மகாகவி பாரதிக்கே இரண்டாம் பரிசு என்றால், முதல் பரிசு பெற்ற கவிதை எது?

முனைவர் இரா.குணசீலன் அவர்களின் வலை பார்த்தேன்.  
அவர் நல்ல தகவல்களைத் தொடர்ந்து எழுதி வருகிறார் என்பதால் அவர்மேல் எனக்கு மிகுந்த மரியாதை உண்டு, “தன்பெண்டு தன்பிள்ளை சோறு வீடு சம்பாத்யம் இவையுண்டு தானுண்டு“என்னும் படித்த பேராசிரியர் மத்தியில், படிக்கின்ற பேராசிரியர் சிலரும் இருக்கிறார்கள்! அவர்களில் ஒருவர் நம் நண்பர்.

இன்று, தமிழின் முக்கியமான படைப்பாளியான அ.மாதவையா அவர்களின் நினைவுதினம் அவரைப்பற்றி விக்கிபீடியா விலிருந்து எடுத்த செய்திகளை அழகாகத் தொகுத்துத் தந்திருந்தார். அதைப் படித்த நான், பின்வரும் கேள்வியைப் பின்னூட்டமாக இட்டிருந்தேன்.
“அ.மாதவையா பற்றி மேலும் ஒருமுக்கியமான தகவல்-1914ஆம்ஆண்டு தூத்துக்குடித் தமிழன்பர்கள் நடத்திய கவிதைப்போட்டியில் -நண்பர்களின் வற்புறுத்தலுக்காக- கலந்துகொண்டு பாரதியார் எழுதிய கவிதைக்கு இரண்டாம் பரிசும் அ.மாதவய்யா எழுதிய கவிதைக்கு முதல்பரிசும் தரப்பட்டதாகத் தமிழ்ஆய்வறிஞர்கள் சொல்கிறார்கள். அந்தப் பாடல்எது என்று தெரியவில்லை. தெரிந்தால் அதுபற்றி எழுத வேண்டுகிறேன்
அவரும் நேர்மையாகப் பதிலிட்டிருந்தார் -


மாதவையா முதல்பரிசு பெற்றார் என்பதை மட்டும்  நான் அறிவேன். அந்தப் பாடல் என்ன என்று எனக்கும் தெரியாது. இணையத்தில் பார்த்தவரை அப்படி எதுவும் கிடைக்கவில்லை. இனிவரும் காலங்களில் அதைத் தேடிப் பதிவுசெய்ய முயல்கிறேன் நண்பரே”  - 
மகாகவி பாரதியாருக்கே இரண்டாம் பரிசு என்றால், முதல்பரிசு பெற்ற அ.மாதவய்யாவின் கவிதையைப் பார்க்க ஆவல்எழுவது இயல்புதானே?
தகவல் தெரிந்தவர்கள் 
சொன்னால் மகிழ்வேன்.

அ.மாதவையா உள்ளிட்ட நூற்றுக்கணக்கான தமிழறிஞர் படங்கள், ஆயிரக்கணக்கான நற்றமிழ் நூல்கள் மற்றும் சிற்றிதழ்களைச் சேகரித்து வைத்திருக்கும் அய்யா பொள்ளாச்சி நசன் அவர்களின் தமிழம் வலை இணையப் பக்கத்தை நண்பர்கள் பார்க்க வேண்டும் - http://www.thamizham.net/pulavar/unipulavarlist-u8.htm  

இவைதாம் இந்தவாரச் செய்தி !
(அப்பாடா ரொம்பநாள் கடன் அடைச்சாச்சு)

இது நிற்க -
இரண்டாம் பரிசு பெற்ற பாரதியின் கவிதையையும், பாரதிக்கு முதற்பரிசு மறுக்கப்பட்ட காரணத்தையும் இந்தக் கவிதை கிடைத்தபின் தெரிவிக்கலாம் என்று இருக்கிறேன்.
அது வரை...?
அதுவரை... ஒரு சின்ன இடைவெளி இருக்கட்டுமே?
எதிர்பார்த்துக் காத்திருப்பதும் ஒரு  சுகம்தானே!!?
----------------------------------------------- 

காத்திருந்தவர்கள் பார்க்க - http://valarumkavithai.blogspot.in/2013/11/blog-post_5.html 

17 கருத்துகள்:

  1. ஆவலுடன் காத்திருக்கிறோம் ...

    பதிலளிநீக்கு
  2. சற்றே காத்திருங்கள்... அதுவரை சும்மா இருக்க வேண்டாம், நண்பர்கள் குணசீலன், அய்யா நசன் ஆகியோரின் வலைப்பக்கங்களைச் சுற்றிப் பார்தது வாருங்கள் கஸ்தூரி, புதிய அனுபவங்கள் கிடைக்கும். நன்றி.

