நேர்மையான கவிதைகள்
அணிந்துரை– நா.முத்துநிலவன்
மகளாய், மனைவியாய், தாயாய், ஆசிரியராய், இரண்டாம்தரக்
குடிமக்களாக நடத்தப்படும் கோடிக்கணக்கான இந்தியப் பெண்களில் தானும் ஒருவராய், சமூக உணர்வுள்ள
சிறந்த மனிதருள் ஒருவராய், தன் சுயஅனுபவங்களையே,
கொஞ்சமாய்க் கற்பனை கலந்து(?) நெஞ்சைச் சுடும் கூர்மையான வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துப்
போட்டு, நேர்மையான கவிதைகளாய்த் தந்திருக்கிறார் கீதா.
இதற்காகவே இவரது
படைப்புகளை
வரவேற்க வேண்டும்.
ஏனெனில், நான் ஏற்கெனவே மும்பைக் கவிஞர் புதிய மாதவியின் “ோராம்“ கவிதைத்
தொகுப்பிற்குத் தந்த முன்னுரையில் சொன்னதுபோல, “எழுதும் பெண்கள் நம் சமூகத்தில் குறைவு. அதிலும் சமூக உணர்வோடு
எழுதும் பெண்கள் மிகவும் குறைவு. அதிலும் அரசியலை-பெண்ணியக் கருத்துகளைச் சரியாகப்
பாடுவோர் மிகமிகவும் குறைவு. இந்த மிகமிகவும் குறைவான எண்ணிக்கையில் கீதா இடம்
பெற்றிருப்பதே முதலில் பாராட்டுக்கு உரியது தானே?
கவிதைக்குரிய அழகியல் சற்றுக் குறைவாகவே இருந்தாலும், எடுத்த பொருளைக் கவிதையாக்கிக் கொடுத்த முறையில் பாசாங்கில்லை. இவை நேர்மையான கவிதைகள் என்பதற்காக மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
கவிதைக்குரிய அழகியல் சற்றுக் குறைவாகவே இருந்தாலும், எடுத்த பொருளைக் கவிதையாக்கிக் கொடுத்த முறையில் பாசாங்கில்லை. இவை நேர்மையான கவிதைகள் என்பதற்காக மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
அமெரிக்காவின்
அதிகாரம், க்யூபாவின் தன்மானம், அரபு நாடுகளின் கச்சா
எண்ணெய், ஆப்பிரிக்காவின் அடிமை வாழ்வு, சிங்களரின் சித்ரவதை, ஈழத் தமிழரின்
விடுதலை என பல்வேறு உலகளாவிய பாடுபொருள்களையெல்லாம் தொட்டுச் செல்லும் கீதா, கொத்தடிமைகள், குவாரியில்
குழந்தைகள், நெகிழியால் நிகழும் சுற்றுச் சூழல் கேடு, என நேரடி
உலகத்தின் நெஞ்சைத் தொட்ட இடங்களையும் பாடுகிறார்.
தனது ஆசிரியப்
பணியில் ஓவிய வீடு, ஏதும் புரியல டீச்சர், எனும் கவிதைகளைத்
தந்த கீதாவின் மாணவப் பிள்ளைகள் பாக்கியம் செய்தவர்கள்!
மழலை கொடுத்த
இனிப்பை
மாணவிகளுக்கு ஊட்ட
பிறந்தன எனக்கு நாற்பது
குழந்தைகள் ..எனும் “கீதா“விற்குள் பார்த்தால், சமுத்திரக்கனி
அவர்களே! தயா இருக்கிறார்தானே? இது உண்மையான சாட்டை!
எடுத்த எடுப்பிலேயே கீதா
தன்னைப் பற்றிச் சொல்லிவிடுகிறார் -
நான் தேங்கிய
குட்டையல்ல
துள்ளும் அருவி ..
பாய்ந்தோடும் ஆறு –எனும் போது,
“பேண்ணே நீ ஒரு புண்ணிய ஆறு,
உன்னைத் தடுக்க ஒருகை நீண்டால்,
பொங்கு புறப்படு
பொடிப்பொடி யாக்கு” – என்ற, கவிஞர்களின்
வேடந்தாங்கலான “அன்னம்“ மீரா தான் நம் ஆழ்ந்த பெருமூச்சுக்கிடையே அழியாத நினைவாகத்
தோன்றுகிறார்!
ஈழவலி
ஒரே வலிக்கு
எத்தனை வைத்தியம் – என்று கேட்கும் கீதாவின்
கேள்வி எனக்குள் பல ஆயிரம் கேள்விகளை எழுப்பியது! நமது
காலத்தின் பெரும் சோகம் இதுதானே?
நமக்கு
வேண்டியவர்களுக்கு உடல்நலமில்லை யென்றால், அக்கறை யுள்ளவர்கள்
எல்லாம் ஏதாவது வைத்தியத்தைச் சொல்லிக்கொண்டேதான் இருப்பார்கள். அது போலும்
நிலையில் நான் சொல்வது, “அக்கறையா சொல்றவங்க சொல்றத யெல்லாம் கேட்டுக்கங்க... ஆனா, மருத்துவர்
சொல்வதை மட்டும் மறக்காம செய்ங்க... என்ன நா சொல்றது சரிதானே? உடம்பப்
பாத்துக்கங்க” என்பதுதான்!
“கட்டிடக் கூண்டுக்குள்
மனிதப் பறவைகள்
நகரம்” - எனும் கவிதையில்
வரும் கீதாவின் கற்பனை, எழுத்தாளரும் காவல் துறைத் தலைவராக இருந்தவருமான திலகவதியின்
எழுத்தோடு தழுவி நிற்பதில் ஒன்றும் வியப்பில்லை! இதே பொருளில் ‘கல்மரம்’ எனும் நாவலை எழுதி சாகித்திய அகாதெமி
விருதையே பெற்றுவிட்டார் திலகவதி என்பதை கீதா கவனிக்க வேண்டும். கீதாவின் பல நல்ல
கவிதைகள் “குட்டி குட்டியாக இருக்கிறதோ? இன்னும் விவரித்து நீட்டி
எழுதலாமோ?” என்று எனக்குத் தோன்றியதையும் இந்த இடத்தில்
சொல்லி வைக்கிறேன்.
பல்லாயிரம்
கோடியில்
நான்கு வழிச்சாலை
தவறேதும்
செய்யாமல்
மரண தண்டனையில்
தருக்கள் – எனும் இடத்தில் மீண்டும்
கவிஞர் மீராதான் நினைவுக்கு வருகிறார். மனிதனைப் பட்டினி போட்டு மாட்டின்மேல்
கருணைகாட்டும் “ஜீவ காருண்யம்” யாருக்கு
வேண்டும்? அதுபோல, மரத்தை வெட்டாமல் மனிதவாழ்வு கிடையாது! என்ன..? ஒரு மரம்
வெட்டினால் பத்து மரங்களையாவது நட்டு வளர்க்க வேண்டும் என்று சட்டம் கொண்டுவர
வேண்டும் என்பதே என் கருத்து.
அறிந்தே அடகாய்
மீண்டும் – என்பது ஒரு நல்ல அரசியல்
கவிதை.
காட்டினில் மாநாடு கவிஞர் சிற்பி
பாணியிலான ஒரு கதைக் கவிதை. தமிழில் கதைக் கவிதைகள் மிகவும் கம்மி. நீங்கள்
தொடர்ந்து எழுதலாம் கீதா!
ஒவ்வொரு
புத்தாண்டும்
இதே சபதம் தான் - எனும் கவிதையில் , நக்கல் நையாண்டி,
கேட்க முடியுமா ?
கேட்க முடியுமா ? – எனும கவிதை எழுப்பும்
தர்ம ஆவேசம்,
பெண்ணை
பெண்ணாய் பாராமல்
மனிதராய்
பார்க்கும் நாள்
எந்நாள் வரும்? – எனும் கவிதையின்
பெண்ணுரிமைக் குரல்,
உணர்ந்து உணர
வைக்க முயன்றால்
என் இனமே
எனக்கெதிரி…
எத்தனை
வேலுநாச்சிகள் …! - எனும் கவிதையில்
ஆற்றாமை என விதம் விதமான பாடுபொருள்களை எடுத்துக்கொண்டு வெளுத்து வாங்குகிறார்.
இன்னும், கனவுகளின் நாட்குறிப்பு, தடைக்கல்லும்
படிக்கல்லாய், மரணம், ஐந்தறிவினம், மிதியடி – ஆகியவையும் நல்ல
கவிதைகளின் வரிசையில் இடம்பிடிக்கின்றன.
உணவைப் பரிமாறும்
சிறுவன்
சாப்பிடல எனக்
கூறுகையில் -
பூப்பறிக்கும்
பிஞ்சு விரல்கள்
தீக்குச்சி
அடுக்கி நொந்து போகையில் -
உறுத்துகின்றது எனும் கீதாவின் கவிதை
வரிகளைப் படிக்கும்போது, புதுமைப்பித்தனின் “மனித எந்திரம்” சிறுகதையும், சார்லிசாப்ளினின்
“மாடர்ன் டைம்ஸ்” மௌனப்படமும் கவிஞர் ‘சகாரா’வின்; ‘நதிக்கரையில் தொலைந்த மணல்” (2001) கவிதைத்தொகுப்பின்
முதல் கவிதையும் நினைவிலாடுகிறது…
‘அவசரமாய்ப் போகும்போது
ரோட்டில் கிடந்த
முள்ளை
எடுத்துப்
போடாமல் வந்ததற்கு
மனசு
குத்தியதுண்டா?’ - என்று தொடங்கி… அடுக்கிக் கொண்டே
போய்…
‘பாதையைக் கடக்கையில்
அணிற்பிள்ளை
குறுக்கிட
பதறியடித்து
பிரேக்
போட்டதுண்டா?
அப்படியானால்
வாழ்த்துகள்,
இன்னும் நீங்கள்
மனிதராய்
இருக்கிறீர்கள்! - என்று முடியும்
போது நம்மை நமக்குள்ளேயே பார்க்க வைத்துவிடுவார் சகாரா! இன்னும் – பலப்பல சந்தோஷம்
மற்றும் துயரங்களுக்குப் பின்னும் - கீதா மனுஷியாய்த்தான் இருக்கிறார் என்பது
மட்டுமல்லாமல் நல்ல கவிஞராகவும் பரிணமித்து வருகிறார் என்பதற்காகவும் கவிஞர்
சகாராவுடன் சேர்ந்து நாமும் வாழ்த்துவோம்.
வேலுநாச்சியார்கள்
வீணாய்ப் போவதில்லை!
கால மாற்றத்தில்
ஆலமரம் விழுதுகள் வழி வாழுமேயன்றி வீழ்ந்து விடுவதில்லை! கீதா, வேலுநாச்சியாரின்
விழுது! அடுத்தடுத்த படைப்புகள், அரசியல் பார்வையோடு சமூகம்பாடும் அழகியலாக வளருமென்று
நம்புகிறேன், வளர வேண்டி வாழ்த்துகிறேன்!
அன்புத் தோழன்,
நா.முத்து நிலவன்
புதுக்கோட்டை – 622 004
-----------------------------------------------------------------------------
மு.கீதாவின் வலைப்பக்கம் பார்க்க -
http://velunatchiyar.blogspot.com/
நல்ல படைப்பாளரும், கவிஞர் ஜீவபாரதியின் “வேலுநாச்சியார்” நாவல் பற்றி எம்.ஃபில் படிப்புக்கு எடுத்துக்கொண்டு ஆய்வு செய்த ஆசிரியருமான மு.கீதா அண்மையில்தான் வலைப்பக்கம் தொடங்கியிருக்கிறார். மூத்த வலைப்பதிவர்கள் அவருக்கு ஆலோசனைகள் வழங்க வேண்டுகிறேன்.
நல்ல படைப்பாளரும், கவிஞர் ஜீவபாரதியின் “வேலுநாச்சியார்” நாவல் பற்றி எம்.ஃபில் படிப்புக்கு எடுத்துக்கொண்டு ஆய்வு செய்த ஆசிரியருமான மு.கீதா அண்மையில்தான் வலைப்பக்கம் தொடங்கியிருக்கிறார். மூத்த வலைப்பதிவர்கள் அவருக்கு ஆலோசனைகள் வழங்க வேண்டுகிறேன்.
கருத்துச் செறிவு அதிகம் இருக்கும் தங்களின் அணிந்துரை நிச்சயம் கீத அவர்களை ஊக்கப்படுத்தும் உற்சாகப்படுத்தும் என்பதில் ஐயமில்லை..வெற்றிபெற கீதாவுக்கு வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குகவிதை நூல் அறிமுகம் அருமை. நூலினைப் படிக்க வேண்டும் என்ற ஆவலினைத் தூண்டுககிறது தங்களின் வரிகள். சகோதரி கவிஞர் கீதாவிற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்,
பதிலளிநீக்குஇந்த அணிந்துரை இந்தத் தொகுப்பை வாங்க தூண்டுகிறது..
பதிலளிநீக்குதங்கள் வாசிப்பின் பரப்புக்கும்
விமர்சனத்தின் கூர்மைக்கும்
மற்றுமொரு சான்று
அருமை அண்ணா!
நூல் அறிமுகம் அருமை ஐயா... அடுத்த முறை சந்திக்கும் போது வாங்கிக் கொள்வேன்...
பதிலளிநீக்குசகோதரி அவர்களுக்கு வாழ்த்துக்கள்...
வணக்கம் அய்யா.
பதிலளிநீக்குசகோதரியின் கவிதைக்கு நீங்கள் தந்துள்ள அணிந்துரை அழகுரை. அத்தனை அம்சங்களும் அணிந்துரையில் சொல்லி விட்டீர்கள். இனி விடுவோமா என்ன! நிச்சயம் தொகுப்பைப் படித்து விடுவோம். தங்கள் அணிந்துரை கவிஞர் கீதா அவர்களுக்கு உற்சாகத்தையும் உத்வேகத்தையும் அளிக்கும், இன்னும் கவிதை தொகுப்புகளை அவர்கள் தர உதவும், தருவார்கள். பகிர்வுக்கு நன்றி அய்யா.
பெண்ணுக்கு காதணி போன்று, உங்களது அணிந்துரை கவிதைக்கும் அழகு சேர்த்திருக்கும். வாழ்த்துக்கள் அய்யா!.
பதிலளிநீக்குஉங்களின் அணிந்துரையே சகோதரி கீதாவின் கவிதை தொகுப்பு நூல் எப்படி இருக்கும் எனக் கட்டியம் சொல்கிறது.
பதிலளிநீக்குஉங்கள் எழுத்துகள், பேச்சுகள் யாவும் நிழலென உங்களைப் பின்தொடரச் செய்கிறது. அற்புதமாக இருக்கிறதையா உங்கள் எடுத்துக்காட்டுகள்.!..
மிக மிக அருமை! பகிர்வினுக்கு நன்றியுடன்
உங்களுக்கும் சகோதரி கவிஞர் கீதாவிற்கும்
இனிய நல் வாழ்த்துக்கள்!
கவியாழியார், கரந்தையார், தங்கை மகி, வலைச்சித்தர், தங்கை மதி, தோழர்க்ள் பாண்டியன், மபா ஆகியோரின் அன்புக்கு நன்றி. (எனது கருத்துரையால் கருத்துரைஎண்கள் கூடவேண்டாமே என்று... ஒன்றாகவே நன்றி தெரிவிக்கிறேன். நண்பர்கள் தவறாக எண்ணாமல் தொடர்ந்து தங்கள் கருத்துகளைத் தெரிவிக்க வேண்டுகிறேன்)
பதிலளிநீக்குஅழகான அணிந்துரை....
பதிலளிநீக்குதாங்கள் கொடுத்திருந்த இணைப்பு மூலமாக திரு.லியோனி தலைமையில் தங்கள் பட்டி மன்றம் பார்த்தேன். நன்று.