மகாநதி திரைப்படமும் குற்றப்பின்னணி உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களும் – நா.மு.

பெண்குழந்தைகளைப் பெற்றவர்கள் எல்லாரையும் நெருப்பை விழுங்கியதுபோல நிலைகுலைய வைத்த அந்த “மகாநதிதிரைப்படக் காட்சியில் நான் அழுவதைத் தவிர்க்க முடியவில்லை. ஜெயகாந்தன் கதை படித்துப் பலநாள் தூக்கமில்லா இரவுகளைக் கழித்ததுபோல இந்தப் படம்பார்த்தபின் சிலநாள் தூக்கமில்லாமல் தவித்திருக்கிறேன். உங்களில் சிலருக்கும் இந்த அனுபவம் ஏற்பட்டிருக்கலாம்.
மகள் 12வயதுச் சிறுமி, சில கயவர்களால் கடத்தப்பட்டு, சீரழிக்கப்பட்டு, கொல்கொத்தா பாலியல் சந்தையில் விற்கப்பட்டு விட்டாள். பலபாடு பட்டு மீட்டு வருவான் கதையின் நாயகன் கமல். அங்கும் பாலியல் தொழில் செய்யும் அந்தச் சகோதரிகளுக்குள் இருக்கும் மனிதாபிமானம், அவர்களின் ரத்த்த்தைக் குடிக்கும் சில பெரிய மனிதர்களுக்கு இல்லையே என்று யோசிக்கவைக்கும் காட்சி வரும்.
இரவில் தூக்கத்தில் உளறும் பழக்கமுள்ள தன் மகள், மீட்கப்பட்டு வந்தபிறகாவது, வீட்டுக்குள் நிம்மதியாகத் தூங்குகிறாளா என்று எட்டிப்பார்க்க வரும் தந்தை, வழக்கம்போல உளறும் தன் மகளின் வார்த்தைகளைக் கேட்டு நொறுங்கி ,மனமுடைந்து போய்க் கதறுவார் கமல்.... பால்மணம் மாறாத அந்த 13வயதுச்  சிறுமியின் உளறல் இதுதான்...
“டே... விடுங்கடா...நாய்களா... ஒரு நாளைக்கு எத்தன பேர்ரா வருவீங்க? விடுங்கடா... விடுங்கடாஆஆஅப்போது கதறிக்கொண்டே ஒருவசனம் சொல்வார்கமல். கேட்பவர்கள் 
காட்சியைக் கண்டவர்கள் நொறுங்கிப்  போனோம்!
     “நல்லவங்கள எல்லாம் நாயா, பேயா அலைய விடுற இந்தச் சமூகம், அயோக்கியப் பயலுகளுக்கு மட்டும் மரியாதைய தட்டுல வச்சுக் குடுத்துக் கும்பிட்டு விழுவுதே ஏன்?
–என் வயிற்றில் கத்தியைச் செருகியதுபோல் நான் உணர்ந்தேன், கமலின் கதறல் என் காதுகளுக்குள் இன்றும் தொடர்கிறது, தொடர்ந்து தொந்தரவு செய்துகொண்டே இருக்கிறது! இரண்டு பெண்குழந்தை பெற்றதால் மட்டுமல்ல... ஏராளமான கோடிகோடிப் பெண்குழந்தைகள் இந்த நாட்டில் இந்த உலகத்தில் இப்படித்தானே சிதைந்த சிற்பங்களாய் செத்துச் செத்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்...?!?! இன்னொரு பக்கம்... அதற்கென்ன.. ராஜ உபசாரத்துடன் ரவுடிகளும், கம்பீரமான கிரீடங்களுடன் நம்மைக் கொள்ளையடித்த திருடர்களும் திரிகிறார்கள்... நாமும் கும்பிட்டு மரியாதை செய்கிறோம்!
 மண் பொய் சொல்வதில்லை
 மிதிக்கிறோம், 
 மரம் பொய் சொல்வதில்லை
 வெட்டுகிறோம்,
 மந்திரி பொய் சொல்கிறார்
 மாலை போடுகிறோம்! – கந்தர்வன்.
------------------------------------

மேற்கண்டது திரைப்படத்தில் வந்த காட்சிதான்.
இது ஒரு புறம் இருக்கட்டும்.
இதோ -
திரைப்படத்தைத் தூக்கிச்சாப்பிடுவதுபோல நம் நாட்டில் நடக்கும் மற்றொரு காட்சி 
கிரிமினல் குற்றவாளிகளாக தண்டனைக்குக் காத்திருப்பவர்கள், மற்றும் ஏற்கெனவெ தண்டனை பெற்றவர்கள் எல்லாம் நம்நாட்டுச் சட்டங்களை உருவாக்கும் சட்டமன்றங்களிலும் நாடாளுமன்றங்களிலும் இடம்பெற்றிருப்பது எவ்வளவு கேவலமானது??!?!?

    இதைச் சுட்டிக்காட்டிய உச்ச நீதிமன்றத்தின் கருத்தையே உதாசீனப்படுத்திவிட்டு, “மன்றத்திற்குள் வந்துவிட்ட காரணத்தினாலேயே அவர்கள் பாவ விமோச்சனம் பெற்றுவிட்டது போல சட்டத்தை உருவாக்கும் இடங்களே சண்டித்தனம் செய்ய இடம்கொடுக்கலாமா?

மேலோர்கள்  வெஞ்சிறையில்  வீழ்ந்து  கிடப்பதுவும்                                 நூலோர்கள் செக்கடியில் நோவதுவும் காண்கிலையோ?”  என்று நம் “அடிமைமோகம்” பற்றிப் பாரதி பாடி நூறாண்டு ஆகப் போகிறது! 
இன்னும் அதுதான் நிலையென்றால் சுதந்திரத்தின் அர்த்தம்தான் என்ன?!

கிரிமினல் வழக்குகளில், இரண்டு அல்லது அதற்கு அதிகமான ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்ட எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ.,க்களின் பதவிகளை பறிக்க வேண்டும். தண்டனை அறிவிக்கப்பட்டதுமே, உடனடியாக, அவர்களின் பதவிகளை பறிக்கலாம்.குற்றப் பின்னணி உடையவர்களை பாதுகாக்கும் வகையில், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில், சில விதிமுறைகள் உள்ளன. குறிப்பாக, தண்டனை விதிக்கப்பட்டவர்கள், தண்டனையை எதிர்த்து, அப்பீல் செய்திருந்தால், பதவி நீக்கத்திலிருந்து தப்பிப்பதற்கு, மக்கள் பிரதிநிதித்துவ சட்டப் பிரிவு, 8, துணை பிரிவு, 4, ஆகியவை வசதியாக உள்ளன. இந்த பிரிவுகளை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு, சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்திருந்தது.

லோக்சபாவில் எம்.பி.,க்களாக உள்ள, 543 பேரில், 162 பேர் மீது, பல்வேறு கோர்ட்டுகளில், குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்த, 162 பேரில், 76 பேர் மீது, கடுமையான பிரிவுகளின் கீழ், வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் உள்ள சட்டசபை உறுப்பினர்களை பொறுத்தவரை, 4,032 பேர் மீது, குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர்களில், 14 சதவீதம் பேர் மீது, ஐந்தாண்டுகளுக்கும் அதிகமான சிறைத் தண்டனை பெறும் வகையிலான, குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. 


சிறையில் இருப்பவர்கள் தேர்தலில் போட்டியிடலாம்’ : சிறையில் இருப்பவர்கள் தேர்தலில் போட்டியிட வகை செய்யும், ‘மக்கள் பிரதிநிதித்துவச் சட்ட திருத்த மசோதா – 2013’க்கு, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார்.மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி, சிறையில் இருப்பவர்கள், தேர்தலில் ஓட்டளிக்க முடியாது; அதனால்,அவர்கள், பார்லிமென்ட் மற்றும் சட்டசபை தேர்தல்களிலும் போட்டியிட முடியாதுஎன, ஜூலை, 10ம் தேதி, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது.இதையடுத்து, சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவை செல்லாததாக்கும் வகையில், மக்கள் பிரதிநிதித்துவச் சட்ட திருத்த மசோதா – 2013 கொண்டு வரப்பட்டது. இந்த மசோதாவில், 62வது பிரிவில், துணை பிரிவு ஒன்று சேர்க்கப்பட்டது.அதில், ‘ஒருவர் சிறையில் அல்லது போலீஸ் காவலில் இருக்கும் போது, அவரின் ஓட்டுரிமை பறிக்கப்படுவதில்லை; மாறாக, ஓட்டுப் போடும் உரிமை, தற்காலிமாக சஸ்பெண்ட் செய்யப்படுகிறது. அதனால், வாக்காளர் பட்டியலில் அவரின் பெயர் தொடர்ந்து இடம் பெறுவதால், அவர் தேர்தலில் போட்டியிடவும், தகுதி உடையவராகிறார்என, தெரிவிக்கப்பட்டுள்ளது.இநதச் சட்ட திருத்த மசோதாவுக்கு, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார் என, சட்ட அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புறத்திணைச்
சுயம்வர மண்டபத்தில்
போலி நளன்களின் கூட்டம்!
கையில் மாலையோடு
குருட்டுத் தமயந்தி
--அப்துல் ரகுமான்
இந்தக் கவிதையின் மீது எனக்கு விமர்சனம் உண்டு. ஆனாலும் “இன்றைய சமூகத்தின் மீதான விமர்சனம்“ எனும் வகையில் இந்தக் கவிதை பெரும்பாலும் பொருத்தமாகத்தான் இருக்கிறது என்பதையும் மறுப்பதற்கில்லைதானே?
                 ----------------------------- 

9 கருத்துகள்:

 1. வணக்கம்
  சுதந்திரம் வாங்கினோம்,வாங்குகிறோம்,வாங்குவோம்.விலையாய் நாட்டுப்பற்று,மொழிப்பற்று,இனப்பற்று கொடுத்து. வேற என்ன சொல்வது உண்மையை கூறும் பொழுது.

  பதிலளிநீக்கு
 2. மனதை பிழியும் உண்மைகள்...... அந்தப்படம் பார்த்து நானும் அதே போன்ற உணர்வுகளில் தவித்தேன். மேல் நாட்டில் மக்கள் எப்படி இருந்தாலும் தலைமை சரியாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆனால் இங்கேதான் தலைமைக்கு பல தாரங்கள்.குற்றப்பின்னனிகள்.. எல்லாவற்றையும் சகித்து யார் குறைவாக ஊழல் செய்வார்களோ அவர்கள் இருந்து விட்டு போகட்டும் என்று மெத்தனப்போக்கு. ஆங்கிலேயனை விட அதிகமாய் சுரண்டி.... பொருளாதார நிபுணர்கள் நிறைந்த தேசத்தில் ரூபாய் மதிப்பு தரை இறங்கிப்போனது..... என்று தணியும் இந்த வீண்களின் வேத்ம்??????????? நம் நாட்டை நாம் எப்படிக் காக்கப்போகிறோம் அய்யா...?????????

  பதிலளிநீக்கு
 3. வணக்கம் அய்யா, தங்களது ஆதங்கம் பதிவில் பளிச்சிடுகிறது. நாட்டிற்காகப் பாடுபட்ட அரசியல்வாதிகள் இருந்தார்கள் என்று தானே சொல்ல வேண்டியது உள்ளது. அரசியல் சட்டத்தில் நேர்மையான மாற்றங்கள் வந்தால் தான் வலிமையானக் குடியரசாக இந்தியா வர முடியும். அதுவரை இப்படிப்பட்ட அரசியல்வாதிகளால் நாடு நாசப்படத் தான் செய்யும். ”நீதியின் பாதுகாவலன்” என்று போற்றப்படும் உச்சநீதி மன்றத்தையே பதம் பார்க்கிறது இன்றைய அரசியல். காசு வாங்கி ஓட்டளிக்கும் மக்கள் மனதிலும் மாபெரும் மாற்றம் ஏற்பட வேண்டும். சிந்தனையைத் தூண்டும் பகிர்வுக்கு நன்றீங்க அய்யா.

  பதிலளிநீக்கு
 4. இதைதான் அன்றே பாரதி சொல்லிவிட்டானே 'பேய் ஆட்சி செய்தால் பிணம் தின்னும் சாஸ்திரங்கள் 'என்று !

  பதிலளிநீக்கு
 5. கவனித்து, கருத்தைப் பகிர்ந்த சகோதரிகள் தேவதா,சுவாதி, நண்பர்கள் அ.பாண்டியன், பகவான்ஜி ஆகியோர்க்கு என் நன்றி. கருத்துகள் பரவட்டும்.

  பதிலளிநீக்கு
 6. வணக்கம் ஐயா,

  உங்களுக்கு வந்த அதே கோபமும், எண்ணங்களும் தான் எனக்கும் இந்த படத்தை பார்த்த பின் வந்தது.,, இனிமேலாவது இதற்கெல்லாம் நல்லதொரு தீர்வு கிடைக்கட்டும்...

  பதிலளிநீக்கு
 7. நண்பரே.. உங்கள் ஆதங்கம் புரிகிறது. ஆனால் சில விசயங்களை நீங்கள் பரிசீலனை செய்யுமாறு வேண்டுகிறேன்.. நம் நாட்டில் அரசியல்வாதிகளை கண்டிப்பது எளிது.. அவர்களுக்கு அக்கௌண்டபிலிட்டி உண்டு.. மக்களின் ஓட்டுப் பிச்சை வாங்கிப் பிழைப்பவர்கள்.. எப்படிப்பட்ட கிரிமினலாக இருந்தாலும்.. அவர்களை ஒருவேளை எல்லோரும் கூப்பாடு போட்டு நிறுத்தி விடலாம்.. ஆனால் அரசியல் பலம் போலீஸ் பலம் அதிகாரிகள் பலம் கொண்ட பண முதலைகள் முதலாளிகளை என்ன செய்ய இயலும்- அப்படிபட்ட சூழலில் மகாநதியும் குற்றப்பிண்ணனி நாடாளுமன்ற உறுப்பினர்களும் எப்படி பொருந்தும்.. மகாநதியில் ஒன்றும் அரசியல்வாதி கற்பழிப்பு செய்தார் என்று சொல்லவில்லையே… ஆக குற்றப்பிண்ணனி உள்ளவர்கள் வந்தாலும் வராவிட்டாலும் மேற்படி அரசியல் அல்லாத கிரிமினல்களை நாம் என்ன செய்யப் போகிறோம் ,, அதற்கான தீர்வு என்ன.. என்பதை பற்றி சிந்திக்க வேண்டிய தருணத்தில் உள்ளோம்,,

  பதிலளிநீக்கு
 8. வெளிப்படையாகக் கருத்துத் தெரிவித்த நண்பர் விமல்ராஜ் அவர்களுக்கு நன்றி.

  ”நம் நாட்டில் அரசியல்வாதிகளை கண்டிப்பது எளிது.. அவர்களுக்கு அக்கௌண்டபிலிட்டி உண்டு” என்னும் “பெயரில்லா” எனும் நண்பரைத்தான் புரிந்துகொள்ள முடியவில்லை. அவர் சொல்லும் கருத்துச் சரிதான். இந்தக் கருத்தைச் சொல்லவே அவர் தன் பெயரை மறைத்துக்கொண்டு வரும்போது.........? வேறென்ன சொல்ல?
  நன்றி மட்டும் சொல்கிறேன்.

  பதிலளிநீக்கு
 9. ஐயா .. வெளியில் தெரிந்த குற்றப் பின்னணிக் கொண்டவர்கள் கணக்கே இவ்வளவு.. பெரும்பாலான அரசியல் வியாதிகளின் தப்புகள் வெளியில் வருவதே இல்லை.. என்ன செய்ய.. நமது நாட்டின் தலை எழுத்து..

  பதிலளிநீக்கு