானே தருகிறான்?“

கம்பனும் மார்க்சும் காண விரும்பிய மானுட வெற்றி -
மேற்கண்ட கம்பனின் அரசஎதிர்ப்புக் கருத்தோட்டத்துடன் பார்த்தால், “வேறுள குழுவையெல்லாம் மானுடம் வென்றதம்மாஎனும் கம்பனின் வரிகளுக்குப் புதிய பொருள் கிடைப்பது மட்டுமல்ல, கம்பனுக்கு முன்வரையான அரச-மக்கள் உறவு பற்றிய பார்வையில் கம்பனிடத்தில் ஒரு பெரும் மாற்றம் நிகழ்ந்திருப்பதையும் காணமுடியும்.
மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்” (புறநானூறு)
மன்னவர் ஞாலத்து இன்னுயிர் ஒக்கும்“-(பெருங்கதை)
திருவுடை மன்னனைக் காணின் திருமாலைக் கண்டேன் (ஆழ்வார்)
கம்பனுக்கு முன்னர் எழுதப்பட்ட மற்றொரு பெருங்காப்பியமான சிந்தாமணி-
 வேந்தனைப் பழித்தால் அழிவு உறுதி என்றே எச்சரிக்கும். அதற்கு மாறாக,
உயிரெலாம் உறைவதோர் உடம்பும் ஆயினான்” என்றும்
 “வையகம் மன்னுயி ராகவும் மன்னுயிர்

 உய்யத் தாங்கும் உடலன்ன மன்னன்  என்றும் கம்பன் பாடியது அதுவரை கேட்டிராத ஒருபுதியகுரல், புதியசிந்தனை. எல்லாரும் இந்நாட்டு மன்னர்என்பதன் முன்னோட்டம்,  அரசர் ஆட்சிக்கு மாற்றான மக்களாட்சியின் வித்து!
கம்பரைக் கம்பநாட்டாழ்வார்”-எனும் வழக்கும் பிந்திய வைணவர்களின் ஆசைப்படி சூட்டப்பட்ட வழக்கேயன்றி அவர் காலத்தில் வழங்கப்பட்ட பட்டமாக அறியக்கூடவில்லை. ஏனெனில், ஆழ்வார்களைப் போல அவர் திருமாலை மட்டுமே புகழ்ந்து பாடி, மற்ற கடவுள்களை ஞானசம்பந்தரும், நாவுக்கரசரும், சேக்கிழாரும் திட்டித் தீர்த்ததுபோல- திட்டவில்லை என்பது மட்டுமல்ல, சைவத்திற்கும் வைணவத்திற்கும் தீராப்பகை வளர்த்துப் பக்திஇலக்கியம் எழுதப்பட்ட காலத்திலேயே திருமாலுக்கான இராமாவதாரத்தில் சிலநூறு இடங்களில் சிவனைப் புகழ்ந்து எழுதியிருக்கிறார்!
அதுவும் அரன்அதிகன் உலகளந்த அரிஅதிகன் என்றுரைக்கும் அறிவிலோர்” என்று ஏதோ பக்திக்கு அப்பாற்பட்டுப் பாடுவதுபோலவே கம்பர் சொல்வதைக்கண்டு வியக்காமல் இருக்க முடியவில்லை. இதன் விளைவு என்னவெனில், இராமாவதார நூலை அரங்கேற்றம் செய்ய, வைணவர்கள் திருவரங்கத்தில் சிக்கல்செய்தால், சைவர்கள் சிதம்பரத்தில் செய்தனர், இறுதியாக்க் கம்பர் மக்கள் மன்றத்தில் -திருவெண்ணெய் நல்லூரிலேயே- அரங்கேற்றியதாகத் தோழர் ஜீவா சொன்னதும் இதனால்தானே?. ஏனெனில், மக்கள் என்றுமே ஒற்றுமை விரும்பிகள்.
காலமறிந்து கூவும் சேவலைக் 
கவிழ்த்துப் போட்டாலும் நிறுத்தாது
கல்லைத் தூக்கி பாரம்வைத்தாலும்
கணக்காய்க் கூவும் தவறாது
        – பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம் 
 எனவே, கண்டுகொள்ளாத மன்னரையும், பக்தர்களையும் தாண்டிக் கம்பர் நிலைத்து நிற்கிறார்!

அறம் வெல்லும், அறமல்லாதது வீழும்! – 
உலகத் தொழிலாளர்களே ஒன்று படுங்கள்! 
இரண்டும்ஒன்றே!
பாவிகம் என்பது காவியத்தின் தொடக்கமுதல் முடிவுவரை வனப்புடன் தொடரும் ஒரு காவியப் பண்பு. அறம்வெல்லும் பாவம் தோற்கும் என்பதே கம்பராமாயணத்தின் பாவிகம் எனும் மார்க்சிய இலக்கிய ஆய்வாளர் எஸ்.ஆர்.கே. (நூல்-கம்பன் கண்ட அரசியல் பக்கம்-13) அதற்குக் காட்டும் சான்றுகள் அழுத்தமானவை. கம்பர் தனது காவியத்தின் 3 இடங்களில் அறம்வெல்லும் பாவம்தோற்கும்” (4929, 9109, 9574,) என்றே திரும்பத்திரும்பச் சொல்வதும் கருதத் தக்கது.
“உடைந்தவர்க்கு உதவானாயின்
     உள்ளதொன்று ஈயானாயின்,
அடைந்தவர்க்கு அருளானாயின்
     அறன் என்னாம்?” கேள்வி பன்முக ஆழம்கொண்டது.
காரல் மார்க்சின் புகழ்பெற்ற முழக்கம் –“உலகத் தொழிலாளர்களே! ஒன்று படுங்கள்! நீங்கள் இழப்பதற்கு எதுவுமில்லை, அடைவதற்கோர் பொன்னுலகம் காத்திருக்கிறது!” என்பதாகும். இதன் முடிவு அரசியல்-சமூக-பொருளாதாரப் போராட்டம்! இதன் விளைவு, “உழைப்பாளிகளின் அறம் வெல்லும், சுரண்டுவோரின் பாவம் தோற்கும்என்பதன்றி வேறென்ன?    
கலை யாருக்காக?  எனும் கருத்தில் மார்க்சும் கம்பரும்
      கம்பரின் காவியத்தில்  “கலை கலைக்காகவேகருத்து மேலோங்கி நிற்பதை மறுக்க முடியாது. ஆனால், இன்றைய அளவுகோளை வைத்துக்கொண்டு கம்பரை அளப்பது தவறாக முடியும் என, நான் மேலே சொன்னதை இங்கு நினைவு படுத்துகிறேன். மன்னராட்சிக் காலத்தில் கலை காசுக்காகஎன்ற புலவர் பலரின் நோக்கிற்கு மாறாக, கம்பர் கலை கலைக்காகஎன்று எண்ணியதும், அவ்வாறே எழுதியதும் அன்றைய நிலையில் சரியே என்பதை உணர வேண்டும்.
கலை கலைக்காகவா? காசுக்காகவா?” எனில்
கலைக்காகஎன்பதுதான் சரியான பதில்.
கலை கலைக்காகவா? மக்களுக்காகவா?” எனில்
மக்களுக்காக என்பதே சரியானது! 
முந்திய கேள்வி எழுந்த காலத்தில் கம்பர் சரியான பதிலைத் தந்தார், பிந்திய கேள்வி எழுந்த காலத்தில் மார்க்ஸ் சரியான பதிலைத் தந்தார். 
இருவருமே சரியாகத்தான் இருந்திருக்கிறார்கள்!  இல்லையெனில், கம்பரின் படலம் படலமான பாடல்களின் காலச் சார்பை அறியாமல், அவரை எதிரிகள் பக்கம் கலை வியாபாரிகள் பக்கம் கொண்டுபோய் நிறுத்திவிடும் அபாயம் நடக்கும். 
இன்று, கம்பரின் அழகியலை மட்டுமே எடுத்தெடுத்துப் பேசி ஆழ்ந்திருக்கும் கவியுளம்காணாத பேச்சாளர் பெருமக்களை வைத்து, கம்பரை எடைபோடக் கூடாது!
தோள்கண்டார் தோளே கண்டார்
     தொடுகழல் கமலம் அன்ன                                  
தாள்கண்டார் தாளே கண்டார்
   தடக்கை கண்டாரும் அஃதே” 
என்று கம்பன் இராமனைப் பற்றிப் பாடியது, கம்பனைப் பேசும் பேச்சாளருக்கும் பொருந்தி நிற்பது கம்பனின் குற்றமல்லவே!

