எனது கவிதைத் தொகுப்புக்கு, காலஞ்சென்ற கவிஞர் கந்தர்வன் அவர்கள் எழுதிய அணிந்துரையும் எனது முன்னுரையும்.வானம்பாடிக் கவிஞர் மீரா அவர்களின் 
“அன்னம்“ வெளியீடாக  வெளிவந்த எனது 
“புதிய மரபுகள்“ கவிதை நூலிலிருந்து...
நா. முத்துநிலவன்
----------------------------------------------------------------------

அணிந்துரை - கந்தர்வன்

புதுமை மிகவும் தற்காலிகமானது. அடுத்து வரும் இன்னொரு புதுமை,  முன்னைப் புதுமையை அலட்சியமாகப் பழசாக்கும். பொருள்கள், கலை, இலக்கியம் இவை தாண்டி, மனிதர்களுக்குப் பிராயங்களும் பழசாகி விடுகிறது. இளமைப் பிராயம், பாலப் பிராயத்தையும், முதுமைப் பிராயம் இளமைப் பிராயத்தையும் இப்படித் தான் ஈவிரக்கமற்றுப் பழசாக்கிக் கொண்டிருக்கிறது.
ஆனால் உண்மையில் பிராயம் என்பது மடிவதில்லை. அது இன்னொருவனிடத்தில் எப்போதும் துளிர் விட்டுக் கொண்டிருக்கிறது. பால்யம், இளமை, முதுமை என்ற பிராயங்கள் அன்று முதல் இன்று வரை பொதுவில் ஒன்று எனினும் எல்லாக் காலங்களிலும் அவை ஒரே மாதிரி நடந்து கொண்டதில்லை.
இன்னொரு ஆளும் நுழைகிற மாதிரி ஏன் இப்போது இளைஞன் பனியன் அணிகிறான்? அளவான பனியன் அவனுக்கு அலுத்து விட்டது. ஒரு காலத்தின் அளவுஅடுத்தடுத்த காலத்திற்கு ஓவ்வுவதில்லை.


அவன் வேலைகளுக்கும், சௌகரியத்திற்கும் ஏற்றாற் போல் உடையணிந்து கொள்கிறான். அல்லது அவன் வாழ்க்கையை உதாசீனப்படுத்திய சமூகத்தை இப்படி ஒன்றை அணிந்து திரும்ப உதாசீனப் படு;த்துகிறான். இதுவும் தவிர என்ன காரணத்திற்கோ ஏதோ ஒரு நாட்டில் பழக்கமாகி விட்ட ஒருவித உடையை இவனும் போட்டுக் கொண்டு அவர்களைப் போல் காண்பித்துக் கொள்ள நினைக்கிறான்.
 
 
   
அவனுக்குப் பிடித்திருக்கிறது
 
  அவனுக்குத் தேவைப்படுகிறது.
 
  அவனுக்கு நிறைவைத் தருகிறது
 
  அவன் அணிந்து கொண்டான்.

எதுவொன்றும் பலமுறை நிகழ்ந்து மனிதர்களுக்குத் தேவைப்படுவதாகவும் பிடித்ததாகவும் நிறைவையளிப்பதாகவும் இருக்கிறதோ அதுமரபாகி விடுகிறது. தொடர்ந்து இதைக் கடைப்பிடித்து வரும் நாட்களில் புதிய தேவைகள், புதிய மனசு காரணமாக மரபு எதையாவது சேர்த்துக் கொள்கிறது; சிலவற்றை விட்டு விடுகிறது.

தலைவர், மைக்செட் என்று திருமண மரபு மாறி வருகிறது. இதன் தொடர்ச்சியில் என்ன வகையில் திருமணங்கள் நடக்கும் இன்னும் நூற்றாண்டுகளுக்குப் பின் என்பதை ஓரளவு இப்போதே அனுமானிக்கலாம். ஆனால் அப்போது வரப்போகும் ஒரு முறையை இப்போதே பேசினால் மறுப்பதுமட்டுமல்ல, அடிக்கவே ஆட்களுண்டு.
மரபை நாம் தான் ஏற்படுத்தினோம். மரபை நாம் தான் மாற்றுகிறோம். மரபு மாறிக்கொள்வதாகவும் நாம் தான் சொல்லிக் கொள்கிறோம்.

