ஆபாசப் பாடலை எதிர்த்து, புதுமையான போராட்டம்!

அனைத்துக் கலை-இலக்கிய-சமூக 
அமைப்புகளின் சார்பாக,
புதுக்கோட்டையில் நடந்தது!
தங்கம்.மூர்த்தி தலைமையில் நா.முத்துநிலவன் கண்டனப் பாடல்

      ஆபாசப் பாடலை வெளியிட்ட சிம்பு-அனிருத்தைக் கைது செய்யக் கோரியும், அவர்களிருவரும் நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்க வேண்டும், தவறினால், திரைப்பட-தொலைக்காட்சி - பத்திரிகை - இணைய ஊடகங்கள் வாழ்நாள் முழுவதும் இருவருக்கும் தடைவிதிக்கக் கோரியும் புதுமையான முறையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
     புதுக்கோட்டை திலகர்திடலில் முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப்பேரவை, கம்பன் கழகம், கலைஇலக்கியப் பெருமன்றம், திருக்குறள் கழகம், மணிமன்றம் ஆகிய இலக்கிய அமைப்புகள் ஏற்பாடுசெய்திருந்த “அனைத்துக் கலை-இலக்கிய-சமூக அமைப்புகளின் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு கவிஞர் தங்கம்.மூர்த்தி தலைமையேற்றார். த.மு.எக.ச.நிர்வாகி கவிஞர் நா.முத்துநிலவன் தொடங்கி வைத்தார், செம்பை மணவாளன், மருத்துவர் ராமதாஸ் பொன்.கருப்பையா, மகா.சுந்தர்,  ஆகியோர் முன்னிலை வகித்தனர். கம்பன் கழகம் ரா.சம்பத்குமார் நிறைவுரையாற்றினார்.
      ஏராளமான பெண்கள் உள்பட, இருநூற்றுக்கும் மேற்பட்ட கலை-இலக்கிய-சமூக ஆர்வலர்கள் சுமார் இரண்டுமணிநேரம் சிம்பு-அனிருத்தைக் கண்டித்து முழக்கமிட்டனர்.
      ஞானாலயா பா.கிருஷ்ணமூர்த்தி, மருத்துவர்கள் ராமதாஸ், கே.எச்.சலீம்,  அ.பெ.கா.ஜெயராமன், கல்வியாளர்கள் குரு.தன சேகரன், ஆர்எம்வி.கதிரேசன், தமிழாசிரியர் கழகத் தலைவர் கு.ம.திருப்பதி, ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணித் தலைவர் கண்ணன், அரசு ஊழியர்சங்கத் தலைவர் ஜெயபாலன்,நாகராஜன், ஓய்வூதியர் சங்கத் தலைவர்கள் ஜெகந்நாதன், முத்தையா, திருவள்ளுவர் மன்றம் கண்ணதாசன், செம்மொழிச் சிந்தனையாளர் பேரவை சு.மாதவன், தேசிய இலக்கியப் பேரவை ஆரோக்கியசாமி, அறிவியல் இயக்கத் தலைவர் தலைமை ஆசிரியர் மணவாளன், ஆசிரியர்கள் குமரேசன், முனைவர்.அய்யாவு, அஞ்சலிதேவிமூர்த்தி, கருணச் செல்வி, ஆலங்குடி ஆரா, ஆர்.எஸ்.காசிநாதன், கலை இலக்கியவாதிகள் மற்றும் முகநூல், வலை எழுத்தாளர்கள் ஆர்.நீலா, மு.கீதா, மீரா.செல்வக்குமார், பாரதி,ரமா.ராமநாதன், சு.மதி, தமிழ்அமிர்தா, மாலதி, சுரேஷ்மான்யா, மா.செல்லத்துரை, ஸச்சின் சிவா, த.ரேவதி, இலக்கியப் பேரவை முத்து.சீனிவாசன் மற்றும் பல்வேறு ரோட்டரி, லயன்ஸ் தலைவர்கள் என இருநூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
கவிஞர் மு.கீதா கண்டன உரை

      மற்றும் உணவக உரிமையாளர் சங்கம் சண்முக.பழனியப்பன், ஜனநாயக மாதர் சங்கம் சலோமி, வாலிபர் சங்கம் நாராயணன், விக்னேஷ், புதுகை ஃபிலிம்சொசைட்டி இளங்கோ, மாவட்ட யோகா சங்கம், அம்பேத்கார் பெரியார் காரல்மார்க்ஸ் பண்பாட்டு இயக்கம், கணினித் தமிழ்ச்சங்கம், வீதி கலை-இலக்கியக் களம் உள்ளிட்ட புதுக்கோட்டையில் இயங்கிவரும் இருபதுக்கும் மேற்பட்ட கலை-இலக்கிய-சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு கண்டனங்களைக் கவிதைகளாக முழக்கங்கினர்
கவிஞர் தமிழ் அமிர்தா கண்டன உரை
      நிகழ்ச்சித் தொடக்கத்தில்,
      “பல்லில் பாம்புக்கு விஷமடா, சொல்லில் சிம்புக்கு விஷமடா, பெற்றெடுத்தவள் பெண்ணடா, நீ “பீப்“பாட்டு பாடுவதென்னடா?என்ற பாடலைக் கவிஞர் நா.முத்துநிலவன் பாட, கூடியிருந்தோர் அனைவரும் சேர்ந்து பாடினர். கண்டன முழக்கக் கவிதைகளைப் பாவலர் பொன்.கருப்பையா, கவிஞர் மகா.சுந்தர் இசையோடு முழங்க, கூடியிருந்தோர் ஆவேசமாகச் சேர்ந்து முழங்கிப் பாடினர். 
      பொதுவாகப் போராட்டங்களில் ஆவேசப் பேச்சுகளே இருக்கும் ஆனால், கலை-இலக்கிய வாதிகளின் இ்ந்தப் போராட்டமோ சற்றுப் புதுமையாகக் கவிதை, பாடல், ஓவியம் இசையெனக் கலைமணம் கமழ்ந்ததைப் பலரும் வியப்பாகக் கவனித்தனர்.
   இன்னும் பலர், சிம்பு-அனிருத்துக்குக் கண்டனம் தெரிவித்தும் பெண்களைப் பெருமைப் படுத்தி எழுதப்பட்ட கவிதைப் பதாகைகளை உயர்த்திப் பிடித்துக் கண்டனத்தைத் தெரிவித்தனர். அவற்றில் குறிப்பிடத் தக்க சில வாசகங்கள் வருமாறு –
   
   “பெண்கள் தம்மை இழிவு செய்யும் 
   “பீப்“பாடலைக் கொளுத்துவோம்!
   
    “அப்பன் நடித்தது ஒருதலை ராகம், 
    மகன் பாடியது தறுதலை ராகம்“

   “பெண்களை மதிக்கும் ஆண்களே 
    மிகவும் மிகவும் அழகானவர்கள்!
      
   “சீறிவரும் பெண்புலிகளைப் பார்! 
    சிம்பு அனிருத்தே மன்னிப்புக் கேள்!
      
     ‘STUPID  STAR  SIMBU  SIR,  
      HOW  I  WONDER  WHAT  TR?!”  
                
   “எவன்“டா உன்னைப் பெத்தான்? 
    கையில கிடைச்சா செத்தான்!?
      
   “சீண்டியவரை சிறையிலிடு, 
    மன்னிப்புக் கேட்கும்வரை மண்டியிடச் செய்
      
   “ஆண்பெண் சமத்துவம் என்பதே 
    அன்பான இருவரின் உலகாகும்

   “முகத்தின் அழகு  தற்காலிகம், 
  “அகத்தின் அறிவே நிரந்தரமாம்!

  --என்பன போலும் -பெண்களை உயர்த்தும் கவிதை வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஆண்கள், பெண்கள் என அனைவரும் கையிலேந்தி, சிம்பு-அனிருத்துக்கு எதிராகக் கவிதை முழக்கமிட்ட கண்டனப் போராட்டம் புதுமையானதுதான். 
  திருச்சி-புதுகைச் சாலையில் அமைந்திருக்கும் திலகர் திடல் வழியே சென்ற பலரும், இந்தப் புதுமைப் போராட்டத்தைக் கவனித்து, இவர்கள் தந்த துண்டறிக்கையை வாங்கிப் படித்ததோடு உடன் வந்து வாசகப் பதாகைகளை விரும்பி வாங்கிப் பிடித்துக் கொண்டு, கண்டன முழக்கத்திலும் சேர்ந்து உரத்து முழங்கியது குறிப்பிடத்தக்கது. சுமார் இரண்டுமணிநேரம் இவர்களின் இந்தப் போராட்டம் நீடித்தது.
 ---------------------- 

பி.கு. (1) இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, ஆர்வத்ததுடன் கலந்துகொண்ட பெயர் குறிப்பிடாத நல்ல உள்ளங்கள், கணினித் தமிழ்ச்சங்க வாட்ஸப் பக்க வழியாக, கவிதை அனுப்பிவைத்த சகோதரக் கவிஞர்கள் தங்கம்.மூர்த்தி, மு.கீதா, கிரேஸ் பிரதிபா, நிலா பாரதி, முனைவர்.ஆதிரை, இவற்றை ஓவியவரிகளாகத் தீட்ட உதவிய வலைக்கவிஞர் மகா.சுந்தர், ஓவியர் புகழேந்தி  ஆகிய நம் நண்பர்க்கும் ஆர்ப்பாட்ட நிகழ்ச்சியைப் படமெடுத்துதவிய ஒளிப்பட ஓவியர் “டீலக்ஸ்“ சேகர் அவர்களோடு,  படங்களை எடுத்து, உடனுக்குடன் வாட்ஸப்பில் ஏற்றிய கவிஞர் மீரா.செல்வக்குமார் உள்ளிட்ட நம் நண்பர்களுக்கும் நன்றி நன்றி நன்றி.

(2) இந்தப் போராட்டம் இத்துடன் முடிவது நம் கையில் இல்லை. 
“மரம் சும்மா இருக்க நினைத்தாலும் 
காற்று விடுவதில்லை!” என்பது சீனப் பெருந்தலைவர் 
மாஓ வின் புகழ்பெற்ற வாசகம்!

பார்க்கலாம் என்ன நடக்கிறதென்று... 

(3) நான் எழுதிப் பாடிய கண்டனப் பாடல் இதோ -

பல்லில் பாம்புக்கு விஷமடா! - தன்
சொல்லில் சிம்புக்கு விஷமடா?
பெற்றெ டுத்தவள் பெண்ணடா? - நீ
பீப்பாட்டுப் பாடுவ தென்னடா?      (பல்லில்..

கொட்டிப் பார்க்கும் அனிருத்தே உன்
கொடுக்கை ஒடிப்போம் நீஎங்கே?
பரமன் கழுத்துப் பாம்பெனும் உன்
பைத்தியம் தீர்ப்போம் வாஇங்கே    (பல்லில்..

எத்தனை எத்தனை காலமாய் - அட
இன்னும் கலை-அலங் கோலமாய்?
பெண்ணைக் கேவல மாக்குவாய்? - உன்
பிறப்பை மறந்து தாக்குவாய்?       (பல்லில்..

பெற்றெடுத்தவள் பெண்ணடா! - உன்
கூடப் பிறந்தவள் பெண்ணடா! -நீ
பெற்றெடுப்பதும் பெண்ணடா? -இனி
பீப்பாட்டுப் பாடுவ தென்னடா?     (பல்லில்..

( புதுக்கோட்டையில் 18-12-2015 மாலை, அனைத்துக் 
கலை-இலக்கிய-சமூக அமைப்புகளின் சார்பாக 
நடந்த ஆர்ப்பாட்டப் போர்ப்பாட்டுக்காக எழுதிப் பாடியது, 
கலந்து கொண்டோருக்கு இதன் நகல்கள் தரப்பட்டன.)

        - நா.முத்துநிலவன், muthunilavanpdk@gmail.com 
------------------------ 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக