பொள்ளாச்சி, கூடலூர் நிகழ்ச்சிகள் முடித்து, திருப்பூர் வழி, காரைக்குடி அரசுப் பேருந்தில் நேற்றிரவு புதுக்கோட்டை வந்தேன், ஒருவழியாகி.
திருப்பூரில்
ஏறிய ஓர் இளைஞன் என் காலடியில் ஒரு சிறு மூட்டையைத் தள்ளிவிட்டான். அருகில்
அமர்ந்த அவன், தன் காலுக் கடியிலும் துணி, வேறுசில
வீட்டுப் பயன்பாட்டுக்கான பொருள் கொண்ட ஒரு மூட்டையை வைத்துக்கொண்டான். தினக்கூலித்
தொழிலாளி போலத் தெரிந்தது. உடனே
தூங்கியும் விட்டான். என்தோள் வலித்தது. பாவம்.. தாங்கிக்கொண்டேன். தமிழ்ச்செல்வன்
கட்டுரை நினைவில் வந்தது. அவன்
உடல் உழைப்பாளி, என் தூக்கத்தை அவனுக்காகத் தவணைகளில்
வைத்துக்கொண்டேன்.. தோள்வலியும், இரண்டு இரவுகளாய்த் தூங்காத என் கண் எரிச்சலும் குறைந்தது போலிருந்தது!
கொஞ்சநேரம்
கழிந்தது.. நடத்துநரிடம் சீட்டு வாங்கிய இளைஞன்,நேர்மையாக“லக்கேஜ்
வாங்கணுமாசார்?” என்றான்!
நடத்துநர், என்
காலின் கீழ் இருந்த மூட்டையைப் பார்த்து,
“இது
என்ன?”
என்றார்.
எதிர்ப்பார்த்தது
போலவே நடந்தது.
காரைக்குடிக்கு
150ரூபாய்
சீட்டுத் தந்துவிட்டு, “கிரைண்டருக்கு ரெண்டு சீட்டு
லக்கேஜ் வாங்கணும்” என்று நடத்துநர் சொன்னதும் அரண்டுவிட்டான்
அந்த இளைஞன்!
“ரெண்டு லக்கேஜா?.. அவ்வளவு
காசு இல்லயே சார்” என்றவனைப் பார்த்து நாம் ஏதாவது உதவலாமா
என்று யோசித்துக் கொண்டிருக்கும்போதே, நடத்துநர் “அப்படின்னா
கிரைண்டரை உன் காலுக்குக் கீழே உள்ள தள்ளி வச்சிக்க” என்றார்.
பரவாயில்லையே! அரசு விதிகளையும் மீறி இந்த ஏழைத் தொழிலாளிக்கு இன்னொரு தொழிலாளி
உதவுகிறாரே என்ற (??) எனது நினைப்பைத் துண்டித்த நடத்துநர்
“சரி
எவ்வளவு வச்சிருக்கே?” என்றார்.
மீண்டும்
தனது அப்பாவித்தனத்தை வெளிப்படுத்திய இளைஞன் பைக்குள் கைவிட்டு இருந்த
பணத்தையெல்லாம் எடுத்து, “200ரூவாதான் சார் இருக்கு”என்றான்.
“சரி
சரி இருக்குறத குடு, யாரும் வந்தா நா மாட்டிக்குவேன்ல? கிரைண்டருக்கு
ரெண்டு டிக்கட் எடுக்கணும்” என்ற அரசு விதியை அவனிடம்
காட்டுவது போல என்னிடம் நீட்டினார்...
அப்படித்தான்
இருந்தது...! நான் நொந்து கொண்டேன்.
கிரைண்டர்
மிக்சி போலும் பொருள்களை எந்த நடுத்தர வர்க்கமும் கூட இப்ப லக்கேஜ் போடடு
ஏற்றுவதில்லை. இலவசமாகக் கிடைப்பதை இதுபோன்ற ஏழைகள்தான் ஊர்மாற்றி ஏற்றிச்
செல்கிறார்கள்! அதுவும் அந்த அம்மாகிரைண்டர் மிகவும் எடைக்குறைவாகவே இருந்தது!
இதைக்
கவனித்து உதவக்கூடாதா நமது அரசுகள்?
ஆனால்
அடுத்து நடந்தது வேறு!
பாதி
வாழ்நாளைத் திருப்பூர் சாயப்பட்டறையில் தொலைத்துக் கொண்டிருக்கும் அந்த ஏழை
இளைஞனிடம் அரசு விதியைக் காட்டி இருநூறு
ரூபாயை மிரட்டி
வாங்கிய அந்த நடத்துநர், கடைசி வரை அதற்கான சீட்டைத் தரவே
இல்லை....!
நான்
அந்த இளைஞனிடம் ஊரைக்கேட்க, காரைக்குடியைத் தாண்டி
இருக்கும் ஓர் ஊரைச் சொன்னான்! “காரைக்குடியிலிருந்து போக
காசு இருக்கா?” என்று கேட்டேன்... (இலக்கணக்குறிப்பு-கொடை
வினா!)
“இருக்கு
சார்”
என்று பத்துரூபாய்த் தாள் மூன்றைக் காட்டினான்.
“லக்கேஜ்
சீட்டுத் தரலயே” என்று நினைவூட்டியதும், “லக்கேஜ்
போட்டா முந்நூறு ரூபாயாகும்னு சொன்னார்” என்றவாறு தனக்கு
நூறுரூபாய் மிச்சம் என்பது போலும் நினைப்பில் இருந்துகொண்டான்!
வழக்கம்போல
பயணிகளை அடகுவைத்து, ஓட்டுநரும்
நடத்துநரும் ஓசியில் சாப்பிடும் சாலையோர மோட்டலில் வண்டி நின்றது.
அந்தக்
கடைகளில் எதுவும் வாங்குவதில்லை என்னும் முடிவோடு, கையிலிருந்த
பிஸ்கெட்டைத் தின்று, கொண்டுவந்திருந்த தண்ணீரைக்
குடித்து ஒரு தம் போட்டுக் கொண்டிருந்த என்னிடம் தேநீர்
குடித்துக் கொண்டிருந்த இளைஞன், திடீரென்று,
“அந்த
பஸ்லயும் லக்கேஜ் கேப்பாங்களாண்ணே?” என்று கேட்டான்.
“கேட்டா
என்ன பண்ணுவ?-நான் கேட்டேன்.
“அஞ்சு
ரூபாதான் டிக்கெட். லக்கேஜ் சேர்த்து பதினைஞ்சு ரூவாதானே ஆகும்? என்கிட்ட
இருபது ரூவா இருக்கு”
அவனது
சாமர்ததியத்தை நினைத்து சிரிப்பதா?
அப்பாவித்தனத்தை
நினைத்து வருத்தப் படுவதா?
ஏழ்மையைின்
நேர்மை கண்டு மகிழ்வதா...?
எனக்குத்
தெரியவில்லை!
இலவசப்
பொருள்களைக் கொண்டு போக மிகக் குறைந்த லக்கேஜ் கட்டணத்தை அம்மாவே நிர்ணயித்தால்
நல்லாயிருக்கும்
என்று
மட்டும் தோன்றியது..
இல்லையென்றால்,
இந்த
மாதிரியான ஏழைகளிடம்,
இரவுக்கொள்ளைகள்
பகலிலும்
தொடரத்தானே செய்யும்?!
அம்மாவின்
அரசு கூடுதல் கருணையோடு யோசிக்குமா?
-----------------------------------------------------------------------------------------------
சின்னச் சின்னச் சிந்தனைகள் - 4.
-----------------------------------------------------------------------------------------------
பல பேருந்துகளில் பொதுவாக தமிழக பேருந்துகளில் இந்த பகல் கொள்ளை உண்டு.... வட இந்தியாவில் இப்படி தனியாக வாங்குவதில்லை......
பதிலளிநீக்குஅநியாயம்னு தெரிஞ்சுது... பிச்சையெடுக்குதாம் பெருமாளு, அதையும் புடுங்குதாம் அனுமாருன்னு ஒரு பழமொழி உண்டல்லவா? அதுதான் நினைவுக்கு வந்தது... நன்றி
நீக்குபாவம் அந்த இளைஞன்
பதிலளிநீக்கு“கஞ்சி குடிப்பதற்கிலார் - அதன்
நீக்குகாரணம் இதுவெனும் அறிவுமிலார்” என்று பாரதி பாடிய பாமரர்கள் இன்றும் இருக்கிறார்கள்... அவர்களின் பிரதிநிதிதான் ..
எளியவரைக்கண்டால் வலியவர்க்கு கொண்டாட்டம் என்பது தானே நிலை தற்பொழுது.
பதிலளிநீக்குஎருமைக்கு புண் நோவு, காக்கைக்கு கொண்டாட்டம் னு இதத்தான நம்ம பாமரத் தமிழ்க்கிழவி சொலவடையாச் சொலறா?
நீக்குஇந்த பகல் (இரவு) கொள்ளையை பார்த்து கொண்டு சும்மா இராமல் கொஞ்சம் தட்டிக் கேட்டிருக்கலாமே! கேட்டால் கிடைக்கும் என்று ஒரு அமைப்பும் இருக்கிறது சார்!
பதிலளிநீக்குதட்டிக் கேட்டு, யாருக்காகத் தட்டிக் கேட்டோமோ அவர்களே நம்மைப் பரிதாபத்துக்கு உரியவராக்கிய அனுபவம் சில எனக்கு உண்டு நண்பரே! நுகர்வோர் மன்றம் போக முதலில் அவர் இது தவறு என்று புரிந்து கொள்ள வேண்டுமே? அங்க இடிக்குதே?
நீக்குஅட ! என்ன வெள்ளந்தியான மனிதர்
பதிலளிநீக்குபாவம் அவருக்கு வாழ்க்கை தான் வஞ்சக படங்களை கற்றுக்கொடுக்காது இருக்கட்டுமாக !!
நல்ல யோசனை தான் சொல்லிருக்கிரீகள் !!//தோள்வலியும், இரண்டு இரவுகளாய்த் தூங்காத என் கண் எரிச்சலும் குறைந்தது போலிருந்தது!//ஈரமான வரிகள் !//(இலக்கணக்குறிப்பு-கொடை வினா!)// சைட் -பை -சைட இலக்கணம் நடத்துறது சூப்பர் அண்ணா!
பாவம்-அப்பாவி-பொழைக்கத் தெரியாதவன் ஒரு பக்கம்.
நீக்குபயங்கரமான ஆளு-கெட்டிக்காரன்-பொழைச்சுக்குவான்-மறுபக்கம்.
“இருவேறு உலகத் தியற்கை திருவேறு
தெள்ளிய ராதலும் வேறு” -நன்றி வள்ளுவப் பாட்டன்.
பாவம் அந்த மனிதர்...
பதிலளிநீக்குஏமாறுகிறவர் இருக்கும் வரை ஏமாற்றுபவரும் இருப்பாரே!
நீக்குவண்டி எண்ணை எழுதி இருக்கலாமோ ?
பதிலளிநீக்குஅதனால் ஒன்றும் ஆகப் போவதில்லை யென்றாலும்
லக்கேஜ் கட்டணம் அரசுக்குச் சேராததை
அறிந்த உயர் அதிகாரிகள் நிச்சயம் பாதியைப்
பிடுங்கிக் கொள்வார்கள் தானே ?
திருடனிடம் களவு போவது கூட ஒருவகையில்
நமக்கு ஆறுதல் அளிக்கும் தானே ?
வண்டி எண், அந்த இளைஞனின் பெயர், அந்த நடத்துநரின் மெட்டல் பிளேட்டில் இருந்த பெயர் எல்லாம் குறித்தேன். அந்த இளைஞன் ஒத்துழைப்பின்றி எல்லாம் வீண்தானே? அதுதான் என் கவலை... இவர்கள் எப்படிப் போராட முன்வருவார்கள்?
நீக்குஐயா, வணக்கம் ஏழ்மையிலும் நேர்மை கொண்டவர்கள் மிகக்குறைவு ஆனால் ஏக போகத்திலும்,எகத்தாளம் செய்துஏமாற்றிவாழ்பவர்கள்தான்அதிகம்தொகைபெரிதாயினும் பொருள்மிகச்சிரிதாயிற்றே இவர்கள்(நடத்துனர்)போன்றோர் மாறுவதுஎப்பொழுது....?
பதிலளிநீக்கு“தானா எல்லாம் மாறும் என்பது பழைய பொய்,
நீக்குநான் வந்தால் மாற்றுவேன் என்பது புதிய பொய்,
மக்கள் உணராமல் மாற்றங்கள் ஏது?
கொடி பிடிக்க வேண்டியது நமக்குள் கிடக்கிறது சகோதரீ.
இலவசப் பொருளுக்கு ஏற்றுக் கூலியா
பதிலளிநீக்குநேர்மையானவர்கள் குறைந்து கொண்டே போகிறார்கள் ஐயா
“இன்னாது அம்ம இவ்வுலகம்,
நீக்குஇனிய காண்க இதன் இயல்புணர்ந்தோரே!” - சங்கப் பாடலிலும் இதுதான் நடப்பு! மாற்றம் ஒன்றே மாறாதது... பார்ப்போம்.
“எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்?” -60வயது வரிகள்!
ஐயா , நீங்களாவது அந்த ஏழைக்காக நடத்துனரை தட்டி கேட்டிருக்கலாம்..!!!!
பதிலளிநீக்குசாட்சி அ்ல்ல, வாதியே வாய்தா கேட்கும் போது, வழக்கறிஞர் என்ன வாதாடி என்ன ஆகப்போகிறது நண்பா?
நீக்கு// தினக்கூலித் தொழிலாளி . பாவம்.. உடனே தூங்கியும் விட்டான்.
பதிலளிநீக்குஎன்தோள் வலித்தது. தாங்கிக்கொண்டேன். //
மனித நேயம் மிளிர்கின்றது.
//வாதியே வாய்தா கேட்கும் போது,
வழக்கறிஞர் என்ன வாதாடி என்ன செய்ய? //
ஆற்றாமை பரிதவிக்கின்றது.
அதனால்தான் வலையில் பகிர்ந்து கொண்டேன்.
நீக்குஇனிமேலாவது, இதைப் பகிர்ந்துகொண்டவர்கள் இதுபற்றிப் பேசப்பேச அல்லது பகிரப் பகிர, நல்லது ஏதாவது நடக்காதா என்னும் நப்பாசைதான் நண்பா... வேறென்ன? நன்றி.
அப்பாவி மக்கள் குறைவான லஞ்சம் கொடுப்பதை சாமாரத்தியமாக கருதுவதை என்னென்பது?. சிலர் நான் மினிஸ்டருக்கு சொந்தக்காரன் எம்.எல் ஏக்கு சொந்தக் காரன் என்று சொல்லி காரியம் சாதித்து விடுவர்.. பாவம் அவருக்கு அது போல் எதுவும் தெரியவில்லை போலும்.
பதிலளிநீக்குஇதே போல்தான் இலவச பயண அட்டை இல்லை என்றால் மாணவர்களை ஈவு இரக்கமின்றி இறக்கிவிடும் கண்டக்டர்களும். உண்டு.ஜூன் மாதத்திலேயே மாணவர்களை பஸ் பாஸ் கிடைக்காது. சிறிது கால தாமதம் ஆகும். அந்த இடைப்பட்ட காலத்தில் பஸ்ஸில் ஏற்ற மாட்டார்கள். இலவசம் என்பது உறுதி என்பது அறிந்ததே.அதனால் அவர்களை அனுமதித்தால் என்ன குறைந்து விடப் போகிறது. பார்த்தாலே பள்ளிக்கு செல்பவன் என்பது தெரியாமலா பொய் விடும்? ஆனால் கல்லூரி மாணவர்களை ஒன்றும் செய்ய முடியாது அவர்கள் பஸ்சையே ஒரு வழி ஆக்கிவிடுவார்கள்
கட்டுரை பூராவும் யதார்த்தம் கொப்பளிக்கிறது.நல்ல நடை.நான் இதை உண்மை சம்பபவமாகே கருதவில்லை. கற்பனை என்றே கருதுகிறேன்.
பதிலளிநீக்கு