“21-இ,சுடலை மாடன் தெரு,திருநெல்வேலி டவுன்”

(தி.க.சி. - 30 மார்ச் 1925 - 25 மார்ச் 2014)  
நமது 
இலக்கியத் திசைகாட்டி ,
தி.க.சி.  
காலமானார்! 

பேரும்புகழும் பெற்ற பெரும் எழுத்தாளாராயினும் சரி, “இன்றுதான் எழுதத் தொடங்கியிருக்கிறேன், எனது முதல் கவிதை இந்த இதழில் பிரசுமாகியிருக்கிறது அய்யா, உங்கள் கருத்தை எழுத வேண்டுகிறேன்“ என்று கடிதம் எழுதும் இளைய எழுத்தாளராக இருந்தாலும் சரி...  அடுத்த நாளே 
அவருக்கு ஒரு விமர்சனக் கடிதம் வரும்... 
அவர்தான் 
அஞ்சல் அட்டையில் 
தமிழ் வளர்த்த நம் தி.க.சி.
                1990களின் தொடக்கத்தில் க.நா.சுப்பிரமணியன் எனும் மாபெரும் எழுத்தாளரின் எழுத்துகளை அவரது வாழ்வியல் பின்னணியோடு இணைத்துநான் ஒரு நெடுங்கட்டுரையை, கோமல் சுவாமிநாதனின் சுபமங்களாஇதழில் எழுதியிருந்தேன். விமர்சனம் செய்திருந்தேன். அவர் பாணியிலேயே சொன்னால் ஒரு ஜாம்பவானைப் பற்றி ஒரு கத்துக்குட்டி எழுதியிருந்தது! 
                ஓரிதழில் வெளிவந்த அந்தக் கட்டுரைக்கு இரண்டு மூன்று இதழ்களில் தொடர்ச்சியாக வாதப்பிரதிவாதக் கருத்துகள் வெளிவந்தன! அப்போதுதான், எனக்கு நேரடி அறிமுகமில்லாத திகசி எப்படியோ எனது முகவரியை வாங்கி  வெகுவாகப் பாராட்டி ஒரு கடிதம் எழுதியிருந்தார். 
                அப்போதிருந்து, அவ்வப்போது கடிதப் பரிமாற்றம் எங்களிடையே இருந்தது. அவர்நலம் விசாரித்தும், பிறந்த நாளின் போதும், தொலைபேசியில் பேசியதுண்டு. மாநாடுகளிலும், அவரது வீட்டிலும் சந்தித்துப் பேசிய போதெல்லாம் இளைய தலைமுறை இன்னும் கூர்மையாக எழுதவேண்டும் என்பதுபற்றித்தான் சொல்லிக்கொண்டே இருந்தார். 
                 அவரது சகாவான வல்லிக்கண்ணனுக்கு விருது கிடைத்துப் பல்லாண்டுகள் கழித்து அவருக்கு சாகித்திய அகாதெமி விருது தரப்பட்டபோது, அவரால் உற்சாகப்பட்டு எழுத்தைத் தொடர்நத ஏராளமானோர் மகிழ்ச்சியடைந்தோம். 
                அந்தத் துரோணருக்கு என்போலும் ஏகலைவர்கள் தமிழ்நாட்டில் ஏராளமானோர் இருக்கிறோம். எங்களிடம் அவர் கட்டை விரலைக் கேட்டதில்லை,  தொடர்ந்து எழுதத்தான் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தார்! 
                  அவரது கூர்மையான நேர்மையான விமர்சனப் போக்கை ஏற்காத சிலர் அஞ்சல் அட்டை எழுதுபவருக்கு இலக்கிய விருதா? அப்படின்னா போஸ்ட் மேனுக்குத்தான் கொடுத்திருக்க வேண்டும்என்று கேலி பேசியதும் உண்டு!
                 அது பற்றியெல்லாம் கவலைப்படாமல், இளைய எழுத்தாளர்களை உற்சாகப் படுத்தும்“ பணியைத் தொடர்ந்து செய்து கொண்டே இருந்தார்.  அதுதான் தி.க.சி.! நாளைவரை இருந்திருந்தால் 90வயதைத் தொட்டிருப்பார்!(மார்ச்-30)
                  கோடிகோடியாய்ப் பணத்தைக் கொள்ளையடித்து வைத்துக்கொண்டு கட்சிநடத்தும் பல்வேறு தலைவர்களோடு மல்லுக்கட்டி,  மக்கள்மேல் உள்ள மாறாத பாசத்தினால் கட்சி நடத்தும்  உழைக்கும்மக்களின்  உண்மையான  தலைவர்கள் சிலரைப் போல, அவர் டாம்பீகமான கலை-இலக்கிய வாதிகளைப் புரட்டி எடுப்பதும், எளிய மக்களுக்கான அரிய படைப்பு என்று தோன்றினால் உடனே அந்த இலக்கியப் படைப்பாளியைப் பாராட்டி உற்சாகப் படுத்துவதுமான அரிய உன்னதப்பணியை அசராமல் செய்ததால், எளியேனாகிய என்போலும் ஒருபெரும் பட்டாளம், இப்போதும், அசராமல் எழுதிக் கொண்டும் இயங்கிக் கொண்டும் இருக்கிறது!

தமிழ் விக்கி-பீடியாவில் திகசி பற்றிய குறிப்பு -
             தி.க.சிவசங்கரன்மார்க்சியதிறனாய்வாளர்.   திருநெல்வேலிநகரில் பிறந்தவர். சிறுவயதிலேயே இளமைப்பருவ நண்பரான   வல்லிக்கண்ணனுடன்  இணைந்து முற்போக்கு இலக்கியச் செயல்பாடுகளில் ஈடுபட்டிருந்தார். ப.ஜீவானந்தத்தால் இலக்கிய வழிகாட்டுதல் பெற்றார்.  இந்திய பொதுவுடமைக் கட்சி இலக்கிய இதழான தாமரை யில் 1960 முதல் 1964 வரை ஆசிரியராகப் பணியாற்றினார். 1964ல் சோவியத்து கலாச்சார செய்தித் துறையில் சென்னையில் பணியாற்றி 1990ல் ஓய்வுபெற்றார். 
                     தி.க.சிவசங்கரனின் மகன் வண்ணதாசன் என்ற கல்யாணசுந்தரம் எழுத்தாளரும், தமிழில் முக்கியமான சிறுகதையாசிரியரும் ஆவார்.(இவர்தான் கல்யாண்ஜி எனம் பெயரில் கவிதை எழுதுபவர்) இளம் எழுத்தாளர்களுக்கு கார்டுகளில் கடிதங்கள் எழுதுவது, இதழ்களில் வாசகர் கடிதங்கள் எழுதுவது அவரது முக்கியமான இலக்கியச் செயல்பாடுகளாக இருந்தன. இதனால் தமிழ்நாட்டில் பல புதிய எழுத்தாளர்கள் தோன்ற காரணமாக இருந்தார். 
                     இவரது மதிப்புரைகளும் கட்டுரைகளும் முதிய வயதில்தான் திகசி கட்டுரைகள் என இரு பகுதிகளாக தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டன.இத்தொகுதிகளுக்கு  2000ஆம் ஆண்டில் சாகித்ய அகாதமிவிருது  வழங்கப்பட்டது 
                     தி.க.சி.யின் வாழ்க்கை குறித்தும்-எழுத்துலகம் குறித்தும் 2007-ஆம் ஆண்டு சென்னையில் இயங்கி வரும் தமிழ்க்கூடம் என்ற கலை-இலக்கிய அமைப்பு ஒரு ஆவணப் படத்தை உருவாக்கியது. ”21-,சுடலை மாடன் தெருதிருநெல்வேலி டவுன்என்று பெயர் சூட்டப்பட்ட இப்படத்தை எழுத்தாளரும் இயக்குநருமான எஸ். ராஜகுமாரன் எழுதி-இயக்கியுள்ளார். திருப்பூர் மத்திய அரிமா சங்கத்தின் 2008-க்கான சிறந்த ஆவணப்பட விருது மற்றும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கத்தின் சிறந்த ஆவணப்பட விருது ஆகிய விருதுகள் இந்த ஆவணப்படத்திற்கு கிடைத்தன“ --  
        இந்தக் குறிப்பு  சரியானதே எனினும் சுருக்கமானது. இன்னும் தெரிந்து கொள்ள விரும்புவோர் தொடர்ந்து பார்க்கவும் பத்திரிகைச் செய்திகளைப் படிக்கவும் இணைப்புகளில் சொடுக்க  - தமிழ் விக்கிபீடியாவில் தி.க.சி. அவர்களைப் பற்றிய பதிவு - http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF._%E0%AE%95._%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D

