குஞ்சானியின் டாட்டா!
சிறுகதை - நா.முத்துநிலவன்
சிறுகதை - நா.முத்துநிலவன்
“பஸ் கிளம்பிரிச்சு! நீ ஏறிக்க. குஞ்சானீ!
நான் சொன்னதெல்லாம் ஞாபகம் வச்சிக்க…ஙொம்மா
எதையாச்சும் சொல்லிக்கிட்டுத்தான் இருப்பா…தைரியமாப் போ…என்ன…நா வரட்டுமா?”
கடைக்காரத் தாத்தா கையை அசைத்து
விட்டுக் கிளம்பிவிட்டார். குஞ்சானியும் கையை ஆட்டிவிட்டுப் போனதும், முன்பொரு சமயம் ‘டாட்டா’ சொல்லப் போய் தனக்கு விழுந்த அடியை நினைத்துக் கொண்டான் குஞ்சானி.
முதுகு ஒருமுறை சிலிர்த்து அடங்கியது.
பஸ்ஸில் இரைச்சல் கலவையாயிருந்தது. ‘எத்தனை பஸ் ஓடினாலும் திருவையாற்றிலிருந்து
தஞ்சாவூருக்கு மட்டும் எப்பவும் கூட்டம் நெருக்கியச்சுக்கிட்டுத்தானிருக்கும்.’
சட்டைப் பையைத் தடவிப் பார்த்துக்
கொண்டான். சின்ன ஓட்டைதான். கடைக்காரத் தாத்தா குடுத்திருந்த ரெண்டு ரூபாய் நோட்டு
கையில் நெருடியது. கொஞ்சம் பழைய நோட்டுத்தான். கசங்கி வேறு இருந்தது. ‘வேறே நோட்டுக் குடுன்னு கண்டக்டர் கேட்டால்…??’ எறக்கி விட்டுடுவானோ?’
தெரிந்தவர்கள் யாராவது
இருக்கிறார்களா என்று பார்த்தான். யாரும் தெரியவில்லை. நாலு முழ வேட்டியின்
முனையில் உருட்டுத் தையலைத் தாண்டிக் கொஞ்சம் கிழிந்திருந்தது. வேட்டி முனையைக்
காலுக்குள் இடுக்கிக் கொண்டான்.
பஸ் நடுக்கடையைத் தாண்டிக்
கொண்டிருந்தது.
இந்த ஊர்ப் பக்கத்தில்தான் இவன்
பிறந்தானாம். அம்மா சொல்லும். இவன் பிறந்த வருசமே அப்பன் கஞ்சி ஊத்தாது என்று
ஆனதும் இவனைத் தூக்கிக் கொண்டு அம்மா திருவையாற்றுக்கே வந்துவிட்டதாம்.
ஐயாறப்பன் கோவில் தெற்கு வாசலருகில்
தான் இவர்கள் இருந்தார்கள். சேர்ந்த மாதிரி மூணு வீடு. வீதியிலிருந்து செங்குத்தாய்ப்
பிரிந்து அடுத்தடுத்து இருந்தது. முகப்பில் வாசலுக்குக் கொஞ்சம் தள்ளிப் பதினைந்து
ரூபாயில் இவர்களின் குச்சு வீடு முன்புறம் கேட்டருகில் கடைக்காரத் தாத்தாவின் பெட்டிக் கடை.
இவன் எப்பவும் தாத்தாவுடன் தான்
நேரத்தைக் கழிப்பான். அம்மா நாலைந்து வீடுகளில் வேலையை முடித்துக் கொண்டு அவர்கள்
கொடுக்கும் சாப்பாட்டில் இவனுக்கும் கொஞ்சம் எடுத்துக் கொண்டு சாய்ந்தரம் ஏழு ஏழரை மணிக்குத்தான் வரும். இவன் அதுவரையும் தாத்தாவுடன் தான்
இருப்பான்.
ஒன்னாம் வகுப்பில் இவன் சேர்ந்த
புதிதில் பள்ளிக்கூடத்தி லிருந்து வந்ததும் சிலேட்டுப் பலகையைக் கடாசிவிட்டுக்
கோவில் தெற்குவாசல் விளக்குக் கம்பத்தருகில் விளையாடும் பயல்களைப் போய்ப்
பார்த்துக் கொண்டு நிற்பான். அந்தப் பயல்கள் இவனைச் சேர்ந்துக் கொள்வ தில்லை.
இவனைத் தூரத்தில் கண்டதுமே குசுகுசுவென்று பேசிக் கொண்டு ‘விளையாட்டை நிறுத்திவிடுவார்கள். இவனும்
கொஞ்ச நேரம் பார்த்து விட்டுப் பழிப்புக் காட்டிக் கொண்டே திரும்பி விடுவான். ‘வாச்சாங்கோலிப் பயலுக… பெரிய்ய இது பண்ணிக்கிறாங்கெ…’ இவன் போவதைப் பார்த்ததும் மூணாம் வகுப்பு கிச்சாமிப் பயல் இவனுக்குக்
கேட்பது போல “டேய்? குஞ்சானியோட அப்பா ரொம்ப
கெட்டவராம்டா… ஜெயிலுக்கெல்லாம் போனவராம்…” என்று சொல்லிக் கொண்டிருப்பான.
இவனும் காதில் வாங்காதது மாதிரி வந்து தாத்தாவுடன் உட்கார்ந்து கொள்வான்.
அப்பன் எப்போதாவதுதான் வீட்டுக்கு
வரும். அது வந்துவிட்டுப்போன கொஞ்ச நேரத்துக்கெல்லாம் குருக்கள் வீட்டிலிருந்து
குஞ்சானிக்குச் சோறு கொண்டு வந்திருந்த தூக்கு வாளியைக் காணோமென்று அம்மா கத்திக்
கொண்டிருக்கும்.
“யார் சார் திருவையாத்துல ஏறினது இன்னம் ஒரு டிக்கெட் வாங்கல…” கண்டக்டர் சத்தம் அருகில் வந்ததும்தான் இவனுக்கு உறைத்தது. “சார் இங்க தஞ்சாவூர் ஒண்ணு” அவசரமாக நோட்டை எடுத்து நீட்டினான்.
“என்னய்யா நீ! எவ்வளவு நேரமாக்
கத்திட்டிருக்கேன்! சில்லறையா இல்லையா…?” வாங்கிய நோட்டை வெளிச்சத்தில்
பிடித்துப் பார்த்துவிட்டு இவனை முறைத்துக் கொண்டே டிக்கெட்டையும் மீதிச்
சில்லறையையும் திணித்துவிட்டுக் கூட்டத்தில் நகர்ந்தார் கண்டக்டர்.
“நல்லவேளை வேறே நோட்டுக் கேக்கல…”
டிக்கெட்டோடு சில்லறையை வாங்கி கவனமாக அந்தப் பக்கம் திரும்பிக்
கொண்டு வேட்டியைப் பிரித்து அண்ட்ராயரில் போட்டுக் கொண்டான் குஞ்சானி.
அப்போதுதான் பஸ்ஸில் கொஞ்ச தூரம்
தள்ளி ஐயர் வீட்டுப் பாட்டியம்மா நிற்பதைப் பார்த்தான். அவர்கள் இப்போது கண்டியூருக்கே
வந்துவிட்டார்களாம். குடத்தையும் ஒரு பெரிய பையையும் காலில் வைத்து இடுக்கிக்
கொண்டு சங்கடத்துடன் கம்பியைப் பிடித்தவாறு நின்றிருந்தது. பாட்டி ரொம்ப மடி,
ஆச்சாரமெல்லாம் பாக்கும்! பஸ்ஸில் அது முடியாதில்ல...
திருவையாற்றுக்கு வந்த புதிதில்
இவர்கள் வீட்டில்தான் அம்மா பத்துப் பாத்திரம் தேய்த்துக் கொண்டிருந்தது. நோஞ்சலாகவும் அழகாகவும்
இருந்த இவனை இந்தப் பாட்டிதான் ‘குஞ்சானி குஞ்சானி’ என்று கூப்பிட்டுப் பழக்கிவிட்டது.
அப்பனை நினைத்து பயந்து கொண்டான். ‘என்ன சொல்வாரோ?’
அப்பனோடு பேசிப் பத்துப் பன்னண்டு
வருசம் இருக்குமா?’
அப்போதெல்லாம் இவன். “நான் பள்ளிக்கூடம் போயிட்டு வர்றேன்
தாத்தாவ்” என்று கடைக்காரத் தாத்தாவிடம்தான் சொல்லிக் கொண்டு போவான். ஒருநாள்
அவர் ‘டாட்டா’னனு சொல்லணும்டா பயலே” என்று கூறி வைத்தார். சாயந்தரம் வந்ததும் ‘டாட்டா’ சொல்வது பற்றித் தொணத்தி எடுத்துவிட்டான். அவரும் வியாபாரத்தைப்
பார்த்துக்;கொண்டே வெளியே போகும் போது எப்படிக் கையை ஆட்டி ‘டாட்டா’ சொல்ல வேண்டுமென்று விளக்கமாகச் சொன்னார்.
அடுத்த நாள் விடியற்காலையில் அம்மா
கிளம்பும்போது ஞாபகமாக எழுந்து ‘டாட்டாம்மோவ்’ என்றான். அம்மாவுக்கு ரொம்பப் பெருமை. “அடி எங்கண்ணு டாட்டாச் ;சொல்லுதே எம்புள்ளே! எப்படா
முளிச்சே!” என்று கேட்டுவிட்டு அந்த அஞ்சு மணிக்கே இவன் எழுந்து கொண்டதற்கும் சேர்த்துப் பெருமைப்
பட்டுக் கொண்டு குஞ்சானிக்கு முகத்தைக் கழுவிவிட்டு நீச்சத் தண்ணியை ஒரு குவளை நெறைய
எடுத்துக் கொடுத்துவிட்டு இவன் டாட்டா சொன்னதைப் பெருமையோடு நினைத்து நினைத்துப் பார்த்துக்
கொண்டே போனது.
ரொம்ப நாளைக்கப்புறம் அன்றுதான்
குஞ்சானியின் அப்பன் காலையிலேயே வந்திருந்தது. அப்பனைக் கண்டதும் இவனுக்கு ரொம்ப
சந்தோஷம். கணக்குப் புஸ்தகம் வாங்காததுக்காகக் கையை நீட்டச் சொல்லித் தருமு
டீச்சர் இவனைப் பிரம்பால் அடித்ததையும் பிறகு ரெண்டாம் வாய்ப்பாட்டைச் சீனிப் பயல் மாதிரி
‘உம்’ கொட்டி
‘உம்’ கொட்டி நிறுத்தாமல் கடகடவென்று சொன்னதுக்கு
‘வெரிகுட்’ சொல்லிவிட்டு அடுத்த நாள் ஒரு பழைய புஸ்தகத்தை ரெண்டாம் வகுப்பு கோவிந்தன்ட்டேருந்து
வாங்கிக் குடுத்ததையும் அதுக்கு இவன் காசு குடுக்க, வேண்டாம் என்று சொல்லி
விட்டதையும் சொன்னான்.
குஞ்சானியின் அப்பன் - செல்லத்துரை –எல்லாத்துக்கும்
‘உம்’ கொட்டியதோடு சரி இவன் பள்ளிக்கூடம் போகும்போது அப்பனுக்கு டாட்டா சொல்லிவிட்டுப்
போனான். அதுக்கும் அப்பன் ‘உம்… உம்… என்றுதான் சொன்னது.
சாயந்தரம் வந்து பார்த்தால் நடு வீட்டில் புழக்கம் தெரிந்தது. ‘வீட்டுக்காரவுக வந்திருக்காக போல’. வீட்டுக்காரருக்குத் திருவையாற்றிலேயே
எட்டு பத்து வீடு இருக்குதாம். மாசம் ஒரு
தரம் வந்து இருந்து எல்லாரிடமும் வாடகை வாங்கிக் கொண்டு போவார். அவுகவீட்டுப்
பிள்ளைக திருச்சியில கான்வென்ட்டுல படிக்குதுகளாம். இப்ப அதுகளுக்கு லீவுன்னு
புள்ளைகளையும் கூட்டிக் கொண்டு வந்திருந்தார்.
