கடந்த 17-11-2013 காலை புதுக்கோட்டையில், ஆக்ஸ்ஃபோர்டு சமையல் கல்லூரியில் நடந்த தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க இலக்கியச் சந்திப்பு நிகழ்ச்சியில், இரண்டு சிறுமியர் தாம் படித்த புத்தகங்கள் பற்றிப் பேசியபோது எனது சிறுவயதுப் படிப்பு வாசம் அவர்களிடம் இருப்பதை மகிழ்ச்சியோடு நினைத்தேன்....
நான் அதிராம் பட்டினம் காதிர்முகைதீன் நடுநிலைப்பள்ளியில் 3-5ஆம் வகுப்புப் படித்தபோது, அந்தச் சின்னஞ்சிறு வயதிலேயே நூலக வாசிப்புப் பழக்கம் யார்வழியாக எனக்கு அறிமுகமானதென்று இப்போது நினைவில்லை. அந்த வயதில் நூலகத்தில் உறுப்பினராக முடியாது என்று நூலகர் சொல்ல, எங்கள் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியரை அழைத்துக்கொண்டு போய் சிபாரிசு பண்ணச் சொல்லி, -ஏதோ ஒரு பொய்சொல்லி- உறுப்பினரானது மட்டும் நினைவில் இருக்கிறது.
நான் அதிராம் பட்டினம் காதிர்முகைதீன் நடுநிலைப்பள்ளியில் 3-5ஆம் வகுப்புப் படித்தபோது, அந்தச் சின்னஞ்சிறு வயதிலேயே நூலக வாசிப்புப் பழக்கம் யார்வழியாக எனக்கு அறிமுகமானதென்று இப்போது நினைவில்லை. அந்த வயதில் நூலகத்தில் உறுப்பினராக முடியாது என்று நூலகர் சொல்ல, எங்கள் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியரை அழைத்துக்கொண்டு போய் சிபாரிசு பண்ணச் சொல்லி, -ஏதோ ஒரு பொய்சொல்லி- உறுப்பினரானது மட்டும் நினைவில் இருக்கிறது.
அத்தோடு, ஒரு ஞாயிற்றுக் கிழமை, காலையில்
நூலகம்போய் மதியம் என்னை உள்ளே வைத்துப் பூட்டிக்கொண்டு போகச் சொல்லி அந்த
வாட்ச்மேன் அய்யாவைக் கேட்க, அவர் பயந்துபோய் அப்படியெல்லாம் செய்ய முடியாதுன்னு
சொல்ல, தொடர்ந்து நூலகம் வரக்கூடியவன், நிறையப் படிக்கக் கூடியவன் என்று அந்த
நூலகரையே சொல்லச்சொல்லி, ஒரு வழியாக ஞாயிற்றுக் கிழமைகளில் அந்த நூலகத்தில்
இருந்துகொண்டு காலை10 முதல் இரவு 8மணிவரை தொடர்ந்து படித்ததை இப்போது நினைத்தால் சிரிப்பாகத்தான்
இருக்கிறது. அப்படி, அந்த நூலகத்தில் இருந்த தெனாலிராமன் (மரியாதை ராமன்) கதைகள்,
சிநதுபாத் கடல்பயணங்கள், பீர்பால் கதைகள் முதலான குழந்தைக் கதைப்புத்தகங்கள்
எல்லாவற்றையும் படித்துவிட்டேன்.
(பிறகு என் பள்ளிவிடுமுறை நாட்களில்
எல்லாம் உறவினர் வீடுகளுக்குப் போன ஊர்களான அறந்தாங்கி, பட்டுக்கோட்டை, தஞ்சாவூர்,
நூலகங்கள் மற்றும் திருவோணத்தில் 10,11ஆம் வகுப்புப் படித்தபோது ஊரணிபுரம் அருகில்
உள்ள கல்லாக்கோட்டை கிளை நூலகங்களில் படித்த புத்தகங்கள் அடடா! அறந்தாங்கி
கிளைநூலகத்தில் 1970இல், நான்எடுத்த குறிப்புகள் இப்போதும் என்னிடம் இருக்கிறது பிறகு,
திருவையாற்று அரசர் கல்லூரியில் படித்தபோது, முதல்வர் முனைவர் சு.சண்முகானந்தம்
என்ற பாரதிப்பித்தன் அவர்களின் வீட்டில் படித்தபோது எடுத்த சி.சு.செல்லப்பாவின் “எழுத்து” இதழ்ப்படைப்புகளின்
பெரும்பாலான குறிப்புகள்... பெரிய கருவூலம்போல அதைஎடுத்துப் பார்ப்பதில் இப்போதும் ஒரு மகிழ்ச்சி!
9,10ஆம்
வகுப்பை மட்டும் மீண்டும் அதிராம் பட்டினத்தில் படித்த போது, எனது கணித ஆசிரியர்
திரு பத்மநாபன் சார் வகுப்பிலேயே “யவனராணி“ நாவலைப் படிக்க அனுமதி தந்ததும், பிறகு
அவர் வீட்டிற்குப் போய் அவர் வைத்திருந்த “பொன்னியின் செல்வனை“ வீட்டுக்கு
எடுத்துவந்து அரையாண்டு விடுமுறைக்குள் ஐந்து பாகங்களையும் படித்து முடித்ததும்...
சார் நீங்க இப்ப எங்கசார் இருக்கீங்க? நல்லா இருக்கீங்களா சார்?)
பிறகு திருவையாறு அரசர் தமிழ்க்கல்லூரியில்
படித்தபோது, அங்கு திருமானூர்ச் சாலையிலிருந்த கிளைநூலகம், கல்லூரி நூலகம்,
மற்றும் தஞ்சாவூரில் திருவள்ளுவர் போக்குவரத்துக் கழகத்திலிருந்து பெரியகோவில்
போகும் வழியில் இருந்த பெரிய நூலகம்... இதெல்லாம்தான் என் “புனித யாத்திரை” தலங்கள்!
இப்போது மீண்டும் அதிராம் பட்டினத்திற்கு
வருவோம்-
அப்போது எனக்கு மிகவும் பிடித்த கிளாரா
டீச்சரின் நினைவு மட்டும் மாறாமல் இருக்கிறது. எப்போதும் நீட்டாக உடுத்தி,
எல்லாரிடமும் அன்பாகப் பேசி, சுறுசுறுவென்று ஏதாவது செய்துகொண்டே இருக்கும் அந்த
டீச்சர் என்ன பாடம் நடத்தினார் என்பதெல்லாம் எனக்கு இப்போது நினைவில்லை. 20-25 வயதுதான் இருக்கும். கல்யாணம் ஆகியிருந்தாரா என்பதெல்லாம் எனக்குத் தெரியவிலலை... ஆனால், தன்னிடம்
படித்த மாணவ-மாணவியர் எல்லாரையும் நேசித்தவர் அவர் என்பது மட்டும்தான் இப்போதும்
என் நினைவில் உள்ளது. இல்லையென்றால் 1965இல் பார்த்த அன்புமுகம் இப்போதும் என்நினைவில்
பதிந்துகிடக்குமா என்ன? (கிட்டத்தட்ட
50ஆண்டு ஆகிறது!)
கிளாரா டீச்சர் இன்று எங்கிருக்கிறார்களோ
தெரியாது. அந்த 7-8 வயதில் அடுத்த வீதியில் இருந்து பள்ளிக்குப் போகும் வழியில்
இருந்த அவர்கள் வீட்டுக்குப் போய் அவர்கள் கிளம்பிப் பள்ளிக்குப் போகும்போது அவர்கள்
புடவையைப் பிடித்துக்கொண்ட்டே நடந்ததும், மழைநாள்களில், அவரது குடைக்குள் நானும்
ஒடுங்கிக்கொள்ள அனுமதித்ததுமான நினைவு மட்டும் இப்போதும் என் கண்ணில் நீரை
வரவழைப்பது ஏன்?
அவர்கள் லொடலொடவென்று எப்போதும பேசிக்கொண்டே
இருப்பார்கள். எல்லாவற்றுக்கும் ஒரு கதைசொல்வார்கள். படித்த கதைகள் பாதி, கற்பனை
மீதி என்பதெல்லாம் எங்களுக்குப் பிரச்சினையே இல்லை. கதை சுவாரசியமாக இருக்கும்.
அனேகமாக அவர்தான் எனக்குள் இருந்த(?)
கற்பனைத் தேவதையை எனக்கு அடையாளம் காட்டியவராக இருக்கவேண்டும். அதுதான் படிப்பு,
எழுத்து, கவிதை, கதை, பேச்சு என்று என்னை இன்றும் இழுத்துச் செல்வதாகத்
தோன்றுகிறது!
இந்த என் நினைவுகள் பின்னோக்கிச் செல்ல ஒரு
காரணம் உண்டு –
கடந்த 17-11-2013 காலை புதுக்கோட்டையில்,
ஆக்ஸ்ஃபோர்டு சமையல் கல்லூரியில் நடந்த தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க
இலக்கியச் சந்திப்பு நிகழ்ச்சியில், இரண்டு சிறுமியர் தாம் படித்த புத்தகங்கள்
பற்றிப் பேசியபோது இந்த எனது சிறுவயதுப் படிப்பு வாசம் அவர்களிடம் இருப்பதை
மகிழ்ச்சியோடு நினைத்தேன்.
எட்டாம் வகுப்புப் படிக்கும் செ.சூர்யா
தான் படித்த “அகம்-புறம்-அந்தப்புரம்” என்னும் சுமார்2,600 பக்கமுள்ள -பொறியாளர்
முகில் எழுதிய- நூலைப்படித்துவிட்டு, அதை ரசித்து ரசித்து மழலை மாறாத மொழியில்
சுமார் 20நிமிடம் பேசியதும்...
பதினொன்றாம்
வகுப்புப் படிக்கும் செ.சக்தி தான் படித்த “கட்டபொம்மன் கொள்ளைக்காரன்” என்னும் தமிழ்வாணன்
எழுதிய நூலைப்பற்றிப் பேசியதும்... இந்த வயதில் இவர்கள் பாடத்தொடர்பில்லாத பிற
புத்தக்கங்களையும் படிக்கிறார்கள் எனும் மகிழ்வையும் தாண்டி, -நம்மைவிடவும்- வித்தியாசமான
புத்தகங்களை விரும்பிப் படிப்பதோடு... அதைப்பற்றி தைரியமாக அரங்கேறிப் பேசவும்
செய்கிறார்கள் என்பது உண்மையிலேயே பாராட்ட வேண்டிய மகிழ்ச்சியான நிகழ்ச்சி அல்லவா?
அந்தக்
குழந்தைகளை அங்கேயே பாராட்டியது எனக்குப் போதவில்லை. ஏனெனில் அவர்கள என் பள்ளிப்
பருவப் படிப்பு வெறியை நினைவூட்டிவிட்டார்கள்.
அவர்கள்
இருவரின் தந்தை திரு மீரா.செல்வக்குமார் ஒரு நல்ல படைப்பாளி கவிஞர் என்பதையும்
தாண்டி, தமிழ்நாடு கலைஇலக்கியப் பெருமன்றத்தின் புதுக்கோட்டை நகரச் செயலர். அவர்களின்
தாய் கவிஞரும், தனது 40வயதிற்குள் 23 புத்தகங்களை எழுதிவெளியிட்டிருப்பவரும்,
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் புதுக்கோட்டை நகரத்திலுள்ள
திருக்கோகர்ணம் கிளைச் செயலருமான சகோதரி சுவாதி
பெற்றோராகிய
இவர்கள் இருவரோடும், இவர்களை ஏதோ ஒரு வகையில் பாதித்த ஆசிரியர் யாராவது இருந்தால்
அவர்களையும், இவர்கள் படித்த நூலகத்தையும் வாழ்த்துவோம்...
(இவரகள்
பேசிய புத்தகங்கள் பற்றித் தொடர்ந்து காண்போம்... தொடரும்)
வணக்கம்
பதிலளிநீக்குஐயா
இளைமைக்கால நினைவுகள் சுமந்த பதிவு அருமை வாழ்த்துக்கள் ஐயா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மிக்க மகிழ்ச்சி.... இனிய நினைவுகள் அருமை ஐயா... வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குஇளமையில் புத்தகம் படிக்கும் வெறியைக் குழந்தைகளுக்கு ஊட்டுபவர் யாராயினும் அவர்கள் வணக்கத்துக்குரியவர்கள்.! - கவிஞர் இராய செல்லப்பா (இமயத்தலைவன்), சென்னை
பதிலளிநீக்குஆசிரியம் ஆசீர்வாதம் ...
பதிலளிநீக்குநெகிழ்வான பதிவு...
நல்ல செய்தி ..
மலரும் இனிய நினைவுகள் ரசிக்கவைக்கிறது..பாராட்டுக்கள்...!
பதிலளிநீக்குதங்கள் பதிவு என் இளமை காலத்துக்கு அழைத்து சென்றது . நன்றி
பதிலளிநீக்குஅந்த இரு பிள்ளைகளின் புகைப்படத்தையும் அவர்களின் பெற்றோர்கள் எழுத்தாளர்கள் இருவரின்
பதிலளிநீக்குபடத்தையும் பிரசுரித்திருக்கலாமே!
தாங்கள் படித்த கால நினைவுகள் அசைபோட ரம்யம்.
