கவிஞர் தங்கம் மூர்த்தியின் கவிதைகளை ஆய்வு செய்து, மதுரைப் பல்கலைக் கழகப் பேரா. முனைவர்
ரவிசங்கர் எழுதியுள்ள நூலுக்கான எனது முன்னுரை…
-- நா.முத்துநிலவன்
(படம் - கவிஞர் தங்கம்மூர்த்தி)
----------------------------------------------------------------------------------
தங்கத்தை உரசி…
கவிதையை அலசி…
கவிதையில் எதைச்சொல்வது என்பதைத் தேர்ந்தெடுப்பதில் ஒருகவிஞன் வெற்றியின் முதல்படியைத் தொட்டுவிடுகிறான். அதுபோலவே தனது ஆய்வுக்குரிய பொருளைத் தெரிவு செய்வதில் ஆய்வாளரின் முதல்படி அமைந்துவிடும். அந்த வகையில், இந்த ஆய்வாளர் முனைவர் செ.ரவிசங்கர் எடுத்துக்கொண்ட பொருளிலேயே தனது முதல் வெற்றியைப் பெற்றுவிட்டார் என்பதற்காக முதலில் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.கவிதையை அலசி…
தங்கத்தை உரசிப்பார்ப்பதும் தங்கம் மூர்த்தியின் கவிதையை அலசிப் பார்ப்பதும் ஒன்றுதான். இரண்டுமே மதிப்பீடுதான் என்றாலும், உரசிப்பார்ப்பவரின் நெஞ்சையே உருக வைக்கும் திறன் தங்கத்துக்குக் கிடையாது தங்கம் மூர்த்தியின் வரிகளுக்கு அந்த சந்தனத் திறனும் உண்டு! ‘பொன்மலர் நாற்றமுடைத்து’-என்பது போல!
அந்த வகையில் உரசிப்பார்த்து தன் மனம் முழுவதும் நெகிழ்ந்து நிறைந்து போன தங்கம் மூர்த்தியின் ‘கவிமணத்தை’ நம்மோடு பகிர்ந்து கொண்டிருக்கிறார் முனைவர் செ.ரவிசங்கர்.
‘அணிசெய் காவியம் ஆயிரம் கற்கினும்
ஆழ்ந்திருக்கும் கவியுளம் காண்கிலார்’ – என்று பாரதியும், ‘கழுதை அறியுமோ கற்பூர வாசைன?’ என்று நம் படிக்காத சகோதரர்களும் சொல்லும் சொல்லின் அர்த்தத்தில் ஆழம் அதிகம்! ‘சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை’ என்பது கவியரசின் திருவாசகம் அல்லவா?
பொதுவாகவே சுருக்கமும் தெளிவும் ஒன்றுக்கொன்று தொடர்புடையனவே என்றாலும், கவிதைக்கு சொற்சுருக்கம் பெரிதும் அவசியம். பால் சுண்டச்சுண்ட சுவையேறுவதுபோல கவிதையில் சொற்கள் சுருங்கச்சுருங்க அர்த்தமும் அழகும் கூடுவது இயல்புதானே? நான் பார்த்த வரை தங்கம் மூர்த்தி தன் கவிதைகளில் எந்த இடத்திலும் அனாவசியமான சொல்லுக்கு இடமளித்ததே இல்லை! பணக்காரத் தந்தையே என்றாலும், பணத்தின் அவசியத்தை பிள்ளைகளுக்கு உணர்த்தி சிக்கனமாக வாழும் சிறந்த ஒரு தந்தையைப் போன்றவர் கவிதையைப் பொறுத்தவரை.
சிக்கனம் வேறு கருமித்தனம் வேறு! நண்பர்களுக்கு அள்ளி இறைக்கும் மனம் கொண்ட மூர்த்தி, கவிதையில் மட்டும் சிக்கனமாக இருப்பது மகிழ்ச்சி கலந்த ஆச்சரியம்தான்!
எத்திசையும் புகழ்மணக்க இருக்கும்பெரும் திருக்குறளின் கவித்திறனை எடுத்துரைக்க வந்த ஒளவை, ‘அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டிக் குறுகத் தரித்த’ தாகச் சொல்லுவார். கவிஞர் வைரமுத்து நமது மகாகவி பாரதியைப்பற்றிச் சொல்லும் போது, ‘சொல்லுக்குள் வாக்கியத்தை சுருக்கி வச்ச கவிப்புலவா’ என்பார். இருவரும் மகாகவிகள் இருவரின் கவிதைகளிலும், எந்த இடத்திலும் எந்தச் சொல்லும் அனாவசியமாக இல்லை. அதிலும் வள்ளுவர், தன் குறளின் அசைச் சொல்லில் கூட அழகு சேர்த்தவர்!
வாழும் காலத்தில் இப்படி ஒரு கவிஞர் வரமாட்டாரா என்று நான் ஏங்கிக் கிடந்த வேளையில் என் கண்முன்னே எழுந்து வளர்ந்து விளைந்து நிமிர்ந்து நிற்பவர் மூர்த்தி என்பதில் எனக்கு மிகவும் பெருமை! அதிலும், ஒன்றிரண்டு கவிதைகளில் அல்லது ஓரிரண்டு தொகுப்புகளில் ஓய்ந்து காய்ந்து தூர்ந்து துவண்டு போய்விடும் கவிஞர்களே அதிகமாகிவிட்ட இன்றைய நாள்களில்,நான்கு தொகுப்புகளைத் தாண்டியும் இன்னும் கவியரங்குகளில் கலக்கிவரும் மூர்த்தியின் ஆற்றல் அபூர்வமான ரகம்!
இப்படி ஒரு நல்ல கவிஞரின் கவிதைகளை ஆய்வுக்குத் தேர்ந்தெடுத்ததற்காகவே முனைவர் செ.ரவிசங்கரைப் பாராட்ட வேண்டும். பொதுவாக ஒரு தொகுப்பைப் பாடம் வைப்போர், அவர் ‘நம்மவரா’என்று ‘பல்’வகை எதிர்பார்ப்புகளோடிருப்பது இன்றைய தமிழ்ச் சூழல்! ஆனால், முன் பின் அறிமுகமில்லாமலே எனது ‘புதிய மரபுகள்’ கவிதைத் தொகுப்பை --1993ஆம் ஆண்டுமுதல் இன்றுவரை, தமது எம்.ஏ. தமிழ் மாணவர்களுக்குப் பாடம் வைத்துவிட்டு என்னைத் ‘தேடிக் கண்டுபிடித்த’ நல்ல மனசுக்காரர் முனைவர் இரா.மோகன். அவரது பெருமைமிகு மாணவர் - அதே மதுரைப் பல்கலையில் பணியாற்றிவரும் -- முனைவர் செ. ரவிசங்கர் தமது ஆசிரியரே போல இந்தவகைப் பண்போடு இருப்பது மகிழ்ச்சிக்குரியது! எடுத்துக்கொண்ட ஆய்வை உரிய இலக்கணத்தோடு செய்திருக்கிறார்!
‘தொகுப்புமுறை அணுகுமுறை,
விளக்கமுறை அணுகுமுறை’ என இவர் செய்திருக்கும் ஆய்வு அப்படியே இலக்கண சுத்தமானதன்றி வேறென்ன?
தன் கவிதைகள் தனது மனக்குமுறல்களே அன்றி சமுதாயம் பற்றித் தனக்குக் கவலையில்லை என்பதாகக் கவிஞர் சிலர் சொல்லிக்கொள்வதுண்டு! அவர்கள் நாட்குறிப்பை மட்டும் எழுதிவிட்டுப்போகலாம் அதைக் கவிதை என்று தொகுத்து அச்சிட்டு வெளியிட்டு நம்மைச் சிரமப்படுத்த வேண்டியதே இல்லையே! ஆனால், ‘எழுதுகோல் தெய்வம், இந்த எழுத்தும் தெய்வம்’ என்ற பாரதியின் உண்மை வாரிசுகளில் ஒருவரான தங்கம் மூர்த்தி, தன் எதிரிகளிடமும் கற்றுக்கொண்டு நண்பர்களுக்குச் சொல்பவர்! முன்பின் தெரியாதவரையும் சிறுபொழுதில் நண்பராக்கிவிடும் இனியபழகுமுறை இவருடையது. இதை அப்படியே உள்வாங்கிய ஆய்வாளர் ரவி சங்கர், “ கவிஞர் தங்கம் மூர்த்தி தனது கவிதையின் கருத்துகளில் தனிமனிதனின் தாகத்தை வளர்ப்பதைவிடவும் சமுதாயத்தின் அறிவுத் தாகத்தை வளர்க்கும் விதமாகத் தனது கவிதையைப் புனைந்துள்ளார்”(பக்:80) என மதிப்பிட்டிருப்பது மிகவும் சரியானது!
ஒரே ஒரு இனிப்போடு தனது பரிமாற்றத்தை முடித்துக்கொள்ளாமல், அடுத்தடுத்த இனிப்பு வகைகளையும் எடுத்தெடுத்துப் பரிமாறும் அன்பான மனைவியைப்போல, தங்கம் மூர்த்தியின் கவிதைகளுக்கான விளக்கத்தைத் தனது பரந்த படிப்பறிவால் பல்வேறு நூல் சான்றுகளின் வழியே விளக்குவதும் ஒருவகை விருந்தாகவே தோன்றுகிறது. ஆவ்வகையில், மூர்த்தி கவிதைகளின் நேர்த்தியை கைலாசபதி, ச.அகத்தியலிங்கம், மா.இராமலிங்கம், ச.வே.சுப்பிரமணியன். கவிஞர் பாலா, முதலானோரின் மேற்கோள்கள், கவிஞர்கள் அப்துல்ரகுமான், சிற்பி மு.மேத்தா முதலானோரின் கவிதை வரிகள் போன்ற வற்றையும் எடுத்தாண்டிருப்பது ஆய்வாளரின் படிப்பை மட்டுமல்லாமல் பண்பையும் காட்டுகிறது.
வெறும் சொற்கூட்டங்களைக் கவிதையாக்கித் தொகுப்புகளை விற்றுத் தள்ளுவோரும், வெறும் மேற்கோள்களை ஆய்வாக்கிப் ஆய்வுப்பட்டங்களை பெற்றுக் கொள்ளுவோரும் அதிகரித்துவரும் தமிழ்ச்சூழலில் , நல்ல தொகுப்புகளைத் தேடி எடுத்து அதை நல்ல முறையில் ஆய்வுசெய்து வெளியிட்டிருக்கும் முனைவர் செ.ரவிசங்கர் அவர்களின் பணி தொடர்ந்து ஆழமும், வீரியமும் பெற்று வளர எனது வாழ்த்துகள்.
மிகுந்த அன்புடன்
தோள்களில் கரம் பதித்து,
நா.முத்துநிலவன்,
மாநிலத் துணைத் தலைவர்-
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்,
புதுக்கோட்டை-622 004
அலைபேசி:94431 93293
மின்னஞ்சல்: muthunilavanpdk@gmail.com
--------------------------------------------------------------------
முன்னுரை அருமை ஐயா... வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குவணக்கம் அய்யா, சிறப்பான முன்னுரையைப் பகிர்ந்ததற்கு நன்றி. பல தகவல்கள் தங்களின் வலைப்பதிவைப் பின்தொடர்வதன் மூலமே அறிந்து வருகிறேன். நிறைய படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தையும் தூண்டுகிறது. கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்களின் கவிதைத் தொகுப்பை ஆய்வு செய்ததும், அதற்கு நீங்கள் முன்னுரை எழுதிய செய்தியும் தங்களின் மூலம் இன்று அறிந்ததில் மகிழ்ச்சி. நன்றி அய்யா.
பதிலளிநீக்குசிறப்பான முன்னுரை.இதை விடச் சிறப்பாய் யாரால் எழுத முடியும்?
பதிலளிநீக்குஅருமையான முன்னுரை ஐயா.
பதிலளிநீக்குஅழகிய முன்னுரை. தங்களைப்பற்றியும் சில புதிய தகவல்களைப் பெற்றேன். –கவிஞர் இராய.செல்லப்பா (இமயத்தலைவன்), சென்னையிலிருந்து.
பதிலளிநீக்குஎங்களுக்கும் பெருமையாக இருக்கிறது அய்யா
பதிலளிநீக்கு