கொஞ்ச நேரம் கழித்து அப்பன்
திரும்பவும் வீட்டுக்கு வந்தது ஆச்சரியமாயிருந்தது. நடு வீட்டு வாசலில் நாலைந்து
சோடிச் செருப்புகளையும் ரேடியோச் சத்தத்தையும் கவனித்துவிட்டு உள்ளே வந்து மெதுவாகக் குஞ்சானியிடம்
விசாரித்ததும்,
“வீட்டுக்காரவுக வந்திருக்காகப் போவ்...” என்றான்.
சட்டென்று குஞ்சானியின் வாயைப்
பொத்திவிட்டுக் கழற்றிய சட்டையை உடனே மாட்டிக் கொண்டடு அப்பன் வெளியே கிளம்பியதும் ‘எங்கப்பா போறே’ என்று கேட்க வந்த குஞ்சானி அதைக் கேட்காமலேயே ‘டாட்டாப்போவ்’ என்றான். அதற்குள் அப்பன் கேட்டைத் தாண்டிவிட்டதைப் பார்த்து வாசல் படலைத் திறந்து கொண்டு ‘அப்பாவ் டாட்டா’ என்று கத்தினான்.
‘நடு வீட்டில் வந்திருக்கும் கான்வெண்டுப்
பிள்ளைகளுக்குக் காதில் விழுந்திருக்காதோ’ என்ற சந்தேகம் வந்தது. அப்பனும்
ஒண்ணும் சொல்லவில்லையே! ரெண்டு மூணு வீட்டுக்கும் கேட்கிறாற்போல் நடு வாசலில்
நின்று கொண்டு “அப்பா டாட்டாப்போவ்” என்று மீண்டும் சத்தம் போட்டுக் கத்தினான்.
அதற்குள் வீட்டுக்காரரே வெளியே
வந்து அப்பனைப் பேர்சொல்லிக் கூப்பிட்டு நிறுத்திவிட்டார்.
அந்தப் புள்ளைகளும் எட்டி வெளியே பார்த்தன.
இப்போதுதான் குஞ்சானிக்குத்
திருப்தியாயிருந்தது!
ஆனால் வீட்டுக்காரரிடம் பேசிவிட்டு உள்ளே
திரும்பிய அப்பன்தான் இவனை உள்ளே இழுத்துப் படலைச் சாத்திக் கொண்டு “என்னடா
டாட்டா… மோரக் கட்ட…” என்றவாறே விறகுக் குச்சியை
எடுத்து.....
குஞ்சானி அன்று ராப்ப்பூராத்
தேம்பித் தேம்பி அழுது கொண்டேயிருந்தான் முதுகிலும் பின்னந்தொடையிலும் வரிவரியாகச்
சிவந்திருந்தது. கன்னத்தில் ஐந்து விரலும் பதிந்து கிடந்தது. அம்மா அழுது கொண்டே
அப்பனைத் திட்டிக் கொண்டு கிடந்தது.
“துப்புக் கெட்டவங் கையை ஒடிச்சி அடுப்புல
வைக்க….. புள்ளக்கி என்ன தெரியும்…? வாடகை குடுக்கப் பயந்துகிட்டு இவுக
வீட்டுகாரவுகளைப் பாக்காதது மாதிரி ஓடுவாகன்னு புள்ளைக்குத் தெரியுமா…? இது ‘டாட்டா’ சொன்னதுலதான் இவுகளைக் கண்டுக்கிட்டாகளாம்! அதுக்குன்னு புள்ளயைப்
போட்டு இந்த அடியா அடிப்பான் ஒரு மனுசன்… பெத்த கடனுக்கு ஒரு பிஸ்கோத்தாவது
வாங்கியாந்து குடுத்திருப்பியா நீ? இப்ப அடிக்க வந்துட்ட. எங்கிட்டோ
தஞ்சாவூர்ல பஸ் ஸ்டாண்டுல சும்மாத் திரிவே இல்லையினா செயிலுக்குப் போவே… ஒனக்கு என்னா தெரியும் எம்புள்ளையைப் பத்தி…” என்று எப்பவோ வெளியே போய்விட்ட செல்லத்துரையை மனசார எதுக்க
நிறுத்தித் தனக்குத்தானே வழக்காடிக் கொண்டாள் பொட்டு.
கரந்தட்டாங்குடியை நெருங்கிவிட்டது.
பஸ்.
இவன் பக்கமாக வந்து இறங்கப் போன
ஐயர்வீட்டுப் பாட்டியம்மா “டே அம்பீ! இந்தக் குடத்தைக் கொஞ்சம் எறக்கிக்
குடுத்துடேன்” என்றவள் இவன் முகத்தை நிமிர்ந்து பார்த்துவிட்டு “அட! குஞ்சானியோன்னோ நீ? நன்னா ருக்கியோடாப்பா?’ இதைச் சித்த புடி” என்றது. குடத்தை எடுத்துக்
கொடுத்துவிட்டு மீண்டும் ஏறிக் கொண்டான்.
இந்தப் பாட்டிதான் இவன் அடி
வாங்கியதற்கு அடுத்த வருசம் குஞ்சானியின் அம்மாவிடம் கேட்டது. “ஏண்டீ! பொட்டூ! ஒன் ஆம்படையான் தஞ்சாவூர்ல
பெரிய்ய சண்டியராய்ட்டானாமே! ஏதோ எம்.எல்.ஏ. வையே சட்டையைப் புடிச்சி… ரொம்ப வெவகாரமாயிடுத்தாமே!”
“ஆமா! அந்தத் துப்புக் கெட்டதைப் பத்தி
எங்கிட்டக் கேளுங்க! அதுக்குக் கட்டுனவள ஞாபகமிருக்கா பெத்த புள்ளையத்தான் ஞாபகமிருக்கா… எவளோ ஒரு கூத்துக்காரியோடயில்ல இப்ப சவுகாசமாம்! எந்தலையில போட்ட
எளுத்து இதையெல்லாம் கேட்டுக்கிட்டு இன்னமும் உசிரோட இருக்கேனே…என்னைச் சொல்லணும்” பாத்திரத்தை தேய்த்துக் கொண்டே சொல்லும் அம்மாவின் குரல் கிணற்றுப்
பக்கமாய்த் தேயந்து கொண்டே போகும்.
பாவம் அம்மா! இவன் உடம்பிலேயே தன் உயிரையும் வைத்துக் கொண்டு
பாத்திரங்களோடு தேய்ந்து கொண்டே போனது.
அப்பனைப் பற்றிக் கடைக்காரத்
தாத்தா தான் அவ்வப்போது குஞ்சானியிடம் சொல்வார்.
எதிர்க் கட்சி எம்.எல்.ஏ.வுடனான
தகராறில் செல்லத்துரை பிரபலமாகி மறுபடியும் ஜெயிலுக்குப் போனானாம். இந்த முறை
ஆளுங் கட்சியின் பெரிய வீரனாக பெயிலில் வந்தான். அப்புறம் இடைத் தேர்தல் எதிர்க் கட்சிக் கூட்டங்களில் இவன்
தலைமையில்தான் சோடா பாட்டில் சைக்கிள் செயின் பறக்குமாம். பத்து இருபது பேர் ஆஸ்பத்திரிக்குப் போவார்கள். நாலைந்து பேர் போலீஸ்
ஸ்டேஷனுக்குப் போவார்கள்.
சாராயக் கடை ஏஜெண்டுகளும் காண்ட்ராக்டர்களும் கட்சிக் கரை
வேட்டிகளுமாய்ப் புதிதாகக் கட்டிய வீடு தஞ்சையில் பிரபலமானது.
அந்தப் பக்கம் வரும்போது ‘துரையண்ணனைப் பார்க்க மந்திரிகளும்
வருவார்களாம். ரெண்டு மூணு டாக்சி லாரிகளோடு சினிமாத் தியேட்டர்கூட இருக்குதாம்.
ஒவ்வொரு சமயம் தாத்தா இதையெல்லாம்
சொல்லும்போது இவனுக்கு ஆச்சரியமாயிருக்கும். திருவையாற்றிலேயே ஒரு சமயம் நடந்தக்
கூட்டத்தில் பெரிய மனிதர்கள் மத்தியில் அப்பனைப் பார்க்கும்போது ஆசையாகவும்
பயமாகவும் இருக்கும். எட்டியிருந்து பார்த்துவிட்டுப் போய்விடுவான்.
அம்மாவுக்குப் போன வருசம் ஒரு
காய்ச்சல் வந்தது.
சத்திரம் ஆஸ்பத்திரியில் மருந்து
வாங்கிச் சாப்பிட்டும் தீரவில்லை. வேலைக்குப் போக முடியறதில்லேன்னுதான்
அம்மாவுக்கு ரொம்ப வருத்தம்.
அந்த மாமாங்கத்து மிசின்
ரிப்பேராகிவிட்டது.
திருவையாற்றுக்கே உரிய யானைக்கால்
வியாதி.
தத்தித் தப்பிளிச்சு இவன் படித்த
படிப்புக்கோ பழக்கத்துக்கோ யாரும் வேலை
தரவில்லை. தியாகராசர் சமாதித் துறையில் காவிரியைப் பார்த்துக் கொண்டே எவ்வளவு
நாள்தான் உட்கார்ந்திருக்க முடியும்?
கடைக்காரத் தாத்தாதான்
எல்லாத்தையும் எடுத்துச் சொல்லி அம்மாவுக்குத் தெரியாமல் குஞ்சானியை பஸ் ஏற்றி
அனுப்பி வைத்தார்.
‘மந்திரிக்கெல்லாம் தெரிஞ்சவரு உனக்கு ஒரு
வேலைக்கு ஏற்பாடு பண்ண மாட்டாரா?’
தஞ்சாவூர் பஸ் ஸ்டாண்டில்
இறங்கினான் குஞ்சானி. அப்பன் வீட்டை விசாரித்துக் கொண்டு வருவது ஒன்றும்
சிரமமாயில்லை. ஆனால் இவன் “செல்லத்துரை அவுங்க வீடு எங்கிட்டு
இருக்குதுங்க?” என்று கேட்டதும் இவனை ஒரு
மாதிரியாகப் பார்த்துக்கொண்டே “துரையண்ணன்
வீடுதானே?” என்ற கேள்வியோடுதான் வழி சொன்னார்கள்.
வீடு பெரிதாகத்தான் இருந்தது.
சுற்றிலும் தென்னை மரம்,பூச்செடிகள் ஏழெட்டுப்பேர் வெளியிலும் ரெண்டு
மூணு பேர் வீட்டு வராந்தாவிலும் நிற்பது தூரத்திலேயே தெரிந்தது. காம்பவுண்டுக்குள்
வராந்தாவை ஓட்டி ரெண்டு கார் நின்று கொண்டிருந்தது.
தயங்கித் தயங்கி வீட்டை
நெருங்கினான் குஞ்சானி.
‘அப்பா இருப்பாரோ இல்லியோ? இருந்தாலும் என்ன சொல்லுவாரோ? அவரைப் பார்த்துப் பேசிப் பத்துப் பன்னண்டு
வருசமாச்சே…!ஹீம்!”
‘ஒரு வேலைக்காக அப்பனைப் பாக்கப் போவது
தெரிந்தால் செத்துப்போன அம்மா என்ன சொல்லுமோ’ என்ற குழப்பங்கள் அவனை மேலும் சங்கபட்படுத்தின. ‘அட
துப்புக் கெட்டவனே!’ என மனசுக்குள் வந்து திட்டியது
அம்மா.
வேட்டி அண்ட்ராயரில் மிச்சக்காசு
பத்திரமாக இருக்கிறதா என்று தொட்டுப் பாத்துக் கொண்டாள். ‘காசு பத்தலயின்னா மேலத் தெரு
மதிகிட்டத்தான் போய்க் கேக்கணும்… தருவான்.’
வராந்தா பெஞ்சியில்
உட்கார்ந்திருந்தவர்கள் எழுந்தார்கள். வீட்டுக்குள்ளேயிருந்து இரண்டு பேர்
வந்தார்கள். படியிறங்கிக் கார்க் கதவைத் திறந்து ஒரு காலை காருக்குள் வைத்துக்கொண்டு
திரும்பிப் பேசியவர் முகத்தைக் குஞ்சானி கவனித்தான். இதே வீட்டுக் காம்பவுண்டுச்
சுவர் போஸ்டரில் இவர் முகம் இருக்கிறதே!
கூடப் பேசிக் கொண்டிருந்தவர்தான்
அப்பா! படபடத்துப் போனான் குஞ்சானி. தொப்பையும் முகமெல்லாம் பிதுங்கிய சதையுமாய்
உருவமே மாறியிருந்தது. கண்ணுக்கருகே அந்தப் பழைய தழும்புதான் அப்படியே இருந்தது.
கார் கிளம்பியதும்
உள்ளேயிருந்தவருக்கு ‘டாட்டா’ காட்டியது அப்பன்! இவனுக்குத் திக்கென்றது. இவனையும் எல்லோரோடும்
பார்த்துச் சிரித்துக் கொண்டே துரையண்ணன் உள்ளே போனதும். அதுவரை வெளியே நின்றிருந்த
கூட்டம் வராந்தாவுக்குப் போக முனைந்தது.
குஞ்சானியோடு இன்னொரு அழுக்கு
வேட்டிக்காரனையும் வெளியே நிறுத்திவிட்டான் வாசலில் நின்றிருந்தவன்.
‘ப்ச்! முனையில் கிழிந்திருந்த வேட்டித்
தலைப்பையாவது மாத்திக் கட்டிக்கிட்டு வந்திருக்கலாம்…’
“அண்ணே! நான் அய்யாவைப் பாக்கணுமுன்னே
மன்னார் குடியிலேர்ந்து வாரேன்…” அந்த அழுக்கு வேட்டிக்காரன் தொடங்கியதுமே
வாசல்காரன் இவனைப் பார்த்தான். அலட்சியப் பார்வை.
குஞ்சானி அவனிடம் “நானும் அய்யாவை… வந்து… துரையண்ணனை… இல்ல… வந்து…” வார்த்தை தட்டித் தடுமாறி நின்று போனது.
அப்புறம் அந்த மன்னார்குடிக்காரனும்
உள்ளே போய் வந்த பிறகு ரெண்டு மூணு பேரோடு பேசிக் கொண்டே வெளியே வந்து காரில் ஏறிய
துரையண்ணன் கதவை அறைந்து சாத்திக் கொள்ளத்
தூசியைக் கிளப்பி விட்டுக் கார் கிளம்பியது.
நின்றிருந்தவர்களுக்குக் காரிலிருந்து
கை அசைந்து ‘டாட்டா’ காட்டியது. எட்டத்தில் தனித்து நின்ற இவன் கையும் தொங்கிய வண்ணமே
மெதுவாக அசைந்தது!
---------------------------------------------------
வெளிவந்த கல்கி இதழ் -10-08-1986
இந்த எனது முதல் சிறுகதைக்கு கல்கியில் இரண்டாம் பரிசு கிடைத்தது!! அந்தப் போட்டியில்
முதல் பரிசு பெற்றது யார் தெரியுமோ? இப்ப சாகித்திய அகாதெமி விருதுபெற்று பிரபலமாகிவிட்ட நம்ம
மேலாண்மை பொன்னுச்சாமி அவர்கள்தான்! அவர் தொடர்ந்து எழுதிக்கிட்டேஏஏஏஏஏ
இருக்கிறார். நான்? நாடுமுழுவதும் நாவால் நடந்துதிரிந்து“நாசமாய்“போனதாய் நெருக்கமான
நண்பர்கள் அவ்வப்போது அர்ச்சனை செய்வார்கள்! அதன் பிறகும் நான் எழுதிய மொத்தச்
சிறுகதையே 4தான். கல்கியில்
இரண்டு, குமுதத்தில் ஒன்று
சாவியில் ஒன்றாக வெளிவந்தது! என் சிறுகதைப்பேனாவைத் தொலைத்துவிட்டதாக காலஞ்சென்ற
கவிஞர் பாலா என்னைக் கடிந்துகொண்டது நினைவில் நிற்கிறது
------------------------------------------------------------------------------------------------------------------------
வாழ்த்துக்கள் அய்யா .கிராமத்துப் பிண்ணணியில் கதை நன்று..அடுத்தமுறை முதல் பரிசுபெறவும் வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குஅருமையான சிறுகதை ஐயா. தொடர்ந்து எழுதுங்கள்.
பதிலளிநீக்குநாடு முழுவதும் நாவால் நடந்து திரிந்தாலும், எழுதுகோலையும் ஊன்றி சிறிது நடக்க வேண்டும் என்பது எனது விருப்பமாகும் ஐயா.நன்றி
விவரம் தெரியாத பிள்ளையாக இருக்கிறானே குஞ்சானி!
பதிலளிநீக்குஅற்புதமான சிறுகதை
பதிலளிநீக்குபடிக்கையில் நிகழ்வுகள் காட்சிகளாய்
மனக் கண்ணில் விரிந்து கொண்டே போகிறது
பதிவாக்கி அறியத் தந்தமைக்கு
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
அருமையான சிறுகதை ஐயா...
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்...
முதல் சிறுகதையே இரண்டாவது பரிசு பெற்றதற்கு வாழ்த்துக்கள்! வாசிக்கும் போதே நிகழ்வுகளுடன் பயணிப்பது அற்புதமான சிறுகதைக்கு அடையாளம்... அதை இந்த கதையில் உணர முடிந்தது.
பதிலளிநீக்குகேட்பதை விட உணர்வதில் நிலைத்தன்மை நீடிக்கவே செய்கிறது.. நல்ல சிந்தனைகளை எழுத்தாக்கி வாசிக்க கொடுங்கள்... ! சிறுகதை பயணத்தை தொடருங்கள்... நன்றி!
நிகழ்ச்சிகளை அருமையாக காட்சியாக்கிய பர்சு பெற்ற சிறுகதைக்குப் பாராட்டுக்கள்..!
பதிலளிநீக்கு#அண்ணா எனது பழைய மாணவன் ஒருவனை சமிபத்தில் நான்
பதிலளிநீக்குபார்த்தபோது கவிதை ,இலக்கியம் என்று பேச்சு திரும்பியது .அவன்
நமக்கெல்லாம் முத்துநிலவன் பேச்சுதான் டீச்சர் .என்னம்மா பேசுவாருங்கரிங்க .இப்ப நீங்க அந்த ஊரு தானே.அவர் பேசி கேட்ருகிங்களா "என்றான் .நீங்க இப்டி சொல்றிங்க .
#கதை எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாய் இருக்கிறது .அருமையான பரிசு அண்ணா.மிக்க நன்றி
ஐயாவிற்கு வணக்கம்
பதிலளிநீக்குமிக அழகான கரு. கதையோட்டம் மிக அருமை ஐயா படிப்பவர்களையும் கூடவே பயணிக்க வைத்தது. குஞ்சாணி பெயரும் மனதோடு ஒட்டிக்கொண்டது. எழுதுகோல் கொண்டு நடக்க வேண்டும் என்பது எனது விருப்பமாக இருந்தாலும் நாடு முழுதும் நாவால் திரிந்தமையால் தான் உங்கள் பெயர் படிக்காத கிராமத்து உழைப்பாளி வரை குடிகொண்டுள்ளது என்பது மகிழ்ச்சியே. இருப்பினும் வருங்காலங்களில் எழுதுகோலுக்கு மையிட்டு இலக்கியத்தின் முழு நேர கதவைத் திறங்கள். என்னற்ற எண்ணத்திலுள்ள சிறுகதைகளுக்கு உயிர் கொடுங்கள்.. 1986 ல் எனக்கு ஒரு வயது. நானும் ஏதும் அறியாது வருவோர்க்கும் போவோர்க்கும் டாட்டா தான் காமித்துக் கொண்டிருந்திருப்பேன் என்பதைத் தங்கள் சிறுகதை சிந்திக்க வைத்தது மகிழ்ச்சி ஐயா. தொடருங்கள் உங்கள் தணியாத எழுத்து பயணத்தை. பகிர்வுக்கு நன்றி..
அன்பின் அய்யா,
பதிலளிநீக்குகுஞ்சானியும் கவர்ந்தான். டாட்டாவும் கவர்ந்தது.
நன்றி
அருமையான அற்புதமான சிறுகதை...
பதிலளிநீக்குதொடர்ந்து எழுதுங்கள் ஐயா....
குஞ்சானியின் டாட்டா மனதோடு ஒட்டிக்கொண்டது. அடுத்தமுறை முதல் பரிசுபெற வாழ்த்துக்கள்!!!
பதிலளிநீக்குஇப்போதும் காலம் கடந்துவிடவில்லை நண்பரே! மாதம் ஒரு சிறுகதை வீதம் எழுதுங்களேன்!
பதிலளிநீக்கு