கல்கியில் வெளிவந்து, எம்ஏ தமிழ் வகுப்புக்குப் பாடநூலான எனது கவிதைஜெயஹே!
ஜெயஹே!
ஜெய ஜெய ஜெய ஜெயஹே!

எதிரிகளை வணங்கி            
கிருஷ்ணனைக் குறிபார்க்கும்
அர்ச்சுனர்கள்.

துச்சாதனன் பதற
பாஞ்சாலியை உரிக்கும்
பாண்டவர்கள்

கோவலனை எதிர்த்து
பாண்டியனிடம் நீதிகேட்கும்
கண்ணகியர்.


விஸ்கி பாட்டிலுக்காய்
தேச ரகசியத்தை விற்கும்
அதிகாரிகள்.

தியாகிகள் பதற
துரோகிகள் செலுத்தும்
அரசியல்இமய முடிவரை வளர்ந்தும்
இந்துமாக்கடலில் கிடக்கும்
பொருளாதாரம்.

தந்தைக்கு சாராயம் தந்து
பிள்ளைக்கு சத்துணவு போடும்
திட்டங்கள்.


புதிய மந்திரி ஆணையிட
முன் அனுபவம் கேட்கும்
வேலைவாய்ப்புகள்.

இடமில்லாத பந்தியில்
இலைப் பீத்தலுக்குச் சண்டையிடும்
சாதிகள்.

அன்பே தெய்வ’ மென
அடுத்தவனை இடிக்கும்
மதங்கள்

சிலுக்குப் படமும் சிருங்கேரி மடமுமாய்
இலக்கியம் வளர்க்கும்
பத்திரிகைகள்

அறிவியல் கலையோடு
பேய்பிடித்தாடும்
திரைப்படங்கள்.

உடல் மண்ணுக்கு
உயிர் அண்ணன்--க்காய்
(வி)ரசிகர்கள்

கம்ப்யூட்டரை ஜெயித்து
ஜோதிடத்திடம் தோற்கும்
வாழ்க்கை

நோய் நாடாமல்
நோயிலும் முதல்’ நாடும்
காவல்.

சலுகைகளில் ஏமாந்து
உரிமைகளை இழக்கும்
ஜனங்கள்

எழுத்துகளை நிராகரித்து
காரடியில் நசுங்கும்
ரோஜாக்கள்

இலங்கையிலே தப்பிவந்து
இராமேஸ்வரத்தில் கற்பிழக்கும்
தமிழச்சி

எல்லாம் நடந்துவர- 
பார்த்துச் சிரித்து பழசாகும்
நீங்கள்

நரகத்தின் சமாதியிலும்
புல்லாய் முளைத்தெழுதும்
நாங்கள்

ஜெயஹே! ஜெயஹே!
ஜெய ஜெய ஜெய ஜெயஹே!
--------------------------------------------------- 
“கல்கி“-வார இதழ் கடைசி முழுப்பக்கக் கவிதையாக வெளிவந்த நாள் - 29-12-1985. பின்னர் எனது “புதிய மரபுகள்“ தொகுப்பில் இடம்பெற்று, மதுரை-காமராசர் பல்கலையின் எம்.ஏ.,தமிழ் வகுப்பின் பாடநூலானது.
துறைத்தலைவர் முனைவர் இரா.மோகன் அவர்களின் தலைமையில் “மாணவர்-நூலாசிரியர்“ சந்திப்பின் போது மாணவர்களின் அதிகமான கேள்விக் கணைகளில் விழுந்தது, அருகில் பார்வையாளராக இருந்து பார்த்து ரசித்து, உடனே தான் முதல்வராகப் பணியாற்றிய “பணியாற்றும் கல்லூரிஆசிரியர்க்கான பணியிடைப் பயிற்சிக் கல்லூரி”க்கு அழைத்து, இரண்டு அமர்வுகளில் தொடர்ச்சியாகப் பேச வைத்தவர், இன்றைய தமிழ்ப்பல்கலைத் துணைவேந்தர் முனைவர் திருமலை அவர்கள். இந்த இருபெருந்தகையருமே எனக்குக் கவிதையாலன்றி நேரடி அறிமுகமில்லாதவர்கள் என்பதை நன்றியுடன் நினைத்து வணங்குகிறேன்.
---------------------------------------------------

32 கருத்துகள்:

 1. வணக்கம்
  ஐயா

  கவிதை அருமையாக உள்ளது உங்கள் கவிதை தேர்வாகியமைக்கு வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 2. இந்தியப் பண்பாட்டை நல்லாவே சாடி இருக்கிறீங்க .தங்களுக்கு கிடைத்த பெருமைக்கு வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அய்யய்யோ பண்பாட்டைச் சாடலீங்க அய்யா, பண்பாட்டைத் தலைகீழாக்கிக் கொண்டிருப்பவர்களைச் சாடியிருப்பதாக அல்லவா நினைத்துக்கொண்டிருக்கிறேன்? என் கவிதையில ்அபபடித் தோன்றவில்லையோ... நல்லாப் பாருங்க அய்யா.

   நீக்கு
 3. முரண்பட்ட சமூகத்தைப் பற்றி முரண்சுவையோடு ஒரு கவிதை. நாட்டு நிலைமையை அருமையாகவே சொல்லி இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 4. நிதர்சனங்களை நிர்தாட்சண்யமாய் நிகழ்த்தும்
  நிகழ்வுகளை படம் பிடித்து கவிதையாக்கியிருக்கும்
  அசாதாரண கவிதை ...!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அந்த ராமேஸ்வரம் நிகழ்ச்சி உண்மையில் நடந்தபோது நான் என்ன சொல்வதென்றே தெரியாமல்தான் கவிதையில் குமுறிவிட்டேன் சகோதரி.. என்ன நாடு இது?

   நீக்கு
 5. ரொம்ப நல்ல கவிதை என்று சொல்ல முடியாத உள்ளடக்கத்தையும் விதத்தில் உணர்வுகளையும் கொண்டிருக்கும் ஒரு வேதனைக் கவிதை...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வேதனைக்கு நம்மால் விடிவுதர முடியவிலலையே எனனும் வேதனைதான் கவிதைக் கரு... நம் ஆற்றாமைக் கவிதை... கொஞ்சம் கோபமாய் வெளிப்பட்டிருக்கிறது. அவ்வளவே

   நீக்கு
 6. உண்மைக் கவிஞனுக்கே இருக்கவேண்டிய
  குத்திகாட்டலுடன் கேலியுமாக
  நாட்டு நிலைமையைக் கண்ட பின்னே
  வேட்டு வைத்துக் காட்டியதை - எவராலும்
  மறக்க முடியாத கவிதை இது!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் நண்பரே! எழுதிப் பல்லாண்டு கழிந்தும் எனக்கே நினைவில் இருக்கக் கூடிய ஒரு சில கவிதைகளில் இதுவும் ஒன்று. நன்றி

   நீக்கு
 7. வணக்கம் அய்யா.
  சமூகக் கடலில் காணப்படும் அவலங்களை கரைசேர்த்திட துடிக்கும் சீர்திருத்திற்கான வரிகளை, கருத்துக்களை உள்ளடக்கிற அற்புதமான கவிதை. ஒவ்வொருவரும் தன்னை சுய பரிசோதனை செய்து கொள்ள உதவும் படைப்பு. எம்.ஏ வகுப்புக்கு பாடநூலாக தேர்வு ஆனதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை. ஏனெனில் அத்தனை சிறப்பும் உள்ளடக்கிய கவிதை. தொடர்ந்து தங்கள் சிந்தனை இக்கால இளைஞர்களுக்கு உதவட்டும். பகிர்வுக்கு நன்றீங்க அய்யா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எங்களுக்கு அடுத்த தலைமுறை நீங்கள்தான் பாண்டியன்... எங்களால் முடியாததும் உங்களால் முடிந்தால் அதைவிட மகிழ்ச்சி வேறென்ன? உங்களைப் போலும் இளைஞர்களை எங்களின் தோள்களில் ஏற்றிக்கொள்ள ஆசைப்படுவதன் நோக்கமும் அதுதான்... நீங்களெல்லாம் இன்னும் இன்னும் சாதிக்க வேண்டும்... சமூக மாற்றங்களை நிகழ்த்த வேண்டும்

   நீக்கு
 8. முரண்பட்ட வாழ்வு
  முரண்படா பேச்சு ..
  புறம் நம்பி
  புகழ் பாடும் கவிகள்.
  புகழான கவியை
  புரிந்துகொண்ட மேன்மை .
  மேன்மை ......
  உங்களுக்குமட்டுமல்ல .
  உங்களால் எங்களுக்கும் ..
  ஆய்வேடு செய்ய தேவையான கருத்தூட்டம்செறிந்த வரிகள் .முதுகலைக்கு இணைக்கப்பது சிறப்பே .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி திரு சுந்தரம் அவர்களே. ஆய்வுகள் தொடரட்டும். அதன்வழி ஆக்கங்கள் படரட்டும். அதுதானே எதிர்பார்ப்பு?

   நீக்கு
 9. சலுகைகளில் ஏமாந்து
  உரிமைகளை இழக்கும்
  ஜனங்கள்...
  வரிக்கு வரி சமூகத்தை சாடிப்போன விதமும்
  நரகத்தின் சமாதியிலும்
  புல்லாய் முளைத்தெழுதும்
  நாங்கள்..
  முடித்த விதமும் மிகவும் சிறப்புங்க அண்ணா. சகோதரர் பாண்டியன் சொல்வது போல பாடநூலாக தேர்வு ஆனதில் ஆச்சர்யம் இல்லை. பகிர்வுக்கு நன்றிங்க அண்ணா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி சசி. உன்னைப் போலும் -எங்களைவிடவும் வேகமும் விவேகமும் கொண்ட- இளைய பாரதத்திடம் எனது எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் இணைந்தே வருகிறது. உங்கள் காலத்தில் (இன்னும் 25வருடத்தில்) நம் நாடு இந்தத் தலைகீழ் விகிதங்களை நிமிர்தத வேண்டுமம்மா...

   நீக்கு
 10. நா எப்பவும் பெருமைபடுற விஷயம்.... இவருதான் என்னோட தமிழ் அய்யா.....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உன் அன்புக்கு நன்றி சாரதி. சென்னையில் இருந்துகொண்டு எதையாவது செய்து, வாழ்க்கையுடன் போராடிக்கொண்டும் என்னையும் தொடர்ந்துவருவதே மகிழ்ச்சியா இருக்குப்பா. ஆனாலும், அக வாழ்க்கையை அமைதியாக அமைத்துக்கொண்டு விரைவில் புறவாழ்க்கைக்கு வந்து என்னைவிடவும் வேகமாக முன்னேறினால்தான் எனக்கு மகிழ்ச்சி. தம்மில் தம்மக்கள் அறிவுடைமை -குறள்.

   நீக்கு
 11. மிகவும் கூர்மையாக சாடும் உணர்வலைகள்.பாதித்த கவிதைகளில் இதுவும் ஒன்றாய் .நன்றி சார்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி கீதா. உங்களிடம் இன்னும் கூர்மையான படைப்புகளை எதிர்பார்க்கிறேன். உங்களால் நிச்சயம் முடியும் என்னும் உறுதி எனக்குள் இருக்கிறது. எழுதுங்கள், படியுங்கள், இயங்குங்கள்.

   நீக்கு
 12. அருமையான சீர்திருத்தக் கவிதை ஐயா! விளாசி இருக்கீங்க...

  உங்கள் கவிதையை இவ்வளவு தாமதமாகவா பாடநூலுக்கு தேர்வு செய்வாங்க...

  சரி... இப்பவாகிலும் உணர்ந்ததே பெரிசுதான்..

  வாழ்த்துக்கள் ஐயா!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இல்லை சகோதரி கடந்த 1993முதல் இந்த 2013 வரை இருபதாண்டுகளாகத் தொடர்ந்து ஒரு கவிதைநூல் எந்தவிதமான குறுக்குவழி முயற்சிகளும் இல்லாமல் ஒரு பல்கலையில் பாடநூலாக இருப்பதே பெரிய விடயம் அல்லவா?

   நீக்கு
  2. கவிதை அருமை அய்யா... நிகழ்கால நிஜங்கள் இறந்த காலத்திலிருந்தே நிகழ்ந்துகொண்டிருபதை நினைத்தால் இன்னும் வியப்பாக இருக்கிறது... ஸ்ரீமலையப்பன்

   நீக்கு
 13. வரலாற்றின் தவறுகளைப் புரிந்துகொள்ளாவிடில் மீண்டும் அதில் வாழ சபிக்கப்படுவது தொடர்கிறது. இல்லையா மலையப்பன்?

  பதிலளிநீக்கு
 14. நீங்கள் பல ஆண்டுகளுக்கு முன்னாள் எழுதியது இப்போதைய சூழலோடும் பொருந்துகிறது. ஒன்றையும் விட்டுவைக்காமல் சொல்லி விட்டீர்கள். சிறப்பான கவிதை

  பதிலளிநீக்கு
 15. அருமை ஐயா..!! இப்போதும் பொருந்துகிறது இந்தக் கவிதை..!!

  பதிலளிநீக்கு