“இணையத் தமிழ்ப் பயிற்சி முகாம்” -2013 செய்திச் சுருக்கம்

இலக்கியம் எழுதும் ஆசிரியர்களுக்கான கணினித்தமிழ்ப் பயிலரங்கம்


(படத்தில் நம் கரந்தை ஜெயக்குமார், இரா.எட்வின்முதன்மைக் கல்வி அலுவலர் முனைவர் நா.அருள்முருகன், கல்லூரித் தாளாளர்கள்- கவிஞர் கதிரேசன், குமாரசாமி, கல்லூரி முதல்வர் ஆகியோர்)

புதுக்கோட்டை - கைக்குறிச்சி ஸ்ரீவெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரியில் புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழில் கதை-கவிதை-கட்டுரை எழுதும் பல்வேறு ஆசிரியர்களுக்கான கணினித்தமிழ்ப் பயிலரங்கம் அக்.5,6 சனி-ஞாயிறு இரண்டுநாட்கள் நடந்தது. கல்லூரித் தாளாளர் கவிஞர் கதிரேசன் தலைமையேற்றார். கவிஞர்தங்கம்மூர்த்தி, தாளாளர்கள் பி.எஸ்.கருப்பையா, குமாரசாமி, கல்லூரி முதல்வர் கலியபெருமாள் ஆகியோர் வாழ்த்தி உரையாற்றினர்.


இரண்டுநாள்வகுப்பில், “கணினியில் தமிழ்எழுதும் ஆசிரியர்களிடம் இருக்கவேண்டிய கருவி நூல்கள் பற்றி முதன்மைக்கல்வி அலுவலர் முனைவர்.நா.அருள்முருகன், கணினியில் மின்னஞ்சல், வலைப்பக்கம் உருவாக்குதல்பற்றி சிவகங்கைப்பேராசிரியர் முனைவர்.மு.பழனியப்பன், “உருவாக்கிய வலைப்பக்கத்தை விரிவாக்குதல்பற்றித் திண்டுக்கல் தனபாலன், “எது செய்ய வலை?எனும் தலைப்பில் பெரம்பலூர் எழுத்தாளர் இரா.எட்வின், “என்ன எழுத வலைஎனும் தலைப்பில் எழுத்தாளர் கரந்தை ஜெயக்குமார் ஆகியோர் முக்கிய வகுப்பாசிரியர்களாகப் பங்கேற்றனர்.
இவர்களோடு, கணினித்தமிழ் வலைப்பக்கத்தில் படம்-விடியோக்களை ஏற்றுதல், அழகாக வடிவமைத்தல், கணினியில் முகநூல்-ட்விட்டர் பயன்பாடுகள், விக்கிபீடியா, இணைய இதழ்கள், கல்வி-பொதுஅறிவுக்கான வலைகளை அறிதல் மற்றும் “செய்யவேண்டியவை, செய்யக்கூடாதவை (DO'S AND DONT'S) பற்றியும் புதுக்கோட்டை மாவட்டப் பள்ளிக்கல்வித்துறைக்கான வலைத்தளம் பற்றியும் பாலகிருஷ்ணன், ராசி.பன்னீர்ச் செல்வன், கஸ்தூரிரெங்கன், மாணிக்கம், பாவலர்.பொன். கருப்பையா, முனைவர். சு.துரைக்குமரன், ஸ்டாலின் சரவணன் ஆகியோர் கருத்துரையாற்றினர்.
உதவிக்கல்வி அலுவலர் ஜெயலட்சுமியுடன், ஆசிரியர்களும் கவிஞர்களுமான பெண்ஆசிரியர் 17பேர் உட்பட 40 ஆசிரியர்கள் பங்கேற்ற பயிலரங்கில், பங்கேற்ற அனைவரும் தமிழில் மின்னஞ்சல் அனுப்பும் பயிற்சியைப் பெற்றதுடன், தமிழில் வலைப்பக்கம் உருவாக்கி அதில் தமது படைப்புகளைத் தாமே எழுதி தாமே வலைப்பக்கத்தில் (இண்டர்நெட்டில்) ஏற்றவும் பயிற்சி பெற்றது குறிப்பிடத்தக்கது.
இதற்குக் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படவில்லை.. தனிஊதியம் ஏதும் (TA,DA) தரப்படவில்லை. என்றாலும் கூட விடுமுறைநாளில் கணினியில் தமிழ்இலக்கியம் எழுத ஆர்வத்துடன் கலந்துகொண்ட ஆசிரியர்களையும், இடவசதியுடன் பயிற்சிக்கான கணினிகளுடன் இண்டர்நெட் வசதிகளைச் செய்துதந்த பாலிடெக்னிக் கல்லூரி நிர்வாகத்தையும் உதவியாக இருந்த கல்லூரியின் கற்பூரசுந்தர பாண்டியன் உள்ளிட்ட கணினிப் பேராசிரியர்களையும், அலுவலர்களையும் முதன்மைக்கல்வி அலுவலர் முனைவர் நா.அருள்முருகன் வெகுவாகப் பாராட்டி நன்றியும் தெரிவித்தார்.
பயிற்சிக்கான ஏற்பாடுகளைக் கவிஞர்.நா.முத்துநிலவனுடன், தமிழகத் தமிழாசிரியர்கழகத்தின்  புதுக்கோட்டை மாவட்டத்தலைவர் கு.ம.திருப்பதி, மாவட்டச்செயலர்  சி.குருநாதசுந்தரம்  மாவட்டப்   பொருளர் சந்தன.ஆரோக்கியநாதன், தேர்வுச்செயலர் முனைவர் சு.துரைக்குமரன், பொதுக்குழு உறுப்பினர் மகா.சுந்தர் ஆகியோர் சிறப்பாகச் செய்திருந்ததோடு, புதிய வலைநண்பர்களுக்கு வரக்கூடிய சந்தேகங்களையும், அதற்கான பதில்களையும் (FAQ) 4 பக்கத்தில் சிறு கையேடாகவே தயாரித்து அனைவருக்கும் பயிலரங்க நிறைவில் வழங்கிய திரு குருநாதசுந்தரம் அவர்களின் பணியையும் பங்கேற்ற ஆசிரியர்கள் பாராட்டினர். 
(முனைவர் மு.பழனியப்பன் அய்யா, திண்டுக்கல் தனபாலன் அய்யா  இருவரும் என்னை மன்னிக்க வேண்டுகிறேன். முதல்நாள் படங்களில் இருவரும் வகுப்பெடுத்த படங்கள் மட்டும் எனக்குத் தற்போது கிடைக்கவில்லை. நிறையப் பேர் எடுத்திருக்கிறார்கள். இருவரின் படத்தையும் எப்படியாவது வாங்கி ஓரிரு நாளில் போட்டுவிடுகிறேன். பயிலரங்கில் பங்கேற்றோர் பெயர்ப்பட்டியலை இயன்றவரை இதே வலையில் அடுத்து வெளியிட எண்ணமுண்டு. உள்ளங்கையில் நம் நட்புக் கணினிஉலகம்! -நா.மு.)
--------------------------------------- 
படமில்லாமல் இந்தச் செய்தியை வெளியிட்ட தினமணி, தினகரன் நாளிதழ்கள் (திருச்சிப்பதிப்பு-09-10-2013) அவற்றின் புதுக்கோட்டைச் செய்தியாளர்களுக்கு நன்றி.
------------------------------------------------ 

