கணினித் தமிழ்ப் பயிலரங்க நிறைவு நாளில்....



பயிலரங்கில், “கருவி நூல்கள்“ எனும்  தலைப்பில் ஆசிரியர்கள் -- அதிலும் குறிப்பாகத் தமிழாசிரியர்கள் -- படிக்க மற்றும் தொடர்நது பயணிக்க வைத்திருக்க வேண்டிய புத்தகங்களைப் பற்றி பேசினார், புதுக்கோட்டை மாவட்டத்தின் முதன்மைக்கல்வி அலுவலரும் நல்ல இலக்கணத் தமிழ் ஆய்வாளருமான முனைவர் நா.அருள்முருகன் அவர்கள் இந்தப் பட்டியலை நழுவுப்படங்களாக்கி ஓலைச் சுவடியிலிருந்து இன்றைய நூல்வடிவம்வரை வந்த வரலாற்றோடும், இலக்கிய வகைக்கேற்ப நூலாசிரியர் பட்டியலுடன் தொகுத்துத் தந்தது புதுமையாக மட்டுமின்றி ஒரு வகுப்பு எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாகவும் இருந்தது.


புதுக்கோட்டையில் 05.10.2013 அன்று தமிழாசிரியர்கள் தமிழார்வலர்களுக்காக தொடங்கப்பட்ட, கணினித்தமிழ்ப் பயிலரங்கத்தின் -இரண்டாவது - நிறைவுநாள் பயிற்சிக்கு வெங்கடேசுவரா பல்தொழில்பயிலகத்  தாளாளர் கவிஞர் ஆர்.எம்.வி. கதிரேசன் அவர்கள் தலைமையேற்க, தாளாளர் ஆர்.ஏ.குமாரசாமி அவர்கள் முன்னிலையேற்றார். ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான கவிஞர் நா.முத்துநிலவன் நிகழ்ச்சிகளைத் தொகுத்துவழங்கினார்.

முற்பகல் முதல் அமர்வில் “என்ன செய்ய வலை?” என்ற தலைப்பில் பெரம்பலூர் கவிஞர் இரா.எட்வின் அவர்கள் உரையாற்றினார்.  அவர் தனது உரையில் வலைப்பக்கங்களில் ஆசிரியர்கள் தங்களின் படைப்புகளை சுதந்திரமாக வெளியிடலாம், புதிய கண்டுபிடிப்புகளை  இணைய ஊடகங்கள் உலகெங்கும் அறியச்செய்யலாம், தமிழுக்காக கணினியின் பயன் அளவற்றது, புதியனவற்றைக் கற்றுக் கொள்ளவும், தனது அனுபவங்களையும்  தான் கற்றவற்றையும் பிறருக்குக் கற்றுக் கொடுக்கவும் வலைத்தளங்கள் மிகவும் பயனுள்ள ஊடகமாக அமைந்துள்ளதைத் தனது பட்டறிவு மூலம் எடுத்துரைத்தார்.  வலையை விரியுங்கள்... வட்டங்கள் விரியும்... உலகெங்குமுள்ளவர்கள் நட்பாவார்கள் என்பதைத் தனது வலைப்பதிவு அனுபவங்களோடு பகிர்ந்து கொண்டார்.

முற்பகல் இரண்டாம் அமர்வில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முனைவர்  நா. அருள்முருகன் அவர்கள் “கருவி நூல்கள்” என்னும் தலைப்பில்  நழுவப்படக்காட்சி உரையாற்றினார். தொடக்கக் காலப் பதிவுகள் கல்வெட்டுகளில் தொடங்கி, தாமிரப்பட்டயங்கள், ஓலைச்சுவடிகள் , காகிதச் சுவடிகள் என வளர்ந்து இன்று மின் நூல்களாக வளர்ந்துள்ள பாங்கினை விளக்கினார்.நூல்களை முதன்மை மூலங்கள், இரண்டாம் தரத்தகவல் தரும் நூல்கள், நாலாந்தரக் குப்பையாக உள்ள நூல்கள் என வகைப்படுத்தி. மூலநூல்களையே எப்போதும் ஆசிரியர்கள் கையாளுதல் நம்பகமானது எனச்சுட்டினார்.

