கல்வியின் மையம் குழந்தைகள் அல்லவா ?


நல்ல கல்வியின் குவிமையம் குழந்தைகள்தானே?
மாணவர் கல்வித்திறனை மேம்படுத்தத்தானே கல்வித்துறை முழுமூச்சுடன் செயல்படவேண்டும்?

ஆனால், தற்போது தமிழகம் புதுவையில் நடக்கும் 10,12ஆம் வகுப்புகளுக்கான தேர்வுகளின் கால அட்டவணையைப் பார்த்தால் நமது அரசு இப்படி நினைப்பதாகத் தெரியவில்லை.

பத்தாம்வகுப்புத் தேர்வுக் கால அட்டவணையில் 
புரியாத புதிர் என்னவென்றால்
ஒவ்வொரு தேர்வுக்குமான கால இடைவெளிதான். 

தற்போது நடந்துகொண்டிருக்கும்
பத்தாம்வகுப்புப் பொதுத்தேர்வுகளின்
கால அட்டவணையைக் கொஞ்சம் பாருங்களேன் - 
19-03-2015-வியாழன் - தமிழ் முதல்தாள்
24-03-2015-செவ்வாய் - தமிழ் இரண்டாம்தாள்
25-03-2015-புதன் -ஆங்கிலம் முதல்தாள்
26-03-2015-வியாழன் -ஆங்கிலம் 2ஆம்தாள்
30-03-2015-திங்கள் - கணக்கு
06-04-2015-திங்கள் - அறிவியல்
10-04-2015-வெள்ளி - சமூகவியல்

பார்த்தீர்களா? 
தமிழ், ஆங்கிலத் தேர்வுகள் ஒவ்வொன்றும் இரண்டுதாள் வீதம் 200மதிப்பெண்ணுக்கான தேர்வுகள்! 
இந்தத் தேர்வுகளுக்கு இடையில் 
விடுமுறை நாள் ஏதும் விடப்படவில்லை!
ஆனால்...75மதிப்பெண்ணே கொண்ட 
அறிவியல் தேர்வுக்கு ஏழுநாள் விடுமுறை! 
கணிதம் மற்றும் சமூகவியல் தேர்வுகளுக்காவது மூன்றுநாள்விடுமுறை உள்ளது.
ஆங்கிலத்திற்கு இடைவெளியே கிடையாது.

ஏன் இப்படி?
கல்வித்துறை வட்டாரத்தில் விசாரித்தால், பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வுகளை ஒட்டி –12ஆம் வகுப்புத் தேர்வுகள் இல்லாத நாள்களில் – அந்த இடைவெளியில், பத்தாம் வகுப்புத் தேர்வுகள் வைக்கப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.
இது மாணவர்களை, அவர்கள்தம் 15வயது உளவியலை கவனித்து, அதுபற்றிக் கவலைப்பட்டவரின் செயலாகத் தெரியவில்லையே? நடத்தி முடித்தால் போதும் எனும் அலுவலக எந்திரத்தனம் தானே தெரிகிறது?

பல தனியார் பள்ளிக்கூடங்களில் பத்தாம் வகுப்பே இரண்டு ஆண்டுகள் நடப்பது தனிக்கதை! (“என்னப்பா படிக்கிறே? “பத்தாம்ப்பு ஃபர்ஸ்ட் இயர்“ “நா செகண்ட் இயர்“ எனும் பதில் வருகிறது! எப்படி இருக்கு? ரொம்பக் கேவலமா இல்ல?)

ஓராண்டு முழுவதும் கற்றதை ஓரிரு மணிகளில் மாணவரால் வெளிப்படுத்திவிட முடியும் என்பதே ஒரு மூடநம்பிக்கைதான். (ஆண்டு முழுவதும், வாரந்தோறும் அவரது கல்வித்திறன் மேம்பாட்டையும், இதர வாழ்வியல் திறன் வளர்ச்சியையும் அவ்வப்போதே பார்த்து, அதற்கேற்ப அவ்வப்போதே திறனாய்வு செய்வதுதானே சரி? இந்த முறை நம் “அனைவர்க்கும் ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வித் துறைகளில்  உள்ளதே?) அது ஒருபுறமிருக்க, இந்த நடைமுறையில் நடத்தப்படும் தேர்வு நாள் இடைவெளியிலாவது உளவியல் பார்வை வேண்டாமா?

ஏற்கெனவே வாய் கோணலாம், இதுல கொட்டாவி வேறயா?
ஏற்கெனவே ஆங்கிலப் பாடத்தோடு அல்லாடிக் கொண்டேதான் நமது கிராமத்து மாணவர்கள் நாளைக் கழித்துவருகிறார்கள். இதில், தமிழ்த்தேர்வை அடுத்து இடைவிடுமுறையின்றி தேர்வுகள் நடந்தால் என்ன ஆகும்? இதுதான் என் கவலை.
(“அந்த இங்லீஷ்காரன் போயிட்டான் ஆனாலும் இந்த இங்லீஷ்கிட்டயிருந்து எப்பத்தான் சார் எங்களை விடுதலை பண்ணுவீங்க?” எனும் நம் அப்பாவி மாணவர்க்கு, “தமிழில் அனைத்தையும் தரும்வரை இந்த அடிமைத்தனம் நீடிக்கத்தான் செய்யும்என்பதை விளக்கிச் சொல்லிவிட முடியுமா என்ன?)

தேர்வு எழுதும் குழந்தைகளின் உளவியலுக்கு உகந்ததாக தேர்வுக்கால அட்டவணையைத் தயாரிக்க வேண்டும். ஏற்கெனவே தேவையில்லாத அச்சம் (தேர்வு அச்சம் -முதன்முறையாக அரசுத் தேர்வு எழுதுவதால் எழும் இனம் புரியாத குழப்பம்) கொண்டிருக்கும் மாணவர்க்கு உதவுவதாகத் தேர்வுக்கால அட்டவணை இருக்க வேண்டுமே தவிர மேலும் அச்சுறுத்துவதாக இருக்க்க் கூடாது. ஆனால் அரசு இப்படி யோசித்திருப்பதாகத் தெரியவில்லையே? ஏன்

தமிழ், ஆங்கிலத்தேர்வுகளுக்கு இடையில் ஒருநாள் கூட விடுமுறை கிடையாதாம்! ஆனால், ஏற்கெனவே முடித்த (பெரும்பாலும்) 25மதிப்பெண்களைச் செய்முறைத் தேர்வில் பெற்றுக்கொண்ட, எழுத விருக்கும் எழுத்துத் தேர்வில் 75க்கு 20மதிப்பெண் எடுத்தாலே தேர்ச்சி பெற்றுவிடலாம் எனும் நிலையில் உள்ள- அறிவியல் தேர்வுக்கு ஏழுநாள் விடுமுறை! 

என்னங்க இது?

நமக்கு என்ன சந்தேகம் வருகிறது என்றால்,
தனக்குத் தோதான நாளில் போராட்டங்களை அறிவிக்கிற தலைவர்களைப் போலவே, நம் கல்வித்துறையும் தன் சௌரியத்திற்காக  குழந்தைகளைப் படுத்துகிறதோ? என்பதுதான். அப்படியெனில், இது நல்லதல்லவே?

இந்தக் கால அட்டவணையைத் 
தயாரித்தது யார்ஒப்புதல் தந்தது யார்?  
இதை விசாரிக்க வேண்டும். 
இனிமேலாவது  இதுபோல் நடக்காமலிருக்க 
என்ன செய்யவேண்டுமோ 
அதைச் செய்தாக வேண்டும். 
அவ்வளவுதான். 
----------------------------------------------  

25 கருத்துகள்:

  1. பத்தாம்ப்பு இரண்டு வருசமா...? ரொம்ப கேவலமாத் இருக்கு...!

    மாணவர்களின் உளவியலா...? - "இதைப் பற்றி அவர்கள் "அறிவார்களா...?" என்பதே சந்தேகமாக உள்ளது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடா... என்ன வேகம், நம்ம வலைச்சித்தரின் வேகம்?
      வருகைக்கும், வாக்கிற்கும் நன்றி அய்யா.

      நீக்கு
    2. தவறுகளை இனிவரும் காலங்களில் திருத்திக் கொள்வார்களா?

      நீக்கு
    3. தவறுகளைக் குழந்தைகள் திருத்திக்கொள்வார்கள்.
      பெரியவர்கள்தான் திருத்திக்கொள்ளத் தயங்குவார்கள்.
      குழந்தைகளுக்காகப் பெரியவர்கள் திருத்திக்கொண்டால் பெரியவர்கள் உண்மையிலேயே பெரியவர்கள்தான்.

      நீக்கு
  2. பெரும்பாலான பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு பாடங்களே நடத்தப்படுவதில்லை.... இரண்டு வருடந்தான்... இன்னும் சில பள்ளிகளில் நல்லாப் படிக்கும் மாணவர்கள் மட்டும் ஒரு வகுப்பில் மற்றவர்கள் மற்ற வகுப்புகளில்... இதில் நல்லாப் படிப்பவர்களை சதமடிக்க வைக்க பயிற்சிகள்... படிக்காதவர்களுடன் பேசக்கூட அனுமதியில்லை...

    மாணவர்களின் உளவியல் பற்றியெல்லாம் கவலை அவர்களுக்கு எதற்கு....

    நல்ல பகிர்வு ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்லாப் படிக்கும் மாணவர்கள் மட்டும் தனிவகுப்பு என்பது பழசு.
      பத்தாம்வகுப்பில் 475 முதல் 490வரை எடுத்த மாணர்வள்
      பதினொன்றாம் வகுப்பில் (அப்படி ஒன்று நடத்தினால்) தனிப் பிரிவு.
      490முதல் 595 வரை மற்றொரு பிரிவு.
      495க்கு மேல் மற்றொரு பிரிவு தெரியாதுங்களா என்னங்க நீங்க?

      நீக்கு
  3. மனப்பாட இயந்திரங்களை உருவாக்குகிறது நம் கல்வித் திட்டம்.எல்லா வகையிலும் மாணவர்களின் மன அழுத்தம் அதிகரிக்கப்படுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 34ஆண்டுகள் ஆசிரியராக இருந்ததன் குற்றவுணர்வை இப்படித்தான் ஆற்றிக்கொள்ள வேண்டியிருக்கிறது. ஏதோ என் குழந்தைகளைப் பார்த்தும் பழகியும் ஓடிக்கொண்டிருந்தது. பாடத்திட்டத்தோடு மாரடித்தே என் பணிக்காலம் ஓடிவிட்டது.. என் நூலே அதுதான்.

      நீக்கு
  4. அய்யா வணக்கம்.
    உங்களின் இந்தப் பதிவு எங்களின் மனக்குமுறல்.
    இவ்வாண்டு பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் தமிழுக்கேனும் முன்னும் பின்னுமாய் இடைவெளிகள் இருந்தன. ஆனால் ஆங்கிலத்திற்கு அதுவும் இல்லை.
    மேலே இருப்பவர்களின் மனத்திட்டம் என்ன வென்று தெரியவில்லை. எதுவாய் இருந்தாலும் அது கல்விச் செயல்பாட்டின் மையமான மாணவர்களின் நலன் சார்ந்து இதுபோன்ற விடயங்களில் இருப்பதில்லை என்பது உண்மை.
    உங்களின் இந்தக் குரல் குரலிழந்து போய் நிற்கின்ற என்போன்ற எண்ணற்ற ஊமைகளின் குரல்.

    நன்றி அய்யா!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. “தமிழுக்கேனும் முன்னும் பின்னுமாய் இடைவெளிகள் இருந்தன. ஆனால் ஆங்கிலத்திற்கு அதுவும் இல்லை“ அதுதானே என் குமுறல். எதைக் கண்டு பயப்படுகிறார்களோ அதற்கு விடுமுறை இல்லை எது எளிதாக இருக்கிறதோ அதற்கு ஒரு வாரவிடுமுறை இதுதானே புரியவில்லை இதுதானே என் பதிவின் மையம்?

      நீக்கு
  5. அட்டவணையைத் தயாரிக்கும்போது மாணவர்களின் உளவியல், பாடத்தின் தன்மை, மதிப்பெண்கள் உள்ளிட்ட அனைத்துக்கூறுகளையும் மனதில் கொள்வது நலம். சடங்காக அட்டவணைகள் தயாரிக்கப்படும்போது இப்படித்தான் நடக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாணவர் உளவியல் (சைகோ பெடகாஜி?) பாடமெல்லாம் நம் பிஎட் தேர்வுக்குரிய பாடத்திட்டத்தோடு சரி. அதை ஆசிரியர்களும் பின்பற்றுவதில்லை, அதை கல்வித்துறையும் கண்காணிப்பதில்லை. தேர்வு நேரங்களில் இதுபற்றிக்
      கல்வித்துறை கவலைப்படுவதுமில்லை. பாவம் குழந்தைகள்!

      நீக்கு
  6. வயிற்றெரிச்சல் அதிகமாகிறது.
    இது கல்வி திட்டமா?
    அல்லது கடன்கார திட்டமா ?
    இவர்கள் வீட்டில் யாரும் படித்து தேர்வெழுதி இருக்க மாட்டார்கள் போலிருக்கிறது. ம்ஹூம்.

    பதிலளிநீக்கு
  7. வணக்கம்
    ஐயா

    நல்ல கேள்வி கேட்டீர்கள் கல்வி இப்போது வியாபாரமாகிவிட்டது... இவர்களின் நினைவு மாணவர்கள் இயந்திரம் என்ற நினைவு நேர சூசி தயாரித்தவர்கள் இவைகளை பற்றி கவலைப்பட மாட்டார்கள்
    10ம் வகுப்பு இரண்டு வருடமா? கேட்கவே மனசு உறுத்தலாக உள்ளது... பகிர்வுக்கு நன்றி ஐயா த.ம4

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பத்தாம்வகுப்பு இரண்டுவருடம் கேள்விப்பட்டதில்லையா? அடடே!
      தமிழ்நாட்டு மெட்ரிக்பள்ளியில் படிக்கும் குழந்தைகளில் யாரிடம் கேட்டாலும் ஒப்புக்கொள்வார்களே? இது நாடறிந்த ரகசியம் ரூபன்!

      நீக்கு
  8. இது மட்டுமல்ல ஐயா
    பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வு ககாலை 10,00 மணிக்குத் துவங்குகிறது
    ஆனால் பத்தாம் வகுப்புத் தேர்வோ காலை 9.15 மணிக்குத் துவங்குகிறது
    இது ஏன் ஐயா
    புரியவேயில்லை,
    9.15 க்குத் தேர்வு என்றால், மாணவன் குறைந்தது 8.30 மணிக்கு எல்லாம் பள்ளிக்கு வந்தாக வேண்டும். நீண்ட தொலைவில் இருந்து வருகிறவர்கள், விடியற்காலையிலேயே வீட்டில் இருந்து கிளம்பியாக வேண்டும். ஆகவே தேர்வு அன்று காலை அவர்கள் அப்பாடத்தினைப் படிப்பதற்கு அவர்களுக்கு நேரமே இல்லையே
    பாவம் மாணவர்கள்
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதுபற்றி மாணவர் அமைப்புகளும் ஆசிரியர் அமைப்புகளும் கடந்த ஆண்டே கத்திக் கத்தி ஓய்ந்து போனார்கள் அய்யா... கேளாக் காதினரை என்ன செய்வது? சிறியவர்களுக்குத் தான் மேலும் சிரமம் தருகிறார்கள் தங்கள் கருத்திற்கும் வாக்கிற்கும் நன்றிகள் அய்யா

      நீக்கு
  9. பயனுள்ள பதிவு
    தமிழ் மணத்தில் நுளைத்திட அந்த 7 நாட்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கொலைகாரரே! (அடிக்க வராதீர்கள் நண்பரே! தங்கள் பெயரைத் தமிழில் சொல்லிப் பார்த்தேன்) ரெட்டை நன்றி.

      நீக்கு
  10. “தமிழில் அனைத்தையும் தரும்வரை இந்த அடிமைத்தனம் நீடிக்கத்தான் செய்யும்”த.ம.1

    பதிலளிநீக்கு
  11. சார்

    பத்தாப்பு பஸ்ட் இயர் , பத்தாப்பு செகண்ட் இயர் என்ற பதங்களை நான் ரசித்தேன். பல மெட்ரிக் பள்ளிகளில் இதுதான் நிலை . ஆனால் பத்தாப்பு மார்க்கை வைத்து என்ன செய்யப் போகிறார்கள் மாணவர்களும் பெற்றோர்களும்!?

    பதிலளிநீக்கு
  12. ம்ம்ம் நம் குழந்தைகளின் 10, 12 ஐப் பற்றி என்ன சொல்ல என்று தெரியவில்லை. மிக அருமையான பதிவு கேள்விகள் மாணவச் செல்வங்களின் கோணத்தில்!

    மிக மிக நியாயமான பதிவு ஐயா!

    பதிலளிநீக்கு
  13. வணக்கம் ஐயா
    கால அட்டவணையைப் பார்த்ததும் எனக்கும் எழுந்த கேள்வி யாரு தயாரித்த அட்டவணை என்பது தான். மாணவர்களின் நலனில் தற்போதைய அதிகாரிகள் கவனம் செலுத்தவில்லையோ எனும் ஐயத்தைத் தான் இச்சம்பவம் எடுத்துக்காட்டுகிறது. சரியான கட்டுரை மூலம் சாடியிருக்கிறீர்கள். தங்களுக்கு எனது நன்றிகள். சம்பந்தப்பட்டவர்கள் செவி சாய்க்கும் வரை நாம் கதவைத் தட்டிக் கொண்டே இருப்போம். ஒரு நாள் கதவு திறக்கும்.

    பதிலளிநீக்கு
  14. சரியாச் சொன்னீங்க அண்ணா..கேட்க வேண்டியவர் கேட்டால்தானே..செயல்பட வேண்டியவர் செயல்பட்டால் தானே? சிந்திக்க வேண்டியவர் சிந்தித்தால்தானே?

    த.ம.10

    பதிலளிநீக்கு