ஒரு வாசகனின் பார்வையில் - கம்பன் தமிழும் கணினித் தமிழும்

நா.முத்துநிலவனின் தோளில்
மகாகவி பாரதி நெஞ்சில் மகா.சுந்தர் 

ஓவியர் - திரு ரவிக்குமார்




"கிளிக்குப் பச்சைவண்ணம்  
தீட்ட வேண்டுமா?"
எனக் கேட்பார் அறிஞர் அண்ணா.
கவிஞர் 
முத்துநிலவன் அவர்களின் பேச்சுக்கும் எழுத்துக்கும் 'மதிப்புரை 'தேவையா
அவரின் பேச்சுக்கும்,எழுத்துக்கும் மயங்காதவர்கள் உண்டோ.?
 பல்வேறு மாத,நாள் இதழ்களிலும்,இணைய இதழ்களிலும் வெளிவந்து,தமிழறிஞர்களின் மனதில் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்திய பதினாறு கட்டுரைகளைத் தொகுத்துத் தந்துள்ளார் கவிஞர் முத்துநிலவன். கதை,கட்டுரை படிப்பதைப் போல,கட்டுரைகளைப் படிக்க முடியுமா.? அது படிப்போரின் உள்ளத்தைக் கவருமா?..முடியும் என நிரூபித்திருக்கிறார் முத்துநிலவன்.!அவரின் பரந்த வாசிப்பும்,ஆழமான மரபுப் பயிற்சியும்,புதியன கற்கும் ஆவலும்,அவரின் எழுத்துக்கு வலுவும் சுவையும் சேர்த்திருக்கின்றன.

       ஒரு கவிஞராக,ஓர் ஆய்வாளராக,ஒரு மேடைக்கலைஞராக_இப்படிப் பன்முகத் தன்மையில் இயங்குவதால்,இவரின் பார்வை விசாலப்பட்டிருக்கிறது.
கட்டுரை எழுதுவதென்பது..
(பேராசிரியர் தி.இராசகோபாலன் அவர்கள் எழுதிய 'பற்றி எரியும் பனிக்கட்டிகள்'நூலுக்கு, சின்ன குத்தூசி அவர்கள் எழுதியுள்ள முன்னுரையில் குறிப்பிட்ட செய்தியை இங்குக் குறிப்பிட விரும்புகிறேன்.)   
   சென்னையில் 45ஆண்டுகளுக்கு முன்பு,கதை எழுதுவதுகவிதை படைப்பது,கட்டுரை எழுதுவது-இவற்றில் எது கடினம் என்ற விவாதம் நடைபெற்றது. அதில் தீபம் நா.பா, கு.அழகிரிசாமி, வல்லிக்கண்ணன் போன்ற அன்றைய இலக்கியவாதிகள் கலந்துகொண்டனர்.விவாதத்தின் முடிவில்,கதை,கவிதை எழுதுவதைவிட கட்டுரை எழுதுவதுதான் கடினம் என்ற முடிவுக்கு வந்தனர்."எளிமையாக இருப்பதுடன்,படிப்போர் மனத்தை நெகிழவைத்து,அவர்களை வழிநடத்தும் வகையிலும் இருக்கவேண்டும்...இப்படிப்பட்ட கட்டுரைகளை எழுதவேண்டுமானால்,அந்த எழுத்தாளர் பல்வேறு இலக்கியங்களில் ஆழங்கால் பட்டவராக,  படைப்பாற்றல் மிக்கவராக இருக்கவேண்டும்" என்றெல்லாம் அந்தப் பொதுக் கருத்துக்கு விளக்கமும் அளித்தார்கள்.
நூலாசிரியர் முத்துநிலவன்,தான் ஒரு படைப்பாளராகவும்,புதிய படைப்பாளர்களை ஊக்குவித்து உருவாக்கக்கூடியவராகவும் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கிறார்.


அணிந்துரைகள் மற்றும், 

புதுக்கவிதை பற்றிய கட்டுரைகள் பற்றி..

இந்நூலில் நான்கு அறிஞர் பெருமக்கள் அணிந்துரை அளித்துள்ளனர்.பதினாறு கட்டுரைகளில் நான்கு கட்டுரைகள் புதுக்கவிதை குறித்துப் பேசுகின்றன. அணிந்துரைகள் குறித்தும்,மூன்று கட்டுரைகள் குறித்தும்(இன்றைய தமிழில் பெண்கவிகள், புதுக்கவிதை-வரவும் செலவும், மரபுக்கவிதை எனும் மகாநதி வற்றிவிட்டதா?) என் மனதில் எழுந்த எண்ண அலைகளை இங்கு உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.

அழகு சேர்க்கும் அணிந்துரைகள் 
ச.தமிழ்ச்செல்வன் தன் முகவுரையில் "...தமிழ் இலக்கிய உலகில்...சில ஆழமான விவாதங்களுக்கு ஊடே செல்வதால்,50ஆண்டுகால இலக்கியவரலாற்றின் ஒரு குறுக்குவெட்டாக இந்நூல் அமைகிறது" என்றுகூறி,இத்தொகுப்பிற்கு வளம் சேர்த்துள்ளார். மேலும்,'தன்னுடைய கருத்தைத் துறுத்தலாக வைக்காமல்,தன பார்வையை இடையிடையே வைத்துச்செல்வது சிறப்பு'என்றும், 'புதுக்கவிதை வரவும் செலவும் என்ற கட்டுரை,வல்லிக்கண்ணன் இல்லையே என்ற குறையைத் தீர்க்கிறது'என்றும்,'நம் முற்போக்குக் கவிஞர்கள் குறித்து நூலாசிரியர் கொள்ளும் நம்பிக்கையும் பெருமிதமும் எனக்கு இல்லை'என்றும் கூறி, 'காமம் செப்பாது கண்டது மொழிந்து' அவர் அறத்தொடு ஆய்வுசெய்துள்ளார். .
 
முனைவர் மதிவாணன் அவர்கள் தன் மதிப்புரையில், முத்துநிலவன் அவர்களின் ஆளுமை பற்றி மிகத்துல்லியமாக மதிப்பீடு செய்துள்ளார்.ஆசிரியத் தொண்டு,சமூக அக்கறையோடு அழகியல் குன்றாக் கவிதையாக்கம்...எனத் தொடங்கி,கணினியின் புதிய தொடர்புகளை உள்வாங்கி,உலகளாவிய நிலையில் உலவுதல்...என அவர் பட்டியல் போடும்போது,முத்துநிலவன் அவர்களின் பன்முக ஆற்றல் நம் கண்முன்னே விரிகின்றது.

 
கல்லூரிக்காலத்திலேயே நூலாசிரியரின் போர்க்குணமும்,தென்றல் போன்று பழகும் திறமும் கண்டு,'பாஸ்கரனை நிலவனாக்கியவர்'செந்தலை ந.கவுதமன் அவர்கள். "நூலாசிரியர் எழுப்பியுள்ள விவாதங்கள்,இன்னும் பல்வேறு ஆய்வுகளுக்கான அடர்த்தி மிக்கவை"என்று அணிந்துரையில் அவர் சொல்லியிருக்கும் பாங்கு நேர்த்தியானது. அவர் வரிகளிலேயே சொல்வதானால்,"....தமிழிலக்கியப் பெரும்பரப்பைத் தூக்கித் தூசகற்றிக் காட்ட முயல்கிறது இந்நூல். தேற்றிய விளைச்சலில் தெறித்து விழுந்தவை,மடியைக் கனமாக்குகின்றன. மடியில் விழுந்தவை,மறுவிளைச்சலை உருவாக்கும் வீரியமுள்ளவை..!"

         எதையும் மாறுபட்ட கோணத்தில் ஆய்வுசெய்யும்  மதுக்கூர் இராமலிங்கம் அவர்கள்,தனது முன்னுரையில் "நூலாசிரியர் தமிழ் மரபு,மார்க்சிய அறிவு இரண்டையும் இரு கண்ணாகக் கொண்டு ஆய்வைச் செய்துள்ளார்"என்றும்,
"இந்த ஆய்வுகள்,இலக்கியத்தின் அடர்த்தியைமட்டுமல்ல,அதன் ஆன்மாவையும் கண்டுணர்ந்து சொல்பவை" என்றும் கூறியிருப்பது நுட்பமானது!

ஆழிப்பேரலையாய் 
பெண்கவிகள்....
 அடக்கப்பட்ட,முடக்கப்பட்ட,தடுக்கப்பட்ட நீர்,தடைகளை உடைத்துக்கொண்டு ஆவேசமாக பொங்கி எழுவது இயற்கையே! யுகம்யுகமாக அடிமையாயிருந்த பெண்ணினம்,தங்கள் ஊமை மௌனத்தை உடைத்துக்கொண்டு,ஆழிப்பேரலையாய்,அணையுடைத்த வெள்ளமாய்,பேசத் தொடங்கியுள்ளனர்.
பெண் உரிமைக்காக பாரதி,பாரதிதாசன்..போன்ற பெரும்கவிஞர்கள் குரல்கொடுத்தனர். இருந்தாலும்,தனக்கான உரிமைகளை ,தன் அவஸ்தைகளை ஒரு பெண் சொல்லுகின்ற அளவிற்கு ஆணால் ஒரு போதும் சொல்லமுடியாது என்பதை,பெண்கவிஞர்கள் தன் கவிதைகள் மூலம் நிரூபித்துவருகின்றனர்.
'
தாசனுக்குப் பெண்பால்..' என்ற கவிதையில் வைகைச்செல்வியின் கோபம் கொப்பளிக்கிறது.
  "
அம்மாவின் எதிரில்கூட
  
ஆடைமாற்றிக்கொள்ளக்
  
கூசியிருக்கிறேன்....பேற்றின் வலியோடு
  
அலறும் குரலில் இணைந்தே ஒலிக்கிறது
   என் நிர்வாணத்திற்கான அழுகையும்"...அ.வெண்ணிலாவின் கவிதை,
பெண்ணின் வலியை, ஆணால் கற்பனை செய்துகூடப் பார்க்கமுடியாது என்கிற உணர்வை உண்மையாக்குகிறது!.
    'சந்திரனில் வீடு!
    சாதனை நாளில்கூட 
    பாட்டாளி மக்களுக்குக் 
    கொட்டாங்குச்சியில் காப்பி'...மன்னைரத்திகாவின் வரிகள்,பாட்டன் பாரதியின் 
"சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம் 
           சந்தி தெருப்பெருக்கும் சாத்திரம் கற்போம்"...என்ற வரிகளை நினைவுபடுத்துகிறது. இன்னும் பலபெண்கவிஞர்களின் கோபம் அவர்களின் கவிதைமூலம் வெளிப்பட்டு,அவர்களுக்கான நியாயத்தை நிலைநிறுத்துகிறது.
நூலாசிரியரின் 'பெண்கவிஞர்களின்' பட்டியல்,அவரின் வாசிப்பு அனுபவத்தைக் காட்டுகிறது.
மரபுக்கவிதைப் பக்கமும் பெண்கள் வரவேண்டுமெனவும், சொற்புனை நலத்திலும்,கற்பனை வளத்திலும்,இன்னும் முன்னேறவேண்டும் என்றும்,அத்தனையையும் பெண்சக்தி செய்துமுடிக்கும் என்றும் நம்பிக்கையோடு கட்டுரையை முடித்திருப்பது நேர்த்தியாக உள்ளது!    



வரவு செலவு
  மாறிவரும் சமூகமாற்றத்திற்கேற்ப,இலக்கியமும் மாறுவது இயற்கையே.! புதுக்கவிதை தோன்றிய காலத்தில்,அதன் போக்கும்,நோக்கும் ஆரோக்கியமானதாக இல்லை.
   பண்டிதர்களிடமிருந்து தமிழைக் காப்பாற்றுவதாக நினைத்துக்கொண்டு,..புதுக்கவிதையை வேறுபாதைக்கு அழைத்துச் சென்றார்கள்.”....என்றும்,


    விரக்தி,தத்துவப்பிதற்றல்,சிலரது மேதவித்தனங்கள்...போன்றவற்றால் புதுக்கவிதைக் குழந்தை ஆரம்பத்தில் சவலைக்குழந்தையாக இருந்தது என்றும்,புதுக்கவிதையின் பலவீனங்களை நூலாசிரியர் பட்டியல் போடுகின்ற விதம் அழகானது. "இலக்கண மரபைக் காப்பதற்காக, கவிஞர்கள் சொற்களைப் பிடித்து இழுக்க வேண்டியுள்ளது. கம்பன்,வள்ளுவன்,பாரதி போன்ற பெருங்கவிஞர்களுக்கும் இந்த இடைஞ்சல் வந்துவிடுகிறது"...என்ற விமரிசகர் பாலாவின் கூற்றை இங்குக் குறிப்பிட்டிருப்பது பொருத்தமாக உள்ளது. 
அப்துல் ரகுமான்,மேத்தா,வைரமுத்து போன்ற புகழ்பெற்ற புதுக்கவிஞர்களின் தத்துவ பலவீனங்களையும், நடுமுள் தடுமாறாமல் தன் ஆய்வுத்தராசில் ஏற்றி எடைபோடும்விதம் போற்றத்தக்கது.!
    மூவாயிரம் ஆண்டுக்காலம் மரபு தராத வீரியத்தையும்,தாக்கத்தையும்,சமூக மாற்றத்திற்கான மோதல்களையும், 30ஆண்டுக்கால புதுக்கவிதைகள் தந்துவிட்டன என்ற நூலாசிரியரின் முடிபு ஏற்கத்தக்கது.

வற்றக்கூடாத 

மரபுநதி..

  மூவாயிரம் ஆண்டுக்காலம் வற்றாத ஜீவநதி-தமிழ் இலக்கியத்தின் தனிச் சிறப்பு என்பதையும் நூலாசிரியர் மறுக்கவில்லை! மரபுச் செழுமையோடு,மரபின் நல்ல அம்சங்களையும் ஏற்றுக்கொண்டு,புதுக்கவிஞர்கள் எழுதக்கூடாதா..?என்ற ஆசிரியரின் கவலை நியாயமானதே!
  புதுக் கவிதை எழுதமாட்டேன் என்ற சில மரபுப் பித்தர்களின் பிடிவாதமும், மரபின் செழுமையை உணராமல் புதுக்கவிதை படைக்கவருவோரின் அலட்சியப் போக்கும் அவர்களுக்கு மட்டுமல்ல;தமிழுக்கும் மிகப்பெரிய இழப்பாகும் என்ற நூலாசிரியரின் உளக்கருத்து,நூல் முழுதும் ஊடுருவியிருப்பதை உணரமுடிகிறது!.

  இது ஒரு முன்னோட்டமே.....

 ஒரு பிரம்மாண்டமான திரைப்படம் உருவாகிக்கொண்டிருக்கும்போதே,அந்தப் படத்திற்கான முன்னோட்டம் வெளியாகி ,எதிர்பார்ப்பை ஏற்படுத்துவது இயல்பு.அதுபோல கவிஞர் முத்துநிலவன் அவர்கள்,அடுத்த ஆண்டு,'கவிதையின் கதை'என்ற தமிழ்க் கவிதையின் வரலாற்றை நிறைவு செய்து வெளியிட உள்ளார். அதற்கான வெள்ளோட்டமே இந்த நூல்.!
இலக்கிய உலகமே ஆவலோடு எதிர்பார்க்கும் 'கவிதையின் கதை' நூலும் வெளிவந்து,தமிழ் இலக்கிய உலகில் பல்வேறு விவாதங்களை உண்டாக்கட்டும்!
   மெல்லத் தமிழினி வளரட்டும்..!    
வெல்லத் தமிழுக்கு வளம்பல சேர்க்கட்டும்..!
-------------------------------------------- 

எனது “கம்பன் தமிழும் கணினித் தமிழும்“ எனும் இலக்கியச் சிந்தனைகள் சார்ந்த 16கட்டுரைகளில் மூன்று கட்டுரைகளைப் பற்றிய 
தனது மதிப்பீட்டை வழங்கியிருக்கும் 
கவிஞர் மகா.சுந்தர் 
அவர்களுக்கு எனது அன்பான நன்றிகள் 
-அவரது வலைப்பக்கம்--
http://mahaasundar.blogspot.in/

16 கருத்துகள்:

  1. வலைப்பூ மூலமாக நமது நட்பு ஆரம்பித்தமுதல் தங்களது பதிவுகளைப் படிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறேன். ஒவ்வொரு பதிவிலும் தாங்கள் பதியும் எழுத்துக்கள் ஆழமானதாகவும், பொருள் பொதிந்தனவாகவும் இருப்பதை என்னால் காண முடிகிறது. பிற நண்பர்களுக்கு எழுதும் கடிதங்களில் தங்களின் மதிப்பீட்டுத் திறனை நன்கு உணரமுடிகிறது. நடை என்ற நிலையில் கூட தங்களின் எழுத்தைப் பார்த்து நான் சிலவற்றைக் கற்றுக்கொண்டேன். தங்களின் பணி பல்லாற்றானும் சிறக்க வாழ்த்துகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அய்யா என்னைப்ப ற்றிய பதிவுகளை விக்கிப்பீடியாவில் ஏற்றிய தங்களின் அன்பிற்கு --
      என்னகைம் மாறுசெய்வேன் யான்?
      (இந்த விஜூ வின் வீச்சு. இப்ப எதை எழுதினாலும் அது வெண்பா ஓசையில்தான் வந்து விழுகிறது)

      நீக்கு
  2. பதில்கள்
    1. விளக்கம்எல்லாம் வேணாமா?
      நேரா வாக்குப் பதிவுதான்!
      சரி நன்றி வேறென்ன சொல்ல?

      நீக்கு
  3. வணக்கம்
    ஐயா

    கருத்துரையை பார்க்கும் போது படிக்க தூண்டுகிறது. புத்தகம் இருந்தால்மகிழ்ச்சியடைவேன்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அய்யா நண்பர் பீர் முகம்மது தரவில்லையா?
      சரி விடுங்கள் நான் வரும்போது உங்களுக்காக ஒருபிரதி கொண்டுவருகிறேன். (விற்பனைக்குத்தான் பிரதிகள் இ்ல்லை!)

      நீக்கு
  4. மகாசுந்தரின் நடையில் அவரது வாசிப்பும், உங்கள் நூல் வாசிப்பும் ஒரு சேரத் தெரிகிறது அய்யா!

    பகிர்வுக்கு நன்றி!

    த ம 2

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பிற்கு ந்ன்றி அய்யா. (இன்றைய நூலக வாரவிழாவில் “வாசிப்பு ருசி“ பற்றிப் பேகினேன். என்னையறியாமல் உங்களின் தமிழ் வகுப்பு பற்றிச் சொல்லிவிட்டேன். (நம் வலைப்பதிவர்கள் மகா.சுந்தர், மு.கீதா, சுவாதியும் இருந்தனர் கவிஞர் தங்கம் மூர்த்தி தலைமையில் மாவட்ட மையநூலகம்

      நீக்கு
  5. முத்துநிலவன்,தான் ஒரு படைப்பாளராகவும்,புதிய படைப்பாளர்களை ஊக்குவித்து உருவாக்கக்கூடியவராகவும் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கிறார்.//உண்மைதான் வாழ்த்துக்கள் முத்துநிலவன் அய்யா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களையும் நம் புலவர் அய்யா அவர்களையும், நண்பர் மதுமதியையும் சந்தித்து வந்தது பெருமகிழ்வைத் தந்தது அ்ய்யா. நான் நினைத்ததை விட நீங்களும் அய்யாவும் இளமையாகவும், தெரிகிறீர்களே எப்படி? ரொம்ப மகிழ்ச்சிய்யா.

      நீக்கு
  6. ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம். உங்கள் நூலினைப் பற்றிய வலைப்பதிவர், ஆசிரியர் மகாசுந்தர் அவர்களது விமர்சனத்தினை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி. நானும் அவருடைய பதிவினில் எனது கருத்துரையை எழுதி இருக்கிறேன்.
    த.ம.4

    பதிலளிநீக்கு
  7. வாழ்த்துக்கள் ஐயா...

    சமீபத்திய சென்னைப் பயணம் பற்றி பதிவு உண்டா...?

    பதிலளிநீக்கு
  8. விமர்சனப் பகிர்வுக்கு மிக்க நன்றி ஐயா! உண்மையான வாழ்த்துக்கள் ஐயா! எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  9. மிகச் சிறப்பாக சொல்லியிருக்கிறார் ஐயா...
    உங்கள் எழுத்துக்களை தொடர்ந்து வாசிப்பதில் எங்களுக்கு மிகுந்த சந்தோசம்..

    பதிலளிநீக்கு
  10. மிகச்சிறப்பான மதிப்புரை! பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு