(மு.முருகேஷ் எழுதிய ‘விரல்நுனியில் வானம்’ ஐக்கூ கவிதை நூலுக்கு நான் எழுதிய முன்னுரை)
---------------------
(படம் - கவிஞர் மு.முருகேஷ், வந்தவாசி)
---------------------------------
---------------------------------
‘பூத்த வேங்கை வியன்சினை ஏறி
மயிலினம் அகவும் நாடன்
நன்னுதல் கொடிச்சி மனத்தகத் தோனே!” --
இது, தொல்காப்பியம், நன்னூல், இலக்கணப் புத்தகங்களி;ல் ‘செந்தொடை’க்கு எடுத்துக் காட்டப்படும் ஒரு செய்யுள். அதாவது எதுகை மோனை எதுவும் இல்லாமல், ஒரு செய்யுள் இருக்கலாம் எனும் இரண்டாயிரம் ஆண்டுக்காலக் ‘கவிதை ஜனநாயகத்துக்கான’ ஒரு முன்னோடி!
இலக்கிய வகைகளிலேயே சுருக்கமானது. எளிதில் யாரும் மேற்கோள் காட்ட நினைவில் நிற்கும் சுருக்க வடிவம் கொண்டது கவிதை. அதிலும் ‘சுருக்’கானது ஹைகூ. காலகாலமாய் வந்த வாழ்க்கை மாற்றங்களோடு கவிதை மாற்றமும் நடந்தே வந்துள்ளது.
பொதுவாக, எல்லா மரபுக் கவிதைகளும், நாலடியாக வருவது ஏற்கப்பட்டிருந்த போதே மூன்றடியில் சிந்தியல் வெண்பாவும் உண்டு. இரண்டடியில் குறள் வெண்பாவும் உண்டு.
எல்லா வகையான வாழ்க்கை மரபுகளையும் கேள்வி கேட்கத் தொடங்கிய 17 ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு 19,20 ஆம் நூற்றாண்டுகளில் மரபு எதிர்ப்பு, மரபு உடைப்பும் - புதிய வாழ்க்கை – புதிய புதிய கண்டுபிடிப்பு, சூழல் மாற்றம், அறிவியல் கண்டுபிடிப்புகள், அரசு அமைப்புகளின் மாற்றம் இவற்றின் பிறகு வந்த புதிய வாழ்க்கை முறைகளோடு புதுக்கவிதையும் 20 ஆம் நூற்றாண்டின் செல்லப் பிள்ளையானது.
நான் ஏற்கனவே ஒரு கட்டுரையில் சொன்னது போல் 3000 வயது மரபுக் கவிதையை 30 வயது புதுக்கவிதை உரசிப் பார்த்தது. எழுதியவர்களைப் பொறுத்து மரபும் புதுசும் மாறிமாறி வெற்றி பெற்று வருவதாக அதிகார பூர்வ அறிவிப்புகள் வந்து கொண்டிருக்கும்! கவிதை நின்று சிரிக்கும்!
மரபுத்தாகமும், புதிய வேகமும் சேர்ந்தால் ?
3வரி எனும் முடிவு மரபு சார்ந்தது, சிந்தனையோ புதுமை சார்ந்தது! புதிய ஒட்டு மாங்கனியாக – ஐக்கூ...
‘மிக்ஸியில் அரைக்கும் சட்னி ருசியாக இல்லை’
என்பது என் அம்மாவின் கருத்து.
என்பது என் அம்மாவின் கருத்து.
‘மின் விசிறி’ சூடாக இருப்பதாக
என்அப்பா மரத்தடி நிழலுக்குப் போகிறார்.
என்அப்பா மரத்தடி நிழலுக்குப் போகிறார்.
-- இவையிரண்டும் 60கள்
கேபிளில் ஸ்டார் டி.வி., சன் டி.வி. பொருத்தாதற்கு என் மகன் கோபித்துக் கொள்கிறான். ‘கால்குலேட்டர்’ இருக்கும்போது மடத்தனமாக எதற்கு 14,15 வாய்பாடுகளை மனப்பாடம் செய்யவேண்டும்’ என்று என் மகள் கேட்கிறாள்
--இவையிரண்டும் 10கள்!
இந்த மூன்றாம் தலைமுறைக்கும், முதல் தலைமுறைக்கும் இடையில் இரண்டாம் தலைமுறையாக நான் மரபுக்கவிதை, புதுக்கவிதையோடு ஐக்கூ, பற்றியும் பேசிக் கொண்டிருக்கின்றேன் --நான் 30கள்!
இது வாழ்க்கையின் உள்ளடக்க மாற்றம். இதேபோல இன்னொரு வகை புறத்தாக்கமும் தமிழ்க்கவிதா வடிவத்தை வெகுவாக பாதித்தது.
அஃது என்னவெனில்---
பல நூற்றாண்டுக் காலமாக ‘படிப்பு’ என்றால் குருகுலம் தான். மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை குளிக்கப் போகும்போதும், ஆற்றில் ‘சனி நீராடும்’ போதும் ‘சொன்னவை’யே உ.வே.சாமிநாதய்யருக்கு ‘யுனிவர்சிடி சிலபஸ்’ ஆயிற்று!
இந்த நூற்றாண்டில் பிறமொழி படித்தவர்கள் -ஆங்கில இலக்கியம் படித்தவர்கள் தமிழும் படித்து எழுதிய போது புதுவாசம் புதுநுரை கிளம்பியது. திறமான புலமையெனில் வெளிநாட்டார் அதை வணக்கம் செய்ததும், அவர்கள்‘பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழில் பெயர்த்ததும்’ நடந்தது
புதுக்கவிதையும், ஐக்கூவும் கவிதா உலகின் காந்தாரக் கலைகள். ஐக்கூவை ‘செந்தொடை’யோடு ஒப்பிட்டு நான் கூறியது கூட, ஏற்கனவே இங்கு வணங்கப்பட்டு வந்த முருகன் எனும் தம்பிக்கு, கி.பி. 636ல் வாதாபியிலிருந்து தமிழகம் வந்த கணபதி அண்ணனாகிப் போனது மாதிரிதான்!
“தமிழில் ஏற்கனவே ‘ஐக்கூ’ உண்டு. தமிழில் இல்லாதது இல்லை” என்றெல்லாம் கூறுவது வெறும் தாய்ப்பாசம் போன்றதுதான். பெற்ற தாய் உயிரோடிருந்த போது ஒருவாய் சோறு போடாதவன் அவள் செத்துப் போன பிறகு தடபுடலாக திவசம் செய்வது மாதிரியான தாய்ப்பாசம் தேவையில்லை.
‘புத்தம் புதிய கலைகள்’ தமிழில் வளர்வதை, புதிய கண்டுபிடிப்புகள் மூலம் தமிழை வளர்ப்பதை விரும்புகிறவர்கள் ஐக்கூவின் வளர்ச்சியை நிச்சயம் விரும்புவார்கள்.மு. முருகேஷ் விரும்புகிறார்.
நானும் விரும்புகிறேன்.
நானும் விரும்புகிறேன்.
லட்சக்கணக்கான மரபுக்கவிதைகளில் சில சங்கப்பா வரிகளும், சில கம்பன் கவிதைகளும், பாரதி பாரதிதாசனின் கொஞ்சம் பாடல்களும் மட்டுமே பரவலாக அறியப்பட்டிருப்பது போல-
ஆயிரக்கணக்கான புதுக்கவிதைகளில் சிலகவிஞர்களின் சிலவரிகளே நிற்பது போல –நூற்றுக்கணக்கான ஐக்கூக்களில் ஒன்றிரண்டுதான் வாசகர் நெஞ்சில் உட்கார்ந்திருக்கின்றன.
மு.முருகேஷின் இந்த ஐக்கூத்தொகுப்பு நிலைத்து நிற்கும். மிக இளைய வயதிலேயே (24) அசாத்தியான முயற்சியுடன் இலக்கியத் தொடர்புகளை ஏராளமாகக் கொண்டிருப்பவர் இவர். தமிழ் இலக்கிய உலகின் ‘நுனிமுனைக் கொழுந்’தான ஐக்கூவை எடுத்து முயன்று பல இடங்களில் நிச்சயமான வெற்றியையும் பெற்றிருக்கிறார்.
‘நேற்றே செத்துப் போனான்,
தோட்டக்காரன்
செடியில் புதியதாய்ப் பூ!’
இந்த மு.முருகேஷின் ஹைக்கூ கவிதை,
நடுப்பகல்
சுடுமணல்
பாவம் என் சுவடுகள்’
எனும் அறிவு மதியின் ஐக்கூ போலவும்
‘அந்தத் திருடன்
விட்டுச் சென்றது இதுவே-
பலகணி நிலவு!
எனும் ஜப்பானிய ஐக்கூ போலவும் தமிழ்கூறும் நல்லுலகில் பவனி வரும் என்று நம்புகிறேன்.
அம்மா, அக்கா, தங்கையிடம் வைக்கும் பாசத்தை ‘செண்டிமெண்டாக’ சுரண்டும் தமிழ்த் திரைப்படக் கலாச்சாரத்தினிடையே (அந்தக் காலத்து “அடிமைப் பெண்”ணிலிருந்து இந்தக்கால “அரண்மனைக் கிளி” வரை) இயல்பான அம்மாவை மு.முருகேஷின் ‘குறுங்குறளில்’ பார்க்க முடிகிறது.
‘வெயிலில் நடந்து
வீடு வந்தேன்
வாசலில் வியர்வையோடு அம்மா’
நெஞ்சில் இந்த வரிகள் பசைபோட்டு ஒட்டிக் கொள்கின்றன.
இதயத்தின் ஈரம் கவிதையாகிறது.
இதேபோல அழகியலுக்குள் சமூக விமர்சனமும் ஆழ்ந்து கிடக்கும் சில வரிகளும் உண்டு.
‘இருட்டில் யாரந்த
ஒற்றைத் திருடன்
தெருவிளக்கு!’
எரியாத விளக்கு, திருடனுக்கு துணை போவது ஊரறிந்த விஷயம்.
அதுவே திருடனாகத் தெரிவது கவிதையாகிறது. இதே பாணியில்
‘குண்டும் குழியுமாய்
சாலைகள்
யாரைப் புதைக்க?
எனும்கேள்விக்கு ‘அரசாங்கத்தைத்தான்’என்று யாரும் உடனடியாகச் சொல்லி விடுவார்கள்.
ஐக்கூவுக்கு ஓசைநயம் தேவையில்லைதான். ராஜாஜி ‘பொன்னியின் செல்வன்’ முன்னுரையில் சொல்வது போல ‘சூரியனுக்கு எண்ணெயும் திரியும் என்னத்திற்காக?’ ஆனால், மேக விளிம்பில் எட்டிப் பார்க்கும் அந்தச் சூரியன் நம் நெஞ்சைக் கொஞ்சம் கூடுதலாகவே அள்ளிக் கொள்வது மாதிரி ஐக்கூவில் ஓசைநயமும் சேர்ந்து உட்கார்ந்திருப்பது ரொம்ப அழகு ! பாருங்களேன்…….
‘வீடு கட்ட கடன்
எல்.ஐ.சி. கட்டிடத்தில்
கூடு கட்டும் குருவி!’
இதே குருவிகள் எந்நேரமும் ‘கைமுய்’யென்று கத்தித்திரிவது நமது ‘மூடு’பொருத்து இனிமையாகவோ எரிச்சலாகவோ தோன்றுவதும் உண்டு. ஆனால் இந்தக் கவிஞனுக்கு அதுவும் வித்தியாசமாகத் தெரிகிறது.
‘எந்நேரமும்
ஆர்ப்பாட்டமும் மறியலுமாய்
குருவிகள்!’
இன்னோரிடத்தில் -
‘அஜீரணமாய் அரசியல்
பட்டினியில் மக்கள்
இரைப்பையைத் தின்னும் மதம்’
-எனும் வரிகள் மதவெறி கொண்ட அரசியல்வாதிகளை ஓங்கி அறைவது போலுள்ளது.
இதே போல ‘சுருங்கிய கிழவியும்’ ‘வழிவிடு விநாயகர் கோவில் வரிகளில் மோதிக் கொள்ளும் மதங்களும’ சுருக்கென்று தைப்பது ஆறாத வடுவாய் நிற்கும் சில ஐக்கூக்கள் திருக்குறள் போலத் தோன்றுகின்றன.
அழகிலும், ஆழத்திலும்நிறைவு மிகுந்த இந்தத் தொகுப்பில் ஏதோ ஒரு குறை நெருடுவது போலத் தோன்றியது. யோசித்துப் பார்த்ததில் ஏதேனும் ஓர் ஒழுங்கு நிரல்படி கவிதைகளை அடுக்கியிருக்கலாமோ என்பதுதான் அது
சிறுகதையில், கவிதையில், கட்டுரையில், பேச்சில் எல்லாவற்றுக்கும் மேலாக கூட இருப்பவரையும் சேர்;த்து உற்சாகப்படுத்தும் உற்சாகியாய் என் கண்ணெதிரில் வளர்ந்து வரும் மு.முருகேஷ். தமிழ் இலக்கிய இயக்க உலகில் நிச்சயமாகப் பேசப்படுவார்.
தமுஎசவின். புதுக்கோட்டை மாவட்டத் துணைச் செயலராகி யிருக்கும் இவர், இன்னும் மேலேறி வருவார். இவரோடு இலக்கியமும் இயக்கமும் மேன்மேலும் வளரும் என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. ‘தெருவோர தேசத்தில்’ அது தெரிந்தது. இப்போது ‘விரல் நுனியில் வானம்’ வசப்படுகிறது.
தமுஎசவின். புதுக்கோட்டை மாவட்டத் துணைச் செயலராகி யிருக்கும் இவர், இன்னும் மேலேறி வருவார். இவரோடு இலக்கியமும் இயக்கமும் மேன்மேலும் வளரும் என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. ‘தெருவோர தேசத்தில்’ அது தெரிந்தது. இப்போது ‘விரல் நுனியில் வானம்’ வசப்படுகிறது.
---------------------------------------------------------------------
(1980களின் இறுதி அல்லது 90களின் தொடக்கம் என்று நினைக்கிறேன். இன்று தமிழகத்தின் பிரபலமான ஐக்கூக் கவிஞர்களில் ஒருவராக உயர்ந்து, வந்தவாசியிலிருக்கும் கவிஞர் மு.முருகேஷ் சரியான ஆண்டைச்சொன்னால் திருத்தி வெளியிடலாம். சொல்றீங்களா மு.மு?)
---------------------------------------------------------------------
சொல்லிட்டாரே....
1 அக்டோபர், 2013 5:49 PMஅன்று வந்த
மு.மு.அவர்களின் பதில் மின்னஞ்சல்-
அன்புத் தோழருக்கு.,
சொல்லிட்டாரே....
1 அக்டோபர், 2013 5:49 PMஅன்று வந்த
மு.மு.அவர்களின் பதில் மின்னஞ்சல்-
அன்புத் தோழருக்கு.,
தொடர் வெளியூர் பயணம் முடித்து,
இன்று காலைதான் வீடு திரும்பினேன்.
தங்களின் முன்னுரை கண்டதும்
என் மனம் பின்னோக்கிப் பயணித்தது.
உங்களின் மோதிரக் கை பற்றி
கவிதை எழுதியவன் என்பதில்
எனக்கு என்றும் அளவிடமுடியாத பெருமையுண்டு.
எப்போதாவது மனம் முரண்டு பிடிக்கையில்,
“விரல் நுனியில் வானம்” நூலின்
அந்த நேர்த்தியான முன்னுரைக்குள்
உருண்டு புரண்டு எழுவேன்.
உங்களின் வலைப் பக்கத்தில்
இப்போது படிக்கையிலும் அப்படியான உணர்வே
எனக்கு வாய்த்தது.
மிக்க மகிழ்ச்சி...தோழரே.
சரியாய் இருபது ஆண்டுகளுக்குமுன் (03.07.1993)
நீங்கள் முன்னுரை எழுதி,
1993 ஜூலையில் வெளியானது “விரல் நுனியில் வானம்.”
விரலில் மட்டுமல்ல...
என் மனசெங்கும் இன்னமும்,
இனியும் ஒட்டியே கிடக்கும்
உங்கள் தோழமையின் ஈரம்.
-மு.மு
Murugesh Mu
---------------------------------------------------------
உங்கள் பழைய முன்னுரைகளே இவ்வளவு சுவையானால், புதிய முன்னுரைகள்? வாழ்த்துக்கள்! - கவிஞர் இராய செல்லப்பா (இமயத்தலைவன்)
பதிலளிநீக்கு///புதுக்கவிதையும், ஐக்கூவும் கவிதா உலகின் காந்தாரக் கலைகள்/// மிகச் சிறப்பானக் கருத்துக்களை கவிஞர் மு.முருகேஷ் அவர்களுக்கு வழங்கியுள்ளீர்கள். இரண்டாயிரம் காலத்திற்கு முன்னரெ கவிதை ஜனநாயகத்துக்கான’ ஒரு முன்னோடி வரிகள் தமிழில் தோன்றியதை எடுத்துக்காட்டியது அழகு! பல கவிஞர்களின் நாடிப் பிடித்து முன்னுரை வழங்கிய தங்களுக்கு நன்றி.
பதிலளிநீக்கு// கவிதை நின்று சிரிக்கும்! // உட்பட ரசிக்க வைக்கும் முன்னுரை ஐயா... வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குமு.மு.அண்ணாவின் படம் பார்த்ததும் என்ன இது நம் ஊர் அண்ணா படம் என்று ஓடி வந்தேன்..
பதிலளிநீக்குநானும் வந்தவாசி தானுங்க வெண்ணிலா அக்கா வீடு இருக்கும் தெருவில் தான் எங்க வீடும் இவர்களின் தொடர்பே எனக்கு கவிதை ஆர்வத்தை ஏற்படுத்தியது. மிக்க மகிழ்ச்சிங்க.
பழைய புதிய முன்னுரைகள் -சுமார் 20-25இருக்கும்) அணிந்துரைகளைத் தொகுத்து ஒரு புத்தகமாக வெளியிடலாம் என்னும் ஆசை... இப்போது அவை எடுபடுமா என்றும் ஒரு சந்தேகம்... அதனால்தான் ச்சும்மா.. பழசுகளில் ஒன்றிரண்டை எடுத்துப் போட்டேன் அய்யா... கருத்துரைத்த அய்யா இராய.சொ.,அ.பாண்டியன், திண்டுக்கல்லார், தங்கை வந்தவாசிக்கவிஞர் சசி ஆகிய நல்ல உள்ளங்களுக்கு நன்றி.
பதிலளிநீக்குஅணிந்துரைகளை புத்தகமாக வெளியிடுங்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கிறோம்..
பதிலளிநீக்குஅண்ணா இந்த தங்கைக்கும் அணிந்துரை எழுதி அதையும் சேர்த்த பின்னே புத்தகமாக்க வேண்டும். அன்பான வேண்டுகோள்.
அப்படியே செய்வோம் கவித்தங்கையே. வரும் ஜூன் 2014இல் 5புத்தகங்களை ஒன்றாக வௌயிடக் கருதியிருக்கிறேன். எனவே, வரும் டிசம்பருக்குள் உங்கள் புத்தகம் வருமாறு இருந்தால் நல்லது. கவிதைகளை மின்னஞ்சல் வழியே அனுப்புங்கள் யுனிகோடு எழுத்துருவில் இருந்தால் நல்லது. கவிதை சிறப்பாக இருந்தால், முன்னுரையும் சிறப்பாக அமையும் என்பதே எனது அனுபவம்.
பதிலளிநீக்குகட்டுரை மிக நன்றாக உள்ளது
பதிலளிநீக்குஎங்கே சசிகலா நான் கேட்டுட்டேன்... அய்யா எப்போதும் பிஸியாவே இருக்கார். அவர் வேலையோடு அலையும் போது எனக்கே தலை சுத்துது. அவர் எனக்கு எழுதித்தரும் போது சொல்றேன் நீங்களும் ஒத்தை கால்ல நின்னு வாங்கிருங்க
பதிலளிநீக்கு