7 கருத்துகள்:

  1. கணினித்தமிழ்ப் பயிலரங்கம் --

    பயனுள்ள பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
  2. ஆசிரியர்களுக்குப் போதிப்பதின் மூலம் ஆயிரக்கணக்கான எதிர்கால மாணவர்களுக்கு வலை-பயன்பாடு பற்றி போதிக்கப்படுகிறது. சரியான சமயத்தில் செய்திருக்கும் சரியான, உருப்படியான இக்காரியம் தமிழ்கூறும் நல்லுலகம் முழுதும் பாராட்ட வேண்டியது. சம்பந்தப்பட்ட அனைவருக்கும் என் நன்றிகள். முடிந்தால் ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும், ஏன், ஒவ்வொரு CEOவின் வட்டத்திலும் இத்தகைய பயிலரங்குகளை அமைக்க முயற்சி செய்யலாம்.எவ்வளவோ பாலிடெக்னிக்குகள், கல்லூரிகள் இடம் தர முன்வருவார்கள். - கவிஞர் இராய செல்லப்பா (இமயத்தலைவன்), சென்னை.

    பதிலளிநீக்கு
  3. அன்பு அண்ணா ,
    தங்களது e-mail.id என்னிடம் இல்லை .இங்கு எழுதிவிட்டேன்.அண்ணா.ரவி (சூரியன்)ஐயாவின் பட்டறையில் தயாரானவள் என்று எப்போதும் சொல்லிக்கொள்வேன்.இன்று அண்ணா நிலவனால் கூர்தீட்டப்பட்டிருக்கிறேன்.ஒரு தனயனின் வாஞ்சையோடு இந்த தங்கைக்கு தன கை கொடுத்து தடைதாண்ட கற்றுத்தந்தீர் .அன்னையின் அன்போடு சான்றோரிடம் அறிமுகம் செய்தீர்.இந்த இரண்டு நாட்களும் இந்த கூட்டுப்புழுவுக்கு சிறகுகள் தந்திருகின்றன.நன்றிகள் ஆயிரம் -அன்பு தங்கை சோ.மைதிலி

    பதிலளிநீக்கு
  4. அன்பு அய்யாவிற்கு, இந்த பயிற்சி முகாம் பல மாவட்டங்களுக்கு முன்னுதாரணமாக இருப்பதில் அளவு கடந்த மகிழ்ச்சி. தமிழாசிரியர்களும் கணினியில் வலம் வர வேண்டும் எனும் தங்களின் நீண்ட கால ஆசையும் நிறைவேறியுள்ளது. புதுக்கோட்டை கணினித் தமிழ்ச் சங்கத்தில் உறுப்பினராக இருக்கப் போவதில் மட்டற்ற மகிழ்ச்சி! அனைத்துக்கும் நன்றீங்க அய்யா (உங்களுக்கு இந்த நன்றியின் அர்த்தம் புரியும் என்று நினைக்கிறேன்)..

    பதிலளிநீக்கு
  5. நல்லதொரு பயிலரங்கில் கலந்து கொண்ட மகிழ்ச்சியில் திளைக்கிறேன். மிக்க ஆர்வத்துடன் பயிற்சியாளர்கள் கலந்து கொண்டார்கள். அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாள்.

    உங்களின் அன்பான அழைப்பிற்கும், கணினித்தமிழ் மேல் கொண்ட ஆர்வத்திற்கும் அடையாளம். அரசு சார ஆனால் அரசு சார்ந்த கல்வியாளர்கள் கலந்து கொண்ட இந்தப் பயிற்சிக் கூடம். தொடரட்டும் இன்னும் சிறப்பான பல கனிகள், பணிகள்

    பதிலளிநீக்கு
  6. Nanum ippayilarangil kalanthu konden. Enaku kalanthukolla Vaaipu valangiya saanrorgaluku manamarntha nanri. Tamilil pathivu illavidinum en muthal pathivu ithuve. Nanri ayya.

    பதிலளிநீக்கு