மூலிகைச்செடிபோலும் மண்வாசனைக்
கவிதைகள்!
(ஆலங்குடி ஆர்.நீலா எழுதிய “வீணையல்ல நான் உனக்கு” கவிதை நூலுக்கு நா.முத்துநிலவன் எழுதிய முன்னுரை)
(ஆலங்குடி ஆர்.நீலா எழுதிய “வீணையல்ல நான் உனக்கு” கவிதை நூலுக்கு நா.முத்துநிலவன் எழுதிய முன்னுரை)
கவிஞர் நீலாவைப் பார்ப்பதற்குமுன், அவரது கிராமிய மணம்கமழும் கவிதையைத்தான் நான் முதலில் பார்த்தேன்! 1991-'92ஆம் ஆண்டுகளில், புதுக்கோட்டை மாவட்ட அறிவொளி இயக்கத்தில், நாடகக் குழுக்கள்- பாடல்- ஒலி நாடா- பத்திரிகைக்குப்
பொறுப்பான மாவட்ட ஒருங்கிணைப்பாளராக நான் செயல்பட்டு வந்தபோது, "ஊர்கூடி..."எனும்
மாத இதழை (House Magazine) நடத்தி வந்தோம். அது 25,000 பிரதிகள் அச்சிடப்பட்டு மாவட்டம்முழுவதும் நடந்த
அறிவொளி வகுப்புகளுக்கு, தகவல் கூறியும் உற்சாகப் படுத்தியும் வந்தது.
குழந்தையின் கள்ளங்கபடமற்ற சிரிப்பைப்போல, பார்த்தவுடனே நெஞ்சோடுவந்து 'பச்சக்கென்று' ஒட்டிக்கொண்டது கவிதை! நான் அதை மிகவும் ரசித்துப் படித்து, மாவட்ட ஆட்சியரிடம் காட்டினேன். பாசாங்கற்ற அந்தக் கவிதையால் கவரப்பட்ட அவர்கள், ‘எழுதியது யார்?’ என்று கேட்டபோது, "ஆர். நீலா என்று மட்டும்தான் இருக்கிறது வேறுவிவரம் இல்லை" என்றதும், தனது நாட்குறிப்பில் அதை எழுதித் தரச்சொல்லி வாங்கிக்கொண்டு படித்து, ரசித்து, பெண்கள் கூடும் அறிவொளி நிகழ்ச்சிகளிலெல்லாம் அதைக்கூறி, "இதை எழுதிய நீலா யார்? இங்கே இருக்கிறாரா?" என்று கேட்டுக்கேட்டு, கடைசியாக நீலாவைக் கண்டுபிடித்து என்னிடம் கூறினார்கள். நான் 'அந்த உருவத்தை'ப் பார்த்து ஆச்சரியப் பட்டேன். கவிதையைப் போலவே பாசாங்கற்ற முகம், பேச்சும் அப்படியே..."இந்த மாரிக்க சா..ர்..." எனும் நீலாவின் பேச்சு -12 வருடம்கடந்து- இப்போதும் அப்படியே இருக்கிறார்!
கதை, கவிதை படிப்பதிலும் எழுதுவதிலும் இயல்பாகவே ஆர்வமாக இருந்த நீலா அதன் பிறகு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தோடு நெருக்கமானதில் ஆச்சரியமில்லை.அப்போது த.மு.எ.ச. வின் மாவட்டச்செலராகவும் இருந்த நான், புதுக்கோட்டையில் நடந்த இலக்கியக் கூட்டங்களுக்கு நீலாவை அழைப்பதும் அவரும் வந்து கலந்துகொள்வதும், ஆலங்குடியில் தமுஎச கிளை உருவானதும் இயல்பாகவே நடந்தது. அவருடன், அவரது கணவர் எங்கள் அருமை நண்பர் சுபி, மகன்கள் சுதாகர்-பிரபாகர் மற்றும் ஆலங்குடியின் கலை இலக்கிய நண்பர்கள் அனைவருமே அறிவொளியோடும், தமுஎச வோடும் நெருக்கமாயினர்.
