கைக்குறிச்சி பாரதி கல்லூரியில் கவிதைப் பயிலரங்கம்

படம், செய்திக்கு நன்றி- நக்கீரன் இணைய இதழ்

பயிலரங்கில் கலந்துகொண்ட மாணவியர் முதலிரு படங்களில் உள்ளனர் அடுத்தடுத்து..
மேடையில் -இடமிருந்து வலமாக- கைக்குறிச்சி பாரதி கலை-அறிவியல் மகளிர் கலலூரி முதல்வர் ஜானகிசுவாமிநாதன், பேரா.மு.பா., பரிசுபெறும் மாணவியர்,
கவிஞர் ரமா.ராமநாதன், கல்லூரித் தலைவர் குரு.தனசேகரன், நா.முத்துநிலவன்,
கவிஞர் சு.மதியழகன்,தமுஎச கிளைச்செயலர் கவிஞர் செ.சுவாதி ஆகியோர் உள்ளனர்
---------------------------------------------------------------------------------------------------------------------
புதுக்கோட்டை கைக்குறிச்சி ஸ்ரீ பாரதி கலை மற்றும் அறிவியல் மகளிர்  கல்லூரியில் தமுஎகச திருக்கோகர்ணம் கிளை ஒருநாள் கவிதைப் பயிலரங்கம் நடத்தியது.


விழாவிற்கு கிளைத்தலைவர் கவிஞர் இளங்கோ  தலைமை தாங்கினார்.ஸ்ரீபாரதி கல்வி நிறுவனங்களின் தலைவர் குரு.தனசேகரன் செயலர் வீ..வைத்தியநாதன,முதல்வர் ஜானகிசுவாமிநாதன் முன்னிலை வகித்தனர். பேராசிரியர் மு.பா.வாழ்த்துரை வழங்கினார்.

தொடக்கவுரையாற்றிய கவிஞர் தங்கம் மூர்த்தி புதுக்கவிதையின் தோற்றம் வளர்ச்சி இன்றைய போக்குகள் குறித்து பிரபலமான கவிஞர்களின் சுவையான கவிதைகளை எடுத்துக்காட்டி உரையாற்றினார்.
நிகழ்ச்சியில் கவிஞர் நா.முத்துநிலவன் கலந்து கொண்டு கவிதை எழுதித் தேர்வு பெற்ற  மாணவிகளுக்குப் புத்தகப் பரிசுகள் வழங்கியதுடன்  காலமும் கவிதையும் என்ற தலைப்பில்  பேசினார். அவர் பேசியதன் சுருக்கம்-

“குறந்தொகை, நற்றிணை, புறநானூறு எனும் தமிழின் பழந்தமிழ் இலக்கிய ஆசிரியப்பாக்களின் அடிகள், ஐந்து 5அடியில் இருந்து 40 அடிவரை போனது, அன்றைய தமிழ்ச்சமூகம் இனக்குழு, குடும்பம், சிற்றரசு, வேந்தர், மன்னர் என அரசும் மக்களும் அடைந்த மாற்றத்தைக் காட்டும். இடையில்  அரசுகள் மாறி-மாறியதும் மக்களிடையே எழுந்த வாழ்க்கைக் குழப்பங்களில் அமைதி ஏற்படுத்திட எழுந்த அறநூல்கள் –கட்டுப்பாடுகளைப் பற்றிச் சொல்ல, கட்டுப்பாடு மிக்க- வெண்பா வடிவில் வந்தன. அரசுகள்  தோன்றி ஒன்றை   வென்றும் விழுங்கியும் பேரரசுகள் உருவானதும் காவியங்கள் விருத்தத்தில் விரிவடைந்தன. இடையில் பக்தி இலக்கியங்கள் அரசுகளுக்கேற்ப இணைந்து இசையுடன் விரிந்து, பிந்திய சிற்றிலக்கியங்களின் ஊற்றாக அமைந்தன.