    பதிலளிநீக்கு
  3. நிச்சயம் அய்யா. காத்திருப்பது இலக்கிய காதலுக்கும் பொருந்தும். கவிவரிகளை எதிர்பார்த்து காத்திருப்பதும் சுகம் தான்.. தகவலுக்கு நன்றீங்க அய்யா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி பாண்டியன். காத்திருத்தல் சுகம் என்பது, காதலுக்கு மட்டுமல்ல, நல்ல இலக்கியத் தகவலுக்காகவும்தானே? நன்றி.

      நீக்கு
  4. இனிய வணக்கம் ஐயா...
    முனைவர் இரா.குணசீலன் அவர்களின் தளம் நன்கு பரிச்சயம்.
    அவரின் தமிழ்ப்பணி இணைய ஊடாக எங்களுக்கெல்லாம்
    சிறந்த படைப்புகளை கொடுக்கிறது. அவரின் தளம் பற்றி இங்கே உங்கள்
    வலைத்தளத்தில் காண்பது மகிழ்ச்சி ஐயா..
    ==
    ஐயா பொள்ளாச்சி நசன் அவர்களின் தளம் சென்று பார்க்கிறேன் ஐயா..
    அருமையான தளங்களை அறிந்துகொள்தல் எவ்வளவு ஆனந்தம்..
    மகாகவியின் அந்தக் கவிதையையும் அவரையும் மிஞ்சி
    முதல் பரிசு வாங்கிய மாதவையா அவர்களின் கவிதையையும்
    அறிந்துகொள்ள ஆவலாக இருக்கிறேன் ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நண்பர் மகேந்திரன் அவர்களே. “மகாகவியையும் மிஞ்சி“ மாதவையா பரிசு பெற்றுவிட விலலை.போட்டி நடுவர்களின் அந்த நேரத்து, உணர்வுதான் முக்கியமாகிப் போனது! இரண்டாம் பரிசுபெற்ற பாரதியின் பாடலைச் சொல்லிவிட்டால் இது தானாக உங்களுக்குப் புரிந்துவிடும். இன்னும் ஒரு நாள் பொறுத்துக்கொள்ளுங்கள்.சொல்வேன்

      நீக்கு
  5. அன்பு நண்பரே என் வலைபற்றிய தங்கள் மதிப்பீட்டுக்கு நன்றிகளை உரித்தாக்கிக்கொள்கிறேன். தங்களைப் போன்ற தமிழ் ஆர்வலர்கள் இணையவுலகிற்கு காலடி எடுத்துவைத்தது தமிழின் எழுச்சிக்கு அடையாளமாகும். நானும் கடந்த ஐந்து ஆண்டுகளாக இணையத்தில் தமிழ் எழுதிவருகிறேன. தங்ளைப் போன்ற தமிழ்ப்பற்றாளா்களின் மறுமொழிகள் என்னைத் தொடர்ந்து எழுதவைக்கின்றன.

    நசன் ஐயா அவர்களின் பணி ஒவ்வொரு தமிழர்களுக்கும் ஒரு முன்மாதிரி. அவரது இந்த தமிழ்ப்புலவர்கள் படங்களை நான் பதிவிறக்கி கல்லூரியில் என் மாணவர்களுக்கு மடிகணினியில் காட்டி பாடம் நடத்துவதுண்டு. மேலும் அதிலிருந்து தேர்ந்தெடுத்த 30 அறிஞர்களின் நிழற்படங்களை பெரிய அளவில் நிழற்படமாக்கி எங்கள் கல்லூரியில் 30 வகுப்பறைகளில் மாட்டியுள்ளோம். இங்கு எங்கள் முதல்வரின் தமிழ்ப்பற்றையும் நன்றியுடன் எண்ணிப்பார்க்கிறேன்.

    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நண்பர் குணசீலன், நசன் சத்தம் போடாமல் -ஆரவாரம் இலலாமல்- செய்துவரும் தமிழ்ப்பணிகள் வியப்பூட்டுவன! நான் கணையாழியில் எழுதிய ஒரு கட்டுரையைப் பாராட்டி “தமிழம்“ இதழில் எடுத்துப் போட்டதை எனக்குக் கூடச் சொல்லவில்லை. அவ்வளவு அடக்கம்! தமிழின் “ஆறாம்திணை“ வளர்ச்சியில் அய்யாவுக்குஉறுதியாக ஒரு பெரும் பங்குண்டு. இவரைப் போன்றவர்களைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிப் பாராட்ட வேண்டும்.. தங்கள் முதல்வர் தங்களின் பணிகளுக்கு உறுதுணையாக இருப்பது பெரும் வரம்! தங்கள் பணிகள் தொடர வாழ்த்துகள்.

      நீக்கு
  6. தொடர்ந்து அவரின் தளத்தை வாசிக்கிறேன்... எந்த ஒரு சிறப்பான தினத்தையும் அவர் பதிவிடாமல் இருப்பதில்லை... அவரை சிறப்பித்தமைக்கு வாழ்த்துக்கள் ஐயா...

    பதிலளிநீக்கு
  7. வணக்கம் அய்யா,
    இணையத்தின் உலாவி பாரதியின் பாடலைப் பின்னுக்கு தள்ளி முதல் பரிசு பெற்ற அ.மாதவையாவின் ”இந்திய கும்மி” எனும் கவிதையின் தலைப்பை மட்டும் கண்டு கொண்டேன். கவிதை கிடைக்கவில்லை. கவி வரிகளைத் தங்களின் மூலம் அறிய ஆவல் மிகுந்துள்ளது. நன்றி அய்யா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களின் இலக்கியத் தேடலுக்கு என் வாழ்த்துகள் பாண்டியன். இந்தத் தேடல் இருக்கும்வரை இலக்கியம் நம்மோடு இருக்கும். ஆனால், “இந்தியக்கும்மி“ என்பது கவிதைப் போட்டியாளர்கள் தந்த தலைப்பு. மாதவையாவின் தலைப்பன்று. அந்தத் தலைப்பில் மாதவையா எழுதிய கவிதைதான் நம் தேடலின் இலக்கு... பார்க்கலாம். நன்றி.(நானும் தேடியதில், அந்தப் போட்டி நடந்த ஆண்டு 1914 என்று தெரிந்து நம் பதிவிலும் திருத்தியிருக்கிறேன்.)

      நீக்கு
  8. தேடுங்கள் கண்டடைவீர்கள் என அண்ணா இந்த வாரம் எல்லோரையும் தேடவிட்டுவிட்டீர்களே !தேடல் தான் பண்படுத்தும் இல்லையா அண்ணா?மேற்சொன்ன ப்ளாக் எனக்கும் பார்க்க ஆவலாக இருக்கிறது.நன்றி

    பதிலளிநீக்கு
  9. நான் மாதவையாவின் கவிதையைத் தேடுகிறேன்.
    நீ -இரண்டாம் பரிசுபெற்ற- பாரதியின் கவிதையைத் தேடு. இதில் இன்று கவிதை எழுதும் உன்போன்ற இளைய கவிஞர்க்கு ஒரு முக்கியமான செய்தி இருக்கிறது தங்கையே! கொஞ்சரம் பொறு சொல்கிறேன். முதலில் சொல்பவர்க்கு ஒரு நல்ல கவிதைப் புத்தகம் பரிசு தரலாமா?
    மூச்சு நிற்பதல்ல மரணம், முயற்சி நிற்பதே மரணம் என்கிறார்களே?

    பதிலளிநீக்கு
  10. அன்புள்ள அப்பா,

    வணக்கம்.

    நீங்கள் தேடிய பாடல் இந்தப் பாடல் தானா??? உறுதியாகத் தெரியவில்லை... கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை சொடுக்கி தெளிவுபடுத்தவும்....

    ஏனெனில் இரண்டு பாடல்கள் கொடுக்கப்பட்டுள்ளது சந்தேகத்தினை ஏற்படுத்துகிறது....

    பாடல் 1

    கொல்லர் தெருவில் ஊசி கூறி விலைகள் பேசி
    இல்லை திறமை சீ சீ என்றே நமையும் ஏசி
    மேட்டிமை இன்று விளம்பிடும் மேலையர்
    காட்டினராக அலைந்திரும் காலையில்
    வித்தைமுற்றி உலகத்தனைக்கும் உயர்
    புத்தியிற் பெரிய சத்குருவே என
    நாகரிங் களின் நாற்றங்காலென
    ஏகமதாய் இசை மேவிய தாய் எனும்.....

    மொத்தம் 51 பத்திகள் கொண்ட பாடல் தொகுப்பு...

    பாடல் 2 ( பாடலின் நடுவில் வரும் இரண்டு வரிகள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது)

    அன்னையும் முக்காடு போடலாச்சே
    இனி ஆண்மையும் உண்டோ வெறும் பேச்சே.


    பார்க்க பக்கம் http://www.kalachuvadu.com/issue-134/page53.asp

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உன் தேடலுக்குப் பாராட்டுகளடா மகனே!
      துபையில் இருந்துகொண்டும் தமிழைத் தொடர்வது மிக்க மகிழச்சியாக இருக்கிறது. வேறுயாரும் தேடித்ததராததை நீ தேடித்தந்ததது மகிழ்ச்சியை இரட்டிப்பாக்குகிறது.. வாழ்க வளர்க இதைத் தனிப்பதிவாக்கியிருக்கிறேன் பார். உன் நண்பர்களையும் பார்க்கச் சொல்வாயென நம்புகிறேன்.

      நீக்கு
  11. கிடைத்ததா? நாங்களும் தேடுகின்றோம்! பதிவை ரசித்தோம்! என்ன புதிய தகவல் எல்லாம் வெளிவருகின்றன!
    நன்றி!

    பதிலளிநீக்கு