கிரிக்கெட்டில் இந்தியா தோல்வி – நல்லதுதான்!



(இந்திய கிரிக்கெட் அணி தோல்வி -2015 - நன்றி கூகுள்)

இன்றைய உலகக் கோப்பை அரையிறுதியில் ஆஸ்திரேலிய அணியிடம் இந்திய அணி 95ஓட்டங்களில் தோற்றுவிட்டது. 

இப்போதுதான் இந்தச் செய்தியைப் பார்த்தேன் – ஒருமணிநேரம் தாமதமாக. ஆனால் இது நல்லதுதான்.
இந்தியாவுக்கு நல்லது. ஆம், இந்தியாவுக்கு நல்லதேதான்.

பொருளாதாரத்தில் முன்னேறியிருக்கும் அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஜெர்மனி, ஃபிரான்சு, ஏன் இங்கிலாந்தில் கூட இந்த விளையாட்டின் மீது இவ்வளவு வெறி இல்லை. கல்வியில் உலகையே வியக்கவைக்கும் ஃபின்லாந்தில் கிரிக்கெட் விளையாட்டை விளையாட்டாகக் கூட மதிப்பதில்லை.

ஆனால், பொருளாதாரத்தில் “இந்துமாக்கடல் அளவுக்கு ஆழமும், இமயமலை அளவிற்கு வளமும் இருந்தும்கூட உலகில் பாதி ஏழைகள் இந்தியர்களாக இருக்கிறார்கள்“ என்பது ஒன்றும் விளையாட்டான செய்தியல்ல.

இந்தியர்களை கிரிக்கெட் விளையாட்டின் வெறியர்களாக ஆக்கியது பன்னாட்டு நிறுவனங்களின் விளம்பரத் தந்திரம். 

உலகத்தின் மிகப்பெரிய சந்தையாக இந்தியாவை நினைக்கும் பன்னாட்டு நிறுவனங்கள்தான் ஆயிரக்கணக்கான கோடிகளை இறைத்துப் போட்டிகளை நடத்துகிறார்கள். அதைவிடப் பல்லாயிரம் கோடிகளை இந்திய மக்களிடம் இருந்தே மீண்டும் அள்ளுகிறார்கள் என்பதுதான் முக்கியமான தகவல்.

தொலைக்காட்சியில் கிரிக்கெட் விளையாட்டைப் பார்த்து ரசிப்பவர்களும் உலகிலேயே இந்தியாவில்தான் அதிகம் – சுமார் 30கோடி! விளம்பரதாரர் அனைவரும் உலகநாடுகளில் பலகோடி டிரில்லியன் புழங்கும் (MNC) நிறுவனங்கள்.

கிரிக்கெட் விளையாடும் வீர்ர்களின் திறமையை நான் குறை கூறவில்லை. அவர்களின் திறமையை விடவும் பல்லாயிரம் மடங்கு சம்பளமாகவும், விளம்பரமாகவும் கிடைக்கிறது. உள் நாட்டு நிறுவனங்கள் எட்டமுடியாத உயரத்தில் இருக்கும் இவர்களைப் பன்னாட்டு நிறுவனங்களே பயன்படுத்துகின்றன.

“கிட்டத்தட்ட ஒரு கார்ப்பரேட் நிறுவனம் போலச் செயல்படும் பிசிசிஐ ஐபிஎல் போட்டிகளின் மூலமாகவும் பயிற்சி மையம் மூலமாகவும் வேறு வகைகளிலும் கோடிகளைக் குவித்துக் கொண்டிருக்கிறது. இந்த அமைப்பு செய்வது முழுக்கமுழுக்க வியாபாரம் மட்டுமே... சாதாரண இந்தியன் இதையெல்லாம் பார்ப்பதில்லை, தேசப்பற்று பணமாக்கப்படுகிறது“ என்று தினமணி நாளிதழ் (பிப்-1, 2011) தலையங்கத்தில் எழுதியது இன்றும் பொருந்துகிறது.

இது போதாதென்று கிரிக்கெட் வீர்ர்கள் ஏலம்விடப்படுவது மானம்கெட்ட தனமாக வளர்ந்துவருகிறது. கடந்த 2014இல் ஐபிஎல் போட்டிகளுக்காக “கிரிக்கெட் வீர்ர் யுவராஜ்சிங் ரூ.14 கோடி ஏலம்“ செய்தி நமது மானத்தை ஏலம்விட்டதல்லவா?

இந்தியாவிற்கே உரிய மல்யுத்தம், கபடி முதலான போட்டி வீரர்களுக்கு எந்தவித உதவியும் கிடைக்காத நிலையில் ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா நிற்க முடியாத காரணம் இந்தக் கிரிக்கெட்டிற்குத் தரும் முக்கியத்துவத்தை நமது அரசோ, நமது தனியார் நிறுவனங்களோ வேறு எந்த விளையாட்டு வீரர்களுக்கும் தராததுதான்.

நமது தேசிய விளையாட்டாக அறிவிக்கப்பட்டிருப்பது வளைகோல்பந்து எனும் ஆக்கி விளையாட்டுத்தான் ஆனால் அதை ஆடிப் பதக்கம் வாங்கிவந்த தமிழ்நாட்டு வீரர்கள் பாஸ்கர், தன்ராஜ் ஆகியோர் எங்கோ மூலையில் கிடக்க,! இந்தக் கூழாங்கற்களுக்கோ பட்டை தீட்டிய பகட்டு விளம்பரம் பலவழியிலும் கிடைத்துவிடுகிறது!

ஒற்றை ஆளாய் ஒலிம்பிக்பளுதூக்குதல் போட்டியில் இந்திய மானத்தைத் தூக்கி நிறுத்திய கர்ணம் மல்லேஸ்வரியை இன்றைய இளைஞர்கள் எத்தனை பேருக்குத் தெரியும்?  இதுபோல பி.டி.உஷா..சொல்லிக்கொண்டே போகலாம்!

எங்கள் ஊர் –புதுக்கோட்டை மாவட்டம்- கத்தக்குறிச்சி சாந்தி பெற்ற ஒரு ஆசியப் பதக்கத்தில்தான் எத்தனை எத்தனை கேவலத்தை அந்தப் பெண் எதிர்கொண்டார்? போனால் போகிறதென்று அவருக்குத் தரப்பட்ட ரூ.5,000 அரசுவேலை பயிற்சியாளர் பணியில் கூட அவர் ஜொலித்தார். (எங்கள் பள்ளி மாணவியர் சிலரை அகில இந்தியப் போட்டிவரை கொண்டு சென்றார்) ஆனால், நடைமுறைக்கு ஒவ்வாத நம் அரசு விதிகளால் அவரால் அந்தப் பணியிலும் தொடர முடியாமல் போனது நமக்குத்தான் பெரிய இழப்பு!

பல ஆயிரம் கோடி வருமானமும், உடனடி உலகப் புகழும் (டோனி மாதிரி ஆகணும்”)  நமது நாட்டு இளைஞர்களை எல்லாம் திசைமாற்றி வருவது இனியாவது நிற்கட்டும். இதில் நடக்கும் பேரங்கள், இதன் பின்னணியில் இருக்கும் பிரதேச – அரசியல் – ஜாதி - பண விளையாட்டுகள் பற்றித் தெரியாத அப்பாவி இளைஞர்களின் கண்கள் திறக்கட்டும்!

இது 11இளைஞர்களின் விளையாட்டல்ல, 
வியாபாரிகளின் ஆயிரம் கோடி விளையாட்டு! இந்த விளையாட்டு நம்நாட்டுக்கு நல்லதல்ல பலகோடி இளைஞர்களைத் திசைதிருப்பி  அவர்களின் வாழ்க்கையோடும், நமது பொருளாதாரத்தோடும் விளையாடிச் சீர்குலைக்கும் கிரிக்கெட் விளையாட்டு           நமக்கு வேண்டாம்! வேண்டவே வேண்டாம்!

இதைப் புரிந்து, பிற நல்ல விளையாட்டு உள்ளிட்ட தன் உண்மையான திறமையை உணர்ந்து, நம் இளைஞர்கள் சரியான வழியில் நடைபோட இந்தத் தோல்வி உதவட்டும்.

அந்த வகையில் –
இந்தியக் கிரிக்கெட் அணியின் இந்தத் தோல்வி இந்தியாவுக்கு நல்லது! இந்திய இளைஞர்களுக்கு நல்லது, இந்தியாவின் பலவகை விளையாட்டு வளர்ச்சிக்கு நல்லது! விளையாட்டு எதையுமே விளையாட்டாக பார்க்கும் பார்வைக்கு நல்லது! அந்தவகையில் – கிரிக்கெட் அணி தோற்றது,
இந்திய முன்னேற்றத்திற்கும் நல்லதே! நல்லதே!

கிரிக்கெட் தோல்வி தொடரட்டும்!
இந்திய வெற்றி தொடங்கட்டும்!
--------------------------------------------
ஒரு முக்கியமான பின்குறிப்பு -
இந்திய கிரிக்கெட் வீரர்களின் வருமான விவரம் -
(இவ்விவரம் சம்பளம் தவிர,  இதர வழி வருமானமே)

போர்ப்ஸ் இதழ், உலகில் அதிக வருமானம் பெறும் கிரிக்கெட் வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் முதல் 10 இடங்களை, 6 இந்திய வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.
இந்த பட்டியலில் முதலிடத்தில் அணித்தலைவர் மஹேந்திர சிங் டோனி உள்ளார். இவருக்கு கிரிக்கெட் விளையாட்டின் மூலம் ஆண்டிற்கு 35 லட்சம் அமெரிக்க டொலர் கிடைக்கிறது.
ஆனால், விளம்பரங்கள் மூலம் ஆண்டிற்கு 2 கோடியே 30 லட்சம் சம்பாதிக்கிறார். விளம்பரங்களில் நடித்து அதிகம் சம்பாதிக்கும் வீரர்கள் பட்டியலிலும் டோனி தான் முதலிடம். டோனியின் ஆண்டு வருமானம் 2 கோடியே 65லட்சம் டொலராகும்.
இப்பட்டியலில் 2ஆம் இடத்தை பிடித்தவர் இந்திய அணியின் நட்சத்திர நாயகன் சச்சின். இவரது ஆண்டு வருமானம் 1 கோடியே 86 லட்சம் டொலராகும். இதில் விளம்பரங்கள் மூலம் 1 கோடியே 65 லட்சம் டொலர் கிடைக்கிறது.
மீதமூள்ள 21 லட்சம் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பதன் மூலம் சச்சினுக்கு கிடைக்கிறது. இதே போல கவுதம் கம்பீர் (73 லட்சம் டொலர்), வீராட் கோஹ்லி (71 லட்சம் டொலர்), வீரேந்திர ஷேவாக் (69லட்சம் டொலர்), யூசுப் பதான் (37லட்சம் டொலர்) ஆகியோர் இப்பட்டியலில் உள்ளனர். - 
நன்றி - http://www.tamilcnnlk.com/archives/44341.html
(இது 2012 நிலவரம்தான்.இன்றைய தோல்வியால் நிலைமை சற்று மாறலாம் - நா.மு.)
------------------------------------------------
26-03-2015 அன்றைய உலகக் கோப்பை அரையிறுதி இந்தியா-ஆஸ்திரேலியா ஆட்ட விவரம் அறிய விரும்புவோர் பார்க்க-http://www.tamilcnnlk.com/archives/358679.html
--------------------------------------------------------------------- 

இந்திய அணியின் 2023 இறுதிச்சுற்றுத் தோல்வி பற்றிய

காரணங்களைப் பற்றிய எனது கருத்துகளை அறிய -

                 https://valarumkavithai.blogspot.com/2023/11/blog-post.html

31 கருத்துகள்:

  1. ஆருமையாக சொன்னீர்கள்,,,!

    பதிலளிநீக்கு
  2. அவ்வளவு சீக்கிரத்தில் மாற்றம் வருமா...? என்பதே சந்தேகம் தான்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வரும் என்று நம்பித்தானே சுதந்திரப்போராட்டமே வந்தது...
      நம்புவோர் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும்.
      புகழ்பெற்ற Quantity changes lead to Quality changes மேற்கோள் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. நம்புவோம் அய்யா.

      நீக்கு
  3. உங்கள் கருத்தினில் எனக்கும் உடன்பாடு உண்டு. தங்களின் தயாரிப்பை இந்தியாவில் விலையாக்க வேண்டும் என்று பன்னாட்டு நிறுவனங்கள் நடத்திய நாடகம் தான், நம் நாட்டு பெண்ணிற்கு உலக அழகி பட்டம் கொடுத்த கதை. அவர் அப்படி ஒன்றும் அழகில்லை என்பது வேறு. நடிகர் விவேக் சொல்வதுபோல், நம்மூர் தயிர் விற்கும் பெண்களே அதைவிட அழகாக இருப்பார்கள்.

    அதே கதைதான், கிரிக்கெட்டிலும். இந்த உலக கோப்பையில் நடைபெற்ற அத்தனை போட்டிகளையும் பாருங்கள். கண்டிப்பாக இந்தியக் கொடி ஆடி அசையாமல் இருந்ததில்லை. அவ்வளவும் நம் நாட்டின்அன்னியச் செலவாணி .

    'என்னை அடிமைப் படுத்திக் கொள் ' என்று நாம் எழுதி தரும் ஒப்பந்த ஓலை. இதில் நமக்கு பெருமை வேறு.

    'மணி மணியாய் நூறு இளைஞர்கள்' எப்போது கிடைப்பார்களோ? அல்லது கிடைக்க விடாமல் சதி செய்யும் சூழ்ச்சியாகவும் இருக்கலாம்.

    அன்புடன்
    கோ. மதிவாணன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விவேகானந்தர் கேட்டது நூறு இளைஞர்களைத்தான்.
      இவர்கள் லட்சம் இளைஞர்களை அல்லவா எதிர்த்திசையில் இழுத்துப் போகிறார்கள். எனினும் உண்மையின் வலிமை வெல்லும்தானே? தங்களின் முதல்வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நண்பரே. தொடர்ந்து இணைந்திருங்கள்.

      நீக்கு
    2. அன்பு நண்பருக்கு, நான் இங்கு வருவது மூன்றாவது வருகை. 'அகழ்வில்' சந்தித்திருக்கிறோம். நன்றி.

      நீக்கு
  4. வணக்கம்
    ஐயா
    தாங்கள் சொல்வது 100 வீதம் உண்மைதான்.. இனியாவது இருப்பவர்கள் திருந்தட்டும் பகிர்வுக்கு நன்றி த.ம2

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  5. ஐயா நாங்க இந்த விளையாட்டப் பாக்கறதே இல்லைங்க.....எங்களைப் பொருத்த வரை இதுவும் சூதாட்டம் போல ஆகிவிட்டது.

    நீங்கள் சொல்லி இருக்கும் அத்தனைக் கருத்துக்களும் மிக மிகச் சரியே! நாங்களும் அடை வழி மொழிகின்றோம்.....ஐயா! நல்ல பதிவு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்குப் பிடிக்கிறதோ இல்லையோ “இது மக்களை அதிகம் பாதிக்கிறது“ என்று எதுபற்றியெல்லாம் கவலை வருகிறதோ அதுபற்றிய விமர்சனங்களை வைக்க முயல்வது என் வழக்கம். தாங்களும் அவ்வாறு செய்வது அவசியம் என்று நினைக்கிறேன். நமக்குப் பிடிப்பது முக்கியமல்லவே? தயவுசெய்து யோசியுங்கள். அதற்காக தொடர்ந்து பார்க்கவேண்டியதில்லையே? அவ்வப்போது கருத்துச் சொல்லுமளவிற்கு பார்ததும் படித்தும் வையுங்கள்.நன்றி

      நீக்கு
  6. வணிக நோக்கோடு வர்க்கப் பின்னணியும் பிணைந்த இந்த மட்ட!! பந்து விளையாட்டு மோகம் குறைந்தாலே இளைஞர்கள் மாற்றுச் சிந்தனைக்குத் திரும்புவார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாற்றுச் சிந்தனைக்கு வரவிடாமல் மயக்கும் ஏற்பாடுகள்தான் இந்த விளம்பர வினோதங்கள்... மீட்டெடுப்போம் அந்த வருத்தப்படாத வாலிபர்களை.. நன்றி அய்யா.

      நீக்கு
  7. சமூக சிந்தனையோடு எதிர்கால இந்திய வளர்ச்சிக்காக சொன்ன அருமையான விடயம் நண்பரே ஆனால் விசிலடிச்சான் குஞ்சுகளுக்கு மண்டையில் ஏறவில்லையே... என்ன செய்வது.
    தமிழ் மணம் 4

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. “தூங்குவோர் தம்மை எழுப்பிடக் கூடும்,
      தூங்குவோர் போல நடிப்பவர் தம்மை
      ஓங்கி அறைந்து செவிப்பறை கிழித்து
      ஒவ்வொரு பல்லையும் எண்ணிக்கொடுத்து...
      உதைத்துத் திருத்த ஒருபடை வேண்டு்ம் தமிழ்க்காளையே” -என்பது எங்கள் பேராசியரிர் இரா.இளவரசு அவர்களின் எழுச்சிக் கவிதை.

      நீக்கு
    2. 'ஓங்கி அறைந்து செவிப்பறை கிழித்து
      ஒவ்வொரு பல்லையும் எண்ணிக்கொடுத்து...
      உதைத்து'
      அய்யய்யோ வன்முறைக்களமாக மாறிவிடும் போலிருக்கே அய்யாவின் தளம்.

      நீக்கு
  8. அய்யா,

    இந்த பதிவு முற்றிலும் உண்மை.

    நீங்கள் குறிப்பிட்ட மேலை நாடுகளில் பெரும்பாலானவற்றில் கிரிக்கெட்டின் இடத்தை கால்பந்து பிடித்திருந்தாலும் இந்தியா அளவுக்கு மற்ற விளையாட்டுகள் கொல்லப்படவில்லை !

    இத்துடன் இந்த சீரழிவுக்கான இரண்டாவது காரணமாக சினிமாவையும் சேர்த்துக்கொள்ளலாம் !

    நன்றி
    சாமானியன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரெண்டும் கூட்டுக் கொள்ளைதான் என்றாலும் அதில் சிலநேரம் நல்ல படங்களும் வந்துவிடுவதுண்டு! தங்கள் கருத்திற்கு நன்றி நண்பரே.

      நீக்கு
  9. நாளிதழில் நான் படிக்காதது விளையாட்டுப் பகுதி மட்டுமே. ஆதலால் இது எனக்கு பாதிப்பாகத் தோன்றவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அய்யா, இந்தக் கட்டுரை பார்த்துவிட்டு என்னை விளையாட்டுக்கே எதிரி என்பதாக நினைத்திருந்தால் அப்படி உங்களை எண்ணவைத்தது என் எழுத்தின் குறையே. நான் விளையாட்டின்மேல் மிகுந்த ஆர்வம் உள்ளவன் (கல்லூரியில் விளையாட்டில் தொடர்ந்து மூன்றாண்டுகள் சாம்பியனாக்கும்! -1974-78 திருவையாறு அரசர் கல்லூரியில் விசாரிச்சுக்குங்க)
      மற்ற விளையாட்டுகளை இந்த மலைப்பாம்பு விழுங்கிவிடுவதே எனது முதல் ஆதங்கம்...அடுத்து இதில் உள்ள வணிகப் பின்னணி. எனினும் தங்கள் கருத்திற்கு நன்றி அய்யா.

      நீக்கு
  10. நல்ல பதிவுக்கு நன்றி நண்பரே,
    இந்தியா தோற்கட்டும் என்று சொன்னால் நம்மை தேச துரோகியாக்கி ஆக்கிவிடுவார்கள் இந்த மடையர்கள். நேற்று நடந்த விளையாட்டை பார்த்தது 90 % சதவிகிதம் இந்தியர்கள் என்பது உண்மை எவ்வளவு நமது நாட்டு பணம் வீணாகிறது அரசாங்கம் யோசிக்குமா ? அதான் நமது அரசாங்கம் பன்னாட்டு கம்பனிகளை விருந்து வைத்து அழைக்கிறதே என்ன கொடுமை இது. மதுவுக்கும் கிரிக்கட்டுக்கும் அடிமையாகும் இளைஞர்களே விழித்துக் கொள்ளுங்கள்.

    tha.ma +1
    நன்றி
    M. Syed.
    Dubai

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நண்பர் சையது அவர்களே (எனது மகனும் அபுதாபியில்தான் கணினிப் பணியில் இருக்கிறான்)

      நீக்கு
  11. உரிய நேரத்தில் உயர்ந்த கருத்து!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அய்யா வணக்கம். உடல்நலத்துடன் உள்ளீர்கள்தானே ?
      நலமே விழைகிறேன். நன்றியும் வணக்கமும்.

      நீக்கு
  12. கிரிக்கெட் அரசாங்கத்தின் கட்டுக்குள் வரவேண்டும் .விளையாட்டு துறையில் மாற்றங்கள் வர வேண்டும் .கால்பந்து முதல் ஆக்கி வரை நேரத்தில்1 1/2 முடிந்து விடும்.

    பதிலளிநீக்கு
  13. கல்லூரி படிக்கும் காலத்தில் நானும் கிரிக்கெட் மீது பைத்தியமாக இருந்தவன்தான். இப்போது கிரிகெட் சூதாட்டம் பற்றிய செய்திகள் தெரிந்த பிறகு அதன் மீது வெறுப்பு ஏற்பட்டுவிட்டது . நமது நேரத்தையும் ஆற்றலையும் வீணடிக்கும் அந்த விளையாட்டு நமக்குத் தேவை இல்லாதது. எப்போது உணர்வார்கள் இந்தியர்கள்?

    பதிலளிநீக்கு
  14. அனானி பாய்ஸ் யாரவது வராங்களானு பாக்க வந்தேன்... ஒரு பக்கிய காணோம்

    பதிலளிநீக்கு