ஜெயகாந்தன் படைப்புகள் - ஒரு முழு விமர்சனம் - நா.முத்து நிலவன்


மறக்க 
முடியாத
எழுத்தாளனின்
பிறந்த நாளில்

வணக்கம்
செலுத்தி,
ஒரு
மறு 
விமர்சனம்!


---------------------------------          

ஒரு ஜெயகாந்தனும்
சில  ஜெயகாந்தன்களும்
-- நா.முத்து நிலவன்
----------------------------------------------------------------------------
 மணிவிழாக் கருத்தரங்கம் முடிந்தது.
 கார்களின் நெரிசலுக்கிடையே நடந்து போய்க்கொண்டிருந்த முனியம்மா, இரண்டு சக்கர வாகனத்தில் கிளம்பிய கங்காவை கவனித்துவிட்டாள்.
 “இன்னாம்மே ! கண்டுக்காத போய்க்கினேகீறியே!ஹக்காங்
 “அட ! நம்ம முனிம்மா!வண்டியை நிறுத்தி இறங்கிவிட்டாள் கங்கா.
 “சேச்சே ! என்ன முனியம்மா ? நா பாக்கல.. ஹவ் ஆர்யூ? செமினார்க்கு வந்திருந்தியா?
 “வந்திருந்தியாவா? மீட்டங்கி நடக்கச்சொல்ல அம்மாநேரமும் ஒரு மூலையில குந்திக்கினு அல்லாத்தியும் பாத்துகினுதான் இர்ந்தோம்…”
 “அட்ட! உன்னோட வேற யாரெல்லாம் வந்திருந்தாங்ககங்கா கேட்டு முடியவில்லை நொடித்துக்காட்டினாள் முனியம்மா.
 “அடடே! அல்லாரும் வரமாட்டமாங்காட்டியும்? இந்த மினிம்மா மட்டுமா வந்திருந்தான்னு நென்ச்சிக்கினே ? அக்கட சூடு! நம்ப சித்தாளுகம்சல, ‘ஒருபுடி சோத்துக்க நாயா அலைஞ்சி லோல்படுற ராசாத்தி, மாரியம்மா, அந்தா ஓவர் டைமுஏலுமல, ‘ டிரெடிலு வினாயகம், இந்தா பாசஞ்சர் வண்டியிலவந்து பெரளயத்துல மாட்டிக்கின அம்மாசிக் கெயவன், நம்ம பாடகரு பொணத்தக் கட்டிகினு அயுதான? ரிக்சாக்கார கவாலி, அம்மாந் தூரம் ஏன்? நேத்தக்கி வந்தவஅந்த ரிசிபத்தினிபொன்னம்மா அல்லாந்தா வந்துர்ந்தோம்…”
 கொஞ்சம் தள்ளித்தள்ளி, மரத்தடிகளில் நின்று பேசிக் கொண்டிருந்த எல்லோரையும் சுட்டிக் காட்டினாள் முனியம்மா. அவர்களோடு, முனியம்மா சொல்லாவிட்டாலும் - நூறு பேர்களில் இருவராக நின்றிருந்த பரந்தாமன், ஆனந்தனையும் பார்த்தாள் கங்கா. ஆச்சரியமாகவும் இருந்தது.
அந்த தெருவோர தேசியவாதிளைப் பார்க்க சங்கடமாகவு மிருந்தது.
 ‘தே ஆர் ஆல் செய்லிங் இன்த சேம் போட்..ஈவன் டுடே…’ என்று நினைத்துக்கொண்டவள் சே ! திங்க் பண்ணுவது கூட இங்கிலீஷில்தானா வரவேண்டும்’, என்று தனக்குள் விவாதித்துக்கொண்டே முனியம்மாவி;டம் கேட்டாள்..
ரியலி? எல்லாருமா வந்திருந்தீங்க? நா பாக்கலியே. லாஸ்ட் ரோல ஐ வாஸ் சிட்டிங் வித் பிரபு, கௌதம் அன் மாலா ரெண்டு மூணு சீட் தள்ளி கல்யாணியும், ரெங்காவும் கூட இருந்தாங்க. அப்பாலமகுடேசம்பிள்ளை, முத்துவேலர், கணபதி சாஸ்திரிகள், சீதா, சங்கர சர்மா, சாரதா மாமி, தங்கம், ஆதி யெல்லாம் கூட வந்திருந்தாளே ! டோன்ட் யூ நோ தெம்?...”
 “ந்தா இந்த டஸ்ஸ_ புஸ்ஸி_ இங்கிலீசெல்லாம் நம்ம கைல வாணாம் தாயீ! நீங்கள்ளாம் வெள்ளையும் சொள்ளையுமா சோபால குந்திகினு இர்ந்தீங்கநாங்க எப்பவும்போல அப்டி ஓரஞ்சாரத்துல ஒண்டிக்கினு எட்டி எட்டி பாத்துகிணு இர்ந்தோம்இன்னா பண்றது? பாயாப்போன மன்சு கேக்லியே?
 அது செரீஅல்லாரும் பேசவுட்டு கடசீல அவுரு வந்துஅது இன்னாதது?  ஏற்புரையா? ஆங்அதான்சிங்க மாட்டமா சொம்மா வெளாசித் தள்ளிகினாரே? ஆமாஅது இன்னாத்துக்கும்மே இப்பப்போயி அல்லாரும் தெகிரியமா இந்தி பட்ச்சிக்கணும்ன்றாரு? ..என்னிய மாரி மினியம்மால்லாம் இன்னிமேல இந்திபட்சி இன்னா ஆவப்போவுது ன்றாரூ…!
 “ஸீ!முனிம்மா, அட்லீஸ்ட் நெக்ஸ்ட்செஞ்சுரியிலாவதுஸீவாட் ஐம் கோயிங் டு சே ஈஸ்…” முனியம்மாவிடமும்  தன் இயல்பில் ஆங்கிலத்திலேயே பேசிவிட்டதை உணர்ந்து, தனது நாகரிகமற்ற செயலுக்கு உண்மையிலேயே வருந்தி, நாக்கைக் கடித்துக் கொண்டு நிறுத்திவிட்டாள் கங்கா.
-----------------------------------------------------------------
 போதும்,
 கங்காவும், மற்ற உயிருள்ள பாத்திரங்கள் யாவும், சற்றுநேரம் அப்படியே உறைந்து நிற்கட்டும். நாம், அவர்களைப் படைத்தளித்த நமது அற்புதப் படைப்பாளியோடு சிறிது நேரம்-உரிமையோடு-பேசிவருவோம்.
 மணிவிழா என்ன? பவள விழாவும், அதைத் தாண்டி நூற்றாண்டு விழாக்களும் காணவேண்டிய அபூர்வ எழுத்து அவருடையது. கட்சி-பிரதேச எல்லை தாண்டி வித்தியாசம் மறந்து மனம்திறந்து பாராட்டலாம்.

* ஜெயகாந்தன் --
 நூற்றுக்கணக்கான தமிழ் எழுத்தாளர்களுக்கும், லட்சக்கணக்கான வாசகர்களுக்கும் கடந்த 40 ஆண்டுகளாகப் பிடித்துப்போன ஒரு பெயர். (கட்டுரை எழுதிய ஆண்டு 1995)
 137 கதைகளைக் கொண்ட 15 சிறுகதைத் தொகுதிகள், 35 குறு நாவல்கள், 14 நாவல்கள், 20க்கு மேல் கட்டுரைத் தொகுப்புகள், சில மொழி பெயர்ப்புகள், ஒரு நாடகம்-இவை தமிழுக்கு அவர் தந்த-அவரே சொல்லிக் கொள்வதுபோல-மாஸ்டர் பீஸ்படைப்புகள்.

ஒரு ஜெயகாந்தனின் உயரம்!
ü இந்த நூற்றாண்டின், சிறுகதை நாவலில் மிக அதிக அளவில் வாசகர்களைக் கவர்ந்த எழுத்துக்களைத் தந்தவர்.
ü புதுமைப்பித்தனுக்கும் மேலாக, எதிர்த்தும் - ஆதரித்தும் பெரிய விவாதங்களைக் கிளப்பியவரும் ஜெயகாந்தன்தான்.
ü புதுமைப்பித்தன் தொட்டார், விந்தன் தொடந்தார் எனினும், சேரி ஜனங்களையும், அன்றாடங்காய்ச்சிகளையும் காவிய நாயகர் களைப் பார்ப்பது போல நம்மைப் பார்க்க வைத்தவர் அவர்தான்.
ü படித்து முடித்து சில நாட்களாவது அந்தச் சிந்தனையிலிருந்து மீளமுடியவில்லைஎன்று கூறுமளவுக்குத் தமிழ் வாசகர்களைப் பெரிய அளவில் பாதித்தவை ஜெயகாந்தனின் படைப்புகள். நேற்று ஒரு ஜெயகாந்தன் நாவல் படித்தேன்ராத்திரியெல்லாம் தூக்கமில்லைஎன்பவர்களை இன்றும் காணமுடியும்.
ü அவர் படித்ததுஐந்தாம் வகுப்பு வரை தானாம். ஆனால், தமிழகத்தில் தனி ஒரு படைப்பாளியாக அதிக அளவு எம்.ஃபில், பி.எச்.டி. பட்டங்களை ஆய்வாளர்களுக்குக் கொடுத்திருப்பவர்’ – ஜெயகாந்தன்தான்.
ü 1966-இல் ஒரு சிறுகதை, 1969-இல் அதுவே தொடர்கதை, நடுவிலேயே தலைப்பு மாறியது, 1979-இல் மீண்டும் இன்னொரு பத்திரிக்கையில் அதன் தொடர்ச்சி.
ü ஒரே கருவில் 5 வருடத்தில் அவ்வப்போது வந்த ஏழு குறு நாவல்கள் ! இதெல்லாம் ஜெயகாந்தன் மட்டுமே செய்த தமிழ் இலக்கிய சித்து விளையாட்டுக்கள்!

ü தமிழில் கொலைக்கதைகள் எழுதிச் சம்பாதித்தவர்கள் உண்டு. சினிமா கதாசிரியர் கவிஞர்கள் சம்பாதித்ததும் உண்டு. ஆனால், தனது கதை இலக்கியப் புத்தக விற்பனைமூலமே அதிக சம்பாத்தியம் கண்டு, செலவு பிடிக்கும் சென்னையில் வசதியாக வாழும் முழுநேர இலக்கியவாதி இவராகத்தானிருப்பார்.

  ஆனால்-
  இவரை முரண்பாடுகளின் மூட்டைஎன்பவரும் இருக்கிறார்கள்!
  தன்னைப் போன்ற சாயலில் இவரே (முதலில் சிலநேரங்களில் சில மனிதர்கள்’- பிறகு கங்கா எங்கே போகிறாள்நாவல்களில்) படைத்திருக்கும் ஆர்.கே.எனும் எழுத்தாளர் ஆர்.கே.வி. (விஸ்வநாத சர்மா)பற்றி அவரது தாயார் கூறுவதாக ஜெயகாந்தனே எழுதியுள்ள வரிகளைப் பாருங்கள்:
 “இவன் எழுதற கதைகளைப் பத்தியா பேசிண்டிருக்கேள் ? உன்னை மாதிரி இருக்கறவாதான் ஒரேயடியாப் புகழறேள். இவன் என்ன எழுதறான்? எல்லாத்துக்கும் ஒரு கோணக்கட்சி பேசுவான். நேக்கு ஒண்ணும் பிடிக்கறதில்லேடிம்மா. ஆனா, அவனோட பேசி யாரும் ஜெயிச்சுட முடியாது. நியாயத்தை அநியாயம்மான். அநியாயத்தை நியாயம்பான் (கங்கா எங்கே போகிறாள்-பக்:117)

 ஜெயகாந்தனின் இந்த சுய விமர்சனத்தில்எந்த அளவுக்கு உண்மை உள்ளது? இந்த கேள்விக்கு விடைகாண்பதே மணிவிழாக் காணும் அந்த மகத்தான எழுத்தாளனுக்கு நாம் செய்யும் இலக்கிய மரியாதையாகும்.
---------------------------------------------------------------------------
நடுத்தெரு வர்க்கத்து நண்பன்ஜெயகாந்தன்:
 ஜெயகாந்தனின் முதல் சிறுகதை 1950-இல் (அவரது பதினாறாவது வயதில்) – ‘சௌபாக்கியம்எனும் இதழில் பிச்சைக்காரன்’ – எனும் தலைப்பில் கடலூர் காந்தன்எனும்புனை பெயரில் வெளிவந்தது.
 1954 ஏப்ரலில் முதல் சிறுகதைத் தொகுதிஆணும் பெண்ணும்’ (கிட்டுப் பதிப்பகம் மதுரை) வெளிவந்தபோது, அவர் சென்னை பவானி அச்சகத்தில் ஒரு தொழிலாளியாக (கம்பாசிடர் ஆகவும், ‘டிரெடில் மெஷினைக் காலால்மிதித்து ஓட்டி அச்சுப் பதித்த டிரெடில் மேன்ஆகவும்) வேலை செய்த அனுபவத்தை அவரே, பின்னால் கல்பனா-ஜனவரி 1981-இதழில் எழுதுகிறார்.
 அதுமுதல், பத்தாண்டுகளுக்குள்ளான அவரது படைப்புகளே அவருக்கு சிறுகதை மன்னன்எனும் பெயரோடு பெரும் புகழைப் பெற்றுத்தந்துவிட்டன.
 1965 டிசம்பர் முடிய அவர் எழுதிய 104 சிறுகதைகள் எட்டுக் குறுநாவல்கள், 2 நாவல்களிலேயே, ஜெயகாந்தனின் முழு வீச்சும் வெளிப்பட்டுவிட்டது.
 அந்த 30-வயதுக்கு அது அசகாய சூரத்தனமானஇலக்கிய சாதனை என்பது மிகையல்ல.
 1950-களில் அவரது வாழ்க்கை அனுபவங்கள், சந்தித்த வீதியோரத்து மனிதர்களின் பிரச்சினைகளே கலைவடிவம் பொங்கும் தமிழின் சிகரச் சிறுகதைகளாயின.

 பரம்பரை செல்வப் பெருமை தந்தையோடுபோக, ‘பாழ்மிடிசூழ, ஐந்தாம் வகுப்புக்குமேல் படிக்கப் பிடிக்காமல் சென்னைக்கு ஓடிவந்துவிட்ட ஜெயகாந்தன்.

 ரயில்வே ஸ்டேஷனில் மூட்டைதூக்குவது,
 குதிரை வண்டியில் கூலிவேலை,
 சினிமாக்கொட்டகையில் பாட்டுப்புத்தகம் விற்பது,
 மளிகைக் கடையில் எடுபிடிப் பையன்,
---------------------------------------------------------------------------------------------
ஜெயகாந்தன் பற்றி கண்ணதாசன் (கண்ணதாசன் இதழில்)                 நான், 1944 எழுதத் தொடங்கினேன்.இன்றுவரை நூற்று க்கணக்கான கதாசிரியர்களைப் பார்த்திருக்கிறேன்.பெரும்பாலோர் சம்வக் கதைகளிலே பெயர் விளங்கியவர்களே தவிரப் பாத்திர சிருஷ்டியை அறிந்தவராகக் கூட இல்லை.  (Kanna photo)             
தமிழ்நாட்டில் அப்படிச்சில பாத்திரங்களை நினைவு கூரத் தொடங்கினால்,  அண்மைக் காலங்களில் ஜெயகாந்தனின்     கதாபாத்திரங்கள் மட்டுமே நினைவுக்குவரும் என்பது அவருக்குள்ள தனிச்சிறப்பாகும். (ஏப்’76.ஜெ.கா.சிறப்பிதழ் கட்டுரை)
-----------------------------------------------------------------------------------------------
                                                                                                                                       
  ஒரு டாக்டரிடம் பை தூக்கும் உத்யோகம்,
 மாவு மிஷினில் வேலை,
 ‘சோப்புத் தொழிற்சாலையில் வேலை’ –
 ‘இங்க்தொழிற்சாலையில் வேலை,
 கம்யூனிஸ்டுக் கட்சி அலுவலகத்தில் இருந்து புத்தகம்-பத்திரிகை-விற்பது, பத்திரிக்கையில் உதவி ஆசிரியர்எனும் பெயரில் ப்ரூப்ரீடர்- என பலதரப்பட்ட அனுபவ உழைப்பாளி யாகவும் இருந்து, பெற்ற பட்டறிவே, அவரது எழுத்தறிவோடுசேர்ந்து, 1965 வரை அவரது படைப்புகளில் தெறித்துவந்தது.

 1948-இல் புதுமைப்பித்தன் மறைவுக்குப் பிறகு, ரகுநாதனின் பஞ்சும் பசியும்வரையிலான இடைக்காலத்தில் முற்போக்கு இலக்கியத்திற்கான வெற்றிடத்தை விந்தன் சிறிது நிரப்பினார். அதன் வீச்சை வெற்றிரமாக்கியவர் ஜெயகாந்தனே.
---------------------------------------------------------------------------
என்ன சொன்னால் எவர்க்கு உவப்பாக இருக்கும் என்று அவர் கவலைப்படுவதே இல்லை.                                    
சொல்லித்தீர வேண்டியதைச் சொல்வதில் அவர் நிறைவு காண்கிறார். தமிழக ஆளுநர் - கே.கே.ஷா. (‘சில நேரங்களில் சில மனிதர்கள்’– மக்கள் பதிப்பை வெளியிட்டு பேசியது)
----------------------------------------------------------------------------
 இலக்கியத்தரம் எனும் வகையில் பார்த்தால், 1950-களுக்கு முன்னிருந்தே எழுதிக்கொண்ருந்த லா.ச.ரா., தி.ஜானகிராமனுடன், சிறிது இடைவெளிக்குப்பிறகு தொடர்ந்து எழுதிய சி.சு. செல்லப்பா, க.நா.சுப்ரமணியம், ந.பிச்சைமூர்த்தி ஆகியோர் மீண்டும் எழுதவந்தனர்.
 ஆயினும் இவர்கள் எழுத்தில் சமகாலப் பிரச்னைகள் பெரும்பாலும் பிரதிபலிக்கவில்லை. மாறாக இலக்கிய விமர்சகர் எழில் முதல்வன் குறிப்பிடுவதுபோல-
 “மிராசுதாரர்களும், வக்கீல்களும், ஐ.சி.எஸ்- தாசில்தார் வர்க்கத்தார்களுமே கதை மாந்தர்களாக இடம்பெற்றிருந்த சிறுகதை உலகில், நடைபாதை வாசிகள், பிச்சைக்காரிகள், ரிக்ஷாக்காரர்கள், விபச்சாரிகள், தொழிலாளிகள், குஷ்டரோகிகள், உளநோயாளிகள் ஆகியோரைக் குடியேற்றிப் புதிய மாற்றத்தை உண்டாக்கியவர் ஜெயகாந்தனே.” (இருபதாம் நூற்றாண்டுத் தமிழிலக்கியம் - 1973, பக்:136) என்பதில் சந்தேகமில்லை.

 அதேபோல- 
 தமிழின் தலைசிறந்த இலக்கிய விமர்சகரான கா.சிவத்தம்பி அவர்கள் 1965-66 காலத்திலேயே சமகால ஜெயகாந்தனை சரியாகக் கணித்து, “தமிழ்ச் சிறுகதையுலகில், இன்றுள்ள காலப்பிரிவை ஜெயகாந்தன் காலம்என்று குறிப்பிடவேண்டிய அளவுக்கு, ஜெயகாந்தன் கதைகள் இலக்கியத் தரமும், வாசக ரஞ்சகமும் உடையனவாகத் திகழ்கின்றன.என்று குறிப்பிட்டதோடு 1966இல் அக்கினிப்பிரவேசம்வெளிவந்தவுடனே ஜெயகாந்தனில் நிகழ்ந்து வரும் மாற்றம்பற்றியும் உடனடியாக சரியாக-எழுதினார்.

 எனவேதான்- வாசக ரஞ்சகமும், இலக்கியதரமும் உடைய, சமகால மக்கள் பிரச்சினைகளைப் படைப்பாக்கிய ஜெயகாந்தனை எல்லாரும் உச்சியில் வைத்துப் போற்றினர். இதை அவரே ஜாக்கிரதை உணர்Nவுhடும், கலைப்பிரக்ஞைபோடும் எழுதிய கதைகள்என்று சொல்வதும் பொருத்தமாக உள்ளது. (1962-‘மாலையக்கம்’-முன்னுரை)

 “எனக்குத் தெரிந்த வாழ்க்கைகளை வைத்து மட்டுமே நான் எழுத முடியும். அந்த வாழ்க்கையின்மீது எனக்கிருக்கும் பிடிப்பு-பரிவின் காரணமாகவே நான் எழுதுகிறேன்” (‘சுயதரிசனம்சிறுகதைத் தொகுதி 1967-ஜெயகாந்தன் முன்னுரை) என்று கூறிக்கொள்ளும் ஜெயகாந்தனின் வார்த்தைகளை, மிக அண்மையில் அவர் எழுதியிருக்கும் இப்படித்தான் நடக்கிறது’ (புகை நடுவினிலே தொகுப்பு – 1990, மகுடம் மாத இதழ்-டிசம்பர்’92) கதை வரையிலும் பொருத்திப் பார்க்கலாம்.
----------------------------------------------------------------------
சுற்றுச்சூழல், ஓசோன் போன்ற இயற்கை அச்சுறுத்தல்கள்
குறித்து என்ன கருதுகிறீர்கள்? – எதற்கும் அஞ்சாதீர்கள் ! அதுவும் 2000ஆண்டுகளுக்குப் பின்னால் ஏற்படப்போகும்
அழிவைக் குறித்து நாம் அஞ்சி என்ன பிரயோஜனம் கடவுளை நம்புங்கள்! காப்பாற்றுவார்! (கணையாழி நவ.’95-ஜெ.கா.)
-----------------------------------------------------------------------------

ஒரு ஜெயகாந்தனுக்குள்
இரண்டாவது மூன்றாவது ஜெயகாந்தன்கள்:
 13 வயதிலேயே, கம்யூனிஸ்டுக் கட்சியின் முழுநேர ஊழியராக இருந்த அவரது மாமாவுடன் கிடைத்த கம்யூன் வாழ்க்கைகற்றுத்தந்த தத்துவ-நடைமுறை அனுபவங்கள், ‘தேசவிடுதலைஎனும் ஒரு நோக்கில் அப்போதைய காங்கிரஸ் கட்சியும்-கம்யூனிஸடுக் கட்சியும் கைகோத்து நின்று எழுப்பிய உத்வேகம், 14வயது ஜெயகாந்தனுக்கு தேசவிடுதலைஉணர்வை ஊட்டியது.
 கம்யூனிஸ்டுக் கட்சியின் ஒரு கடிதத்தைக் கொண்டு கொடுப்பதற்காகவே முதன் முதலில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்துக்குப் போனார் ஜெயகாந்தன்.

 சுதந்திரம் வந்தது.
 சூழ்நிலை மாறியது.
 ஜெயகாந்தன் கூறுகிறார்:
 “நான் மதித்த காங்கிரஸ் கட்சி அதிகாரவர்க்கக் கட்சியாகவும், எனது சொந்த வீடாகிய கம்யூனிஸ்டுக் கட்சி தடைசெய்யப்பட்ட கட்சியாகவும் ஆகியிருந்த ஒரு சோதனையான சூழ்நிலையில்-(1949)- தோன்றிய தி.மு.கழகம் எனக்கு ஒரு பெரும் சவாலாகவே தோன்றியது” (குமுதம் 28.4.94).

வளர்ந்து வந்த தி.மு.க. தலைவர்கள் காந்தியத்தையும், கம்யூனிஸத்தையும் ஏற்பது போலப் பேசியும், எழுதியும் வந்தனர். அண்ணாவை தென்னாட்டு காந்திஎன்றதும், தமிழகத்தில் திராவிடப் பொதுவுடமைப் பூங்காஅமைப்பதே லட்சியம்என்று கூறியதும் ஜெயகாந்தனுக்கு போலியாகப்பட்டது. அவர்களின் வறட்டு நாத்திகமும், பிராமண எதிர்ப்பும், பழமை போற்றலும், தமிழினவாதமும் ஜெயகாந்தனைப் பெரிதும் எரிச்சலுறச் செய்தன.

 இதனால்-
 தி.மு.க. தொடங்கிய காலத்திலேயே அதன் பகிரங்க எதிர்பாளராகத் தன்னைப் பிரகடனம் செய்து கொண்ட ஜெயகாந்தன், தமிழின வாதத்துக்கு எதிரானவராகவும், வேதாந்த பிராமண ஆதரவாளராகவும் தன்னை வளர்த்துக்கொண்டார். தன்படைப்புகளையும் அவ்வாறே-அப்போது-எழுதினார்.
 பின்னர் தி.மு.க.வை எதிர்த்து வெளியேறிய ஈ.வெ.கி.சம்பத், கண்ணதாசன் ஆகியோருடன் சேர்த்து, தி.மு.க.வை எதிர்த்துப் பிரச்சாரமும் செய்தார்.  1949ல் வெளிவந்த அண்ணாவின் வேலைக்காரிபடம், ‘ஒன்றே குலம்’-ஒருவனே தேவன் என்றது. ;கடவுள் இல்லைஎன்ற பெரியாருக்கு மாறாக ஒரு கடவுள் உண்டுஎன்று சமரசம்செய்தது. சீருடைய நாடு தம்பி திராவிட நன்னாடு, ஓர் கடவுள் உண்டு-தம்பி-உண்மைகண்ட நாட்டில்என்றார் பாரதிதாசன்(ஏற்றப்பாட்டு – 54)  

தி.மு.க. தொடங்கிய காலத்திலேயே அதன் பகிரங்க எதிர்ப்பாளராகத் தன்னைப் பிரகடனம் செய்து கொண்ட ஜெயகாந்தன், தமிழின வாதத்துக்கு எதிரானவராகவும்,   வேதாந்த பிராமண ஆதரவாளராகவும் தன்னை வளர்த்துக்கொண்டார். தன்படைப்புகளையும் அவ்வாறே அப்போது-எழுதினார்.
 1952இல் வெளிவந்த கலைஞரின் பராசக்தியில்’, கோயிலிலே குழப்பம் விளைவித்தேன், கோயில் கூடாது என்பதற்காக அல்ல, கோயில் கொடியவர்களின் கூடாரம் ஆகிவிடக்கூடாது என்பதற்காகஎன்று தீந்தமிழ் வசனம் தெறித்து வந்தது.
 இவற்றுக்கு மாறாக,  1955இல் ஜெயகாந்தன் எழுதிய தமிழச்சிசிறுகதை அன்றைய தி.மு.க. எதிர்ப்பை அப்பட்டமாகக் காட்டியது. தேவலோகத்திலிருந்து, மதுரைக்கு வந்தனர் கண்ணகியும் இளங்கோவடிகளும்.
 “அதோ ஒரு தமிழச்சி, எச்சிலையிலிருக்கும் சோற்றை வழித்துப் புசிக்கிறான். அவளருகே ஒரு தமிழ் நாயும் நிற்கிறது. வற்றிப் போன அவள் மார்புச் சக்கையைச் சுவைத்தவாறு ஒரு, ‘தமிழ் சிசு’. சற்று தூரத்தில், “சிலப்பதிகாரமும், திருக்குறளும் படைத்த நமது தமிழர்கள் -மூடரல்ல, நம்நாடு நமக்கு வேண்டும் என்று பேசிக்கொண்டிருக்கிறார். மதுரை நகராட்சிக் கவுன்சிலர் சுதர்சனப் பிள்ளை”. அவரே இரவில் தன் வீட்டில் அடைக்கலம் புகுந்த கண்ணகியை-ஆம் சிலப்பதிகார கண்ணகியைத்தான் - பெண்டாள நினைத்த சண்டாளத்தனத்தை, ஆவேசம் குமுற எழுதுகிறார் ஜெயகாந்தன்.

 1967இல் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகுகூட இந்த தி.மு.க. எதிர்ப்புஜெயகாந்தன், முனை மழுங்கிப் போய்விடவில்லை. தி.மு.க.வின் ;வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றிய சினிமாக் கவர்ச்சியை எதிர் பொருளாக வைத்து, ‘கண்ணதாசன்இதழில் ஒரு தொடர் எழுதினார் (அதைவெளியிட்ட கண்ணதாசனே பிறகு அரங்கமும் - அந்தரங்கமும்தொடர் எழுதி, பாதியில் நிறுத்தி, எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் அரசவைக் கவிஞர்ஆனார் என்பதும் தனி இலக்கிய வி(வ)காரம்) அந்த சினிமாவுக்குப்போன சித்தாளுஎம்.ஜி.ஆரைத் தாக்குவதாகப் பலரும் பதறினர். ஆனால், நமது கலாச்சாரத்தின் சீரழிவில் தமிழ்ச்சினிமாவின் பங்கு பற்றிப் பார்த்தால் இன்றைக்கும் அது பொருந்தும்.

 இவை நல்ல விஷயங்கள்தான் எனினும், கலாச்சார- அரசியல் சீரிழிவின் எதிர்ப்பாளராக,  தமிழினவாத-பிராமண எதிர்ப்பு இயக்கத்தின் எதிராளியாக, தன்னை அடையாளம் காட்டிய ஜெயகாந்தன், பிராமண ஆதரவின் வேதாந்தியாக,வறட்டு நாத்திகத்தை எதிர்த்த-வறட்டு வேதாந்தியாகவோ மாறுவது!? ‘பாவம் பக்தர் தானே?’ என்றொரு சிறுகதை எழுதினார்.
 கோவிலில் சிலையாகி நிற்கும் பாலகிருஷ்ணனுக்கு ஒரு ஊமைக்கிழவி தினமும் சோறு ஊட்டிவருகிறாள். இந்த அனாசாரத்தைக் கண்டுவிட்ட பூசாரி, கிழவியை வெளியேற்றி, கோயிலைப் பூட்டிவிடுகிறார். ஒருசில நாள் கழிந்ததும் பாலகிருஷ்ணன் இளைத்துப்போகிறான். ஜெயகாந்தன் எழுதுகிறார்:  “ஆமாம். பாலகிருஷ்ணன் இளைத்தே தான் போய்விட்டான். இதைப் போய் யாரிடம் சொல்வது? பகுத்தறிவு வாதம் என்கிற பெயரில் நாஸ்திகவாதம் பெருத்துப்போன இக்காலத்தில், என்னைப் பைத்தியக்காரன் என்றல்லவா சிரிப்பார்கள்!

 இதுபற்றி-    
 இதற்கு நாம் எந்தவிதமான விளக்கமும் தரவேண்டியதில்லை, ஏழைகளின் பக்கம்தான் கடவுள் இருக்கிறார் என இட்டுக்கட்டிச் சொல்லும் இந்த ஏமாற்றுவித்தையைத்தான் புராணிகர்கள் காலகாலமாய்ச் செய்து வருகிறார்களே! அந்தப் படையில் ஜெயகாந்தனும் எதற்குச் சேருகிறார்?” எனும், இலக்கிய விமர்சகர்; அருணனின் கேள்வியே சரியானது (அருணன் கட்டுரைகள்’ 1991-அன்னம், சிவகங்கை, பக்:89).
--------------------------------------------------------------------------------

எதிர்ப்பில் பரிணமித்த 
இன்னும் ஒரு ஜெயகாந்தன்:
 ‘தீ பரவட்டும்’, ‘ஆரியமாயைஎனும் திராவிட இயக்கப் பிரச்சாரத்துக்கு எதிராகவோ, காந்தியத்தில் ஊறிய ராமராஜ்யஆதரவாகவோ, பொங்கி எழுந்த ஜெயகாந்தன்: சில பிராமணர்கள் கெட்டிருக்கலாம்: சங்கர சர்மா போன்ற பிராமணோத்தமர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்என்னும் கருத்தோடு பிரம்மோபதேசம்கதையை எழுதுகிறார்-1962இல்.

 “காலாகாலம் சந்தியா வந்தனம் செய்வதில் தவறாமலும், பிதுர்க்கடன் நிறைவேற்ற மறவாமலும், ஆகமநெறி வழுவாத ஒரு பெரியாராய், ஒன்பது சுற்று யக்ஞோபவீதத்துடன், ‘பத்தாறுதரித்து பிராமண குலத்திற்கோர் பிரதிநிதியாகவே வாழ்ந்தார் சங்கர சர்மா?”

 இப்படியான இவரிடம் வேலைதேடி வந்த இளைஞன் சேஷாத்திரி, பிறப்பால் பிராமணனே எனினும், ‘அவன் கம்யூனிஸ்ட்என்பதால் அவனிடம் பிராமணத் தன்மைஇல்லை என்று கூறி, தனது மகள் காயத்ரியைத் திருமணம் செய்துதர மறுத்துவிடும் சங்கரசர்மா, பிறப்பால் பிராமணர் அல்லாத ஒருவர்-சதானந்த ஓதுவார்-வேதநம்பிக்கையுள்ள நடைமுறையால், பிராமணனாகத் தகுதி பெறுகிறார். மகளைத் தலைமுழுகிவிட்டு, சதானந்தனை மகனாகத் தத்தெடுத்துக்கொள்கிறார்.

 இப்படியான இவரது வேதம் புதுமை செய்யும்கருத்துக்களால், கோவை ஞானிபோன்றவர்கள்.மார்க்சிய வாதிகள் கூறும் புராதன பொதுவுடமை சமுதாயம், வேதகாலச் சமுதாயமேஎன, மனிதகுல வரலாற்றையே குழப்பும் அளவுக்கு, பலமான தாக்கம் விளைந்தது.

 பின்னர் பாவம் இவள் ஒரு பாப்பாத்தி” (1979) தொடங்கி, ‘ஜயஜயசங்கர’ (1984) முடிய எழுதிய ஏழு குறுநாவல்களிலும், இந்துமத வழியில் இந்திய சமூகத்தில் மாற்றம் கண்டுவிடலாம் எனும் கருத்துக்களையே எழுதினார்.  “நமது ஹிந்து தர்மத்தின் பேராலேயே, இந்த தேசத்தை சோசலிசப் பாதையில் அழைத்துச்செல்ல முடியும் என்று நான் மார்தட்டிச் சொல்லுகிறேன்என்றகருத்தில் உறுதியாக இருக்கிறார்.

 “இந்த தேசம், உலகத்துக்கே நல்லவழிகாட்டிய பெருமைக்கு உயரும். ஆம், நமது துப்பாக்கிகளின்  முழக்கம், வெற்றிக் கொண்டாட்ட முழக்கமாக, மக்களின் உற்சாக ஆரவாரங்களோடுதான் ஒலிக்கும். இதில், உடலங்களின் சிதைவும், உயிர்களின் ஓலங்களும் கலந்து ஒருபோதும் ஓலிக்காது. இது, உலகுக்கே ஒரு புதுமை!என ஊருக்கு நூறுபேர்இயக்க முன்னோடி எழுத்தாளர் ஆனந்தன் பேசுவது ஜெயகாந்தனின் குரல்தானே? (‘எங்கெங்கு காணினும்’-மீனாட்சி-1981.பக்:103).
இதன் இறுதியாக-
ஜயஜயசங்கர’ – ஆதி தோற்றுவிக்க நினைக்கும் காந்தி இல்லமும்’, கோயில்கள்-ஆசிரமங்கள்-துப்பாக்கி வைத்துக்கொண்டே அதைப் பயன்படுத்த அவசியமில்லாத புரட்சிக்கவுன்சிலைச் சேர்ந்தவர்கள் பற்றிய செய்திகளுடன்என ஜெயகாந்தன் சொல்லவருவது என்ன? இதன் முத்தாய்ப்பாக-

 “யுத்தமும், சுரண்டலும் இல்லாத, சமத்துவமான, சாந்திமயமான ஓர் உலகைப் படைக்கப் பாடுபடும் மனிதாபிமானிகளான கம்யூனிஸ்டுகள், பலாத்கார வழியை எப்படி மேற்கொள்ள முடியும்?  அதுவும் இந்தியாவில்?” என்று வெளிப்படையாகவே கேட்கின்ற 16.12.92 (ஒரு சொல்கேளீர்’-மீனாட்சி புத்தக நிலைய முன்னுரை) ஜெயகாந்தனும், ஆரம்பத்தில் நாம் போற்றிப் புகழ்ந்த ஒரு ஜெயகாந்தனும் ஒருவர்தானா?  அல்ல! இவர், ‘அந்த ஒரு ஜெயகாந்தனுக்குள் உள்ள சில ஜெயகாந்தன்களில் ஒருவர்என்பதுதானே சரி?
--------------------------------------------------------------------------------
நாவல்களில் முகம்காட்டும் 
ஐந்தாவது, ஆறாவது ஜெயகாந்தன்கள்:
 ‘அளவு மாற்றம்-குணமாற்றத்தை நிகழ்த்தும் என்பது, ஜெயகாந்தன் பெரிதும் மதிக்கும் மார்க்சின் வாசகங்களில் ஒன்று.

 1964க்குப் பிறகு பெரிய பெரிய பத்திரிகைகளில் எழுதுவதும், சினிமா எடுத்துப் பரிசு பெற்றதும் -எனப் புகழின் சிகரம் தொட்டபிறகு, இவரது தனிப்பட்ட வாழ்க்கைத் தரத்தின் அளவு மாற்றம், எழுத்துக்களிலும் குணமாற்றத்தை நிகழ்த்தியது.

 என்ன குணமாற்றம்?
 அடிப்படையான ஒன்றை மட்டும் பார்ப்போம்.
 முனியம்மாவும், ராசாத்தியும், அம்மாசியுமாக இருந்த அவரது நாயகநாயகியர்: கங்காவும், சாரதா மாமியும், கௌதம-சித்தார்த்தனுமாக மாறிப்போயினர்.
  அவ்வளவுதான். விகடனில் எழுதத் தொடங்கியவர்-விகடனுக்காகவே எழுத ஆரம்பித்துவிட்டார். பிராமண சாஸ்திர-சம்பிரதாய நுணுக்கங்களை எழுதத் தொடங்கியவர் -
அதனால இப்ப என்ன குடிமுழுகிடுத்தூன்ட்டு வெங்கு மாமாவாட்டம் கிடந்து குதிக்கிறேள். நடுத்துர வர்க்கத்துக் கதைகளே எழுதப்படாதா என்ன?” என்று சாரதா மாமி மாதிரிக் கேட்பவர்களுக்கு, கணபதி சாஸ்திரிகள் மாதிரி நன்னா எழுதட்டும், பேஷா எழுதட்டும், இங்க வேணான்ட்டு யாரு அவர் கையப் புடுச்சுண்டுஅழுதா? ஆனா, உலகியல் பிரச்னைகளிலிருந்து உளவியல் பிரச்னைக்குக் கண்ணு பாவிடுத்தே! அதக் கவனிக்க வேண்டாமோ?”   என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது! குறிப்பாக அவற்றால் பெரிதும் மன உளைச்சலுக்கு ஆளான இளந்தலைமுறைப் பெண்களின் பிரச்சினைகளை எழுதத்தொடங்கியவர்– ‘ஜயஜயசங்கரஎன பிரம்மோபதேசம் செய்யத் தலைப்பட்டுவிட்டார்.

 இந்த நிலையில் அவரது வாக்குமூலத்தைப் பாருங்கள்:
 “திராவிட அரசியல் மாயையிலிருந்து, தமிழ் மக்களை விடுவிக்க, தேசிய இயக்கமான காங்கிரசுடன் ஒன்றுபட வேண்டும் என்ற லட்சியத்திலிருந்து கம்யூனிஸ்டுகள் விலகிப்போனது மட்டுமல்ல: தி.மு.கழகத்தோடு சேர்ந்து காங்கிரசை எதிர்க்கும் விபரீதநிலை உருவானபின் காமராஜ் தலைமையில் காங்கிரஸ் உறுப்பினர் ஆனேன்,” (குமுதல் 28-4-94). அனேகமாக இந்தக் காலம் 1966 ஆகவே இருக்கும். (அப்பொழுதுதானே அளவு மாற்றமும் குணமாற்றமும் பொருந்தி வருகிறது!).  
-------------------------------------------------------------------------
 அவரே குறிப்பிடும் அவரது மனநிலை மாற்றமும்: அவரது கதாபாத்திரங்கள். நடுத்தெரு வர்க்கத்திலிருந்து நடுத்தரவர்க்கத்துக்கு மாறியதும் ஒரே நேரத்தில் மெதுவாக-ஆனால் உறுதியாக-நடந்ததை மறந்துவிடலாகாது.
 மிகச் சரியாகச் சொன்னால், நாவல்களைப் பொறுத்தவரையில் அவரது முதலிரண்டு நாவல்களில் (1965 வரை) வந்த நடுத்தர வர்க்கம் அதன்பிறகு அவருக்கு மறந்தே விட்டதைக் கவனிக்க வேண்டும்.  1966 இல் பாரிசுக்குப் போவதாக அதன் நாயகன் சாரங்கன் கிளம்பியதில் இருந்து, ஜெயகாந்தன்-ஜெ.கே.யாகி நடுத்தரவர்க்கக் கதைகளுக்கு போய்விட்டார்.

 1965 ஜனவரியில் ஆனந்தவிகடனில் எழுதிய ஒரு பகல்நேரப் பாசஞ்சர் வண்டியில’- சிறுகதையின் தொடர்ச்சிதான் பிரளயம்குறுநாவல். சென்னைப்புறநகரின் சேரி ஒன்றில் புயல் வெள்ளம் வர, அந்தப் பாவப்பட்ட ஜனங்கள் பட்டபாடுதான் மிகச்சிறந்த குறுநாவலாகக் கலைவடிவம் கொண்டது.

 1966-ஆனந்தவிகடன் தீபாவளி மலரில் இவர்அக்கினிப்பிரவேசம்செய்தது தமிழர்க்கு வரம்தரவா? சாபம் தரவா? என்பதைத்தான் இந்தக் கதைக்குப்பின் நேர்ந்த விளைவுகளிலிருந்து காணவேண்டும்.

 இதன்பிறகு, 1967 இல் சமூகம் என்பது நாலுபேர்’ 1969இல் ரிஷி மூலம்இவற்றின் கரு, 1965க்கு முந்திய ஜெயகாந்தனிலிருந்து பிந்திய ஜெயகாந்தன் மாறிவிட்டதை தொடர்ந்து கவனிக்கலாம்.

தி.ஜ.ர.பொய் சொன்னாரா?
ஜெயகாந்தன், சாந்தி, சரஸ்வதி, தாமரை, இதழ்களில் (1954-56) எழுதிவந்தபோது அவரது மூன்றாவது சிறுகதைத் தொகுதி ஒரு பிடிசோறு’ (1956) அச்சானது. அவரே அச்சுக் கோத்த கதைகள் அவை. தி.ஜ.ரங்கநாதன் முன்னுரை எழுதியிருந்தார். இருவரும் ஒரே வீட்டின் ஒண்டுக்குடித்தன வாசிகளாம். அது ஒன்றுதான் ஜெயகாந்தனின் புத்தகம் ஒன்றுக்கு வேறு ஒருவர் எழுதிய முன்னுரை. அதில் தி.ஜ.ர. எழுதுகிறார்:-
 “மேலுக்குத் தளுக்கான, நடுத்தர வாழ்க்கை பொம்மை மானிடர்களையோ உலக இன்பங்களை ஏகபோகமாக அனுபவிக்கும் மாளிகை மனிதர்களையோ ஜெயகாந்தன் கதைகளிலே காண முடியாது. அப்படி யாராவது ஒருவர் தோன்றினாலும் உபபாத்திரங்களாகவே இருப்பார்கள்.ஆனால், வரப்போகும் ஏழெட்டு வருடங்களிலேயே இது பொய்யாய்-பழங்கதையாய்போய்விடும் என்றறியாத தி.ஜ.ர. முன்னுரையைத் தொடர்கிறார்.  “கோடிக் கணக்கான மக்களின் வாழ்வை விட்டு, பொறுக்கிய சில மனிதர்களின் வாழ்வைத் சித்தரித்தால் அது மனித வர்க்கத்தின் சித்திர மாகுமா?
 நல்ல-அருமையான கேள்வி! இதற்கு-
 “ஆகாது! ஆகவே ஆகாது!என்பதுதான் நமது திருத்தமும், ‘ஆகவில்லையேஎன்பதுதான் 1965க்குப் பிந்திய ஜெயகாந்தன் மீதான நம் வருத்தமும்.
------------------------------------------------------------------------------
* இசைக்கலைஞன் சாரங்கனை உயிருக்குயிராககாதலிப்பதால், தான் தெய்வமாக மதிக்கும்தன் கணவர் மகாலிங்கத்திடம் விவாகரத்துக்கோரி, விவகாரம் பண்ணும் கதாநாயகி லலிதா’ (பாரிசுக்குப் போ-1966).
* ஏற்கனவே உள்ள இரண்டு மனைவிகளைவிட்டு இளம்பெண் சுகுணாவை மணக்கத்துணிந்து, அவள் மறுத்துவிடவே தற்கொலை புரிந்துகொள்ளும் கதாநாயகர் முத்துவேலர்’ (‘சமூகம் என்பது நாலுபேர்’-1967).
* பெற்ற தாயை நிர்வாண கோலத்தில் கண்டு, வக்கிரக் கனவுகளோடு தாயின் சாயலில் உள்ள சாரதா மாமியுடன் உடல் உறவு கொண்டு, மனம் பேதலித்துப் புலம்பும், ‘ராஜாராமன்’ (ரிஷிமூலம்’-1969).
* பாலுணர்வின் மீதுள்ள வெறுப்பால், வளர்ந்த தன் பிள்ளைகளை வீட்டுக்குள்ளேயே வைத்துப் பூட்டிவிட்டுப் போகும்அலங்கார வல்லியம்மாள்’ (ஆடும் நாற்காலிகள் ஆடுகின்றன’-1969).
* கல்லூரியில் படிக்கும் மகளும், நல்ல மனைவியும் உள்ள பிரபுவை தனது அறியாப் பருவத்தில் உறவு கொண்டவன் என்பதைக் காரணமாக்கிக் கொண்டு, விரட்டி விரட்டி காதலிக்கும் கங்கா’ (சில நேரங்களில் சில மனிதர்கள்-1970).
* இவர்கள் எல்லாருமே தி.ஜ.ர. சொல்வதுபோல் பொறுக்கிய சில மனிதர்கள்தாமே? இவர்களுக்குப் பாலுணர்வுப் பிரச்னை தவிர உலகில் வேறு பிரச்சினைகளே பெரிதாக இல்லையே!

 இது பற்றியும் ஜெயகாந்தன் தெளிவாக எழுதுகிறார்.
 “பாலுறவுப் பிரச்சினை என்பது வெறும் படுக்கை அறைப் பிரச்சினையல்ல, அதுவும் ஒரு சமுதாயப் பிரச்சினைதான்” (ரிஷிமூலம்-1969-முன்னுரை) இன்னும் ஒருபடி மேலே போய், அடுத்தவரியிலேயே- பசியையும்விட அது ஓர் அடிப்படைப் பிரச்சினைஎன்றும் கூறிவிடுகிறார்.
 சரிதானே?
 இலக்கிய விமர்சகர் பா.கிருஷ்ணகுமார் கூறுவதுபோல, “ஒரு காதலனை பத்துநாள் பட்டினி போடுங்க. அப்புறம் அவன் காதலிய அவன் முன்னாடி கொண்டுபோய் நிறுத்தினா, அவளை அறைஞ்சு தள்ளிவிட்டு, கஞ்சிப்பானையைத் தேடுவான்என்பதைவிட வேறு என்ன கூறமுடியும்?

அடிப்படைப் பிரச்னை எது என்பதில், அவரவர் நோக்கும்-போக்கும்தானே அடிப்படையாகும்?
1965 முதலாக-பலலட்சம் பேரின் பசியிலிருந்து, ஒரு சிலரின் பாலுறவுப் பிரச்சினைக்கு வந்த இந்த மாற்றம் மட்டுமல்ல, 1970,80,90களில் வந்த ஜெயகாந்தனது கதைத் தலைவர்-தலைவியரில் பெரும்பான்மையோர் பெரும் பணக்காரரே! நுனி நாக்கில் ஆங்கிலம், உதடுகளி;ல் பைப்-மதுக்கிண்ணம் என்றிருப்போர்.
 “அரவிந்டோன்ட் டிரிங்க் இன் த டே டைம்…”
 “நோ மம்மி, ஜஸ்ட் என்ஜாயிங் மியூசிக் ஒன்லி…”
- இது ஓ அமெரிக்கா! (1989).
அடிக்கடி அந்த வீட்டின் சாப்பாட்டு மேஜையைச் சுற்றி அமர்ந்துகொண்டும் வரவேற்பரையில் கையில் மதுக்கிண்ணம் ஏந்தியும் அறிவார்ந்த விவாதங்கள் நிகழும் எல்லாம் ஆங்கிலத்தில்தான்”- இது புகை நடுவினிலே’ (1990).

 இந்த 70,80,90களில் ஜெயகாந்தனின் தனிவாழ்வும் நல்ல நிலைக்கு உயர்ந்ததில் நமக்கும் மகிழ்ச்சியே!
 புதுமைப்பித்தனைப்போல, நல்ல எழுத்தாளர் செத்ததற்குப் பின்னால் நிதிகள் திரட்டாதீர்! என்பதுதான் நம் கருத்தும்.

 அதற்காக நம் எழுத்தாளர், வாழ்க்கை வசதிகள் வந்த பின்னும் டால்ஸ்டாய் போல, தாகூர் போல பிரபுத்துவ வாழ்வை மீறிமக்களோடு மனதார வாழ்ந்துஎண்ணி-எழுதுவதன்றோ அந்த மகத்தான எழுத்தாளனிடம் நம் மனசார்ந்த எதிர்பார்ப்பு? தி.ஜ.ர. கூறியதும் இதுபோல பொய்த்துவிட்டதே!
------------------------------------------------------------------------------------
ஏழாவது எட்டாவது ஜெயகாந்தன்கள்:
 1990 நடுவில் என்று நினைக்கிறேன். குமுதத்தில் ஒரு சிறுபேட்டியில், ஜெயகாந்தன்- கஞ்சா குடிப்பதில் தவறில்லை, நான் புகைக்கிறேன்!என்று கூறியிருந்தார். அவரது அன்பான வாசகர்கள் அதிர்ந்து போனார்கள்.நமது ஆசான் பாரதிஎன
வாய் ஓயாமல் முழங்கும் ஜெயகாந்தன், அவன் அபின் சாப்பிட்டான் என்பதற்காக அதையும் ஏற்க முடியுமா என்ன?
 தொடர்ந்து அதே ஆண்டில், அவர் புகை நடுவினிலேஎன்றொரு சிறுகதை எழுதி, ‘குடிக்காதே என்று வற்புறுத்தும் போதுதான் இளைஞர்கள் கெட்டுப் போகிறார்கள். கஞ்சா ஒரு மூலிகைதான்என்றும் விளக்கினார்! அதுவும் போதாதென்று அதன் தொடர்ச்சியாக-இப்படித்தான் நடக்கிறதுஎன்றொரு குறுநாவலும் எழுதினார்.

 “ஆனந்தமூலி, கற்ப மூவி,  கோரக்கர் மூலி, சிவமூலி, பங்கி, மதமத்தகம், மூதண்டம், சித்த பத்தி அதன் தாவர சாஸ்திரப் பெயர்”. “என்றெல்லாம் இருந்ததே தவிர அது நஞ்சு என்றோ, ஒழிக்கப்பட வேண்டிய தாவரமென்றோ ஓரிடத்திலும் இல்லை” (மகுடம் மாத இதழ்-டிச’92,பக்:27)

 இது என்ன இது?
 இதற்கு எதற்கு ஜெயகாந்தன்?

 நாலையும் ஐந்தையும் ஏழென்று கூற 
நாலாவது பரம்பரை ரோபோவா?
 இதே போலத்தான், மிக அண்மைக்காலமாக அவர் கொண்டிருக்கும் ஹிந்தி பற்றிய கருத்தும் 24.4.94 மணிவிழாவில் கருத்தரங்க இறுதியில் அவரது ஏற்புரையில் பேசியது என்ன?

 “ஹிந்தி மொழி பற்றி சிலர் பயப்படலாம். மந்திரிகள்-அதுவும் மத்திய மந்திரிகள் பயப்படலாமா? நீங்கள் படியுங்கள் நான்கூடப் படிக்கிறேன்” (தினமணி 26.4.94 மதுரைப்பதிப்பு) அழுக்கில் கிடக்கும் சோப்புப்பெட்டி போலிருக்கும் டி.வி.பெட்டியின் வேலையை ஜெயகாந்தனா செய்வது?
                                                                                                                                 கடைசியாக வரும் கட்டுரை ஜெயகாந்தன்:
அவரது குருநாதர்போல மந்திரம் போல் சொல்ஆட்சிகொண்ட ஜெயகாந்தனின் கட்டுரைகளும், கதைகளுக்கு அவரே எழுதிய முன்னுரைகளும் பெரும் புகழ் பெற்றவை. 
கதைப் பாத்திரங்களைப் பற்றிய தர்க்க நியாயங்கள் தடாலடியாக வரும்! ஆராய்ச்சிப் பண்டிதர் போல அளவுகோள்இலக்கணம் பார்த்து ஜெயகாந்தனை விமர்சிக்க முடியாது.
 36 பக்கமுள்ள அக்கினிப் பிரவேசம் சிறுகதைதான்.
 42 பக்கமுள்ள இப்படித்தான் நடக்கிறதுகுறுநாவல்தான்.

ü அந்தச் சிறு விதைக்குள்ளிருந்து ஆலமரமும் விரியும்!
ü கடலின் பெரும் பரப்பே ஒரு கட்டுமரத்தாலும் சுருங்கும்!

 எல்லாம் அவரது சொல்லாற்றலின் சொரூபம்! கதைத்தலைப்பும் அவர் போல அவ்வளவு பொருத்தமாக , கவர்ச்சியாக பிறரால் வைக்க முடிவதில்லை. கட்டுரைத்தன்மையும் கதைத்தன்மையுடன் சேர்ந்தது.

 1970 நடுவிலிருந்து துக்ளக்கில்ஒரு இலக்கிய வாதியின் அரசியல் அனுபவங்கள்தொடர் மூன்றாண்டுகள் வெளிவந்து, புத்தகமானது.
 ஆனந்தவிகடன், கதிர் இதழ்களிலும் தொடர்ந்து பலப்பல விஷயங்களை கட்டுரைகளாக எழுதினார்.
 1979ல் சோவியத்திற்கு நேரு விருதுபெற சென்றுவந்த அனுபவங்களை குங்குமம்இதழில் தொடர்ந்து எழுதினார்.

 இப்படி 1970 முதல் 1992 முடிய அவர் எழுதிய இருபதுக்கு மேற்பட்ட கட்டுரைத் தொகுதிகள் வெளிவந்துள்ளன. கடைசியாக தினமணி கதிரின் சபை நடுவேவரை இது தொடர்ந்தது. ஆனால் ஓர் இலக்கிய வாதியின் கட்டுரைகள் எனும் நோக்கில் ஆரம்பகால ஜெயகாந்தனை எந்த அளவுக்கு நாம் புகழ்கிறோமோ, அதைவிடவும் அதிகமாக முரண்பாடுகள்அவரது கட்டுரைகளிலேயே உண்டு!
 விமர்சகர்களுக்கு பதில் சொல்வதற்கு தனது முன்னுரைகளைப் பயன்படுத்திக் கொண்டார். அதிலும் அவரது பிடிவாதமும், தடி வாதமுமே முன்னுக்கு நிற்கும்!
 “நான் எப்போதும் என்னை ஒரு முழுநேர கம்யூனிஸ்டு ஊழியனாகத்தான் மனத்துள் பாவிக்கிறேன்” (‘ஓர் இலக்கிய வாதியின் அரசியல்’…முன்னுரை) எனும் ஜெயகாந்தன்;.

 “கம்யூனிசம்தான் ஹிந்து மதம்போல, தனிமனித நலன்களை உள்ளடக்கிய சமூகம் சார்ந்த ஒரு வாழ்க்கை நெறியாகும்என்கிறார். (சுதந்திரச்சிந்தனை’74:பக்157)  
ஒரு மகோன்னத தத்துவத்தை உருவாக்கித் தந்த மனிதகுலமேதை கார்ல் மார்க்சை கிருஷ்ணாவதாரம்என்கிறார்!

அந்தத் தத்துவத்தை நடைமுறையாக்கி, உலகின் முதலாவது சமத்துவ சமூகத்தை நிர்மானித்த லெனினை மகாத்மாஎன்கிறார், (போனதும் வந்ததும் - 83 பக்:42) ‘நாத்திகர் தெய்வம்என்கிறார்.

 உலக மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கி ஒளி வீசிய சோவியத் யூனியன் சிதறிப் போவதில் சிறந்த பணியாற்றிய கோர்பச்வேவை. மனித சமூகத்தின் ஆன்மீக சொரூபம்எனப் புகழ்கிறார்! (கம்யூனிசம் தோற்குமா பக்:68)

 நேருஜியும், இந்திராஜியும் வளர்த்த காங்கிரசின் ஆவடி சோசலிசம்பற்றி அறியாதவர்போல, பாரதத்தையே பதற வைத்த அவசரநிலைக்குசற்று முன்னரே நடந்த இந்திய ரயில்வேத் தொழிலாளர்களின் வீரஞ்செறிந்த வேலை நிறுத்தப் போராட்டம் சமூக விரோதிகளால் நடந்ததுஎன்றார்.

அவருக்கு நெருக்கமான சி.பி.ஐ. தலைவர்களில் ஒருவராக இருந்த கல்யாணசுந்தரம்கூட, இதனால் பிற்போக்கு அரசியல்வாதியானார்! (ஒரு பிரஜையின் குரல்’75,பக்:51)

 கட்சி தோன்றிய 1920 முதற்கொண்டு, இந்திய வரலாற்றோடு தமது வரலாற்றைப் பிணைத்துக்கொண்டு கொள்கை-நடைமுறைப் போராட்டங்களைப் பல்வேறு சோதனைகளுக்கும் நடுவே தொடர்ந்து வரும் மார்க்சிய கம்யூனிஸ்டுத் தலைவர்களை, ஒரு நாலாந்தர எழுத்தாளர்களைப் போல-சிறு பிள்ளைத்தனமாக, ‘இடதுசாரிக் கிழவர்கள்என எழுதினார் (“தாய்”இதழ்ஜன-’92).

 எல்லாம் போகட்டும்.
 இன்றைய நிலையில்கூட, இந்திரா-ராஜீவுக்குப் பிறகு இந்தியாவுக்குத் தலைமை ஏற்கத் தகுதியானவராக பிரியங்காவுக்கு அழைப்பு விடுக்கிறார்! (ஒரு சொல் கேளீர்’-மீனாட்சி-டிச’92-பக்:124) 

 சரி, தமிழகத்தின் விடி மோட்சத்துக்கு?
 “என்ன காரணம் கொண்டும், எவர் விரும்பாதபோதிலும், ஜெயலலிதாவின் தலைமையில் உள்ள அ.இ.அ.தி.மு.க.வும், ராஜீவ் காந்தி தலைமையில் இருந்த காங்கிரசும் தமிழகத்தில் ஒன்றினைய வேண்டுமென்பது தமிழக மக்களின் ஏகோபித்த விருப்பமாயிற்று”(ஒருசொல் கேளீர்-பக்:43) அவ்வளவுதான்!

 முடிந்ததா?

 1966-இல், திராவிட இயக்கங்களை எதிர்த்தழிக்க வேண்டும் என்பதற்காகவே(?), கம்யூனிஸ்டுகளைப் பிரிந்து காங்கிரசுக்குப் போன ஜெயகாந்தனின், 1992-93 நிலையைப் பார்த்தீர்களா?

 இனி-கதையாவது! இலக்கியமாவது!
 கடைசியாக எழுதியிருக்கும் -குறுநாவலின் கடைசி வாசகங்கள் தான். நமது விமர்சன முடிவும்.
 “எல்லாரும் இன்புற்றிருக்கிறார்கள்!
 வேறென்ன வேண்டும்?
 பராபரமே! ஜெய்குரு மகராஜ்!

ஏன் நிறுத்தி விட்டீர்கள்? எழுதுங்கள் ஜே.கே.!
இதோ! இந்தக் கட்டுரையின் ஆரம்பத்திலேயே உறைந்து நின்றுவிட்ட முனியம்மாவும் கங்காவும் உயிர்பெற்று, மீண்டும் பேசுவதைக்கேட்டு, நாம் ஒதுங்கிக் கொள்வது சரிதானே?

 “சரி அதவிடு முனியம்மா, இந்தி படிக்கிறது ஒண்ணுதான் இப்ப பிரச்சினையா? அவுரு சொல்றாரு, உனக்கு இஷ்டம்னா படி அதர்வைஸ் லீவ் இட்…”

நானுந்தான் நென்ச்சேன்,  ‘ஞானபீடமாஅது இன்னா அவார்டு? அத தமில்ல வாங்குனவருக்கும்,   மத்த மத்த பாஷைங்கள்ள வாங்குனவுங்களுக்கும், இவுரு இன்னாத்துல கொறஞ்சு பூட்டாருஅத அல்லாம் இவுருக்கு குடுக்க இந்த கெவுர்மெண்டுங்களுக்கு துப்பு இல்ல.
                                                                                                                          “ஆனாலும் கங்காம்மாஅந்தப் பாயாப்போன டீ.வி.மாதிரி
 “இந்தாநான்தான் சொல்றன்ல்ல, உன்னையும் என்னையும் உருவாக்கி ஜனங்க மத்தியில கௌரவமா நடமாட விட்டவருக்கு…”

 “அதுனாலதாம்மா கண்ணு, நான் இம்மா நேரம் உங்கூட நின்னு பேசிகினுகிறேன். அப்பக்கட வச்சிகினு, மர்த்தடியில குந்திகினு ஏதோ என் ஜென்மத்த ஓட்டிட்ட எனுக்கு, ஒரு புள்ள வந்து வாய்ச்சான் பாரு! அவுன-சினிமா பாத்துகினு, சிகிரெட் புடுச்சிகினு, ஊர்வம்பவெலைக்கு வாங்கினு திரிஞ்சவுன-இஸ்த்து, “தூ! துப்புக்கெட்டவனே! இப்டி பொறுப்பில்லாம சுத்திகினுர்ந்தா ஙொம்மாவ எவன்டா காப்பாத்துவான். ஒங்க ஏமாளித்தனத்த ஊஸ்பண்ணிகினு ஓட்டு வாங்கறதுக்கும் உங்களாண்ட வர்றவங்கள எப்டிடா மாத்தப் போறீங்கன்னு நல்லாகேட்டு ஒறைக்க வச்சவுரும் அவுருதான்.
என்ன மாரி எத்தன பேருக்கு அவுரு கெவரத குட்த்தாரு? அந்த நன்னியில தாங்கண்ணு இப்டி கெடந்து பொலம்பிகினுக்கீறேன்”.

 “அத யாரு இல்லங்கறா முனியம்மா! ஒரு மனிஷன், சுயபுத்தியும் சொரணையும் உள்ளவன், எல்லாம் ஒரே மாதிரித்தான் திங்க்பண்ணனுண்டு ஏதும் ரூல் இல்லியே! 1950-கள்ல உன்னைப்பத்திக் கவலைப்பட்டவுரு, 1966 முதலா என்னை மாதிரியானவுங்களப்பத்திக் கவலைப்பட்டுட்டாரு. என்னைப்பத்தி எழுதினதாலயே, உன்னைப் பத்தி இனிமே எழுத மாட்டாருன்னு எப்படி முடிவுக்கு வரலாம்? இப்பப்பாரு-தினமணிக்கதிர்ல(23.4.94) சொல்லியிருக்காரு, “சமீப காலமா, புயலைக் கிளப்புற மாதிரியான உங்க கதைகளைப் பார்க்க முடியலியேங்கற கேள்விக்கு புயல் எந்த நேரமும் வந்து தாக்கும்? எச்சரிக்கiயாயிருங்கள்ன்னு சொல்லியிருக்காரு.

 “ஆமாம் கண்ணு! அதான் எனுக்கும் சந்தோசமாயிருக்கு”.
 “அதுனாலதான் சொல்றேன். தமிழ் இலக்கிய விமர்சகர்கள் எல்லாருக்கும் டூ ஆல் த கரிட்டிக்ஸ் ஆப் டமில் லிட்ரேச்சர் சொல்லுவேன் –

 அவர, லேசுல எடை போட வேண்டாம்!
ஐம்பதுகளில் முனியம்மாக்களைப் படைத்த 
ஒரு ஜெயகாந்தனில் இருந்துதான்
ü திராவிட எதிர்ப்பில் திடமாகத் தொடங்கி, மதவழி அமைதிப்புரட்சியில் அவநம்பிக்கையூட்டும் ஜெயகாந்தன்களும்,
ü கஞ்சாப்புகை நடுவே, இந்திப் பிரச்சாரம் செய்துவரும் இன்றைய ஜெயகாந்தனும்,
ü காந்தியத்தில் தொடங்கி, கட்டுரைகளில் முரண்படும் கட்சிக்கார ஜெயகாந்தனும், வந்தாங்க!
ü நா இதையெல்லாம் இல்லேங்கல! அதுனாலயே, அந்த ஒரு முழு ஜெயகாந்தனின் வீச்சு முனைமுறிஞ்சி போயிடல அவரைவிட மேலான ஜெயகாந்தன்களையும் அவரால் உள்ளும் புறமும் உருவாக்கமுடியும்!
ஆமா, நா கேக்குறேன். ஏதோ என்னைப் படைச்சதுக்காக ஒரு சாகித்ய அகாடமி விருதும், ஒரு தமிழ்நாடு அரசுப் பரிசும், ஒரு ராஜராஜன் விருதும் மட்டும்தான் அவுரு தகுதிக்குக் குடுக்க முடிந்ததா?
 “ஆமாங்கிறேன், நானுந்தான் நென்ச்சேன், ‘ஞானபீடமாஅது இன்னா அவார்டு? அத தமில்ல வாங்குனவருக்கும், மத்த மத்த பாஷைங்கள்ள வாங்குனவுங்களுக்கும், இவுரு இன்னாத்துல கொறஞ்சு பூட்டாருஅத அல்லாம் இவுருக்கு குடுக்க இந்த கெவுர்மெண்டுங்களுக்கு துப்பு இல்ல. அந்தக் கடுப்புகூட அவுருக்கு இருக்கதாயின்ன? இன்னான்ற நீயி?
 “சீச்சி! அதுனால எல்லாம் அவரு இப்படி மாறிட்டார்னு சொல்றது தப்பு முனியம்மா!
 “அது சரி, ஆனா, ஒட்டுமொத்தமா சமுதாயமும்-அரசியலும் கெவுர்மெண்டும் இருக்கற லட்சணம் அவுரையும் பாதிக்காதான்ன?
 “அந்தப் பாதிப்புகளுக்கு அப்பாற்பட்டு இருக்கணும்னுதானே நாம எதிர்பார்க்கிறோம்!
 இப்பக்கூட சாத்தூர்ல நடந்த த.மு.எ.ச. கலை இலக்கிய இரவுல, “மிகப்பெரிய அதிகாரியா இருக்கும் ஒருவர், என்னிடம் முன்னுரைகேட்டு வந்தார். அவரிடம் அந்தப் பாமர எழுத்தாளன் மேலாண்மை பொன்னுச்சாமியின் கதைகளைப் படித்துவிட்டுப் பிறகு எழுதி வாருங்கள் என்று சொன்னேன்னு பேசுனார்ல்ல? அந்தக் கமிட்மெண்ட்வேற யாருக்கு வரும்.
 “அதுனாலதான் நானும் அவர்ட்ட ஏன் நிறுத்திட்டீங்க? அம்பதுங்கள்ல எயுதுன மாரி-அதைவிடவும் ஒறைக்க எயுதவேண்டிய மேட்டருங்க நெறயக்கிடக்கு. எயுதுங்கனு கேக்கலாம்னுருக்கேன்.
 “ஆமா, ஒரு தடைவ குமுதம்அரசு கேள்வி பதில்ல சொன்ன மாதிரி, ‘ஜெயகாந்தனின் பழைய ஜொலிப்பு ஏற்பட்டா தமிழுக்கு அதிர்ஷ்டம்தானே!ங்கற நப்பாசைதான்.
 “சரீ! தலைக்கு மேல வேல கெடக்கு, அப்ப நா வர்ட்டா.
 “ம்பாப்பம்.
-------------------------------------------------------------------------------

 ஜே.கே. மணி விழா முடிந்த போது 
1994இல் எழுதியது -நா.முத்துநிலவன்.
ஏப்ரல்-24 அவரது பிறந்தநாள் என்பதால் மீள்பதிவாக இடப்படுகிறது
--------------------------------------------------------------------------------------------------------

9 கருத்துகள்:

  1. sa.tamil selvan
    பெறுநர்: "நா.முத்து நிலவன்"
    தேதி: 29 ஜனவரி, 2012 6:06 PM
    தலைப்பு: Re: [வளரும் கவிதை] ஜெயகாந்தன் - ஒரு முழு விமரிசனம்

    அற்புதமான ஒரு மீள் பார்வை.கடந்த கால வாசிப்புகளையும் அத்தருணங்களின் மன உணர்வுகளையும் மீட்ட ஒரு ஆவணமாக வந்துள்ளது.தொரடட்டும் இத்தகு முயற்சிகள்.
    அன்புடன்
    ச.தமிழ்ச்செல்வன்

    பதிலளிநீக்கு
  2. I read your article about JK. It is really wonderful. It is nothing but a scan report about JK. Thank u comrade. Ganesh. AO Chennai.

    பதிலளிநீக்கு
  3. ஒஃ! இவ்வளவு விரிவாய் ஒரு மனிதரை ஆராய முடியுமா! என்னஇருந்தாலும் அவரது கதாபத்திரம்களுக்கு என ஒரு கம்பீரம் இருக்கும் !
    ஒரு வீடு ,ஒரு மனிதன் , ஒரு உலகம் கதையில் வரும் "சோப் எங்கப்பா"அந்த வார்த்தையை எதார்த்தமாய் கேட்டால் கூட நானும் என் அத்தையும்(கஸ்தூரியின் அம்மா) புன்னகைத்து கொள்வோம். ரசனையான மனிதர்!

    பதிலளிநீக்கு
  4. இந்த கட்டுரையை படிக்கும்போது காலம்சென்ற எனது இனிய தலைமைஆசிரியர் திருவாளர் குப்பன் செட்டி அவர்களின் நியாபகம் வருகிறது, அவர் நான் 6 ம் வகுப்பு படிக்கும் போதே அவர் வீட்டின் தான் காசுகொடுத்து வாங்கி தனியாக வைத்து இருந்த நூலகத்தில் எங்களை படிக்க வைப்பார்.மிக கனமான புத்தகங்கள் ...ஒன்றும் புரியாது. இருந்தாலும் நான் என் அண்ணன் என்தம்பி அனைவரும் போட்டி போட்டுகொண்டு படிப்போம். சிறுகதை நாவல் அனைத்திலும் எங்களுக்கு ஒரு மயக்கத்தை ஏற்படுத்திய எழுத்துக்கள் ஜெயகாந்தனின் எழுத்துக்கள். அவர் இடத்தை எவராலும் பிடிக்க முடியாது. தங்கள் கட்டுரை என்னை 35 ஆண்டுகள் பினோக்கி சிந்திக்கவைத்தது. அதற்கு தங்களுக்கு நான் நன்றி மட்டுமே சொல்ல முடியும்.

    பதிலளிநீக்கு
  5. ஒரு புத்தகம் படித்து முடித்தால் அதன் தாக்கம் 10 நாளாவது நம் மனத்தில் இருக்க வேண்டும். மனம் அதை அசை போட்டுகொண்டே இருக்க வேண்டும். ஒரு பிரமிப்பை கொடுக்க வேண்டும். அதை ஜெயகாந்தன் நூல்கள் எனக்கு செய்து இருக்கிறன்றன.

    பதிலளிநீக்கு
  6. ஜெயகாந்தனின் சில படைப்புகளை தமிழ் துனைப்படத்தில் படித்ததுண்டு. இன்றும் நினைவில் நிற்பது "நந்தவனத்தில் ஓர் ஆண்டி".
    ஜெயகாந்தனின் படைப்புக்களை அக்கு வேறு ஆணி வேறாக அலசி விட்டீர்கள் ஐயா!
    இப்போது புதிய தலைமுறையில் எழுதிக் கொண்டிருக்கிறார்

    பதிலளிநீக்கு
  7. இனி அவரது படைப்புகளை வாசிக்கும் பொழுதுகளில்... மறக்காமல் நினைவில் வந்து போகும் இந்த விமர்சனத்தின் வரிகள்...

    ஆழமான விமர்சனம்...
    நன்றி...

    பதிலளிநீக்கு
  8. எழுத்தாளன் ஒரு சாராரை மட்டும் எழுதினாலும் விமரிசிக்கப்படுவார்.பழுத்த மரம்தான் கல்லடி படும். விமரிசனத்துக்கு அப்பார்பட்டவர் எவருமில்லை.தன் மனதில் பட்டதை அச்சமின்றி வெளிப்படுத்துவார்.அந்த நேரத்தில் சரி என்று பட்டதை சரி என்று சொல்வார். அதே விசயத்தை மற்றொரு நேரத்தில் தவறு என்று பட்டால் தவறு என்று சொல்வார்.

    பதிலளிநீக்கு
  9. சமூகத்தின் விதிவிலக்கான பழைய சமூக ஏற்பாடுகளை மீறுகின்ற கதாபாத்திரங்களின் வழியாக தனது எழுத்தை வடிவமைப்பார். அன்றைய வாசிப்பாளர்களும் சமூகத்தின் முன்னேறிய படித்த பிரிவினர்தான் அவர்களை குறி வைத்து அவருடைய எழுத்து இருக்கும். அப்படித்தான் அவருடைய கதாபாத்திரங்கள் வடிவமைப்பு இருக்கும். எவ்வாறு இருந்த போதிலும் சர்ச்சைக்குரிய சமூகத்தின் திரை மறைவு விழுமியங்களை கேள்வி எழுப்பியவர் ஜெயகாந்தன். நன்றி கலவையான தொகுப்பு.

    பதிலளிநீக்கு