சென்னை வெள்ளம் - யார் காரணம்?

இந்தக் குழந்தையைப் பாருங்கள்!
தவறுசெய்யாத மக்களும் 
தண்டிக்கப்பட்டது ஏன்?
------------------------- 
சென்னையில் பெய்த பெருமழையை வெள்ளமாக மாற்றியது தமிழக அரசின் மெத்தனப்போக்குதான் என ஃப்ரண்ட்லைன், டைம்ஸ் ஆஃப் இந்தியா மற்றும் வயர்ட் போன்ற இதழ்கள் குற்றம் சாட்டியுள்ளன. அக்கட்டுரைகள் தரும் ஆதாரங்களை எளிதில் புரியும் வண்ணம் விளக்குவதே இப்பதிவு -

நவம்பர் 8,9,12,13,15,23 தேதிகள்: சென்னையில் கனமழை பெய்கிறது.
நவம்பர் இறுதி வாரம் (தோராயமாக 26ஆம் தேதி):
1) சர்வதேச வானிலை மையங்கள் சென்னையில் டிசம்பர் 1 மற்றும் 2ஆம் தேதி 50செமீ வரையில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கின்றன.
2) எச்சரிக்கையை ஏற்ற பொதுப்பணித்துறை அதிகாரிகள் தங்கள் மேலதிகாரிகளிடம், அதாவது பொதுப்பணித்துறை செயலாளரிடம் (PWD Secretary) செம்பரப்பாக்கம் ஏரியில் 83அடி இருக்கும் நீரின் அளவை 75அடியாக குறைக்க சொல்கிறார்கள். குறைத்தால் மட்டுமே வர இருக்கும் அதீத கனமழையை ஏரி தாங்கும் என்றும் சொல்கிறார்கள்.

நவம்பர் 27ஆம் தேதி: எந்த நடவடிக்கையும் இல்லை.

நவம்பர் 28ஆம் தேதி: எந்த நடவடிக்கையும் இல்லை.

நவம்பர் 29ஆம் தேதி: எந்த நடவடிக்கையும் இல்லை.

நவம்பர் 30ஆம் தேதி: எந்த நடவடிக்கையும் இல்லை.
அதாவது சுருங்கச் சொன்னால் மழை மிகவும் குறைவாகவோ அல்லது இல்லாமலோ இருந்த (Dry days) நவம்பர் மாதத்தின் இறுதி வாரத்தில் ஏரியில் இருக்கும் நீரை வெளியேற்றி நீரின் அளவை குறைக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் பரிந்துரை செய்தும் கூட எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

பொதுப்பணித்துறை செயலாளர் தலைமைச் செயலாளரின் உத்தரவுக்காக காத்திருக்கிறார். தலைமைச் செயலாளரோ முதல்வரின் உத்தரவுக்காக காத்திருக்கிறார். (இந்த இடத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஓ.பி.எஸ்சின் உத்தரவுக்காக தலைமைச் செயலாளர் காத்திருக்கிறார் என்றுதான் நாம் எழுதியிருக்க வேண்டும். ஆனால் இது அம்மாவின் ஆட்சி. அம்மாவின் ஆட்சியில் அணையை திறக்க நான் உத்தரவிட்டுள்ளேன்அணையை மூட நான் ஆணை பிறப்பித்துள்ளேன்,” என எல்லா வேலைகளையும் அம்மாவே இழுத்துப்போட்டுச் செய்வார் என்பதால் இதில் மட்டும் நாம் ஓ.பி.எஸ்சை இழுத்துவிடுவது அறம் அல்ல. அதனால் தலைமைச் செயலாளர் அம்மாவின் ஆணைக்காகத்தான் காத்திருந்திருக்கிறார் என்பது குழந்தைக்கும் தெளிவு)

டிசம்பர் 1:
சர்வதேச வானிலை மையங்கள் சொன்னதைப் போலவே கிட்டத்தட்ட 50செமீ கனமழை பெய்கிறது. (தாம்பரத்தில் அவர்கள் சொன்னதை போலவே மிகச்சரியாக 49செமீ பெய்தது)
செம்பரம்பாக்கம் ஏரியின் அளவு அரசு தளத்தின்படி 3141மில்லியன் கன அடியாக இருக்கிறது.
டிசம்பர் 1ஆம் தேதி மாலை 4 மணிக்கு சென்னை கலெக்டர் சுந்தரவல்லியிடம் இருந்து பத்திரிக்கையாளர்களுக்கு, செம்பரபாக்கம் ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டிவிட்டதால் நொடிக்கு 5000 கனஅடி நீரை வெளியேற்ற இருப்பதாகவும், இந்த அளவு நொடிக்கு 7500 கனஅடி வரை உயர்த்தப்படலாம் என்றும் மொட்டையாக ஒரு செய்தி கிடைக்கிறது.
மாலை 5 மணிக்கு முதலில் ஏரியை திறக்கிறார்கள். பெயரை வெளியிட விரும்பாத பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் நொடிக்கு 10000 கன அடி நீரை வெளியேற்றியதாகவும், இவ்வளவு பெரிய வெள்ளத்தை திறந்துவிட முடிவுசெய்த அரசு கண்டிப்பாக முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் எடுத்திருப்பார்கள் என தான் நம்பியதாகவும் wired இதழுக்கு பேட்டி அளித்துள்ளார்.

ஆனால் தமிழக அரசின் இணையதளத்தில் செம்பரபாக்கம் ஏரியில் இருந்து நொடிக்கு வெறும் 900கன அடி நீர் மட்டுமே வெளியேற்றப்பட்டதாக குறிப்பிட்டிக்கிறார்கள்.

ஆகமொத்தத்தில்
செய்தியாளர்களுக்கு கலக்டர் சொன்னபடி நொடிக்கு 5000-7000 கன அடியை திறந்துவிட்டார்களா? அல்லது பொதுப்பணித்துறை ஊழியர் கூறியதைப் போல நொடிக்கு 10000கன அடி நீர் திறந்துவிட்டார்களா? அல்லது அரசு தளம் சொல்வதைப் போல நொடிக்கு வெறும் 900கன அடி நீர் தான் திறந்துவிட்டார்களா? எது உண்மை? உண்மையோ இன்னும் அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது!

டிசம்பர் 2ஆம் தேதி:

அரசு தளத்தின்படி டிசம்பர் 1ஆம் தேதி ஏரியில் நீரின் அளவு 83.48அடி (3141 மில்லியன் கன அடி). டிசம்பர் 2ம் தேதி ஏரியில் நீரின் அளவு 74.08அடி (1134மில்லியன் கன அடி). ஆக 2007 மில்லியன் கன அடி நீர் முந்தைய இரவு 10 மணிக்கு வெளியேற்றப்பட்டிருக்கிறது. அதாவது அறிவித்த நொடிக்கு 7500கன அடிக்கு மாறாக கிட்டத்தட்ட நொடிக்கு 29000 கன அடி நீரை டிசம்பர் 1ஆம் தேதி எந்த முன்னறிவிப்பும் இன்றி திடீரென வெளியேற்றியிருக்கிறார்கள். அதிகாலை 2மணிக்கு சென்னையை வெள்ளம் வந்தடைகிறது. இரவு 10மணிக்கு அபாயகரமான அளவில் திறந்துவிடப்பட்ட வெள்ளம் தூங்கிக்கொண்டிருந்த மக்களையும், வீடுகளையும் மூழ்கடிக்கிறது.

வெள்ளத்திற்கான காரணங்கள்:
1) 26ஆம் தேதியே பொதுப்பணித்துறை அதிகாரிகள் தங்கள் மேலதிகாரிகளிடம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கச் சொல்லியும், 27,28,29,20 ஆகிய மழையில்லா தேதிகளில் எழவு காத்த கிளி போல மேலிடஉத்தரவுக்காக காத்திருந்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தது.

2) டிசம்பர் 1ஆம் தேதி மாலை நான்கு மணிக்கு வெறும் 7500கன அடி மட்டுமே திறக்கப்போகிறோம் என செய்தி கொடுத்துவிட்டு, இரவு 10 மணிக்கு எந்தவித முன்னெச்சரிக்கையும் இல்லாமல், மக்கள் வெளியேற நேரமும் கொடுக்காமல் திடீரென நொடிக்கு 29000கன அடி நீரை திறந்துவிட்டது.

3) சொல்லாமல் கொள்ளாமல் திறந்துவிட்டதை கொஞ்சம் சீக்கிரமாக 6மணிக்கு திறந்துவிட்டிருந்தால் இரவு 10மணிக்கு வெள்ளம் சூழ்ந்திருக்கும். ஆனால் இரவு 10மணிக்கு திறந்ததால் அதிகாலை 2மணிக்கு வெள்ளம் சூழ்ந்து மக்கள் தப்பிக்க வழியின்றி மாட்டிக்கொண்டார்கள். இவ்வளவு அபாகரமான அளவு நீரை நடு இரவில் திறப்பது என்பது மிகப்பெரிய தவறு.

4) இந்த 29000 கன அடி திறப்பைப் பற்றி பத்திரிக்கைகளுக்கு எந்தத் தகவலும் தரப்படவில்லை. மீண்டும் மீண்டும் கேட்டபின் சில அதிகாரிகள் வாய்மொழியாக மட்டுமே இதை டிசம்பர் 2ஆம் தேதி எல்லாம் முடிந்தபின் தெரிவித்திருக்கிறார்கள்.

5) பொதுவாகவே ஏரியில் இருக்கும் நீரை, வெளியேற்றுகிறேன் பேர்வழி என வாளியைக் கவிழ்ப்பதைப் போல கழிப்பது மரபல்ல. அபாயகரமான அளவை எட்டிவிட்டால் வாளியில் துளையிட்டு நீரை வெளியேற்றுவதைப் போல கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற்றுவதுதான் முறை. இதை நவம்பர் 27,28,29,30ஆம் தேதிகளில் செய்திருந்தால் வெள்ளத்தை கண்டிப்பாக தடுத்திருக்க முடியும் என்றும் இந்த வெள்ளம் இயற்கை பேரிடர் அல்ல, முழுக்க முழுக்க அரசுதான் இதற்கு காரணம் என்றும் நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

6) இதெல்லாம் போக சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டுக்காக அரசு அவசர அவசரமாக சாலைகள் அமைத்தது நினைவிருக்கலாம். அந்த குப்பைகள், கழிவுகள் எல்லாம் அடையாறு கடலில் கலக்கும் வழியை அடைத்துக்கொண்டதும் வெள்ளத்திற்கு முக்கிய காரணம் என்கிறார் சுற்றுச்சூழல் ஆர்வலர் நித்யானந்த் ஜெயராமன்.

7) சென்னையை சுற்றியுள்ள நான்கு ஏரிகளையும், அடையாறு, கூவம் நதிப்பாதைகளையும், ஓட்டெரி, பங்கிங்காம் கால்வாய்களையும் ஜூன் ஜூலை மாதத்தில் தூர்வாருவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு அதைச் செய்யாமலோ/சரியாகச் செய்யாமலோ விட்டிருப்பது இன்னொரு முக்கிய காரணம். ஆனால் முறையாக தூர்வாரியதைப் போல கணக்கு மட்டும் காட்டியிருக்கிறார்கள்.

ஆக, மேலுள்ள தகவல்களை வைத்துப் பார்க்கும்போது 
சென்னையையும், சென்னை மக்களையும் மீளாத்துயரில் தள்ளியிருக்கும் வெள்ளம் இயற்கை பேரிடர் அல்ல. கனமழையை அரசின் மெத்தனமும், அதிகாரிகளின் பயமும் ஊரை அழித்த வெள்ளமாக மாற்றியிருக்கிறது. இப்போது நாம் அனைவரும் ஸ்டிக்கர்பணிகள் பற்றி பேசுவதிலும், அதிமுகவை கிண்டலடிக்கும் மீம்கள் செய்வதிலும். எல்லா கட்சிகளும் இப்படித்தான் என உண்மைகளை அறியாமல் பேசுவதும் என பிசியாக இருக்கிறோம். இன்னும் சிலரோ ஏரியில் வீடு கட்டினால் வெள்ளம் வரத்தான் செய்யும், பல்லாண்டு காலம் செய்த தவறு என்றெல்லாம் பேசி அரசின் நிர்வாகமின்மைக்கும், மெத்தனபோக்குக்கும் தங்களை அறியாமலேயே துணை போகின்றார்கள். அரசும் அதையேதான் விரும்புகிறது. 
இந்திய ஊடகங்கள் நம்மை கவனிப்பதில்லை என கூக்குரலிட்டதன் பலனாக சென்னை வெள்ளத்தின் காரணங்களை அலசி ஆராய்ந்து அவர்கள் உண்மைகளை வெளியிட்டிருக்கின்றார்கள். இதை வைத்து நாம் என்ன செய்யப் போகிறோம்?

எந்த அளவுக்கு நிவாரணப்பணிகளில் தன்னார்வலர்கள் ஈடுபாட்டுடன் வேலை செய்தார்களோ அதே அளவில் உண்மையை வெளிக்கொணர்வதில் ஆர்வம் காட்ட வேண்டும். ஆட்சியாளர்கள் மீதும் அதிகாரிகள் மீதும் முறையான சுதந்திரமான விசாரணைக் கமிஷன் வைத்து உண்மையை உலகுக்கு கூறுவது மட்டும்தான் இறந்தவர்களுக்கும், இழந்தவர்களுக்கும் நாம் செய்யும் உண்மையான நிவாரணம் ஆகும்.
-டான் அசோக்
நன்றி
டைம்ஸ் ஆஃப் இந்தியா
வயர்ட்
ஃப்ரண்ட்லைன்
-----------------------------------
வாட்ஸப்பில் வந்த இச்செய்தி 
உண்மையாக இருக்கக் கூடாது 
என்று மனம் பதறுகிறது. 
ஆனால் 
இதுபற்றி விசாரிக்க வேண்டும் 
எனும் குரல்கள் 
தொலைக்காட்சியில் இன்று கேட்கக் கேட்க
உண்மையாக இருக்குமோ என்று அறிவு சந்தேகிக்கிறது.
----------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக