தமிழ் விக்கிப்பீடியா வகுப்பு!

“விக்கிப்பீடியா”வில் எழுதப் பயிற்சி வகுப்பு
தமிழ்க் கணினிக் கருத்தரங்கம்
செந்தூரான் பொறியியல் கல்லூரியில் நடந்தது


 ச.பிரின்சு என்னாரெசு பெரியார் தமிழ்விக்கிப்பீடியாவகுப்பில்
 
    புதுக்கோட்டை-லெனா விலக்கில் உள்ள செந்தூரான் பொறியியல் கல்லூரிக் கணினி ஆய்வக அரங்கில், “நண்பா அறக்கட்டளைவழங்கிய விக்கிப்பீடியாவில் தமிழில் எழுதுவது பற்றிய கணினிக் கருத்தரங்கம் காலை முதல் மாலைவரை ஒருநாள் முழுவதும் நடந்த்து.
      பொறியியல் கல்வி பயிலும் மாணவ-மாணவியர் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
  சென்னைத் திரைப்படத்துறையைச் சேர்ந்த இணை இயக்குநரும், அண்ணா பல்கலைக்கழகக் கணினிப் பேராசிரியருமான பிரின்ஸ் என்னாரெசுப்பெரியார் வகுப்பைக் கலகலப்பாக நடத்திச் சென்றார். முற்பகலில் ஆங்கிலம் அறிந்திருந்தால் மட்டுமே கணினி கற்கமுடியும் என்பது தவறு...
ஆர்வம் இருந்தால் சாதாரணத் தமிழ்ப்படிப்புள்ள எவரும் கணினியில் கற்கவும், எழுதவும் முடியும் என்றும், அவற்றை இலவச மென்பொருள்களான இ.கலப்பை, முரசுஅஞ்சல், மற்றும் என்.எச்.எம்.ரைட்டர் முதலானவற்றைப் பயன்படுத்துவது பற்றி மாணவர் மனம் கொள்ளும் வகையிலும் எளிமையாகவும் ஸ்லைடு காட்சிகள்வழி விளக்கினார்.. அதோடு, தமிழில் மின்னஞ்சல் உருவாக்குவது, அனுப்புவது-பதில் பெறுவது பற்றியும் அதில் பயனர்கள் குறிப்பாக இளம்பெண்கள்- எச்சரிக்கையாக இருக்கவேண்டிய இடங்கள் குறித்தும் அதன் அவசியம் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார்.
      பிற்பகலில், கணினியில் தமிழில் எழுதக் கற்றுக்கொண்டவர்கள், கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் எழுதவேண்டிய அவசியம், எழுதும் முறை அதில் சென்று பதிவுசெய்யும் வழிமுறைகள், ஏற்கெனவே அதிலுள்ள கட்டுரைகள்-கருத்துத் தொகுப்புகளில் பிழையிருந்தால் நாமே அதைச் சரிசெய்யக் கூடிய நெறி முறைகள் பற்றிச் சொன்னதோடு, மாணவர்களின் சந்தேகங்களுக்கும் பதிலளித்தார். ஆங்கிலக் கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் சுமார் நாற்பது லட்சம் படைப்புகள் இருப்பதாகவும், தமிழில் தேடினால் சில லட்சம் கிடைப்பதே கடினமாக இருப்பதால், விஷயமுள்ள தமிழர்கள் அனைவரும் தமிழ்விக்கிப்பீடியாவில் எழுதுவது வருங்காலத் தலைமுறைக்குப் பயனளிக்கும் என்றும் கூறினார்.(படம்)
      இக்கருத்தரங்கை, புதுக்கோட்டையைச் சொந்த ஊராகக் கொண்டு, வெளிநாடுகளில் பணிபுரியும் இளைஞர்கள் தன்னார்வமாக நடத்திவரும் நண்பா அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளர்கள் கார்த்திக்,பிரகாஷ் ஆகியோர் வழங்கினர்.
      கருத்தரங்கின் சிறப்பு விருந்தினர்களாக, கவிஞர் நா.முத்துநிலவன், பாவலர் பொன்.கருப்பையா, ஆசிரியர் கஸ்தூரிரெங்கன், கவிஞர்கள் மு.கீதா, செ.சுவாதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
மாலையில் செந்தூரான் கல்லூரித் தலைவர் வைரவன் தலைமையில் நடந்த விழாவில், பேராசிரியர் பிரின்ஸ் என்னாரெசுப் பெரியார்கல்லூரிச் செயலர் தியாகராஜன், முதன்மைச் செயல்அலுவலர் ஏ.வி.எம்.எஸ்.கார்த்திக்,ஆகியோருடன் கவிஞர் முத்துநிலவன் கலந்துகொண்டு பேசிய விழாவில் மாணவர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
கல்லூரி முதல்வர் நவீன்சேட் வரவேற்க, நண்பா அறக்கட்டளை நிர்வாகி கார்த்திக் நன்றிகூறினார். (புகைப்படங்கள் “நண்பா“ அறக்கட்டளை-திரு பிரகாஷ்)
ஏற்பாடு -
திரு கார்த்திக், திரு பிரகாஷ் “நண்பா அறக்கட்டளை”-புதுக்கோட்டை.
------------------------------------------------------------------------------
செய்தி வெளியிட்டமைக்கு நன்றி -
திரு மோகன்ராம் -தினமணி செய்தி(31-10-2013,திருச்சிப் பதிப்பு)
தினமலர்-திருச்சிப் பதிப்பு (30-10-2013)
--------------------------------------------------------------
தமிழ் விக்கிப்பீடியா தகவல் இணைப்புப் பக்கம் செல்ல-
http://ta.wikipedia.org/wiki

7 கருத்துகள்:

  1. இணைப்பிற்குச் செல்லுகின்றேன் நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
  2. அய்யாவிற்கு வணக்கம்
    நண்பாஅறக்கட்டளையும் , செந்தூரன் கல்லூரியும் ஒரு முக்கியமான மைல்கல் நிகழ்வினை நிகழ்த்திருப்பதற்கு நன்றியுடன் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன். இணைப்பிற்கு நன்றி அய்யா. கணினித் தமிழ்ச்சங்கம் சிந்தனை தங்கள் சிந்தையில் தொடர்ந்து விரைவில் மலரும் நாளுக்காக ஆவலாக உள்ளேன்.

    பதிலளிநீக்கு
  3. யானை வரும் முன்னே மணியோசை வரும்... புதுக்கோட்டையில் கணினித் தமிழ்ச் சங்க வருகைக்குக் கட்டியம் கூறுபவைதான் இத்தகு செயல்பாடுகள்.

    பதிலளிநீக்கு
  4. சிறந்த பயிற்சி.என்னை மேலும் ஊக்குவித்தது.

    பதிலளிநீக்கு
  5. செய்தி அருமை... நன்றிகள்
    பல

    பதிலளிநீக்கு