நாங்களும் தேர்தல் பிரச்சாரம் பண்ணுவம்ல?


தும்பைவிட்டு வாலைப் பிடிக்கலாமா?
தேர்தல் பாடல் நா.முத்து நிலவன்
------------------------------- 
தும்பைவிட்டு வாலைப் பிடிக்கலாமா? -ஏ மாமா
ஓட்டுப்போட நீங்க மறக்கலாமா?

நாம ஓட்டுப் போட்டுத் தானா
நாடு திருந்தப் போகுது?ன்னு
அலட்சியமா நீங்க இருக்கக் கூடாது மாமா!  ஆட்சி
அமைவதிலே உரிமையத்தான் விட்டுக் குடுக்க லாமா?
                              (தும்பை விட்டு)
யாரோ வந்து செய்வாங்கன்னு
யாரோ வந்து தருவாங்கன்னு
எதுலயுமே கலந்துக்காம இருந்தாஎன்ன ஆகும்?அப்புறம்
குத்துது’‘குடையுதுனு கத்தும் நிலைமை ஆகும்!
                              (தும்பை விட்டு)
மக்களாட்சி நம்ம நாடு
ஜனநாயகத் தாய் வீடு
இந்தப் பெருமை உன்னால கெட்டுப்போகணுமா?-உனது
ஓட்டாலே நாட்டுக்கே பெருமை ஆகணுமா?
                              (தும்பை விட்டு)
-------------------------------------------------------------------------------------------- 


சரியாக ஓட்டுப் போடுங்க!
பாடல்;: -நா.முத்து நிலவன்

சத்தியமா ஓட்டுப் போடுங்க அண்ணே
சரியாக ஓட்டுப் போடுங்க
நிச்சயமா ஓட்டுப் போடுங்க அக்கா
நேர்மையாக ஓட்டுப் போடுங்க ஆ

ஓட்டுப் போட மாட்டேன் அது
உதவாத வேலை யின்னு
உக்காந்து கதைபேசும் உருப்படாத மனுசரால
ஒருத்தருக்கும் பயனில்லீங்க ஆமாங்க  
           (சத்தியமா ஓட்டுப் போட வேணுங்க

ஓட்டுப் போட காசு வாங்கி
நாட்ட அடகு வைக்காதீங்க
உரிமைகள விட்டுத்தந்து கடமைகளை மறக்காதீங்க
உங்கஓட்டு உங்கஉரிமை.. ஆமாங்க   
           (சத்தியமா ஓட்டுப் போட வேணுங்க

நம்மை ஆளும் தலைவர்களை
நாமதான தேர்ந்தெடுக்கணும?; - இந்த 
ஜனநாயக வரலாற்றின் நாயகரே நீங்கதானே?
உங்கள் கடமை உங்கள் வாழ்க்கை --அட ஆமாங்க
           (சத்தியமா ஓட்டுப் போட வேணுங்க 
-------------------------------------

பின்குறிப்பு –
புதுக்கோட்டை அறிவொளி இயக்கத்தில் நான் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவனாகப்  பணியாற்றிய போது (1989-91) எங்கள் மாவட்ட ஆட்சியராக இருந்த திருமதி ஷீலா ராணி சுங்கத் அவர்களின் வழிகாட்டுதலில் நான் எழுதிய  சைக்கிள் ஓட்டக் கத்துக்கணும் தங்கச்சி எனும் பாடல் மாவட்ட ஆட்சியரால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு  அதன் வழி இந்தியாவின் பல்வேறு மொழிகளிலும் மொழி-இசை பெயர்க்கப்பட்டு வலம் வந்தது. அந்த நினைவுகளோடு  2011இல் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக இருந்த திருமதி சுகந்தி அவர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க தேர்தல் ஆணையத்தின் வாக்களிப்பது நம் கடமை அது இந்தியர் ஒவ்வொருவரின் உரிமை எனும் கருத்தமைய நான் எழுதிக்கொடுத்த பாடல் இது. ஈசன்திரைப்படத்தில் ஜில்லா விட்டு ஜில்லா வந்து பாடலைப் பாடிப் புகழ்பெற்றிருக்கும் உண்மையில் புதுக்கோட்டையிலிருந்து தஞ்சையில் திருமணமாகிப் போயிருக்கும்- தஞ்சை செல்வி பாட  புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் உள்ள கம்பிவட (கேபிள்) தொலைக்காட்சிகளில் வலம் வந்த எனது பாடல்கள்.. 
------------------------------------------------------------------------ 
வெளியிட்டமைக்கு நன்றி:
புதிய தலைமுறைவாரஇதழ் ஏப்-14, 2011
------------------------------------------------------------------------

12 கருத்துகள்:

  1. சிறந்த வழிகாட்டல் பாடல்
    மக்கள் ஓட்டில் தான்
    நாட்டின் எதிர்காலமே!

    பதிலளிநீக்கு
  2. கருத்துள்ள பாடல் வரிகள்...

    // புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும்...// வாழ்த்துக்கள் ஐயா...

    பதிலளிநீக்கு
  3. //உங்கள் கடமை உங்கள் வாழ்க்கை -- அட ஆமாங்க
    சத்தியமா ஓட்டுப் போட வேணுங்க!..//

    நமது கடமை!.. நமது வாழ்க்கை!..
    நிச்சயம் வாக்களிக்கத் தான் வேண்டும்!...
    ஜனநாயகத்தை வாழவைப்போம்!..

    பதிலளிநீக்கு
  4. டைமிங் ரய்மிங்க இந்த தேர்தல் பாடல்
    எளிதில் ஞாபகம் வைத்துக்கொள்ள முடியும்
    சரியான ஜனநாயகக்கடமை !!
    அண்ணா நான் போகவேண்டிய தூரத்தை
    இப்படிப்பட்ட படைப்புகள் தான் நினைவுபடுத்துகின்றன !

    பதிலளிநீக்கு
  5. அருமையான பாடல்.தற்போது பாடல்கள் எழுதுவதில்லையோ தோழர்.

    பதிலளிநீக்கு
  6. நானும் இந்த வருடம் தான் முதன் முதலாக வாக்களிக்க உள்ளேன்! சூழலுக்கு ஏற்ற கவிதை ஐயா! மிகவும் அருமை!

    பதிலளிநீக்கு
  7. வணக்கம் ஐயா
    இரண்டு பாடல்களையும் படிக்கும் போதே எனக்குள் ஒரு ராகம் போட்டு தான் படித்தேன். பாமரனுக்கும் விளங்கும் வண்ணம் எளிமையாகவும் சுவையாகவும் அமைந்த அழகான பாடல்களுக்கு நன்றிகள். ம்ம்ம் தஞ்சை செல்வி நம்ம பாட்டுக்கு பாடிட்டுத்தான் படத்துக்கு பாடப் போனாங்கனு சொல்லுங்க. ரொம்ப மகிழ்ச்சி ஐயா. பகிர்வுக்கு நன்றி..

    பதிலளிநீக்கு
  8. ஆண்டாண்டு காலமாக தும்பை விட்டு வாலைப் பிடிப்பது நமக்கு பழக்கமாகிவிட்டது. இனியாவது சுதாரிப்போம்.

    பதிலளிநீக்கு
  9. தும்பை விட்டு வாலைப் பிடிப்பதைவிட்டு இனியாவது சுதாரிப்போம். கண்டிப்பாக நாங்கள் ஓட்டுப்போடுவோம். வாக்களித்தலின் முக்கியத்துவம் பற்றிய தங்கள் கவிதைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  10. அனைவரிடமும் சென்றடைய வேண்டிய
    செய்தியை மிக மிக அருமையாகச்
    சொல்லிச் செல்லும் கவிதை அருமையிலும் அருமை
    பதிவாக்கி அறியத் தந்தமைக்கு மனமார்ந்த நன்றி

    பதிலளிநீக்கு
  11. மிகச் சிறப்பாய் ஓட்டு போடுவதின் அவசியத்தினைச் சொல்லும் பாடல். பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு