மீன்கடையில் இருந்த கூட்டத்தை விடவும்
மீனை வெட்டித்தரும் கடைகளில் கூட்டம் அப்பிக்கிடந்தது. அய்யோடா... இன்னிக்கு எவ்ளோ
நேரமாகப் போகுதோ என்று நினைத்துக் கொண்டே உள்ளே போனேன். (மீன் வகைகளையெல்லாம்
விளாவாரியாக எடுத்துச் சொல்லி அவற்றின் ருசி வகைகளை விளக்கும் பிரபஞ்சனின் கதை
ஒன்று...)
பொருத்தமான படம் இல்லதான்... |
இறால் விலை பேசிக் கொண்டிருக்கும் போதே “அண்ணே!
றால் உரிச்சித் தரவா?” என்னும் குரல் என்னைத் திரும்பிப் பார்க்க வைத்தது. பையில்
மீன் வேறு இருந்தது. எதார்த்தமாகத் திரும்பிக் கொண்டே “மீனும் இருக்குப்பா..
வெட்டித் தருவியா?” என்று
கேட்கவும் அந்தச் சிறுவன் “கத்தி இல்லண்ணே.. றால சுத்தமா பண்ணித்தரேண்ணே“ என்று
மீண்டும் தன் இலக்கில் குறியாக இருந்தான் (தக்கையின் மீது நான்கு
கண்கள்-ந.முத்துச்சாமியின் சிறுகதை நினைவிலாடியது)
கடைக்காரருக்குக் காசு கொடுத்துவிட்டுத்
திரும்பினால் பையன் இறால் பையுடன் போய்க்கொண்டிருந்தான்... தொழில் போட்டி!
அசந்தால் அவனை வீழ்த்த இன்னொரு சிறுவன் நின்றுகொண்டிருந்தான்... பின்னாலேயே
போனேன். “றால நல்லா உரிச்சி வைப்பா...ந்தா மீன வெட்டி வாங்கிட்டு வர்ரேன்..“ என்று
அவனிடம் சொல்லிவிட்டு மீன் வெட்டும் இடத்திற்கு மீன் பையோடு போனேன்... (“பையன்
ஏமாற்றி விட்டு றாலோடு ஓடிருவானோ?“என் அல்ப புத்தி அவனைத் திரும்பிப் பார்க்க
வைத்தது)
அவன் அந்த மீன்-நண்டு-இறால் ஊன்வழிந்து சூழ்ந்த தரையில் அமர்ந்து
சிரத்தையோடு விறுவிறுவென்று இறாலை உரித்துக் கொண்டிருந்தான். அவனது விரல்களின்
வேகம் வீணை வாசிப்பை விடவும் சுருதி சுத்தமாக ஓடிக்கொண்டிருந்த்து என்னை நானே
திட்டிக் கொண்டேன்...
மீனை வெட்டி வருவதற்குள் உரித்திருப்பான் என்றால் இல்லை... இடையில் அவனுக்குத் தெரிந்த ஒருவர் றால் வாங்க வந்திருந்ததைப் பார்த்து அப்படியே ஓடிப் போய் அவரிடம் கேட்டுக்கொண்டிருந்தான்... நான் பொறுமையாக பாதி உரித்த றாலைப் பார்த்துக்கொண்டிருந்தேன்..
இவன் இடம் (கடை?) தனியாக இருந்தது. இவனைச் சங்கத்தில்
சேர்த்திருக்க மாட்டார்கள் என்று புரிந்தது. போகட்டும் சின்னப்பயல்தானே என்று
சங்கத்தில் இருக்கும் ஒருசிலரின் ஆதரவில் இவனை
அனுமதித்திருக்க வேண்டும்.. சிறுவர் உழைப்புச் சிக்கல்!
வெற்றிப் பெருமிதத்துடன் றால்பையோடு வந்த சிறுவன் “அதுக்குள்ள மீன வெட்டி
வாங்கிட்டியாண்ணே! பராவால்லயே!”
“படிக்கலயாடா தம்பீ?“
கேட்டதும் வெடுக்கென்று திரும்பி என்னைப் பார்த்து, “ஏளாம்ப்பு படிக்கிறேன்ணே.. நம்ம .. நடுநிலைப்பள்ளியில..” என்று அவன் படிக்கும் பள்ளியைப் பற்றிச் சொன்னான்..
“அப்பா இல்லயா?
“இருக்கே...“ அதற்குமேல் அவன் ஒன்றும் சொல்லவில்லை...
எனக்கு என் ராமுக்கண்ணு ஞாபகத்துக்கு வந்தான்...
கேட்டதும் வெடுக்கென்று திரும்பி என்னைப் பார்த்து, “ஏளாம்ப்பு படிக்கிறேன்ணே.. நம்ம .. நடுநிலைப்பள்ளியில..” என்று அவன் படிக்கும் பள்ளியைப் பற்றிச் சொன்னான்..
“அப்பா இல்லயா?
“இருக்கே...“ அதற்குமேல் அவன் ஒன்றும் சொல்லவில்லை...
எனக்கு என் ராமுக்கண்ணு ஞாபகத்துக்கு வந்தான்...
சுத்தம் பண்ணித்தந்த இறால் பையை
வாங்கிக்கொண்டு அவனிடம் கேட்காமலேயே 50ரூபாயை நீட்டினேன்... சில்லறை இல்லண்ணே... “சரி வச்சிக்க எவ்வளவு“ என்பதற்குள்... “சில்லறை
வாங்கியாறேண்ணே“ என்று சொல்லிக்கொண்டே சிட்டாய்ப் பறந்தான்...
மீன்சந்தையிலிருந்து வெளியில்
நடந்துகொண்டிருந்த என்காதில் அவன் குரல் கேட்டது “அண்ணே றால் உரிச்சித் தரவாண்ணே?”
(பின்தொடரும்
நிஜத்தின் குரல்!!!
மறைந்த எழுத்தாளர்
மறைந்த எழுத்தாளர்
சுந்தர ராமசாமி என்னை மன்னிக்க)
நம் சிறுவர்களின் கனவு எப்போது நிறைவேறும்? என்று பலூன்கள் கேட்கின்றன... |
வணக்கம்
பதிலளிநீக்குஐயா.
அருமையாக எழுதியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் ஐயா.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
Good...!
பதிலளிநீக்கு(From Android)
இன்று மீன் குழம்பா.மீன் இறாலை விட உங்க கட்டுரை அருமை தோழர் .
பதிலளிநீக்குஅருமை! வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குமகிழ்ச்சி என்றால் எனவென்றே தெரியாத சில அதனை விற்கிறார்கள்
பதிலளிநீக்குஎன்ற குறிப்போடு ஒருவர் லாலிபாப் விற்ப்பது போன்ற கார்ட்டூன் நினைவிற்கு வருகிறது .உங்களை போல் நானும் கேட்பேன் .உண்ட இவன் போன்ற சிறுவர்கள் "அக்கா நீ டீச்சரா ?"என்பார்கள் .தொழில் புத்தி (பக்தி )!!
நிஜத்தின் குரல் ஓங்கி ஒலிக்கிறது பதிவில்.
பதிலளிநீக்குஇன்றைய வாழ்வியல் யதார்த்தம்.
பதிலளிநீக்குஅது எப்படி, மீன் வெட்டித் தருபவர்கள் எல்லாம் பெரும்பாலும் சிறுவர்களாய், மதுரை என்றாலும், புதுக்கோட்டை என்றாலும். படிக்கும் வய்தில் கைவிரல்களில் வெட்டிக்கொண்டு, துணியைச்சுற்றிக்கொண்டுதான் வெட்டிக்கொண்டு இருக்கிறார்கள். பார்த்துக்கொண்டுதான் மீன் வாங்கிச்சாப்பிட்டுக்கொண்டிருக்கின்றோம். மாற்றத்திற்கு விழிப்புணர்வுதான் அடிப்படை. விழிப்புணர்வு தரும் பதிவு தோழர்.வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குறால் உரிக்கும் விரல்களை வீணை வாசிக்கும் கைகளோடு ஒப்பிட்டது அருமை
பதிலளிநீக்குஊன்வழிந்த தரை ஆகா காட்சிப்படுத்துதல் என்றால் இது தான் வாவ்..
பலூன் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல முடியவில்லையே.
பதிலளிநீக்குஇருந்தாலும் பையனின் சுருதி சுத்தம்
சிந்தனையை ஒருமுகப் படுத்தி ஆர்வத்துடன் பிழை இன்றி தன் கடமையை விருப்புடன் செய்வது புரிகிறது.
அருமை...ரசித்தேன்....
தொடர வாழ்த்துக்கள்....!
எனக்கு மீன்களின் பெயர்கள் தெரியாது. எறால் தெரியாது. ஆனால் அந்தச் சிறுவனின் சுறுசுறுப்பு என்னை என்னவோ செய்கிறது.
பதிலளிநீக்குஐயாவிற்கு வணக்கம்
பதிலளிநீக்குபள்ளி செல்லும் சிறுவர்கள் குடும்ப சூழ்நிலையால் இது போன்ற வேலைகளில் ஈடுபடுவது மனதை நெருடினாலும் அவனது நேர்மையும், சுறுசுறுப்பும் எதிர்கால சமுதாயத்தின் மீதான பார்வையை நம்பிக்கையுள்ளாதாக மாற்றுகிறது. நிஜத்தின் குரலோடு ஆங்காங்கே இலக்கியங்களின் காட்சியையும் நினைவு படுத்தியது மிக அழகு ஐயா. நிஜ நிகழ்வுகளின் தாக்கம் தானே இலக்கியங்கள்! சிறப்பான பகிர்வுக்கு நன்றிகள் ஐயா. வலை வடிவமைப்பும் அருமை.