ஒவ்வொரு தமிழாசிரியர் இல்லத்திலும் ஒரு சிறு நூலகம் இருக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார். அந்நூலகத்திலும் எத்தகைய நூல்கள் இருக்க வேண்டுமென்பதை பாங்குறப் பட்டியலிட்டுக் காட்டினார். இலக்கியம் இலக்கணம் சார்ந்த நூல்கள், திருக்குறள், சங்கஇலக்கியங்கள், பதினெண்கீழ்க் கணக்கு நூல்கள், சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற ஐம்பெரும்காப்பிய நூல்கள், நீதிநூற்கள், தனிப்பாடல் திரட்டு போன்ற வகையிலான நூல்கள் இருக்க வேண்டுமென்றார்.

பாரதியார், பாரதிதாசன், கண்ணதாசன், வைரமுத்து, கவிக்கோ அப்துல்ரகுமான், ஈழத்துக் கவிஞர் காசிஆனந்தன், பட்டுக்கோட்டைக் கலியாணசுந்தரம் போன்ற சமூகமேம்பாட்டிற்கு படைப்புகள் அளித்த கவிஞர்களின் வரலாறு, கட்டுரை பற்றிய நூல்கள் வீட்டு நூலகத்தில் இடம் பெறவேண்டுமென்பதைக் குறிப்பிட்டார்.

அதே போல புதுக்கவிதை, நவீனக் கவிதைகள், குறும்பா, ஹைக்கூ கவிதை நூல்கள் ஆசிரியப் படைப்பாளிகளுக்கு அவசியம் என்றார்.தொல்காப்பியம், நன்னூல் தண்டியலங்காரம், நம்பியகப் பொருள் புறப்பொருள் வெண்பாமாலை,  அடிப்படைத் தமிழ் இலக்கணம், நற்றமிழ் இலக்கணம்,  இலக்கணக் கொத்து, போன்ற இலக்கண நூல்கள் தமிழாசிரியர்கள்  கைகளில் இருப்பது மாணவர்களுக்கு மொழிப்பயிற்சிக்கு உற்றதுணையாய் அமையும் என்றார்.

“பீடு நடைபோட” என்னும் உள்தலைப்பில் உரைநடை சிறப்பாக அமைய ஆசிரியர்கள் பாரதி, புதுமைப்பித்தன், வ.சுப.மாணிக்கம், பெருமாள் முருகன், எஸ்.இராமகிருஷ்ணன், பொ.வேல்சாமி, ஆ.சிவசுப்பிரமணியன், நாஞ்சில்நாடன், மாடசாமி, இறையன்பு போன்ற எழுத்தாளர்களின் எழுத்து நடையினைப் பின்பற்ற அவர்களின் படைப்புகளைப் படிக்க வேண்டும் என்றார்.

ஒருநாட்டின் மொழி, வரலாறு பற்றியத் தெளிவிற்கு. மொழிவரலாறு, தமிழ் இலக்கிய வரலாறு, குழந்தை இலக்கியம். தமிழ்இலக்கிய வரலாறும் பண்பாடும்,  தமிழர் சால்பு போன்ற நூல்களையும்  உ.வே.சா.வின் என்சரித்திரம், சரித்திர தீபகம், தமிழ்ப் புலவர்கள் வரலாற்றுக் களஞ்சியம், தமிழ்ச்சுடர்மணி, ஆகிய நூல்கள் நூலகத்தில் இடம்பெற வேண்டுமென்றார்.
நிகண்டுகள் எனப்படும் அகராதி நூல்களில் அபிதான சிந்தாமணி, தமிழ் லெக்சிகன், தமிழ்க் கையகராதி, க்ரியாவின் தற்கால அகராதி, ஆங்கிலம்-தமிழ் அகராதி, தொகை அகராதி, மயங்கொலிச் சொல் பொருள் அகரமுதலி போன்றவற்றுள் சில தமிழ் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு மிக்க உறுதுணையாக இருக்கும் என்றார்,

தமிழண்ணல், நன்னன், சு.சக்திவேல் ஆகியோர் படைத்துள்ள பயன்பாட்டுத் தமிழ், தமிழ்நடைக் கையேடு. சொல்வழக்குக் கையேடு போன்ற கையேடுகள் அவசியம் என்றார்.
நாளிதழ்களையும், தீராநதி, காலச்சுவடு, உயிர்மை, உயிர்எழுத்து. காக்கைச் சிறகினிலே போன்ற வார, திங்கள் இதழ்களையும் தமிழாசிரியர்கள் படிப்பது அவர்களின் அறிவினைக் கூர்மைப் படுத்தும் என்றார்.

மாணவர்களுக்குத் தமிழ் கற்பிக்கும்போது தொடர்புடைய மூலநூல்களைக் காட்டுவதும், அவர்களை அந்நூல்களைக் கையாளச் செய்வதும் கற்றலை இனிமையாக்கும் எனக்குறிப்பிட்டார். நூல்களுக்காக ஒரு ஆசிரியர் செய்யும் செலவு என்பது அறிவுக்கான முதலீடு என்பதை உணர்த்த அச்செலவினை  “ வரவு ” எனக் குறிப்பிட்டார். மேலதிக  நூல்கள் வேண்டுவோர்  ” நூலகம்” ”மதுரைத்தமிழ்” போன்ற இணைய தளங்களில் தரவிறக்கம் செய்து கொள்ள உள்ள வசதியினைக் குறிப்பிட்டு,  நூல்களைத் தேடுங்கள்... மாணவர்களைத் தேடவையுங்கள் இணையதளங்கள் மூலம் எனத் தனது உரையினை நிறைவு செய்தார்.

பிற்பகல் அமர்வில் கரந்தை செயக்குமார் அவர்கள் ” நானும் என் வலையும்” என்னும் தலைப்பில் தனது வலை அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.
பிறர் வலைப்பக்கங்களில் கருத்துகளை இடுவது  உங்கள்  வலைக்கு வட்டங்களை அதிகரிக்கும் என்றார்.  எதை வலைப்பக்கத்தில் எழுதலாம் என்ற வினாவிற்கு... சொந்தக் கருத்தினை. வாழ்க்கையை, கேட்ட செய்திகளை, திரிந்துவழங்கும் பழமொழிகளை, படித்தவற்றுள் பிடித்தவற்றை, சமூக நிகழ்வுகளை பதிவிடலாம் என்றார்.

பயிலரங்கிற்குச் சிறப்பு அழைப்பாளராக வருகைதந்த தேசிய நல்லாசிரியர் கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்கள்  தனது வாழ்த்துரையில் “ கணினியே கண்கண்ட தெய்வம்”  என்ற நிலை உருவாகியுள்ளதைக் குறிப்பிட்டு., முகநூல்களில்  தரமானவற்றைப் பதிவிடும் படியும். வலைப்பதிவுகளை வடிகட்டிப் படிக்கும் படியும் அறிவுறுத்தினார்.

அடுத்ததாக  கவிஞர் ராசி.பன்னீர் செல்வன் அவர்கள் மின்னஞ்சலைக் கண்டுபிடித்த தமிழ்நாட்டைச் சேர்ந்த அய்யாத்துரை அவர்களைப் பற்றியும், வலைப்பக்கத்தை உருவாக்கிய ஜான்பெர்ஜர் பற்றியும் குறிப்பிட்டு கண்டுபிடிப்பாளர் அய்யாத்துரை அவர்கள் தொலைக்காட்சிக்குத் தனது கண்டுபிடிப்பு பற்றி அளித்த  நேர்காணலை குழலொளிக்காட்சி மூலம் காட்சிப் படுத்தினார். அவர் தான் உருவாக்கிய நான்கு வலைப் பக்கங்கள் தனக்கு எத்தகைய ஏற்றத்தினைத் தந்துள்ளன என்பதைப் பெருமிதத்துடன் குறிப்பிட்டார். தனது வேண்டுகோளாக  தமிழாசிரியர்கள்  “ சங்க இலக்கியங்களை நவீனஇலக்கியப் பார்வையோடு” படைத்தளித்துப் புதுமை படைக்க வேண்டுமென்றார்.

திரு ஸ்டாலின் சரவணன் தனது அனுபவப் பகிர்வில், வலைத்தளங்கள் எந்த அளவுக்கு பயனுள்ளவையாக உள்ளனவோ அந்த அளவுக்கு ஆபத்துகளும் அதில் உள்ளதைச் சான்றுடன் சுட்டிக்காட்டினார். ஆசிரியர்கள் பதிவிடும்போது சில மாயக்குகைக்குள் சிக்கிக் கொள்ளாமல் சமூகப் பொறுப்போடு இடுகைகள் இட வேண்டும் என்றார்.