தற்போது 7,8 ஆண்டுகளாக -அனேகமாக ஆண்டுதோறும்- நடந்துவரும் ஆலங்குடி நகர தமுஎச கலை இரவுகளில் அயிரக்கணக்கில் மக்கள் கூடுவதை அந்தப் பக்கத்தைச்சேர்ந்த அனைவரும் அறிவர். ஆலங்குடி தமுஎசவின் தற்போதைய செயலரும்' அறிவொளி' ஓவியருமான எஸ்.ஏ.கருப்பையா, பொருளாளரும் கவிஞருமான சு.மதி, மற்றும் 'விடியல்'கலைக் குழுவினர் அனைவரும் நீலாவின் மூலமாகவே எனக்கு அறிமுகமாயினர் - எங்கள் தோழமை உறவினருமாயினர்!
இந்த விதமாக, எழுதுவதிலும் இயங்குவதிலும் மட்டுமல்லாமல், தலைமைதாங்குவதிலும் ஒருசேர ஆர்வம் காட்டிய நீலா,அதன்பிறகு 'அவள்விகடன்', 'மகளிர்சிந்தனை', 'செம்மலர்', இதழ்கள் நடத்திய கலை இலக்கியப் போட்டிகளில் பரிசுபெற்றுச் சிறந்தார்/வளர்ந்தார்,
ஆனந்த விகடன்’ பவளவிழா-கவிதைப் போட்டியில் நீலாவின் இரண்டு கவிதைகள் தேர்வு செய்யப்பட்டன! தற்போது புதுக்கோட்டை மாவட்ட வளர் அறிவொளி இயக்கத்தில் ஆலங்குடி ஒன்றிய ஒருங்கிணைப்பாளராகவும், அவர் குடியிருக்கும் மங்களபுரத்தை உள்ளிட்ட குப்பக்குடி ஊராட்சியின் -மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட- உறுப்பினராகவும் -தமுஎசவின் மாவட்டத் தலைவர்களில் ஒருவராக -மாநிலக்குழு உறுப்பினராக- வளர்ந்து, இலக்கியப்பணிகளையும் வளர்த்து வருகிறார்! இதெல்லாம் யாருடைய சிபாரிசிலும் அல்ல! அவர் வளர்த்துக்கொண்ட கலை இலக்கியத் திறனுக்கும் தலைமைப் பண்புக்கும் கிடைத்த பரிசுகள்!
"காலம் அறிந்து கூவும் சேவலை
கவிழ்த்துப் போட்டாலும் நிறுத்தாது!
கல்லைத் தூக்கி பாரம் வைத்தாலும்
கணக்காய்க் கூவும் தவறாது!" எனும் பட்டுக்கோட்டையின் கருத்து உண்மையல்லவா? என்னைச் சந்தித்திருக்கா விட்டாலும், இவருக்கு இந்த வளர்ச்சி கிட்டியிருக்கும் - ஏனெனில் இவர் சுயமாக வளரும் மூலிகைச் செடிபோன்றவர்!
ஒரு பெண், அவள் பெண்என்பதாலேயே, வீட்டுக்கும் நாட்டுக்கும் சுமையாகக் கருதப்படுகிறாள் என்பதும், இன்றைய சமூகத்தின் முரண்பாடுகளில் முக்கியமானது. உண்மையில் ஆண்களைப் போலவே (இரண்டு கைகளோடும் இரண்டு கால்களோடும் ஒரே ஒரு வயிறோடும்) பிறக்கும் பெண் எப்படி அவளே அவளுக்குச் சுமையாகிப் போகிறாள்? இந்தியாவில் -தமிழ் நாட்டில்- பெண்ணாகவும் சற்றே கருப்பாகவும் பிறந்துவிட்ட பெண் குடும்பத்திற்கு மட்டுமல்ல சமூகத்திற்கே சுமையாகிப்போகிறாள்!
ஆனால், தன் எதிர்பார்ப்பு உள்ளத்தளவிலோ உடலளவிலோ நிறைவேறாதபோது, அடங்காத பெண்புலிகளாகி, அந்த உணர்வுகளையும் கொட்டித்தீர்த்துவிடும் பெண்கவிகள், அண்மைக்காலமாகத் தமிழ்க் கவிதை உலகில் புயல்கிளப்பி வருவதுதான் - இதுவரை தமிழில் கேட்டிராத புதுக்குரல்! "சங்க காலத்திற்குப் பிறகு -இரண்டாயிரம் ஆண்டுகள் கழித்து- இந்த அளவிற்குப் பெண்கள் எழுத வாய்ப்புப் பெற்றுள்ளது
இப்பொழுதுதான்.பெண்கள் பார்வையில் நமது வாழ்க்கை இங்கே என்னவாக இருக்கிறது என்பது இப்பொழுது அழுத்தமாக வெளிப்படுகிறது" - பேரா.பஞ்சாங்கம் (‘புத்தகம் பேசுது’ நேர்காணல்-செப்-04) இதையே, கடந்த 2004-செப்டம்பர் 11ஆம் தேதி, இந்திய சாகித்ய அகாதெமியின் பொன்விழாவையொட்டி, திருவனந்தபுரத்தில் நடந்த, 4 தென்மாநிலங்களுக்கான கருத்தரங்கில் நான் வாசித்த கட்டுரையிலும் கூறியிருந்தேன்!
முன்னெப்போதையும்விடப் பெண்குரல் சற்றே உயர்ந்தும், கலையழகோடும் தமிழ்க் கலை-இலக்கியத் துறையில் தற்போது வெளிப்பட்டு வருவதற்கு, ஜனநாயக இயக்கங்கள் அடைந்துள்ள வளர்ச்சி ஒரு முக்கியமான காரணம்.
மும்பையிலிருந்து புதியமாதவியும், புதுவையி லிருந்து மாலதி மைத்ரியும், சென்னையிலிருந்து கனிமொழி, இளம்பிறை, தாமரையும், வந்தவாசியிலிருந்து அ.வெண்ணிலாவும், திருத்தணியிலிருந்து ப.கல்பனாவும், துவரங்குறிச்சியிலிருந்து சல்மாவும், சிவகாசியிலிருந்து திலகபாமாவும், புதுக்கோட்டை -ஆலங்குடியிலிருந்து நீலாவும் நம்பிக்கையூட்டும் வகையில் தற்போது எழுதி வரும் பெண்கவிகள் என்று உறுதியாகச் சொல்லலாம்.
இன்னும் பெரிதான இந்தப் பெரும்படையில் மிகப் பெரும்பாலோர் இளைய கவிஞர்களே என்பது மிகவும் நம்பிக்கையூட்டுவதாக உள்ளது. உலக அளவிலும் புலம்பெயர் பெண்கவிகளின் பங்களிப்பும் குறிப்பிடத்தக்கது!
இந்தத்தொகுப்பில் மிகப்பல கவிதைகள் எனக்கு மட்டுமல்ல இதைப் படிக்கும் -கவிதை ஆர்வலர்- அனைவர்க்கும் நிச்சயம் பிடிக்கும்!
பூக்களைப் போல, சிறகு விரிக்க, மரப்பாச்சி பொம்மைக்கும், கிரகணம், பொன்பார்க்கும் படலம், அறிவொளி முத்தம்மா, விமர்சனம், நமக்கும் வேணும், ஆராரோ, வீணையல்ல, சந்தேகம், தலைமுறை சோகம், கருவறை வேதனை - ஆகியவை ஒருமுறை படித்தவுடனே நெஞ்சில் பதிந்துவிடும் ஆழம் கொண்டவை.
பூக்களைப் போல்
வண்ணங்களோடு பிறக்கவும்,
வாசனையோடு இருக்கவும்
ஆசைதான்... ஆனால்,
நல்லவற்றை இணைப்பதெனில்,
நாராக இருக்கவும் சம்மதமே! -எனும் கவிதையில், இவர் ஒரு இலக்கியவாதி மட்டுமல்ல, சமூக இயக்கவாதியும் கூட என்பதைச் சொல்லாமல் சொல்லிவிடுகிறார்!
சிறகு விரிக்க சிரமமா?
குரலாவது கொடு கூண்டுக்கிளியே!
அழகு மட்டுமல்ல அலகும் இருக்கே! --எனும் கவிதை, இவர் ஒரு எழுத்தாளர் மட்டுமல்ல, பெண்ணியவாதியும் கூட என்பதைக் காட்டிவிடுகிறது!
' நமக்கும் வேணும்' எனும் கவிதை, இவர் கவிஞர் மட்டுமல்ல, ''மாதர், 'தம்மை' இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்'' என்ற பாரதி வழிவந்தவர் என்பதைக் காட்டிவிவிடுகிறது!
மரப்பாச்சி பொம்மைக்கும்
மாராப்பு போட்ட நிலம்,
நீலவான் நிலவிற்கும்
ஆடைகட்டிப் பார்த்த மனம்,
இன்று-
அவிழ்த்துப் போடுவதுதான்
அழகாம்! ... ... ... ...
ஆடம்பரம் பெருக
ஐ.எம்.எ•ப் உதவ
எல்லா நாயும் காலைத்தூக்க
எம் தேசமென்ன-
தெருவோர நடுகல்லா? -எனும் கவிதையில், இவர் எழுத்தாளர் மட்டுமல்ல, சமூக அக்கறையுள்ள சுயமரியாதையுள்ள- 'தேசபக்தர்' என்பது தெரியவருகிறது!
'தாவணியின் தலைப்பை
விளையாட்டாய் முறுக்கும்போதும்,
கோவிலுக்குப் போகும்போது
கூடுதலாய் அலங்கரிக்கும்போதும்,
தனியாக அமர்ந்து
பாடங்களை மனனம் செய்யும்போதும்,
அவனை நினைத்தே
அவ்வளவும் செய்வதாய்
அடித்துவிட்ட தந்தையே!
நீ அடித்தபிறகுதானப்பா
அவனை நினைத்தேன்' - (10.11.02-‘ஆனந்த விகடன்’) கவிதையும், அதே இதழில் வந்த 'விமர்சனம்' கவிதையும், இவரது நுட்பமான பார்வைக்கு நல்ல சாட்சிகள்!
ஆராரோ ஆரிவரோ எனும் 'போஸ்ட் மாடனிசக்' கவிதை ஆச்சரியமூட்டுகிறது! :
ஆலமரத்தூளியில்
அலறும் குழந்தைக்கு
மருளும் பறவைகள்!
வரப்பில் அவன்...
நீரோவின் •பிடிலாய்
கையில் குடை!
இயலாமையில் கசியும் அமுதம்
கால் பெருவிரலில்
சொட்டச்சொட்ட...
நெல்மணிகள் ரத்தத்துளிகளாய்
சிதற, மீண்டும் மீண்டும்
அவன் கழுத்து அறுபட்டது!
'முருங்கைத் தோழி' கவிதை, நற்றிணையையும், 'முன்னம் உனது நாமம் கேட்டான்' பக்தி இலக்கியத்தையும் நினைவூட்டி இவரது வேர்களின் ஆழத்தை விளக்கும் எனில், 'மெயில் விடுதூது', கவிதையும், 'தலைமுறை சோகம்' கவிதையும் இவரது சிறகுகளின் தூரத்தை விளக்கக் கண்டு, மகிழ முடிகிறது.
'வீணையல்ல நானுனக்கு' எனும் தலைப்புக் கவிதை மிக அருமையானது. தாய் தந்தை தம் குழந்தகளை / கணவர் தன் மனைவியை 'வழி நடத்துகிறேன்' எனும் 'ஆர்வக் கோளாறில்' செய்யும் ‘அல்செயல்கள்’ இந்தத் தலைமுறையில் ஏராளம்! இந்தப் புரிதல் இல்லாததால் நடக்கும் குடும்பச் சிக்கல்கள் சமுதாயச்சிக்கலில் கொண்டுபோய் நிறுத்தி, குடும்பமும், சமூகமும் சேர்ந்தே சீரழிவதை நாம் பார்த்து வருகிறோம். கெட்ட எண்ணத்தோடு செய்தால், திட்டலாம், திருத்தலாம். நல்ல எண்ணத் தோடும் கெடுதல் செய்ய முடியும் என்பதற்கு இன்றைய குடும்பங்களில்தான் எத்தனை உதாரணங்கள்! இதை நுட்பமாக எடுத்து, 'பாரதியை இன்றைய நிலைக்குக் கொஞ்சம் -வார்த்தைகளால்- தள்ளிவைத்து' எழுதப்பட்ட நல்ல கவிதையை முழுவதுமாகப் படித்துப் பார்க்க வேண்டுகிறேன்.
இதேபோலத்தான், 'நாணமொன்றும் அச்சமொன்றும் நாய்கட்கும் வேண்டாம்' என்று ஆண்டாள் பிரியதர்ஷினி எழுதிய போதும், பாரதி நினைக்கப்பட்டான்! ஊமையராய்க் கிடந்த நம் நாட்டு- வீட்டு- பெண்கள்தான் எந்த அளவுக்கு வளர்ந்துவிட்டார்கள் என்பதை, பாரதி பார்த்தால் 'தம் குழந்தைகளின் வளர்ச்சி' கண்டு’ நிச்சயமாக பூரித்துப் போய் ஒரு கவிதை எழுதியிருப்பான் என்றே தோன்றுகிறது!
என் சரியை மட்டுமல்ல
என் தவறையும்
நானே செய்துகொள்கிறேன் எனும் வரிகள் புதிய சமூகத்துக்கான விதைகள்! இவை புதிய விழுதுகளை இறக்கும், அவையும் வேர் விடும், அதிலும் புதிய விழுதுகள் எழும்... எழவேண்டும்.
ஏற்கெனவே ஒரு சிறுகதைத்தொகுதியும், ஒரு கட்டுரைத்தொகுதியும் வெளியிட்டிருந்தாலும் கவிதையைப் பொறுத்தவரை, இதுவே இவரது முதல் தொகுதி. இன்னும் இன்னும் இவர் எழுதவேண்டும், எழுதுவார்! இந்த மூலிகைச்செடியின் வாசம், ஆலங்குடி தாண்டி, தமிழகம் முழுதும் மணம்பரப்ப வேண்டும் என வாழ்த்துகிறேன்.
தமிழ்க் கவிதையின் பழைய அடையாளங்களை மட்டுமல்ல, நவீன போக்குகளையும் நன்கு உணர்ந்து எழுதியும் இயங்கியுஇம் வரும் இவர், இன்னும் இன்னும் உயர வேண்டும் எனவாழ்த்துகிறேன். தனக்கென ஒரு தமிழ்இலக்கிய இடத்தை இவரே தேர்ந்தெடுத்து அமர்வார் என்று நம்புகிறேன். அவ்வாறே வளர / வளர்க்க எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்!
அன்புடன்,
நா.முத்து நிலவன்
2003
பி.கு.-
(000) கிட்டத்தட்ட 25ஆண்டாகப் போகிறது -
இப்போதும் நினைவைவிட்டு நீங்காத
அந்த “அறிவொளிமுத்தம்மா” கவிதை-
முதியோர் உதவித் தொகையை
முறையாகப் பெற்றுவந்த
முத்தம்மாப் பாட்டிக்கும்
தபால்காரத் தங்கையாவுக்கும்
ஏதோ தகராறு,
என்ன பாட்டி என்று
எதார்த்தமாகக் கேட்டேன்.
“அறிவொளி முத்தம்மான்னு நா
அழகாக் கையெழுத்துப் போட்டாலும்,
கைநாட்டயே போடச் சொல்றான்டீ
கட்டையில போறவன்”!?!?! --- ஆர்.நீலா.
----------------------------------------------------------
கவிதாயினி நீலா அவர்களுக்கு வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குஉங்கள் முன்னுரை அருமையா இருக்கிறது அய்யா...
சிறப்பான முன்னுரை.குறிப்பிட்ட கவிதைகள் அருமை. நீலாவின் கவிதைகளை படிக்கத் தூண்டுகிறது உங்கள் பதிவு
பதிலளிநீக்குகவிஞருக்கு வாழ்த்துக்கள்
ஒரு எழுத்தாளர் சக எழுத்தாளரை உலகிற்கு அறிமுகப்படுத்துவது என்பது ஆரோக்கியமான விடயம். கவிஞர் நீலா அவர்களிடம் தங்களின் அறிமுகத்திற்கான திறமையும் தகுதியும் இருக்கிறது என்பது அவரின் படைப்புகளை தாங்கள் மேற்கோள் காட்டியிருப்பதன் மூலம் அறிய முடிகிறது. மிகச் சிறப்பான அறிமுகத்திற்கு நன்றீங்க அய்யா. பெண் எழுத்தாளர்கள் வளர்ந்து வருவதும் தங்களைப் போன்றோர் அவர்களை ஊக்குவிப்பதும் மகிழ்ச்சியளிக்கிறது. தொடரட்டும் தங்கள் பணி. நன்றி அய்யா.
பதிலளிநீக்குநீலாவின் “வீணையல்ல நான் உனக்கு” கவிதைத் தொகுப்புக்கு நான் எழுதிய முன்னுரை படித்துக் கருத்துரைத்த நண்பர்கள் சே.குமார், முரளி, பாண்டியன் ஆகியோர்க்கு நன்றி. அவர் அளவிற்கு எழுதத் தெரியாத பலர், அவரைவிடவும் பிரபலமாகப் பேசப்படுவதும், பிரபலமான எழுத்தாளர் பலரைவிட நன்றாக எழுதத் தெரிந்தும் இவர் இன்னும் குடத்துள் இட்ட விளக்குப் போலவே இருப்பதும் எனக்கு நீண்டநாள் வருத்தம். எனவே தான் 2003இல் எழுதிய முன்னுரையை எந்த மாற்றமும் செய்யாமல் 2013இல் எடுத்துப் போட்டேன். இப்போது இன்னும் அதிகமாகவே செயல்பட்டு வருகிறார். இன்னும் குறைவாகவே பேர்பெற்றும் கூட... அவரது தொடர்பு எண்ணுக்குப் பேசி அவரைத் தொடர்ந்து எழுதத் தூண்டுமாறு நண்பர்களை வேண்டுகிறேன். அருமைச் சகோதரி ஆர்.நீலாவின் செல்பேசி -9786626273.
பதிலளிநீக்குஎன் தோழி நீலா என்பதில் இன்னும் பெருமையாய் இருக்கிறது. நிலவன் அய்யா என்று நான் எதை சொன்னாலும் ரசித்துக்கேட்டுவிட்டு அவர் இல்லை யென்றால் நீலா இல்லை என்று சொன்னார் அது தான் நீலா. அவர் அப்படிச்சொன்னதும் நானும் ம்கிழ்தேன். எல்லோரையும் உங்களால் எப்படித்தான் இப்படி பாராட்டி ஊக்குவித்து அவர்கள் திறமையை மிளிரச் செய்ய முடிகிறதோ? வாழ்த்துக்கள். நீங்கள் நன்றாக வாழவேண்டும் . உங்களால் எல்லோரும் உயர வேண்டும்
பதிலளிநீக்குதங்களால் உருவாக்கப்பட்ட பலரில் இவரும்(நீலாவும் ஒருவர் போலும்.சிற்பி அய்யா நீங்கள். உங்கள் கண்களுக்கு எதுவும் தப்பாது.நல்ல ஆசிரியன் அல்லவா? நான் சொல்லுவது நல்லாசிரியர் விருது அல்ல. அது காசுக்கு கிடைக்கும். முத்தை வாங்க முடியுமா? ஐயா பஷீர் ஐயா பாஸ்கர் நியாபகம் வருது....தங்களுக்கு நினைவு இருக்கா ?
பதிலளிநீக்குபுதுகையை விட்டு குடிபெயர்ந்ததில் நல்ல நண்பர்களின் தொடர்பு அறுந்து விட்டது. தாங்களாவது தொடர்பில் இருப்பது மிகவும் மகிழ்ச்சி
பதிலளிநீக்கு