பாரதிதாசன் |
இல்லையேல்-
மாற்றுவது மரபு’
-என்பது ஒரு பொதுவிதி. ஒன்றிலிருந்து இன்னொன்று, அதிலிருந்து அடுத்தொன்று என்பது உலக வளர்ச்சியின் அத்தனை துறை – வகையிலுமே பொருந்தக்
கூடியதுதான்.
‘வானொலியின் ‘பேரன்”தானே வண்ணத் கொலைக்காட்சி? தொலைபேசியின் தொடர்ச்சிதானே
தொலை-காண்பேசி?
இவை ஒவ்வொன்றின் ‘உச்சப்பயன்’ இருக்கும்போதே ‘இடைப்பயனுக்கும்“ தேவை இருக்கத்தானே
செய்கிறது?
கட்டைவண்டி-மிதிவண்டி-தொடர்வண்டி-ஈருந்து-மகிழ்வுந்து-
பேருந்து வானூர்தி-கப்பல் ஏவுகணை எனபது தொடரும்போதே
ஒவ்வொன்றும் அந்தந்த நிலையிலேயே தொடரவும் செய்கிறது. குரங்கிலிருந்து மனிதன் தோன்றி
தனித்துவம் கண்டு வளர்ந்துவிட்ட பிறகும், குரங்கினம் முற்றாக அழிந்துவிடாமல் அதுபாட்டுக்குக்
குதித்துத்தானே திரிகிறது! அததற்கும் உள்ள தேவை
தகவமைவு சமூகப் பயன்பாடு கருதி, அவை தொடரத்தான் செய்யும், தொடரவும் வேண்டும்.
தேவைதான் புதிய வரவுகளின் தாய்!
தந்தை போலவே பிள்ளைகள் இருக்கவேண்டியதில்லை அப்பாவின்-தாததா-பாட்டிகள் முதல் அவர்களின் முந்திய
பரம்பரயின் ஜீன்கள் எது எது சேர்ந்து இன்றைய ‘சிறுமி’ வந்திருக்கிறாள் என்பது சுவையான
ஆய்வாகும்! இலக்கியத்துக்கும் இது பொருந்தும் தானே?
எந்த-எந்த கொள்ளுத்தாத்தா எள்ளுப்பாட்டியின்
எந்த-எந்த நல்ல ஜீன்களை நாம் ஏற்றுக் கொள்வது என்பது, இன்று நம் கையில் இல்லை. நாளை
அதுகூட சாத்தியமாகலாம்! ஆனால் நமது பழைய இலக்கியங்களின் எந்த-எந்த நல்ல அம்சங்களை நாம்
ஏற்றுக் நாம்
என்ன செய்யப் போகிறோம்?
உலகின் மிகப் பழைய மொழிகளில் ஒன்றான
நமது தமிழ் மொழியின் மிகப் பழைய இலக்கிய வடிவமான மரபுக்கவிதை, மேற்சொன்ன நியதிக்குப்
புறம்பாக-நமது கவனக் குறைவின் காரணமாவே –அழிந்துவிடும் நிலையில்
உள்ளதை அறிஞர்கள்-எழுத்தாளர்கள் மட்டுமல்ல-வாசிப்பவர்களும் ஆழமாக யோசிக்க வேண்டுகிறேன்!
இன்றைய தமிழில் கவிதை எழுதுவோர்
படிப்போர் ஒரு லட்சம் பேர் எனில் ஆயிரம் பேராவது மரபுக்கவிதை தெரிந்தவராக இருப்பார்களா
என்பதும் சந்தேகமே! அதிலும் மரபுச் செழுமையோடு - புதுமைக் கருத்துகளை, பாரதி சொன்னதுபோல்
“எளிய பதங்கள்,
எளிய நடை எளிதில் அறிந்து கொள்ளக் கூடிய சந்தம், . ஓரிரண்டு வருஷத்து நூல்பழக்கமுள்ள
தமிழ் மக்கள் எல்லோருக்கும் நன்கு பொருள் விளங்குவதுடன் காவியத்துக்கு உள்ள நயங்களும்
குறைவுபடாமல்…” அறிவியல் பார்வையோடு அழகியல்
கோவையோடு எழுதக் கூடியவர் பத்துப் பதினைந்து பேராவது இருப்பார்களா என்பதும் சந்தேகம்தான்.
சங்க இலக்கியத்திலேயே மிகப்பழைய
பா –காலத்தால் முந்திய- செய்யுள்-“மண்திணிந்த நிலனும்…(புறநாநூறு-எண்:2) கி.மு.2 ஆம் நூற்றாண்டு என்கிறார்கள்.
இன்றைய புதுக்கவிதையின் முதல்தொகுதி ‘புதுக்குரல்கள்’ சி.சு.செல்லப்பாவின் எழுத்து பிரசுமாக
1962இல் வெளிவந்தது. இவை இரண்டு
தகவல்களும் சரிதான் எனில்
மூவாயிரம் வருஷத்து மரபுக்கவிதைத்
தாத்தாவை வெறும் 30 வயது புதுக்கவிதைப்பெண்
வெற்றி கண்டு விட்டாள் என்பது காலத்தின் வெற்றி இது சரியான வெற்றிதான்!
தேவையான வெற்றிதான்! எனினும் தோற்றவர்களை முற்றிலுமாக ஒழித்துவிடத்தான் வேண்டும?
தோல்வியுற்ற அரசனின் மகளை வெற்றிபெற்ற
இளவரசன் மணந்து கொள்வதுபோல(?) மரபுக் கவிதையின் நல்ல
அம்சங்களை புதுக்கவிஞர்கள்- இன்றைய புதிய மரபுகளுக்கேற்ப ஏற்றுக்கொள்ள லாகாதா? ஆதில் சற்றேனும் கவனம்
செலுத்தக் கூடாதா? என்பதே எனது கவலை
தோய்ந்த வேண்டுகோள்!
‘ஒரு நாளில் எட்டுத்தேர்
செய்யக்கூடிய கைதேர்ந்த தச்சுத் தொழிலாளர் ஒருவர், ஒரு மாதம் முயன்று செய்த ஒரே ஒரு அழகான தேர்ச்சக்கரம்போல-(புறநானுறு
87 எழுதியவர் ஒளவையார்) நுணுகி நணுகி அர்த்தமும் அழகும் செறியச்செறிய எழுதவேண்டு
மெனில் எவ்வளவு முயற்சியும் பயிற்சியும் தேவை! எண்ணிப் பாருங்கள்!
இவவளவு பயிற்சியும் முயற்சியும்
இன்றைய கவிஞர்கள் எடுத்துக்கொள்கிறார்களா? என யோசிக்கவேண்டும்.
திணை, துறை, அணி, இறைச்சி, தொனிப்பொருள்
வைத்து எழுதவேண்டும் என்று கூறவில்லை அவையும் வைத்து உரிப்பொருள் கருப்பொருள் மாறாக
பாக்களை பாரதியார் வரை எழுத முடிந்திருக்கிறது என்பதை நாம் ஏன்
கவனிக்கவில்லை? (சொல்ல வல்லாயோ கிளியே – பாரதி)
உலக மொழிகளிலேயே வாழ்க்கைக்கு இலக்கணம் வகுத்து பொருள் இலக்கணம்
படைத்த மொழி தமிழ்தான் என்று வாய்கிழியப் பேசுகிறோம்!
அந்தப் பொருள் இலக்கண வழியில் இன்று அக-புறக் கவிதைகள் -கடந்த 50ஆண்டாக- ஒன்றேனும் எழுதப்பட்டிருக்கிறதா
என்று கேட்க விரும்புகிறேன்.
அரிமாப் பாவலர் துரைமாணிக்கம் (எ) பாவலர் பெருஞ்சித்திரனார் |
பெருஞ்சித்திரனார் ஒருவர் இருந்து
எழுதிக் கொண்டிருந்தார்-அவரும் அவரைத் தொடந்து எழுதியவர்களும் தனித்தமிழில் எழுதிப்
போயினர் கட்டளைக் கலித்துறை எனும் பாவகை அனேகமாக அழிந்தே போயிற்று, வெண்பாவைக் கொஞ்சப்பேர் எழுதுகிறார்கள் (ஆதிபராசக்தி திரைப் படத்தில் கண்ணதாசன்
பயன்படுத்திய அபிராமி அந்தாதியின் முதல் பாடலான ‘மணியே மணியின் ஒளியே’ கட்டளைக் கலித்துறைக்குப்
பிரபலமான எடுத்துக் காட்டாகும்)
பெருஞ்சித்திரனாரின் மகபுகு வஞ்சி அளவிற்கு, ஐயையும் பாரதிதாசனின்
மணிமேகலை வெண்பாவும், முடியரசனின் பூங்கொடியும் இன்றைய நடைமுறை வாழ்க்கைக்கு ஏற்கமுடியாதவை.
காரைக்குடி ‘அனிச்சஅடி’ ஆ.பழனியின் “கார்ல் மார்க்ஸ்
காவியம்“ கூட அருமையான நூல்தான். ஆனால் தேம்பாவணி போல
ரட்சணிய யாத்திரிகம் போல இதுவும் பழந்தமிழ்போல் எழுத முடியும் என்று காட்டியதன்றி
வேறு சமூக விளைவு இந்தக் க விதைகளால் என்ன நேர்ந்தது?
பழந்தமிழின் நல்ல அம்சங்களை அழகியல்-வடிவங்களைக்கூட
(அப்படியே அல்ல பாரதி போல சிந்து கண்ணியாக்கி) புதிய விடியல்களைச் சொல்ல நாம் என்ன
முயற்சியும் பயிற்சியும் எடுத் திருக்கிறோம்? --மறைவாக நமக்குள்ளே பழங்கதை சொல்வதன்றி?
மரபுக் கவிதை என்றால் எண்சீர்
அறுசீர்விருத்தம்தான் என்று பெரும்பான்மையோர் நினைக்குமளவுக்கு பழந்தமிழின் நல்ல இலக்கிய
அம்சங்கள் மறைந்தே போய்விட்டனவே! இந்த விருத்தங்களை வளர்த்துக் காத்த பெருமையும் கவியரங்கங்களுக்கு
உண்டு. இவற்றைத் தாண்டி மரபுக்கவிதை இல்லையோ எனும் உணர்வை வளர்த்த பெருமையும் சில கவியரங்கங்களுக்கே
உண்டு! திராவிடக் கட்சிகளின் தாக்கம் இது.
கடுகைத் துளைத்து ஏழ்கடலைக் புகட்டி…
மரபுக் கவிதையின் மிகச்
சிறந்த அம்சங்கள் இரண்டு
1.எதுகை மோனையில் இரண்டடி
மடக்கு
2.உணர்ச்சிக் கேற்ற ஒசை மிடுக்கு இதில் பலமும், பலவீனமும்
பெரும்பாலும் நான்கு அடி எனும்
கட்டுக்கோப்பால் இரண்டடியில் முடிந்துவிடக்கூடிய கருப்பொருள் இழுபடுகிறது. மூன்றரில் முடியக்கூடிய பாவகை உண்டு என்பது வேறு
– பெருஞ்சித்திரனாரின் ‘மகபுகு வஞ்சி’ எனும் பருவப் பெண்களின் வாழ்வியல்
மாற்றம் குறித்த அற்புதமான வஞ்சிப்பாக்கள். இதிலேயே ஆழ அமுக்கி முகந்து சுவையும் பொருமை இணைய வைத்த பெருமை தமிழின் பழம்புலவர் பலருக்கு
உண்டே!
எத்தனை வகைகள் தமிழ்க்கவிதையில்
இருந்தன!
அவை எல்லாம் இப்போது பழங்கதை தானா??
ஆசிரியப்பா-
‘நுனிப்புல் மேய்ந்தால்
எளிதாய்த் தெரியும்
அணுகிப் பார்த்தால் ஆழம் புரியும்-
ஆற்றல் மிகுந்த ஆசிரியப்பாவில் புகழ்பெற்ற கவிதைகள் குறுந்தொகை நற்றிணை அக,புறநானூறுகள்
சிலப்பதிகாரம் மற்றும் பாரதிதாசனின் குடும்பவிளக்கு, இருண்டவீடு.
ஆசிரியப்பாவிலேயே, ஈற்றயலடி முச்சீராய் ஏனைய அடிகள் நாற்சீராய்க் கொண்ட நேரிசை ஆசிரியப்பா, இடையிடையே சீர்கள் கூடி-குறையக் கூடிய இணைக்குறள் ஆசிரியப்பா, நாலடியிலேயே நிற்கும் நிலைமண்டில ஆசிரியப்பா, எந்த அடியையும் எந்த அடியாகவும் மாற்றிக்கொள்ளக் கூடிய அடிமறிமண்டில ஆசிரிப்பா எல்லாம் எங்கே?!
ஆசிரியப்பாவிலேயே, ஈற்றயலடி முச்சீராய் ஏனைய அடிகள் நாற்சீராய்க் கொண்ட நேரிசை ஆசிரியப்பா, இடையிடையே சீர்கள் கூடி-குறையக் கூடிய இணைக்குறள் ஆசிரியப்பா, நாலடியிலேயே நிற்கும் நிலைமண்டில ஆசிரியப்பா, எந்த அடியையும் எந்த அடியாகவும் மாற்றிக்கொள்ளக் கூடிய அடிமறிமண்டில ஆசிரிப்பா எல்லாம் எங்கே?!
வெண்பா:-
“புலவர்க்கு வெண்பாப் புலியென்று
கூறி
பலரையும் இன்று பயமுறுத்தும் வெண்பாவில்
இன்றளவும் நிற்கும் இனிய கவிதைகளைக்
கொண்டிருக்கும் முன்னோர் கொடை - எனும் நூல்கள்
திருக்குறள், நாலடியார்
உள்ளிட்ட கீழ்க்கணக்கு நூல்கள், நளவெண்பா முத்தொள்ளாயிரம்,
பாரதியின் குயில்பாட்டு, (சுஜாதா வெண்பா எழுத ஆசைப்பட்டு அவ்வப்போது
தளைப்பிழைகளோடு எழுதியிருக்கிறார்)
வெண்பாவிலேயே இரண்டடியில் நிற்கக் கூடிய குறள்வெண்பா, மூன்றடியில் நிற்கக் கூடிய சிந்தியல் வெண்பா, நாலடியில் வரக்கூடிய நேரிசை மற்றும் இன்னிசை வெண்பா, பன்னிரண்டடி வரக்கூடிய பஃறொடை வெண்பா, இந்தப் பட்டியலில் சேராவிட்டாலும் இணைந்து நிற்கும் கலிவெண்பா இவையெல்லாம் பாடப்புத்தகத்தில் மட்டும்தானா?
வெண்பாவிலேயே இரண்டடியில் நிற்கக் கூடிய குறள்வெண்பா, மூன்றடியில் நிற்கக் கூடிய சிந்தியல் வெண்பா, நாலடியில் வரக்கூடிய நேரிசை மற்றும் இன்னிசை வெண்பா, பன்னிரண்டடி வரக்கூடிய பஃறொடை வெண்பா, இந்தப் பட்டியலில் சேராவிட்டாலும் இணைந்து நிற்கும் கலிவெண்பா இவையெல்லாம் பாடப்புத்தகத்தில் மட்டும்தானா?
கட்டளைக் கலித்துறை-
‘கருத்தையும் எண்ணிக் கவலைப்
படாத கவிஞரிடை எழுத்தையும் எண்ணி எழுதிடச் சொல்லும்
இலக்கணமே’ -- கட்டளைக் கலித்துறை.
இந்தப் பாவகை இலக்கணத்தைப் பாடிய நூல், காரிகை. அபிராமி அந்தாதி இந்த வகையில் புகழ்பெற்றது. கோவை இலக்கியம் இதில் அமையும்.
விருத்தம்:-
‘இன்றளவும் புகழோடும் இருக்கும்
பாக்கள்
எண்சீராய் அறுசீராய் வரும் இரண்டே
என்றாலும் இதிலேயே தொண்ணூற்றாறுவகை
சந்த வேறுபாடுகளைப் பாடிப் புகழ்பெற்றான் கம்பன். முந்திய சிந்தாமணி, தேவார-திருவாசகப் பதிகங்களோடு, பிந்திய பெரியபுராணப் பாக்களில் பெரும்பாலும் விருத்தங்களே
இசையோடு பாடத்தக்கனவாய் உள்ளன. பாரதிதாசனின் பாண்டியன் பரிசு, தமிழியக்கம்,
அழகின் சிரிப்பு நூல்களும் விருத்த வகைகளே! பிள்ளைத்தமிழ்ச் சிற்றிலக்கியத்தில்
விருத்த வகைகளின் பெருகிய அழகைப் பருகிப் பார்ககலாம். (பதினான்கு சீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் இப்போது யாருமே எழுதுவதில்லை!)
மற்றும்-
மேற்கூறிய வகைகளில் மட்டுமல்லாமல் சிந்து கண்ணி வகையில் நவபாரதக்
கதையைக் கருவாக்கி பழம்பாரதக் கதையை மறு-உருவாக்கியவன் பாரதி!
அவனது பாஞ்சாலி சபதமே அதற்குச்
சான்று!
இவையெல்லாம் இன்னும் கிடைக்கின்றன.
ஆனால் இவையெல்லாம் கடந்தகாலக் க(வி)தைகள்! இந்தத் தங்க வைர வெள்ளி நிலக்கரிச் சுரங்கங்களிலிருந்து
கிடைக்கும் கனிமவகைகளை இன்றைக்கு ஏற்ற (ஃபேஷன்) நகையாக்கி அணியத்தரும் அருங்கவிஞர்கள்
இப்போது யாரும் இல்லையா? ஏன்?
புதுக்கவிஞ்ர்களின் மரபுத்; தீண்டாமையால் -அல்லது அறியாமையால்-
நமதுமரபுக் கருவூலங்கள் மண்மூடிப் போகவேண்டியது தானா? கண்ணதாசனுக்குப் பிறகு
இவற்றைப் பயன்படுத்திப்-புகழ்பெற்ற -கவிஞர்கள் யாரும் இல்லையா?!
அவ்வளவுதானா?
மரபுக் கவிதை எனும் மகா நதி
வற்றிவிட்டதா?
நமது குறுந்தொகையும் புறநானூறும்
திருக்குறளும் சிலப்பதிகாரமும் கம்பனின் தொண்ணூற்றாறு வகை விருத்தங்களும் ஆழ்வார்-நாயன்;மார் பாடல்களும் காலத்தை
வென்று நிற்கும் சிலநூறு சித்தர் பாடல்களும் பாரதியின் சிந்து கண்ணியும் பாரதிதாசனின்
அழகின் சிரிப்பும் ஆகிய புகழ்பெற்ற கவிதைகள்
அனைத்துமே உருவ அழமும் உள்ளடக்கச் சிறப்பையும் சரிவிகிதத்தில் கொண்டிருந்தன என்பதுதானே
அவற்றின் இறவாப் புகழின் இரகசியம்!
மற்றெந்த இலக்கிய வகையைக் காட்டிலும்
மொழியின் பண்பாட்டு மரபுகளை அதிமாகக் கொண்டிருப்பது கவிதைதான், இதனாலேயே அவசர வாழ்வியலில்
தேவையற்றுப் போகப் பெரிதும் வாய்ப்புள்ளதும் மரபுக்கவிதைதான்! ‘காவியப் படுதாக்களை விடவும்,
புதுக்கவிதைக் கைக்குட்டைகளே’ அதிகம் தேவைப்படுகின்றன
எனும் வைரமுத்துவின் கருத்தைப் புறந்தள்ளிவிட முடியாது.
தமிழில் இந்த மரபுத்தொடர்ச்சியைப்
புரிந்தவர்கள் புதுக்கவிதை எழுதியபோது பெருவெற்றி பெற்றனர். மீரா, இன்குலாப், சிற்பி, மேத்தா தமிழன்பன் என வெடித்துக் கிளம்பிய
வானம்பாடிகளின் வெற்றி, நவீன இலக்கியத்தின் வெற்றியாகவே கொண்டாடப்பட்டது. மரபின் தொடர்ச்சியாக
புதுக்கவிதைக்குப் புகழ்சேர்த்த வானம்பாடிக் கவிஞர்கள் இந்தப் பரிணாம வளர்ச்சியை உணர்ந்து
பாடியவர்களே என்பதைக் கவனிக்கவேண்டும். அப்துல் ரகுமான் வானம்பாடிகளுக்குப் பின்னால்,
இந்த வரிசையில் சேர்ந்தார். வைரமுத்து தனியாக வந்து இணைந்தார். இவர்கள் அனைவரும் வெற்றியும்
பெற்றனர்.
நேரடியாகவே புதுக்கவிதை எழுத்த
தொடங்கி, தனக்கென ஒரு பாணியை வைத்துக்
கொண்ட கல்யாண்ஜி, கந்தர்வன், நெல்லைஜெயந்தா, அழகிய பெரியவன், இலக்குமிகுமாரன் ஞானதிரவியம், எச்..ஜி.ரசூல், நா.முத்துக்குமார்,
யுகபாரதி, முதலான கவிஞர்களுக்கும் மரபின்செழுமை
கைகொடுத்திருப்பதை இவர்களின் வெற்றி பெற்ற
கவிதைகளிலேயே காணமுடியும்.
இவர்கள் தவிர-
புதுக்கவிதை எழுதமாட்டேன் எனவரும்
ஒரு பட்டியலில் பாரதிதாசன் முதற்கொண்டு, இன்றைய குலோத்துங்கன் (வா.செ.குழந்தைசாமி)
முதலிய சிலரும் உண்டு.
ஆனால் --
உருவம் அல்லது உள்ளடக்கம் என இரண்டில்
ஒன்றினால் மட்டுமே சிறிதுகாலம் பேசப்படும் கவிதையைக் காட்டிலும் இரண்டிலும் இணைந்துவரும்
கவிதைகளே காலத்தை வென்று நிற்கும் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.
எல்லாவகை உணர்ச்சிகளையும் ஒரே
ராகத்தில்
சொல்லிவிட முடியாது.
எல்லாவகை ராகத்திலும் ஒரே உணர்ச்சியைச்
சொல்லிவிடவும் இயலாது.
மோசமான உள்ளடக்கம்
அழகான
உருவத்தால் வெற்றிபெறுவது கூடாது
மோசமான உருவத்தில்
அருமையான
உள்ளடக்கம் வெற்றிபெறுவது முடியாது.
“நாலரைக்கம்பன்“ என்று பேசப்படும்
மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார் அவர்களின் சுமார் 45,000 பாடல்களில் (இரண்டு வட்சம்
வரிகள்?)
ஒருபாடல் ஒருவரியேனும் இன்றைய சாதாரணப் படிப்புள்ள தமிழன் நெஞ்சில் தடம் பதித்திருக்கிறதா?
மாறாக-
ஒரு கவிதைத் தொகுப்பும் போடாத, வேறு கவிதையேதும் எழுதாத ஒருவர் எழுதிய ஒரே ஒரு
குட்டியூண்டுக் கவிதை,
தமிழ் இலக்கிய வரலாற்றில் தனீ
இடம் பிடித்துவிட்டதே!
விடியவே இல்லை“என்னும் அரசியல் விமர்சனக் கவிதைதான் அது!
-எழுதியவர் சேலம் அரங்கநாதன்
என்பவர். இவர் வேறு எதுவும் எழுதியதாகத் தெரியவில்லை அல்லது புகழ்பெறவில்லை.
ஆனால் இந்த இரண்டுவரிகூட இந்தியா
சுதந்திரம் பெற்ற15-08-1947 அன்று இரவே பாரதிதாசன்
எழுதிய-
‘இரவில் வாங்கிய இந்திய
விடுதலை
என்று விடியுமோ யார் அறிகுவரே’ எனும் வரிகளின் சுருக்கம்தான்
என்பது நிறையப் பேருக்குத்தெரியுமா என்பது எனக்குத் தெரியாது.
என் வேண்டு கோள் எல்லாம் வா.செ.குழந்தைசாமி
போன்ற அறிவியல் அறிந்த தமிழறிஞர்கள் புதுக்கவிதை எழுத மாட்டேன் எழுதப் பிடிவாதமாக இருப்பபதைவிடவும்
பாரதிபோல-எளிய மரபுக் கூறுகளுடன் கூடிய நெடுங்கவிதைகளை-எழுத வேண்டும் என்பதுடன் வெற்றி
பெற்ற புதுக்கவிஞர்கள் தமிழின் பழைய மரபு வடிவங்களை மறத்தமிழர்கள் மறந்துவிடாமலிருக்க
‘ஏதாவது செய்ய முன்வரவேண்டும் என்பதே.
தமிழின் முன்னோடிக் கவிஞர்கள்
பலரும் அவரவரையும் பாதித்த அவருக்கு முன்னோடிக் கவிஞராகத் தோன்றியவர்களில ;-நல்ல அம்சங்களை தமக்குத்
தேவையான இடங்களில் பயன்படுத்தியிருப்பதைக் கவனிக்கவேண்டும்.
பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா…எனும் தேவாரச் சந்தமே
வெய்யோன் ஒளி தன்மேனியின்’-என்று கம்பனைப் பாடத் தூண்டியது
இதே சந்தம்தான் பாரதிதாசனை ‘கொலை வாளினை எடடாமிகு கொடியோர்
செயல் அறவே’என்று குமுறவைத்தது என்பது மரபின்
- மறுபதிப்புகள் அல்லவா?
சுந்தரர் கும்பிட்டார் அதே சந்தத்தில்
கம்பன் குழைந்தான்! அதே விசையில் பாரதிதாசன் குமுறுகிறானே! கடந்த நூற்றாண்டின் பாதியோடு இரண்டாயிரம் வருஷத்து
மரபுக்கவிதையின்
உணர்ச்சிக் கொந்தளிப்புகள் ஒரே
வகையில் அடங்கிப்போய்விட்டனவா?
பட்டுக்கோட்டையார் |
கால காலமாகப் பொங்கிப் பிரவகித்து
வந்த, பலநூற்றாண்டுக் காலமாக.
தொடர்ந்து நீந்தி மகிழ்ந்து வந்த, மரபுக்கவிதை எனும் மகாநதியை மறுத்துவிட்டு
இந்த நம் தலைமுறை மட்டும் குளியலறையில் சிறு குவளையிலேயே குளித்துவிட வேண்டியதானா?
இருப்பவர்கள் செயற்கை நீச்சல்
குளத்தை மாடியிலேயே ஏற்படுத்திவிட முடிகிறபோது மகாநதியின் கரையில் நின்று கொண்டு மறுகி
மறுகி விழிப்பது நீச்சல் தெரியாததால் தானே?
எனவே கவிஞர்களே –
நவீன யுத்திகளோடு மரபுக்கவிதை
எனும் மகாநதியில் இறங்கி மகிழ,
நமது பழந்தமிழில் உள்ள நல்ல அம்சங்களை எடுத்துக்கொள்ள மறுத்துவிடாதீர்கள்
என்றுதான் கேட்டுக் கொள்கிறேன்.
தென்னன்
வாழ்க, வாழ்க! என்று சென்று பந்த டித்துமே;
தேவ ரார மார்பன் வாழ்க! என்று, பந்த டித்துமே.- இளங்கோவடிகளும்
‘உறங்கு கின்ற கும்ப கன்ன
உங்கள் மாய வாழ்வெலாம்…- -- கம்பனும்
நட்ட கல்லை தெய்வ மென்று
நாலு புட்பம் சாத்தியே…--- சித்தர் சிவவாக்கியரும்
அச்ச மில்லை அச்ச மில்லை
அச்ச மென்ப தில்லையே..- -- பாரதியும்
நடவு செய்த தோழர் கூலி
நால ணாவை ஏற்பதும் …-- பாரதிதாசனும்
கத்தி யின்றி ரத்த மின்றி
யுத்தமொன்று வருகுது…--- நாமக்கல்லாரும்
நெஞ்சினைப் பிளந்த போதும்
நீதி கேட்க அஞ்சிடோம் -- பட்டுக்கோட்டையும்
பட்டினிக் கொடுஞ்சிறைக்குள்
பதறுகின்ற மனிதர்காள் -- சர்வதேச
கீதமும் நம் பரம்பரைச் சொத்து!
இதை மறந்துவிட வேண்டாம்!
மகாநதிகளை
மறுத்துவிட்டு, குளியலறையில்
குவளையில் குளிக்க வேண்டாம் என்றுதான் நானும்
எச்ச ரிக்கை எச்ச ரிக்கை
எச்ச ரிக்கை செய்கிறேன்!
-----------------------------------------------------------------------------------------------------------------------------
கட்டுரை ஆசிரியரின் அலைபேசி - 94431 93293
பயிற்சியும் முயற்சியும் எடுத்துக் கொள்ளும் கவிஞர்கள் சிலர் தான் உள்ளனர்...
பதிலளிநீக்குகுடிக்கத் தண்ணீர் கூட தட்டுப்பாடாக இருக்கும் போது, எல்லா நதியும் இனி வற்றித் தான் போகும்...!
இல்லை வலைச்சித்தரே! உயிரினம் தன்னைத் தானே புதுப்பித்துக் கொண்டு, மேலும் மேலும் உயிரினங்கள் தோன்றிப் பரிணாம வளர்ச்சியடையவும் உதவுகின்றனவே அந்த விஞ்ஞானம் நம் தமிழ்க்கவிதையிலும் செயல்படும் என்று நம்புகிறேன். அப்புறம் ஏன் இப்படி ஒரு கேள்வி என்பீராகில், “தானா எல்லாம் மாறும் என்பது பழைய பொய்“ அல்லவா?
நீக்குஒவ்வொரு கேள்வியும் மனசாட்சியை தட்டி எழுப்புகிறது?
பதிலளிநீக்குபதிவின் பல இடங்களில் அந்தந்த சந்தத்தை அல்லது அமைப்பை பயன்படுத்தியிருகிறீர்கள் என புரிகிறது. கத்துக்குட்டி தான் என்றாலும் இனியாவது கற்றுக்கொள்ளமுயல்கிறேன் அண்ணா!
தமிழ்க்கவிதையின் ஆழ அகலத்தின் விசுவரூபத்தைக் காட்டியது, பயமுறுத்த அல்ல, உன்போலும் இன்றைய கவிதையில் வெளுத்து வாங்கும் இளைய கவிகள் இன்னும் இன்னும் பரிணாம வளர்ச்சியில் பயணிக்க வேண்டும் என்னும் ஆவலில்தான்...
நீக்குபழந்தமிழில் உள்ள நல்ல அம்சங்களை எடுத்துக்கொள்ள
பதிலளிநீக்குஎன்னதடை நமக்கு? பயில்வோம் ..பயன்படுத்துவோம்..!
வேறுவேறு வண்ணப் பூக்கள் சேர்ந்த வாச மாலை நாங்கள்,
பதிலளிநீக்குவண்ணம் வேறு வேறென்றாலும் வாசம் நெஞ்சில் ஒன்றுதான்...
அழமான சிந்தனையில் விளைந்த அற்புதமான
பதிலளிநீக்குஇன்றைய சூழலுக்கு மிக மிக அவசியமான
கருத்துக்களைத் தாங்கிய அருமையான பதிவு
இலக்கணம் அறிந்து அதை மீறி புதுக்கவிதைப்
படைத்தவர்களின் படைப்புக்கும்
இலக்கணம் அறியாது அதற்குப் பயந்து
புதுக்கவிதை படைத்தவர்களுக்குமான வித்தியாசத்தைப்
புரிந்து கொண்டாலே மரபின் அவசியம்
நிச்சயம் புரியும்
ஆதங்கத்தில் பிறந்த அற்புதமான
பகிர்வுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
ஐயா தங்களின் மனம்நிறைந்த பாராட்டுக்கு நன்றி. ஆனால் ஐயா, எனக்கொரு தயக்கம் இருந்துகொண்டே இருந்தது, இன்னும்கூட அந்தத் தயக்கம் விலகிவிட்டது என்று சொல்லமுடியவில்லை. அஃது என்ன வெனில், கவிதை எழுதுவோரைப் பார்த்து, “இந்த வடிவத்தில் எழுது” என்று யாரும் கட்டளை இட முடியாது. ஆனால், “இப்படியும் நல்லநல்ல வடிவங்கள் தமிழில் இருக்கின்றன தாயி! முயற்சிசெய்யேன்..“ என்று வேண்டுகோள்விடத்தான் முடியும். இந்த வேண்டுகோள் தொனி என் கட்டுரையில் வந்துவிட்டதா, அல்லது “நீயெல்லாம் எழுதுறது கவிதையா” எனும் அதிகார தொனி வந்துவிடுமோ என்பதுதான் அந்தத் தயக்கம். சுவை, வண்ணங்கள் அவரவர் விருப்பம்தானே? ஆனால் “வெரைட்டி“ இருக்கிறத தெரியாமலே கிடைத்ததைப் பயன்படுத்துவோர்தான் என் இலக்கு. சரியாகவே வந்திருக்கிறதென்று தங்களைப் போன்றவர்கள் சொற்களால் புரிந்துகொள்கிறேன். சரிதானா அய்யா? மீண்டும் நன்றி.
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குஐயா.
உண்மைதான் ஐயா....
வளர்ந்து வரும் இளம் கவிஞர்களுக்கு அறிவுரை சொல்லும் பதிவு.. பகிர்வுக்கு வாழ்த்துக்கள்.....
நன்றி
அன்புடன்
ரூபன்
அய்யோ ரூபன்... அறிவுரையெல்லாம் இல்லை. தாத்தா சொத்து எவ்வளவு இருக்குன்னு தெரியாத பேரப்பிள்ளைகளுக்கு “பார் இவ்வளவு இருக்கு“ன்னு சொல்ற கணக்குப்பிள்ளை வேலைதான் நான் செய்கிறேன். மீரா தனது அன்னம் பதிப்பகத்தின் வழி வெளியிட்ட எனது கவிதைத் தொகுப்பு “புதிய மரபுகள்” என்பது. மரபை மறக்கும் புதுமைக்கு வலிமை இல்லை, புதுமையை மறுக்கும் மரபுக்குப் பயனில்லை என்பதே என் ஆழ்ந்த கருத்து. சரிதானே ரூபன்? நன்றி
நீக்குபழம்பெருமையை அலசி புதுமை படைப்பவனே கவிஞன். இப்போதெல்லாம் மரபுக்கவிதை புனைய ஆளிருந்தும் செவிசாய்ப்போர் அதிகம் இல்லை என்ற நிலைக்கு வந்துவிட்டது.
பதிலளிநீக்குஉங்கள் கட்டுரை அருமை ஐயா!
நன்றி...
உண்மைதான் அய்யா, மரபை எழுதுவோர் பாரதியை ஆழ்ந்து கற்று எழுதினால் வெற்றிபெறலாம். மரபு என்பதாலேயே அது புரியாமல் இருக்க வேண்டியதில்லை. “வகையுளி“யால் வாசிப்போரைத் துன்புறுததுவோர் மரபுக்கவிதையை எழுதாமல் இருப்பதே நல்லது. பாரதியிடம் வகையுளி காண்பது அரிது. பாரதிதாசன் புதுசு பக்கமே வரவில்லை! இப்போது எழுதுவோர் வகையுளி இன்றி, பாரதியைத் தாண்டி சிந்து கண்ணி போல எளிய வகைகளிலும் எழுதலாமே? அதற்கான பயிற்சி? “எளியபதம் எளிய சொற்கள், பொதுமக்கள் விரும்பக்கூடிய மெட்டு“ பாரதியின் கவிதைபற்றிய பிரகடனம் பாருங்கள். இப்படி எழுதினால் வரவேற்புக்கு ஒன்றும் அட்டியில்லை! அதுதான் என் ஆதங்கம். தங்கள் கருத்திற்கு நன்றி அய்யா.
நீக்குதங்கள் ஆதங்கம் நியாயமானதே புரிகிறது, குற்ற உணர்வு மேலோங்கி நிற்கிறது. இருந்தாலும் என்செய்வேன் முடியுமா தெரியவில்லை முயற்சிக்கிறேன். அது பெருங் கடல் ஆழம் தெரியாமல் கால் வைத்து விட்டேனோ என்றே எண்ணத் தோன்றுகிறது.நிச்சயமாக நாமகள் துணை இன்றி இவை நடக்காது.
பதிலளிநீக்குநன்றி சகோதரா இத்தனை விபரங்களை நமக்காக தந்தமைக்கு. வாழ்த்துக்கள்! உங்கள் விருப்பம் நிறைவேறட்டும் .....!
“குற்ற உணர்வு மேலோங்கி நிற்கிறது“ மன்னிக்க வேண்டும் சகோதரீ! இதற்குத்தான் நான் அஞ்சினேன். தங்களின் கவிதைகள் நல்ல ஓசை நயத்துடனே இருக்கின்றன. அடுத்தடுத்த அடிகள் ஒரே ஓசையில் அமைந்தால் அதன் அழகே கவிதை நயம்! கவிதை இலக்கணத்தைக் கற்றுக்கொள்ளலாம், நயத்தை எங்குபோய்க் கற்பது? இரண்டும் இணைந்தால்... அதற்கான முயற்சியும் இருந்தால்... கல்வி கரையில... கவிதைக் கல்வி..? நீங்கள் சொல்வது போல அது கடல்தான், எனில் கடலில் இறங்காமல் நீந்திக் கடக்க முடியாது, யாப்பு ஓசை அறிவு எனும் கப்பலைச் செலுத்தப் பயிற்சி எடுத்தால் இந்துமாக் கடலும் இரண்டடி ஆழந்தான். உங்களைப் போலும் இளைய நல்லகவிதை கைவரப்பெற்றவர்கள் அதையும் கருத்திற் கொள்ள வேண்டும் என்பதே என் வேண்டுகோள் சகோதரீ
நீக்குநெடுநாட்களாக என்னில் இருக்கும் ஆதங்கமும் இது தான் அண்ணா. மரபு வழியில் எழுத ஆரம்பித்தால் ஏன் இப்படி இந்த நடைமுறைக்கு வாங்க ஹைக்கூ வடிவில் எழுதுங்க.. இப்படி எழுத்திலும் பழமையை அழிக்கும் பண்பு உருவாகும் நேரத்தில் இந்த பகிர்வு அவசியம் தேவையானது தான் அண்ணா. சரியான சாட்டையடி இனியாவது சிந்தித்து மரபின் வழி போற்றுவோம். மழலைகளுக்கும் கற்பிப்போம். சிந்திக்க வைக்கும் சிறப்பானதொரு பகிர்வு அண்ணா. உங்கள் ஆதங்கம் ஆனந்தமாகும் படி இனி வரும் தலைமுறையினர் மரபைக் கற்று கவிதைகள் இயற்றுவதை நாம் காண வேண்டும்.
பதிலளிநீக்குஉன்போலும் இளையோரிடம் எனக்கு மிகுந்த நம்பிக்கை உண்டு சசி! மரபு என்றாலே எண்சீரும் அறுசீரும்தான் என்று ஆக்கிவிட்ட என்போலும் மூத்தவரிடம்தான் எனக்கு ஆதங்கம். அதற்காக அதை உள்ளிட்ட பிற மரபு வடிவங்களோ புதுக்கவிதையோ, ஐக்கூவோ மட்டமானது என்று பொருளல்ல. பாரதிதாசன் புதுக்கவிதையே எழுதவில்லை, புகழ்பெற்ற கவிதைவிமர்சகர் பாலா, தன் கவிதைத் தொகுப்பின் முன்னுரையில், “இதில் ஐக்கூ இல்லை“ என்று மகிழ்வதிலும் எனக்கு உடன்பாடில்லை! கவிதை எல்லா வகையான புதுமையிலும் வர்ணஜாலத்தை நிகழ்த்த வேண்டும். அது வேறு எந்த மொழிக்கும் இல்லாத தமிழின் பரம்பரை மரபுப் பெருமை! (இது ஜாதிப் பெருமை போல ஆகிவிடக் கூடாது எனும் எச்சரிக்கையோடு...) வர்ணங்களை அறிந்த ஞானச் செருக்குடன், நவீன கவிதை புலியெனப் புறப்பட்டுப் பாய்ந்து வரவேண்டும் என்பதே என் எதிர்பார்ப்பு. எனது முந்திய கருத்தில் சொன்னது போல, கவிதை இலக்கணம் முக்கியமல்ல, கவிதைநயம் + ஓசை மரபு இரண்டும் இணையும் “புதிய பாரதிகள்“தான் தமிழின் பழம்புகழை மீட்கப் போகிறார்கள். உன் போன்றவர்கள் அந்தப் பட்டியலில் இடம்பெற வேண்டும் என்பதே என் விருப்பம். சரிதானே சசி?
நீக்குவணக்கம் ஐயா
பதிலளிநீக்குதங்கள் வேண்டுகோள் இன்றைய தலைமுறைக்கு மிகவும் அவசியமானது. மரபுக்கவிதையின் வீரியத்தையும் அதன் அவசியத்தையும் ஒரு பதிவில் உள்ளடக்கியது உங்கள் திறமை. மிக நீண்ட மரபுக்கவிதையின் வரலாற்றை வேண்டிய எடுத்துக்காட்டுகளுடன் எங்களுக்கு உதவும் விதமாக வடிவமைத்துத் தந்ததமைக்கு அன்பான நன்றிகள் ஐயா. அவசியம் இவை எல்லாம் மனதில் வைத்து இனி கவிதை எழுத முயல வேண்டும் எனும் ஆவல் பிறந்திருக்கிறது. அதற்கான பயிற்சியும் முயற்சியும் வேண்டும் அவசியம் செய்கிறேன். நல்லதொரு பயனுள்ள பகிர்வுக்கு நன்றிகள் ஐயா.
அம்மா தன் குழந்தையை இடுப்பில் ஏந்திச் செல்வாள். அப்பன்? தன் தோளில் ஏற்றித் தன்னால் காணமுடியாத உலகத்தையும் காட்டுவான். நான் ஒரு தந்தையைப் போல என்னாலும் காண இயலா உலகத்தை என் குழந்தைகளுக்குக் காட்ட விழைகிறேன்.
நீக்கு“தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது” (குறள்- 68) நன்றி மகனே!
மனதில் தோன்றியதை எழுதிக்கொண்டிருக்கும் என் போன்றோருக்கு ஒரு சாட்டையடி ப்ப்ப்பா.....நன்றி ஐயா.
பதிலளிநீக்குஇல்லை இல்லை, மன்னிக்கவும் மாலதி!
நீக்குமுயற்சியே செய்யாமல் இருப்பவர்களை விட, தவறாகவே முடிந்தாலும் அந்த முயற்சியைச் செய்பவர்கள்தான் மேலானவர்கள் என்பது என் கருத்து. உங்கள் முயற்சி தவறல்ல, என் கட்டுரையில அப்படியேதும் இருந்து உங்களைக் காயப்படுத்தியிருந்தால் அதற்காக நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். பாட்டி இருக்கும் வீட்டில் எதையாவது சொல்லிக்கொண்டுதான் இருப்பார். பாட்டி இல்லாதவர்க்குப் பிரச்சினை இல்லை. நாம்தான் பாட்டியின் அனுபவத்தை மட்டும் எடுத்துக் கொண்டு, இன்றைய உலகிற்குச் சரியான முடிவுகளைச் செயற்படுத்தக் கற்றுக்கொள்ள வேண்டும். இந்த இடத்தில் என்னைப் பாட்டியாக நீங்கள் உணர்ந்தால், தவறு என் மீதுதான்... நீங்கள் தொடர்ந்து எழுத வேண்டும்.. இன்னும் இன்னும் சிறப்பாக.! நன்றி.
மரபுக் கவிதைகளின் பால் தீராத பற்று கொண்டவன் நான். மரபுக் கவிதை எழுதியதாலேயே கவனிக்கப்படாமல் , புதுக்கவிதை எழுதப் பழகிக் கொண்டிருக்கிறேன்.
பதிலளிநீக்குஅருமையான ஆய்வு.
மரபுக் கவிதை எழுதத் தெரிந்தவர்கள் இன்னுன்ம்ன் நிறைய எளிய தமிழில் எழுத வேண்டும்.
நல்லுலகில் எம்தமிழின் நாவூறும் சொற்சுவையில்
பதிலளிநீக்குவல்லகவி வார்ப்போர் வளர்ந்திடுவர் - வில்லாண்ட
வீரத்தில் வேங்கைகள் வந்தார்ப்போல்! எஞ்ஞான்றும்
சீரமையும் பாக்கள் செழித்து !
மரபைப் பழகி மயக்கும் கவிஎழுத எனக்கும் ஆசைதான்
ஆதலால் கற்றுக்கொண்டிருக்கிறேன் !
அருமையான அவசியமான பதிவு
பார்த்தேன் படித்தேன் பயன்பெற்றேன் நன்றி
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
அய்யா,
பதிலளிநீக்குவணக்கம். தாமதமாக என்றாலும் இக்கட்டுரையை இன்றேனும் படிக்க நேர்ந்தது கண்டு மகிழ்கிறேன். உள்ளத்துணர்ச்சியும், ஓசையும் கொண்டதாய்க் கவிதைகள் மரபாகவோ, புது மரபு படைத்தோ எழலாம்.
முதலது உள்ளடக்கமும் இரண்டாவது ஓசையும்....! மரபில் சில வடிவங்கள் உள்ளனதான்..! வெண்பாவாகவும், கலிப்பாவாகவும் நம் பாட்டன்மார் தம் பிள்ளைகள் நாளைக்குச் சிரமப் படக் கூடாது எனக் கண்டறிந்து விட்டுவிட்டுப் போன வாய்ப்பாடுகள்..! அவை கண்டிப்பாய் ஊன்றுகோலாய் உதவும். ஆனால் நம் கால்கள்? நீங்கள் சொல்வதனோடு முற்றிலும் உடன்படுகிறென். மரபை மீறிடக் கூடாதெனில் விருத்தமெங்கே? பாரதி எங்கே? காரிகை கற்றுக் கவிபாடுவதினும் பேரிகை கொட்டிப் பிழைப்பது நன்றே என நம்மை பயமுறுத்தும் பழமொழிகளைப் புறந்தள்ளி நம் எழுத்தில் அமையும் மரபிலக்கணங்கள் என்ன என ஆராய்ந்தால் எளிதாக மரபிலக்கணத்தை அறிந்து கொள்ள முடியும் என்பது எனது தாழ்மையான கருத்து. அதற்கு நம் மரபிலக்கியங்களை “தான்கலந்து வாசித்தல்“ பெருந்துணை செய்யும். நன்றி.
சார் ,
பதிலளிநீக்குஉங்கள் ஆதங்கம் நியாயமானதே.
இங்கே, நீங்கள் மரபு கவிதையில் இருந்து புது கவிதை வந்ததை பற்றி எழுதி உள்ளீர்கள். ஆனால், புதுகவிதை தாண்டி நவீன கவிதை அல்லவா அங்கொன்றும் இங்கொன்றுமாக இப்போது பயன்பாடில் உள்ளது.
அது ஒரு பக்கம், தமிழ் கூடிய விரைவில் கவிதை எனும் தளம் சுத்தமாக பயன்பாட்டை இலக்கும் நிலையில் அல்லவா உள்ளது ?. என்னுடைய கவலை அதுவே.
இந்த உண்மை தெரிந்தும் ஏன் அதை ஒத்துக்கொள்ள இந்த இலக்கிய
உலகம் மறுக்கிறது.
இன்று தமிழ் சினிமாவில் பாடல்கள் இருப்பதால் பாடலாசிரியர்கள் பிழைத்தார்கள். நீங்கள் மேலே சொன்ன ஜாம்பவஙக்ள் கவிதை எழுதுவதை நிறுத்தி மாமாங்கம் ஆயிற்று. வைரமுத்துவின்
கடைசி தொகுப்பு " கொஞ்சம் தேனீர் நிறைய வானம்" வெளிவந்தது
௨௦௦4.
இந்த அவசர உலகில் கவிதைக் காண இடம் மிக மிக சுருங்கி வருகிறது.
கவிதை எனும் முத்து கால வெள்ளத்தில் அடித்து செல்லப்படும் சருகாகும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்பதே நிதர்சனம்.
-பாஸ்கர்
http://aarurbass.blogspot.com/
அருமை அய்யா முதல் முறையாக பார்த்தேன் முறைகளை மாற்றிகொள்கிறேன் மரபு வழியை கடைபிடிப்போம் நன்றி
பதிலளிநீக்கு🙏🙏🙏
பதிலளிநீக்கு