“பாரதி படைப்பும்-வாழ்க்கையும்” வினாடி வினாப்போட்டி... அப்ப நீங்க ?

மூத்தவர்கள் வாழ்த்துங்கள், இளையவர்கள் கலந்துகொண்டு அசத்துங்கள்.. வாழ்த்துகள்.
கடந்த 49ஆண்டுகளாக, அரசுப்பள்ளியில் 10,12ஆம் வகுப்பில் முதல்மதிப்பெண் பெறும் மாணவர்களையும்-பயிற்றுவித்த ஆசிரியர்களையும், மாணவரின் பெற்றோருடன் மேடைக்கு அழைத்து, அவரவர் படம்பொறித்த கேடயங்களை வழங்கிப் பெருமைப் படுத்திவரும் ஓர் இலக்கிய-சமூக அமைப்பு புதுக்கோட்டையில் உள்ளது என்பதைத் தெரிவிப்பதில் எங்களுக்கு மிகவும் பெருமை. இந்த ஆண்டு அந்த மணிமன்றம்-மரகதவள்ளி அறக்கட்டளையின் பொன்விழா ஆண்டு!
அவர்தான் பாவலர்.பொன்.கருப்பையா அவர்கள். 
அவரது வலைப்பக்கம் - http://manimandrampudugai.blogspot.in/2013/12/132.html


பாவலர். பொன்.கருப்பையாபுதுக்கோட்டை நகராட்சி நடுநிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றி, ஓய்வு பெற்று 7ஆண்டுக்குப் பின்னரும் தனது சமூக-இலக்கியப் பணியைத் தொடர்ந்து வருபவர் நல்லாசிரியர் விருதுபெற்ற-தனித்தமிழ்ப் பாவலர்-இனியபாடலாசிரியர்-ஏற்றமிகு இசையமைப்பாளர்-கம்பீரப் பாடகர்-செந்தமிழ் நாடகாசிரியர்-சுமார்40நாடகங்களுக்கு மேல் மேடையேற்றிய முத்தமிழ் வித்தகர். இன்றும் சமரசமில்லாத பகுத்தறிவுப் பாவலர்.  இந்தத் தொடர்களில் எதுவும் மிகையிலலை என்பது அவரை அறிந்த புதுக்கோட்டை நண்பர்களுக்கு நன்றாகத் தெரியும்.

புதுக்கோட்டை மணிமன்றத்தின் பொன்விழா ஆண்டின் தொடக்கவிழா, வரும் தமிழ்ப்புத்தாண்டு -தை முதல்நாள்- புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் 50,000 மரக்கன்றுகள் நடப்போகும் தொடக்கமாகத் தொடங்குகிறது. அதன் முன்னோட்டமாகக் கடந்த 13-12-2013அன்று பாரதிவிழாத் தொடர்பான கல்லூரி மாணவர்க்கான போட்டிகள் புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் உள்ள ஆக்ஸ்போர்டு சமையற்கல்லூரியில் நடந்தன. ஆர்வமுடன் கலந்துகொண்ட 6கல்லூரிகளைச் சார்ந்த 54 மாணவியரில் வெற்றிபெற்றோருக்குப் பரிசுகளை வழங்கினார் எமது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தமிழறிஞர் முனைவர் நா.அருள்முருகன் அவர்கள். (படம்)


மாணவியர்க்குப் பரிசளிப்பவர் முதன்மைக்கல்வி அலுவலர் முனைவர் நா.அருள்முருகன், அருகில் பாவலர் பொன்.க., இப்பக்கம் ஆக்ஸ்போர்டு சமையல் கலலூரி தாளாளர் சுரேஷ்,  மற்றும் மணிமன்ற நிர்வாகியருடன் நானும் இருக்கிறேன்.

வழக்கமான கவிதை, இசைப் போட்டிகளுடன் புதுமையாக ஒரு போட்டி  “பாரதி படைப்புகளும்-வாழ்க்கையும் பற்றிய வினாடி வினாப்போட்டி”கேள்விகள் கீழே உள்ளன.  கேள்விகளைப் பார்த்து,  உங்களுக்குத் தெரிந்த விடைகளை மனதில் கொண்டு, 20க்கு எத்தனை மதிப்பெண் பெற்றீர்கள் என்பதை -உண்மையாகச் சொன்னால், பாரதியின் குயில் தோப்பில் பாதியை எழுதித் தரலாம் என்று இருக்கிறேன். 

சரி, அந்தப் போட்டி முடிந்துவிட்டது. 

நமது வலைப்பக்கத்தில் தொடர்வோமே?

சரி கேள்விகளுக்குப் போவோமா?  -  

மணிமன்றம் “பாரதி வரலாறும்-பல்சுவைப் பாடல்களும்“ – 
வினாடி வினாப் போட்டிக் கேள்விகள்.
1. கவிதைப்போட்டிக்காக எழுதி, பாரதியார் இரண்டாம் பரிசுபெற்ற பாடல் எது?
2. தாய் காலமானபோது பாரதியாரின் வயது என்ன?
3. 11வயதுச் சிறுவன் சுப்பையாவுக்கு பாரதி பட்டத்தை வழங்கியது யார்?
4. பாரதி “குயில்பாட்டு“ பாடக்காரணமான குயில்தோப்பு எங்குள்ளது?
5. பெரியமீசை முண்டாசுடன் கூடிய புகழ்பெற்ற பாரதி படம் யாருக்காக எடுத்தது?
6.  “வாழ்க நீ எம்மான்“ என்னும் புகழ்பெற்ற வாழ்த்தில் பாரதி யாரைப்பாடினார்?
7. பாரதி முதலிலும், கடைசியிலும் துணைஆசிரியராகப் பணியாற்றிய பத்திரிகை எது?
8. “அச்சம் தவிர்“ என்னும் பாரதி ஆத்திசூடியின் அடுத்த வரி என்ன?
9. பாரதி தன் ஞானகுருவாக ஏற்றுக்கொண்ட பெண்மணியின் பெயர் என்ன?
10. பாரதி மகாகவி அல்ல என்றவர் பிறகு மணிமண்டபம் திறந்துவைத்தார், அவர் யார்?
11. வைரமுத்து எழுதிய பாரதியார் வாழ்க்கை வரலாற்றுக் கவிதை நூல் எது?
12. “தையல் சொல் கேளேல்“ என்று ஒரு தையல் சொல்லியிருக்க பாரதிசொன்னதென்ன?
13. பாரதியின் புகழ்பெற்ற “அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்“ வரிக்கு அடுத்த வரிஎன்ன?
14 புதிய கோணங்கியில் “படிச்சவன் சூதும் வாதும் செய்தால்என்ன என்ன ஆவானாம்?
15 “தீ இனிது“ எனும் புகழ்பெற்ற தொடர் இடம்பெற்ற பாரதியின் கவிதைப்பகுதி எது?
16. ஆங்கிலக் கல்வி பற்றிய பாரதியின் புகழ்பெற்ற கவிதை வரிகளில் ஒரு வரி?
17.கவிச்சிங்கத்தை மிதித்துத் தள்ளிய யானை எந்தக் கோவிலைச் சேர்ந்தது?
18. சோதிடத்தைப் பற்றிய பாரதியின் கருத்தென்ன?
19. பாரதி எழுதி, உடனே விற்றுத் தீர்ந்த ஆங்கில நூல் எது?

20. பாரதி நடத்தியும் எழுதியும் வந்த பத்திரிகைகளில் எவையேனும் இரண்டு?

விடைகளுக்குத் தொடர்க 
( உண்மையின் பேர் தெய்வம் என்போம் - பாரதி)
------------------------------------------------------- 

விடைகள் –
1.       “செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன்வந்து பாயுது காதினிலே
2.       “என்னை ஈன்று எனக்கு ஐந்துபிராயத்தில் விண்ணெய்திய தாய்“
3.       எட்டயபுர மன்னரின் அவை (சமஸ்தான) புலவர்கள்
4.       புதுச்சேரி (முத்தியாலுப்பேட்டை)
5.       தம்து நண்பரும் சீடருமான பாரதிதாசனுக்காக எடுத்துக்கொண்டது (1920)
6.       “ வாழ்கநீ எம்மான்... ...வாழ்விக்க வந்த காந்தி மகாத்மா நீ வாழ்க!
7.       “சுதேச மித்திரன்“ (முதலில் 1904-1906 இறுதியில் மீண்டும் 1920)
8.       ஆண்மை தவறேல்.
9.       அன்னை நிவேதிதா தேவி (நிவேதிதை, விவேகானந்தரின் சீடர்)
10.     1948இல் சென்னை மாகாண (தமிழக) முதலமைச்சராக இருந்த ராஜாஜி.
11.    “கவிராஜன் கதை
12.    “தையலை உயர்வு செய்“
13.    “அதை ஆங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன், வெந்து தணிந்தது காடு
தழல்வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ..தத்தரிகிட தத்திரிகிட தித்தோம்
14.    “போவான் போவான் போவான் அய்யோன்னு போவான்“ என்றார் பாரதி.
15.    இன்றைய புதுக்கவிதையின் முன்னோடியான பாரதியின் வசனகவிதையில் வருகிறது.
16.    “நெல்லையூர் சென்று அவ்வூணர் கலைத்திறன் நேருமாறு எனை எந்தை போக்கினன், செலவு தந்தைக்கோர் ஆயிரம்சென்றது தீதெனக்குப் பல்லாயிரம் சேர்ந்த்து நலமோர் எள்துணையும் கண்டிலேன் இதை நாற்பதாயிரம் கோவிலில் சொல்லுவேன்"
      17..சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் யானை.
      18. “சோதிடம் தனை இகழ்
      19. THE  FOX  WITH  THE  GOLDEN  TAIL 
      20. சுதேசமித்திரன், இந்தியா, பாலபாரதி, தினசரி, சூர்யோதயம், தர்மம், கர்மயோகி...
       --------------------------------------------------
மூத்தவர்கள் பார்த்து வாழ்த்துங்கள், 
இளையவர்கள் கலந்துகொண்டு 
பெற்ற மதிப்பெண்ணைப் பின்னூட்டத்தில் இடுங்கள்... நன்றி.

14 கருத்துகள்:

 1. வணக்கம் ஐயா
  பாவலர் பொன்.கருப்பையா அவர்களுக்கான அடைமொழிகள் மிகப் பொருத்தம். மிகை இல்லை. அவரின் அறக்கட்டளை செய்யும் அற்புதமான பணிக்கு நன்றிகள் ஆயிரம். உண்மையில் ஐயா அவர்களின் சுறுசுறுப்பு நம்மை எல்லாம் வியப்பில் ஆழ்த்தும். கவிதை, கட்டுரை போட்டியோடு வினாடி வினா போட்டி வித்தியாசமானது. பகிர்வுக்கு நன்றீங்க ஐயா..
  =====
  தங்கள் வினாடி வினாவில் நான் எடுத்த மதிப்பெண் 16. முறையே 5,10,16,19 ஆவது வினாக்களுக்கு விடை தெரியவில்லை. இன்று அறிந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி ஐயா. தங்களுக்கே நன்றிகள்...

  பதிலளிநீக்கு
 2. இனிய வணக்கம் ஐயா..
  ஐயா பாவலர் பொன்.கருப்பையா அவர்களின் அறக்கட்டளை
  நிறுவனம் நிகழ்த்தும் அற்புதமான பணிகளுக்கு என் சிரம்தாழ்ந்த நன்றிகள்.
  வினாடி வினாவில் 11 மதிப்பெண்களே பெற்றேன்.. ( என் அறிவுக்கு எட்டியவரை)
  பின்னர் விடைகளைக் கண்டு தெரிந்துகொண்டேன்.
  நன்றிகள் பல ஐயா..

  பதிலளிநீக்கு
 3. 15 மதிப்பெண்கள்...

  பாரதியின் குயில் தோப்பில் பாதியை விரைவில் எதிர்ப்பார்க்கிறேன்... ஹிஹி... நன்றி ஐயா...

  வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 4. அண்ணா நான் 13தான் எடுத்தேன் .ஆனால் அவர் கவிதை வரிகளை பூர்த்தி செய்வதில் ஒன்று தான் தெரிய வில்லை .
  விடை தெரிந்து கொண்ட வினாக்கள் 2,4,5,16,19,20. சரியான நேரத்தில் நினைவில் வராமல் 15எண் கேள்வி சொதப்பி விட்டது .அதனால என்ன இப்போ தெரிஞ்சுப்போம் !

  பதிலளிநீக்கு
 5. நீண்டநாள் என் மனக் கேள்விகள் சிலவற்றுக்கு இன்று விடை கிடைத்தது. பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 6. பாவலருக்கு வாழ்த்துக்கள்..
  உங்கள் கேள்விகளை முகநூலில் பகிர்திருக்கிறேன்..

  பதிலளிநீக்கு
 7. பாவலர் பொன் கருப்பையா அவர்களைப் பற்றி அறிந்து கொண்டதில் மகிழ்ச்சி
  சில கேள்விகளுக்கு பதில் இன்றுதான் தெரிந்து கொண்டேன். நன்றி ஐயா!
  இரண்டு ஆண்டுகளுக்கு முன் பாரதி பற்றி ஒரு கவிதை எழுதி இருந்தேன் .இணைப்பு
  மகாகவி பாரதி –நிலையாய் நிற்பவன்

  பதிலளிநீக்கு
 8. தோழமைக்கு வணக்கம். என்னைப் பற்றிய அழகான அறிமுகத்தைவிட மணிமன்றம்-மரகதவள்ளி அறக்கட்டளை நடந்த பாதையையும் பொன்விழா ஆண்டை நோக்கி நடக்க இருக்கும் வழித்தடத்தினையும் தங்கள் வலைப் பக்கத்தில்
  இடுகையிட்டுள்ளமைக்கு எனது மனமார்ந்த நன்றிகள். தங்களைப் போன்ற சமூக அக்கறையாளர்கள் அமைப்பில் இணைந்து உரிய உயரியத் திட்டங்களை வகுத்துக் கொடுப்பதோடு செயல்பாட்டில் கைகோர்த்து நிற்கையில் இன்னும் எத்தனையோ சிகரங்களை எட்டிப் பிடிக்க முடியும். தங்களின் வழிகாட்டல் தொடரட்டும்.

  அடேயப்பா... இத்தனை பேர் வலைப்பக்க வினாடி-வினாப் போட்டியில் கலந்து கொண்டிருப்பதைப் பார்க்க ... இதுபோல இன்னும் ஐந்து சுற்று வினாக்களையும் எனது pudugaimanimandram blogspot ல் இடுகை இடலாமே.

  பதிலளிநீக்கு
 9. கலந்துகொண்டு கருத்துரைத்த அன்புக்குரியவர் அனைவர்க்கும் நன்றி வினாக்கள் கடினமானவைதாம். இதில் 10மதிப்பெண்ணுக்கு மேல் எடுத்தாலே சராசரிக்கு மேல் பாரதியைப் பற்றிய அறிவு உள்ளது என்று மகிழலாம்.மற்றபடி அவரவர் அனுபவம்தான் பெரிது. நன்றிகள் பல.

  பதிலளிநீக்கு
 10. பல கேள்விகளில் வெற்றியும் சில கேள்விகளில் தோல்வியும்...
  மிகச் சிறப்பான பணி செய்யும் திரு. பொன் கருப்பையா அவர்களுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்...

  பதிலளிநீக்கு
 11. பாராட்டப்படவேண்டிய, முன்மாதிரியான போட்டி.!

  பதிலளிநீக்கு
 12. வெட்கமாக இருக்கிறது. 3 கேள்விகளுக்கு மட்டுமே விடை தெரிந்திருந்தது. நல்ல வேளையாக விடையை எழுதி இருக்கிறீர்கள். நன்றி. நல்ல விஷயம் தொடருங்கள் ஐயா..!!

  பதிலளிநீக்கு
 13. அய்யா, பாரதி என்ற பட்டத்திற்கு என்ன பொருள்? பா+ரதி என்றா?இதையும் விளக்கினால் அறிந்து கொள்வேன்.

  பதிலளிநீக்கு