புதிய வாழ்க்கை முறையை பழைய தலைமுறை எளிதில் ஏற்றுக் கொள்வதில்லை. தங்கள் மரண பரியந்தம் ஏற்றுக் கொள்ளாமலேயே சென்று விட்ட தலைமுறை ஆட்களுண்டு. காலங்காலமாக இந்த யுத்தம் நீடித்துக்கொண்டேயிருக்கிறது. இந்த யுத்தங்களின் போது வெளியில் விழுந்த வார்த்தைகளை விடவும் மனசுகளில் கொதித்து அடங்கிய வாக்கியங்களின் எண்ணிக்கை அளவற்றது.

புதியவைகளை ஏற்றுக் கொள்ளப் பிரார்திப்பதும் ஏற்றுக் கொள்ள மறுப்பதும் எவ்வளவு பெரியசோகம், இவைகளை மனதிற் கொண்டே திரு. முத்துநிலவன் இந்த நூலுக்குத் தலைப்பையும் இது பாதித்ததாலேயே கவிதைகளையும் எழுதியிருக்க வேண்டும்.

ஒரு மாமாங்கத்திற்கு முன்பு நான் புதுக்கோட்டைக்கு மாற்றலாகி வந்திருந்தபோது கீழ நாலாம் வீதியிலிருந்த ஒரு லாட்ஜில் என்னைச் சந்தித்தார் முத்துநிலவன். அது ஒரு முக்கிய நாள். அன்றிலிருந்து இன்று வரை பார்க்காமலிருந்தால் பைத்தியம் பிடித்து விடும் என்கிற மாதிரி ஒரு நெருக்கம்.

முத்துநிலவன் ஏராளமான அனுபவங்களையுடையவர். வடுக்களைக் கணக்கிட முடியாது. அவர் இன்றும் ஏராளமாய் சிரித்துக் கொண்டிருக்க அவையும் காரணமாயிருக்கலாம்.

முத்துநிலவன் என்கிற மனிதனுக்குப் பன்முகங்கள். கல்லூரியில் விஞ்ஞானம் படித்து, விட்டு விட்டுத் தமிழில் எம்.ஏ. படித்தார். (எம்.பில் சேர்ந்த போது, ஒரு போராட்டத்தில் அவர் தலைமையில் இருந்த சங்கமும் குதித்த போது நிறுத்திவிட்டார்) ஒரு கவிஞர், ஒரு சிறுகதை எழுத்தாளர், அற்புதமான ஓவியர், அழகு மிக்க பேச்சாளர், நிறைவானபாடகர், நல்ல நடிகர், ஆற்றல் மிக்க தலைவர்; இப்படி நிறைய சொல்லலாம்.

இவர் கவிதைகளைக் கல்கிகடைசிப் பக்கத்தில் பல முறை வெளியிட்டது.
கதைக்கு இரு முறை பரிசு தந்தது. குமுதம் பரிசு தந்தது, செம்மலர் தீக்கதிர் மகிழ்ந்து வெளியிட்ட படைப்புகள் நிறைய.

முத்து நிலவன் கவிதைகளில் பொதுப்படையானவை அதிகமாகவும் தனிப்பட்டவை குறைவாகவும் இந்தத் தொகுப்பில் தெரிகிறது.
 

 
அன்பே தெய்வமென
 
அடுத்தவனை உதைக்கும்
 
மதங்கள்

 
இலங்கையிலே தப்பி வந்து
 
இராமேஸ்வரத்தில் கற்பிழக்கும்
 
தமிழச்சி

என்பதில் பொதுமை அதிகம்.
ஆனால் முதுகு நரம்பைச் சொடக்கெடுக்கும் கனம்.
 

 
கலைக்கு வயதில்லை,
 
சும்மா சொல்லக்கூடாது
 
அந்த ஐ.ஏ.எஸ். வீட்டுக்
 
கிழவியின் நடனம்
 
அருமை.

இந்தக் கிண்டலும் கேலியும் தொகுதி முழுதும் விரவிக் கிடக்கிறது.

இன்னோரிடத்தில் நர்சரிப் பள்ளிகளைப் பற்றி இவ்விதம் சொல்கிறார்.
 
பட்டன் போடவும்
 
தெரியாத பருவத்தில்
 
சீருடையா அவை
 
கட்டம் போடாத
 
கைதிச் சட்டைகள்

கூவாய் கருங்குயிலேஎன்ற மண்டேலாவுக்கான கவிதையை வாய் விட்டுப் பத்துப் பேர் முன்னால் உட்கார்ந்து கவிதை வாசிக்கத் தெரிந்தவர்கள் வாசித்துக் காட்டவேண்டும்.
 
வெள்ளை, கருப்பு
 
  மாநிற மெல்லாம்
 
வேகம் பெற்று வேகம் பெற்று
 
உலகம் முழுவதும்
 
ஓங்கார நாதம்
என்று படிக்கப் படிக்க நாக்குத் துடிக்கும்.
எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் இவர் எழுதிய ஒரு காதல் கடிதம்இன்றைக்கும் பொருந்தும் படியான  கருத்துடனும் நடையுடனும் திகழ்வது ஆச்சர்யம்.

 
நிலத்தைப் பயன்படுத்தி
 
            நிலையாக வாழ்ந்த போது
 
உழுதல் முதலான
 
            உடலுழைப்பு வேலைகளை
 
ஆடவரே செய்து வர
 
             அவனுக்குத் துணையாக
 
ஆடுகளை மாடுகளை
 
             அடுக்களையைப் பெண் பார்த்தாள்
என்று வரும் வரிகளை ஆழ்ந்து படிக்க வேண்டும். சந்தம் அருவி போல் வருகிறது.

மரபுக் கவிதை புதுக் கவிதை பற்றி கவிதையில் விவாதம், ஒரு புது முயற்சி.

மரபிலும் புதுசிலும் அந்தந்த லட்சணங்களோடு இதில் கவிதைகள் உள்ளன.

எங்கள் கிராமத்து ஞானபீடம்கவிதையை நீங்கள் அவசியம் படிக்க வேண்டும் என்று உங்களையும் ஐஸ்கவிதை போல் தொடர்ந்து அழகிய கவிதைகளைப் படைக்க வேண்டுமென்று முத்து நிலவனையும் கேட்டுக் கொள்கிறேன்.

 
முத்து நிலவன் என்கிற ஆளுமையை
 
நீங்கள் இந்தத் தொகுப்பு முழுதும்
 
பார்த்து ஆனந்திக்க வேண்டும்.
        
 
கந்தர்வன்
 
19.6.1993
 
புதுக்கோட்டை. 
------------------------------------------------------------------------------------------------------ 

எனது புதிய மரபுகள்கவிதைத் தொகுப்பு மதுரைப் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. தமிழ் இலக்கிய வகுப்புக்குப் பாடநூலாக இருந்தது என்னை யாரென்று தெரியாமலே 1995இல் இதனைப் பாடநூலாக வைத்த பேராசிரியர் திரு.இரா.மோகன் அவர்கள் அதன்பின் படைப்பிலக்கிய வாதியுடன் சந்திப்புஎனும் மாணவரின் நிகழ்ச்சிக்கு என்னை அழைத்தார்என்று அண்மையில் புதுக்கோட்டையில் நடந்த கவிஞர் தங்கம் மூர்த்தியின் நூல் வெளியீட்டு விழாவில் நான் நன்றியுடன் சொல்ல, பின்னர் பேசிய திரு இரா.மோ.அவர்கள். இருந்தது அல்ல முத்துநிலவன், நான் ஓய்வுபெற்ற பிறகும் இப்போதும் இருக்கிறதுஎன்று திருத்தினார்கள். சாதி பார்த்து, சார்பு பார்த்து இதையெல்லாம் செய்யும் கல்வித்துறையில் இவர் ஓர் ஆச்சரியம்தான் என்று நான் நன்றியுடன் நினைவு கூர்கிறேன். இதே நூல் 1993இன் சிறந்த கவிதைத் தொகுப்பாக தமிழ்நாடு கலைஇலக்கியப் பெருமன்றத்தின் விருதினையும் பெற்றுத் தந்தது என்பதையும் நன்றியோடு தெரிவித்துக் கொள்கிறேன். நா.முத்துநிலவன்
----------------------------------------------------------------------------------------------------

நூலில் உள்ள எனது முன்னுரை --

ஒளவையிலிருந்து...
ஆண்டென் செக்காவ் தாண்டி...

ஒவ்வொரு நூலும் அவரவர் வாழ்க்கை நெய்த நெசவு.
கை நேர்த்தி உள்ளது கலையாகிறது-   
ஆனால் பலநேரம் வாய்நேர்த்தி உள்ளதே விலையாகிறது.
கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த போதே -19 வயதில்- செந்தலை ந. கௌதமனும், பேராசிரியர் இளவரசுவும் தந்த உற்சாகத்தில் மறைமலை அடிகள் பிள்ளைத் தமிழ்எழுதினேன். அப்போது வெளியிட முடியவில்லை- இப்போது விருப்பமில்லை.

அடுத்த வருடம் அறிவியக்கம்இதழில்-சாலை இளந்திரையன் காட்டிய உற்சாகத்தில் ஓராண்டு தொடராக காதல் கடிதம்எழுதினேன். அதைக் கொஞ்சம் திருத்தி இதில் சேர்த்திருக்கிறேன். 
அதன் பிறகு-15 ஆண்டுக்காலமாக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் நானே ஆரம்பித்த கிளையின்உறுப்பினர்செயலர்- பிறகு மாவட்டம் முழுவதும் கிளைகள் தொடங்கி மாவட்டச் செயலர்- இப்போது மாநிலத் துணைச்செயலர் என எழுத்திலும்- இயக்கத்திலும் தொடர்ந்து வருகிறேன்.

முதலிரண்டு காலகட்டம் போல இப்போது பெயர்களைக் குறிப்பிட முடியாது. ஒரே பெயர் எனில் - த.மு.எ.ச! இது தானே இயக்கம் என்பது!

ஒளவையிலிருந்து ஆண்டென் செக்காவ் தாண்டிமேலேமேலேவாருங்கள்!

நாம்-
கம்பனிலே கால்பதிப்போம்
கார்க்கியிலே தலை நிமிர்வோம்!

என் தனி வாழ்க்கைக்கு முன்னுரை எழுதிய என் அம்மா திருமதி கோவிந்தம்மாள், தந்தையார் திரு.வே.மு. நாகரெத்தினம் இவர்களுடன், பொது வாழ்க்கையின் இந்த முதல் வெளியீட்டுக்கு முன்னுரை எழுதிய என் தோழர் கவிஞர் கந்தர்வன், த.மு.எ.ச. பொதுச்செயலர் திரு கதிரேசன் - இவர்களுக்கு நான் வாழ்நாள் முழுவதும் கடன்பட்டுள்ளேன்.

என் சொந்தச் சோதனைகளின் போதெல்லாம் எனக்காகவும், எனது இலக்கிய-இயக்கத் தேக்கத்துக்காகவும் உண்மையிலேயே வருந்தியிருக்கும் என் உயிர்த் தோழர்களுக்கு இந்நூல் காணிக்கை.

இரண்டாண்டுக் காலமாக உரிமையுடன் கேட்டிருந்த போதும், நான் தட்டிக் கொண்டே போனதைப் பொறுத்துக் கொண்டு - இப்போது த.மு.எ.ச. வின் ஆறாவது மாநில மாநாட்டை ஒட்டி இந்நூலை வெளியிட்டு உதவும் சிவகங்கையின் வானம்பாடிக்கவிஞர் மீரா அவர்களின் அன்னம் பதிப்பகத்தாருக்கும், மிகக் குறுகிய காலத்தில் சிறப்பாக அச்சிட்டு உதவிய சிவகங்கை அகரம் அச்சகத்தினர்க்கும் எனது நன்றிகள் பலப்பல. 
அப்புறம், உங்கள் விமர்சனத்திற்காகக் காத்திருக்கிறேன்.

         அன்புடன்,
          நா.முத்துநிலவன்        
         
19-6-93.
----------------------------------------------------------------------------------------


9 கருத்துகள்:

 1. வணக்கம்
  ஐயா..

  தொகுப்பே... அருமை... மேலும் தொடருங்கள் நம் இளைய சமுதாயத்துக்கு உங்களின் ஒவ்வொரு ஆக்கமும் உந்து சக்கியாக அமையும் என்பதில் ஐயமில்லை வாழ்த்துக்கள் ஐயா

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 2. அன்பே தெய்வமென
  அடுத்தவனை உதைக்கும்
  மதங்கள்//உண்மை,
  தங்களின் புதிய மரபுகள் வெற்றிபெற வேண்டுவாழ்த்துகிறேன்மென

  பதிலளிநீக்கு
 3. கந்தர்வன் அவர்களின் முன்னுரை(யே) பல புதிய சிந்தனைகளைக் கிளறுகிறது என்றால் அந்தப் புத்தகத்தில் இன்னும் என்னென்ன இருக்கும் ஆவல் வருகிறது. வாங்கும் லிஸ்ட்டில் வைத்துக் கொள்கிறேன். அன்னம் வெளியீடு-புதிய மரபுகள். சரிதானே?

  பதிலளிநீக்கு
 4. கருத்துரையிட்ட நண்பர்கள் ஸ்ரீராம், கவியாழியார், ரூபனுக்கு நன்றி. 1993இல் வந்த நூல் விற்றுவிட்டது. மறுபதிப்புப் போடவேண்டும்.

  பதிலளிநீக்கு
 5. அடுத்த முறை சந்திக்கும் போது வாங்கிக் கொள்கிறேன் ஐயா... ஆமாம் அடுத்த சந்திப்பு எப்போது...?

  கந்தர்வன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்... நன்றிகள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வலைச்சித்தரே, கந்தர்வன் அவர்கள் காலமாகி 5ஆண்டுகள் ஓடிவிட்டன. அவர் எழுத்துகள் என்றும் வாழும்.

   நீக்கு
 6. கந்தர்வன் அவர்களின் அணிந்துரை தங்களின் பன்முகத் திறமைகளை பறை சாற்றியுள்ளது. .பாராட்டுக்கள் ஐயா!

  பதிலளிநீக்கு
 7. அய்யாவிற்கு வணக்கம்
  //முத்துநிலவன் என்கிற மனிதனுக்குப் பன்முகங்கள். ஒரு கவிஞர், ஒரு சிறுகதை எழுத்தாளர், அற்புதமான ஓவியர், அழகு மிக்க பேச்சாளர், நிறைவானபாடகர், நல்ல நடிகர், ஆற்றல் மிக்க தலைவர்; இப்படி நிறைய சொல்லலாம்.// மிக அழகாக தங்கள் பல்திறன் அறிவை கந்தர்வன் அய்யா அவர்கள் கூறியிருக்கிறார்கள். தங்கள் கவிதை நூலுக்கு மிக நேர்த்தியாக அணிந்துரை வடித்துள்ளார் அய்யா அவர்கள். தங்களின் முன்னுரையில் பெற்றோர், நண்பர்கள் என அனைவருக்கும் நன்றி கூறிய விதம் கண்டு ரசித்தேன். அற்புதமான பகிர்வைப் பகிர்ந்த தங்களுக்கு நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 8. என்வாழ்கையில் நான் மறக்கமுடியாத நண்பர் காலம்சென்ற திரு.கந்தர்வன் அய்யா அவர்கள்

  பதிலளிநீக்கு