மலரும் நினைவுகள் அருமை ஐயா
பதிலளிநீக்குவணக்கம்.சக்தி ,சூர்யாவோடு பேசும் காலங்கள் மிகவும் இனிமையானவை.சுவையானவையும் கூட.தங்களின் வாழ்க்கையின் அடிநாதம் மீளவும் இசைக்கப்பட்டுள்ளது.நன்றி
பதிலளிநீக்குவணக்கம் அய்யா,
பதிலளிநீக்குதங்களது இளமைக்கால நினைவுகளில் எங்களை மூழ்கடித்து விட்டீர்கள். தங்களது வாசிப்பின் மீதான காதலில் மருகி கரையேற மறுக்கிறது அய்யா. வாசிப்பை சுவாசித்திருக்கிறீர்கள் அய்யா. அற்புதமான நினைவுகள் ரசித்துப் படித்தேன். அந்த இரு இளம் சிட்டுக்களுக்கு எனது அன்பான பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.. பகிர்வுக்கு நன்றீங்க அய்யா..
என் பள்ளிப் பருவ வாசிப்பை நினைவூட்டிய சக்தி, சூர்யா பற்றிய பதிவுக்கு பாராட்டிப் பதிவுசெய்த அன்பு நெஞ்சங்கள் அ.பாண்டியன், கீதா, கரந்தையார், நிஜாமுதீன், நிலாமதி, ராஜேஸ்வரி, மது, அய்யா செல்லப்பா யாகசாமி, வலைச்சித்தர் அய்யா டிடி, ஆகிய அனைவர்க்கும் நன்றி. குழந்தை-பெற்றோர்களின் படங்களைப் பெற்று வெளியிட முயற்சி செய்வேன். வணக்கம்.
பதிலளிநீக்குமிகச் சிறிய வயதில் தாய், தந்தையருக்குப் பின் நமது ஆசிரியர்கள் மீதே அன்பு வைக்கின்றோம். அது சில சமயம் நீங்குவதில்லை, இளம் பிராய ஓர்மைகள் மிகவும் அற்புதமானவை. தங்களைப் போல நானும் ஒரு புத்தக வெறியனே, நூலகமே கதி எனக் கிடப்பேன். அப்போது எல்லாம் நினைப்பேன் நூலகத்தில் வேலை செய்வது எவ்வளவு நல்லது என, அனைத்து நூல்களையும் வாசிக்கலாமே என..! பின்னர் கால ஓட்டத்தில் வாசிப்பு இன்று குறைந்தாலும் சென்னை புத்தக கண்காட்சியையும் கல்லூரி காலங்களில் கன்னிமாரா நூலகத்தையும் விடாமல் போய் வாசிப்பேன். மவுண்ட் ரோடு கிக்கின்ஸ்போதம் போகாத நாளில்லை. இன்றைய பிள்ளைகள் வாசிக்க ஆர்வமுடையவர்களே ஆனால் பெற்றோரும், ஆசிரியரும் பள்ளி புத்தகங்களைத் தாண்டி வாசிக்கவோ, விளையாடவோ விடுவதில்லை. அப்படி விட்டால் கவனம் சிதறி மதிப்பெண்கள் குறைந்து விடும் என நினைக்கின்றார்கள். ஆனால் அப்படி அனுமதிக்காமையால் தான் பொது அறிவு குறைவும் உடல் வலு குறைவும் ஏற்பட்டு மந்தமான சமூகத்தை உருவாக்கியுள்ளோம்.. :/
பதிலளிநீக்குபல்வேறு சுவையான நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டீர்கள். வாசித்தல் என்பது ஒரு வெறி. அது நல்ல விளைவுகளையே ஏற்படுத்தும் என்பதை அறிய முடிகிறது. சிறியவர் பெரியவர் ஏதுமின்றி தயங்காமல் பாராட்டுவதோடு அவர்களிடமிருந்தும் எதையவாது கற்றுக் கொள்ள தேடும் தாங்கள் பண்பு உயர்ந்தது.
பதிலளிநீக்குநன்றி நண்பர் நீலவண்ணன், முரளி... நீலவண்ணனின் ஒரே கருத்தை இருமுறை பதிவு செய்ததை நீக்கியிருக்கிறேன் வேறொன்றுமில்லை.
பதிலளிநீக்குசிறு வயதில் பிள்ளைகள் புத்தக நிழல் நாட பெற்றோர் எவ்வளவு பங்காற்றுகிறார்களோ அவ்வளவு பங்கு ஆதர்ச ஆசிரியருக்கும் உண்டு தானே அண்ணா.பாருங்கள் வாசிப்பு அவர்கள் உதிரத்தில் உறைந்து கிடப்பதில் வியப்பில்லை என்றே தோன்றுகிறது அண்ணா!குழந்தைகளுக்கு என் வாழ்த்துக்கள் !!
பதிலளிநீக்குஇனிய நினைவுகள் ஐயா... வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்கு