சிவக்குமார் கவிதைகளுக்கு எனது முன்னுரை

இளைய வயதில் ஒரு முதிய கவிஞர்!
           
ஆலங்குடி தமுஎச-வில் ஒரு கவியரங்கம் தங்கம் மூர்த்தி, நீலா, ஜீவி,  ரமா.ராமநாதன் என கவிதையில் வண்ணஜாலம் காட்டும் கவிஞர்களுக்கிடையே ஒரு இளைய-புதியகவிஞர்! அதுவும் தேதிகள் சொல்லும் சேதிகள்எனும் பொதுத்தலைப்பில் அவருக்குத்தான் ‘‘மே-1’’ ‘இவர்களையெல்லாம் விட்டுவிட்டு இந்தப் பையனுக்கு இவ்வளவு சீரியசான தலைப்பைத் தந்துவிட்டாரே நீலா.. என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்த எனக்கு, நீலா சரியாகத்தான் தலைப்புக் கொடுத்திருக்கிறார் என்று அந்த இளைஞர் எடுத்த எடுப்பிலேயே காட்டினார். அரங்கத்தைக் கலக்கிஎடுத்தார்!

மே-1
இந்தத் திருநாளின் போது மட்டும்தான்
இனிப்புக்குப் பதிலாக
உப்பு பரிமாறப்படுகிறது!
கண்ணீரும் வேர்வையுமாய்!  – என்று துவங்கிய கவிதை, கடைசிவரை உணர்ச்சி குறையாமலும் கேட்டோரை உடனழைத்தும் சென்றது! மே-ஒன்றாம் தேதியைச் சரியாகப் புரிந்து கொள்ளா விட்டால்,  ஏப்ரல்-ஒன்றுக்கும் இதற்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும் என்ற அந்த இளைஞரின் கோபம் சரியாகவே சபையைப் பற்றிக்கொண்டது! கவிதை வெற்றி கண்டது!
அவர்தான் சிவக்குமார் என்று தெரிந்து மகிழ்ந்துபோனேன்!
இன்று அதைவிட மகிழ்ச்சியடைகிறேன் - அவரது திருமணத்திற்கு வருவோர்க்குத் தாம்பூலப்பைக்கு பதிலாகத் தன் கவிதைத் தொகுப்பையே தரப்போகிறார் என்பதறிந்து  
            ஆலங்குடி சிவக்குமாரின் திருமணஅழைப்பிதழைப் பார்த்தவர்களுக்கு ஆச்சரியமாக இருந்திருக்கும். ஆனால் அவரையும் அவரது கவிதைகளையும் அறிந்தவர்களுக்கு அப்படி இருந்திருக்காது! ஏனெனில் அவரது கவிதைகளைப் படித்தவர்களுக்கும், கவியரங்கில் கேட்டவர்களுக்கும் அவரது கவிதைகளில் ஏதாவது புதுமை இருக்கும் என்பது தெரியும்!
            இளைய வயதில் கவிதைவாய்ப்பது ஒன்றும் பெரிதல்ல,
அதைத் தொடர்ந்து காப்பாற்றிக் கொள்வதுதான் பெரிது.
20-25வயதில் கவிஞராகமலர்ந்த பலரும் 30-40வயதில் உலர்ந்து போவதுதான் பெரும்பான்மை. இவர் அப்படி ஆகமாட்டார், ஆகிவிடக்கூடாது! மென்மேலும் இவரும் இவரது கவிதையும்  வளரவேண்டும் என்றே நான் ஆசைப்படுகிறேன்.
            இவர் எந்த வயதிலும் உலர்ந்து போக மாட்டார் என்பதற்கும் இவரது சில கவிதைகளே சாட்சியாக நிற்கின்றன.  
பட்டங்கள்
ஏராளம் ஏராளம்
காற்று தான் வீசுவதில்லை   எனும் கவிதையைப் படித்தவர்களுக்கு முதலில் ஒரு புன்னகையும் பிறகு அதுபற்றிய பெரும் சிந்தனையும் தோன்றுவது உறுதி! சமுதாயக் காற்று சரியாக வீசியிருந்தால் எத்தனையோ நல்லது நடந்திருக்குமே! அது அவ்வப்போது வறண்ட காற்றாகி விடுவதும், சூறாவளியாக வந்து படுத்துவதும் தானே நடக்கிறது! இதில் படித்த இளைஞர்கள் படும் பாடுதானே பெரும் பாடு!
சொந்தக் காலில் நிற்கிறான்
நொண்டிப் பையன்
எஸ்.டி.டி. பூத்!  

ஒருவேளை சோற்றுக்கு
ரத்தம் விற்றான் -
வறுமையின் நிறம் சிவப்பு.
என்பன போலும் குறும்பாக்களில் இவரது சமுதாயப் பார்வையின் கூர்மை தெரிகிறது என்றால்,
சொத்தைப் பிடுங்கி
சொத்தைச் சேர்க்கிறார்
பல் மருத்துவர்

பிச்சைக்காரன் பேண்ட்டுக்கு
முதல் பரிசு!
பேஷன் ஷோ! 
என்பவற்றில் இவரது நயமான கிண்டல் தெரிகிறது. ஆனால், இதுபோலும் சமுதாயச்சிந்தனை உள்ளவர்க்கும், கிண்டல்காரர்களுக்கும் வராதென்று சொல்லக்கூடிய அழகியல்பார்வையும் அழகாகவே வாய்த்திருக்கிறது சிவக்குமாருக்கு-
பாருங்களேன் இவரது சில குறும்பாக்களை :
உடல்முழுதும்
மாடர்ன் ஆர்ட் -
வண்ணத்துப் பூச்சி!

எனக்கு உடம்பெல்லாம் மச்சம்
பீற்றிக் கொள்கிறது
காகம் !  
இதுபோலும் குறுங்கவிதைகளில் மட்டுமல்ல நெடுங்கவிதைகளிலும் நிமிர்ந்தேநிற்கிறார் கவிஞர் என்பதற்கும் இந்தச் சின்னத் தொகுப்பில் சான்றுகள் பல உள. படியுங்கள்.
            வெளிநாட்டு மோகத்தில் வீழ்ந்து கிடக்கும் பிள்ளைகளைப் பற்றிப் பெட்டிக்கடை வைத்து பிழைப்புநடத்திய தாத்தா கவலைப் படுவதாய் வரும் கவிதையை நான் பெரிதும் மதிக்கிறேன். 
தாயின் பாசத்தை நண்பரிடம் பார்க்கும் சிவக்குமாரை நான் நேசிக்கிறேன். திருமண மாப்பிள்ளைக்கு மணவாழ்த்துகளோடு, இன்னும் இன்னும் இவர் நிறைய நிறைய எழுதித் தனக்கான கவிதைச் சிம்மாசனத்தைத் தானே வென்றடையவும் என் வாழ்த்துகள்.
                                                              பாசத்துடன்,
புதுக்கோட்டை – 622 004                நா.முத்து நிலவன்             
-------------------------------------------------------

(பத்தாண்டுக்கு முன் எழுதப்பட்டு இப்பவும் பொருந்தும் முன்னுரை. நண்பர் சிவக்குமார் இதைப்பார்த்தாவது தனது மரபும் புதுசும் இணைந்த கவிதைத் தொகுப்பை விரைவில் கொண்டு வரணும்)  

7 கருத்துகள்:

 1. ரசிக்க வைக்கும் கவிதை வரிகள் + விமர்சனம் ஐயா...

  நன்றி...

  பதிலளிநீக்கு
 2. அண்ணா ஆர் எல் போட்டு தமிழ்ச் சேவை...

  சிவக்குமாரை அடுத்த முறை ஆலங்குடி சென்றால் சந்திக்க ஆசை.

  நல்ல கவிஞரை அறிமுகம் செய்ததற்கு நன்றி...

  பதிலளிநீக்கு
 3. கவிஞர் சிவக்குமார் நிறைய புத்தகங்கள் எழுதட்டும்...

  உங்கள் முன்னுரை அருமை ஐயா...
  வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 4. நல்லதொரு அறிமுகம் அய்யா. சிவக்குமார் அய்யாவை பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும் என்றே நம்புகிறேன்.அனைத்து வரிகளையும் ரசித்தேன். சிறப்பாக ரசித்து முன்னுரை எழுதியுள்ளீர்கள். பகிர்வுக்கு நன்றீங்க அய்யா.

  பதிலளிநீக்கு
 5. “சொத்தைப் பிடுங்கி
  சொத்தைச் சேர்க்கிறார்
  பல் மருத்துவர்”

  ரசிக்கும்படியான வரிகளுக்குச் சொந்தக்காரரை
  அறிமுகம் செய்துள்ள விதம் அருமையாக இருக்கிறது.  பதிலளிநீக்கு
 6. அருமையான வரிகள் ஐயா. கவிஞர் சிவக்குமார் அவர்களுக்கு மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 7. சிவக்குமாரின கவிதைகள் இன்னும் பரவலாகப் புகழ் பெற எனது வாழ்த்துக்கள்! - கவிஞர் இராய செல்லப்பா (இமயத்தலைவன்)

  பதிலளிநீக்கு