சமத்துவ உலகம் (சோஷலிசம்) இருவரின் கனவிலும்
சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்பது ஏதோ பிரஞ்சுப் புரட்சிக்காகவென்றே  உருவாக்கப்பட்ட முழக்கமன்று. அது, உலகமுழுவதும் வாழ்ந்த நல்லெண்ணம் கொண்ட தத்துவ, அரசியல், இலக்கியவாதிகளின் நீண்டநாள் கனவுதான். கற்பனையில்லாமல் கண்டுபிடிப்புகள் இல்லை. இது அறிவியலுக்கு மட்டுமன்று, கலை-இலக்கியம், சமூகம், அரசியல், தத்துவம் என அனைத்திற்கும் பொருந்தும். இருபதாம் நூற்றாண்டில் நடைமுறைக்கு வந்த இயங்கியல் பொருள்முதல்வாதம் மற்றும் சோசலிசத்திற்கான விதை கற்பனா சோசலிசத்திலேயே கிடைத்தது!  
எல்லாரும் எல்லாப் பெருஞ்செல்வம் எய்தி இருத்தலால்,
இல்லாரும் இல்லை உடையார்களும் இல்லை மாதோ!”  - என்று கம்பன் பாடுவதும், அங்கு “ஈந்தே கடந்தான் இரப்போர் கடல்” இருப்பதாகப் பாடும் முரண்பாடும் ஆசைபற்றி அறையலுற்றதவறன்றி, பெரும் தத்துவத் தவறன்று. நல்லவர்கள் நல்லதை நினைக்கிறார்கள், நல்லவராகவும வல்லவராகவும் இருப்போரே அதற்கான சூழலை உருவாக்கிச் சாதிக்கிறார்கள். கம்பர் நல்லவராக இருந்து நல்லதாக எண்ணி எழுதியதுதான் இவைபோலும் கருத்துகள் என்றுதான் நினைக்கிறேன்.
காமப்பரத்தை, காதற்பரத்தை, இற்பரத்தை, சேரிப்பரத்தை என ஆண்களுக்கான நுகர்வுக்கே பெண் படைக்கப் பட்டாள் எனும் கருத்துக்கு இலக்கணமும், இலக்கியமும் அரண்செய்த தமிழில், அழகுபார்த்த சமூகத்தில், “இந்த இப்பிறவிக்கு இருமாதரைச் சிந்தையாலும் தொடேன்”  என்று இராமனைச் சொல்ல வைத்ததே பெண்களைப பற்றிய கருத்தோட்டத்தில் பெரும் முன்னேற்றமே! இது பெண்களுக்கான சமத்துவக் கருத்தின் ஒரு கங்கு!
ஆண்டவனை மனிதனாகப் பாடியது மட்டுமன்றி. அந்த மனிதனை விட்டே வேடனையும், குரங்கையும், அரக்கனையும் சமமாக எண்ணிச் சொல்லவைத்த கற்பனை கம்பனின் சொந்தக் கற்பனை! பிறப்பொக்கும் எல்லாஉயிர்க்கும்என்ற சாரத்தின் பிழிவுஇது! சமத்துவப் பேராசையிது!
குகனொடும் ஐவரானோம் 
     முன்பு, பின் குன்று சூழ்வான்
மகனொடும் அறுவரானோம் 
     எம்முழை அன்பின் வந்த
அகனமர் காதல் ஐய
     நின்னொடும் எழுவரானோம்,
புகலரும் கானம் தந்து 
    புதல்வரால் பொலிந்தான் நுந்தை”  காரல் மார்க்சுக்குக் கூட இந்தக் கனவு இருந்ததாகத் தெரியவில்லை! மனிதரில் சமத்துவத்த்தைத்தான் மார்க்ஸ் கனவு கண்டார் இதுதான் நடைமுறை சாத்தியமும். ஆனால், இதையும் தாண்டி, நல்ல இலக்கியத்தின் அடையாளமே, “இதெல்லாம் நடக்குமா?“ எனும் கேள்விக்கு இப்படி நடந்தால் நல்லதுதானே?“ என்னும் விடையைத் தருவதுதானே? அப்படித்தான் கம்பரின் கனவும்.
ஷெல்லியைப் புகழ்ந்த மார்க்ஸ், ஷேக்ஸ்பியரை ரசித்த ஏங்கெல்ஸ், டால்ஸ்டாயைப் பாராட்டிய லெனின், லூசுன் படைப்புகளை எடுத்துக்காட்டிய மாவோ என, மார்க்சிய இலக்கியப் பார்வை தெளிவாகவும் விசாலமாகவுமே இருக்கிறது.  
இன்னும் இதை எடுத்து விளக்கும் மார்க்சியத் தமிழறிஞர் அருணன், “எதார்த்த வாதம், மாயா எதார்த்த வாதம் என்பது, மாயா கற்பிதங்கள் வருணனைகள் மூலம் மனித வாழ்வின் எதார்த்த்த்தைச் சொல்லுவதாகும்... லத்தீன் அமெரிக்க இலக்கியத்தில் மட்டுமல்ல, நமது பாரம்பரியத்திலும் இந்தக்கூறு உண்டு. பஞ்சதந்திரக் கதைகளிலும் இதிகாசங்களிலும் இதைப் பரக்க்க் காணலாம்” என்கிறார்.
  “தீங்கு விளைவிக்கும் பிற்போக்கு உள்ளடக்கம் உள்ளடக்கம் நிறைந்த படைப்புகளை மட்டும் நாம் வெறுக்க்வில்லை. சுவரொட்டி விளம்பரம் மாதிரி கோஷம் போடுவது போன்ற நடையிலுள்ள, உள்ளடக்கம்தான் முக்கியம்- உருவம் முக்கியமே இல்லை என்று வற்புறுத்தும் படைப்புகளையும் நாங்கள் வெறுக்கிறோம்” மாவோ  (கலையும் இலக்கியமும்“-பக்கம்-53)
கம்பனும் காரல்மார்க்சும் வேற்றுமை –
மார்க்சுஅறிவியல் அடிப்படையிலான இயங்கியல் பொருள்முதல்வாதி.
கம்பன் - நம்பிக்கை அடிப்படையிலான கடவுள் பக்தன் என்பதில் ஐயமில்லை.
ஆனால், இந்த வேற்றுமைக்குள்ளும் இருவருக்குமான ஒற்றுமையும் இருந்தது!
அது என்ன?
மார்க்ஸ், இயல்பான கடவுள் மறுப்பாளனாயிருந்த பொதிலும், மாறிவரும் சமுதாயத்தில் மதவாதிகளின் ஜனநாயகத்தை, மக்கள் ஒற்றுமையை, வாழ்வியல் ஒழுங்குகளை அழகியலோடு வெளிப்படுத்தும் படைப்புகளைப் பெரிதும் ரசித்தான், பாராட்டினான். ஷேக்ஸ்பியர், தாந்தே, முதலான படைப்பாளிகள் பொதுவுடமைவாதிகள் அல்லர், என்றாலும், மார்க்ஸ் விரும்பக்கூடிய படைப்பாளிகளாயிருந்தார்கள்.
கம்பன் நம்பிக்கை அடிப்படையிலான பக்தன் என்பதில் ஐயமில்லை.
வள்ளுவனும் பாரதியும் கூட இறைநம்பிக்கை உடையவர்தாம் என்றாலும், ஆழ்வார்களைப் போலவோ, நாயன்மார்களைப் போலவோ கண்மூடித்தனமான பக்தர்களல்லர். இறைவனுக்கும் மேலாக இந்த உலகத்து மனிதர்களை நேசித்தவர்கள். இதனை அவர்களின் இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகியற்றி யான்எனும் குறளிலும், “ஆயிரம் தெய்வங்கள் உண்டென்று தேடி அலையும் அறிவிலிகாள் பல்லாயிரம் வேதம் அறிவொன்றே தெய்வமுண் டாமெனல் கேளீரோ?” என்பன போலும் குரல்களிலும் ஆங்காங்கே கேட்கலாம். இதே போலத்தான் கம்பனும், இறைவனே மனிதனாக வந்து, மனிதனுக்குரிய பலவீனங்களோடும் கூட அறத்தை நிலை நிறுத்தி, “மானுடம் வென்றதம்மா” என்று பாடி மகிழ்ந்தவன்.
வெறும் மதப் பிரச்சாரமாக மட்டுமே படைக்க நினைத்திருந்தால், கல்வியைப் பற்றியும், கல்விஅறிவின் மேன்மை பற்றியும் ஆங்காங்கே சொல்லி அறிவுறுத்தியிருக்க மாட்டான்!
இவ்வாறு, வேறுவேறு காலம், வேறுவேறு நாடு, சூழலில் பிறந்து வளர்நது வாழ்ந்திருந்தாலும், மக்களுக்கு இன்றும் தேவையான கருத்துகளைச் சொல்லி இருக்கும் மார்க்சும் கம்பரும் இன்று மட்டுமல்ல, அவர்கள் கனவு கண்ட சமத்துவ சமூகம் வரை பேசப்படுவார்கள் என்பதில் ஐயமில்லை.
------------------------------------ 
(புதுக்கோட்டையைச் சேர்ந்த இக்கட்டுரை ஆசிரியரின் அலைபேசி - 94431 93293,
மின்னஞ்சல் - muthunilavanpdk@gmail.com ) 
--------------------------------- 
-- நன்றி --
காரைக்குடிக் கம்பன்கழக உரை -01-12-2012,
ஜனசக்தி”  நாளிதழ் கட்டுரை - 19-03-2013,
  கம்பன் கழகப் பவளவிழாச் சிறப்பு மலர்-2013
2014இல் “அகரம்“ வெளியீடாக வந்த எனது
“கம்பன் தமிழும் கணினித் தமிழும்“ நூலின்
மையக் கட்டுரையாக இடம்பெற்றது.
---------------------------------------- 

15 கருத்துகள்:

 1. சிறப்பான ஒப்பீடு ஐயா... வாழ்த்துக்கள் பல... நன்றி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி அய்யா. மீள்பதிவுதான். நிறையப் பேர் படிக்கத் தவறிய தென்று நான் நினைக்கும் எனது பதிவுகளில் இதுவும் ஒன்று

   நீக்கு
 2. நன்றி நண்பரே! உங்கள் தளம் மிகவும் அழகாக வடிவமைக்கப் பட்டுள்ளது பின்தொடர்வோர் பட்டியலில் இணைக்கக் கேட்டால் மீண்டும் மீண்டும் கடவுச்சொல்லைக் கேட்டு இம்சிக்கிறதே? முடியல நண்பா...

  பதிலளிநீக்கு
 3. ஐயா இந்த ஆறாம் திணை உதவியோடு தங்கள் கட்டுரை படித்தேன் பல விஷயங்கள் தெரிந்து கொண்டேன் நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் கருத்திற்கு நன்றி சகோதரி. ஆறாம் திணை வளர்ச்சி ஏழு எட்டாம் திணைகளை வளர்க்க உதவ வேண்டும் என்பதே என் ஆசை... எங்களைப் போன்றவர்களை விடவும் உங்களைப் போன்றவர்கள் முயன்றால் இன்னும் கூடுதல் பயன் விளையும்!. செய்வீர்களா என்பது என் கேள்வியல்ல, செய்ய வேண்டும் என்பதே என் வேண்டுகோள்! நன்றே செய்க, இன்றே செய்க.

   நீக்கு
 4. அண்ணா வெகு கனமான ,ஆழமான கட்டுரை எனவே சிந்திக்க அவகாசம் எடுத்துகொண்டு, தேநீர் போல் பருகவிரும்புகிறேன். தமிழுக்கு அணிசெய்து அழகாக தொடங்கியிருக்கிரீகள். மார்க்ஸ், கம்பன் ஒப்பிட்டு வேகம் பிடிக்கிறது கட்டுரை. குருவுடன் முரண் படாதோர் முன்னேறுவதில்லை என்பார்கள். //உலகின் சிறந்த காதல் சீதா-ராமனுடையதெனில் ஜென்னி-மார்க்சும் அப்படியே வாழ்ந்தனர்.// ராமன் சிறந்த ஒழுக்கம் , வீரம், தர்மம் மிக்க அரசனாக இருக்கலாம் ஆனால் ஒரு முறை தீக்குளித்து நிரூபித்த பின்னும் சீதைக்கு வனவாசம் தந்தான் அல்லவா ? அல்லது நான் தவறாகப்படித்திருக்கிறேனா ? தெரிந்துகொள்ள ஆவலாய் இருக்கிறேன் அண்ணா, பிழையெனில் பொறுத்தருள்க .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சீதையைத் தீக்குளிக்கச் சொன்னதில் அழுக்கானது இராமனே! ஆனால் இது வால்மீகியின் கருத்தன்றிக் கம்பனின் தமிழல்ல! சீதையை மீட்டு, அரசேற்பதோடு கம்ப ராமாயணம் முடியும். எனவே, நீ கேட்டதும் தவறல்ல, என் கட்டுரையும் பிழையல்ல.

   நீக்கு
 5. எத்துனை செய்திகள்!. சிறப்பான ஆய்வுக் கட்டுரை. பகிர்ந்தமைக்கு நன்றி ஐயா! பாடப் புத்தகத்தில் கம்பராமாயணம் படித்தது சரி, அனால் அவற்றில் சில பாக்கள் இன்றும் என் நினைவில் இருக்கிறது. கம்பனை ஒரு முறையேனும் முழுமையாகப் படிக்க வேண்டும்,
  நன்றி ஐயா!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஒன்பதாம் வகுப்புப் படிக்கும்போது, கம்பராமாயணக் கவிதையில் மயங்கி, நூலகத்தில் தேடி, பி.ஜி.கருத்திருமன் அவர்கள் ஆயிரம் பாடல்களில் தொகுத்த நூலைத் தேடிப் படித்த தேடல் இன்னும் தொடர்கிறது.. தோள் கண்டார் தோளே கண்டார் கதைதான்!

   நீக்கு
 6. வணக்கம் ஐயா
  மிக அழகான ஆழமான கருத்துகளைத் தாங்கிய கட்டுரை. சிறப்பான சிந்தனையால் எழுந்த ஒப்பீடு வியக்க வைக்கிறது. இதற்காக நேரம் எடுத்துக் கொண்டு எழுதியிருப்பீர்கள் என்று நினைக்கிறேன். நானும் மீண்டும் நேரமெடுத்து படித்து உள்வாங்கிக் கொள்ள வேண்டும் என இருக்கிறேன். தமிழுக்கான தங்கள் உழைப்பு வெகுவாக கவர்கிறது. மீண்டும் கட்டுரையை வெளியிட்டமைக்கு நன்றிகள் ஐயா..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சும்மா இல்லை பாண்டியன், ஏற்கெனவே படித்ததுதான் என்றாலும் இந்த உரைக்காகவும், அதைக் கட்டுரையாக்கவும் சுமார் ஒருமாதம் கம்பனுடனே வாழ்ந்தேன்... கம்பன், கம்பராமாயணம் தொடர்பான பல்வேறு நூல்களையும் தேடிப் பிடித்துப் படித்தேன்.. தமிழ்க் கம்பன் தனித்தே நிற்கிறான் என்பது அப்போதுதான் புரிந்தது, வால்மீகியும் கம்பனும் இருவேறு துருவம் என்பதாகப் பட்டது அதுபற்றித் தனியே எழுதவேண்டும்.

   நீக்கு
 7. மிக அழகான அருமையான ஒப்பீடு.
  தவத்திரு குன்றக்குடி அடிகளார் மற்றும் புலவர் கீரன் ஆகியோரது இலக்கியப் பேருரைகளில் ஆழ்ந்து கிடந்த நாட்கள் நினைவுக்கு வருகின்றன.

  மீள்பதிவினுக்கு நன்றி!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அந்தப் பெரும் மேதைகளை நினைவூட்டியிருந்தால் மகிழ்ச்சிதான் அவர்கள் பேரறிஞர்கள். அடிகளாரின் தளம் வேறு, கீரனின் தரம் வேறு. இதில் நமது தளம் வேறு! இதில் இன்னும் வேலையிருக்கிறது, காலமும் களமும் அமையும்போது செய்வேன். தங்கள் கருத்திற்கு நன்றி.

   நீக்கு
 8. அரிய ஒப்பீடு அய்யா.
  பாரதிக்கு வெகு முன்னரே மானுடம் என்ற சொல்லை உபயோகித்தவன் கம்பன் தான் என்று நினைக்கிறேன்.
  பகிர்வுக்கு நன்றி அய்யா

  பதிலளிநீக்கு