சிறுகதைச் சிகரம் ஜெயகாந்தன் காலமானார்...

ஜெயகாந்தன் (24-04-1934 - 08-04-2015)
(1)   137கதைகளைக் கொண்ட 15சிறுகதைத் தொகுப்புகள், 35குறுநாவல்கள், 14நாவல்கள், 22கட்டுரைத் தொகுப்புகள் சில மொழிபெயர்ப்புகள், ஒரு நாடகம் –இவை தமிழுக்கு அவரே சொல்லிக்கொண்டது போல- மாஸ்டர் பீஸ் படைப்புகள்..
(2)   தமிழ் எழுத்தாளர்களைத் தலைநிமிரச் செய்த எழுத்தாளர்-
(3)   எழுத்தாளர்களைக் கோழைகளாக, பிழைக்கத் தெரியாதவர்களாக எண்ணியிருந்த தமிழ்ச் சூழலை மாற்றி, எழுத்தாளர்க்கு உரிய கவுரவத்தையும் கம்பீரத்தையும் பெற்றுத்தந்தவர் 
(4)   தமிழ் எழுத்தாளர் ஒருவரும் திரைப்பட நட்சத்திரங்களைவிட பேரும்புகழும் பெறமுடியும் என்று தன் எழுத்தால் நிரூபித்தவர் –
(5)   “வெறும் சோற்றுக்கோ வந்ததிந்தப் பஞ்சம்“ என்று பாரதிகூடப் புலம்பியது போக முழுநேரத் தமிழ் எழுத்தாளர் ஒருவர் பணத் தட்டுப்பாடு இல்லாமலே வாழ முடியும் என்று காட்டியவர்
(6)   தமிழ் எழுத்துக்காகவே மாநில அளவில் கௌரவமான சாகித்திய அகாதெமி, ராஜராஜன் விருது, ருஷ்ய விருது அகில இந்திய அளவில் ஞானபீடவிருது மற்றும் தமிழ் எழுத்தாளர் யாரும் இதுவரை பெறாத  பத்ம பூஷண் விருது என விருதுகளைக் குவித்தவர் -
(7)   எல்லாவற்றுக்கும் மேலாக, சிறுகதைகளைப் படித்தவர்கள் சிலநாள்களேனும் அந்த நினைவிலிருந்து மறக்க முடியாதபடி பாத்திரப்படைப்பில் சாதனை புரிந்தவர் –
(8)   ஐந்தாம் வகுப்பே படித்தவர் தனி ஒரு படைப்பாளியாகத் தமிழில் மிக அதிகமான எம்.ஃபில், பி.எச்டி.(முனைவர்) பட்டங்களைப் பெறக் காரணமான வாழ்வியல் சிந்தனைகளை வழங்கியவர் –
(9)   திமிர் பிடித்தவர், மண்டைக்கனம் கொண்டு மற்றவரை மதிக்காதவர் என்றெல்லாம் சொல்லப்பட்டாலும், அவரிடம் நெருங்கிப் பழகியவர்க்கே தெரியும் அவர்ஒரு குழந்தையென.
(10)  எந்த நேரத்திலும் யாருக்காகவும் தனது எழுத்தை, கம்பீரமான பேச்சை மாற்றிக் கொள்ளாத போர்க்குணமிக்க படைப்பாளி –

எனச் சொல்லிக்கொண்டே போகலாம்.. 

அப்பேர்ப்பட்ட எழுத்தாளர் ஜெயகாந்தன் இன்று காலமானார் என்று அறிந்து நெஞ்சம் அழுகின்றது.

அவரைப் பற்றிய முழுவிமர்சனத்தை 20ஆண்டுகளுக்கு முன்னரே எழுதியவன் நான். விமர்சனத்தில் இப்போதும் மாற்றமில்லை. 

ஆனால் அந்த மாபெரும் படைப்பாளி 20ஆண்டுகளுக்கு முன்னரே எழுதுவதை நிறுத்திக்கொண்டார் என்பதுதான் எனது முக்கியமான விமர்சனமாக இருந்தது.. 

அவருக்கு எனது வீர வணக்கம்.

அவரது சிறுகதைத் தொகுப்புகள் அனைத்தையும் பல்லாண்டுகளுக்கு முன்னரே, தனித்தனியே வாங்கியிருந்தாலும், அண்மையில், ஆனந்தவிகடனின் முழுத்தொகுப்பாக வெளிவந்தபோது வரையப்பட்ட ஓவியங்களுடன் பார்க்கவும் படிக்கவுமாகக் கடந்த சென்னை புத்தகக் காட்சியில் “ஜெயகாந்தன் சிறுகதைகள்“ தொகுப்பை ஆசையோடு வாங்கி இப்போதும் திடீரென்று எடுத்துப் பார்த்துக்கொண்டிருப்பேன்..

அவரது இழப்பு,
தமிழ் மக்களுக்கு,
தமிழ்ப்படைப்பாளிகளுக்கு
ஈடுசெய்ய முடியாத இழப்பு என்பது ஒன்றும் 
சம்பிரதாயமான வார்த்தையன்று.

அவரது முழுப்படைப்பு மற்றும் வாழ்க்கையைப் பற்றி அறிய விரும்புவோர் எனது “கம்பன் தமிழும் கணினித் தமிழும்“ நூலின் “ஒரு ஜெயகாந்தனும் சில ஜெயகாந்தன்களும்“ எனும் எனது விமர்சனக் கட்டுரையைப் படிக்கக் கேட்டுக்கொள்கிறேன்.
இந்த வலைப்பக்கத்திலும் படிக்கலாம்.

அவர் மறைந்திருக்கலாம். 
தமிழ்ப் படைப்புகளில் -
குறிப்பாகச் சிறுகதை வரலாற்றில் 
அவர் என்றென்றும் வாழ்வார். 
வாழ்க ஜே.கே!
----------------------------------------- 
நன்றி - http://ta.wikipedia.org/wiki/ஜெயகாந்தன்

26 கருத்துகள்:

  1. வணக்கம் அய்யா
    சிறுகதை சிகரம் எழுத்தாளர் ஜெயகாந்தன் மறைவு உண்மையில் ஈடுசெய்ய முடியாத ஒன்று. அவரின் படைப்புகளில் கதாபாத்திரம் படித்த பின்னும் நம்மோடு நடைபோடுவது போல ஜே.கே அவர்கள் மறைந்த போதும் அவரது படைப்புகளும் அவரின் திருமுகமும் நம்மோடு பயணிக்கும் என்பது நிச்சயம். ஆழ்ந்த இரங்கல்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவரது மறைவால் அவரின் படைப்புகள் மறுவாசிப்புக்கு உள்ளானால் அதுவே பெரும் மாற்றங்களைக் கொண்டுவரும் என்பது எனது நம்பிக்கை - குறிப்பாக இன்றைய தலைமுறைக்கு . நன்றி பாண்டியன்

      நீக்கு
  2. சிறுகதைக்கு முதலிடம் கொடுத்து சிறுகதைச் சிகரம் காலமானார் என்று தலைப்பைக் கொடுத்து விட்டீர்கள். பலருக்கு அவர் நாவல்கள் பிடிக்குமல்லவா? அவர் கட்டுரைகளும் வரைந்தவர். நீங்கள் எழுதியபடி: 15 சிறுகதைத் தொகுப்புகள், 35குறுநாவல்கள், 14நாவல்கள், 22கட்டுரைத் தொகுப்புகள் சில மொழிபெயர்ப்புகள், ஒரு நாடகம் – எனவே இலக்கிய சிகரம் மறைந்தார் என்றிருக்கலாம்.

    நீங்கள் போட்ட பட்டியல் சரியாக வந்திருக்கிறது. 9ம் 10ஐயும் தவிர,

    இன்றைய தமிழிலக்கியத்தில் குறிப்பிடத்தக்க எழுத்தாளர். ஆனால், பிரச்சினைக்குள்ளான மனிதர். நெருங்கிப் பழகியவருக்கு குழந்தையாக இருந்து என்ன இலாபம்? பொதுமனிதர்களுக்குத்தானே அவர் பேசிய பேச்சுக்கள்? நெருங்கிப்பழகியவர்களையா அவை வருத்தின?

    அவரோடு அப்பேச்சுக்களும் புதைக்கப்பட்டன என்று அவற்றைத் தள்ளிவிட்டு அவர் விட்டுச்சென்ற படைப்புக்களுக்காக ஒரு ஓ போடலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரே.. நான் ஜெயகாந்தனைக் கடுமையாக விமர்சித்திருப்பதாக எனது கட்டுரையைப் படித்தவர்கள் சொல்கிறார்கள். அதையெல்லாம் தாண்டி அவரது படைப்புகளை மதிப்பவன் நான். அதனால்தான் ரொம்பவே யோசித்து “சிறுகதைச் சிகரம்“ என்று தலைப்பிட்டேன். அவரது நாவல்களில் பெரும்பாலானவை எனக்கு உடன்பாடில்லை. ஆனால் அவைதாம் அவரைப் பேசவைத்தன. எனது வலைப்பக்கக் கட்டுரையைப் படித்தால் உங்கள் கேள்விகளுக்கான பதில் கிடைக்கலாம் அன்புகூர்ந்து படிக்கக் கேட்டுக்கொள்கிறேன் - இணைப்பில் படியுங்கள். நன்றி

      நீக்கு
  3. ஒரு பிரபலமாய் ஜெயகாந்தன் அவர்களைப் பற்றி பல வேறுபட்ட கருத்துகள் இருக்கலாம், ஆனால் தமிழ் சிறுகதையை வேறு தளத்துக்கு நகர்த்தியவர்களில் அவரும் ஒருவர் என்பதில் யாருக்கும் கருத்துவேறுபாடு இருக்க முடியாது !

    அவரது படைப்புகள் இனி அவர் பெயர் சொல்லும் !

    நன்றி
    சாமானியன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழ் சிறுகதையை வேறு தளத்துக்கு நகர்த்தியவர்களில் அவரும் ஒருவர் - அதுதான், அதே தான் நன்றி நண்பரே.

      நீக்கு
  4. ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் ஐயா
    அமரத்துவம் பெற்ற அவரது எழுத்துக்கள்
    உலகு உள்ளவரை நிலைத்து நிற்கும்
    தம+1

    பதிலளிநீக்கு
  5. கல்லூரி நாட்களில் இவரது சில நேரங்களில் சில மனிதர்கள் படித்தேன். தொடர்ந்து இவரது எழுத்தின்மீதான ஆர்வம் அதிகரித்தது. ஏனோ தெரியவில்லை இவரது எழுத்துக்களை நான் படிக்கும்போதும், பேச்சினைக் கேட்கும்போதும் பீடல் காஸ்ட்ரோவின் கம்பீரத்தையும், மன உறுதியையும் உணர்ந்துள்ளேன். எனக்கு ஜெயகாந்தன் கம்பீரமான சிங்கம் போன்றே தோன்றினார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பேச்சும் எழுத்தும் கம்பீரம்...
      இது அரிது.
      இவர்போல முயன்றவர்கள் தோற்றார்கள்..
      இவர்மட்டும்தான் நின்றார். நன்றி அய்யா

      நீக்கு
  6. "உன்னைப் போல் ஒருவன்" - மறக்க முடியுமா...?

    பதிலளிநீக்கு
  7. தமிழ் இலக்கிய வரலாற்றில் சிறுகதை, குறும்புதினம், புதினம், அனுபவக் கட்டுரைகள், திரையுலகிற்கு சிலநேரங்களில் சிலமனிதர்கள், உன்னைப்போல் ஒருவன் போன்ற நடப்பு வாழ்வியல் கதைகள் எனப் பெரும் பங்களித்து, ஞானபீடம், சாகித்திய அகாதமி, பத்மபுசன் முதலான விருதுகளைப் பெற்ற ஒரு நல்ல படைப்பாளி செயகாந்தன் அவர்களின் மறைவு இலக்கிய உலகிற்கு பேரிழப்புதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவரை முரண்பாடுகளின் மூட்டை என்பாரும் உள்ளார்கள்.
      எனது முழுவிமர்சனத்தில் அதைச் சொல்லியிருக்கிறேன்.
      நேரமிருக்கும்போது படித்துவிடுங்கள் அய்யா. நன்றி

      நீக்கு
  8. என்றும் வாழ்வார் தமிழ் எழுத்தாளர்களின் நெஞ்சினில்.....

    பதிலளிநீக்கு
  9. பதில்கள்
    1. தமிழ் மண மதி்ப்பெண்ணுக்கு நன்றி,
      எழுத்துப் பிழைக்கு ஒரு மதிப்பெண் குறைத்துக்கொள்கிறேன்.

      நீக்கு
  10. ஜெயகாந்தனைப் பற்றிய உங்கள் விமர்சனத்தை ஒத்துக்கொண்டவர்களில் நானும் ஒருத்தி. அந்த விமர்சனங்கள் அப்படியே இருக்கின்றன என்ற உங்கள் நேர்மைக்கு ஓர் "ஓ" போடறேன் சார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கவிஞரே. அந்த விமர்சனங்கள் தவறாகவேண்டும், மாறவேண்டும் என்றே நானும் எதிர்பார்த்தேன். கடைசிவரை மாறவிடாமலே அந்த மாபெரும் எழுத்தாளர் மறைந்துபோனதில் எனக்கு வருத்தம்தான். (உங்கள் வலைப்பக்கப் புதிய வடிவமைப்பு அருமையாக உள்ளது)

      நீக்கு
  11. வணக்கம்
    ஐயா

    அவர் மறைந்தலும் அவரின் படைப்புக்கள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது..
    ஆழ்ந்த இரங்கல்...

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  12. ஜெயகாந்தனின் அனைத்து படைப்புகளையும் படித்ததில்லை என்றாலும் படித்த சில பிரமிக்க வைத்தது உண்மை. சமீபத்தில் புதிய தலைமுறையிலும் எழுதி வந்தார்.
    தங்களின் கட்டுரையையும் படித்திருக்கிறேன்.வாழும்போதே அங்கீகாரம் பெற்றவர்களில் இவரும் ஒருவர்.
    சிறப்பான பதிவு

    பதிலளிநீக்கு