அடுத்ததாகக் கருத்துரையாற்றிய சிவகங்கை மாவட்ட தமிழாசிரியர் கழகப் பொறுப்பாளர் புலவர் நாகேந்திரன் அவர்கள்  இணைய தளங்களில் இடப்படும் அறிவு புகட்டும் கருத்துகள் மாணவர்களையும் சமூகத்தையும் நெறிப்படுத்தக் கூடியன. அதன் தொடர்ச்சியாக பள்ளி, கல்வி சார்ந்த ஆவணப் படங்களையும் பதிவிடலாம் எனக் குறிப்பிட்டார். 

இப்பயிலரங்க ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான கவிஞர் குருநாத சுந்தரம் , மின்அஞ்சல் உருவாக்குவது. வலைப்பக்கம் தொடங்குவது பற்றிய விளக்கக் குறிப்புகளை அச்சிட்டு பயிலரங்கில் கலந்து கொண்டவர்களுக்கு வழங்கினார். அவர் தனது உரையில் “ஒவ்வொரு தமிழாசிரியரும் கணினி ஆளுமை பெறல் வேண்டும். அது இன்றைய இளைய தலைமுறையினரும் பெற்றோரும் தமிழாசிரியர் மீது கொண்டுள்ள  மதிப்பினை மேலும் உயர்த்தும்” எனக்குறிப்பிட்டார்.

பயில்வோர் கருத்தாக புதுக்கோட்டை மழலையர் பள்ளி உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் திருமதி ஜெயலெட்சுமி அவர்கள்  இந்தப் பயிலரங்கம் தனக்கு ஒரு புதிய அனுபவத்தைத் தந்ததாகவும், நிறையப் படைப்பாளிகளின் தொடர்பினை ஏற்படுத்தியதாகவும் மகிழ்ந்துரைத்தார். தான் தொடங்கிய வலைப்பக்கம் மூலம் தனது ஆளுகைக்குட்பட்ட கல்வி நிறுவன ஆசிரியர்களோடு எளிதாகவும் புதுமையானதாகவும் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளப் போவதாகக் குறிப்பிட்டார்.

படைப்பாளி அண்டனூர் சுரா அவர்கள்  இப்பயிலரங்கின் மூலம் தான் புதிதாக உருவாக்கிய வலைப்பதிவின் வழி தனது படைப்புகள் பாரெங்கும் பரவும் எனப் பெருமிதத்துடன் கூறினார்,

ஒருங்கிணைப்பாளர் கவிஞர் நா.முத்துநிலவன் அவர்கள் பயிலரங்கில் கலந்து கொண்ட நாற்பது பேர்களையும் ஒரு வலைத்தளக் குழுவாக உருவாக்கி அவர்களின் படைப்புகளைப் பகிர்வதற்கான வழிவகையினை விளக்கினார்.

முதன்மைக் கல்வி அலவலர் அவர்களின் நிறைவுரைக்குப் பின் ஒருங்கிணைப்புக் குழுஉறுப்பினர் திரு மகா.சுந்தர் அவர்கள்  தமிழாசிரியர்களின் நீண்டநாள் ஆவல் இப்பயிலரங்கின் மூலம் நிறைவேறியுள்ளமை குறிப்பிட்டு, பயிலரங்கம் சிறப்புற முன்னின்ற முதன்மைக் கல்வி அலுவலர், இரண்டு நாள்களும் பயிற்சியளித்த கருத்தாளர்கள், இடமும், கணினிகளும் தந்து உதவிய வெங்கடேசுவரா பல்தொழில்பயிலகத் தாளாளர்கள், ஆசிரியர்கள், விடுமுறை நாள்களிலும் ஆர்வத்துடன் கலந்து கொண்ட தமிழாசிரியர்கள் ,தமிழார்வலர்கள் அனைவருக்கும் நன்றிகளைக் கூறினார்.

புதுக்கோட்டையில் விரைவில் “கணினித் தமிழ்ச் சங்கம் ” மலர உள்ளதற்கான அடித்தளமாக இப்பயிலரங்கம் அமைந்ததாக நோக்கர்கள் கருத்திருந்தது. 

நன்றி -- https://plus.google.com/103409965633642822683/posts

10 கருத்துகள்:

  1. புதுக்கோட்டையில் விரைவில் “கணினித் தமிழ்ச் சங்கம் ” மலர உள்ளதற்கான அடித்தளமாக இப்பயிலரங்கம் அமைந்ததாக நோக்கர்கள் கருத்திருந்தது.

    --------

    நல்லதொரு நிகழ்வு... வாழ்த்துக்கள் ஐயா...

    பதிலளிநீக்கு
  2. வணக்கம்
    இன்னும் பயிற்சியில் இருந்து விடுபட முடியவில்லை.மனம் நிறைந்த கணினித்தமிழ் பயிற்சி .நீண்ட நாள் ஆசை நிறைவேறிய நிறைவு.புது படை ஒன்று உருவாகியுள்ளது.நல்ல முயற்சி பாராட்டுக்கள் அய்யா.தொடர்ந்து நீங்கள் தரும் ஊக்கம் எங்களை தொய்விலிருந்து காக்கும் .சொல்ல வார்த்தைகள் இல்லை.40 ஆசிரியர்களை புதிய உலகிற்கு அழைத்து சென்றுள்ளீர்கள்.புதுகை தமிழ் இணையச்சங்கம் உருவாகி விட்டதென உணர்கிறேன்.இதற்கு காரணமான தமிழாசிரியர் கழகத்திற்கும்.மதிப்பிற்குரிய முதன்மை கல்வி அலுவலர் அவர்களுக்கும் மனம் நிறைந்த நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  3. வலைப்பக்கங்களில் ஆசிரியர்கள் தங்களின் படைப்புகளை சுதந்திரமாக வெளியிடலாம்//உண்மைதான்படைப்பாளிகளுக்கு வாய்ப்பு

    பதிலளிநீக்கு
  4. மிகவும் பயனுள்ள ஒரு கருத்தரங்கை ஏற்பாடு செய்து திறம்பட நடத்திக் காட்டியதற்கு பாராட்டுக்கள் ஐயா!

    பதிலளிநீக்கு
  5. மிகவும் மகிழ்ச்சி ஐயா... நேற்று முழுக்க என்னென்ன நடந்திருக்கும் என்று நினைத்துக் கொண்டே இருந்தேன்... தொகுத்து வழங்கியமைக்கு நன்றி...

    கணினித் தமிழ்ச் சங்கம் விரைவில் மலரட்டும்... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  6. வாந்த்துக்கள் அய்யா,

    தொடரட்டும் தங்கள் பணி

    பதிலளிநீக்கு
  7. நீண்டதொரு பதிவு ... மிக அருமை... தட்டச்சு செய்த பாவலருக்கும், பகிர்ந்த உங்களுக்கும் நன்றிகள்...

    பதிலளிநீக்கு
  8. முத்துநிலவன் அய்யா,

    நல்லதொரு முயற்சி,பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு
  9. வணக்கம் அய்யா, நடந்தவற்றையெல்லாம் தொகுத்து அழகாகக் கூறியிருக்கீறீர்கள். 2 நாளும் புதிய அனுபவமாக இருந்தது. முதன்மைக் கல்விஅலுவலர் அய்யா அவர்களின் வகுப்பை என்னவென்று சொல்வது! அவ்வளவு அருமை. தனது வகுப்பிற்கு சிறு குறிப்புக் கூட இல்லாமல் நூல்களின் பெயர், ஆசிரியர், பதிப்பகம் என அனைத்தையும் கூறி உண்மையில் வியக்க வைத்து விட்டார். பகிர்வுக்கு நன்றீங்க அய்யா.

    பதிலளிநீக்கு
  10. இத்தனை ஆர்வமாகத் தமிழாசிரியர்கள் இந்தப் பயிலரங்கில் கலந்து கொண்டதைப் பார்க்கும்போது... விரைவில் கணினித் தமிழ்ச் சங்கம் அமையும் ஒளிச்சுடர் தெரிவதாக உணர்கிறேன்.
    ஆறினால் கஞ்சி பழங்கஞ்சியாகிவிடும்.
    அடுத்து என்ன...?

    பதிலளிநீக்கு