நர்சரிப் பூக்கள்

பஞ்சுகள்-
பாவப் பிஞ்சுகளா இவை?
ஏட்டுப் புத்தக
நெருஞ்சிகளைச் சுமக்கும்
குறிஞ்சிகள்!?!

முதுகில்
புத்தகப் பொதிமூட்டைகள்,
அப்புறம் ஏன்
இந்தக் கவரிமான் குட்டிகள்
கழுதைகள் ஆகாது?

பிரி.கே.ஜி’.என்னும்
ஜூனியர் ஜெயிலவேறு!

ஐந்தில் வளைவது,
ஐம்பதிலும் நிமிராது!

ஓவ்வொரு குழந்தையும்
அழுதுகொண்டே பிறப்பது
இந்த -
அவலம் கருதித்தானோ?

பெற்றெடுக்கும்
மனித எந்திரங்கள்
தொட்டிலில் இருந்து
நேரே இந்தக்
கொட்டிலுக்குள் தள்ளும்
கொடுமை-
வேலை நேரத்தை
விரட்டத்தானே?

சிறையில் போட
சிபாரிசு வேறு!

'சர்க்கஸ்' திறமையுடன்
ஆட்டோ பறக்க
வாழ்க்கையின் நெருக்கடி
வழியிலேயே
கற்பிக்கப்படுகிறது!

பட்டன் போடத்தெரியாத
பருவத்தில்
சீருடையா அவை?
கட்டம் போடாத
கைதிச் சட்டைகள்!

அதோ.. அவன் மார்க்ஸா?
இவன் நேதாஜியா?
இவன்தான் இக்பாலா?
அட! இதுயார் பாரதியா?
அடடா!
சுட்டெடுக்கும் அவசரத்தில்
இந்தப் பச்சைமண் பாண்டங்களை
இப்படியா வருத்திப் பொசுக்குவது?

மனப்பாடக் கடலில்
மூச்சுத்திணறி
மயங்கிக் கிடக்கும்
இவர்களின்
துக்கத்தையும் தூக்கத்தையும்
கலைக்கத்தானே
அவ்வப்போது
மணியடிக்கப் படுகிறது?
எனினும்-
மதிய நேரத்துச்
சின்ன விடுதலையை
சாப்பாடே சாப்பிட்டு விடுகிறதே!

இந்தக் கரும்புகளின் குறும்புகள்
கசக்கும்போதெல்லாம்
புத்தகத்தை எடுறாஎன்பதே
உச்சபட்சத் தண்டனை!

இங்கே-
சுதந்திரத்தைப் போதிப்பவர்கள்
பாவம்-
வேலையில்லாத் திண்டாட்டத்தின்
அடிமைகள்!
குழந்தைகள் -
மிஸ்என விளிப்பது,
வஞ்சப் புகழ்ச்சி!
இயல்பு நவிற்சி என்பதும் சரியே!

கள்ளுக் கடையை
அரசே ஏற்று.
கல்விக் கடையை
தனியார்க்கு விற்றதில்
முதல்மோசம் போனது
இந்த நர்சரிப் பூக்கள்தான்!

பள்ளித் தலமனைத்தும்
கோவில் செய்குவோம்’-
என்றாயே பாரதீ!
அந்தப் பொடிசுகள்
சுண்டலை நினைத்தாவது
விரும்பி வரட்டும்எனும்
விவேகம்தானா?

இசையும் விளையாட்டுமே
இனிக்கும் பருவத்தில்,
எழுத்து மேய்ச்சல்!
அன்றைய மேய்ச்சலை
வீட்டுக்குப்போய் வேறு
அசைபோடவேண்டுமாம்!

துள்ளி நீந்தும்
மீன்குஞ்சுகளைத்
தரையில் போடுவதும்,
பள்ளிப் பாடம் எழுதச்சொல்லி
தனிமைப் படுத்தி ஓர்
அறையில் போடுவதும்
ஒன்றுதான்!

இவர்கள்
அந்நியப் படுவது-
அங்கிருந்து தொடக்கம்!
---------------------------------------------------------- 
மேலுள்ள படம் போல, குழந்தைகள் வகுப்பறை இருந்தால் அந்த வகுப்பறை எப்படி இருக்கும்...! இன்னும் இதுபோன்றதொரு இயற்கையான தோட்டமே வகுப்பறையாக இருந்தால்... ஓ! அதுதானே நர்சரி? ஆனா... இப்ப... ம் ????)
-------------------------------------------------------------------------------------------------
1990இல் எழுதி, 1993முதல் இன்றும் மதுரைக் காமராசர் பல்கலையில், முதுகலைத் தமிழ்வகுப்புக்குப் பாடமாக இருக்கும் எனது “புதியமரபுகள்” கவிதைத் தொகுப்பில் இடம்பெற்ற கவிதை-நன்றி செம்மலர்-மாதஇதழ்)

10 கருத்துகள்:

 1. அய்யாவிற்கு வணக்கம்.
  ஒவ்வொரு கல்வியாளரின் சிந்தனை தங்களின் சிந்தனை போல் இருந்து விட்டால் மகிழ்வோடு கற்றல் உறுதி செய்யப்படும். அதுவரை மனப்பாடக் கற்றல் தான். இன்றிருக்கும் நிலைமையே நீடிக்கும். கே.ஜி வகுப்புகள் எல்லாம் பெற்றோர்களின் சுமையைக் குறைப்பதற்கே. காசு கொடுத்து தனது குழந்தைக்கு வாங்கித் தரும் தண்டனைகள் மாற வேண்டும், அறிவை வளர்க்காது மதிப்பெண் நோக்கி நடைபோடும் கல்வி முறை மாற வேண்டும் எனும் தங்கள் கனவு ஞாயமானது, விரைவில் நனவாக அரசு ஆவணம் செய்ய வேண்டும், ஒவ்வொரு ஆசிரியரும் மாற வேண்டும். பகிர்வுக்கு நன்றீங்க அய்யா.

  பதிலளிநீக்கு
 2. வணக்கம்
  ஐயா

  பள்ளிக்கனவும் சமுதாயக்கனவும் சுமந்த கவிதை வரிகள் அருமையாக உள்ளது வகுப்றை படம் மிக அழகு வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 3. அற்புதம் ஐயா! எந்த வரியை புகழ்வது என்று தெரியவில்லை.
  நிச்சயம் பாடமாக இருக்கவேண்டிய கவிதைதான் .நம் கல்வி முறையின் தரம் என்று நம்பும் அபத்தங்களை இதைவிட வேறு எப்படியும் விளக்கிவிட முடியாது.
  மிகச் சிறப்பான படைப்பு. பாராட்டுக்கள் ஐயா!

  பதிலளிநீக்கு
 4. // ஐந்தில் வளைவது,
  ஐம்பதிலும் நிமிராது!//

  சமூக மாற்றங்கள்
  ஏன் மழுங்கிப் போகின்றன
  என்பதற்கான பதில் ...
  இந்த வரிகள்..
  அருமை அய்யா

  பதிலளிநீக்கு
 5. கள்ளுக் கடையை
  அரசே ஏற்று.
  கல்விக் கடையை
  தனியார்க்கு விற்றதில்
  ‘முதல்’ மோசம் போனது
  இந்த நர்சரிப் பூக்கள்தான்!


  அனைத்து வரிகளும் அருமை...

  வாழ்த்துக்கள் ஐயா.

  பதிலளிநீக்கு
 6. இருபத்து மூன்று ஆண்டுகள் முன்பு எழுதியது இன்னும் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது என்றால் சமுதாய மாற்றத்தைக் கொண்டுவர முடியாமல் போயிற்று என்று தானே அர்த்தம்? ஏன் ஒரே ஒரு அரசியல் கட்சியோ, இயக்கமோ, இந்தக் கல்வித்துறைச் சீர்திருத்தம் பற்றிக் கவனிக்கவேயில்லை? கல்வி தனியார்மயமானதில் அனைத்துக் கட்சிக்காரர்களும் பயனடைந்துவிட்டர்கள் என்பது தான் காரணமோ?

  பதிலளிநீக்கு
 7. குழந்தைகளின் உணர்வுகள் உங்களின் மூலம் வெளிப்பட்டிருக்கிறது. இந்த பாடலை குழந்தைகள் படிப்தைவிடவும் மழலையர் பள்ளி முதலாளிகள் படித்தால் நன்மை பிறக்க வாய்ப்பிருக்கிறது. கவிதைக்கு நன்றி அய்யா. ஸ்ரீமலையப்பன்.

  பதிலளிநீக்கு
 8. 1993ல் எழுதியது இன்றும் பொருத்தமாகத்தான் உள்ளது! சிறப்பான படைப்பு! வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 9. இந்தக் கரும்புகளின் குறும்புகள்
  கசக்கும்போதெல்லாம்
  ‘புத்தகத்தை எடுறா’ என்பதே
  உச்சபட்சத் தண்டனை! உண்மை தான் கொடுமை தான்
  என்ன செய்வது குழந்தைகள் காப்பகத்திலும். நிறைய கொடுமைகள் தானாம். அரசு தான் ஏதாவது செய்ய வேண்டும்.
  அருமையான நெஞ்சை பிழிகின்ற விடயம். நன்றி ....! பாண்டியன் வலைத்தளம் வழியாக வந்தேன்.

  தொடர வாழ்த்துக்கள்.....!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி சகோதரி. நண்பர் பாண்டியனுக்கும் நன்றி.
   கல்வி தொடர்பான எனது பிற கட்டுரைகளையும் உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது படிக்க வேண்டுகிறேன்.

   நீக்கு