பிரபல கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியன் அவர்கள்  
முக நூலில் 26-03-2014 அன்று எழுதியிருப்பது- 

தி.க.சி - என்னைப் போன்ற எண்ணற்ற எழுத்தாளர்களை வார்த்துருவாக்கிய மாமனிதர் தி.க.சி மறைந்து விட்டார். வாழ்நாளெல்லாம் கருத்துப் போர் நடத்தியும், தொல்லை தந்த நோய்களோடு போராடியும் வந்தார். ஒருபோதும் கொண்ட கொள்கைகளுக்கு எதிராகச் சமரசம் செய்து கொள்ளாத வீரர். அதே சமயம் நட்பு நாகரிகத்தை ஒரு நல்ல மார்க்சீயவாதிக்கு உரிய முறையில் காத்துப் போற்றிய முன்மாதிரித் தோழர்.தாமரை ஆசிரியராக இருந்த பொற்காலத்தில் அவர் வழி காட்டி வளர்த்த எழுத்துப் பட்டாளம் தான் பின்னர் தமிழ் இலக்கியத்தில் ஒரு மதிப்புக்குரிய தலைமுறையாக வடிவெடுத்தது. இன்று சுடலைமாடன் தெரு சரித்திர மாகிவிட்டது. சிரம்தாழ்த்தி அஞ்சலிகளை அர்ப்பணிக்கின்றேன்

வேறென்ன சொல்ல?  
முன்னிலும் வேகத்தோடும்
மூளையில் கூர்மையோடும்
தி.க.சி.யின் பணிகளைத் தொடர்வோம்! 
நல்ல படைப்புகளைத் தருவோம்
நல்லோரை எழுத வைப்போம்!
அதுவே அவருக்கு 
நாம் செலுத்தக்கூடிய 
சரியான அஞ்சலியாகும்          
-------------------------------------------------------------------

10 கருத்துகள்:

  1. தி.க.சி யை பற்றிய சிறப்பான தகவல்களோடு நினைவு கூர்ந்தமை சிறப்பு! அவரது புகழ் ஓங்கட்டும்! நன்றி!

    பதிலளிநீக்கு
  2. அஞ்சலிகள்...

    தி.க.சி. அவர்களின் சிறப்புகளுக்கும், கொடுத்துள்ள இணைப்பிற்கும் நன்றி ஐயா...

    பதிலளிநீக்கு
  3. அஞ்சல் அட்டையில்
    எழுதி எழுதியே
    மற்றவர்களை ஊக்குவித்த
    உற்சாகப் படுத்திய மனிதர்
    தி.க.சி.
    அவர்களின் மறைவிற்கு
    ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்

    பதிலளிநீக்கு
  4. தி . க. சி. பற்றிய பதிவை இட்டு அவரை சிறப்பித்தமை சிறப்பே ! நன்றி! அவர் மறைவிற்கு ஏன் ஆழ்ந்த அனுதாபங்கள்.!

    பதிலளிநீக்கு
  5. அர்த்தமுள்ள நினைவேந்தல் அண்ணா!

    பதிலளிநீக்கு
  6. அய்யாவிற்கு வணக்கம்
    தி.க.சி அய்யா அவர்களின் தமிழ்ப்பணிக்கு ஈடேதுமில்லை என்பதை உங்கள் பதிவின் மூலம் அறிந்து கொண்டேன். அவரது மறைவு நமது தமிழ்ச் சமூகத்திற்கு பேரிழப்பு. அவரின் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்..

    பதிலளிநீக்கு
  7. தி.க.சி. அவர்களைப் பற்றி அருமையான தகவல்களைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ஐயா. அவருக்கு அஞ்சலி!
    / நல்ல படைப்புகளைத் தருவோம்,
    நல்லோரை எழுத வைப்போம்!// கண்டிப்பாகச் செய்வோம், நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  8. தங்கள் சிறந்த பகிர்வை வரவேற்கிறேன்.

    பதிலளிநீக்கு
  9. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு