நெல்லை கரிசல்குயில் கி்ருஷ்ணசாமி பாடிய எனது இசைப்பாடல்


எந்தையும் தாயும்... (இசைப்பாடல்) - நா.முத்துநிலவன்


பண்டைப் புகழும் பாரம் பரியப்
                பண்புகள் மிக்கதும் இந்நாடே! – அற்பச்
சண்டையில் எங்கள் அண்டை வீட்டவர்
                மண்டை உடைவதும் இந்நாடே!

எல்லா வகையிலும் வல்லோர் எங்களை
                ஏளனம் செய்வதும் இந்நாடே! - வெறும்
செல்லாக் காசென மனிதப் பண்புகள்
                சிரிப்பாய்ச் சிரிப்பதும் இந்நாடே!

வற்றா நதிகளும் வண்டல் பூமியும்
                வளம் கொழிப்பதும் இந்நாடே!-தினம்
பற்றாக் குறைகளும் பட்டினிச் சாவும்
                பரம்பரை யாவதும் இந்நாடே! 

வேலைப் பளுவால் மாதச் சம்பளர்
                வெந்து கிடப்பதும் இந்நாடே!-பட்ட
நூலைப் பிடித்தவர் வேலைக்கலைந்துயிர்
                நொந்து கிடப்பதும் இந்நாடே!

அங்கே வெள்ளமும் இங்கே வறட்சியும்
                அவதிப் படுவதும் இந்நாடே!-தினம்
கங்கா காவிரித் திட்டம் பற்றிய
                காலட் சேபமும் இந்நாடே!

விடுதலைப் போரில் வேற்றுமைக் கெதிராய்
                வீரம் தெறித்ததும் இந்நாடே!-இன்று
அடுதலும் கெடுதலும் அடுத்தவரோடும்
                ஆல்போல் தழைத்ததும் இந்நாடே!

புத்தன் ஏசு காந்திய வழியார்
                போதனை செய்ததும் இந்நாடே! -மத
ரத்தக் களறியும் ஜாதிக் கொடுமையும்
                நித்தம் நடப்பதும் இந்நாடே!

இகம்பர சுகம்பெற எண்ணற்ற முனிகள்
                எழுந்தருள் செய்ததும் இந்நாடே – தினம்
திகம்பர முனிபோல் எங்கள் குழந்தைகள்
                தெருவில் அலைவதும் இந்நாடே!

சுதந்திரம் வந்ததும் சொர்க்கம் வருமெனச்
                சொல்லித் திரிந்ததும் இந்நாடே! - அட்டத்
தரித்திரம் எங்கள் சரித்திர வாழ்வில்
                நரித்தனம் செய்வதும் இந்நாடே.

சீற்றம் கொண்டவர் அவசரமாகச்
                சிதறிப் போவதும் இந்நாடே!-ஒரு கை
சோற்றுக் காகவே ஓட்டும் போடுகிற
                சுதந்திர நாடும் இந்நாடே!

தலைவர்கள் எளிமை கட்டிக்காக்கவே
                செலவுகள் செய்வதும் இந்நாடே!-இந்த
நிலைமை உணர்ந்தே கூனர்நிமிர்ந்தே
                நெருப்பு விழிப்பதும் இந்நாடே!

எந்தையும் தாயும் வறுமையில் வாடி
                இறந்து கிடந்ததும் இந்நாடே! - அவர்
சந்ததி இன்று சங்கம் அமைத்தொரு
                சமர் தொடங்கியதும் இந்நாடே!-
                சமர் தொடங்கியதும் இந்நாடே
-------------------------------------------------------- 
(செம்மலர் - திங்களிதழில் 1988இல் வெளிவந்த இந்தப் பாடல், நெல்லை “கரிசல்குயில்“ கிருஷ்ணசாமியின் முதல் ஒலிநாடாவில் இடம்பெற்ற பெருமையுடன் எனது “புதிய மரபுகள்“தொகுப்பில் சேர்ந்தது)

8 கருத்துகள்:

 1. வணக்கம்
  ஐயா

  அருமையான பதிவு வாழ்த்துக்கள் தொடருகிறேன்

  -நன்றி-
  -அன்புடன-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 2. வரிகளில் பல உண்மைகள்...

  வாழ்த்துக்கள் ஐயா....

  பதிலளிநீக்கு
 3. நன்றி ரூபன், வலைச்சித்தர் இருவருக்கும் நன்றி

  பதிலளிநீக்கு
 4. இசைப் பாடல் என்னுள்
  மெட்டுக் கட்டிக்கொண்டதையா!

  அற்புதம்!. ஆழ்ந்து ரசித்தேன்!
  மேலும் எழுத வார்த்தைகள் வருகுதில்லை...

  வாழ்த்துக்கள் ஐயா!

  பதிலளிநீக்கு
 5. "பண்டைப் புகழும் பாரம் பரியப்
  பண்புகள் மிக்கதும் இந்நாடே! – அற்பச்
  சண்டையில் எங்கள் அண்டை வீட்டவர்
  மண்டை உடைவதும் இந்நாடே!" என்ற
  வரிகளுக்கு உயிர் இருப்பது போல
  எனக்குத் தெரிகிறது...

  பதிலளிநீக்கு
 6. வரிகள் அனைத்தும் நாட்டின் உண்மை நிலையை உணர்த்துகின்றன சார்

  பதிலளிநீக்கு
 7. வணக்கம் அய்யா.
  வாிகள் அனைத்தும் நடப்புகளை நன்றாக அலசி உள்ளது. இசையோடு பாடுவதற்கு ஏற்ற பாடல். தங்கள் சிந்தனை சமூக மாற்றத்திற்கான விதை. பகிர்வுக்கு நன்றி அய்யா.. (ஆண்ராய்டு மொபைலில் தட்டச்சு செய்தது.)

  பதிலளிநீக்கு
 8. // நூலைப் பிடித்தவர் வேலைக்கலைந்துயிர்
  நொந்து கிடப்பதும் இந்நாடே!//

  டாப் டக்கர்...

  பதிலளிநீக்கு