கவிதை அந்தந்த சமூகத்தின் –காலத்தின்- வடிவத்திற்கேற்ப மாறிவந்தது 13 முதல் 16ம் நூற்றண்டு வரை வெளிநாட்டவர் வருகை, நிலையான அரசுகள் இன்மையால் இலக்கிய வளர்ச்சி பெரிதாக இல்லை.
17ஆம் நூற்றாண்டின் பின் உலக அரசியல்மாற்றம், அறிவியல் புதுமைகளால் ஜனநாயகம் வந்ததின் வரவே புதுக்கவிதை. ஜனநாயக வளர்ச்சி உரைநடை, சிறுகதை, நாவல் என வளரக் காரணமானது.  பாடுபொருள்களும் இலக்கிய வடிவங்களும் மாறிவந்தன இவ்வாறு காலந்தோறும் சமூகம் மாறுந்தோறும் கவிதை தன் வடிவத்தை மாற்றிக்கொண்டே வந்திருக்கிறது என்றார்.

கவிஞர் ரமா.ராமநாதன்.. ஹைக்கூ கவிதை என்ற தலைப்பில் ஹைக்கூ எழுதியவரின் அனுபவமும் அதை வாசிக்கிறவரின்  அனுபவம் ஒத்துப் போக வேண்டும் எனகிற கட்டாயம் இல்லை. அவரவர் நினைவுகளுக்கேற்ப ஹைக்கூ தரும் அனுபவம் வேறுபடலாம.; ஜப்பானிய ஹைக்கூ இயற்கையும் பருவகாலங்களின் மாற்றம் பற்றி மட்டுமே இருக்கின்றன.  அதன் வடிவத்தை மட்டும் வாங்கிக்கொண்டு அதில்  இயற்கையும் சமூகக் காட்சிகளையும் சாட்டையடி விமர்சனங்களையும் படம் பிடித்தது தமிழ்தான். யோசிக்க யோசிக்க நீள்கிற தன்மை  கொண்ட கவிதை வடிவம் ஹைக்கூ என்றார். 

சு.மதியழகன் பெண்ணியக்கவிதை, பேராசிரியர் முனைவர் சு.மாதவன் மரபுக் கவிதை ஆகிய தலைப்புகளில் கருத்துரை வழங்கினார்கள்.
பாவலர் பொன்.கருப்பையா ரெ.வெள்ளைச்சாமி. காசாவயல் கண்ணன் பெண்களின் இன்றைய முன்னேற்றம் குறித்த பாடல்களை பாடினர்.
விழாவில் கவிஞர்கள் கவிவர்மன், ஆர்.நீலா, ஸ்டாலின் சரவணன், பீர்முகம்மது, சுரேஷ் மான்யா, மகா.சுந்தர், வடிவேல், ரியாஸ்கான், மற்றும் தமுஎச நண்பர்கள், பேராசிரியர்களுடன், சுமார் 200மாணவியர் கலந்து கொண்டனர் 

கவிதைப் பயிலரங்கின் விளைச்சலாக, 
மாணவியர் அங்கேயே எழுதும்விதமாக 
“பண்பாடும் பெண்பாடும்”,  
பழையசோறும் பாதாம் கீரும்”  
மூவர்ணமும் நால்வர்ணமும் என்று நா.முத்துநிலவன் தந்திருந்த தலைப்பில் 43பேர் கவிதை எழுதினர். 
இதில் தேர்வு பெற்ற 13மாணவிரைப் பாராட்டி 
நூல்கள் வழங்கப்பட்டன.

வரவேற்பு மற்றும் தொகுப்புரையைக் கிளைச் செயலர் கவிஞர் சுவாதி வழங்கினார்.  நிறைவாக, கவிஞர் சிவா மேகலைவன் நன்றிகூறினார்.

செய்தி,படம் வெளியீடு-நன்றி-நக்கீரன் இணையச் செய்தியிதழ்
 ---- http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=113879
---   மற்றும் தினமணி, தினத்தந்தி நாளிதழ்கள்
       திருச்சிப் பதிப்பு, நாள்-01-01-2014,
       தீக்கதிர் நாளிதழ்-மதுரை-02-01-2014
---------------------------------------------------------------------- 
--செய்தித் தொகுப்பு மற்றும் புகைப்படங்கள்-    இரா.பகத்சிங்
-----------------------------------------------

கவிதைப் பயிலரங்கில் தரப்பட்ட தலைப்புகளில் 
மாணவியர் எழுதிய சிறந்த கவிதைகள் சில –

“நான் மங்கையாகிப் பூத்து நின்றால் தீண்டல் என்கிறாய்,
என் உயிரையும் இழந்து வாரிசைத் தந்தால் தீண்டல் என்கிறாய்,
என்கடவுளே என் உயிரைப் பறித்தாலும் தீண்டல் என்கிறாய்! ஏ பண்பாடே!
             -மா.சுரேகா, கணினி அறிவியல் முதலாமாண்டு
-----------------------------
பண்பாட்டின் தலைவர்கள் போல் ஆண்களும்,
பண்பாட்டின் அடிமைகள் போல் பெண்களும்... இது ஏன்?
          --ரிஸ்வானா பேகம், கணினி அறிவியல் மூன்றாம் ஆண்டு
-----------------------------
பண்பாடு வளர்ந்ததாலோ என்னவோ..
மகளின் ஆடைகள் குறைந்து போன கவலையுடன் தாய்
          --அ.நஷதா பேகம், நுண்ணுயிரியல் முதலாமாண்டு.
-----------------------------
அடுக்கிய மேடையில்  பழமும் பாதாம் கீரும்
        அமர்ந்து உண்ணும் வேட்பாளன்,
உழைத்துப் பழைய சோறுண்ணும் வாக்காளரை
        உதைத்து உண்ணும் வேட்பாளன்
        --என்.சங்கீதா கணினி அறிவியல் முதலாமாண்டு
-----------------------------
உடலுக்குப் புத்துணர்வூட்டும் பழைய சோற்றை
தலையை நிமிர்த்திக்கொண்டு உண்டான் பழந்தமிழன்,
உடலை சீர்குலைக்கும் பாதாம்கீரை
தலைகுனிந்து (ஸ்ட்ராவில்) உறிஞ்சுகிறான் பழுதுபட்ட இன்றைய தமிழன்
         --மு.ரகிமா தஸ்னீம், நுண்ணுயிரியல் முதலாமாண்டு
-----------------------------
குனிந்த தலை நிமிர்ந்தால்
குலம் அழிகிறதாம்!
குலமகள் துணை பிரிந்தால்
குங்குமம் இல்லையாம்!
பெண்படும் பெரும்பாடுதான் பண்பாடோ?
பெண்ணை உயர்த்துவதுதான் பண்பாடு!
           --சு.சுந்தரவள்ளி, கணிதம் மூன்றாமாண்டு.
-----------------------------
பாட்டி சாப்பிட்டதோ பழைய சோறு,
அவள் வாழ்ந்த்தோ நூறாண்டு,
நாங்கள் சாப்பிடுவதோ பாதாம் கீர்,
வாழ்வதோ ஓரிரு ஆண்டு.
        --எஸ்.கார்த்திகா முதுகலை வணிகவியல் இரண்டாமாண்டு.
-----------------------------
பரிசு பெற்ற கவிதைகள் -

மூவர்ண வெறியோடு பாடுபட்ட
தியாகிகளை இழிவுபடுத்துகிறது 
நால்வர்ண வெறி 
        -- தபாஷூம் ஜோஹ்ரா. கணினி அறிவியல் மூன்றாம் ஆண்டு.
----------------------------
ஊற்றிய தண்ணீரில்
ஊறிய சோறும்,
சுழற்றிய எந்திரத்தில் 
ஊற்றிய பாலும்,
உண்டுபார் அதன் சுவையை-
அந்தச் சுவை நிற்குமா இந்தக் கீரில்?
தத்தளிக்கும் மக்களின்
பசிதீர்க்கும் பழைய சோறும்
நாவின் சுவைக்குப் பருகும் பாதாம் கீரும்
நித்த நித்தம் நடக்கும் இந்தப் பாரில்.
பசிதீருமோ இந்தப் பாதாம் கீரில்?
        --ச.ரீத்தா, கணினி அறிவியல் முதலாமாண்டு.
--------------------------------- 
அனைவரும் ஸ்ரீபாரதி கலைஅறிவியல் மகளிர் கல்லூரியில் பயிலும் 
மாணவச் செல்வங்கள், கைக்குறிச்சி, புதுக்கோட்டை மாவட்டம். 
--------------------------------- 
கூடுதல் நன்றி -
திருமதி ஜானகி சுவாமிநாதன் அவர்கள், 
கல்லூரி முதல்வர்.

திருமதி பத்மாவதி அவர்கள், 
தலைவர் - தமிழ் இலக்கியத் துறை,

மற்றும் பேராசிரியச் சகோதரிகள்.
ஸ்ரீபாரதி கலைஅறிவியல் மகளிர் கல்லூரி, 
கைக்குறிச்சி, புதுக்கோட்டை மாவட்டம்.
---------------------------------  

8 கருத்துகள்:

  1. அருமையான உரை... கவிதைகளும் அருமை... தொகுத்து வழங்கியமைக்கு நன்றி ஐயா... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    நமது பயிலரங்கம் எப்போது...?

    பதிலளிநீக்கு
  2. ஐயாவிற்கு வணக்கம்
    ஆஹா! மீண்டும் ஒரு கவிதைப் பயிலரங்கச் செய்தி மனதிற்கு மகிழ்வளிக்கிறது. பயிலரங்கத்தை நடத்திய, நடத்த உதவிய அனைத்து உள்ளங்களுக்கும் முதலில் நன்றிகள். பயிலரங்கத்திற்கானத் தலைப்பை எங்கிருந்து ஐயா தேர்ந்தெடுக்கிறீர்கள் தலைப்பே கவிதை எழுத தூண்டும். பயிலரங்கத்தில் கலந்து கவிதை வடித்த அனைத்து மாணவர்களுக்கும் பாராட்டுகள் ஏனைனில் கவிதைகள் அனைத்தும் அருமை. அற்புதமான பணியைத் தொடர்ந்து செய்து வரும் தங்களுக்கு எனது வணக்கங்களும் நன்றிகளும். தொடருங்கள் ஐயா. நன்றி.
    -------
    இது போன்ற நண்பர்கள் அனைவரும் கலந்து கொண்ட பயிலரங்கம் மற்றும் நிகழ்வுகளில் பார்வையாளராக வர எனக்கும் ஆசை. இனிவரும் காலங்களில் ஒரு தகவல் தெரியுங்கள் ஐயா எனும் வேண்டுகோளை அன்போடு வைக்கிறேன். நன்றீங்க் ஐயா.

    பதிலளிநீக்கு
  3. பயிலரங்க நிகழ்ச்சிகள் அருமை ஐயா நன்றி

    பதிலளிநீக்கு
  4. பாண்டியன் நான் மிஸ்செய்த முக்கியமான நிகழ்வு
    அடுத்த முறை மிஸ் பண்ணாமல் அடிப்பேன்

    பதிலளிநீக்கு

  5. வணக்கம்!

    புத்தாண்டு வாழ்த்துக்கள்

    பல்லாண்டு வாழ்க! படா்கின்ற புத்தாண்டை
    நல்லாண்டு வாழ்க நலஞ்சூடி! - வல்லதமிழ்ச்
    சொல்லாண்டு வாழ்க! சொந்தமென நம்மினத்தின்
    தொல்லாண்டு வாழ்க சுடா்ந்து!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    01.01.2014

    பதிலளிநீக்கு
  6. உங்கள் முயற்சிகளுக்கு பாராட்டுக்கள்.
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  7. உங்கள் வழிகாட்டுதலில் என் பணி தொடரும் அய்யா...

    பதிலளிநீக்கு
  8. அருமையான உரை...
    மாணவிகளின் கவிதைகள் அருமை...

    பதிலளிநீக்கு