மழையில் கரைந்து போன மாமனிதர் ஸ்ரீநிவாஸ்

மனைவி சங்கராந்தியுடன் ஸ்ரீநிவாஸ்
இணையப பயன்பாட்டை எளிதாக்கி சாதாரண மக்களும் பயன்பெறப் பெரும்பணி ஆற்றிய மாமனிதர் ஸ்ரீநிவாஸ், சென்னை வெள்ளத்தில் அடையாளம் தெரியாமல் அடித்துச் செல்லப்பட்டு, மனைவியுடன் மருத்துவமனையில் பிணமாகக் கண்டெடுக்கப்பட்ட அவலம் நடந்திருக்கிறது

செய்தியை விரிவாகத் தந்த தமிழ் இந்துவுக்கு நன்றி -
கொட்டித் தீர்த்த கனமழை சென் னையை வதம் செய்தது மட்டு மல்லாது வரலாற்றில் தடம் பதித்த சில முக்கியப் பிரமுகர்களின் மரணத்தைக் கூட அடுத்த வீட்டுக்குத் தெரியாமல் அடக்கிப் போட்டுவிட்டது.
ஸ்ரீநிவாஸ் - தமிழர்கள் அரசியல் அடிமைத்தனத்தை விட்டு தமிழால் முன்னுக்கு வரவேண்டும் என்ப தையே மூச்சாக கொண்டிருந்தவர். வி.எஸ்.என்.எல். நிர்வாகத்துடன் இணைந்து இணையம் வழியாக வும் பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட வைத்ததில் பெரும் பங்காற்றியவர். இணையப் பயன்பாடு பணக்காரர்கள், கார்ப் பரேட் முதலாளிகளுக்கு மட்டுமான சொத்து என்பதை தகர்த்து சாமானி யர்களும் அதைப் பயன்படுத்தும் வகையில் தமிழ் மென்பொருட் களை அறிமுகம் செய்தவர்.
சைவத் தமிழ்
`தெய்வமுரசுஆன்மிக மாத இதழின் பதிப்பாளராக இருந்த இவர், எஸ்.ஆர்.எம். பல்கலைக் கழகத்தின் தமிழ் பேராயத்துடன் இணைந்து சைவத் தமிழ் பட்டயப் படிப்பை நடத்தியவர். ஸ்ரீநிவாஸ் இப்போது உயிரோடு இல்லை என்ற செய்தி அவரைச் சார்ந்தவர்களுக்கே கூட தெரியாது. ஆர்ப்பரித்து ஓடிய அடையாற்று வெள்ளம் அவரையும் அவரது மனைவி சங்கராந்தியையும் இணை பிரிக்காமல் இழுத்துச் சென்றுவிட்டது. இரண்டு நாட்கள் கழித்து ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அடையாளம் காணப்பட்ட இருவரது உடல்களும் ஞாயிற்றுக்கிழமை மாலை, பெசன்ட்நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டன.
ஈக்காட்டுத்தாங்கல் மாஞ் சோலை தெருவில் ஸ்ரீநிவாஸ் வீடு. பக்கத்து தெருவில் அவரது தம்பி கந்தசாமியின் வீடு. அடையாற் றில் வெள்ளம் வந்து கொண்டிருந் ததால் தம்பியின் வீட்டுக்குள் தண்ணீர் புகுந்துவிடுமோ என்று செவ்வாய்க்கிழமை இரவு முழுக்கத் தூங்காமல் உழன்று கொண்டே இருந்திருக்கிறார் ஸ்ரீநிவாஸ். புதன்கிழமை பொழுது விடிந்ததுமே அலைபேசியில் தம்பியைத் தொடர்புகொண்டவர், அவரை தனது தெரு முனைக்கு வரும்படி சொல்லியிருக்கிறார்.
அப்படிச் சொல்லிவிட்டு தனது வீட்டைவிட்டு இறங்கி தெருவில் இறங்கி நடந்தவரை பேயென பாய்ந்து வந்த வெள்ளம் அதன் போக்கிலேயே இழுத்துச் சென்று விட்டது. இதைப் பார்த்துக் கதறித் துடித்த சங்கராந்தியையும் விட்டு வைக்கவில்லை அடையாற்று வெள்ளம்.
தங்கர் பச்சான் புகழாரம்
தனது நண்பர் ஸ்ரீநிவாஸுடனான தனது நினைவுகளை `தி இந்துவிடம் பகிர்ந்து கொண்டார் திரைப்பட இயக்குநர் தங்கர் பச்சான். 2004-ல் `தென்றல்படம் எடுத்தபோது ஸ்ரீநிவாஸோடு எனக்கு அறிமுகம். தமிழில் குடமுழுக்கு விழாக்களை நடத்த வேண்டும் என்ற முழக்கத்தை முன்னெடுத்த அவர், உலகத்தில் 16 இடங்களில் கோயில்களைக் கட்டி அங்கெல்லாம் தமிழ் வழிபாட்டுக்கு ஏற்பாடு செய்ததுடன், அங்கே தமிழ் முறைப்படி திருமணம் செய்பவர்களுக்கு இலவசமாகவே (திருமண) மண்டபமும் ஏற்பாடு செய்து தந்தார்.
அவரிடம் உதவி கேட்டு வரும் இளைஞர்களுக்கு தன்னுடைய சர்வதேச தொடர்புகளை வைத்து, இருந்த இடத்தில் இருந்தபடியே வேலை வாய்ப்புகளை அவர் ஏற்படுத்தித் தந்ததைப் பார்த்திருக் கிறேன்.
`தமிழ் வணிகர்களின் முன்னேற்றத்துக்காகதமிழ் தொழில்முனைவோர் மையம் என்ற அமைப்பையும் தொழிலில் நலிந்துபோன தமிழர்களுக்கு தோள் கொடுப்பதற்காக ஒரு தனி அமைப்பையும் ஏற்படுத்தியவர் ஸ்ரீநிவாஸ்.
தமிழர்களை அரசியல் அடிமைத் தனத்தில் இருந்து மீட்பதற்காக இந்திய முன்னேற்றக் கழகம் என்ற அரசியல் சார்பற்ற அமைப்பை அவரது ஏற்பாட்டில் டிசம்பர் 7-ல் நானும் தமிழருவி மணியன் அண்ணனும் முறைப்படி தொடங்கி வைப்பதாக இருந்த நிலையில் அதற்கு ஒரு நாள் முன்னதாக நிவாஸை எரியூட்டும் கொடு மைக்கு இயற்கை எங்களை ஆட்படுத்திவிட்டதையும், தமிழுக் காக தன்னையே அர்ப்பணித்துக் கொண்ட அந்த மாமனிதருக்கு ஏற்பட்ட இறுதி முடிவு யாருக்குமே தெரியாமல் போய்விட்டதையும் என்னவென்று சொல்வது?’’ வலியுடன் வார்த்தைகளை முடித் தார் தங்கர் பச்சான்.
தமிழ் எழுத்தில் எண்களைக் கொண்ட கடிகாரம், தமிழ் எண் நாள்காட்டி, தமிழ் கடிகாரத் துக்கு மொபைல் செயலி உள்ளிட்டவைகளை உருவாக் கிய ஸ்ரீநிவாஸ், பன்னிரு திருமுறை களையும் மொபைலில் படிக்கும் வசதியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். அதற்குள்ளாக அவருக்கு இப்படியொரு முடிவு ஏற்பட்டுவிட்டது’’ என்று வருத்தப் பட்டுச் சொன்னார் ஸ்ரீநிவாஸின் சகோதரர் கந்தசாமி.
நன்றி - http://tamil.thehindu.com/ Dated Dec.8 /2015/தமிழகம்/

2 கருத்துகள்:

  1. வருத்தமான செய்தி அண்ணா.

    பதிலளிநீக்கு
  2. இந்தச் செய்தியும், பழம்பெரும் எழுத்தாளர் விக்ரமன் செய்தியும் மனதைப் பாதித்த செய்திகள். 'என்ன வாழ்க்கை இது?' என்று எண்ண வைத்த செய்திகள்.

    தம +1

    பதிலளிநீக்கு